இறுகப்பற்று…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 4, 2025
பார்வையிட்டோர்: 658 
 
 

“இந்தா எல்லாரும் ஒளுங்கா க்யூவுல வரணும்..அப்பத்தான் தலைக்கு ஒரு குடம்னு கணக்காத் தரமுடியும். யாராச்சும் குறுக்க புகுந்து கலாட்டா செஞ்சீங்கன்னா அப்பால எங்க எசமான் உங்க தவிச்சவாய்க்கு சொட்டுத்தண்ணீ தரமாட்டாரு ஆமா?தெரியுமில்ல உங்க எல்லாருக்கும், உங்களுக்குத் தண்ணி அளக்கிற இந்த கிராமத்துக் கடவுள், என் தலைவரு ராசமாணிக்கம் ஐயாவப் பத்தீ? காச முதல்ல வச்சிட்டு தண்ணிசேந்துங்க சொல்லிப்புட்டேன்?”

கையிலும் இடுப்பிலும் சாயம்போன வண்ணத்தில் பிளாஸ்டிக் குடங்களை ஏந்திக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அவன் அதட்டினான்.

“யாரது, பாக்க லூசு மாதிரி இருக்கிறான் அவன் முள்ளம் பன்றித்தலயும் முன்னேத் துருத்திட்டு இருக்கிற பல்லும், இந்த மிலிடரி தமிழரசு விட்டா ஒரு அறை தாங்க மாட்டான், என்னடான்னா இந்த பென்சில் உடம்பை வச்சிக்கிட்டு இடுப்புல நழுவற அரைட்ராயரை சரி செய்யக் கூடத் தெரியாம எல்லாரையும் இப்படி அதட்டறானே?”

க்யூவில் நின்றிருந்த தமிழரசு தனக்கு அருகிலிருந்த மாமன் ராமசாமியிடம் விவரம் கேட்டான். தமிழரசு ஊருக்குப் புதுசு. மிலிடரியிலிருந்து நேரே தஞ்சைக்கு வரவேண்டாமென்றும் தனது அண்ணனைப் போய்ப் பார்த்து சில நாட்கள் அவரோடு தங்கி வரும்படியும் அவன் அம்மா கடிதம் போட்டிருந்தாள்.

உடல்நலம் சரியில்லாத ராமசாமியைப் பார்க்க மதுரை அருகே அந்த குக்கிராமத்திற்கு நேற்று வந்தவன், ஊருக்குள் நுழையும்போதே ஊரின் வறட்சியைப் பார்த்து அதிர்ந்து தான் போனான். வயல்கள் எல்லாம் வாயைப் பிளந்து கொண்டிருக்க தென்னைமரங்கள் கூட மட்டைகள் உதிர்ந்து வெறும் தண்டு மரங்களாய்க்காட்சி அளித்தன. பசுமை என்பதே காணவில்லை. வறட்சி கோரத்தாண்டமாடிக் கொண்டிருந்தது.

“என்னாச்சி மாமா, இயற்கைக்குக் கிறுக்கு பிடிச்சிடிச்சா? ஏன் இப்படி மனிதர்களை சோதிக்குது?”

தமிழரசு மாமாவைப் பார்த்ததும் ஊர் நலன்தான் முதலில் விசாரித்தான்.

“நாலு வருஷமா மளையே இல்ல தமிளு! ஒரு குடம் தண்ணி அஞ்சு ரூவான்னு ஊர்ல ஒரே ஒரு பெரிய மனுஷன் ராசமாணிக்கம்னு ஒருத்தரு அவரு கிணத்தில தான் தினம் எடுத்துக்கறோம்.” என்றார் ராமசாமி வேதனையாக.

“என்ன மாமா இது குடி தண்ணிக்குக் காசா? அதுவும் ஊர்க்கிணற்றில் நீர் எடுக்கக் காசு தரணுமா என்ன அக்கிரமம்? யாரும் கேட்க மாட்டிங்களா இதை?”

“யாரு கேக்கறது தமிளு?ஊருக்குப் பொதுவான ஓடை ஊத்துக் கிணறு. அது  அவன் நெலத்துல இருக்கு! அது தன்னுதுன்னு சொல்லி முள்வேலியப் போட்டு வச்சிக்கிட்டு கோர்ட்டு கேசுன்னு ஊரையே டபாய்க்கிறாரு அந்த பெரிய மனுஷன். உன்னாட்டம் ஒரு வாலிபப் பய- ஊர்க்காரந்தான்- பத்திரிகைகளுக்கு எளுதிப் போட்டான். ஒரு பிரயோஜனமும் இல்லப்பா. வறட்சி நிவாரணமெல்லாம் எங்களுக்கு இல்ல எல்லாம்   வசதிபடைச்சவங்களுக்கும் அவங்க குடும்பங்களுக்குந்தான்..”

இப்போதும் ராமசாமி உடம்பு சரி இல்லாத நிலையிலும் எழுந்து தமிழரசுடன் உடன் வந்தார். இல்லாவிட்டால் ஊருக்குப் புதுசு என்று தனியாக வரும் தமிழரசுக்கு நீர் தர மறுப்பான் அந்தக் கிறுக்குப்பய. ராசமாணிக்கத்துக்கு எடுபிடி. அவனது அடிமை எனலாம். அத்தனை விசுவாசம். விசுவாசக் கிறுக்கன்.

“கிறுக்குப்பய! அதான் அவன் பேரு ..” என்ற மாமாவை வியப்பாய்ப் பார்த்தான் தமிழரசு.

“ஆமா..போன வருஷம் முன்னாடி இந்த கிராமத்துக்கு வேலைதேடி வந்தான்..இங்க உள்ளவங்களே தண்ணி இல்லயேனு ஊரு விட்டு போகிற நிலமையில கிடக்கறப்போ இவன் வந்தான்.

‘உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு இங்க வேலை கேட்டு வந்தியாக்கும்? கிறுக்குப் பயலா இருக்கியே?’ டீக்கடையில வேலை கேட்டு நின்னனவனை டீக்கடைகாரர் திட்டினார்,

‘ஆமா நான் கிறுக்குதான் எனக்கு பேரு இல்லங்க. கிறுக்குப்பயன்னே கூப்பிடுங்க ஆனா சொன்ன வேலை செய்வேன்’ என்றான் அவன். அவனோட வெகுளித்தனத்தை ராசமாணிக்கம் பார்த்து தனக்கு அடியாளா வச்சிக்கிட்டாரு. அவரைப் போலவே இவன் மனசுலயும் ஈவு இரக்கமே கிடயாது..”

தமிழரசு வெறுப்பும் வேதனையுமாய் குடத்துநீருக்குக் காசுகொடுத்து பெற்றுச் செல்லும் ஏழை ஜனங்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டான். தர்மம் செய்பவர்கள் உள்ள இடத்தில் தான் மழையும் பெய்யுமாம். ராசமாணிக்கம் மாதிரி தண்ணிரையே விற்கும் மனிதர்கள் இருக்குமிடத்தில் இயற்கை பொய்த்துத்தான் போகும் சந்தேகமில்லை.

எரிச்சலுடன் தனது குடத்தை கிணற்றுக் கல்மேட்டில் வைத்தான் தமிழரசு. “யாருப்பா ஊருக்குப் புதுசா? அத்தாச்சீ உங்க உறவு சனமா? எங்கிட்டிருந்து வந்திருக்காங்க?’

யாரோ ஒருபெண்மணியைப்பார்த்து கிறுக்குப்பய இப்படிக் கேட்கவும் அவள்”போடா பொறம்போக்கு ? நானே உலைக்கு நீரில்லாம தவச்சிக்கிடக்கேன் இதுல உறவு சனம் ஒருகேடு?” என்றாள் கடுப்புடன்.

“நான் யாருன்னு சொல்றதுக்கு முன்னாடி இப்படி தண்ணீருக்கு காசு வாங்கறது அதர்மம்னு உங்க எஜமானுக்கு நான் புரிய வைக்கப் போறேன், என் பெயர் தமிழரசு. ராமசாமியின் தங்கை மகன், மிலிடரில பணி புரியறேன். லீவுல இங்க வந்திருக்கிறேன். இந்த ஊரு பத்தி நான் பத்திரிகைக்கு டிவிக்கு எழுதிப்போடபோறேன்னு உன் தலைவருக்கு சொல்லு போ..?”

தமிழரசு இப்படி வெடுக்கென சொல்லவும் திகைப்பும் குழப்பமுமாய்ப் பார்த்த கிறுக்குப்பய சிரித்துவிட்டான்.

பிறகு, “பாவம் பாறையோட பட்டாம்பூச்சி மோதப்போகுதாம்?’ என்றான் கிண்டலாக.

“அதையும் பார்க்கலாம்?” தமிழரசு தோள் கொட்டினான்.

“வேணாம் தம்பீ..அவன் இந்த ஊரையே வளைச்சிப் போட்டிருக்கிற ராசமாணிக்கத்தோட அடியாளு. பேரு கிறுக்கன்னு நினச்சி எதுவும் நாம பேசிட முடியாது. அப்படியே அங்கன போயி வத்தி வச்சிடுவான்”

ராமசாமி பயந்தமாதிரியேதான் ஆனது கிறுக்குப்பய போயி எல்லவற்றையும் சொல்லிவிட்டான்.

“ஹெஹ்!” கிண்டலாய் சிரித்தான் ராசமாணிக்கம், “என்னைய எதுக்கறானாமா அந்த மிலிடர? அவனால முடியுமாமா? என்னைய எதுத்த ஒரே ஆளு அந்த வெளியூரு டீச்சரம்மா தன் பேரு வெண்ணிலா ஆளும் நிலாக் கணக்கா அழகுதான் ஊருக்கு சமூக சேவை செய்ய வந்தவளை எனக்கு சேவை செய்ய வச்சேன். அடிபணிய மறுத்தா அமுக்கி அடக்கிட்டேன். என் நாற்பது வயசு அனுபவத்துல வெண்ணிலாவை தொட்டதுதான் மறக்கவே முடியாதுடா.! யே அப்பா ! என்ன ஒரு உடம்பு! வில்லுமாதிரி! விண்ணுனு இருக்கும்.

பெருசா சவால் விட்டா…ஒண்ணும் நடக்காதுடி போடின்னு அனுப்பிட்டேன். அழுதுகிட்டே அவ ஊருக்கு ஓடிட்டா. அப்றோம் இப்பொ இந்த மிலிடரிப் பையன் சவால் விட்றான். டேய் அவனைத் தட்டி வைக்கணும்டா?”

“எசமான்..சொல்லுங்க செஞ்சிடலாம்”

“அவன் எழுதிப் போடப் போறனாமா. அதெல்லாம் நடக்காதுடா, நடக்க விடமாட்டேன்.” ராசமாணிக்கம் சொல்லும்போதே லேசாய் வானம் இடித்தது.

கிறுக்குப்பய வெளியே ஒடிபோய் பார்த்துவிட்டு வந்தவன், “எசமான் வானம் கருக்குது மலைரும்போல..?” எனவும், “மழையாவது நம்ம ஊருக்கு வர்ரதாவது? வானம் பெய்யும் அம்பது காசு மிச்சம்னு ஊரே சந்தோஷப்பட முடியாதுடா…இது பாவிங்க பூமி.. பாவிங்கதான் இங்க பொழைக்க முடியும் வர்ர மழை கலைஞ்சிதான் போகும்”

ராசமாணிக்கம் சொல்லும்போதே வெளியெ சடசட என்று தூறல் வலுக்கும் சத்தம். உடனேயே, “கிளம்புடா… மழைபெஞ்சி ஊரு ஓடையில தண்ணி பாஞ்சிட்டா இந்த ஊர்க்காரங்களுக்குக் கொளுப்பு எகிறிடும். ஓடிப்போயி மண்வெட்டிய எடுத்தா…வாய்க்கால்ல தேங்கி ஓடப்போறத் தண்ணிய நம்ம கிணத்துக்கு திருப்பிடுவோம். கிணறுக்குப் பக்கவாட்டுல பாதை ஒண்ணு  போட்டு வச்சிருக்கோமில்ல, அதை மண் எடுத்து ஒளுங்கா தண்ணி போற மாதிரி செய்யுடா” என்று அவசரப்பட்டான்.

“சரிங்க எசமான்”

தான் வந்த வேளை வானம் கறுத்து ஊருக்கு மழை வருவதை நேரில் பார்க்கக் காலாற நடந்து வந்தான் தமிழரசு. ஊரில் மழைமேகம் பார்க்க அனைவரும் தெருவில் வந்து கூடுவதையும் அந்த முகங்களில் தெறித்த குதூகலத்தையும் கண்டு மகிழ்ந்தான். “முத்துப்பேச்சி…அந்த பிளாஸ்டிக் பேப்பரக் கொண்டா.. விரிச்சிப் பிடிச்சி நில்லுடீ. உழுவுற தண்ணிய ஒருப்பக்கமா சரிச்சிப் பானைகளில ஊத்துடிம்மா.. டேய்.. அண்ணாமல.. அலுமினிய பாத்திரம் எடுத்தாடா சிக்கிரம்..”

நெருப்பாய் தகித்துக் கொண்டிருந்த நிலப்பரப்பில் நீர்த்துளிபட்டதும் தான் தாமதம், ‘கும்’மென்று வெளிக்கிளம்பியது நாசியை ஊடுருவும் மண்வாசம். இதமான காட்சிகளை ரசித்தபடி நடந்து வந்தவன் தூரத்தில் கிறுக்குப்பயலை பார்த்ததும் அப்படியே நின்றான். மண்வெட்டியுடன் கிறுக்குப்பய வேகவேகமாய் வயல் பரப்பில் கால்வைத்து எதிரே தெரிந்த ஓடையை நோக்கி ஓடினான். மழை யின் வேகம் அதிகரித்தது.

ஓடையில் நீரின் சலசலப்பு.

ராசமாணிக்கத்தின் கிணற்றுப்புறமாய் வளைந்து ஊரின் மேற்குக்கண்மாயை நிறைக்க ஓடும்போலிருந்தது. “டேய் கிறுக்குபயலே அந்த வளைவுல ஒரு வெட்டு போடு. எல்லா நீரும் கிணறுக்குள்ள பாயணும்..அங்கிட்டு ஏற்கனவே அப்படி ஓடை நீருப்போன பாதை இருக்கும் காஞ்சி கிடந்தாலும் நீருகண்டதும் கப்புனு பாதை பிடிச்சிட்டு நீரு அதன் வழில ஓடிடும் சீக்ரம் லே?’

ராசமாணிக்கம் கையில் குடையுடன் அதட்டினான்.

“சரிங்க எசமான்”

கேட்டு கொண்டேயிருந்ததால் உடம்பு பதறியது தமிழரசுக்கு.

” இது தப்பு.. அதர்மம்..” என்று கத்தியபடிராசமாணிக்கத்தின் அருகே வந்து நின்றான் தமிழரசு. நெற்றியில் மழைநீர் வழிந்து கண் இமைகளை கொட்டவைத்தது,

“யாருடா நீதான் அந்த மிலிடரி பையனா?” ராசமாணிக்கம் கிண்டலாய்க் கேட்டான்.

“ஆமா. அதிருக்கட்டும், இதபாருங்கய்யா. இயற்கை ஏதோ மனசுவச்சி இப்போதான் கொட்டிட்ருக்கு, அதையும் உங்களுக்கு சாதகமா செஞ்சிக்காதிங்க. இது பாதகச் செயல்”

“எதுடா பாதகம்? இதான் புத்திசாலித்தனம். மழை பொது. நான் அதை என் கிணத்துப்பக்கம் திருப்பி விட்டுக்கறேன். என் நிலத்து மேல பாயற நீரு நான் அதை என்ன வேணா செய்வேன்?”

“ஊர் வயிறு எரியும் சாபம் ஏற்படும் உங்க மேல?”

“ஹ! போலே..போயி உன் வேலயப்பாரு. சாபம் அதுஇதுன்னுட்டு?இது கலிகாலம். புத்திசாலிங்களுக்குதான் பொழப்பு நடக்கும். ஏதும் எகிறினே மவனே உன்னைய மண்வெட்டியால கிறுக்குபயல விட்டு ஒரே போடு போடச் சொல்லிடுவேன் ஆமா?.” ராசமாணிக்கத்தின் கண்கள் சிவக்கவும் தமிழரசு தயங்கிப் பிறகு வேகமாகத் திரும்பி நடந்தான்.

மறுநாள் ராசமாணிக்கம் கிறுக்குப்பயலுடன் உல்லாசச் சுற்றுலா என்று மைசூர் அருகே ஷிமோகா மற்றும் சில நீர்வளம் நிறைந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினான்.

“எசமான்! ஊருக்காரங்களுக்கு இன்னிக்கு குடந்தண்ணி கொடுக்க வேணாமா?” கிறுக்குபய பயமும் தயக்கமுமாய் கேட்டான்

“போடா கிறுக்கா. அதான் நேத்து மழை பெஞ்சிதே எல்லாம் பிடிச்சி வச்சிருப்பாங்க. நாலு நாளைக்குத் தாங்கும் நீ என்கூட புறப்படு..கிணத்துப் பக்கம் முள்வேலிக்கதவுக்கு பூட்டு போட்டுடு..கெணறு மேல இருக்கற  இரும்புக் கதவுக்கும்  பெரியபூட்டா போட்டுடு.  வேலிதாண்டி  வந்துடுவானுங்க. இவனுகளை நம்பமுடியாது, கெணரு நல்லா மளை நீரு ஓடை நீருன்னு பாஞ்சி ரொம்பிக்கிடக்குது..”

“சரிங்க எசமான்”

“என்னடா நாயாட்டம் இப்படிக் குழையறே? வாலு ஒண்ணுதான் உனக்கு இல்ல?விசுவாசப்பயடா நீ?”

சிரித்த எசமானனை எல்லா இடமும் பின் தொடர்ந்தான் கிறுக்குபய. ஷிமோகாவை ஒட்டிய ஒரு ஊரில் பெரிய அருவி ஒன்றின் அருகே திடீரென கூக்குரல் எழுந்தது .  அப்போதுதான் ராசமாணிக்கத்துக்கு மினரல் வாட்டர் வாங்கிக் கொண்டு வந்த கிறுக்குப்பயலும் அந்தக் காட்சியைக் கண்டு அப்படியே திடுக்கிட்டு நின்றான். அருவிப்பாறை வழுக்கி விட்டதில் ராசமாணிக்கம் அப்படியே தலைகுப்புற கீழே விழுந்து வெள்ளம்பெருக்கோடும் நீரோடு   அடித்துக் கொண்டு போய்விட்டதை உணர்ந்தான். கூட்டம் ‘ஐய்யோ பாவம்…உயிர் போயிருக்குமே உடல் எங்க போய் ஒதுங்கப்போகுதோ?’ என்றது.

 ஓசைப்படாமல்  பஸ்சைப்பிடித்து ஊருக்குள்வந்தவன் நேராய் தமிழரசின் வீட்டுக் கதவைத்தட்டினான். வலது கையில் பெரியகட்டுடன் கதவைத் திறந்த தமிழரசு.”கிறுக்கு பயலா? எங்க வந்தே? தண்ணி ஏதும் உன் எசமான் கிணதுத்திலிருந்து திருடினேனா அப்படீன்னு பாக்கவா? அவன் அக்கிரமங்களை எழுதி பத்திரிகைக்குப் போடறேன்னு என் வலது கைவிரல்களை நேத்து ஆளுவச்சி அடிச்சி வளைச்சிட்டான். ஆனா நான் விடமாட்டேன். இடது கைல எழுதுவேன்” என்றான் கோபமாக.

ஒருக்கணம் மௌனமாய் நின்ற கிறுக்குப்பய பிறகு உறுதியான குரலில் ஆரம்பித்தான்.

“எழுதுங்க தமிழரசு…நல்லா எழுதுங்க..அதர்மம் செத்துவிட்டது.தர்மம் ஆட்சி செய்யப்போகிறது அப்படீன்னு. ஆமா! தமிழரசு! ராசமாணிக்கம் நேத்து அருவியில கால் தடுக்கி விழுந்து செத்துட்டான், உண்மையில் அவனை நான் தான் தண்டிச்சிருக்கணும். அதுக்குத்தான் காத்திருந்தேன்.. ஆனா  தெய்வம் தன் கடமையை செய்துடிச்சி”.

கிறுக்கு பயலின் இந்த முதிர்ந்த பேச்சு தமிழரசை அதிர்சிக்குள்ளாக்கவும் திகைப்புடன். ‘பேசறதுயாரு கிறுக்குப்பயலா?’ என்றான் நம்பமுடியாமல்.

“இல்லை நான் க்ருஷ்ணன்,ஒரு பள்ளிஆசிரியராயிருந்தவன். ஒருவருஷம் முன்னாடி என் காதலி வெண்ணிலாவை இந்தராசமாணிக்கம் கற்பழிச்சிட்டான் அவ  என் ஊர்ல  என் பள்ளிக்கூடத்துல  வேலைபார்த்தா  அதுல நானும் ஆசிரியரா பணிபுரிஞ்சேன் அப்புறம்தான்  வேலைமாற்றத்துல இங்கவந்தா…  அவளை நாசம் பண்ணிட்டான் படுபாவி.,,விவரம் வெண்ணிலா எனக்கு போனில் சொன்னா..  நான் இருக்கேன் உனக்குன்னு சொல்லியும்  அவள் அவமானம் தாங்காம  தற்கொலை பண்ணிக்கிட்டா. அப்புறம்தான் நான் ஒருமுடிவோட ராசமாணிக்கத்தைப் பழிவாங்க இந்த ஊருக்குக் கிறுக்குபய மாதிரி மாதிரிவந்தேன் அவன்கிட்ட நல்லபேரு எடுத்த பிறகு அவன் உயிரை எடுக்க நினச்சேன் விசுவாசமா நடிச்சேன் காத்திருந்தேன்பழிவாங்க ஆனா என்னை தெய்வம் முந்திக்கொண்டது.தமிழரசு! இனிமே என் வெண்ணிலாவோட ஆத்மா சாந்தியடையும்னு நினைக்கிறேன். நானும் இனி என்ன செய்ய போறேன்னு தெரில்ல…வெண்ணிலா போன இடத்துக்கு நானும் போயிடவா?” குழப்பமும் வருத்தமுமாய் க்ருஷ்ணன் கேட்டான்.

“இல்லை க்ருஷ்ணா..நானும் நீயுமா இந்தமாதிரி பல கிராமங்களுக்குப்போகணும் ராசமாணிக்கங்கள் எல்லா ஊரிலும் இருப்பாங்க. துணிஞ்சி அவங்க முகமூடிகளைக் கிழிக்கணும் ..இனி நீ கிறுக்குப்பய வேஷம் எதுவும் போடவேணாம்..என் கையை இறுகப்பற்றிக்கொள். க்ருஷ்ணனாகவே என்கூட புறப்படு?'”

மறுநாள் ஓடைக்கிணற்றில் சிரிப்பும் கும்மாளமுமாய் பெண்கள்நீர் சேந்தினர். 

தமிழரசுவுடன் கிறுக்குப்பய தலைகுனிந்தபடி அந்தவழியே நடந்து போகவும், “அடீ..கிறுக்கு பயலப் பாருடீ? நம்மை என்னமா அதிகாரம் செய்வான்? ஒரு குடம் நீருக்கு உயிரை எடுப்பானே? இப்போபாரு, தல குனிஞ்சி நடக்குறான்….உன் எசமான் போன துக்கமா? அதான் தலை கவிந்திடிச்சா? ஆனா ஊரு இப்போதான் நிமிந்திருக்குடா? கிறுக்குப்பய! கிறுக்குப்பய.!.”என்ற பெண்கள் பெரிதாய் சிரித்தனர்.

தமிழரசு அவர்களிடம்  நடந்ததை விவரிக்க  ஆயத்தமானான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *