இல்வாழ்க்கையின் வெற்றி





(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்புள்ள சுஜாதா,
நான் இதற்கு முன் கடிதத்தில் தாம்பத்தியத்தைப் பற்றி எழுதினேன். இப்பொழுது அதை எப்படி வெற்றிகரமாக நடத்திக்கொள்வது என்பதைப் பற்றிச் சொல்லப் போகிறேன். ஒருமுறைக்குப் பலமுறை சித்தித்து வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயற்சி செய்.
தற்காலத்தில் மனைவியின் பொறுப்பு அதிகமாகிவிட்டது. சிநேகிதர் போன்று எல்லாக் காரியங்களிலும் ஒத்துழைக்கும் உயர்ந்த குணம் படைத்த மனைவியைத்தான் தற்கால நாகரிகக் கணவன் தேடுகிறான்.

வாழ்க்கை வழவழப்பான தார் ரோடில் “ப்யூக்” வண்டியில் போவது போன்றதல்ல. மேடும் பள்ளமுமான கிராமத்துப் பாதையில் போகும் கட்டை வண்டி போல் இருக்கும். அநேக ஏற்றத் தாழ்வுகள் நம்மோடு உறவாடுகின்றன. புறம்பாக நடைபெறும் சிறுமை, பெருமைகளினால் தாம்பத்திய அன்பு மாறுபடுவது மிகமிகத் தவறென்று தான் கருதுகிறேன். எல்லோருக்கும் இளம் தென்றல் எப்பொழுதும் வீசுவதில்லை. பெருங்காற்று, சொல்லப் போனால் புயல் காற்றுகூட, சிலர் வாழ்வில் வீசுகிறதல்லவா? எனவே, உள்ளன்பு, ஒற்றுமை இவைகளை வளர்த்துக் காண்டால் துன்பத்திலும் இன்பம் அடையலாம்.
கணவனுடைய சிறு சிறு குற்றங்களை நாம் குறை கூற வேண்டிய அவசியமில்லை. முடிந்தால் அதை ஒரு பெருமையாகக் கூடச் சொல்லிக் கொள்ளலாமென்றுதான் நினைக்கிறேன். நம் குழந்தைகளைப்போல் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாதென்றுதான் நினைத்துக் கொள்வோமே? நமக்குப் பிடித்ததுதான் அவர்களுக்கும் பிடிக்கவேண்டுமென்று அவசியமில்லை. வேறுபட்ட அபிப்பிராயம், குணம் இருந்தால் ஒருவருக்கொருவர் மனக் கவர்ச்சி உண்டாகுமென்று ஒரு மனோதத்துவ நிபுணர் சொல்லி யிருக்கிறார்.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ஒரு அம்மாள் தாம்பத்தியத்தில் வெற்றி யடைந்தவர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டவர், அதன் ரகசியம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தேன். அந்த அம்மாளுடைய கணவரிடம் உலகமும் வியந்து பெருமைப்படுத்த வேண்டிய விசேஷ குணங்கள் இருந்து வந்தன. அதனால் மட்டும் வெற்றி உண்டாகுமா? இல்லை. வீட்டில் நடைபெறும் சிறு சிறு விஷயங்களுக்கு அவர் பொறுப்பு எடுத்துக் கொள்வதில் இல்லையென நினைந்து அந்த அம்மாள் பூதக் கண்ணாடியில் வைத்துப் பார்த்து ஒரு நாளும் குறைப்பட்டதே இல்லை. அந்தம்மாள் அப்படிச் செய்யாததுதான் வெற்றியின் ரகசியம். கணவருக்குக் கௌரவம் கொடுத்துக் குடும்பம் நடத்துகிறார். இந்த முறையை ஒவ்வொரு பெண்மணியும் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கணவரின் மனம் மகிழ்ச்சியில் இருப்பதற்காகப் பெண்களாகிய நாம் சில தியாகங்களைச் செய்யத்தான் வேண்டும். அது வெற்றி அளிக்கும்.
கல்கத்தாவில் ஒரு அதிசய வழக்கு நடந்த தாம். தன்னுடைய சமையலையேர் அலங்காரத்தையோ பற்றிக் கணவன் பாராட்டுவதில்லை யென்பது மனைவியின் குற்றச்சாட்டு. கணவன் வேலைத் தொந்தரவினால் அப்படி யெல்லாம் சொல்ல முடியவில்லை யென்று வழக்காடினார். வழக்கும் விசித்திரமாக நடந்தது. மனைவி தரப்பு வக்கீல் தம் சாமர்த்தியத்தை முழுதும் உபயோகித்துத்தான் பேசினார். வழக்கு ஒத்திப் போடப்பட்டது.
நீதி ஸ்தலத்துக்கு வெளியில் வந்ததும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கணவர் ‘எங்கே போகப் போகிறாய்?’ என்று மனைவியைக் கேட்டாராம். ‘ஏன்? நம்முடைய வீட்டுக்குப் போகவேண்டியது தான்’ என்று அவர் மனைவி சொன்னாளாம்! வக்கீலுக்கு ஒரு நாளைய வரும்படிதான்!
வயதில் மிகச் சிறியவளான ஒரு சகோதரி அடிக்கடி ”கணவர் – மனைவி விஷயமான சண்டையில் நாம் தலையிடக் கூடாது. உண்மை உருப்படியாக நமக்குத் தெரிய முடியாது” என்று சொல்லுவாள். எவ்வளவு அநுபவமுள்ள வார்த்தைகள்.
ஒரு டாக்டரின் மனைவி எப்பொழுதும் நோயாளி! அந்தம்மாளுக்குத் தன் கணவரின் வைத்தியத்தில் நம்பிக்கை இல்லாததினால் நாட்டு மருந்து சாப்பிடுவதாகச் சொல்லுவாள்! பரிதாபகரமான தல்லவா? கவியரசர் பாரதியார் கணவரின் புகழ் மனைவியிடம் இருப்பதாகவே கூறுகிறார். “மானம் சேர்ப்பது மனைவியின் வார்த்தைகள்” என்று அழுத்தம் திருத்தமாகப் பாடியிருக்கிறர்.
கணவனும், மனைவி யும் வீணையும் – நாதமும் போல் இருந்தால்தான் இல்லற வாழ்க்கையில் வெற்றி பெறலாம். அடுத்தபடியாகத் தன்னுடைய சகிப்புத் தன்மையால் உலகத்தின் போற்றுதலைப் பெறலாம். ஒரு நாள் கணவனின் பூரண அன்பையும் அடைந்து விடலாம்.
இப்படிக்கு,
பூமாதேவி
– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.