இளங்கன்று




ஆறு வயதுப் பையன் அம்ருத், கோடை விடுமுறையில் தன் பெற்றோருடன் தீம் பார்க்குக்குப் போனான். ரோலர் கோஸ்டரைப் பார்த்ததும், அதில் ஏறிச் சுற்ற வேண்டும் என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டான். ”வேண்டாம்டா! நீ குழந்தை. பயப்படுவே!” என்றனர் பெற்றோர். அவன் கேட்கவில்லை. அடம்பிடித்தான்.
‘சரி’யென டிக்கெட் வாங்கிக்கொண்டு, மூவரும் ரோலர் கோஸ்டரில் ஏறி ஆசை தீரச் சுற்றினார்கள். அம்ருத் கொஞ்சம்கூடப் பயப்படவே இல்லை. ரொம்பவே ரசித்தான்.
அதன்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து… இன்னொரு கோடை விடுமுறையில், அதே தீம் பார்க்குக்கு மூவரும் வந்தார்கள். ரோலர் கோஸ்டர் அருகில் வந்ததும், ”என்னடா… இதுல ஏறி ஒரு சுத்து சுத்துவோமா?” என்று கேட்டார்கள்.
”ஐயோ! வேண்டாம்மா!” என்று அலறினான் அம்ருத்.
”ஏன்டா வேணாங்கறே? போன முறை வந்தப்போ ரொம்ப ரசிச்சியே!” என்றனர் பெற்றோர்.
ரோலர் கோஸ்டரின் வேகம், அதில் ஏறுபவர்களின் உடல் ஆரோக்கியம், பின் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி அங்கே வைக்கப்பட்டு இருந்த எச்சரிக்கைப் பலகையைக் காட்டிப் பையன் சொன்னான்… ”போன தடவை வந்தப்போ எனக்கு இதையெல்லாம் படிச்சுப் புரிஞ்சுக்கத் தெரியலையேம்மா!”
– 28th மே 2008