இரும்புக்கை மனிதன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 3,030 
 
 

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

அத்தியாயம்-36

தெள்ளவன் காரை ஒரே விரைவுடன் செலுத்திக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் காரில் பெருநாகள் உட்கார்ந்திருந்தான். படகை ஓட்டிச் செல்லுவதிலும், தண்ணீர் உள்ள இடங்களில் தப்பிச் செல்லுவதிலும் மிகவும் திறமைசாலி பெருநாகன், புலிக்குட்டியைத் தப்ப வைத்துக் கடத்திவரத் தன் ஒருவனால் மட்டும் முடியாது என்று உணர்த்த தென்னவன், பெருநாகன் என்னும் கொடியவனுடன் தொடர்புகொண்டு அவனையும் அழைத்துச் சென்றான். தனக்குக் கிடைக்கும் பணத்தில் பாதிப் பணத்தை அவனுக்குத் தருவதாக அவன் சொன் னான். உலகையா கொடுக்கும் பணத்தில் பாதியைத் தருவதாகச் சொன்னானே தவிர, தன் திட்டத்தைப்பற்றி அவனிடம் சொல்லவில்லை. தென்னவனுடைய திட்டம் என்ன என்று தெரிந்திருந்தால், பெருநாகன் அவனுடன் புறப்பட்டே இருக்கமாட்டான்! அதற்குப் பதில் அவன் பெருங்கல் ஒன்றைத் தன் இடுப்பில் கட்டிக்கொண்டு ஆழமான கடலில் குதித்துவிட்டிருப்பான்! 

கார் விரைந்து செங்கற்பட்டைக் கடந்து, ஒரு காட்டின் வழியே சென்றது. புலிக்குட்டி இருந்த தீவுக்குப் பக்கத்தில் போய்க் கார் நின்றபோது இருள் சூழ்ந்து விட்டது. ஆனாலும், நட்சத்திரங்களின் ஒளியில் ஏரியும், மரங்களும், தொலைவில் தீவும், மலைகளும் தெரிந்தன. 

கார் நின்றதும் பெருநாகன் தென்னவனைப் பார்த்துக் கேட்டான், “இப்போதே நாம் தீவுக்குப் போகிறோமோ?” 

தென்னவன் சொன்னான். “இப்போது போவது ஆபத்து. விடியும் நேரத்தில் ஏரியின் நீரைக் கடத்து மறுகரைக்குப் போவோம். அதுவரையில் காரில் படுத்து உறங்குவோம்.” 

பெருநாகன் காரிலிருந்து இறங்கி நின்று பார்த்தான். அவன் கையிலிருந்த மின்பொறி விளக்கை அடித்துத் தண்ணீரையும், கரை ஓரங்களையும் பார்த்தான். 

தென்னவன் உடனே இறங்கி வந்து, “மின்பொறி விளக்கை அடித்துப் பார்க்காதே! அந்தக் கரையிலுள்ள சிறைக் காவலர்களுக்குத் தெரிந்துவிடும்! விடிவதற்கு முன் புறப்படுவோம்! அப்போதுதான் எல்லாரும் உறங்கிக் கொண்டிருப்பார்கள்!” என்றான். 

பெருநாகன் மின்பொறி விளக்கை அணைத்துவிட்டு, “விடிவதற்குள் மறுகரையை அடைய முடியும். இரப்பர் படயில் ஏறிப் போய்விடலாம். அதுதான் ஓசை இல்லாமல் போகும். வரும்போது மூன்று பேர்கள் அந்தப் படகில் ஏறி வருவது கொஞ்சம் கடினம்” என்றான். 

“எப்படியும் மூன்று பேரும் அதே படகில்தான் வந்தாக வேண்டும். தண்ணீரில் முதலைகள் மிகுதி!” என்றான் தென்னவன்! 

“முதலைகள் படகின் பக்கத்தில் வராமல் இருக்கப் படகின்மேல் ஒரு மருந்தைத் தடவிவிடப் போகிறேன். அந்த மருந்தின் வாசனை முதலைகளையும். தண்ணீரில் உள்ள பாம்புகளையும், படகுக்கு அருகில் வராமல் செய்துவிடும்” என்றான் பெருநாகன்! 

தென்னவன் அவனிடம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொன்னாள். பெருநாகன் ஆடாமல் அசையாமல் ஏரியின் நடுவில் அமைந்திருந்த தீவைப் பார்த்த படியே அவன் சொன்னதையே கேட்டுக் கொண்டிருந்தான். 

பிறகு, இருவரும் காரில் உட்கார்ந்தபடியே இரவு உணவு உண்டுவிட்டு, காரிலேயே படுத்து உறங்கினார்கள். 

பின்னிரவு நேரத்தில் மிகச் சரியாக மூன்று மணிக்குத் தென்னவனின் கையிலிருந்த கைக்கடிகாரத்தின் அலாரம் ஒலித்தது. கிர்ரென்று ஓசை வந்ததும் விழித்துக் கொண்ட தென்னவன், பக்கத்தில் படுத்திருந்த பெருநாகனை எழுப்பினான். இருவரும் காரிலிருந்த இரப்பர் படகை இறக்கினார்கள். பார்ப்பதற்குச் சிறியதாக இருந்த அந்தப் படகு, காற்றடித்ததும் பெரிதாகிவிட்டது. வாய்ப்பான இடத்தைப் பார்த்துப் படகைத் தள்ளினான். பிறகு, காரிலிருந்த மூன்று பெட்டிகளில் இரண்டு பெட்டிகளைப் பெருநாகன் எடுத்துக் கொண்டான். தென்னவன் காரை மறைவான இடத்தில் நிறுத்தி அதைச் செடிகளாலும் மரக்கிளைகளாலும் நன்கு மறைத்துவிட்டு, மற்றொரு பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்தான். 

இருவரும் படகில் ஏறி உட்கார்ந்தார்கள். படகை மெல்லத் துடுப்பினால் தள்ளினான் பெருநாகன். படகு தண்ணீரில் விரைந்தது. படகின் அடிப்பாகத்திலும் பக்க வாட்டிலும் பெருநாகன் தடவியிருந்த மருந்து தண்ணீரில் பட்டுக் கரைந்து படகு சென்ற வழியில் தண்ணீரின் நிறம் மாறிக்கொண்டிருந்தது. 

பெருநாகன் படகை மிகவும் திறமையாகத் தள்ளிச் சென்றான். படகு ஓசையின்றி மெல்லச் சென்றது. சிறிது நேரத்தில் படகு மறுகரையை அடைந்தது. பெருநாகன், துடுப்பினால் கரை ஓரத்தில் இருந்த மண்ணின் தன்மையை அழுத்திப் பார்த்து, உணர்ந்து, கடினமான கரையுள்ள இடத்தில் படகை நிறுத்தினான். இருவரும் படகிலிருந்து இறங்கியதும், படகை இழுத்து ஒரு பள்ளத்தில் போட்டு மறைத்துவிட்டுப் பெட்டிகளுடன் முள்செடிகள் நிறைந்த இடத்துக்குச் சென்று ஒளிந்து கொண்டார்கள். 

“விடிந்ததும்தான் நமக்கு வேலை. விடிந்ததும், ஏழு மணிக்கு மேல் எல்லாக் கைதிகளையும் அழைத்துக் கொண்டு அதோ அந்தக் குன்றின் பக்கத்தில் உள்ள சாலையைப் போடத் தொடங்குவார்கள், புதிதாகப் போடப்பட்டு வரும் அந்தச் சாலை அரைகுறையாக நிற்கிறது. கைதிகள் அங்கே வந்து வேலை செய்யும் போதுதான் நாம் நம் வேலையைத் தொடங்க வேண்டும்” என்றான் தென்னவன். 

இருவரும் காத்திருந்தார்கள், கைதிகள் வேலைக்கு வரும் நேரம் வந்ததும் இருவரும் புறப்பட முன்னேற்பாடுகளுடன் இருந்தார்கள். மூன்று பெட்டிகளில் ஒரு பெட்டியில் வெடிமருந்துகள் இருந்தன. புகையை மிகுந்த அளவுக்குக் கிளப்பிவிடும் வெடிகள் அவை. மற்றொரு பெட்டியில் துப்பாக்கிகள் இரண்டு இருந்தன. துப்பாக்கிகளுக்குத் தேவையான குண்டுகளும் அதில் மிகுதியாக இருந்தன. மூன்றாவது பெட்டியில் வேறு உடைகளும், முதல் சிகிச்சைகளுக்குரிய மருந்துக்களும் இருந்தன. 

“இந்த உடைகளும் மருத்தும் எதற்கு?” என்று கேட்டான் பெருநாகன். 

”நமக்கோ அல்லது புலிக்குட்டிக்கோ அடிபட்டால் முதல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டாமா? நாம் தப்பி மறுகரையை அடைந்ததும், இதே உடைகளில் போகக் கூடாது. புலிக்குட்டிக்கும் கைதி உடையைக் கழற்றிவிட்டு வேறு உடை அணிய வேண்டமா?” என்றான் தென்னவன். 

இருவரும் துப்பாக்கிகளைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். வெடி மருந்துப் பெட்டியை எடுத்துக் கொண்டார்கள். துணிப்பெட்டின்ய அங்கேயே வைத்து விட்டு நடந்தார்கள். இருவரும் மறைந்து மறைந்து ஒரு குன்றின் மேல் ஏறினரர்கள். அந்தக குன்றின் பக்கத்தில் தான் கைதிகள் வேலை செய்யுமிடம் இருந்தது! 

இருவரும் குன்றின்மீது உயரமான ஓர் இடத்தில், பாறையின் மறைவில் பதுங்கியிருந்தார்கள். கைதிகள் குன்றுக்கு அப்பால் ஒரு பகுதியை வெட்டிப் பாறைகளையும் மண்ணையும் எடுத்துச் சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். குன்றின் மீது தென்னவனும் பெருநாகனும் உட்கார்த்து பார்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து மிகப் பக்கத்திலேயே குன்று வெட்டப்பட்டு பள்ளமாக இருந்தது. 

கைதிகளில் புலிக்குட்டி யார் என்பதைக் கண்டுபிடிக்க நீண்ட நேரம் பிடிக்கயில்லை. இரும்புக்கை கொண்ட புலிக் குட்டியை இருவரும் பார்த்தார்கள். சைதிகள் வேலை செய்வதை வேடிக்கை பார்த்தபடி நான்கு காவலாளிகள் இங்கும் அங்குமாக நின்றிருந்தார்கள். தொலைவில் போகிறவர்களையும் சுடக்கூடிய துப்பாக்கிகள் அவர்களுடைய கையில் இருந்தன. 

“குன்றின் மறுபக்கமாகச் சுற்றிக்கொண்டு அவர்களுக்குப் பின்னால் நான் வருகிறேன். அந்தப் பக்கம் நான் வந்ததும் நான் கையை ஆட்டுகிறேன். உடனே நீ இங்கிருந்து புகை கக்கும் குண்டுகளைக் கீழே உள்ள பாறைகளின் மீது தொடர்த்து வீசவேண்டும். குண்டுகள் வெடிக்கும். குண்டுகள் வெடித்ததும் புகை மிகுந்த அளவு பரவிவிடும். புகையில் எவருக்கும் எதுவும் தெரியாது! நான் புகையினுள் புகுந்து, புலிக்குட்டியை இழுத்துக் கொண்டு இடப்பக்கமாக ஓடிவிடுவேன். ஏனென்றால், மற்றக் கைதிகள் வலப்பக்கமாக ஓடுவார்கள்! அப்போது என்னைத் தொடர்த்து வரும் காவலர்களை நீ துப்பாக்கியால் சுட்டு நிறுத்த வேண்டும்!” என்றான் தென்னவன். 

“ஆகட்டும்” என்றான் பெருநாகள், 

வெடிமருந்துப் பெட்டியை அவனிடம் கொடுத்துவிட்டு, துப்பாக்கிகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு குன்றின் மறுபக்கம் வந்தான் தென்னவன். கைதிகளும் காவலர்களும் இருந்த இடத்துக்குப் பின்னால் வந்ததும் அவன் கையை ஆட்டிச் சாடை காட்டினான். ஒளிந்து வந்த தென்னவனைப் பெருநாகன் பார்த்துவிட்டான்! உடனே செயலில் அவன் இறங்கினான். 

அத்தியாயம்-37

பெருநாகன் புகை கக்கும் குண்டுகளை வீசி எறிந்தான். ஒவ்வொன்றாக அந்தக் குண்டுகள் தொடர்ந்து வெடித்ததும், கரும்புகை நிறையக் கிளம்பிச் சுற்றுப்புறத்தில் இருந்த எல்லாவற்றையும் மறைந்தது. குண்டுகள் எந்தப் பக்கத்திலிருந்து வந்தன, யார் அவற்றை வீசியது என்பதைக் காவலர்களும் கைதிகளும் தெரிந்து கொள்ள முடியாமல் கொஞ்ச நேரம் அப்படியே அத்தனை பேர்களும் நின்றார்கள்! 

கைதிகள் அஞ்சி ஓடினார்கள்! காவலர்கள் கண்டபடி யெல்லாம் ஓடி அவர்களை மடக்கப் பார்த்தார்கள்! முடியவில்லை! 

புகை கிளம்பியதும் தென்னவன் பாய்ந்து ஓடினான். கைதிகள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் புலிக்குட்டி இருந்த இடத்தை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். புகை கிளம்பியதும், அவன் அந்தப் புகை மண்டலத்தில் புகுந்து சென்று புலிக்குட்டியை ஊகம் செய்து பிடித்தான். கைதிகள் ஓடிய பக்கம் ஓடாமல், புலிக்குட்டியை வேறு பக்கமாக இழுத்துக் கொண்டு ஓடினான். 

எவரோ தன்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடுவதை உணர்ந்த புலிக்குட்டி, புகை மண்டலத்தில் இருந்து வெளியே புதிய மனிதனைப் பார்த்துவிட்டு அவன் பிடியிலிருந்து திமிரிக்கொண்டே ஓட முயற்சி செய்தான்! அந்த நேரத்தில்- 

எதிரே கையில் துப்பாக்கியுடன் ஓடி வந்த காவலர்களில் ஒருவன், தென்னவனைப் பார்த்து விட்டான்! அவன் தென்னவனைச் சுடத் துப்பாக்கியால் குறிபார்ப்பதற்குள் தென்னவன் ஒரே கையில் தன் கையிலிருந்த துப்பாக்கியால் சுட்டான். காவலன் சுருண்டு விழுந்தான்! 

புலிக்குட்டி தென்னவனைப் பார்த்தான். தென்னவன் அவனிடம், ”பேசாமல் தொடர்ந்து என்னுடன் வா! இல்லாவிட்டால் உன்னையும் நான் தொலைத்து விடுவேன்!” என்றாள். 

உலகையாவால் தன்னை மீட்டுக் கொண்டு வர அனுப்பப்பட்ட இந்த மனிதன், தன்னை மீட்டுக் கொண்டு வர முடியாவிட்டால் சுட்டுவிடக்கூடும் என்று புலிக்குட்டிக்கு இப்போது தோன்றியது. புலிக்குட்டி புதையலின் இருப்பிடத்தைச் சொல்லா விட்டாலும், உலகையாவுடன் தொடர்பு கொண்டு செய்த குற்றங்களைப் பற்றி எப்போதாவது சொல்லி விட்டால் உலகையாவுக்கும் கிளிமொழிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தே இந்தக் கொடியவனை அனுப்பியிருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆகையால், தென்னவனின் குண்டுக்கு இரையாவதற்குப் பதில் இந்தத் தீவிலிருந்து அவனுடன் தப்பிச் சென்று, பிறகு மறைந்துவிடலாம் என்று அவன் திட்டமிட்டான். 

எல்லாம் ஒரு நொடியில் அவனுக்குத் தோன்றின. ஆகையால் தென்னவனுடன் அவனுக்கு அஞ்சி அவனுடன் வருவதைப்போல் ஓடினான்! 

தென்னவனும் புலிக்குட்டியும் ஓடுவதைப் பார்த்து விட்டு இன்னும் இரு காவலர்கள் அவர்களைப் பிடிக்க ஓடி வந்தார்கள். அவர்கள் கைகளில் இருந்த துப்பாக்கிகள் முழங்கின! 

மேலே ஒளிந்துகொண்டு நின்ற பெருநாகன், தென்னவனுக்கும் புலிக்குட்டிக்கும் தப்பி வரப் பாதுகாப்பு அளிக்க வெடிகுண்டுகளை வீசி எறிந்தான். வெடி குண்டுகள் படார் படாரென்று வெடித்து மலையின் ஒரு பகுதியைத் தகர்த்தன! தொடர்ந்து அவன் புகை கக்கும் புகைக் குண்டுகளை வீசினான். 

தென்னவனும் புலிக்குட்டியும் காவலர்களின் பார்வையிலிருந்து தப்பிப் படகு இருந்த இடத்தை நோக்கி விரைந்தார்கள். 

பெருநாகனும் இப்போது மலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்கித் தென்னவன் ஓடிய பக்கம் ஓடினான். பெருநாகன், அந்தப் பக்கம் வந்தவர்களைச் சுட்டு வீழ்த்தித் தடுத்தான். ஆகையால், அவர்களைப் பார்த்த காவலர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள். இவர்களைப் பார்க்காமல் மற்றக் கைதிகளைப் பிடிக்க ஓடிய காவலர்கள் வேறுபக்கம் ஓடிக் கொண்டிருந்தார்கள். 

தென்னவன் பெட்டிகளை வைத்திருந்த இடத்துக்கு வந்ததும் புலிக்குட்டியைப் பார்த்து அந்தப் பெட்டிகளையும் எடுத்துக் கொள்ளும்படி சொன்னான். புலிக்குட்டி இரு பெட்டிகளையும் எடுத்துக்கொண்டான். 

இருவரும் படகு இருந்த இடத்தை நோக்கி ஓடினார்கள். ஒரு சில விநாடிகளில் பெருநாகன் ஓடி வந்தான்! 

படகை இழுத்துத் தண்ணீரில் விட்ட அவன், ‘”நாம் விரைவில் போய்விட வேண்டும். இல்லாவிட்டால், மேலும் சில காவலர்கள் வத்து நம்மைப் பிடித்துவிடுவார்கள்” என்றான். 

“இந்தப் படகில் நாம் தப்பிப்போக முடியுமா? இது ஆமைபோல் அல்லவா நகரும்?” என்றான் புலிக்குட்டி. 

”பெருநாகள் இருக்கும் வரையில் இது விரைவாகப் போகும்! படகில் ஏறியதும் நீ உடைகளை மாற்றிக் கொள்!” என்றான் தென்னவன். 

மூவரும் படகில் ஏறினார்கள். பெருநாகன் படகை விரைவாகச் செலுத்தினான். எரியில் வளர்ந்திருந்த சில மரங்களின் மறைவிலேயே அவன் படகைச் செலுத்தினான். துடுப்பினால் அவன் படகை மிக விரைவாகச் செலுத்தினான். 

புலிக்குட்டி, கைதியின் உடையைக் கழற்றி ஏரியில் எரிந்துவிட்டு, வேறு உடைகளை அணிந்து கொண்டான். 

படகை விரைவாகச் செலுத்திய பெருநாகனுக்கு மூச்சு வாங்கியது. அவன் கைகள் ஓய்ந்தன. அவனால் மேலும் விரைவாகப் படகைச் செலுத்த முடியவில்லை. அதே நேரத்தில், தண்ணீரில் அவன் கண்கள் எதையோ உற்றுப் பார்த்தன. அவன் முகத்தில் அச்சம் மிகுந்தது! 

”என்ன அது?” என்றான் தென்னவன். 

“அதோ பார் முதலைகள்! புலிக்குட்டி தன் பழைய உடைகளைத் தண்ணீரில் போட்டான் அல்லவா? அந்த உடையில் வேர்வை படிந்திருந்தால், மனித வாசனையை மோப்பம் பிடித்து முதலைகள் இந்தப் பக்கமாக நம்மைக் கண்டுபிடித்து வருகின்றன! படகில் தடவியிருந்த மருந்தும் கரைந்துவிட்டதால், படகை நோக்கி விரைவாக அவை வருகின்றன! ஒன்றா இரண்டா? எத்தனை முதலைகள்!” என்றான் பெருநாகன்! 

அவன் சொன்னதிலிருந்து அவர்கள் தப்ப முடியாது என்பதை உணர்ந்து கொண்டான் தென்னவன், உடனே அவன் கொஞ்சமும் சிந்திக்காமல் துப்பாக்கியைத் திருப்பிப் பெருநாகனின் மண்டையில் ஓங்கி அடித்தான்! பெருநாகன் அப்படியே சுருண்டு தண்ணீரில் விழுந்தான்! அவனை முதலைகள் அப்படியே சூழ்ந்து கொண்டன! 

“புலிக்குட்டி! துடுப்பை எடுத்துப் படகை விரைவாகச் செலுத்து! முதலைகள் அவனைப் பதம் பார்த்துவிட்டு வருவதற்குள் நாம் கரைக்குப் போய்ச் சேர்ந்து விடுவோம்!” என்றான் தென்னவன். 

புலிக்குட்டியும் உடனே துடுப்புகளைப் போட்டுப் படகை மிக விரைவாகச் செலுத்தினான். படகு கரையை நெருங்கிக் கொண்டிருந்தது. 

பெருநாகனை முதலைகளுக்கு உணவாகத் தூக்கிப் போட்ட இந்தத் தென்னவன், தன்னை விடமாட்டான் என்பதை உணர்ந்த புலிக்குட்டிக்கு, எப்படியாவது அவனிடமிருந்து விரைவிலேயே தப்ப முடிவு செய்தான். 

படகு கரையைத் தொடும் நேரத்தில், காவலர்கள் எவராவது வருகிறார்களா என்று தொலைநோக்கியால் பார்த்தான் தென்னவன். அப்போது இதுதான் நேரம் என்று புலிக்குட்டி பெருநாகன் படதில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட்டான்! துப்பாக்கி வெடித்ததும் திரும்பினான் தென்னவன்! குண்டு அவன் மார்பில் புதைந்தது. அதே நேரத்தில் தென்னவன் தன் கையிலிருந்து துப்பாக்கியால் புலிக்குட்டியின் மண்டையில் அடித்தான்.அவனுக்கு எழும்புமுறிவு ஏற்பட்டிருக்கும் என்று எண்ணிய தென்னவன் அப்படியே படகில் உட்கார்ந்து, தன்னுடைய மார்பில் வழிந்த இரத்தத்தைக் கட்டுப்படுத்த முயன்றான். 

குண்டு மிகவும் ஆழமாகப் புதைந்துவிட்டது. 

தென்னவன் பெட்டியிலிருந்த முதல் சிகிச்சை மருந்தைப் போட்டு, குண்டுபட்ட இடத்துக்கு நேராகக் கட்டுப்போட்டான். வலி மிகுந்திருந்தது. எவராவது நல்ல டாக்டரிடம் சென்று குண்டை அகற்றிவிட்டு ஊசி போட்டுக் கொண்டால் தான் பிழைக்க முடியும் என்பது தெரியும் அவனுக்கு. ஆகையால் அவன் மெல்லப் படகிலிருந்து இறங்கிப் படகைக் கரைக்கு இழுத்தான். பெட்டிகளையும் துப்பாக்கிகளையும் காரில் எடுத்து வைத்தான். புலிக்குட்டியை இழுத்துக்கொண்டு போய்க் காரில் இரண்டு சீட்டுகளுக்கும் இடையில் படுக்கை வைத்தான். பிறகு அவன் காரில் புறப்பட்டான். 

எவ்வளவு விரைவாகச் சென்னையை நோக்கிப் போக முடியுமோ, அவ்வளவு விரைவாக அவன் கார் சென்னையை நோக்கி விரைந்தது! 

காரை ஓட்டிச் சென்ற அவனுக்கு வர வர வலி மிகுதி யாயிற்று. உடல் வேர்த்தது. தூக்கம் வருவதைப் போலிருந்தது. அவன் பல்லைக் கடித்துக்கொண்டு காரை ஒரு வழியாகத் தாம்பரம் வரையில் ஓட்டிக் கொண்டு வந்து விட்டான்! 

தாம்பரம் வந்ததும் அவன், சாலை ஓரமாக ஓர் இடத்தில் காரை நிறுத்தினான். பக்கத்தில் தொலைபேசிப் பெட்டி ஒன்று இருந்தது. அவன் அதற்குள் சென்று கதவை மூடிக்கொண்டு, தொலைபேசியில் சென்னை போலீஸ் கமிஷனருடன் தொடர்பு கொண்டு பேசினாள். அவன் தன் பெயரைச் சொல்லாமல் உலகையாவின் பங்களாவில், சுவரில் மறைந்திருக்கும் இரும்புப் பெட்டியில் முல்லைக்கோட்டை ராணியின் முத்துமாலை இருப்பதாகத் தெரிவித்துவிட்டுத் தொலைபேசியை உடனே வைத்து விட்டான்! 

அவனுக்கு ஒரே மகிழ்ச்சி! 

முல்லைக்கோட்டை ராணியின் முத்துமாலை களவு போனது போலீஸ் இலாகாவினரால் இரகசியமாக வைக்கப்பட்டிருந் தாலும், அந்தச் செய்தி கொடியவர்கள் கூட்டத்தில் எப்படியோ பரவிவிட்டது. அந்த முத்துமலை உலகையாவிடம் இருப்பது எவருக்கும் தெரியாது; தென்னவன் அதைக் கண்டு பிடித்துவிட்டதால். உலகையாவையும், கிளிமொழியையும் போலீஸார் பிடிக்க அவன் வழி செய்துவிட்டான்! இனி உலகையாவால் அவனுக்குத் தொல்லை இருக்காது. புலிக்குட்டியைப் பேச வைத்து அவன் மறைத்து வைத்த முழுப் புதையலையும் அவனே அடையலாம்! 

அவன் வெளியே வந்து மீண்டும் காரில் ஏறி உட்கார்ந்தான். கார்புறப்பட்டது. ஆனால் அவனால் முன்னைப் போல் இப்போது காரை ஓட்ட முடியவில்லை. கார் இப்படியும் அப்படியும் வளைந்து வளைந்து ஓடியது. தென்னவனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது! அதனால் அவனுக்குத் தலை சுற்றுவதைப் போலிருந்தது! 

காரை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டு, பெட்டியிலிருந்து வாயில் போட்டுக் இரண்டு மாத்திரைகளை எடுத்து வாயில் கொண்டு, மீண்டும் அவன் காரைச் செலுத்தினான். 

சென்னையை அடைந்ததும், முதலில் தெரிந்த டாக்டர் ஒருவர் வீட்டின்முன் காரை நிறுத்தினாள். அந்த டாக்டரிடம் சென்று மார்பிலுள்ள குண்டை எடுத்துவிட வேண்டும் என்று தள்ளாடிக்கொண்டு உள்ளே சென்றான்! 

க்டர் ஒருவர் வந்து அவன் எதிரே நின்றார்!

“டாக்டர்! தற்செயலாகச் சுட்டுக் கொண்டேன். மார்பிலுள்ள குண்டை எடுத்து விடுங்கள். போலீஸாருக்தித் தெரிவிக்க வேண்டாம். உங்களுக்கு நிறையப் பணம் தருகிறேன்!” என்று சொல்லிவிட்டுத் தொப்பென்று மயங்கி விழுத்தான்! 

அத்தியாயம்-38

உலகையாவின் பங்களாவைச் சுற்றிப் போலீஸ், பாதுகாப்புக்காக நின்றது. வெளியே ஏழெட்டுப் போலீஸ் ஜீப்புகளும், கார்களும் நின்றன. பங்களாவில் போலீஸ் கமிஷனர் சோதனை போட்டுக் சுவரில் இரும்புப் பெட்டிக்குள் இருந்த முத்துமாலையை எடுத்தார்! 

உலகையா உதவியற்றவராக நின்றார். அது எப்படி அங்கே வந்தது என்று அவரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இனிமேல் உண்மையை மறைத்துப் பயனில்லை என்று நடந்ததை அவர் அப்படியே சொன்னார். 

மின்மினி அதை எடுத்துக் கொண்டுவந்து ஒற்றைக்கை மனிதன் புலிக்குட்டியிடம் கொடுத்ததாகவும், வைர மாலை ஒன்று களவு போனதைப் பற்றிப் போலீஸார் இரகசியமாக துப்பறிவது அவர் காதில் விழுந்ததையும் புலிக்குட்டியிடமிருந்து அவர் அதைத் தொடர்ந்து புலிக்குட்டிக்கும் அவனுக்கும் ஏற்பட்டிருந்த தொடர்பைப் பற்றியும் விளக்கமாகச் சொன்ளார். ஆனால் அவர் மகள் கிளிமொழியை எந்த வழக்கிலும் ஈடுபடுத்தாமல் அவர் கதையைச் சொன்னார்! 

அப்போது அவருடைய மகள் கிளிமொழி பங்களாவில் இல்லை. காரில் எங்கேயோ அவள் வெளியே சென்றிருந்தாள். 

போவீஸ் கமிஷனர், உலகையாவிடம் சொன்னார் “நீங்கள் போலீஸ் இலாகாவுக்கு வந்து உங்கள் வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டுப் பிறகு ஜாமீனில் வரலாம்! புறப்படுங்கள்!” 

“இதோ என் கண்ணாடியை எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன். என் மூக்குக்கண்ணாடி இல்லாமல் என்னால் எதையும் படிக்கவோ எழுதவோ முடியாது!” என்று சொல்லிவிட்டு அவர் தன் அறைக்குச் சென்றார். 

ஒரு சில வினாடிகளில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது! 

கமிஷனர் ஓடினார்! 

உலகையா தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சுருண்டு விழுந்து இறந்துவிட்டார்! 

அத்தியாயம்-39

பங்களாவை நோக்கிக் காரில் வந்து கொண்டிருந்த கிளிமொழி, வெளியே மிகுந்த அளவில் போலீஸ் ஜீப்புகளும், கார்களும் நிற்பதைக் கண்டு காரைத் தொலைவிலேயே நிறுத்தி விட்டாள். அவளுக்கு அச்சத்தால் தொண்டை அடைப்பதைப் போல் இருந்தது. உலகையாவைப் பற்றிய உண்மைகள எப்படியோ போலீஸாருக்குத் தெரிந்து விட்டன என்று எண்ணினாள் அவள்! 

பங்களாவுக்குப் போவதா வேண்டாமா என்று அவள் சிந்தித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பங்களா பக்கம் இரண்டு பேர்கள் ஏதோ பேசியபடி வந்தார்கள். உலகையாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டு வந்தார்கள், காரில் உட்கார்ந்தபடியே கிளிமொழி அவர்களிடம், “என்ன அங்கே போலீஸ்?” என்று கேட்டாள், 

“பங்களாவில் சோதனை போட்டு ஏதோ நகையைக் கண்டு பிடித்தார்கள்! அதனால் அந்தப் பங்களாக்காரர் தன்னையே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார்!” என்றான் ஒருவன். 

இதைக் கேட்டதும் அவள் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. உலகையா தன் ஒரே மகளையும் விட்டு விட்டு இறந்தபின், இனி அவள் மட்டும் உயிருடன் இருப்பதா என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்கியது. அவள் ஒன்றும் புரியாதவளாகக் காரைத் திருப்பினாள். எங்கே போகிறோம், என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமலே காரை மிக விரைவாகச் செலுத்தினாள் அவள். 

கார் விரைந்து சென்றது. ஐம்பது, அறுபது, எழுபது ‘கல்’ விரைவில் பறந்தது இப்போது கார்! 

அந்தக் கார் போகும் விரைவைப் பார்ந்தவர்கள் காரில் இருக்கும் பெண்ணுக்குப் பேய் பிடித்துவிட்டதோ என்று வியப்புடன் பார்த்து நின்றார்கள். 

கார் எண்பது கல் விரைவில் சென்றது. நேராகச் சென்று கொண்டிருந்த அவளுக்குத் திடீரென்று திரும்பியதைப் போல் இருந்தது! அவள் காரை அதே விரைவில் திருப்பினாள். 

சர்ரென்று திரும்பிய கார் அப்படியே ஒரு பக்கம் சாய்த்து, சாலையிலிருந்து உருண்டது! பல தடவைகள் உருண்ட அந்தக் கார் குப்பென்று தீப்பிடித்துக் கொண்டது. 

காரினுள் அடிபட்டு விழுந்து கிடந்த கிளிமொழியை தீயின் அச்சம் தரும் நாக்குகள் அணைத்துக் கொண்டு அவளை மெல்லத் தின்றுவிட்டன. 

தீப்பிடித்த கார் அப்படியே எரிந்து கருகிப்போய் விழுந்து கிடந்தது. போலீஸார் அங்கே வந்து சேர்ந்தார்கள். 

அத்தியாயம்-40

போலீஸ் கமிஷனர், தொலைபேசியில் செய்தி வந்ததும், டாக்டர் ஒருவர் வீட்டை நோக்கி விரைந்து சென்றார். 

டாக்டர் வீட்டின் முன் தென்னவன் நிறுத்திச் சென்ற கார் நின்றிருந்தது. டாக்டர் கமிஷனரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று தென்னவனைச் சுட்டிக் காட்டினார். 

”இந்த மனிதன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகச் சொல்லி என்னிடம் வந்தான். துப்பாக்கிக் குண்டை எடுப்பதற்கு முன்பே இறந்து விட்டான்! இவன் பெயர் கூடத் தெரியவில்லை!” என்று சொன்னார் டாக்டர்.

கமிஷனர் அவனைப் பார்த்தார். அவன் பெயர் தென்னவன் என்பது அவருக்குத் தெரியும். வடு உள்ள அவன் முகத்தை அவரால் மறக்க முடியவில்லை! 

“இவன் தன்னால் சுட்டுக் கொண்டிருக்க மாட்டான். இவனைச் சுட்டது எவர் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்!” என்றார் கமிஷனர். 

”இவன் வந்த காரில் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன். காரில் மற்றொரு மனிதன் விழுந்து கிடக்கிறான்! இப்படி வாருங்கள்!” என்று டாக்டர் வெளியே வந்தார். 

போலீஸ் கமிஷனர் டாக்டரைத் தொடர்ந்தார். 

காரின் உள்ளே, இரு சீட்டுக்களுக்கும் இடையில் விழுந்து கிடந்த புலிக்குட்டியைப் பார்த்ததும் கமிஷனர் வியப்புடன் நின்றார்! 

”இவனுக்கு உயிர் இருக்கிறதா பாருங்கள் டாக்டர்!” என்றார் ஆவலுடன் கமிஷனர்! 

“முன்பே பார்த்துவிட்டேன்! அவன் இறந்து விட்டான்!” 

“இவன் பெயர் புலிக்குட்டி! இவனுடன் இவன் மனத்திலிருந்த இரகசியங்களும் இறந்து விட்டன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை மறைத்துவிட்டு, எவரிடமும் சொல்லாமல் இவன் இறந்து விட்டான்! சிறையிலிருந்து இவனைத் தென்னவன் தப்ப வைத்துக் கொண்டு வந்தது உலகையாவுக்குத்தான் இருக்க வேண்டும். உலகையாவை ஒழித்துவிட்டு, எல்லா நகைகளையும் தானே அடைய இந்தத் தென்னவன்தான் எனக்கு முத்து மாலையைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும்!” என்றார் கமிஷனர் மெல்லிய குரலில்! 

“என்ன சொல்லுகிறீர்கள்” என்று ஆவலுடன் கேட்டார் டாக்டர். 

“ஒன்றுமில்லை. எல்லாம் பின்னால் விவரமாகத் தெரியும்” என்று சொல்லிப் புறப்பட்டார் கமிஷனர்! 

பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் எவருக்கும் பயன் இல்லாமல் எங்கேயோ மண்ணில் புதைந்து கிடந்தன! அந்த நகைகளை அடைய வேண்டும் என்று முயற்சி செய்தவர்கள் எல்லாரும் இறந்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன!

நகைகளைப் பறிகொடுத்துவிட்ட மன்னர், அதை மறந்து இனி மேலும் நகைகள் கிடைக்காது, அதன் இரகசியம் புலிக்குட்டியுடன் போய்விட்டது என்று எண்ணி மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். வயதாகி விட்டதால் அவருக்குச் சரியாகக் கண தெரிய வில்லை! 

ஒரு நாள் அந்த மன்னரைத் தேடி எளிய உடையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் வந்தார்கள். 

அவர்களில் ஒருவர் சொன்னார், ”சென்னையிலிருந்து எழுபதாவதுகல் தொலைவில் ஒரு காடு இருக்கிறது. அந்தக் காட்டை அழித்து ஒரு மிகப் பெரிய தொழிற்சாலை கட்டுகிறார்கள் தொழிற்சாலை கட்ட அஸ்திவாரத்துக்குப் பள்ளம் தோண்டியபோது ஒரு பெட்டி நிறைய நகைகள் கிடைத்தன. அவை போலீஸ் கமிஷனா அலுவலகத்தில் இருக்கின்றன. அவை உங்கள் நகைகள் தாம் என்று கமிஷனர் நம்புகிறார். ஆனாலும் நீங்கள் அவற்றைப் பார்த்து உங்களுடையவை தாம் என்பதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்!” 

இதைக் கேட்டதும் மன்னருக்கு வயது குறைந்து விட்டதைப் போன்ற ஓர் உணர்ச்சி ஏற்பட்டது! திடீரென்று அவருக்குக் கண்கள் மிகப் பளிச்சென்று தெரிவதைப் போல தெரிந்தன! 

அவர் மகிழ்ச்சியுடன் எழுந்து அவரகளுடன் நடந்தார்! 

(முற்றியது) 

– கல்கண்டு இதழ்.

– இரும்புக்கை மனிதன் (நாவல்), முதற் பதிப்பு: 1976. மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *