இருள்





(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாலசுந்தரத்தின் தாயை அழித்து, அவனது வீட்டை அழித்து, குடும்பத் தொழிலை அழித்து… அந்த இளம் இதயத்தைப் பாலைவனமாக்கிவிட்டு… இலவசப் புத்தகம், இலவச உடுப்பு, இலவச உணவு…! தமிழ் மண்ணில் எத்தனையாயிரம் பாலசுந்தரங்கள்…? கணேசனின் இதயம் சில வினாடிகள் தரித்து… மீண்டும் இயங்குகின்றது….!
ஆரோக்கியமாக வளர்ந்த குழந்தை ‘மூக்கும் முளியுமாக’ நிற்பதுபோல், அந்தத் தேமாமரம் கிளைபரப்பி, மதாளித்து நிற்கின்றது. எல்லைக்குள் வேரூன்றி எல்லைக்கு வெளியே கிளைபரப்பி, நிழல் கொடுத்து நிற்கும் அந்தத் தேமாமரத்திற்கு வெள்ளைத் தொப்பி போட்டது போல் வெள்ளைப் பூக்கள் நிறைந்து போயிருப்பது மிகவும் அழகாக இருக்கின்றது.
அந்தத் தேமாமரத்தின் கீழ் கணேசன் நிற்கிறார். நண்பன் ஒருவனின் வருகைக்காகக் காத்து நிற்கின்றார்.
கணேசன் நிற்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கத்தில் பிரதா வாசலிலிருந்து பத்தடி தூரத்தில் ஒரு சீமெந்துத்தூண் நிமிர்ந்து நிற்கின்றது. மின்சார விநியோகத்திற்காக மின்சார சபையினால் வீதி ஓரங்களில் நாட்டப்பட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான தூண்களில் இதுவும் ஒன்று.
கணேசன் அந்த தூணைப் பார்க்கிறார். மாங்கொடிகள் சுற்றிப் படர்ந்து தூணின் அரைப்பகுதி உயரத்தை மறைந்திருக்கின்றன… தூணின் உச்சியில் ஒரு காகக்கூடு….!
இலங்கை அரசு வடபகுதியில் மின்சாரத் தடையை ஏற்படுத்தி எத்தனை வருடங்களாகிவிட்டன… கணேசனின் மனதில் ஏற்பட்ட விரக்தி உணர்வு, அவரது இதயத்துள் தேடலை நடத்துகின்றது.
‘இனி எப்போதான் மின்சாரம் வருமோ…’ இலங்கை அரசை மனதுக்குள் திட்டிக் கொள்கிறார்.
கைக்குட்டையால் நெற்றிப்பரப்பில் பனித்திருந்த வியர்வைத் துளிகளை அழுத்தித் துடைத்த கணேசன் ஒரு சிகரட்டை எடுத்து மூட்டுகிறார்.
நீண்டு போயிருக்கும் அந்தப் பிரதான வீதியோடு ‘தாயைத்தின்னி’ பிள்ளை போன்றதொரு குறுக்கு வீதியொன்று சந்திக்கின்றது. சிறியதொரு முச்சந்தி. இந்தச் சந்தியில் இறந்துபோன ஒருவரின் ஞாபகமாகக் கட்டப்பட்ட ஒரு பஸ்தரிப்பு நிலையமும், அதற்கு முன்னால் ஒரு கடையும் அமைந்திருக்கின்றன. இந்தச் சந்தியின் சிறப்பு இவ்வளவுதான்.
இந்தக் குறுக்கு வீதியில் நடந்தால் இரண்டு வளைவுகளைத் தாண்டி கிட்டத்தட்ட இருபது யார் தூரத்தில் மிகவும் அழகானதொரு மாடிவீட்டைக் காணலாம். இது ஒரு தனியார் மருத்துவமனை.
இந்த மருத்துவமனையின் பிரதான வாசலோடு வளர்ந்திருக்கும் தேமாமரத்தின் கீழ் தான் கணேசன் நிற்கிறார். அவரோடு வந்த நண்பன் மருந்தெடுப்பதற்காக உள்ளே சென்று விட்டான். அவனது வருகைக்காகவே அவர் காத்திருக்கின்றார்.
ஆறுமணிக்கு மேலிருக்கும் இருளுக்கும் ஒளிக்கும் வழமையாக நடக்கின்ற உக்கிரமான சமர். காலையில் ஒளி வெல்லும், மாலையில் இருள் வெல்லும்… என்றுமே தீராத சமர்… ஆனால் சமமான வெற்றி தோல்விகள் இயற்கையின் நியதி…!
இந்த மருத்துவமனையின் நிர்வாகி இரவீந்திரன் தனது அலுவலகத்தினுள் அமர்ந்திருக்கின்றார். நிர்வாகியின் அலுவலகத்திலிருந்து கிட்டத்தட்ட பதினைந்தடி தூரத்திலேயே கணேசன் நிற்கின்றார். அலுவலகத்தின் முன்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட யன்னலுக்கூடாக இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்கின்றனர்.
“ஐயா ஜெனரேட்டரை ஸ்ரார்ட் ஆக்கட்டா…” அங்கு வந்த பாலசிங்கம் இரவீந்திரனிடம் கேட்கிறான். பாலசிங்கம் இந்த மருந்துவமனையில் வேலைசெய்யும் ஒரு ஊழியன்.
‘நேரங்கிடக்கு…’ தனது கைக்கடிகாரத்தைப் பார்த்த இரவீந்திரன் கூறுகிறார். இரவீந்திரன் எதிலுமே மிகவும் நிதானமானவர் மண்ணெண்ணையின் விலை மாத முடிவில் முதலாளிக்குக் கணக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு அவருக்குண்டு!
இது தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் கணிசமானளவு நோயாளர் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதிகளை உள்ளடக்கியது. மாலை தொடக்கம் இரவு பத்துப் பத்தரை வரை ஜெனரேட்டர் வேலை செய்யும். மருத்துவமனை பூராவும் பிரகாசமாக இருக்கும் அதன்பின்பு ஒவ்வொரு கட்டிலோடும் ஒவ்வொரு லாம்பு எரிந்து கொண்டிருக்கும் லாம்புகள் மருந்துவமனைக்குரியது.
நேரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. கணேசன் அதே இடத்திலேயே நிற்கின்றார். அவரது வலதுகைச் சுட்டுவிரலுக்கும் நடுவிரலுக்குமிடையேயுள்ள சிகரட் எரிந்து கொண்டிருக்கின்றது.
நிர்வாகியின் அலுவலக வாசலோடு இணைந்துள்ள மதில் கரையோடு ஒரு வாலிபன் நிற்கின்றான். கணேசன் இந்த இடத்திற்கு வரும்போதே அந்த வாலிபன் அந்த இடத்தில் நின்றதைக் கணேசன் அவதானித்திருந்தார்.
அவன் – பாலசுந்தரம்
கதிரையிலிருந்த இரவீந்திரன் கைகள் இரண்டையும் மேலுயர்த்தி – உடலை நெளித்து விரல்களால் விரல்களை அமர்த்தி நெட்டி முறித்து… வலுக்கட்டாயமாக வாயைத் திறந்து கொட்டாவி விட்டு… நிமிர்ந்தமர்கின்றார்.
இதுவரை மதில் கரையோடு நின்ற பாலசுந்தரம், இரவீந்திரனின் அழைப்பை எதிர்பார்த்து நின்றானோ என்னமோ இப்போது எந்தவித அழைப்புமின்றி அலுவலகத்துள் நுழைகின்றான். இரவீந்திரனுக்கு முன்னால் மிகவும் பணிவோடு பாலசுந்தரம் நிற்கின்றான்.
“என்ன தம்பி”
“உங்களிட்டைத்தான் சேர் வந்தனான்…”
“என்ன விஷயம்…”
“இரவிலை நோயாளரைப் பராமரிக்க ஆக்களை ஒழுங்கு பண்ணிவிடுவியளாம் அதுதான் வந்தனான்…” இதுவரை பாலசுந்தரத்தைச் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்த இரவீந்திரன், இப்போது புருவங்களை நெளித்து கண்களைச் சுருக்கி, கூர்மையாகப் பார்க்கின்றார் அவரது பார்வையில் எத்தனையோ கேள்விகள் முகிழ்த்து வெடிக்கின்றன!
“பெயரென்ன
“பாலசுந்தரம்”
“படிக்கிறீங்களா…”
“ஓம்…”
“மன்னிக்க வேணும்… படிக்கிறவைக்கு நாங்கள் வேலை குடுக்கிறதில்லை…”
“சேர் நான் படிக்கிறது உண்மைதான்… நான் ஏன் வேலைக்கு வந்தனான் எண்டத்தைச் சொல்றன் கொஞ்சங் கேளுங்கோ சேர்…” மிகவும் பரிதாபமாகப் பேசுகிறான் பாலசுந்தரம்.
“தம்பி நீங்கள் என்ன காரணங்கள் சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டம் நீங்கள் போங்கோ…” இரவீந்திரனின் பேச்சில் ‘அப்பீலற்ற’ முடிவு தொனிக்கின்றது. பாலசுந்தரம் வெளியே வந்து முன்பு நின்ற அதே இடத்தில் நிற்கிறான்.
“இலவசக் கல்வி இலவசப் புத்தகம் இலவச உடுப்பு இலவச உணவு” அரசாங்கம் எவ்வளவு உதவியளைக் செய்யிது வீட்டிலை இருந்து படிக்கத் தெரியாமல் வேலைக்கு வாறார் பொறுப்பில்லாத புள்ளையள்” இரவீந்திரன் தனக்குத்தானே கூறிக் கொள்கிறார்.
கணேசன் சகலதையும் அவதானித்துக் கொண்டு நிற்கின்றார்.
இம்மருந்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களில் உதவியற்றவர்களுக்கு அவர்கள் விரும்பினால் கூலி அடிப்படையில் பராமரிப்பு வசதியை மருத்துவமனை நிர்வாகம் செய்து கொடுக்கின்றது.
பராமரிக்க விரும்புபவர்கள் நிர்வாகியிடம் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு பிற்பகலில் வருவார்கள், தங்கியிருக்கும் நோயாளர்கள் தங்களுக்குப் பராமரிப்பாளர்கள் தேவையென நிர்வாகியிடம் முறைப்பாடு செய்தால் அதற்கான ஒழுங்குகளை நிர்வாகி செய்வார்.
ஒரு இரவுக்கு நூறு ரூபா. இந்த வேலைக்குத்தான் பாலசுந்தரமும் வந்து நிற்கின்றான்.
மதில்க் கரையோடு நின்ற பாலசுந்தரத்தைக் கணேசன் பார்க்கின்றார். கணேசனின் பார்வைக்கோடு பாலசுந்தரத்தின் பாதாதி கேசம் வரை ஊர்ந்து வருகின்றது.
அரசாங்கம் மாணவர்களுக்கென்று இலவசமாகக் கொடுத்த துணிகளில் தைக்கப்பட்ட களிசான் சேட், முன்னோக்கி வளர்ந்த அண்மையில் வெட்டப்படாமல் காதுச் சோணைகளை மறைக்குமளிற்கு வளர்ந்து விட்ட தலைமயிர்… மூக்கடியில் அரும்பியிருக்கும் பூனை மயிர். பதினாறு வயதிருக்கும். அறுந்து ஊசி குத்தப்பட்ட பாட்டா செருப்புக்கள் கையில் ஒரு சீலைப்பை… அதற்குள் சில புத்தகங்கள் முகத்தில் வறுமையில் வடுக்கள்.
படிக்க வேண்டிய நேரத்தில் வேலைக்கு வந்திருக்கின்றான்…
கணேசனின் சிந்தனை துடிக்க ஆரம்பிக்கின்றது.
அவரின் அனுபவக் கூர்மை, பாலசுந்தரத்தின் இதயத்தைக் குத்தி அவனது இதயப் பொக்கணைக்குள்ளிருக்கும் உண்மை உணர்வுகளை உறிஞ்ச முனைகின்றது.
கணேசன் சாதாரணமானவரல்ல
பாடசாலை மாணவனாக இருந்து, பல்கலைக்கழக மாணவனாகி, ஆசிரிய பதவியேற்று, அதிபராகி கல்வி அதிகாரியானவர் ஐந்து வயதில் பாடசாலைப் படிக்கட்டில் காலடி வைத்தவர் இன்றுவரை கல்வியோடு தொடர்புபட்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்றார். எத்தனையோ அனுபவங்கள் உள்வாங்கியவர் “பழமும் திண்டு கொட்டையும் போட்டவர்” என்று கிராமப்புறங்களில் கூறவார்களே… கணேசன் அப்படிப்பட்டவர்!
ஒரு ஆணுக்கு இருக்க வேண்டிய உயரம். அதற்கேற்ற திடகாத்திரமான உடற்கட்டு. அடர்த்தியான, முன்னோக்கி வளர்ந்திருக்கும் கண்புருவ மயிர்கள், மயிர்க்கொட்டிகள் போன்ற உரோமம் அடர்ந்த கைகள், நரைத்த அடர்த்தி குறைந்த பக்கவகிடிட்ட தலைமயிர், தடித்த மீசை நாசுக்கான நாகரீகம் நிலாவரைக் கிணறு போன்ற ஆழம் காணமுடியாத பார்வை முற்றிப் பழுத்து உலர்ந்து எரித்தால் எண்ணை பிறக்கக்கூடிய ‘செத்தல் தேங்காய்! அப்படிப்பட்ட அனுபவசாலி!
கணேசனின் பார்வை இன்னமும் பாலசுந்தரத்தின் மீது நங்கூரமிட்டு நிற்கின்றது.
கணேசன் தன் கையிலிருந்த சிகரட்டை இறுதியாக உறிஞ்சி, புகையைச் சுவாசப்பை வரை உள்ளிழுத்து சிகரட் கட்டையை நிலைத்தில் போட்டு சப்பாத்துக் காலால் மிதிக்கின்றார்.
வாழைத்தண்டின் வெட்டு முகத்தில் நீர் சுரப்பது போன்று அவரது இதயத்தில் பாலசுந்தரம் பற்றிய சில அபிப்பிராயங்கள் சுரக்கின்றனவே தவிர, நிதானமான எந்தத் தீர்மானித்திற்கும் அவரால் வர முடியவில்லை.
கணேசனின் மனமிதப்புத் துடித்துக் கொண்டேயிருக்கின்றது.
சுவர்க்கரையோடு நின்ற பாலசுந்தரம் திரும்பவும் நிர்வாகியின் அலுவலகத்துள் நுழைகின்றான்.
“சேர்”
“என்ன தம்பி’
“சேர் என்னை வேலைக்கு எடுங்கோ சேர் ‘மிகவும் இரந்து கேட்கின்றான் பாலசுந்தரம் இரவீந்திரனின் முகத்தில் எரிச்சல் உணர்வு படர்கின்றது. கையிலிருந்த பேனாவை மேசை மீது வைத்துவிட்டு பாலசுந்தரத்தை ஏற இறங்கப் பார்க்கின்றார். அவரது பார்வையில் பலவித உணர்வுகள், முரல் மீனாய் குத்தி மறைக்கின்றன. கைகளைப் பொத்திப் பிடித்து உதட்டருகே வைத்து பொங்கி வந்த கொட்டாவியை மிகவும் நாகரீகமாக வெளிவிட்டுப் பேச ஆரம்பிக்கின்றார்.
“தம்பி நீங்கள் படிக்க வேணுமெண்டதுக்காகத்தான் அரசாங்கம் எல்லாத்தையும் இலவசமாய்த் தந்திருக்கு அரசாங்கத்துக்கும் துரோகம் செய்து உங்களைப் பெத்ததுகளுக்கும் துரோகம் செய்து இஞ்சை வேலைக்கு வந்திருக்கிறயளே இது சரியா”
“சேர் நீங்கள் சொல்றது சரி சேர் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ, முதல் தடவை கூறியது போலவே இப்போதும் மிகவும் இரந்து கூறுகின்றான். பாலசுந்தரம்.
‘தம்பி நீ எதுவும் கூறவேண்டாம். உன்ரை படிப்புக் கெட்டுப் போறதுக்கு நான் உடந்தையாக இருக்க மாட்டன் நீங்கள் போகலாம்’ இப்படிக் கூறிய இரவீந்திரன் பாலந்தரத்தின் பதிலுக்காகக் காத்திராமல் பேனையை எடுத்து எழுத ஆரம்பிக்கின்றார்.
பாலசுந்தரம், வேதனையோடு திரும்பவும் அந்த மதிற்கரையில் வந்து நிற்கின்றான்.
‘சேர் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ’ பாலசுந்தரம் இரண்டாவது தடவையாகவும் கூறிய இந்த வாக்கியம் வண்டாகி கணேசனின் செவிப்பறையைக் கடித்துக் இதயத்துள் நுழைக்கின்றது.
பாலசுந்தரம் எதைக் கூற விரும்புகிறான்?…
“சேர் ஜெனரேட்டரை இயக்கட்டா” அங்கு வந்த பாலசிங்கம் கேட்க இரவீந்திரன் அனுமதியளிக்கின்றான். சில நிமிடங்களில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மருத்துவமனை முழுவதும் பிரகாசமாகின்றது.
பாலசுந்தரம் ஒவ்வொரு பல்ப்புகளையும் ஆவலோடு பார்க்கிறான் அவனது முகத்திலே ஏதோ ஒருவித ஏக்க உணர்வு தளம்புகின்றது.
கணேசனின் பார்வை மீண்டும் பாலசுந்தரத்தின் மீது நங்கூரமிடுகின்றது. மீண்டும் ஒரு சிகரட்டை எடுத்து மூட்டுகின்றார்.
கணேசன் பாலசுந்தரத்தை தனக்கருகில் அழைக்க பாலசுந்தரம் பணிவோடு அவருக்கருகில் வந்து நிற்கின்றான்.
“படிக்கிறீங்களா”
“ஓம் சேர்”
“என்ன வகுப்பு படிக்கிறீர்கள்”
“ஓ எல்”
“இந்த முறை எடுக்கிறீங்களா”
‘ஓம்’
“அப்பா என்ன வேலை”
“விறகு கட்டப் போறவர்”
“அம்மா”
“அம்மா செத்துப்போனா ஆமிக்காரர் சுட்டவங்கள்
“சொந்த வீடிருக்கா”
“இல்லை சேர் இந்த ரோட்டிலை ஒரு பள்ளிக்கூடம் இருக்கு அதுக்குப் பக்கத்திலை உள்ள கல்லு ரோட்டிலை போனால் ஒரு குடியேற்றத் திட்டமிருக்கு அங்கதான் இருக்கிறம்”
“சொந்த இடம் ‘
“இளவாலை அங்கை எங்களுக்குச் சொந்தமாய் தோட்டக் காணியிருந்தது. ஆப்பா வெத்திலைத் தோட்டம் செய்தவர் நல்ல வருமானம் நல்லாய்த்தான் இருந்த நாங்கள் இப்ப வீட்டில்லை, தோட்டமில்லை, உழைப்பில்லை அம்மாவும் இல்லை.
ஆமிக்காறர் வாறாங்களெண்டு சனங்களெல்லாம் ஓடிச்சிதுகள் நாங்களும் ஓடினம் அம்மாவும் எங்களோடை ஓடி வந்தவ கொஞ்சத்தூரம் வந்து பார்த்தால் அம்மாவைக் காணயில்லை துவக்கு வெடி கிட்டக்கிட்ட கேட்டிது அதாலை திரும்பிப் போகேலாமல் போச்சிது அம்மா எப்பிடியும் வருவா எண்ட நம்பிக்கையில வந்தம்….
அங்கையிந்து ஓடி வந்து சண்டிலிப்பாய் பள்ளிக்கூடத்திலை இருத்தம் பிறகு மானிப்பாய் அந்தோனியார் கோயிலிலை இருத்தம்… பிறகுதான் இஞ்சை வந்தம்…
நாலு மாதத்துக்குப் பிறகு இளவாலையிலை இருந்து ஒரு சுவாமியார் வந்தவர் அவரைப் போய் சந்திச்சம் அவரிட்டை இளவாலையிலை செத்துப்போன ஆக்களின்ரை விபரமெல்லாம் இருந்தது. அதிலை அம்மாவின்ரை பெயரும் இருந்தது ஆமிக்காரர் சுட்டவங்களெண்டு சுவாமியார் சொன்னார். பாலசுந்தரம் தனது கோகக் கதையைக் கூறி முடிக்கிறான்.
தேநீருக்குள் விழுந்த பாண் துண்டு ஊறிப் பிய்வது போல கணேசனின் இதயம் வேதனையில் ஊறிப் பிய்கின்றது. கையிலிருந்த சிகரட்டைக் கூட கணேசன் மறந்து போய்விட்டார். சிகரட் எரிந்து சாம்பல் உதிர்ந்து கொண்டிருக்கின்றது.
கணேசன் மாணவர் உலகத்தை மட்டுமல்ல மனித உலகத்தையும் சரியாக உமிழ்ந்த அனுபவமிக்கவர் பாலசுந்தரத்தின் உணர்வுகளை அவாயப் புரிந்து கொள்கிறார்.
கணேசனால் தொடர்ந்து பேச முடியவில்லை.
சில வினாடிகள் கணேசனுக்கருகில் மெளனமாக நின்ற பாலசுந்தரம் என்னத்தை நினைத்துக் கொண்டானோ – திரும்பவும் இரவீந்திரன் அலுவலத்துள் நுழைகின்றாள்.
இரவீந்திரன் மேற்கண்ணால் பாலசுந்தரத்தை பார்த்து விட்டு எதுவுமே பேசாமல் தனது வேலையில் ஈடுபட்டிருக்கின்றார்.
“சேர்”மூன்றாவது தடவை… அதே இரக்க உணர்வு நிறைந்த குரல்
“என்ன”
“எனக்கு சம்பளம் வேண்டாம் சேர்”
இரவீந்திரன் எதுவுமே பேசவில்லை தனது வேலையில் ஈடுபட்டிக்கின்றார்.
“சேர்…” திரும்பவும் அழைக்கின்றான் பாலசுந்தரம்.
“என்ன”
“எனக்கு சம்பளம் வேண்டாம் சேர்” இரவீந்திரனின் செவிப்பறையில் பாலசுந்தரத்தின் பேச்சொலிகள் பதியவில்லை.
“தம்பி… என்னை வேலை செய்ய விடுங்கோ தொந்தரவு செய்யாதையுங்கோ…”
சிறிது கடுமையாக இரவீந்திரன் கூற பாலசுந்தரம் ஏமாற்றத்தோடு அலுவலகத்தைவிட்டு வெளியே வருகிறான். வந்தவன் கணேசனுக்கு கிட்டவாக நிற்கின்றான்.
”எனக்குச் சம்பளம் வேண்டாம் சேர்…” பாலசுந்தரம் கூறிய இந்த வாக்கியம் கணேசனின் இதயத்தில் உண்ணி போல் ஒட்டிக் கொண்டு கடிக்கிறது…!
வாழ்க்கையில் பெரும் வறுமை… நோயாளரை பராமரிக்க வந்திருக்கின்றான்… சம்பளம் வேண்டாம் என்று கூறுகின்றான்.
புரிய முடியாத எத்தனையோ இதயங்களின் நாடித்துடிப்புகளை இரண்டொரு பார்வையில் புரிந்து கொண்டு விடுகின்ற கணேசன்… குழம்பிப் போய் நிற்கின்றார்.!
கணேசனின் பார்வை மீண்டும் பாலசுந்தரத்தின் மீது நங்கூரமிடுகின்றது.
இருவரது பார்வைக்கோடுகளும் சந்திக்கின்றன. கணேசனின் பார்வையில் விசாரணை உணர்வு… பாலசுந்தரத்தின் பார்வையில் விரக்தி உணர்வு…!
“தம்பி…” கணேசன் மீண்டும் பேச்சைத் தொடங்குகின்றார்.
“சேர்…”
“என்ன கடுமையாய் யோசிக்கிறியள்…”
“யோசிச்சு என்ன செய்யிறது…”
“இலவசமாய் வேலை செய்ய வந்தீங்களா?” கணேசன் இப்படிக் கேட்டாதும் பாலசுந்தரம் கணேசனைப் பார்க்கின்றான்… மூக்கடியிலுள்ள பூனை மயிருக்குள் வியர்வைத் துளிகள் பனிக்கின்றன… அவனது உதடுகள் துடிக்கின்றன… குரல்வளையின் அடியிலுள்ள ஒரு ரூபா குத்தியளவிலான சிறிய குழி… வெட்டப்பட்ட ஆமையின் ஈரல் துடிப்பது போல் துடிக்கின்றது…
குழந்தையின் பிரசவத்திற்கு முன் தாய்க்கு ஏற்படுகின்ற நோக்காட்டுக் குத்துப்போல்… சில உண்மைகளை பிரசவிக்கப் போகின்ற சில உணர்வுகள் அவனது முகத்தில் பளிச்சிடுவதைக் கணேசன் அவதானித்துக் கொண்டு பேச்சை தொடர்கின்றார்…
“வேலை தர முடியாதெண்டு மனேஜர் சொல்லிப் போட்டாரா…” கணேசன் பரிவோடு கேட்கிறார்.
“ஓம் சேர்”
“வீட்டில் கஷ்டந்தானே”
“ஓம் சேர்’
“அப்ப சம்பளம் வேண்டாமெண்டு சொன்னீங்களே”
“வீட்டிலை சரியான கஷ்டம் தான் சேர்… நான் அதுக்காக வேலைக்கு வரயில்லை…”
“அப்ப… ஏன் வேலைக்கு வந்தீங்கள்…”
“சோதனைக்கென்னும் இரண்டு மாதம் இருக்கு சேர்… இரவிலை படிக்கிறதெண்டால் மண்ணெண்ணை வாங்க வசதியில்லை… இஞ்சையெண்டால் நோயாளியையும் பராமரித்து வெளிச்சத்திலை படிக்கலாமெண்டதுக்காககத்தான் சேர் ‘புத்தகமும்’ கொண்டு வந்தனான்…” பாலசுந்தரம் கூறிவிட்டு கணேசனைப் பார்க்கின்றான். இயலாமை உணர்வு மேலீட்டால், அவனது நாடி முனையிலுள்ள தசை சுருங்கித் துடிக்கின்றது…!
கணேசனின் இதயம் சில விநாடிகள் தரித்து… மீண்டும் துடிக்கின்றது.
கணேசன் பரிவோடு பாலசுந்தரத்தின் கையைப் பிடிக்கின்றார்!
நோயாளியையும் பராமரித்து வெளிச்சத்திலை படிக்கலா மெண்டதுக்காகத்தான்… புத்தகமும் கொண்டு வந்தனான்…” பாலசுந்தரத்தின் இந்தப் பேச்சு கணேசனின் செவிப்பறையை கொதிநீராய் அவித்துக் கொண்டிருக்கின்றது.!
– ஈழநாதம், 27.05.1994.
– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.