இளமைக் கோலங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 16, 2025
பார்வையிட்டோர்: 1,894 
 
 

(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

அறைக்கு வெளியே பின்பக்கமாக, பக்கத்து வீட்டுக் குசினியின் மறைப்புக்காக அடிக்கப்பட்டிருக்கின்ற சீலிங் பலகையின் இடுக்கினூடாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகநாதன். தற்செயலாக அந்தப் பக்கம் வந்த சிவகுமார், “என்ன மச்சான்… கதாநாயகியைத் தேடுறாய் போலையிருக்கு?” என விளையாட்டாகக் கேட்டான். 

அவனை இந்த நேரம் எதிர்பாராததினால் சற்றுத் தடுமாற்றமும் கூச்சமும் ஏற்பட, “இல்லை… சும்மா பாத்தனான்…” என மெல்லிய சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சமாளிப்பாகக் கூறினான். சிவகுமாருக்கு வேடிக்கையாக இருந்தது; ‘ஊரிலை கலியாணம் பேசுறாங்கள் எண்டு சொல்லுகிறான்… இஞ்சை பக்கத்து வீட்டைக் கள்ளமாய் எட்டிப் பார்த்துக் கொண்டு நிற்கிறான்!” 

“நீ சும்மா பார்த்தனான் எண்டு சொல்லுகிறாய்… இப்ப கதாநாயகன் வந்தால் விடுவானே?” எனக் கேட்டவாறே அறையினுட் சென்றான் சிவகுமார். 

“ஆரடாப்பா, அது கதாநாயகன்?” என அதிர்ச்சி மேலிடக் கேட்டவாற அவனைப் பின்தொடர்ந்து ஓடிவந்தான் ஜெகநாதன். “மகேந்திரன்தானே? அவன்தான் நெடுக ஏதோ அலட்டிக் கொண்டிருக்கிறவன்… உந்தப் பக்கமும் அடிக்கடி மினைக்கிடுறவன்!” 

“அவற்றை விறுத்தத்திலை… கதாநாயகன் பட்டம் வேறையே?” எரிச்சலுடன் வார்த்தைகள் வெளிவந்தன. 

“பின்னை ஆரடாப்பா கதாநாயகன்? நீயே?… நீ அகிலாவைக் கதாநாயகி எண்டதும்…. நான் இவன்தானாக்கும் கதாநாயகன் எண்டு நினைச்சன்.” 

அவனது கேலியான பேச்சைப் புரிந்து கொள்ளாமலே… “சீச்சீ! என்னையேன் இதுக்குள்ளை இழுக்கிறாய்?… எனக்குத்தானே கலியாணம் முற்றாகப் போகுது எண்டனான்…” 

வீதியிலே வாகனமொன்று பிறேக் போடுகின்ற சத்தம் கேட்கிறது. யாரோ குறுக்கே போய்விட்டானோ? 

கல்வி அறிவு பெற்று, வளர்ந்து உத்தியோகம் பார்க்கும் பெரியவனாகி, நாலுபேருடன் பழகி, சமூகத்தில் கௌரவஸ்தனாக மதிக்கப்படுகின்ற நிலையை அடைந்த பின்னரும் சில வேளைகளில் இப்படிச் சிறுபிள்ளைத்தனமான ஆசைகளும் முகிழத்தான் செய்கின்றன! 

அகிலா இவர்களுடைய மனதில் எம்மாதிரியான அலைகளைக் கிளறி விட்டிருப்பாள்? 

பக்கத்து அறைக்கு அவள் குடிவந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகின்றது. கெதியாகவே இவர்களுடைய அன்றாடப் பேச்சுக்களில் அவளது பெயரும் அடிபடத் தொடங்கினாலும் இன்னும் தொலைவிற்தான் அவள் இருப்பதாகப்பட்டது. ‘என்ன பெண் இவள்? பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் என மரியாதைக்காவது ஏறெடுத்தும் பார்க்கிறாளா’ இது இந்தப் பக்கத்து அறை இளைஞர்களின் மனக்குறை. 

வெள்ளவத்தையில் காலி வீதியிலிருந்து கடற்கரைப் பக்கமாகத் திரும்புகின்ற ஒழுங்கையொன்றில் உள்ள ஆடம்பரமான ஒரு வீட்டின் பின்பகுதியில் இந்த அறைகள் அமைந்திருக்கின்றன. சிறிய சிறிய சாடிகளில் சீவனம் செய்கின்ற அழகான பூஞ்செடிகள், தோகையை விரித்துக் கொண்டு நிற்கும் இரு சிறு செவ்விளநீர்க் கன்றுகள்… தண்ணீர் பாய்ச்சி வளர்க்கப்பட்டு மட்டமாக வெட்டப் பட்ட புற்தரை!…. வீட்டிற்கு அழகு செய்யும் சாதனங்கள். வீட்டின் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் செல்லக் கூடிய வெவ்வேறு அறைகள் வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன. 

இப்படிக் கோடிப் பக்கத்தில் சம்பாதிக்கிற தொகை வீட்டுக் காரரின் கொழும்புச் சீவியத்துக்குப் பெரிதும் உதவுகிறது. கொழும் புக்கு உத்தியோகம் பார்க்க வருகின்ற ஆண்கள் வயதெல்லையின்றி இந்த அறைகளுக்குக் குடிவந்து போயிருக்கின்றனர். 

இரண்டு மாதத்திற்கு முன்னர் ஒரு சந்தோஷமான செய்தி வந்தது. பக்கத்து அறைக்கு ஒரு பெண்ணும் அம்மாவும் குடி வருகிறார்களாம். ‘உங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லையே?’ என வீட்டுக்காரர் அழகான ஆங்கிலத்தில் கேட்டார். அவர் அதிகம் கதைக்கமாட்டார். இப்படி ஏதேனும் முக்கிய தேவைகளுக்குத்தான் தன் திருவாயைத் திறப்பார். மற்றப்படி ‘கொறஸ்போண்டன்ஸ்’ எல்லாம் திருமதியோடுதான். 

பக்கத்து அறைக்கு ஒரு குமாரி வருவது இந்த நண்பர்களைப் பொறுத்தவரையில் கொண்டாட்டமான சங்கதிதான். அவளது சிநேகிதத்தை யார் முதலில் தட்டிக் கொள்வது என்ற போட்டி மனப்பான்மை இவர்களிடம் ஏற்பட்டு விட்டது. ஆனால், அவளோ இவர்களை வெளியே காண நேரிடும் வேளைகளில் மென்மையான புன்சிரிப்பை முகஸ்துதியாக மலர்த்திவிட்டுத் தலையைக் குனிந்தவாறு போய்விடுகிறாளே! வீட்டில் அவளுடைய குரலைக்கூடக் கேட்கக் கிடைப்பதே அரிது. 

“சரியான புறௌவ்ட் பிடிச்ச கேர்ள் மச்சான்!” என அடிக்கடி சொல்லிக் கொள்வான் மகேந்திரன். 

அகிலா வேலை செய்கின்ற அலுவலகம், அலுவலகத்துக்குப் போகின்ற வருகின்ற நேரங்கள், பாதைகள், பஸ்சிற்காகக் காத்து நிற்கின்ற இடம் எல்லாவற்றையும் அறிந்து வைத்துக்கொண்டு அவளுடைய கடாட்சத்திற்காக அலைவது அவனது சுவையான பொழுதுபோக்குகளில் ஒன்று! எப்படியாவது அவளைத் தன் வலையில் விழுத்திக் காட்டுவதாக அறையில் நண்பர்களுக்குச் சவால் விட்டிருக்கிறான். அந்தச் சாதனையைத் தானே முதலில் நிலைநாட்ட வேண்டுமென்ற அல்ப ஆசை ஜெகநாதனுக்கு! கட்டிலிற் படுத்தவாறே சிகரட்டையும் ஊதிக்கொண்டு சற்று முன்னர் கிடைத்த தரிசனத்தில் லயித்து முகட்டைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான். 

வருஷக் கணக்காகத் துப்புரவு செய்யப்படாத தூசிகள் முகட்டில் மூலைப் பக்கமெல்லாம் சிலந்திப் பூச்சிகள் வலை பின்னி விட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தட்டித் துப்புரவு செய்ய வேண்டுமென யார்தான் நினைக்கிறார்கள்? 

அகிலா மறுபக்கத்தில் தேநீர் தயாரித்துக் கொண்டு நின்ற தோற்றம் நினைவில் விரிந்தது. நேரிலே காணும் சந்தர்ப்பங்களில் மென்மையான ஒரு புன்னகையுடன் தலையைக் குனிந்து கொண்டு செல்வது போலவே அவளது ஒவ்வொரு செய்கைகளும் நிதானமாக இருந்தன – பாத்திரங்களைப் பட்டுப் போலத் தூக்கினாள். கேற்றிலை நோகாமல் எடுத்தாள். தண்ணீரை ஓசைப்படாமல் ஊற்றினாள். தலைமயிர் முகத்திலே விழுந்தபொழுது ஒரு குழந்தைப் பிள்ளையைப்போலப் பக்குவமாக ஒதுக்கினாள். 

அவளுக்குத் தெரியாமல் பின்பக்கமாகச் சென்று அப்படியே அணைத்துக் கொண்டால்? அவள் நாணத்தோடு திரும்பி அவனைப் பார்ப்பாளோ? அணைத்துக் கொள்கிற அவனது கைகளை மென்மையாக அழுத்தித் தனது விருப்பத்தைத் தெரியப்படுத்துவாளோ? அவளது கணவனாக வரப்போகின்றவனுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். 

‘இங்கிலீஷ்’ பாட்டொன்றின் மெட்டை முணுமுணுத்தவாறு அறையினுள் நுழைந்த மகேந்திரனுடைய வருகை ஜெகநாதனின் கற்பனையை உடைத்தது. அந்த வயிற்றெரிச்சலை உணராமல், “சாய்… என்ன வடிவான கேர்ள் மச்சான்!” எனத் தான் சொல்லப் போகின்ற ஏதோ கதைக்கு முன்னுரை போட்டான் மகேந்திரன். அன்றாடம் பஸ் பிரயாணங்களில் கிடைக்கின்ற குளுமையான அனுபவங்களைச் சுவை குன்றாமல் நண்பர்களுக்குக் கூறி அவர்களது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதில் அவன் வல்லவன். அவனைப் பொறுத்தவரை பஸ்சில் நெருக்கமே ஒரு குளுமையான விஷயந்தான்! 

“நாங்கள் இஞ்சை வாய்க்கிதமாகச் சமைச்சு வைக்கிறம்… நீர் இப்பிடி ஊருலாத்திக் கொண்டு வாருமன்!” எனத் தனது எரிச்சலை வெளிப்படுத்தினான் ஜெகநாதன். 

“ரேக் இற் ஈஸி மச்சான்!” என அவனைப் பார்த்துச் சிரித்தவாறே தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரட் ‘பட்’டைக் கொடுத்தான் மகேந்திரன். 

சிவகுமார் இவர்களுடைய சம்பாஷணையில் கலந்து கொள்ளாமல், படுத்திருந்தவாறே கடிதமொன்றை வாசித்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த மகேந்திரன் “என்ன மச்சான் மனிசியிட்டை இருந்து வந்ததோ?… வலு கரிசனையோடை படிக்கிறாய்” எனக் கேட்டவாறு உடையை மாற்றத் தொடங்கினான். சிவகுமார் கடிதம் வாசிப்பதை நிறுத்தினான். சிந்தனைகள் தடைப்பட்டன. உள்ளத்தை ஊடுருவிப் பாய்கின்ற ஓர் இன்பக் குமுறல்! 

அத்தியாயம்-5

மகேந்திரன் ‘மனிசி’ எனக் குறிப்பிட்டதும் மின்னலைப் போலத் தோன்றிய கலைச்செல்வியின் நினைவுதான் அவனை அப்படியொரு மனக்கிளர்ச்சிக்குட்படுத்தியது. 

அடுத்த கணமே அது தந்தையிடமிருந்து வந்த கடிதமென்பது நினைவுக்கு வந்ததும் மனம் ஒருவித தவிப்புக்குள்ளாகியது. இப்படித்தான் எப்போதாவது இருந்துவிட்டு ஒரு நாளைக்கு எழுதுவார். 

“தம்பி… நீ படிச்சனி. நான் புத்தி சொல்லத் தேவையில்லை. ஏதோ உன்ரை புத்தியைப் பாவிச்சு நல்லாய் வரத் தெரிய வேணும். குடும்பத்திலை இருக்கிற கஷ்டங்களும் நிலவரங்களும் உனக்குத் தெரியுந்தானே? மனத்திலை இருக்கிற ஆசாபாசங்களை மறந்து பொறுப்போடை நடக்கத் தெரிய வேணும். இரவிலை வெளியிலை போறதெண்டால் மணிக்கூடு கட்டிக்கொண்டு போகாதை. காலம் கெட்டுப் போய்க் கிடக்குது. 

…இனி என்ரை காலமெல்லாம் போட்டுது. நீதான் குடும்பத்தைப் பார்க்க வேண்டியவன்…” எனத் தனது மனச் சுமைகளையெல்லாம் இறக்கியிருப்பார். அந்தச் சுமைகள் அவனது மனதில் ஏறிவிடும். 

“தம்பி… கண்ட பெடியளோடையும் சேரக்கூடாது. குடிவெறி, சிகரட் பாவிக்கிற பெடியங்களோடை இருக்கக் கூடாது. பிறகு உன்னையும் ஏமாத்திக் கொண்டு போய்க் குடிக்க வைச்சிடுவாங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் மனிசன் நல்லாய் வர்றதுக்கும் கெட்டுப் போறதுக்கும் காரணம்…. ஏதோ கவனமாய் நடந்துகொள்….” 

சில வேளைகளில் இதையெல்லாம் வாசிக்கும்பொழுது சிரிப்புத்தான் ஏற்படும். “அப்பா இன்னும் என்னைக் குழந்தைப் பிள்ளையெண்டுதான் நினைச்சுக் கொண்டிருக்கிறார்!” 

“இவன் ராசாவின்ரை மறுமொழியும் வந்திட்டுது. எழுதியிருப்பான்தானே? அநேகமாய் வாசிற்றிக்கு அனுமதி கிடைக்குமெண்டுதான் நினைக்கிறன். அதுக்கு வேறை சிலவுகளும் வரும்… 

வீடு கட்டுறதுக்குப் பட்ட கடன்தான் பெரிய பிரச்சினை யாயிருக்குது. ஈட்டுக்காரன்ரை ஆய்க்கினையாலை வெளியிலை தலைகாட்டேலாமல் இருக்குது. இனியெண்டாலும் நான் நிம்மதியாய் இருக்கலாமெண்டால்… நீங்களெல்லாம் எப்ப ஆளாகப் போறியள்… இந்தக் கடன் தனியெல்லாம் எப்ப தீரப் போகுது எண்ட கவலைதான். பாங்கிலை ஐயாயிரம் ரூபாய் கடன் எடுக்கலாமெண்டு எழுதியிருந்தாய். அதையெண்டாலும் எடுத்தால் குடுத்திட்டு மிச்சத்துக்கு ஒரு தவணை கேட்டுப் பார்க்கலாம்…. பாங்குக்குப் போய்க் கதைச்சியோ? மனேஜருக்குத் தெரிஞ்சவங்கள் ஆரையேன் புடிச்சியெண்டால் எடுக்கிறது சுலபம்.” 

கடிதத்தை வாசித்து முடித்ததும் அவனையறியாமலே ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. “அப்பா இனியெண்டாலும் நிம்மதியாய் இருப்பதற்கு, தான் இனி நிம்மதியைத் துறந்துதானாக வேண்டும்” என்ற உணர்வு தோன்றியது. நடுத்தர வர்க்கத்தினரின் சாபக்கேடு இது. பொறுப்புக்களும் சுமைகளும் பூதாகாரமாக தன்முன்னே உருவெடுத்துக் கொண்டு நிற்பதை உணர்ந்தான். 

“என்ன மச்சான்… பெலத்த யோசினையிலை இருக்கிறாய் எங்களுக்கும் சொல்லன்?” மீண்டும் அவன் வாயைக் கிளறினான் மகேந்திரன். 

“வேறை என்ன?… காசுப் பிரச்சினைதான்!” 

“இவனுக்கு எந்த நேரமும் இந்தப் பிரச்சினைதான்…” என ஜெகநாதன் அலுத்துக் கொண்டான். 

“உனக்கென்னடாப்பா?… காசுக்காரன்… குடும்பப் பொறுப்பு இல்லாதனி… உப்பிடித்தான் சொல்லுவாய்.” 

“என்ன அவசரத்துக்கு இப்ப காசு தேவை?” மகேந்திரன் கரிசனையோடு கேட்டான். 

“ஒரு ஈட்டுப் பிரச்சினை… ஈட்டுக்காரன் சித்தாரிச்சுப் போட்டான்… அப்பர் தவணை கேட்டிருக்கிறார்… அதுக்குள்ளை கட்டுறதெண்டால் எங்கை போறது?” 

“எவ்வளவு காசு….?” 

“காசு பத்தாயிரம் எடுத்தது மச்சான்… இப்ப பத்து வருசத்துக்கு மேலையாகுது…” 

“இன்னும் கட்டயில்லையோ? என்னத்துக்காக எடுத்தனீங்கள்?” 

“நாங்கள் இப்ப இருக்கிற வீடு கட்டினது அப்பர்தான். அதுக் காகப் பட்ட கடன். எடுத்த முதல் கட்டியாச்சு. இப்ப அதின்ரை வட்டி மாத்திரம் ஒன்பதினாயிரம் ரூபா மட்டிலை இருக்குது!” 

மகேந்திரன் ஆச்சரியத்தோடு கேட்டான், “ஏன்டாப்பா இவ்வளவு வட்டி வரும் வரைக்கும் விட்டனியள்? ஜெகநாதன் இந்தச் சம்பாசணையில் காது குடுக்காமல் தன் அலுவலைக் கவனித்துக் கொண்டிருந்தான். 

“என்ன செய்யிறது?… எடுக்கயிக்கை தெரியாது… பிறகு குடுக்கையிக்கைதானே திண்டாட்டம். அப்பாவும் பெரிய கஷ்டப்பட்டுத்தான் முதல்லை… ஐயாயிரம் பிறகொரு மூவாயிரம் அதுக்குப் பிறகு ஒரு ரெண்டாயிரம் என்று முதலைக் குடுத்தார்… இப்ப வட்டியைப் பார்த்தால் மலைபோல நிக்குது.” 

“என்ன அநியாயம்?” எனக் கவலைப்பட்டான் மகேந்திரன்.

“அநியாயம்தான் மச்சான்…. அதுக்காக இனி என்ன செய்யிறது? வட்டி எடுக்கிறவனுக்கு நியாயம் அநியாயம் விளங்காது..” 

“கடன் எடுக்கலாமெண்டவுடனை போய் அந்த வட்டிக்கு எடுக்கிறதே? காசு பிறகு குடுத்துத் தீர்க்கிற வழியை யோசிக்காமல் எடுக்கிறதே.” 

மகேந்திரன் தன் தந்தையைத் தாக்கிக் கதைத்ததும், “இனி என்ன செய்யிறது? ஒரு மாதிரிக் கட்டத்தானே வேணும்… அவரென்ன கடன்பட்டு அநியாயச் செலவு செய்தவரே… எங்கடை வீடு கட்டத்தானே?” எனக் கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயன்றான் சிவகுமார். 

“அது சரி… நான் இப்ப கொப்பரைக் குறை சொல்லயில்லை… அவரும் கட்டியிடலாம் எண்ட நம்பிக்கையிலைதான் எடுத்திருப்பார். ஆனால், அது முடியாத காரியமெண்டு இப்பத்தானே விழங்குது. இப்ப நீ உழைக்கிறது அன்றாடச் சீவியத்துக்கே போதாது… இந்த விசித்திரத்திலை கடனும் அடைக்க வேணும்! ஒன்பதாயிரத்துச் சொச்சமெண்டால் சும்மாவா…? நீ பாங்க் லோன் எடுத்து ஐயாயிரத்தை இப்ப கட்டிறாயெண்டு வைப்பம்… மிச்ச நாலாயிரத்தையும் கட்டிறதெண்டால்… நீ பாங்கிலை எடுத்த ஐயாயிரம் கட்டி முடிய வேணும்… அது முடிய இந்த நாலாயிரம் வளர்ந்து ஒரு பெரிய தொகையாக நிற்கும்… அப்படியே சங்கிலித் தொடர்போலை உங்கடை உழைப்பை ஆரோ ஒரு அந்நியனுக்குக் கொட்டிக் கொண்டிருக்கப் போறியள்… அவன் எப்பவோ போட்ட முதல் சீவியம் முழுக்க சும்மாயிருக்கச் சாப்பாடு போடுது!” 

மகேந்திரன் தனது நிலைமைக்குப் பரிந்து கதைப்பது சற்று ஆறுதலாகவிருந்தது. 

சற்று நேரம் மனம் திறந்து கதைத்ததில் ஒரு வகையில் மனச்சுமை இறங்கிய சுகம் தெரிந்தது. 

“மச்சான்… அப்பா பட்ட கடன்களை நான் உழைச்சு அழிக்கிறன் என்று நினைக்கப் பெருமையாகத்தான் இருக்குது… ஆனால் நீ சொன்ன மாதிரி அது தேவையில்லாமல் இன்னொருத்தனுக்குத் தாரைவாக்கிற உழைப்புத்தானே? எங்கடை குடும்பத் தேவைகளுக்கே அதை மூலதனமாக்கினால் எவ்வளவு பிரயோசனமாய் இருக்கும்?” 

அதை ஆமோதித்தவாறே மகேந்திரன் கேட்டான் “பாங்கிலை என்ன சொல்லுறாங்கள்?” 

“தாறதெண்டுதான் மனேஜர் சொல்லியிருக்கிறார்… அதுக்கும் எத்தனை தரம் ஓடித் திரிய வேண்டியிருக்குது… எவ்வளவு அலைச்சல்? அவங்களும் ஒவ்வொருக்காலும் போக்கையிக்கை ஒவ்வொரு விபரங்களைக் கேட்டுக் கேட்டு அலைக்கழிக்கிறதைப் பார்க்க… பேசாமல் விட்டிட்டு இருந்திடலாம் போலையிருக்குது!” சிவகுமார் சலிப்புடன் கூறினான். 

“கவலைப்படாதை மச்சான் எல்லாம் வெல்லலாம்!” என அவனைத் தேற்றுவது போலக் கூறினான் மகேந்திரன். 

அவனது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் சிவகுமாருக்கு ஆச்சரியத்தையே அளித்தன. அவனைப் போல, எந்தப் பிரச்சினைகளையுமே சாதாரணமாகக் கருதிக்கொண்டு மனம் போனபடி வாழ்வதற்குத் தன்னால் ஏன் முடியவில்லை என எண்ணிக் கொண்டான். 

பறவையொன்று சிறகடித்துக் கொப்பு மாறுகின்ற ஓசை கேட்டது. வௌவாலாக இருக்கும். அதைத் தொடர்ந்து உறக்கம் கலைந்த கோபத்தில், இரு காகங்கள் மாறி மாறிக் கரைகின்றன. பின்னர் நிசப்தம், காலி வீதியில் ஓடுகின்ற வாகனங்களின் இரைச்சல் மட்டும் இடையிடையே கேட்கிறது. 

இரவு உறங்கிவிட்டது. 

அத்தியாயம்-6

வெள்ளவத்தைப் பிள்ளையார் கோயிலில் அடியார்கள் குழுமத் தொடங்கி விட்டனர். வெள்ளிக் கிழமை மாலை நேரங்களில் கோயில் களைகட்டிவிடும். 

தெருக்கூட்டுகின்ற தொழிலாளர் முதல் ஆடம்பர (அல்லது வசதியான) வாழ்க்கை வாழ்கின்றவர்கள் வரை இறைவனின் அடியவராக இங்கு வருகை தந்தாலும் கொழும்பில் நடுத்தர வாழ்க்கை நடத்துகின்ற உத்தியோகத்தர்களையும் பல்கலைக்கழக மற்றும் தனியார் கல்வி நிலைய மாணவர்களையும் பொறுத்தவரையிற் தான் கோயில் விசேஷம் பெறுகின்றது. 

விண்ணப்பங்களோடும் வேண்டுகோள்களோடும் இறைவனைக் காண வருகின்ற பக்தர்களின் மனதில் நண்பர்களையும் உற்றாரையும் கண்டு அளவளாவலாம் என்ற பொழுது போக்குணர்வும் கலந்திருக்கின்றது. இறைவனைத் தரிசிக்க வருகின்ற ‘நிறங்களை’த் தரிசிக்கலாம் என்ற நியாயமான விருப்பமும் பல இளைஞர்களின் மனதில் இழையோடியிருக்கிறது. 

சிவகுமாரும் மகேந்திரனும் வந்தபொழுது மாலையும் இரவும் இரண்டறக் கலக்கின்ற நேரம் – பஸ் நிலையத்தில் விபூதி சந்தனத் தோடு காட்சி தருகின்ற காற்சட்டைக்காரர்கள் – தங்கள் நேர்த்திக் கடனை முடித்துக் கொண்டு திரும்பிப் போவதற்கு ஆயத்தமாக நிற்கின்ற நண்பர்களுக்கு முகத்தை மலர்த்த வேண்டியிருந்தது. 

“கெதியிலை வா மச்சான்! பூஜை துவங்கப் போகுது!” என ஜெகநாதனை அவசரப்படுத்தியவாறே நடந்தான் சிவகுமார். சில குடும்பஸ்தர்கள் தங்கள் மனைவிமார்களுக்குப் பின்னால் ‘பய’ பக்தியோடு பிரவேசிக்கின்றனர். 

கோயிலின் முன் மண்டபத்துப் பக்கத்துத் திண்ணைக்கட்டில் பல இளைஞர்கள் வரிசையாக அமர்ந்திருக்கின்றனர். இந்தத் திண்ணையில் அமர்ந்திருப்பதே ஒரு சுகம்தான். நேரம் போவதே தெரியாமல் இருந்து எத்தனை கவலைகளை மறக்க முடிகிறது! விடிந்ததும் அவசரமாக வேலைக்குச் சென்று உழைத்துச் சோர்வடைந்து மீண்டும் வந்து போய் உழைத்து இயங்கி இயங்கித் தேய்ந்து… (மெய்) ஒரு நாளைக்கு வைத்தியசாலையில் பெரிய ‘பிறேக்டௌன்’ ஆகிக் கிடந்து- 

கடைகளில் சாப்பாட்டுப் பிரச்சினைகளை, அலுவலகங்களில் வேலைத் தொல்லைகளை, வீதியிலே விதவிதமான கவர்ச்சிகளை, பஸ்களில் நெரிசலின் சுகங்களை, ‘கிளப்’களில் மீண்டும் அந்த ஒரே பிரச்சினைகளைக் கதைத்துக் கதைத்து (வாய்) –

இமைகளை மூடி விழிப்பதற்குள் ஈக்களைப் போலக் குறுக்கும் நெடுக்கும் பறக்கின்ற (ஓடுகின்ற) வாகனங்களில் மனிதர்களின் அவசர வாழ்க்கைகளை, வீதியில் பிச்சைக்காரர்களின், பைத்தியங்களின் அழுக்கான தோற்றங்களையும் அவலமான வாழ்க்கையையும் (ஐயோ பாவம்!) ‘ஷோசியல் மூவிங்’குகளின் மயிர்க்கூச்செறியும்… மன்னிக்கவும், உள்ளத்தைத் தொடும் காதல் காட்சிகள், ‘ரீன் ஏஜ்’களின் மிகக் குறுகிய ஆடைகளில் பொலிஷ் பண்ணப்பட்ட… (‘காணக் கண்’ ஆயிரம் வேண்டுமையா!)- 

கொழும்பில் நெருக்கமான பகுதிகளையெல்லாம் கழுவி வரு கின்ற சாக்கடை வாய்க்கால்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளிப் படுகிற கழிவு வாயுக்கள், பஸ் நெரிசலில் பிணைபடுகின்ற சனங் களின் வியர்வை கசிந்துருகி… (லேஞ்சியை எடுத்து ‘மூக்கில்’ வைத்து) சீ.. வாகனங்கள், தொழிற்சாலைகளின் இரைச்சல்கள் மலிவு விலை வியாபாரிகளின் காதைக் கிழிக்கின்ற சத்தங்கள் (செவி) –

-இயந்திரமயமான வாழ்க்கையில் தன்னையறியாமலே இரண்டறக் கலந்து விடுகின்ற நிர்ப்பந்தத்தில் விரக்தியடைகின்ற மனதுக்கு ஆறுதலளிக்கின்ற சுகம். 

ஐம்புலன்களை அடக்கி மனதைப் புனிதமாக்கிப் பக்திமயப் படுத்துகின்ற கற்பூர வாசனை காற்றில் மிதந்து வருகிறது. அரோகரா கோஷம். மனதை ஒருவழிப்படுத்துகின்ற மணியோசை. பூசை ஆரம்பமாகி விட்டது. 

கற்பூர ஆராதனை நடக்கிறது! கூப்புகின்ற கரங்கள் தலைகளுக்கு மேல் உயர்கின்றன. தங்கள் குறை நிறைகளை அந்தரங்கமாக இறைவனிடம் சமர்ப்பித்துப் பரிகாரம் கேட்கின்ற பக்தர்கள் தீபங்களில் அர்ச்சிக்கப்படுகின்ற இறைவனின் ஒளிமயமான தோற்றத்தைத் தரிசிப்பதற்கு இடிபடுகின்றனர். 

இந்த நேரத்தில் வெளியில் சற்றுப் பரபரப்பு – கப்பல் போன்ற ஒரு கார் ஆலய வாயிலினுள் நுழைகின்றது. கணப் பொழுதிலே சங்கதி மூலஸ்தானம் வரை பரவுகிறது. – வந்திருப்பவர் ஒரு ‘மினிஸ்றர்!’ பக்த கோடிகளின் முகங்களில் ஆச்சரியம் மேலிடுகிறது, ‘எட! மினிஸ்றர் கூட வந்திருக்கிறார்!’ 

தரிசனத்தில் நின்றவர்கள் பலர் ஆவலோடு வாகனத்துக்கு அண்மையில் ஓடி வருகிறார்கள். அண்மையில் சென்று தரிசிக்க வேண்டுமென்ற துடிப்பு – இப்படி ஒரு ‘சான்ஸ்’ பிறகு கிடைக்காதே! கோயிலினுள் நின்ற சனங்களிலும் பலர் முண்டியடித்துக் கொண்டு வெளியில் ஓடி வருகின்றனர். சிலர் கடவுளைக் கூப்பிய கைகளோடு தலைகளை மாத்திரம் இந்தப் பக்கம் திருப்பி இருமனதோடு நிற்கிறார்கள். சில கொழும்பு வாழ் முக்கியஸ்தர்கள் முன்னே ஒடி வந்து ‘மினிஸ்றரை’ எதிர்கொண்டு வரவேற்றுப் பாதுகாப்போடு உள்ளே அழைத்துச் செல்கின்றனர். அமைச்சர் வந்த புண்ணியத்தில் இறைவனுக்கு ஒரு விசேட பூசையும் நடைபெறுகிறது! 

சிவகுமார் ஜெகநாதனைப் பார்த்து – “மச்சான்! கடவுளைக் கண்டியோ?” எனக் கேட்டான். “சும்மா இரடா! – அதுகள் பெரிய இடத்துச் சங்கதிகள்” என ஜெகநாதன் அவனது வாயை அடைத்தான். 

இப்படியாகப் பூசை முடிந்த பின்னரும் மினிஸ்றர் வந்துபோன செய்தி பலராலும் வாய் நிறையக் கதைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. 

கோயிலுக்கு வருவதற்கு முன்னர் சோறு மாத்திரம் ஆக்கி வைத்துவிட்டு வந்ததால் இனிப் போய்த்தான் கறி சமைக்க வேண்டுமென்பதை நண்பனிடம் நினைவுபடுத்தினான் சிவகுமார். 

“சிவா! நான் பம்பலப்பிட்டிக்கு ஒருத்தனைச் சந்திக்கப் போக வேணும்… நீ அறைக்குப் போய் ஆயத்தப்படுத்து… வந்திடுவன்…” என்றவாறே இருவரும் வெளியேறுவதற்கு வந்தபொழுது சிவகுமாருக்குக் காலைவாரிவிட்டது போலிருந்தது அவனது செருப்பைக் காணவில்லை. 

“மச்சான் செருப்பை ஆரோ அடிச்சிட்டாங்கள்” எனப் பரிதாபமாகக் கூறினான் – இரண்டு நாட்களுக்கு முன்னர் வாங்கிய புதுச் செருப்புகள். 

சிவகுமார் அழுவாரைப் போல நின்றான். சகல வெட்டுக் கொத்துகளும் (பைசிக்கல் கடன் + வட்டி, தொழிற்சங்க சந்தா, பண்டிகைக்கால முற்பணம், விசேட முற்பணம் – வட்டியில்லாதது; இனக் கலவரத்தின் பின்னர் வழங்கப்பட்டது, நலன்புரிச் சங்க சந்தா, வைத்திய உதவி நிதி, டிஸ்ற்றல் லோன் + வட்டி, ஈ.பீ. எவ். 10% வருமானவரி) போக மிச்சமாகக் கிடைத்த சம்பளத்தையெடுத்து சாப்பாட்டுக் கடைக்காரனுக்கும், அறை வாடகையும் கொடுத்துப் பெற்றோருக்கும் ஏதாவது (மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி) அனுப்பிய பின்னர் இருபது ரூபா சொச்சம் மீதியிருந்தது. வெகுநாட்களாகச் செருப்பு வேண்ட வேண்டிய குறையைக் கால்கள் உறுத்திக் கொண்டிருந்ததால்… வாயைக் கட்டி ஒரு சோடி செருப்பை வேண்டினான். அந்தோ… அந்தப் புதிய செருப்புக்களைப் பொலித்தீன் பையினுள்ளிருந்து பெருமிதத்தோடு, (“இனிக் கொஞ்ச நாட்களுக்கு வெள்ளைக்காரன் மாதிரித் திரியலாம்.”) எடுத்தபொழுது இருந்த மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப் போட்டவன் யார்? 

தனது கால்களைப் பார்த்தவாறு தவிப்போடு நின்றான் சிவகுமார்; வெறும் காலோடு எப்படிப் போவது? 

“மச்சான் ஒண்டுக்கும் யோசியாமல் அதிலை கிடக்கிறதிலை ஒண்டை மாட்டிக் கொண்டு வா!” 

சீ! இதென்ன வெட்கம் கெட்ட வேலை – தானே இன்னொருவனது செருப்பைக் களவாடுவதா? 

“என்ன… என்னையும் போய்க் களவெடுக்கச் சொல்லுறியோ?” – சிவகுமார் சற்று எரிச்சலோடு தான் கேட்டான். 

“இது களவில்லை மச்சான்!… உன்ரை செருப்பை ஆரோ எடுத்திட்டான்… இப்ப எப்படி வெறும் காலோடை நடக்கப் போறாய்?” 

‘அதுகூட உண்மைதான். காலில் செருப்பில்லாமல் எப்படி நடப்பது? ஆபத்துக்குப் பாவமில்லையாமே’ 

‘சரி! தன்னை யாராவது பார்க்கிறார்களா என்பதைச் சாடையாகக் கவனித்துவிட்டுச் சென்று ஓரமாக வைக்கப்பட்டிருந்த ஒரு சோடி செருப்பினுள் (சொந்தக்காரனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.) கால்களை மாட்டி- 

“தம்பி! உங்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறம்!” 

-சற்று தூரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர்களுள் ஒருவன் ஓடிவந்து இவனது சேட்டைப் பிடித்து இழுத்தான் – சொந்தக்காரனின் கேள்வி; “இதுக்கெண்டுதானே வாறனீங்கள்…?” 

சிவகுமாரின் கால்கள் தடுமாறின. தன்னைப் பரிகாசமாகப் பார்க்கின்ற கண்களைத் தாங்குவதற்குத் திராணியற்றுத் தலைகுனிந்தான். கால்கள் மணலினுள் அமிழ்ந்துகொண்டு போவதுபோல… எல்லோரின் முன்னிலையில் இன்னும் கீழே… கீழே… சீ! என்ன கேவலம். 

“பிளடி றாஸ்க்கல்ஸ்” என்றவாறே இன்னொருவன் வந்து அவனது முதுகிலே ‘புள்ளடி’ போட ஆயத்தமானான். போன கிழமை பாவமன்னிப்புக் கோரிக் கோயிலுக்கு வந்து தன் செருப்புக்களைப் பறிகொடுத்த (அப்)பாவி. 

ஜெகநாதன் பக்த கோடிகளின் செவிப்பறையில் அறைவது போல உரத்துச் சொன்னான் : “ஹலோ ஏன் இப்பிடி விசாரிக்காமல் சத்தம் போடுறீங்கள்? அவனைப் பாக்கக் கள்ளன் மாதிரியே இருக்கு?” – பின்னர் பெரிய சிரமத்தோடு உண்மையை விளக்கிச் சிவகுமாரை விடுவித்தான். 

கோயிலை விட்டு வெளியேறியபொழுது “சிவா! கவலைப்படாதை… இதெல்லாம் சின்ன விஷயம்!” என ஆறுதல் கூறிவிட்டு பம்பலப்பிட்டி போவதற்காக வீதிக்கு மறுபக்கமாக நடந்தான் ஜெகநாதன். 

சிவகுமார் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான். 

வெறுமையான கால்களில் கற்களின் குற்றல். கனமான மனதிலே அவமானத்தின் குதறல்கள். 

– தொடரும்…

– 1975-ம் ஆண்டளவில் சுதாராஜ் எழுதிய முதலாவது நாவல்.

– இளமைக் கோலங்கள், முதல் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *