ஈடிணையற்ற பெண்கள்
உண்மையில் அனைத்துப் பெண்களும் மிகவும் பவித்ரமானவர்கள். ஆனால் முந்தைய காலத்தில் அவர்களை ஆண்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். தவிர பெண்களை ஒரு போகப் பொருளாகவே கருதினர்.,
பாருங்களேன்… ‘பெண் புத்தி பின் புத்தி; கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’ என்ற பழமொழிகள் ஆண்களால் இயற்றப்பட்டு வெளியே உலவின. ஆனால் இவைகள் கண்டிப்பாக தமிழ்ப் பண்பாட்டை பிரதிபலிக்கும் பழமொழிகள் அல்ல.
ஒரு மன்னன் செய்த அநீதியைக் கூட துணிவுடன் அரசவைக்குள் நுழைந்து கேள்வி கேட்ட சம்பவமும் தமிழகத்தில் உண்டு.
மனு தர்ம சாஸ்திரம் என்ற நூலில் பெண்களுக்கு எதிராக எழுதப் பட்டிருப்பதாக பலர் தவறான கருத்தைப் பரப்புகின்றனர். அதாவது பெண்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்றும், பெற்றோர், கணவன், மகன்கள் ஆகியோரைச் சார்ந்தே வாழவேண்டும் என்று மனு சொல்வதாகக் கதை விடுகிறார்கள்.
இது முற்றிலும் தவறு. உண்மையில் பெண்களுக்கு எப்போதும் யாராவது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே அதன் உண்மைப் பொருள். மனு பெண்களை மிகவும் பாராட்டிதான் எழுதியுள்ளார். மனு தர்ம சாஸ்திரம் பெண்களுக்கு மிக ஆதரவு தருகிறது. சகோதரர்கள் அவர்களுக்கு எல்லா உதவிகளையும் எடுத்துச் செய்ய வேண்டும்; பெண்கள் எங்கு போற்றப் படுகிறார்களோ அங்கு மட்டுமே தெய்வம் வசிக்கும்; பெண்கள் அழுதால் அந்தக் குடும்பம் வேரோடு அழியும் என்று மனு எழுதியிருக்கிறார்.
இந்தியாவின் இரண்டு பெரிய இதிகாசங்களான ராமாயணத்திலும், மஹாபாரதத்திலும் கணவர்கள் இறந்த பின்னரும் மஹாராணிகள் உயிர் வாழ்கின்றனர். உடன்கட்டை ஏறவில்லை. தசரதனின் மூன்று மனைவியரும்; பாண்டவர்களின் தாயான குந்தி தேவியும் கணவர்கள் இறந்த பின்னரும் உயிர் வாழ்ந்தது பல இந்துக்களுக்கே தெரியாது.
அதேபோல கணவனுடன் உடன்கட்டை ஏறக்கூடாது என்று தடுத்த போதும், அவர்கள் சொல்லைக் கேளாது பூதப் பாண்டியன் தேவி, சிதைத் தீயில் ஏறி உயிர்விட்ட சம்பவம் புறநானூறில் உள்ளது. இது தமிழர்களுக்கே தெரியாது. ரிக் வேதத்திலும், மனு தர்ம நூலிலும் சாதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லை என்பதும் பல இந்துக்களுக்குத் தெரியாது.
தமிழ்ப் பெண்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று தொல்காப்பியர் தடை விதித்ததும்; பெண்களைச் சேர்த்தால் என் மதம் ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் உலகில் நிலைக்காது என்று புத்தர் சொன்னதும் நம்மில் பலருக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் அவரது கால, தேச வர்த்தமானத்தை மனதிற்கொண்டு பேசினர் என்பதை நாம் மறக்கக்கூடாது.
மேலை நாட்டுப் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை கிடைப்பதற்கு முன்னரே இந்தியப் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை இருந்தது. மேலை நாட்டினர் பெண்களை இழிவாக எண்ணினர், நடத்தினர். பிரிட்டனில் ஒரு பிரம்மாண்டமான போராட்டத்திற்குப் பின்னரே பெண்கள் ஓட்டுப்போட முடிந்தது.
விக்டோரியன் ஆங்கில நாவல்கள் முழுவதும், பெண்களை ஊமையராய்; செவிடர்களாய்; குருடர்களாய்; கிணற்றடி வம்பு பேசும் வாயாடிகளாகச் சித்தரிக்கின்றன. இதற்கு நேர் மாறாக 2850 ஆண்டுகளுக்கு முன்னர், அகில இந்திய தத்துவ அறிஞர் மாநாட்டில் ஒரு பெண் அப்போதைய உலக அறிஞரை கேள்வி கேட்ட சம்பவம் உபநிஷத்தில் பதிவாகியுள்ளது. 2300 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மகள் சங்கமித்ரையை மன்னன் அசோகன் இலங்கைக்கு அனுப்பி புத்த தர்மத்தை போதித்ததை நூல்கள் மூலம் நாம் அறிகிறோம்.
ஒளவ்வையார்; சாவித்திரி; கண்ணகி போன்ற புரட்சிகர பெண்களையும் காண்கிறோம். கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்கிற கதை நமக்கு மறக்காது. கீழேகண்ட பட்டியலைப் பாருங்கள்:
அரசன் என்று அஞ்சாது அசெம்பிளிக்குள் நுழைந்து நீதி கேட்ட கண்ணகி என்ற தமிழ்ப் பெண்ணுக்கு நிகராவனர் எவரேனும் உண்டா?
எமன் என்றும் பயப்படாது அவனைப் பின் தொடர்ந்து சென்று தனது அறிவால் எமனை வென்ற சாவித்ரிக்கு நிகர் எவர்?
2850 ஆண்டுகளுக்கு முன்னர், கிரேக்கர்களும் தமிழர்களும், எழுதக்கூட தொடங்காத காலத்தில் பீஹார் மாநிலத்தில் ஜனகர் கூட்டிய அகில இந்தியத் தத்துவ மாநாட்டில் யாக்ஞவால்க்கிய ரிஷியைக் கேள்வி கேட்ட கார்க்கி வாசக்னவிக்கு நிகரானவர் இன்றுவரை எவருமிலர்;
தசரதனுக்குப் போர் முனையில் தேர் ஓட்டி வெற்றிவாகை சூட வைத்த கைகேயிக்கு நிகர் எவருமில்லை;
கணவன் பார்வையில்லாதவன் என்பதால் வாழ்நாள் முழுவதும் கண்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்த காந்தாரிக்கு நிகரானவர் யார்?
கதைகள் மூலம் மாவீரன் சிவாஜியை உருவாக்கி எழுநூறு ஆண்டுகள் முஸ்லீம் ஆட்சிக்கு சாவுமணி அடித்த ஜீஜாபாயின் பெருமையை என்னவென்று சொல்வது?
அரிச்சந்திரன் ராமாயணக் கதைகளைச் சொல்லி மஹாத்மா காந்தியை உருவாக்கிய புத்லிபாய் பெருமைதான் என்னே!
பக்திச் சுவை சொட்டச்சொட்ட கவிபாடிய ஆண்டாள்; காரைக்கால் அம்மையார்; மீரா பாய்; ஒளவ்வையார்; முக்தா பாய் எப்பேர்ப்பட்டவர்கள்?
கணவருடன் போர் முனைக்கு வந்து பத்திரிக்கை நிருபர் போல நேரடி வருணனை தந்து அதை ‘மதுரை விஜயம்’ என்ற சம்ஸ்கிருத நூலகத்தைத் தந்த சுங்கதேவி;
தன்னை அவமதித்தவனை அழிக்கும் வரை கூந்தலை முடியேன் என்று சூளுரைத்த திரவுபதி;
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று கணவன் ராமனுடன் கானகம் சென்ற சீதை;
காவிரி ஆற்றில் அடித்துச் செலலப்பட்ட ஆட்டனத்தியைத் தொடர்ந்து சென்று கரைக்கு இழுத்துவர உதவி கோரிய ஆதிமந்தி, அவரைப் பல பாடல்களில் போற்றித் துதித்த வெள்ளிவீதியார்!
மாற்றான் கை பட்டு ரோஜா மலர் போல கசங்க மாட்டேன் என்று நூற்றுக் கணக்கான பெண்களுடன் தீக்குள் புகுந்த சித்தூர் ராணி பத்மினி;
கொக்குகளைத் தவ வலிமையால் எரித்த கொங்கணவரையும் மடக்கிய ரிஷி பத்னி;
கணவன் சாப்பாட்டின் போது கொடுத்த குரலுக்கு ஓடி வந்தும் கிணற்றில் தண்ணீர்க் குடத்தை அப்படியே அந்தரத்தில் தொங்க வைத்த வள்ளுவன் மனைவி வாசுகி;
உடல் மீது பற்று வைக்காமல் கண்ணனின் உள்ளத்தின் மீது பற்று வைத்த ராதை;
அல்ஜீப்ரா கணிதத்தை உலகிற்குத் ஈந்த லீலாவதி; கணக்கில் புலியான சகுந்தலாதேவி;
ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சமமாக தவ வலிமை பெற்ற சாரதா தேவி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்…
ஆண்களை கேள்விக் கணைகள் போட்டு துளைக்கும் திரவுபதி போன்ற பெண்களுக்கு அவற்றைக் கற்றுக் கொடுத்ததே 2850 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கார்க்கி வாசக்னவிதான்… வாசக்னவி சொல்கிறாள்: “ஒரு சிறந்த வில்லாளியின் கைகளில் உள்ள பளபளக்கும் இரும்பு அம்புகளைப் போல கேள்விக் கணைகளைத் தொடுப்பேன்…”
கேள்விக்கு ‘கணைகள்’ என்ற சொற்றொடரை உலகிற்கு அளித்தவரே அந்தப் பெண்மணிதான். கார்க்கி வாசக்னவியினால்தான் ‘கேள்விக் கணைகள்’ என்கிற வார்த்தையே தமிழில் அறிமுகமாயிற்று…