இரும்புக்கை மனிதன்





(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10 | அத்தியாயம் 11-15
அத்தியாயம்-6

மறு நாள் உலகையா தன்னுடைய காரில் புலிக் குட்டியை அனுப்பி வைத்து, அவனுக்கு இரும்புக் கையைப் பொருத்தி வைக்க ஏற்பாடு செய்தார். கையைப் பெற்ற புலிக்குட்டிக்கு அதைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றுக் கொள்ள ஒரு வாரம் பிடித்தது. முதலில் அந்தக் கையினால் பொருள்களை எடுக்கவோ, சட்டையை மாட்டவோ, தீப்பெட்டியை எடுத்துத் தீக்குச்சியைப் பற்ற வைக்கவோ கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. பழகப் பழக அப்புறம் எல்லாம் அவனுக்கு இயற்கையாக வந்துவிட்டது!
கார் ஓட்டக் கற்றுக் கொண்டான் புலிக்குட்டி, எல்லாப் பயிற்சிகளும் முடிந்ததும், அவனுக்குப் பொருத்தமான உடைகளைத் தைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்தார் உலகையா, அவன் இப்போது பணக்கார வீட்டிலேயே பிறந்து வளர்ந்தவனைப்போல் மிக மிடுக்காக, எடுப்பாகக் காணப்பட்டான்.
அவனுக்குக் கை ஒன்று இல்லை. இப்போது இருப்பது செயற்கைக் கை என்று முதலில் பார்த்ததும் எவருக்கும் தெரியாது.
ஒரு நாள் அவன் தோட்டத்தில் மின்மினியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் பூனையுடன் விளையாடிக் கொண்டிருப்பதை மாடியிலிருந்து உலகையா பார்த்துக் கொண்டிருந்தார்.
புலிக்குட்டி தன்னுடைய சட்டைப் பையிலிருந்த சிகரெட் பெட்டியை எடுத்தான். பிறகு தீப்பெட்டியை எடுத்தான். சிகரெட் பெட்டியிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு, தீப்பெட்டியிலிருந்து ஒரு தீக்குச்சியை எடுத்துச் சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
பூனை அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.
புலிக்குட்டி, சிகரெட் பெட்டியைப் பூனையிடம் காட்டி விட்டு ஓடிப்போய்ச் செடியின் மறைவில் பதுங்கி உட்கார்ந்து, அந்தத் தீப்பெட்டியை எங்கேயோ ஒளித்து வைத்துவிட்டு வந்தான்.
“மின்மினி, சிகரெட் பெட்டியைக் கொண்டு வா பார்க்கலாம்” என்றான்.
மின்மினி இங்கும் அங்கும் ஓடியது. கொஞ்சநேரத்தில் அது, சிகரெட் பெட்டியைக் கௌவிக் கொண்டு வந்தது!
அவன் அதை வாங்கிக் கொண்டு பூனையைத் தடவிக் கொடுத்தான். அப்போது பணியாள் ஒருவன் வந்து, புலிக்குட்டியிடம் “ஐயா உங்களை மாடிக்கு வரச் சொன்னார்” என்று சொன்னான்.
“இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு விரைந்து சென்றான் புலிக்குட்டி.
மாடியில் சிரித்தபடி அவனை வரவேற்ற உலகையா, “உனக்கு இப்போது இரும்புக் கை மிகவும் வாய்ப்புடன் அமைந்துவிட்டது. இனி உன்னைச் சோம்பலுடன் இருக்க விட எனக்கு மனமில்லை. முதலில் நீ இங்கிருந்து வேறு இடத்துக்குப் போய் வாழ வேண்டும். வேண்டும் போதெல்லாம் எனக்குச் செய்தி அனுப்பினால் பணம் அனுப்புகிறேன்” என்றார்.
”மிக்க மகிழ்ச்சி” என்றான் புலிக்குட்டி.
“புது வீட்டில் உனக்கு எந்தக் குறையும் இருக்காது. சமையல்காரன் ஒருவன் இருப்பான். வீட்டில் தொலைபேசி, ரேடியோ, கார் ஆகிய எல்லா வசதிகளும் இருக்கும். அந்த வீட்டை உனக்குக் கிளிமொழி காட்டி விட்டு வருவாள்.”
“என்னை வாழவைக்க எண்ணும் உங்களை நான் மறக்க மாட்டேன்.”
“இன்னும் அரை மணி நேரத்தில் இங்கிருந்து நீ புறப்பட வேண்டும். மீண்டும் நான் உன்னை அழைத்தால் தான் இங்கு நீ வரவேண்டும். நீயாக வந்து என்னைப் பார்க்கக்கூடாது.”
“ஆகட்டும்” என்று சொல்லிவிட்டுப் பெட்டியில் துணிகளை அடுக்கி வைக்கப் போனான் புலிக்குட்டி.
அரை மணி நேரத்தில் அவனைக் கிளிமொழி காரில் அழைத்துச் சென்று, அங்கிருந்து ஒரு கல் தொலைவில் இருந்த புதிய வீட்டில் இறக்கிவிட்டு வந்துவிட்டாள்.
அந்த வீட்டில் அவனுக்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தன. படிப்பதற்கு ஒரு தனி அறை இருந்தது. அதில் ஏகப்பட்ட புத்தகங்கள் இருந்தன. இவையெல்லாம் உண்மையில் நடப்பவைதானா என்று அல்லது கனவா எண்ணியபடி அந்த வீட்டைப் பல தடவை சுற்றிச் சுற்றி அவன் வந்தான்.
வீட்டுப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்த காரேஜில் புதிய கார் ஒன்று இருந்தது. அதை அவன் எடுத்து ஓட்டிப் பார்த்தான். மாலை நேரம். காற்று சுகமாக வந்து கொண்டிருந்தது. காரில் அவன் சிந்தனையுடன் நீண்ட தொலைவு போய்விட்டான்.
கடற்கரை ஓரமாக அவன் காரை மெல்லச் செலுத்திய போது, காரில் பொருத்தப்பட்டிருந்த தொலைபேசியின் மணி அடித்தது. ரேடியோ தொலைபேசி ஒன்றை உலகையா அதில் பொருத்தி வைத்திருப்பதை அப்போது தான் உணர்ந்தான் அவன்! தொலைபேசியை எடுத்தான்.
உலகையா பேசினார்: “புலிக்குட்டி. உனக்குப் பொழுது போகாமல் எங்கேயோ நீ சுற்றிக்கொண்டிருக்கிறாய், உண்மையிலேயே உனக்கு வேலை வந்துவிட்டது. நீ இருக்கும் இடத்திலேயே காரில் இரு. இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளிமொழி உன் காரை நோக்கி வருவாள். அவள் தெளிவாக உன்னிடம் நீ செய்ய வேண்டிய செயலைப் பற்றிச் சொல்லுவாள்” என்றார்.
அவன் இருக்குமிடம் எப்படி உலகையாவுக்கோ கிளிமொழிக்கோ தெரியும் என்று அவன் வியந்தபடி காரின் விளக்குகளை அணைத்துவிட்டு உட்கார்ந்திருந்தான்.
கொஞ்ச நேரத்தில் கிளிமொழியின் கார் ஓசையின்றி வந்து அவன் காருக்குப் பின்னால் நின்றது அதிலிருந்து கைப்பெட்டியுடன் இறங்கிய அவள், காரில் இருந்த பூனையைப் பார்த்து, “மின்மினி, ஓடிப்போய் அந்தக் காரில் ஏறிக்கொள்” என்று சொன்னாள்.
மின்மினி ஓடிப்போய்ப் புலிக்குட்டியின் காரில் ஏறியது. பெட்டியை அவன் காரில் வைத்த கிளிமொழி பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தாள்.
“பெட்டியில் என்ன?” என்றான் அவன்.
“கேள்விகளைக் கேட்காதே. நான் சொல்லுவனவற்றை மட்டும் கவளமாகக் கேட்டுக்கொள். நீண்ட நேரம் பேச எனக்கு நேரமில்லை” என்று சொல்லிவிட்டு, மெல்லிய குரலில் அவள் பேசினாள்.
அவள் பேசியதை மின்மினியும் கேட்பதைப்போல் காதுகளை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தது!
அத்தியாயம்-7
புலிக்குட்டியிடம் சொல்ல வேண்டியதை விளக்கமாகச் சொல்லி முடித்துவிட்டு, உடனே புறப்பட்டுவிட்டாள் கிளிமொழி. அவள் கார் மறையும் வரையில் அப்படியே பேசாமல் உட்கார்ந்திருந்தான் புலிக்குட்டி. பிறகு அவன் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மின்மினியைத் தடவிக் கொடுத்தான். அவளுடன் வந்து அவன் காரில் ஏறிக் கொண்ட மின்மினி, மீண்டும் அவளுடன் திரும்பிச் செல்லவில்லை!
“மின்மினி உனக்கும் எனக்கும் நிறைய வேலைகள் இருக்கின்றன. இதைத் தெரிந்து வைத்துக்கொண்டு தானே என் காரில் வத்து உட்கார்ந்துவிட்டாய்! உன்னைக் கிளிமொழி மிக நன்றாகப் பழக்கி வைத்திருக்கிறாள். புறப்படலாம்” என்றான் புலிக்குட்டி.
அவனுக்கு எவரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது. ஆகையால் பூனையிடம் பேசினான். பூனைக்குத் திருப்பிப் பேச வரவில்லையே தவிர, அவன் பேசிய ஒவ்வொரு சொல்லையும் அது புரிந்து கொண்டதைப் போல் மியாவ் மியாவ் என்று கத்தியது! புலிக்குட்டி, காரைச் செலுத்தினான்.
மின்மினி புலிக்குட்டியின் பக்கத்தில் உயரமாக அவள் கழுத்துக்குப் பக்கத்தில் சீட்டின் மேல் பக்கம் உட்கார்ந்துகொண்டு சாலையைப் பார்த்தது. புலிக்குட்டி இயற்கைக் கையாலும் இரும்புக் கையாலும் காரை ஒட்டும் திறமையையும், கார் விரைந்து செல்லும்போது சாலை ஓரத்தில் உள்ள விளக்குகள் சாரை சாரையாக நகர்வதைப்போல் தோன்றிய காட்சியையும் பார்த்துச் சுவைப்பதைப் போலிருந்தது.
திருவல்லிக்கேணியைக் கடந்தபோது புலிக்குட்டிக்குப் பழைய நினைவுகள் வந்தன. எப்படி அவன் முதன் முதலில் மின்மினியைக் கண்டான். உலகையாவின் வலையில் போய்ச் சிக்கினான் என்பதை நினைவுபடுத்திப் பார்த்தான். திருவல்லிக்கேணி ஓட்டல் ஒன்றிலிருந்து அவன் மின்மினியுடன் புறப்பட்டபோது, மீண்டும் அந்த ஓட்டலுக்குத் திரும்பி வந்துவிட அவன் எண்ணினான். ஆனால் அவன் விதி வேறு மாதிரியாகிவிட்டது. திரும்பி அந்த ஓட்டல் அறைக்குப் போகவே இல்லை! பூட்டிக் கிடந்த அந்த ஓட்டல் அறையை ஓட்டல்காரர் போலீஸார் உதவியுடன் திறந்திருப்பாரா என்று எண்ணிச் சிந்தித்தது அவன் மனம்!
கார், வீட்டை அடைந்ததும், புலிக்குட்டி தன் கைப் பெட்டியுடன் பங்களாவுக்குள் சென்றான். மின்மினியும் அவனுடன் சென்றது.
கொஞ்ச நேரத்தில் அவன் கைப்பெட்டியுடன் புறப்பட்டான். தொலைபேசியில் அவன் வாடகைக் கார் வேண்டுமென்று வாடகைக் கார் கம்பெனிக்குச் செய்தி அனுப்பியதால், குறிப்பிட்ட நேரத்தில் வாடகைக் கார் ஒன்று வந்து நின்றது.
அவன் வாடகைக் காரில் ஏறியபோது, மின்மினியும் அவனுடன் வாடகைக் காரில் ஏறிச் சென்றது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை அவன் அடைந்தான். பம்பாய்க்குச் செல்லும் விமானம் ஒன்று புறப்பட முன்னேற்பாட்டுடன் இருந்தது.
அதில் அவன் ஏறியபோது விமானப் பணிப்பெண் வந்து மிகப் பணிவுடன், “ஐயா அந்தப் பூனையையும் பம்பாய்க்கு அழைத்துப் போகிறீர்களா?” என்றாள்.
”ஆமாம். இதற்கும் சேர்த்து டிக்கெட் வாங்கியிருக்கிறேன்,”
“பூனையை விமானத்தில் தனியிடத்தில் ஒரு கூண்டில் அடைத்து வைக்க வேண்டும். வழியில் இது மற்றவர்கள் மீது விழுந்து பிறாண்டினால் என்ன செய்வது?” என்றாள் பணிப்பெண் கொஞ்சம் அடக்கத்துடன்.
“இது எவருக்கும் தொல்லை கொடுக்காது. இது என் மடியிலேயே உட்கார்ந்திருக்கட்டும். நீ அமைதியுடன் இரு”.
அவள் சிரித்துக்கொண்டே, “அது உங்கள் பொறுப்பு! வழியில் பூனை ஏதாவது தொல்லை கொடுத்தால் அதைக் கூண்டில் அடைத்து விடுவோம்” என்றாள்.
விமானம் புறப்பட்டது.
பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்கள் சிலரும், தொழில திபர்களும், மாணவர்களும், அரச குடும்பத்தைச் சேர்ந்த சில பெண்களும் அந்த விமானத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
புலிக்குட்டியின் மடியில் மின்மினி உட்கார்ந்திருந்தது. அதன் பார்வை ஒரு பக்கமாகவே பதிந்திருந்தது. மின்மினியின் பார்வை யார் மீது பதிந்திருக்கிறது என்று பார்த்தான் புலிக்குட்டி.
பக்கத்து வரிசையில் எதிர்ப்பக்கம் கொஞ்சம் தள்ளி தடுத்தர வயதுள்ள ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் ஒரு சினிமா நடிகையின் தாயாக இருக்க வேண்டும். அல்லது பணக்காரத் தொழிலதிபரின் மனைவியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அரச குடும்பத்தைச் சேர்த்தவளாக இருக்க வேண்டும் என்று எண்ணியது புலிக் குட்டியின் மனம்.
அந்தப் பெண் அழகாக இருந்தாள். அவள் கழுத்தில் இருந்த நகைகள் கண்களைப் பறித்தன. விலை உயர்ந்த முத்துக்களால் ஆன அரிய மாலை ஒன்றை அணிந்திருந்தாள் அவள். பல ஆயிரம் ரூபாய் பெறும் மாலை அது. அது எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் அல்ல.
பூனை அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து மெல்லச் சிரித்த புலிக்குட்டி அதைத் தடவிக் கொடுத்தான். பளபளக்கும் கவர்ச்சி மிகுந்த எந்தப் பொருளையும் பூனை மிக எளிதில் கண்டுபிடித்து அதே கவனமாக இருக்கிறது என்ற எண்ணம் அவன் மனத்தில் மிக வட்டமிட்டது.
”உன்னால் முடிந்ததைப் பார்” என்று மின்மினியைத் தடவிக் கொடுத்து அதன் காதில் மட்டும் விழும்படி மெல்லச் சொன்னான். உடனே மின்மினி அவன் மடியிலிருந்து தாவிக் குதித்து ஓடிப்போய் அந்தப் பெண்ணின் காலடியில் உட்கார்ந்தது.
பூனையைக் கவனிக்காமல் ஏதோ பத்திரிகையைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். அது மெல்லத் தனது பாதங்களால் அந்தப் பெண்ணின் கால்களை வருடியது.
கொஞ்சம் அச்சத்துடன் குனிந்து பார்த்த அந்தப் பெண், அழகிய அந்தப் பூனையைக் கண்டதும் மெல்லச் சிரித்தாள்.
”நீயா, என்னவோ என்று அஞ்சி நான் நடுங்கி விட்டேன்!” என்றாள்.
”மியாவ்” என்று மெல்லக் கத்தியது பூனை!
அதன் பார்வையிலிருந்து அது தன்னைத் தூக்கும்படி வேண்டுகிறது என்று உணர்ந்த அந்தப் பெண் அதைத் தன் இரு கைகளாலும் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள். பழக்கப்பட்ட குழந்தையைப்போல் அது அமைதியுடன் அவள் மடியில் உட்கார்ந்துவிட்டது!
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விமானப் பணிப்பெண் விரைந்து வந்து புலிக்குட்டியின் பக்கத்தில் நின்றாள். அவன் எதையும் கவனிக்காதவனைப்போல் பத்திரிகை ஒன்றை எடுத்து அதை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
பணிப்பெண் அவனிடம் சொன்னாள்: ”பார்த்தீர்களா? நான் அப்போதே சொல்லவில்லை? உங்களது பூனை அந்த அம்மாளுக்குத் தொல்லை கொடுக்கப் போய்விட்டது!”
வியப்புடன் மின்மினியைப் பார்த்தான் புலிக்குட்டி. பிறகு, பணிப்பெண்ணிடம் சொன்னான்: “உயர்ந்த இனப் பூனை அது. பணக்காரர்களிடமே வாழ்ந்தது. ஆகையால் அது பணக்காரப் பெண்ணாகப் பார்த்து நட்பு கொண்டது! அது தொல்லை எதுவும் கொடுக்காது! அது அமைதியாகத்தானே உட்கார்ந்திருக்கிறது?”
பணிப்பெண் அவனிடம் மேலே பேசவில்லை. அந்தப் பணக்காரப் பெண்ணின் பக்கத்தில் சென்று, ”பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பூனையை அப்போதே அடைத்து வைத்திருக்க வேண்டும். இப்போதாவது இதைக் கூண்டில் அடைத்து வைத்துவிடுகிறேன். நாய்களுக்கும் பூனைகளுக்கும் விமானத்தில் தனியாகக் கூண்டுகள் உள்ளன” என்று சொல்லிவிட்டுப் பூனையைத் தூக்கச் சென்றாள்.
அவள் சொன்னதைப் புரிந்து கொண்ட மின்மினி சினத்துடன் பார்த்தது. அதன் கண்கள் அச்சம் தரும் வகையில் மாறின. கால்களில் உள்ள கூரிய நகங்கள் கத்திகளைப் போல் நீண்டன. அது பணிப்பெண்ணைப் பார்ததுப் பாய்வதைப் போல் சீறியது!
“இது என்னிடமே இருக்கட்டும். இது எவரையும் எதுவும் செய்யாது. நீ போய்விடு” என்றாள் அந்தப் பணக்காரப் பெண்.
பணிப்பெண் அச்சத்துடன் நகர்ந்துவிட்டாள். அவள் போனதும், மின்மினி அடக்கத்துடன் உட்கார்ந்து கொண்டது. கொஞ்ச நேரம் பொறுத்து அது அந்தப் பணக்காரப் பெண்ணின் கழுத்தில் தொங்கிய முத்து மாலையைத் தொட்டுத் தொட்டு விளையாடத் தொடங் கியது!
புலிக்குட்டி அந்தப் பெண்ணிடம் பூனையைத் திருப்பி அனுப்பிவிடும்படி கேட்டபோது, அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள் “இந்தப் பூனை குழந்தையைப் போல் விளையாடுகிறது! விளையாடட்டும்! நீ ஒன்றும் இதுபற்றித் துன்பம் கொள்ள வேண்டாம்.”
புலிக்குட்டி வெற்றிப் புன்னகையுடன் சாய்ந்து உட்கார்ந்தான்.
அத்தியாயம்-8
விமானம் பம்பாயில் இறங்கியது.
பணக்காரப் பெண்ணிடம் தொத்திக்கொண்ட மின்மினி மீண்டும் புலிக்குட்டியிடம் வரவே இல்லை. விமானத்திலிருந்து மின்மினியைத் தூக்கியபடி இறங்கினாள் அந்தப் பெண். அதை அவள் கடத்திச் சென்றுவிடப் போகிறாள், உலகையாவுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்று எண்ணியபடி புலிக்குட்டி அவளிடம் சென்று,
“பூனையைத் தருகிறீர்களா?” என்றான்.
“என்னிடம் வளர்ந்த பூனையைப்போல் இது ஒப்புக் கொண்டுவிட்டது! இதை விலைக்கு விற்றுவிடுகிறாயா?” என்று கேட்டாள் அவள்.
புலிக்குட்டிக்குத் தூக்கி வாரிப் போட்டது!
“இதை விற்பதற்கில்லை” என்றான்.
”என்ன விலை?” என்றாள் அந்தப் பெண் மின்மினியைத் தடவிக் கொடுத்தபடி.
மின்மினியும் அவளிடமிருந்து புலிக்குட்டியிடம் வருவதாக இல்லை!
“பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பூனை…” என்று இழுத்தான் புலிக்குட்டி.
“இது கிடைப்பதற்கு அரிய ஸயாம் நாட்டுப் பூனை. உயர்ந்த இனப் பூனை, எனக்குத் தெரியும். எவ்வளவு பணம் கேட்கிறாய்?” என்றாள் அந்தப் பெண்.
”இதற்கு விலை என்று சொன்னால் அதை நீங்கள் நம்ப மாட்டீர்கள்” என்றான் புலிக்குட்டி.
“தயங்காமல் கேள், எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?”
“ஐயாயிரம் ரூபாய்” என்றாள் புலிக்குட்டி.
வாங்க முடியாத விலையைச் சொன்னால் பூனையை உதறிவிட்டு ஓடிவிடுவாள் அந்தப் பெண் என்று எண்ணினான் அவன். ஆனால் அவள் சிரித்துக்கொண்டே, “அவ்வளவுதானே? விமான நிலையத்துக்கு வா” என்று சொல்லி அழைத்துச் சென்று, ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதிக் கொடுத்தாள்.
“செக் வாங்கிக் கொள்ள முடியாது. பணமாக வேண்டும்” என்றான் புலிக்குட்டி.
”என்னுடன் வா. பணம் தருகிறேன்” என்று சொல்லிச் செக்கைக் கிழித்துப் போட்டுவிட்டு, அவளுக்காக வந்த காரில் ஏறி உட்கார்ந்தாள். புலிக்குட்டியை அந்தக் காரில் ஏறும்படி சொன்னாள், அவன் அதில் ஏறிக் கொள்ளவில்லை. வாடகைக் கார் ஒன்றில் அவளைத் தொடர்ந்து சென்றான்.
பெரிய பங்களா ஒன்றின் முன் கார் நின்றது. பூனையுடன் உள்ளே சென்ற அந்தப் பெண், ஒரு சில வினாடிகளில் பணத்துடன் வந்து, ஐயாயிரம் ரூபாயை மேஜை மீது போட்டாள்.
அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் புலிக்குட்டி. அவன் இரும்புக் கையால் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்ததை வியப்புடன் பார்த்தாள் அந்தப் பெண்.
அவன் வாடகைக் காரில் ஏறிப் புறப்பட்டபோது மெல்லத் திரும்பிப் பார்த்தான்.
அந்தப் பெண் பூனையுடன் நின்று கொண்டிருந்தாள். அவள் பார்த்த பார்வையிலிருந்து, திரும்பி இந்தப் பக்கம் நீ இனிமேல் வராதே என்று வலியுறுத்தியதைப்போல் இருந்தது!
மனத்திற்குள் சிரித்துக் கொண்டான் புலிக்குட்டி. அந்தப் பெண் யார் என்றுகூடத் தெரிந்து கொள்ளவில்லையே என்று காரோட்டியிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தான்.
“அந்தப் பணக்காரி யார் தெரியுமா?”
காரோட்டி வியப்புடன் புருவங்களை நெரித்தான். யார் என்று தெரிந்து கொள்ளாமலா அவன் அந்தப் பங்களாவுக்குப் போய்விட்டு வந்தாள் என்று வியந்தது அவன் மனம்.
“அந்த அம்மாளை உங்களுக்குத் தெரியாதா? முல்லைக்கோட்டைச் சமஸ்தானத்தின் அரசி. இவளுடைய கணவர் முல்லைக்கோட்டை அரசர். அவர் எப்போதும் வெளிநாட்டில் சுற்றிக் கொண்டிருப்பார். எப்போதாவதுதான் இந்தியாவுக்கு வந்து போவார்” என்றான் காரோட்டி.
புலிக்குட்டி சிந்தனையுடன் உட்கார்ந்துவிட்டான்.
பம்பாய்க்கு அவன் வேறு வேலையாக வந்தான். வரும் வழியில், விமானத்தில் பூனையை விற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. எதிர்பாராத திருப்பம் இது. எப்படியும் அவன் பூனையைத் திரும்பப் பெற்றாக வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தான். பூனையைத் திரும்பப் பெற முடியாவிட்டால், அவன் வந்த வேலை முற்றுப் பெறாது. பூனையின் உதவியின்றி அந்தப் பணியை அவனால் செய்ய முடியாது. ஆகையால், உண்மை தெரிந்தால் உலகையா என்ன செய்வார் என்று எண்ணி அஞ்சியது அவன் மனம்.
“எந்த ஓட்டலுக்குப் போக வேண்டும் என்று சொன்னீர்கள்?” என்று கேட்டான் காரோட்டி.
“ஏதாவது ஒரு நல்ல ஓட்டலுக்கு, எங்கே கொண்டு போய் விட்டாலும் சரி” என்றான் புலிக்குட்டி.
வானயில் ஓட்டல் என்று பெயர் கொண்ட ஒரு புதிய ஓட்டலின் முன் வாடகைக்காரை நிறுத்தினான் கார் ஓட்டி.
புதிய ஓட்டல் அது. பெரியது அல்ல. போக்குவரத்து மிகுதியாக இல்லாத ஒரு வழியில் இருந்தது அது.
புலிக்குட்டி காரை விட்டு இறங்கு முன் கேட்டான்: “வெளியூர்களுக்குப் பஸ் ஓட்டும் டிரைவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?”
காரோட்டி விழித்தான்: “என்ன செய்வார்கள்?” என்று புரியாமல் கேட்டான்.
”பஸ்ஸில் உள்ள பிரயாணிகள் களைப்புடன் இருக்கும்போது, வழியல் வரும் ஏதாவது ஓர் ஊரில் சாப்பிட்டுக் களைப்பாற ஓர் ஓட்டல் முன் பஸ்ஸை நிறுத்துவான். அந்த ஊரில் நிறைய ஓட்டல்கள் இருக்கும். இருந்தாலும் டிரைவர் ஒரு குறிப்பட்ட ஓட்டலின் முன் தான் பஸ்ஸை நிறுத்துவான். பஸ்ஸிலிருந்து இறங்குபவர்கள் அந்தக் குறிப்பிட்ட ஓட்டலில் தான் சாப்பிட நுழைவார்கள். டிரைவருக்கும், கண்டக்டருக்கும் ஓட்டல்காரர் இலவசமாகப் பலகாரம் கொடுப்பது வழக்கம! அதைப் போல இந்த ஓட்டலை புதியவர்களைக கொண்டு வந்து இறக்கினால், இதன் முதலாளி உனக்கு ஏதாவது காசு தருகிறாரா?” என்றான் புலிக்குட்டி.
காரோட்டியின் முகம் மாறிவிட்டது. ”அப்படி ஒன்றும் இல்லை. வேண்டுமானால் ஓட்டலுக்குப் போய்ப் பார்த்து விட்டுப் பிடிக்கவில்லை என்று வாருங்கள். வேறு ஓட்டலுக்கு அழைத்துப் போகிறேன். இல்லாவிட்டால் நீங்களே எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கள்” என்று சொன்னான்.
“இங்கேயே தங்கிக்கொள்கிறேன். பிடிக்காவிட்டால் நாளைக்கு மாற்றிக் கொள்கிறேன்” என்று பெட்டியுடன் இறங்கிவிட்டான் புலிக்குட்டி.
புதிய ஓட்டலாக இருந்தாலும், எல்லா வசதிகளும் அந்த ஓட்டலில் இருந்தன. மூன்றாவது மாடியில் ஓர் அறையை எடுத்துக் கொண்டு தங்கினான் புலிக்குட்டி. மறுநாள் இரவுதான் அவனுக்கு வேலை இருந்தது. ஆகையால் படுத்துத் தூங்கிவிட்டான்; காற்றோட்டத்துக்காகச் சன்னல்களை மட்டும் திறந்து வைத்துவிட்டுத் தூங்கினான்.
விடிந்து அவன் எழுந்தபோது, அவன் அந்த அறையில் தனியாக இல்லாததைப் போன்ற ஓர் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. அவன் எழுந்து உட்கார்ந்து பார்த்தான்.
பூனைக்குட்டி மின்மினி படுக்கையில் அவன் பக்கத்தில் படுத்திருந்தது!
அது எப்படி அங்கே வந்தது! புரியவில்லை!
அவன் எழுந்து அறையை ஒரு நோட்டம் விட்டான், கட்டிலுக்கு அடியில், முல்லைக்கோட்டை அரசியின் கழுத்தில் இருந்த முத்துமாலை கிடந்தது!
முத்துமாலையைக் கிளப்பிக் கொண்டு எப்படியோ மோப்பம் பிடித்து அவன் இருக்கும் இடத்துக்கு இரவே வந்துவிட்டது மின்மினி என்பதைத் தெளிவாகப் புரிந்து விட்டது அவனுக்கு!
அத்தியாயம்-9
மின்மினியின் திறமையைப் புலிக்குட்டியின் மனம் பாராட்டியது. அவன் மனத்தில் எண்ணுவதை அப்படியே புரிந்து கொண்டே செயல்படுத்தியது மின்மினி. முத்து மாலையைப் புலிக்குட்டி பெற வேண்டும் என்று விரும்பினான் என்பதைப் புரித்துகொண்டு, மின்மினி அன்றிரவே அந்தப் பணக்காரி, முத்துமாலையைக் கழற்றி வைத்ததும் கௌவிக் கொண்டு எவருக்கும் தெரியாமல் புலிக்குட்டி இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்துக் கொண்டுவிட்டது.
புலிக்குட்டிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி| பூனையை விற்று அவள் பணத்தைப் பெற்றுக் கொண்டான். பணத்துக்கும் பணமும், கூடவே முத்துமாலையும் அவனுக்கு மின்மினியால் கிடைத்தன. மின்மினியை விடாப்பிடியாக வாங்கிய பெண்ணுக்கு இரட்டை இழப்புகள். அதே நேரத்தில் புலிககுட்டிக்கு மற்றொரு பக்கம் அச்சம் புகுந்தது. முல்லைக்கோட்டை அரசி போலீசில் தெரிவித்துப் பூனையையும் புலிக்குட்டியையும் பிடித்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தினால் எழுந்தது அந்த அச்சம்! ஆகையால் அவன் பூனையுடன் வெளியே சென்றால் ஆபத்து! பூனையுடன் வெளியே போகாவிட்டாலும் ஒற்றைக் கையுடன், மற்றொரு கை இரும்புக் கை எனறு தெரியும் அளவுக்கு வெளியே செல்லுவது ஆபத்து என்று முடிவு கட்டினான். பம்பாய்க்கு அவன் வந்தது உலகையாவின் கட்டளைப்படி. அவர் சொன்ன வேலையை முடித்துவிட்டு விரைவில் அங்கிருந்து வெளியேற அவன் முடிவு கட்டினான்.
மின்மினியை அவன் அறையிலிருந்து வெளியே போக விடவில்லை. முடிந்த வரையில் எல்லாச் சன்னல்களையும் மூடிவிட்டு, ஒரே ஒரு சன்னலை மட்டும் திறந்து வைத்தான். மின்மினியிடம் அது யார் கண்களிலும் படாமல் இருக்க வேண்டும் என்று அதற்குப் புரியும்படி மெல்லச் சொன்னான்.
அந்தப் பொல்லாத பூனையும் அவன் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து கட்டிலின் அடியில் நாள் முழுவதும் படுத்துக் கிடந்தது. இப்படி அப்படி அது போக வில்லை. திறந்து கிடந்த சன்னலுக்கு நேராகத் தெரியாமல் மறைந்திருந்தது.
மறுநாள் இரவு வந்தது. புலிக்குட்டி கைப்பெட்டியுடன் புறப்பட்டாள். அவன் கோட்டு அணிந்து கொண்டிருந்தான்.
அவன் மின்மினியை ஒரு கையில் மார்புடன் அணைத்துப் பிடித்துக் கொண்டு கோட்டை மூடி மின்மினியை மறைத்துவிட்டான். அவன் வாடகைக் கார் ஒன்றைப் பிடித்து மலபார் ஹில்ஸ் பகுதிக்குப் போகும்படி காரோட்டியிடம் சொன்னான்.
பம்பாயில் திருடர்கள் மிகுதி என்று புலிக்குட்டி கேள்விப்பட்டிருக்கிறான். பத்திரிகைகளில் படித்திருக்கிறான். இப்போது அவன் கண்களுக்குத் திருடர்கள் எவரும் படவில்லை. கான்ஸ்டபிள்கள்தாம் எங்குப் பார்த்தாலும் நிறைந்திருந்தார்கள். இவ்வளவு கான்ஸ்டபிள்களை அவன் இதுவரையில் பார்த்ததில்லை!
மலபார் ஹில்ஸ் என்னும் இடத்தில் எங்கே போக வேண்டும் என்று காரோட்டி கேட்டபோது, அவன் திருப்பத்தில் காரை நிறுத்தும்படி சொல்லிவிட்டு இறங்கினான்.
மெல்ல நடந்தான்.
அந்தப் பாதையில் பங்களாக்கள்தாம் இருந்தன. பெரும் பணக்காரர்கள் வாழும் இடம் அது என்று உணர்ந்து கொண்ட அவன் கொஞ்சம் நின்று பார்த்தான். பம்பாயில் இவ்வளவு அமைதியான இடம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு. அந்தப் பகுதியிலே பெரும் பணம் வாங்கும் திரை நட்சத்திரங்கள் வாழ்ந்து வந்தார்கள். பம்பாயில் தொழிற்சாலைகளை நடத்திய சில முதலாளிகள் வாழ்ந்து வந்தார்கள்.
புலிக்குட்டியின் கண்கள் சாலையையும், பங்களாக்களையும் பார்த்தன. அவன் கால்கள் போகும் இடம் தெரியாமல் நடந்தன. அவன் எதையோ தேடினான். இறுதியில் அவன் தேடிய இடம் கிடைத்துவிட்டது!
மூன்று தெருக்கள் கூடும் ஓர் இடத்தில் ஒரே கம்பத்தில் மூன்று விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. நிலவின் ஒளியைப் போல் குளுமையாள ஒளியை அந்த மூன்று விளக்குகளும் பொழிந்து கொண்டிருந்தன. அந்த விளக்குகளைப் பார்த்ததும் அவன் முகம் மிகவும் மலர்ந்தது.
அவன் கையிலிருந்த பெட்டியை வைத்துவிட்டு, கையால் வரையப்பட்ட சிறு படம் ஒன்றை எடுத்துப் பார்த்தான். பென்சிலால் வரையப்பட்ட படம் அது. அதில் அந்த முச்சந்தியும், நவிளில் இருந்த மூன்று விளக்குகளும் வரையப்பட்டிருந்தன. எந்தப் பக்கம் சாலையில் அவன் நடக்க வேண்டும் என்று புள்ளிகளால் வரையப் பட்டிருந்தன. எப்படிப் போக வேண்டும் என்பதை அவன் உணர்ந்து கொண்டு, அந்தச் சாலையில் மெல்ல நடந்தான்.
அவன் கையிலிருந்த படத்தில், ஒரு பங்களாவின் முகப்பு மட்டும் வரையப்பட்டிருந்தது. நிழலைப் போல் தெரிந்த பங்களாவின் முகப்பை ஒவ்வொன்றாகப் பார்த்தபடி நடந்தான். அவன் படத்தில் கண்ட முகப்பைப் போலவே ஒரு பங்களாவின் முகப்பு இருந்தது. அவன் தேடி வந்த இடம் இதுதான் என்று முடிவு செய்து பூனையைக் கீழே விட்டான். பிறகு அதைத் தட்டிக் கொடுத்து ஏதோ மெல்லச் சொன்னான். அது ஓடிப் போய்ப் பங்களாவின் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் ஒளிந்துகொண்டது.
மின்மினி பங்களாவின் தோட்டத்துக்குச் சென்றதும், அந்தப் பங்களா பாதுகாக்கப்பட்ட இடம் என்று அறிவிப்பதைப் போல் அல்சேஷன் நாய் ஒன்று மண்டை தெறிக்கக் கத்தியது. பூனை அதனிடம் பிடிபடாமல் மரத்தின் மீது எங்கேயோ போய் உட்கார்த்துவிட்டது. பிறகு அது குரைப்பதை நிறுத்தி விட்டது. பூனை ஒளிந்திருந்த இடம் இப்போது அதன் கண்களுக்குத் தெரியவில்லை!
நாய் குரைத்தததும் மின்பொறி விளக்குடன் ஓடிவந்த பணியாளன் ஒருவன், இங்கும் அங்கும் மின்பொறி விளக்கை அடித்துப் பார்த்தான். பிறகு மரத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சினான். இலைகளின் மறையில் இருந்த பூனையின் கண்கள் மட்டும் விளக்கின் வெளிச்சத்தில் மின்னின. ஏதோ நாட்டுப்பூனை என்று நாயை அதட்டிவிட்டு அவன் போய்விட்டான்!
அத்தியாயம்-10
பங்களாவின் சுற்றுச் சுவர் ஓரமாக ஒளிந்து நின்றபடி பார்க்க புலிக்குட்டி, பூனை பாதுகாப்புடன் மரத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். பங்களாவுக்குள் யார் யார் நடமாடுகிறார்கள் என்று அவன் கண்கள் கவனித்தன.
சன்னல்களுக்குத் திரைகள் போடப்பட்டிருந்தன. மெல்லிய விலை உயர்ந்த திரைகள் அவை. ஆகையால் பங்களாவில் நடமாடியவர்களின் உருவங்கள், நிழல் உருவங்களாகத் தெரிந்தன. அழகிய பெண்ணின் உருவம் ஒன்று அடிக்கடி தெரிந்து மறைந்தது. அவள் நிழல் உருவத்திலிருந்தே அவள் ஒரு திரை நடிகையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. அவளுடைய நடையில் அழகு இருந்தது. அவள் நடந்த போது, அவளையம் அறியாமல் ஏதோ அபிநயங்களைப் பிடித்தாள்!
மற்றொரு பெண் கொஞ்சம் வயதானவள். அவள் அந்தப் பெண்ணுக்கு அன்னையா, பாட்டியா என்பது தெரியவில்லை. அவள் அடிக்கடி அந்த அழகியின் பின்னால் வந்து செல்லமாகக் கடிந்து கொண்டு எதோ பேசினாள். இவர்கள் இருவரைத் தவிர, பணியாளர்கள் சிலர் நடமாடினார்கள்.
அவன் தேடி வந்த புகழ் நிறைந்த ஹிந்தி நடிகை ஷோபாவின் பங்களாவாகத்தான் அது இருக்க வேண்டும். என்று முடிவு கட்டினான். அவன் ஷோபாவைக் காண வேண்டியதிருந்தது. அவளிடம் கொஞ்சம் பேசவேண்டிய திருந்தது. அவன் இப்போது பங்களாவின் முன்சென்று எடுப்புடன் நின்று, வாயிலில் இருந்த சங்கிலியைப் பிடித்து இழுத்தான்.
பித்தளையினால் செய்யப்பட்ட சங்கிலியாக இருந்தாலும் பாலிஷ் போடப்பட்ட சங்கிலியைப்போல் பளபளப்புடன் இருந்தது அது. அதை அவன் இழுத்துவிட்டதும், உள்ளே எவரோ இனிய ஓசைகளை எழுப்பியதைப் போல் ஓசை எழுந்தது. அதைத் தொடர்ந்து நாய் கத்தியது. பணியாள் ஓடி வந்து நாயை அதட்டிவிட்டுக் கதவின் பக்கத்தில் வந்தான்.
“யார் வேண்டும்?” என்றான் பணியாள்.
“ஷோபாவின் பங்களாதானே இது?”
“ஆமாம். இப்போது அவரைப் பார்க்க முடியாது.”
“நான் யார் என்று சொன்னால் என்னைப் பார்த்துப் பேச அனுமதி கொடுப்பாள். பெரிய நகை வியாபாரி ஒருவர் வந்திருக்கிறார் என்று சொல்” என்றான் புலிக்குட்டி.
பணியாள் கொஞ்சம் தயங்கினான். பிறகு கதவைத் திறந்து வைத்து உள்ளே வரும்படி அவன் சொன்னான்.
புலிக்குட்டி, கைப்பெட்டியுடன் உள்ளே சென்று கூடத்தில் இருந்த அழகிய நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தான். அந்தக் கூடத்தில் இருந்த அழகையும் பணக்காரியின் பங்களா என்று எடுத்துக் கூறும் விளம்பரங்களையும் கண்டதும், இந்தியாவில் எவ்வளவுதான் வறுமை இருந்த போதிலும், பணம் சேருபவர்களிடம் அது மிக மிகுதியாகச் சேர்ந்து கொண்டுதான் போகிறது என்று எண்ணினான். இப்படிப் பணம் சேருபவர்களுக்கு ஏழைகள் இருக்கின்ற உலகம் தெரியாமல் இல்லை. ஆனால் அவர்கள் ஏழைகள் உலகத்தையே தெரியாதவர்களைப் போல நடித்து வருகிறார்கள் என்று முடிவு செய்தது அவன் மனம்!
பணியாள் மாடிக்குப் போய் வந்ததும், “மேலே செல்லுங்கள்” என்றான்.
புலிக்குட்டி மாடிக்குச் சென்றான். படிக்கட்டுகளின் மீது அவன் ஏறியபோது, ஓசை வராதபடி படிக்கட்டில்கூட இரத்தினக் கம்பளம் பதிக்கப்பட்டிருந்தது.
மாடியில் இருந்த கூடத்தில் உட்கார்ந்தபடி அவனை வரவேற்றாள் ஷோபா. மிகவும் இளம் வயதுதான் அவளுக்கு. ஆனாலும் மிகுந்த படங்களில் நடித்துப் பெரும் பணம் வாங்கிக் கொண்டிருந்த அவளுக்குப் பணச்செருக்கு இருந்தது. அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவள் ஷோபாவின் பாட்டியாகத்தான் இருக்க வேண்டும். அவளுக்கு வயதாகியிருந்த போதிலும் வயதானது தெரியாமல் இருக்க நிறைந்த அளவில் ஒப்பனை செய்திருந்தாள்.
கொஞ்ச நேரம் விழிப்புடன் இருவரையும் பார்த்து விட்டு புலிக்குட்டி கொஞ்சம் கேலியாக, ”உங்கள் இருவரில் யார் ஷோபா என்று தெரியவில்லை. இவர்களா?” என்று பாட்டியைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள் புலிக்குட்டி!
இதைக் கேட்டு இருவரும் சிரித்தார்கள்!
“நான்தான் ஷோபா. இது என் பாட்டி” என்றாள் பதினெட்டு வயது மதிக்கத்தக்க அந்த அழகி.
“அப்படியா? உங்கள் இருவரையும் கண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அசைப்பில் பார்த்தால் இருவரும் ஒரே மாதிரி இருக்கிறீர்கள்! உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலும், உங்கள் பாட்டியே உங்களுக்குப் பதில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு விடலாம்!” என்றான் புலிக்குட்டி ஷோபாவைப் பார்த்து!
பாட்டிக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது. “உட்கார் எந்த ஊர் நீ?” என்றாள் அவள்.
அவள் உட்கார்த்துகொண்டு சொன்னான்: “என் சொந்த ஊர் பெங்களூர். விடிந்ததும் நான் லண்டனுக்குப் போகிறேன். விலை மதிக்க முடியாத நகைகளுக்கும் வைரங்களுக்கும் இலண்டன்கான் இப்போது உலக மார்க்கெட். இந்தியாவில் உள்ள பெரும் பணக்கார அரசர் ஒருவர், இந்த நகைகளை விற்று வரும்படி என்னை அனுப்பினார். அவர் பெயரைச் சொல்லக் கூடாது! இலண்டனுக்குப் போகு முன். ஷோபாவிடம் இந்த நகைகளைக் காட்டிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். ஷோபாவக்கு நகைகளை வாங்கிச் சேர்ப்பது பொழுது போக்கு என்று திரைப்பத்திரிகை ஒன்றில் படித்தேன்”.
இகைக் கேட்டதும் ஷோபாவின் முகம் தாமரையைப் போல் மலர்ந்தது. “உண்மைதான். ஆனால் என்னிடம் இல்லாக நகைகளாக இருந்தால்தான் நான் வாங்குவேன். ஒரே மாதிரி நகைகளை நான் எப்படி வாங்குவேன்?” என்றாள் அவள்.
“உங்களிடம் உள்ள நகைகளைப்போல் இருந்தால் நீங்கள் தொடக்கூட வேண்டாம். நகைகளைப் பாருங்கள் பிறகு பேசுங்கள்” என்று சொல்லி விட்டுப் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்த வெல்வெட் துணி ஒன்றை எடுத்துக் கீழே பரப்பிவிட்டுப் பெட்டியிலிருந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பரப்பினான்.
விளக்கு ஒளியில், நீல நிற வெல்வெட் துணியின் மேல் வைக்கப்பட்ட அந்த நகைகள் அவ்வளவும் பளபளவென்று கண்களைப் பறித்தன. அவன் எல்லாவற்றையும் எடுத்து வெல்வெட் துணியிலேயே துடைத்துப் பரப்பினான்.
பாட்டியின் கண்கள் நகைகளின் மீது படிந்திருந்தன. புலிக்குட்டி தன்னுடைய இரும்புக் கையைப் பயன்படுத்தி நகைகளை எடுத்த வகையும் அவற்றை இரும்புக் கையால் துடைத்த விதமும் அவளுக்கு வேடிக்கையாக இருந்தன!
ஷோபாவுக்கு நகைகளைக் கண்டதும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவ்வளவு நகைகளையும் வாங்க முடியாதே என்ற எண்ணத்தினால் ஏற்பட்ட ஏமாற்றம் அல்ல அது! அவன் பரப்பிய அந்த நகைகள் எல்லாம் ஏறக்குறைய அவளிடம் இருந்த நகைகளைப் போலவே இருந்தன!
– தொடரும்…
– கல்கண்டு இதழ்.
– இரும்புக்கை மனிதன் (நாவல்), முதற் பதிப்பு: 1976. மணிமேகலைப் பிரசுரம், சென்னை.