இரும்புக்கை மனிதன்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 1, 2025
பார்வையிட்டோர்: 4,251 
 
 

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

அத்தியாயம்-31

இருட்டிவிட்ட நேரம். தென்னவன் கொஞ்சம் தொலைவில் நின்றபடி உலகையாவின் பங்களாவைப் பார்த்தான். உலகையாவின் பங்களாவில் விளக்குகள் எரியவில்லை. பங்களாவில், இருளில் மூழ்கிக் கிடந்தது. பங்களாவுக்குக் காவலாகப் பணியாளர்கள் எவராவது இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. உலகையாவும் அவர் மகள் கிளிமொழியும் பங்களாவில் இல்லை என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது! 

தென்னவன் ஓட்டைக் கார் வந்திருந்தான். அதைச் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு ஒன்றை ஓட்டி அதன்மீது சாய்ந்து நின்றபடி பங்களாவையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கையில் சிகரெட் ஒன்று புகைந்து கொண்டிருந்தது. மனம் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தது. 

பணியாளர்கள் எவராவது இருந்தால் பங்களாவின் உள்ளே இல்லாவிட்டாலும், வெளியிலே ஒரு விளக்காவது எரியுமே என்று அவன் எண்னினான். 

பணியாளர்கள் வெளியே போயிருந்தால்? எதற்கும் கொஞ்சம் பொறுத்திருப்பது என்று முடிவு கட்டினான். வெளியில் சென்ற பணியாளர்கள் மிகத் தாமதமாக வர வாய்ப்பு இல்லை. 

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. பங்களாவுக்கு எவரும் வரவில்லை. பணியாளர்கள் எவரையும் பங்களாவில் விட்டுச் செல்லவில்லை என்று முடிவு கட்டினான் தென்னவன். அல்சேஷன் நாய்களை அவிழ்த்து விட்டிருந்தால்? அதையும் பார்த்துவிடுவோம் என்று அவன் முடிவு செய்து கையிலிருந்த சிகரெட்டைக் கீழே போட்டுக் காவால் மிதித்துவிட்டு நடந்தான். அவன் நடந்து சென்ற போது கீழேயிருந்த ஒரு சில கற்களைப் பொறுக்கிக் கொண்டான். பங்களாவின் பக்கத்தில் வந்து நின்றான். 

பங்களாவைச் சுற்றிலும் அவன் உயரத்துக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டிருந்தது. அதைக் கடப்பது அவனுக்குக் கடினமான செயல் ஒன்றுமில்லை. சுவரைக் கடந்து அந்தப் பக்கம் குதித்ததும் வேட்டை நாய்கள் அவனை வரவேற்றால் – அதை அவன் கொஞ்சமும் விரும்பவில்லை! ஆகையால் சுற்றுச் சுவருக்குப் பக்கத்தில் நின்று ஒவ்வொரு கல்லாக விட்டெறிந்தான். கற்கள் தோட்டத்தில் வெவ்வேறு திக்கில் போய் விழுந்தன. எப்படிப்பட்ட நாய்கள் இருந்தாலும் கற்கள் விழுந்ததும் குரைக்கத் தொடங்கிவிடும். எல்லாக் கற்களையும் விட்டெறிந்த பின், நாய் எதுவும் இல்லை என்று முடிவுகொண்டு, பின் சுற்றுச் சுவர்மீது அவன் ஏறினான். 

சர்க்கஸ் வேலை செய்பவர்கள் உயரத்தில் எப்படிக் கண்ணிமைக்கும் நேரத்தில் தாவுகிறார்களோ. அதைவிட விரைந்து தென்னவன் சுற்றுச் சுவர்மீது ஏறி மறுபக்கம் குதித்தான். சுவரை மிக எளிதில் கடப்பது என்பது பழக்கப்பட்டவர்களுக்கே முடியும். அதில் இவன் கைதேர்ந்திருந்தான். தோட்டத்தில் குதித்ததும், புலி பாய்வதற்கு முன் பதுங்கிப் பார்ப்பதைப்போல் எல்லாப் பக்கங்களிலும் பார்த்தான். 

பங்களாவிலோ தோட்டத்திலோ எவரும் இலர் என்பது அவனுக்கு மிக உறுதியாகிவிட்டது. நிமிர்ந்து நடந்தான். பங்களாவின் முன்பக்கம் கதவைத் திறந்துகொண்டு போக அவன் விரும்பவில்லை. எப்போதும் அவன் முன் பக்க வழியாகப்போய்ப் பழக்கமில்லை. ஆகையால் கோயிலை வலம் வருகிறவனைப் போல் பங்களாவை ஒரு சுற்றுச் சுற்றினான். பங்களாவின் உள்ளே நுழையப் பக்கவாட்டில் இருந்த சன்னல் ஒன்றைப் பயன்படுத்த முடிவு செய்தான். 

கண்ணாடிச் சன்னல்களைத் திறப்பதில் கைதேர்ந்தவன் தென்னவன். ஓடிக்கொண்டிருக்கும் புகைவண்டியில் கூட, படிக்கட்டில் நின்றபடி உள்ளே தாழிடப்பட்டிருக்கும் கண்ணாடிச் சன்னல்களை எத்தனையோ தடவைகள் திறந்திருக்கிறான்! கைகளால் தட்டித் தட்டி, ஒரு சில வினாடிகளில் அவன் எப்படிப்பட்ட சன்னல்களையும் திறந்துவிடுவான்! இந்தக் கலையைப் பயன்படுத்திச் சன்னலைத் திறந்தான். உள்ளே நுழைந்தான். 

அவன் இறங்கியது ஓர் அறை. அது கிளிமொழியின் அறையாகத்தான் இருக்க வேண்டும். அந்த அறையில் சென்ட், பவுடர், மேக்கப் பொருள்களின் வாசனை மிகுந்து வந்தது! 

தென்னவன் விளக்கைப் போடவில்லை. கால்சட்டைப் பையிலிருந்த மின்பொறி விளக்கை எடுத்து அடித்துப் பார்த்தாள். கிளிமொழியின் உடைகள் அங்கே கண்டபடி கிடந்தன. அவள் அணியும் காலணிகள் வகைவரையான திறங்களில் மிகுந்து கிடந்தன! 

தென்னவன் அந்த அறையைக் கடந்து கூடத்துக்கு எந்தான். விளக்கைப் போட்டால் ஆபத்து என்று மின்பொறி விளக்கை அடித்துப் பார்த்தான். மாடிக்குப் போகும் வழியைக் கண்டுபிடித்து மாடிக்குச் சென்றான். அவள் நேடிய இரும்புப் பெட்டியை எங்கேயும் காண வில்லை, மாடியில் இருந்த ஓர் அறையில் மிகப் பெரிய அளவில் சுவரில் மூன்று படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அந்தப் படங்கள் விலை உயர்த்தவை. கலைக் கண்ணோடு பார்ப்பவர்களுக்கு அவை பல ஆயிரம் ரூபாய் மதிப்பு பெறும். அந்தப் படங்களை ஒவ்வொன்றாகத் தள்ளிப் பார்த்தான். ஒரு படத்தின் பின்னால், சுவரில் இரும்புப் பெட்டி ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. படத்தை அவன் சுழற்றி வைத்துவிட்டு, ஒரு கையால் மின்பொறி விளக்கைப் பிடித்தபடி, ஒரு கையாலேயே அந்த இரும்புப் பெட்டியை விரல்களால் தட்டித் தட்டித் திறந்துவிட்டான்! 

புறாக் கூண்டைப்போல் இருந்த அந்த இரும்புப் பெட்டியில் கட்டுக் கட்டாகப் பணம் இருந்தது. அவற்றின் மேல் ஒரு முத்துமாலை இருந்தது. அந்த முத்துமலையை எடுத்தான். மின்பொறி விளக்கின் வெளிச்சத்தில் அதை நன்றாகப் பார்த்துவிட்டு வைத்தான். பணத்தைக் கையில் எடுத்துப் பார்த்தான். மொத்தம் ஐம்பதினாயிரம் ரூபாய் இருந்தால் மிகுதி. ஆகையால் அவன் பணத்தை அப்படியே வைத்துவிட்டு, முத்துமாலையையும் முன் போலவே வைத்துவிட்டுச் சிறிது நேரம் சிந்தனை செய்தான். 

உலகையாவை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது இப்போது அவனுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது! 

இரும்புப் பெட்டியை மூடிப் பூட்டிவிட்டு, படத்தையும் முன்போலவே மாட்டிவிட்டு, அவன் அந்தப் பங்களாவுக்கு வந்து போனதற்கு அடையாளமாக எதையும் விட்டுச் செல்லாமல், சன்னல் வழியாகவே வெளியே வந்தான். சன்னலையும் பழையபடி முடிவிட்டு, மதில் சுவரைக் கடந்து காரை நோக்கி நடந்தான். 

கார் நிற்குமிடத்தை அடைந்ததும் காரில் ஏறுவதற்கு முன், அவன் திரும்பி ஒரு தடவை உலகையாவின் பங்களாவைப் பார்த்தான். எவரிடமும் இதுவரையில் ஏமாறாத உலகையா, தன்னிடம் ஏமாறப் போகிறார் என்று எண்ணிச் சிரித்தது அவன் மனம். 

அவன் கொஞ்ச நேரத்துக்கு முன் உலகையாவின் இரும்புப் பெட்டியில் பார்த்த முத்துமாலை அவன் மனக்கண் முன் அப்படியே வந்தது. 

அந்த முத்துமாலையைப் பற்றி, கொலையையும் கொள்ளையையும் செய்து பிழைக்கும் கொடியவர்கள் கூட்டத்திற்கு ஏற்கெனவே இரகசியமாகச் செய்தி வந்திருந்தது! 

முல்லைக்கோட்டை ராணியின் முத்துமாலை பம்பாயில் களவு போனதைப் போலீஸார் இரகசியமாகவே தேடி வருவதாகவும், அதைக் கண்டுபிடிக்கப் போவிஸார் மிகத் தீவிரமாக வேலை செய்வதாகவும் கேள்விப்பட்டான்.. இதனால்தான் உலகையா அதை விரைவு கொண்டு விற்காமல் அப்படியே மறைத்து வைத்திருக்கிறார் என்பது தெரிந்துவிட்டது அவனுக்கு! புலிக்குட்டியை மீட்டுக் கொண்டு வந்த பிறகு, எப்படியாவது பேச வைத்து, அவன் மறைத்து வைத்திருக்கும் நகைகளைக் கண்டுபிடித்து அவற்றை இரகசியமாக நல்ல விலைக்கு விற்கும் திறமை உலகையாவுக்கு உண்டு. ஆகையால், புலிக்குட்டியை மீட்ட பிறகு, புதையலைக் கண்டுபிடித்து உலகையா அவற்றை விற்றுப் பணமாக்கியதும் முத்து மாலையைப் பற்றிப் போலிசாருக்குச் செய்தி கொடுத்து விடுவதாகச் சொல்லி அவரை அச்சுறுத்தி, அவரிடம் பாதிப்பணத்தைப் பெற்று விடலாம் என்று திட்டமிட்டான் தென்னவன்! 

அவன் திட்டத்தில் அவனுக்கு நம்பிக்கை மிகுந் திருந்தது! 

அத்தியாயம்-32

எரியின் நடுவில் அமைத்திருந்த தீவில் இருந்த கைதிகள் அனைவரும் புலிக்குட்டியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கையை இழந்துவிட்ட புலிக் குட்டி, இரும்புக் கையை வைத்திருந்த புலிக்குட்டி, எல்லாரது கவனத்தையும் கவர்ந்தான். புலிக்குட்டி, மிகக் கொடியவன், அவன் எப்படிப்பட்டவர்களையும் ஏமாற்றி விடுவான். ஆபத்து மிருந்தவன் என்பது விரைவாகப் பரவியது. அவனை ஏன் இரும்புக்கையுடன் உலவ விட்டிருக்கினார்கள் என்று வியப்புடன் பார்த்தார்கள். புலிக்குட்டி அந்தத் தீவில் மற்றவர்களைப் போலவே கடினமான வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதால் இரும்புக் கையுடன் அவனை உலாவவிட்டிருந்தார்கள். இதை மற்றக் கைதிகள் புரிந்துகொண்ட போதிலும், அவன் இரும்புக் கையுடன் இருப்பது எப்போதும் ஆபத்தானது என்று எண்ணினார்கள். மிருகக் காட்சிசாலையில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் புலியை எல்லாரும் எப்படித் தொலைவில் நின்று பார்ப்பார்களோ அப்படியே அவனை மற்றவர்கள் பார்த்தார்கள். அவனிடம் பேச அஞ்சினார்கள். அவனுக்குப் பக்கத்தில் மற்றவர்கள் வராமல் கொஞ்சம் தள்ளியே நின்றார்கள். 

அந்தத் தீவில் சிறை என்று கம்பி போட்ட அறைகள் எதுவும் இல்லை. கூலிக்காரர்களைப்போல். கைதிகளை நாள் முழுவதும் பள்ளம் தோண்டவும், சாலை போடவும், வீடு கட்டவும். பாறைகளை உடைக்வும் பயன்படுத்தினார்கள். இரவில் எல்லாரும் உறங்க மரப்பலகையினால் ஆன வீடு ஒன்று இருந்தது. அதில் எல்லாரும் படுத்து உறங்க வேண்டும். வீட்டின் கதவுகள் மட்டும் பூட்டப்பட்டு விடும். மீண்டும் விடிந்ததும் திறக்கப்படும். 

மற்றர்கள் புலிக்குட்டியைக் கண்டு அஞ்சியதிலிருந்து, அவன் பக்கத்தில் வரவே தயங்கியதிலிருந்து போலீஸார் அவனைப் பற்றி மிக மட்டமாகக் குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டான். அவன் போலீஸாரிடம் பேச மறுத்துவிட்டதால், அவனைப் பற்றிப் போலீஸார் மட்டமாக எழுதி அனுப்பியதில் தவறு இல்லை என்றே தோன்றியது. அவன் வேலை செய்யும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் தனிமையில்தான் இருந்தான். எவரிடமும் பேச முயற்சி செய்யவில்லை. மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனிப்பதும் இல்லை. 

அன்று இரவு எட்டு மணியாகிவிட்டது. புலிக்குட்டி இரவு உணவை உண்டுவிட்டு மரத்தின் அடியில் நின்றிருந்தான். மற்றக் கைதிகள் கொஞ்சம் தொலையில் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். மணியடித்ததும் அவர்கள் எல்லாரும் வீட்டிற்குள் போக வேண்டும். மணியடிக்க இன்னும் அரைமணி நேரம் இருந்தது! 

புலிக்குட்டி மரத்தின் அடியில் சிந்தனையுடன் நின்றிந்தபோது, மியாவ் மியாவ் என்று பூனை கத்தும் ஓசை கேட்டது! 

பழக்கப்பட்ட குரல்!

மின்மினியின் குரல்! 

அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது! 

அவன் திரும்பிப் பார்த்தான். 

மின்மினி ஒரு மரக் கிளையிலிருந்து தாவிக் குதித்து வந்து அவன் காலடியில் நின்றது. புலிக்குட்டிக்கு மின்மினியைக் கண்டதும் ஒரு பக்கம் மகிழ்ச்சியும் மற்றொரு பக்கம் அச்சமும் பிறந்தன! இந்த மின்மினியை விட அவனுக்கு ஏற்ற நண்பன் இந்தத் தீவில் இல்லை என்று எண்ணிய அவன், அதை அன்புடன் வாரி அணைத்தான். 

மின்மினி இரக்கத்துடன் அவனைப் பார்த்தது! 

சென்னைச் சிறையில் அவனை மின்மினி பார்க்க வந்த போது உலகையைா ஏதோ சதி செய்து அதை அனுப்பி இருக்கிறார் என்று உணர்ந்து கொண்டான் புலிக்குட்டி! இந்த இடத்துக்கும் மின்மினி உலகையாவின் சதித் திட்டத்துடன் தான் வந்திருக்குமோ என்று அவனுக்கு ஐயமாக இருந்தது. அவனால் எசையும் நம்ப முடியவில்லை மின்மினி அவனுடன் பழகி விட்ட காரணத்தால் அவனைத் தேடி வந்திருக்குமோ என்று எண்ணினான். மற்றவர்கள் அவனை ஒதுக்கித் தள்ளியதால் புலிக் குட்டிக்குத் துன்பமாக இருந்தது. அதனால் அவனுக்கு மின்மினியின் நட்பு இப்போது தேவைப்பட்டது! 

புலிக்குட்டியிடம் பூனை ஒன்று பழகியதைப்போல் வந்திருப்பதைக் கண்டதும். மற்றவர்கள் கவனம் அவன் பக்கம் திரும்பியது. எல்லாரும் அவனையும் மின்மினியையும் பார்க்கத் தோடங்கியதும், மின்மினி சீற்றத்துடன் பாய்ந்து அவன் கைகளிலிருந்து விடுபட்டு இருளில் எங்கேயோ சென்றது! மறைந்தது! 

அப்போது அந்தப் பக்கம் சிறைச்சாலைக் காவலாளி ஒருவன் வந்தான். அவனைப் பார்க்கவே அச்சமாக இருந்தது. யானையைப் போல் இருந்தான் அவன், அந்தக் காவலாளியின் கையில் மிஷின் துப்பாக்கி ஒன்று இருந்தது. அங்கேயிருந்து எவராவது தப்ப முயன்றால், முதலில் அந்த மிஷின் துப்பாக்கிக்குத் தப்பியாக வேண்டும் என்று மற்றவர்கள் பேசிக் கொண்டது புலிக்குட்டியின் காதில் எப்போதோ விழுந்திருந்தது. 

அந்தக் காவலாளி புலிக்குட்டியின் முன் வந்து நின்றான். “அந்தப் பூளை இங்கே எப்படி வந்தது? நீ வளர்த்த பூனையா அது?” என்று கடினமான குரலில் கேட்டான். 

”எனக்கு முன்பின் தெரியாத பூனை அது! அது இந்தத் தீவில் இருக்கும் பூனை என்று எண்ணுகிறேன்” என்றான் புலிக்குட்டி. 

“இந்தத் தீவில் இந்த மாதிரி அழகிய பூனை கிடையாது. காட்டுப் பூனைதான் உண்டு. இதைப் பார்த்தால் பழக்கப்பட்ட பூனைபோல் இருக்கிறதே!” என்றான் காவலாளி. 

“இங்க வந்த பிறகு உன் முகம்கூடத்தான் எனக்குப் பழக்கமாகிவிட்டது!” என்றான் புலிக்குட்டி. 

இதைக் கேட்டதும் அவன் புலிக்குட்டியின் முகத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான். 

“அந்தப் பூனை மீண்டும் இங்கே வந்தால் சுட்டுக் தள்ளிவிடுவேன்! இது என்ன பூனை வளர்க்கும் இடமா?” என்று சொல்லிவிட்டு அவன் நகர்ந்தான். 

புவிக்குட்டிக்கு முகம் தெறித்து விடுவதைப் போல் இருந்தது! 

அவன் அங்கே வந்து ஒரு சில நாட்கள்தான் ஆகி யிருந்தன. பல ஆண்டுகளை அவன் எப்படி அங்கே கழிக்க முடியும் என்பது பற்றிச் சிந்தித்தான். ஆகையால், அந்தத் தீவிலிருந்து தப்பிப் போய்விட்டால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது. அதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. 

புலிக்குட்டி தண்டனை முடிந்து சிறையிலிருந்து விடுதலை பெற்றால், உலகையா மட்டுமல்ல, போலீஸார் மட்டுமல்ல, நகைகளைப் பறிகொடுத்த மன்னர் கூட எவராவது ஆள்களை வைத்து அவன் புதைத்து வைத்திருக்கும் புதையலைக் கண்டுபிடிக்க அவனைத் தொடர்ந்து வருவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஆகையால் எவரும் எதிர்பாராத இந்த நேரத்தில், முடிந்தால் தப்பிப்போவது மிக ஏற்றது என்று அவனுக்குத் தோன்றியது. அதற்கான வாய்ப்பு அவனுக்கு அவ்வளவு விரைவில் வரும் என்று அவனுக்குத் தெரியாது! பொழுது விடிவதற்குள்ளேயே அந்த வாய்ப்பு வந்தது. 

அத்தியாயம்-33

விடியும் நேரம். இரவெல்லாம் விழித்துக் கொண்டிருந்த காவலாளிகள் விடியும் நேரத்தில் உட்கார்ந்தபடியே மரங்களின் அடியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 

சிறை வீட்டின் கதவுகள் பூட்டியிருந்தன. சிறை வீட்டின் சன்னல்களுக்கு வெளியே தாழ்ப்பாள் இருந்தது. வெளியிலிருந்து தாழ்ப்பாளைத் திறந்ததும், சன்னல் திறந்து கொள்ளும். சன்னல்களுக்குக் கம்பிகள் இல்லை! 

சன்னல் ஓரமாகச் சென்று, மின்மினி தாழ்ப்பாளைக் காலால் தள்ளித் திறந்தது. பிறகு, தலையால் தள்ளிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றது. அது, புலிக்குட்டியின் கட்டிலுக்குப் பக்கத்தில் சென்று- 

மெல்லக் கத்தியது. அதன் குரலைக் கேட்டதும் விழித்துக் கொண்டான் புலிக்குட்டி! 

மின்மினி உடனே சன்னல் பக்கமாக ஓடியது. திரும்பிப் பார்த்தது. 

புலிக்குட்டி புரிந்துகொண்டான். அவன் எழுந்து பார்த்தான். எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கைதிகள் எழுந்திருக்க மணியடிக்கும் நேரம் இன்னும் வரவில்லை. மணியடித்ததும்தான் எல்லாரும் எழுந்து கொள்வார்கள். அதற்குள் மின்மினியின் திட்டம் என்ன தான் என்று பார்த்துவிட அவன் முடிவு மிகக் கொண்டான். 

மின்மினியைத் தொடர்ந்து அவன் சன்னல் வழியாகக் குதித்து ஓடினாள்! அது மிக விரைவாக ஓடியது! அவனும் விரைவாக ஓடினான்! 

காடுபோன்ற பகுதியில் மின்மிளியைத் தொடர்ந்து அவன் ஓடிக் கொண்டேயிருந்தாள். தீவின் கரையை அடைந்ததும் மின்மினி ஒரு மரத்தின் மீது ஏறியது. பிறகு அந்த மரத்திலிருந்து மற்றொரு மரத்துக்குத் தாவியது. இரண்டாவது மரத்தை அடைந்ததும் அது திரும்பிப் பார்த்தது. 

மின்மினி தன்னைத் தொடர்ந்து வரும்படி சொல்லுகிறது என்பதைப் புரித்துகொண்ட புலிக்குட்டி. முதலில் தயங்கினான். பிறகு மின்மினி ஏறிய முதல் மரத்தில் ஏறினான். இரண்டாவது மரத்துக்கு அவன் தாவியபோது, அவன் பிடித்திருந்த கிளை அச்சம் தரும் வகையில் ஆடியது! மின்மினி அவனைப் பார்த்தபடி மற்றொரு கிளைக்குத் தாவியது! அப்போது- 

மின்மினி தவறித் தண்ணீரில் பொத்தென்று விழுந்தது! தண்ணீரில் பூனை விழுத்ததும் அது அலறியது! மின்மினி இவ்வளவு அச்சம் தகும்படி எப்போதும் அலறியதில்லை! 

புலிக்குட்டி, மரத்தின் மீதிருந்து பார்த்தான். தண்ணீரில் விழுந்த பூனையை நோக்கி ஒரு முதலை வாயைப் பிளந்துகொண்டு வந்தது! 

மறுகணம்- 

பூனை அந்த முதலையின் வாயில் சிக்கியது! முதலை மூழ்கியது! முதலை மூழ்கிய அந்த இடத்தில் சிவப்பான இரத்தம் தண்ணீரில் மிதந்தது! 

அத்தியாயம்-34

மின்மினி, முதலைக்கு இரையாகிவிட்டதைக் கண்களால் பார்த்த புலிக்குட்டிக்கு அதிர்ச்சி மிக ஏற்பட்டது. தன்னைத் தப்பவைக்க வந்த மின்மினிக்கு இப்படி ஒரு முடிவு இவ்வளவு விரைவில் ஏற்படும் என்று அவன் எண்ணவே இல்லை! பேயறைந்தவன் போல் அப்படியே அவன் மரத்தின் மீது உட்கார்ந்துவிட்டான்! 

அப்போது சிறைக் காவலர்கள் விசில் அடித்தபடி ஓடி வரும் ஓசை கேட்டது. புலிக்குட்டி திரும்பிப் பார்த்தான். 

காவலர்கள் படை ஒன்று அவன் இருந்த இடத்தை நோக்கி ஓடி வந்தது. அவர்களில் ஒருவன் துப்பாக்கியால் புலிக்குட்டி உட்கார்ந்திருந்த மரத்தின் அடிப்பகுதியில் பல தடவைகள் சுட்டான். துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டுகள் மரத்தின் அடிப்பகுதியைத் துளைத்துக் கொண்டு புகுந்தன. 

புலிக்குட்டி அஞ்சவில்லை. ஆடவில்லை. இப்படி அப்படி அசையவில்லை! 

புலிக்குட்டியின் கண்கள் இப்போது தண்ணீரில் மிதந்த இரத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன! 

காவலர்களின் தலைவள். நடந்ததையெல்லாம் புரிந்துகொண்டு கரையில் இருந்தபடியே- 

“பூனைக்கு ஏற்பட்ட முடிவு உனக்கும் ஏற்படும்! நீ இங்கிருந்து தப்பித்துப் போவது தற்கொலை செய்து கொள்வதற்கு ஈடாகும்! பேசாமல் திரும்பி வா!” என்றான் காவலர்களின் தலைவன்! 

புலிக்குட்டி எதுவும் பேசாமல் இன்னும் அப்படியே அசையாமல் உட்கார்ந்திருந்தான். 

“புலிக்குட்டி! திரும்பி நீ கரைக்கு வரப்போகிறாயா, இல்லையா? இன்னும் இரண்டு நிமிடங்களில் நீ திரும்பி வராவிட்டால் உன்னைச் சுட்டுவிடுவோம்!” என்று அச்சுறுத்தினான் காவலர்களின் தலைவன். 

புலிக்குட்டி ஒரு நிமிடம்வரையில் பேசாமல் உட்கார்ந்திருந்தான். பிறகு திரும்பிக் கரைக்கு வர முடிவு செய்தவனைப் போல், மரத்தின் மீது சென்ற வழியே தாவித் தாவி கரையிலிருந்த மரத்திற்கு வந்தான். பிறகு, கீழே இறங்கினான். 

காவலர்கள் அவனை அப்படியே சுற்றிக் கொண்டார்கள். 

காவலர்களின் தலைவன் புலிக்குட்டியின் பக்கத்தில் வந்து. “உன்னைச் சுட்டுக் கொல்ல நீண்ட நேரம் பிடிக்காது! தப்பிப் போகிறவர்களைச் சுட்டுக் கொல்ல எங்களுக்கு அனுமதி உண்டு. உன்னை உயிருடன் பிடித்து வைத்து நீ துன்பப்படுவதைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இங்கே உள்ள மற்றக் கைதிகளுக்கு அது பாடமாக அமையும்!” என்று சொல்லி அவனை இழுத்துச் செல்லும்படி காவலர்களுக்குக் கட்டளையிட்டான்! 

காவலர்கள் அவனை வெறிநாய் ஒன்றை அடித்து விரட்டுவதைப்போல் அடித்து விரட்டிக் கொண்டு சென்றார்கள். 

திரும்பி உயிருடன் வந்ததைவிட, மின்மினியுடன் தானும் அந்த முதலைக்குப் பலியாகியிருக்கலாம் என்று எண்ணியது அவன் மனம். 

அத்தியாயம்-35

மின்மினி குறிப்பிட்ட நேரத்தில் திரும்பி வரவில்லை என்பதை உணர்ந்ததும் உலகையாவுக்கும் கிளிமொழிக்கும் பெரிதும் ஏமாற்றமாகப் போய்விட்டது. மின்மினிக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டிருக்கும் என்று ஊகம் செய்தார் உலகையா. அவர் ஊகத்தை உறுதி செய்வதைப் போல், புலிக்குட்டி தப்ப முயன்றதும், அவனுடன் பழகிய பூனை ஒன்று முதலைக்கு இரையாகிவிட்டதும் பத்திரிகையில் செய்தியாக வத்திருந்தது. பூனையின் பெயர் வர வில்லை, ஏதோ ஒரு காட்டுப் பூனை என்று சிறை அதிகாரிகள் செய்தி கொடுத்திருந்தார்கள். 

மின்மினி, முதலைக்கு இரையாகிவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டதும், உலகையாவும் கிளிமொழியும் கண்ணீர் விட்டார்கள். உறவினர்கள் எவராவது இறந்து விட்டிருந்தால்கூட அவர்கள் அவ்வளவு துன்பப்பட்டிருக்க மாட்டார்கள். அப்படித் துன்பம் கொண்டார்கள் அவர்கள் இருவரும். 

”அப்பா! மின்மினியைப் போன்ற பூனையை மீண்டும் நாம் எங்குத் தேடினாலும் கிடைக்காது. இல்லையா?” என்றாள். 

”ஆமாம். என்ன செய்வது! எல்லாரும் ஒரு நாளைக்கு இறக்க வேண்டியதுதானே! நாம் இனிமேல் இதற்குக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதில் பயனில்லை. அடுத்த படியாக நடக்க வேண்டியதைக் கவனிப்போம்.” 

“உங்கள் முறை எனக்குப் பிடிக்கவில்லை! எல்லாரும் ஒரு நாளைக்கு இறக்க வேண்டியதுதான் என்பதால், தொடர்ந்து தவறுகள் செய்வதா? இந்த மின்மினியை எனக்காக நீங்கள் ஐப்பானுக்குப் போய்த் திரும்பும்போது வாங்கி வந்தீர்கள். அந்தப பூனை மிகவும் அறிவுள்ளதாக இருந்தால், அதைத் தீய வழியில் நீங்கள் பழக்கி விட்டீர்கள்! பூனையை மட்டுமா கொடிய வழியில் திருப்பினீர்கள்? என்னையும் அல்லவா கொடிய வழியில் திருப்பிவிட்டீர்கள்! இப்போதுதான் நம் தவறுகள் தெரிகின்றன. ஒரே மகளான எனக்கு நீங்கள் அன்புவாழ்வு அளிப்பதற்குப் பதில் ஆபத்தான வாழ்வை அல்லவா விலைக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறீர்கள்!” என்றாள் கிளிமொழி, 

இதுவரையில் கிளிமொழி இப்படிப் பேசியதே இல்லை! அவள் இப்படிப் பேசுவது இதுதான் முதல் முறை! 

கிளிமொழிமீது உலகையா அளவு கடந்த அன்பு கொண்டிருந்ததால், அவர் சொன்னபடியெல்லாம் அவள் செய்து வந்தாள். குறுக்கு வழியில் பெரும் பணம் சேர்த்துக் கொண்டு இந்தக் கொடிய தொழிலிருந்து விலகிவிட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல கணவனாகத தேர்ந்தெடுத்து மணம் செய்துவைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தார் உலகையா. அவருடைய திட்டங்கள் எல்லாமே வெற்றி கரமாக நடந்து வந்தன. புலிக்குட்டி மறைத்து வைத்திருக் கும் புதையலைக் கண்டுபிடித்ததும் அவர் வாழ்க்கையில் அமைதியுடன் இருந்து விடலாம் என்று எண்ணினார். எல்லாம் வாய்ப்புடன் நடந்து பந்தன. மின்மினி இறந்ததும் கிளிமொழி இப்படி மாறுவாள் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! 

“இதோ பார் கிளிமொழி, இப்போது என்ள மூழ்கிப் போய்விட்டது! மின்மினி எப்படியும் இறக்க வேண்டிய ஒன்றுதானே! நம் இரகசியங்களைத் தெரிந்து வைத்திருந்த அது, நீண்ட நாள் உயிருடன் இருப்பது நமக்கு ஆபத்துதானே!” என்றார் உலகையா. 

“அப்படியானால் உங்கள் இரகசியங்களைத் தெரிந்து வைத்திருக்கும் என்னையும் நீண்ட நாளைக்கு வாழவிடாதீர்கள்! கொன்று விடுங்கள்!” என்று கத்தினாள் கிளிமொழி. 

”உனக்கு என்ன வெறி பிடித்துவிட்டதா! எனக்கென்ன, எனக்கு வயதாகிவிட்டது. உன் எதிர்கால வாழ்க்கைக்குத்தானே நான் இவ்வளவையும் செய்கிறேன்!” என்றார் உலகையா. 

”பொய்! எனக்காக நீங்கள் இந்தத் தொழிலில் இறங்களில்லை! மது அருந்துபவனுக்கு அது கொடிய பழக்கம் என்பது தெரிந்தாலும் மதுவை அவனால் விட முடிவதில்லை. சீட்டாடுபவனால் சீட்டாட்டத்தை விட முடிவதில்லை. குதிரைப் பத்தயத்தில் பணம் கட்டுபவனால் குதிரைப் பந்தயத்துக்குப் போவதை நிறுத்த முடிவ தில்லை. இதைப்போல, சிறிய வயதிலிருந்தே கொடிய தொழிலில் இறங்கிவிட்ட உங்களுக்கு இந்தத் தொழிலை விட முடியவில்லை!” என்று மிகச் சீறினாள் கிளிமொழி! 

உலகையா கொஞ்ச நேரம் பேசவில்லை. 

“இப்போது அதைப்பற்றி பேசிப் பயன் என்ன? வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது! தென்னவனுடன் தொடர்பு கொண்டு, மிக விரைவில் புலிக்குட்டியைக் கடத்தி வரும்படி மீண்டும் சொல்லுகிறேன். இப்போது நாம் அரைகுறையாக எதையும் வீட்டுவிட முடியாது” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசி இருக்கும் இடத்தை நோக்கி அவர் நடந்தார். 

தொலைபேசியில் அவர் தென்னவனுடன் தொடர்பு கொண்டு,ஏற்பாடுகள் எப்படி நடந்து வருகினறன என்று கேட்டார். தென்ளவன் சொன்னான். “எல்லாம் திட்டப்படி விரைவாக நடந்து வருகின்றன. உங்கள் திட்டத்தில் ஒன்றும் மாறுதல் இல்லையே?” 

“இல்லை. ஆனால் இந்த வேலையை நாள் கடத்தக் கூடாறு இன்னும் இரண்டு நாள்களுக்குள் எனக்கு முடிவு வேண்டும். காலம் தாழ்த்துவது ஆபத்து!” 

“புரிகிறது. நீங்கள் துன்பம் கொள்ளவேண்டாம். இது வரையில் நான எடுத்துக்கொண்ட செயலில் தோல்வி அடைந்ததில்லை! இப்போதும் தோல்வி அடையப் போவதில்லை!” என்றான் தென்னவன். 

“மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்தார் உலகையா. 

– தொடரும்…

– கல்கண்டு இதழ்.

– இரும்புக்கை மனிதன் (நாவல்), முதற் பதிப்பு: 1976. மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *