இலட்சியம்
கதையாசிரியர்: நகுலன் நா.தங்கரெத்தினம்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 964
(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அருணா! அருணா! என்னடாப்பா? எப்பிடிச் சுகம்? என்னையே திரும்பிப் பார்க்காமைப் போறாய்” என்று தர்மதாசன் கூறிய குரல் கேட்டுத் திரும்பினான் அருணன்.
“ஓ! நீய…..? நான் கவனிக்கவேயில்லை. இப்பதான் மச்சான் கொழும்பிலையிருந்து யாழ்தேவியிலை வாறன்.”
“ஏன்? யாழ்ப்பாணத்திலை இருந்து கார் கீர் வரயில்லையே?”
”இல்லையடாப்பா. பஸ்ஸிலைதான் வந்தனான். யாழ்ப்பாணம் இப்ப கொழும்பை வெண்டுவிட்டதடா.”
“ஏன்ராப்பா? இரண்டு தட்டு பஸ்ஸைப் பாத்து விட்டோ சொல்லுறாய்?”
“சீச்சீ! அதுக்காகச் சொல்லையில்லை. ‘பஸ்ரான்ட்’ முழுக்கப் பெட்டையளாத்தானே கிடக்கு. அதுவும் ஆம்பிளையோடை சரிக்குச் சரியாக வெல்லோ இருந்து பஸ்சுக்கை வாறாளவை.”
“உதைத்தானே கண்டனி, இப்பதைப் பெட்டையன் பொடியளுந்தை மடியிலை இருந்து வாறாளவை”
“தமிழரின் பண்பாடே கெட்டுப்போச்சு. அந்தக் காலத்துப் பத்தினிகள் இருந்த இடத்தை கொழும்புப் பொடிச்சியள் பழுதாக்கிப் போட்டாளவை.”
“சரி சரி அவளவையைப் பற்றி எங்களுக்கேன் கதை. உன்ரை கலியாணம் எப்பவப்பா செய்யப்போறாய்?”
“என்ன எனக்கு கலியாணமோ?”
“ஏன்? நீ கலியாணம் செய்யக் கூடாதா? முந்த நாள் பிறந்த குழந்தைப் பொடியள் எல்லாம் கலியாணம் செய்து போட்டாங்கள்……”
“அவங்களுக்கென்ன குடுத்து வைச்சவங்கள்.”
“உன்னிலும் பார்க்க அவங்கள் பெரிய பணக்காரரோ?”.
“பணம் இருந்து என்ன செய்யிறதப்பா? நான் பணத்துக்காக சொல்லையில்லை. எனக்கொரு அக்கா இருக்கிறா. அவவை செய்து குடுத்துவிட்டுத்தான் நான் செய்யிறது.”
“ஏன் உன்ர கொக்கா இன்னும் கலியாணம் செய்யயில்லையே?”
“இல்லையடாப்பா. அவ கலியாணம் செய்யமாட்ட வெண்ணிறா”
“ஏனாம்?’
“அவ தன்ரை இலட்சியம் நிறைவேறினாத்தானாம் கலியாணம் செய்யிறது.”
“என்னப்பா இலட்சியம் என்கிறாய். ஏதோ பெரிய உத்தியோகக் காரனைச் செய்யவேணுமெண்டோ?”
“இல்லையடாப்பா, சீதனம் குடுக்காமை தன்னை கலியாணம் செய்து குடுக்கவேணு மென்கிறாவடா?”
“நல்ல கதைதான் இந்தக் காலத்திலையும் சீதனம் வாங்காமை ஆரோ கலியாணம் கட்ட வாறானோ?”
“அதுதான்ரா, நான் சொல்லச் சொல்லக் கேட்கிறாவில்லை. தான் மாதர் சங்கத்துக்கும் சீதன ஒழிப்புச் சங்கத்துக்கும் தலைவியாம்….”
“அப்பிடியெண்டா கூலிக்குப் போறவங்களை செய்வாவாமோ?”
“அவவுக்கு எந்த வேலைக்காரனெண்டாலும் சீதனம் வாங்காவிட்டால் கலியாணம் செய்யவிருப்பமப்பா. படிக்காத பெண்ணை படித்த பட்டதாரி ஆண்கள் கலியாணம் செய்து சீவியம் செய்யவில்லையோ? அதுபோல் படித்த பட்டதாரியான பெண் படிக்காத ஆணை கலியாணம் செய்தால் என்ன? உழைத்துப் சாப்பாடு போடக்கூடிய வல்லமை இருந்தால் போதும் என்று சொல்லுறாவடா. ஆனால் எங்களுக்குத்தான் விருப்பமில்லை. எப்பிடியிருந்தாலும் பட்டதாரி பட்டதாரியைத்தான்…”
“உதுதான்ரா சொல்லுறது பெண்களை அதிகம் படிப்பிக்கக்கூடாதெண்டு. உன்ரை கொக்காவின்ரை இலட்சியம் நிறைவேறினால் வறுமைப்பட்ட பெட்டையளுக்கு ஓரளவு நன்மைகிடைக்கும்எனக்கும் நன்மைதானப்பா.”
“ஏன் உனக்கு சகோதரி மார் இருக்கினமே?”
“இல்லையடாப்பா. எனக்கு அடுத்தடுத்து ஐஞ்சு பெட்டையலெல்லேடா பிறந்திருக்கு. இந்தக் காலத்திலை ஐஞ்சு பேருக்கும் சீதனம் குடுக்கிறதெண்டா நான் ஆரிட்டைப் போறது”
“சரி சரி, நேரமாச்சு. வீட்டிலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பினம் வரட்டே”
“சரி சரி எங்களையும் மறந்து போகாதை”
“எடே தம்பி! எழும்படா பொழுதுபட்டுப் போச்சு. ராத்திரி நித்திரை கொள்ளையில்லையாக்கும். அதுதான் நித்திரை கொள்ளுறான்” என்று சொல்லிக் கொண்டே மகன் அருணணை எழுப்பினாள் செல்லம்மா.
“என்னணை அம்மா, சும்மா கிடக்க விடமாட்டியேணை”
“சாப்பிட்டுவிட்டுக் கிடவேனடா”
“அக்கா வந்துவிட்டா வேணை?”
“அவள் மாதர் சங்கக் கூட்டத்துக்குப் போனவள் இப்ப வாறாளே? உதுதானே அவளுக்கு வேலை. ஊருக்குப் பாடுபடத்தானே படிப்பிச்சு பட்டதாரியாக்கிவிட்டது. அவள்தான் போறாளெண்டு கொப்பருமெல்லே ஊரூராத் திரியிறார்” என்று செல்லம்மா சொல்வதற்கும் செல்லம்மாவின் கணவன் திருநீலம் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.
“உனக்கு நெடுக என்னைப் பற்றி கதைக்கிறதுதான் வேலை. நான் என்னத்துக்கு திரிஞ்சிட்டு வாறன். உன்ரை மேளைத் தள்ளிவிடலாமெண்டுதான். ”
“சும்மா ஊரைச் சுத்திட்டு வந்தாலும் உதைத்தான் சாட்டுறது.”
“எடியை எடியை, உன்ரை வாயை மூடிக்கொண்டு உவனை எழுப்படி” “ அவன் நித்திரை தூங்குதெண்டு கிடக்கிறான். நீங்கள் தான் எழுப்புங்கோ” எடியை நான் வந்திருக்கிரன் எண்டு எழுப்படி சொல்லிவிட்டு, சாய்மனை நாற்காலியில் போய்ச் சாய்ந்து கொண்டு பத்திரிகையை எடுத்து வாசிக்கத் தொடங்கினார் திருநீலம்.
“அப்பு, என்னணை ஏதோ அதிகமாக் கதைக்க வேணுமெண்டு முந்தியொருக்காக் காயிதம் எழுதினியள்….”
“உன்ரை கொக்காவைப் பற்றித்தான்….”
“அக்காவின்ரை கலியாணத்தைப் பற்றியே?”
“ஓமடா”
“என்னணை செய்யிறது. அவதானே தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று நிக்கிறா. தன்ரை உயிர் போனாலும் சீதனம் குடுத்து கலியாணம் செய்யிறதில்லையாம்.”
“உப்பிடிச் சொல்லித்தானே எத்தனை பட்டதாரியள் வந்து வந்து கேக்க மாட்டனெண்டு விட்டாள். எனக்கொரு எண்ணம் தோன்றுது. அப்பிடியாகுதல் செய்துதான் இவளின்ர காரியத்தை முடிக்க வேணும்”
“எப்பிடியெண்டால் என்ன. அக்காவின்ரை கலியாணம் முடிச்சாக்காணும். என்ன மாதிரி செய்யப்போறியள்…”
“உனக்கும் கொக்காவுக்கும் மாத்துச் சடங்கு சீதனமில்லாமல் செய்யலாமெண்டு யோசனை போகுது”
“என்னணை! மாத்துச்சடங்கோ?”
“ஓமடாப்பா”
“உதுக்கு மாத்திரம் நான் ஒத்து வரமாட்டேன்”
“ஏன்ரா? உனக்கு ஏதாவது இலட்சியம் இருக்கே?”
“எனக்கொரு இலட்சியமும் இல்லை. ஆனால் மாற்றுக் கலிாணத்தாலை எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கு. நீங்கள் இப்ப செய்துபோட்டுப் போவியல் பின்னாடிக்கு நாங்களெல்லாம் கஷ்டப்படவேணும்.”
“ஏன்?”
“அக்காவுக்கும் புருஷனுக்கும் ஏதாவது சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் எனக்கு மனம் கேட்காது. அவவுக்கு புருஷன் அடித்தால் நானும் என் மனைவிக்கு அடிக்க வேண்டியதுதான் வரும். இதனால் வரும் கஷ்டங்களை சொல்லவே முடியாது….” பலவிதமான நியாயங்களை எடுத்துக்காட்டி மாற்றுக் கலியாணத்துக்கு மறுத்தான் அருணண்.
“ஓமணை, தம்பி சொல்றதும் சரிதானணை, அவன் முருகேசுவின்ரை பிள்ளையள் மாற்றுச் சம்பந்தம் செய்து போட்டுப் படுற பாட்டைப் பாரேன்” என்று மகனுக்குச் சார்பாக கூறினாள் செல்லம்மா.
“அப்பபின்னை, நீங்கள் சாப்பிட்டுவிட்டுப் படங்கோ, நான் புறோக்கர் முருகுப்பிள்ளையிட்டைப் போயிட்டு வாறன். இந்த விஷயத்துக்கு முருகுப்பிள்ளையை பிடிக்காட்டி சரிவராது’ என்று சொல்லிக்கொண்டே புறோக்கர் முருகுப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டார் திருநீலம்.
திருநீலம் அந்த ஊரிலே பெரிய மனிதர். ஆனால் அவருடைய மகளுக்குத்தான்…
திருநீலத்தின் மகள் பரமேஸ்வரி படித்துப் பட்டம் பெற்றவள். படித்த பெண்ணணென நினைத்து பகட்டாக திரிபவள் அல்ல. கண்ணுறைச் சேலை உடுத்து காதலர்களுடன் கைகோத்துக் கொண்டு திரிபவளும் அல்ல. படித்த அளவுக்கு பண்புள்ளவள்…..
பண்பு மாத்திரம் அவளிடம் நிறைந்திருக்கவில்லை. கண்டோரை மயக்க வைக்கும் இயற்கை அழகு அவளிடம் பெருமளவுக்குக் குடிகொண்டுள்ளது. அந்த அழகை பிரயோகித்து எத்தனை எத்தனையோ பட்டதாரிகளைக் காதலராக்கியிருக்கலாம்…. கலியாணமும் செய்திருக்கலாம்… ஆனால் பட்டணத்து நாகரிகத்திலே மூழ்கிக் கெட்டழிய அவளுக்கு எள்ளளவும் விருப்பமுண்டாகவில்லை.
ஏன்?
அவள் கல்லாரியிலே படிக்கும் காலத்தில் கொண்ட இலட்சியம் நிறைவேற வேண்டும். அந்த இலட்சியம்தான் சீதன ஒழிப்பு’ என்னும் பொருள் பற்றி பேசினாள். அவள் பேசிய ஒவ்வொரு வசனங்களும் பெண்களையே பெருமைப்படுத்தின. பெண்கள் ஆண்களுக்கு எந்தவகையிலும் குறைந்தவர்களல்லஎன்பதை வீரத்துடன் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கி வரும் போது ‘பேச்சில் இருந்தால் மாத்திரம் போதாது, செயலிலும் கொண்டு வந்து வழிகாட்டினால்தான் நல்லது’ என்று ஓர் ஏழை மாணவி கூறியது. அவள் செவிக்கு கேட்காமலில்லை. அந்த நாள் தொட்டேதான் செயலிலும் காட்ட வேண்டுமென்று இலட்சியம் செய்து கொண்டாள். அன்று தொட்டு இன்று வரை அவளின் இலட்சியம் மாறவேயில்லை.
எத்தனை எத்தனையோ பட்டதாரிகள் – பணக்கார வர்க்கத்தினர் எல்லாரும் முட்டி மோதிக் கொண்டு அவளை கலியாணம் செய்ய அவள் வீட்டுக்கு வந்து சீதனப்பிரச்சினையால் திரும்பி போயிருக்கிறார்கள். வந்தவர்கள் எல்லாம் சீதனம் கேட்கத்தான் செய்தார்கள். சீதனப்பிரச்சினை அவர்களின் திருமணத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.
பரமேஸ்வரிக்கு சீதனம் கொடுக்க திருநீலத்திடம் லட்சக்கணக்கில் பணமுண்டு. ஆனால், அந்தப் பணம் இருந்தும் அதை அவள் விரும்பவில்லை. தனக்காகவல்ல தன் இனத்தைச் சேர்ந்த ஏழைச்சகோதரிகளுக்காகவே அவள் மறுத்தாள்.
அவள் சீதனம் கொடுத்து கலியாணம் செய்ய விரும்பாமல் இருப்பதற்குக் காரணமும் இருக்கத்தான் செய்கிறது. பணம் இருக்கும் பணக்கார வர்க்கத்தினர் லட்சக் கணக்கிலே சீதனம் கொடுத்து கலியாணம் செய்து வைப்பார்கள். ஆனால், ஏழைகள்?…. ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஏழைகளின் நிலை….. இந்தச் சீதனக் கொடுமையால் வீட்டுக்குச் சுமையாக வாழாவெட்டியாக இருந்து ‘பெண்ணாக ஏன் பிறந்தோம்’ என நினைத்துக் கண்ணீர் வடிக்கும் ஏழைப் பெண்களை நினைக்க நினைக்க அவளுக்கு……
பரமேஸ்வரிக்கு வயது ஏற ஏற அவளுக்கு கலியாணப்பிரச்சினையும் கூடிக்கொண்டே வந்தது. முப்பது வயதைத் தாண்டிய பின்பும் அவள் தன் இலட்சியத்தை மாற்றவில்லை. இலட்சியம் இலட்சியமாகவே இருந்தது. அவளைப் போல எல்லாப் பெண்களும் இருந்துவிட்டால் சீதனப்பிரச்சினை ஏன் மாறாது?
“பிள்ளை! பிள்ளை! கார்ச்சத்தம் கேக்குது, எங்கையெண்டு பார்” என்று கூறிக்கொண்டே குசினியில் இருந்து வந்தாள் செல்லம்மா.
“எணை அம்மா, எங்கடை படலையிலைதானணை நிக்குது” என்று பரமேஸ்வரி சொன்னதும் செல்லம்மாவும் திருநீலமும் விறுவிறென்று படலைக்குப் போய் வந்தவர்களை வரவேற்றனர்.
வந்தவர்கள் அனைவரும் பனையோலையால் கலை வண்ணம் இழைத்த பாயிலே இருந்தனர். திருநீலம் அங்குமிங்குமாக ஓடி ஓடி வெற்றிலை பாக்கு முதலியன கொடுத்துக் கொண்டு நின்றார்.
“எங்கை பொம்பிளையைக் காணவில்லை. ஒருக்கா பாப்பம்” என்றாள் மாப்பிள்ளையின் சகோதரிகளில் ஒருத்தியான திலகம்.
“ஓ! தாராளமாகப் பார்க்கலாம். வா பிள்ளை காட்டுறன்” என்று சொல்லித் திலகத்தைக் கூட்டிக் கொண்டு போய் பரமேஸ்வரியை காட்டினாள் செல்லம்மா.
பொம்பிளையைப் பார்த்துவிட்டு வந்து மீண்டும் தான் இருந்த இடத்திலே இருந்தாள் திலகம்.
“எப்பிடிப்பிள்ளை பொம்பிளை. உனக்குப் பிடிச்சுக் கொண்டுதே?” திலகத்தைக் கேட்டாள் ஒருத்தி.
“எனக்கு மாத்திரமல்ல எல்லோருக்கும் பிடிக்கக் கூடிய பொம்பிளையணை அழகுக்கு நிகரில்லையணை” என்று பரமேஸ்வரியின் அழகைப் பற்றி அடுக்கிக் கொண்டேயிருந்தாள் திலகம்.
“வாங்க வாங்க, உங்களையெல்லே பார்த்துக்கொண்டு இருக்கிறம்” என்று நொத்தார் வருவதைக் கண்டதும் கூறினார் திருநீலம்.
“எனக்கெல்லே நேரம் தெரியும்” என்று சொல்லிச் சிரிச்சுக் கொண்டே மேசை அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தார் றிஜிஸ்தார்.
றிஜிஸ்தார் தனது வேலையெல்லாம் முடித்துக் கொண்டு மாப்பிள்ளையையும் பொம்பிளையையும் கையெழுத்து வைக்க கூப்பிட்டார். இருவரும் நாணிக் கோணி வந்தனர். மாப்பிள்ளை தனது கையொப்பத்தை வைத்துவிட்டு Pஜிஸ்தாரிடம் பேனையைக் கொடுத்தார். றிஜிஸ்தார் பொம்பிளையிடம் பேனையைக் கொடுத்து கையெழுத்து வைக்க வேண்டிய இடத்தைக் காட்டினார். அவள் கையொப்பம் வைக்கத் தயங்கினாள்.
“ஏன் உனக்கு விருப்பமில்லையா?”
“தங்களைக் கலியாணம் செய்ய பூரண விருப்பமுண்டு. ஆனால் ஒன்று என் இலட்சியம் நிறைவேறினால்தான் இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒப்புக் கொள்வேன்.”
“என்ன இலட்சியம், அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்.”
“உண்மையாகவா”
“ஆம், உண்மையாகத்தான் சொல்கிறேன்.” என்றான் மாப்பிள்ளை.
“ஒரு மாட்டை வாங்குவதானால் அந்த மாட்டை வாங்குகிறவனே காசு கொடுத்து வாங்குகிறான். விற்கிறவன் காசைக் கொடுக்கவில்லையே? அந்த மாடும் அவன் கஷ்டப்பட்டு காசு கொடுத்ததற்காகவோ என்னவோ தன் கடமை என்றோ நினைத்துத் தன்னால் இயன்றவரை அவனுக்காகவே உழைத்து உயிரைப் போக்கிக் கொள்கிறது. அது போலவே ஒரு பெண்ணும் தன்னைத் துணைவியாக ஏற்றுக் கொள்ளும் தன் கணவனுக்கு வாழ்நாள் முழுதும் உழைக்கிறாள்.
ஏன்? பிள்ளைக்குத் தாயாகவும் வாலிபனுக்குத் தாயாகவும் இருப்பவள் பெண்தானே. அவள் தன்னைப் பெற்றுத் தாலாட்டிப் பாலுாட்டி வளர்த்த தாய் தந்தையரை எல்லாம் மறந்துதான் கட்டிய கணவனே கண்கண்ட தெய்வம் என நினைத்து அவனுக்காகவே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து சம்பளம் வாங்காத வேலைக்காரி போல் நடப்பவளும் பெண்தானே? தன் கணவனின் நலத்திற்காக தன் ஆசைகளையெல்லாம் துறந்து இயந்திரம் போல இயங்கிப் பிள்ளையை பெற்றுத் தருபவளும் பெண்தானே? தன் கணவனின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக தன்னையே தியாகம் செய்யும் தாய்க்குலத்துக்கு வரதட்சணையா? இது நீதியா மாட்டை வாங்கும் போதே காசு கொடுத்து வாங்கும் மனித இனம் பெண்ணை வாங்கும் போது மாத்திரம் சீதனம் கேட்கலாமா? மாட்டிலும் பார்க்க பெண்ணினம் அவ்வளவு கேவலமானதா? வீட்டுக்கு விளக்கேற்றி வைத்து வாழ்நாள் முழுவதும் நல் வாழ்வு வாழ வைக்கும் பெண் இனம் ஆண் இனத்துக்கு அடிமை என்பதை இந்தச் சீதனம் காட்டவில்லையா?
பண்டைக் காலத் தமிழர் கலியாணம் செய்யும் போது ஆணுக்குத்தானே வரதட்சணை கொடுத்தார்கள். ஆண்கள் பெண்களுக்கு கொடுத்து கலியாணம் செய்யும் வழக்கம் இன்றோடு அழிந்தாலென்ன என்று பலவிதமான கேள்விகளையெல்லாம் எழுப்பினாள் பரமேஸ்வரி.
“அப்படியானால் உங்கள் இலட்சியம் வரதட்சணையை ஒழிக்க வேண்டுமென்பதா?”
“ஆமாம், அந்தக் கொடிய வழக்கம் ஒழிந்தால்தான். கலியாணம் செய்ய ஒப்புக் கொள்வேன்.”
“நானும் அந்தக் கட்சியை சேர்ந்தவன்தான். ஆனால் என் பெற்றோரின் வற்பறுத்தலுக்காகவே வரதட்சணை வாங்க முன்வந்தேன். நீங்கள் கேட்ட கேள்விகள் என்னை மீண்டும் விழிக்கச் செய்துவிட்டன. வரதட்சணை என்பது கொடுமையிலும் கொடுமையானது தான்” என்றான் அவன்.
“அப்பாடா, என் இலட்சியம் நிறைவேறிவிட்டது” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே கையொப்பமிட்டாள். பரமேஸ்வரி.
பரமேஸ்வரி கையொப்பமிட்டதும் “பெண்ணினத்துக்குப் புதுவாழ்வு பெற்றுக் கொடுத்த பெரும் தியாகி நீதானம்மா” என்று சொல்லிக் கொண்டே எழுந்து நடந்தார் றிஜிஸ்தார்.
நகுலன் நா.தங்கரெத்தினம்
நகுலன் ஈழத்து சிறுகதையாசிரியர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். இயற்பெயர் நா.தங்கரெத்தினம். மூன்று தசாப்தங்களுக்கு மேலாகஅராலியூரான், கலைநகரான் என்ற புனைப்பெயர்களில் எழுதிக் குவித்தவர். வாழ்வு மலருமா? ஏன்ற சிறுகதை சென்னை வாசகர் வட்ட அக்கரை இலக்கியத் தொகுதியிலிடம் பிடித்தது. கன்னிப்பெண், இப்படி எத்தனை நாட்கள் என்பன அன்னாரது சிறுகதைத் தொகுதிகள்.
– 18.07.1966. ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.