இருட்டு
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2024
பார்வையிட்டோர்: 887
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“கொஞ்சம் போய்த் தலயக் காட்டீட்டு வந்துட்டீங்கன்னா என்னா கொறஞ்சி போய்றுவீங்க?” என்று மனைவி அறைக்குள்ளிருந்து தன் எதிர்க்கட்சி வாதத்துக்கு ஒரு புது முலாம் பூசிய போதுதான் என் எரிச்சல் அதிகமாகியது.
“எனக்குப் புத்தி சொல்ல வராதீங்க; சரியா? நாஞ் சொன்னா சொன்னதுதான்; சரியா? அதுதான் ஊரே தெரண்டு போய்க்கிட்டிருக்குன்னு சொல்றீங்களே, இதுல நான் போகாட்டி அப்பிடி என்னா கொறஞ்சிறும்?.. இதுக்கு மேல என்னய வற்புறுத்தாதீங்க; சரியா? நான் போகல்லன்னா போகல்லதான்!”
எரிச்சலும் சூடுமாக மனைவிக்கு நான் என்னைப் பற்றியே எரிமுகம் செய்துகொண்டிருந்ததால், வீட்டுக்குள் நுழையும் வரை குமாரின் வரவை என்னால் கண்டு கொள்ள முடியவில்லை.
“என்னடா -வற்புறுத்த வேணாங்கிற; போகவே மாட்டேங்கிற?” என்றபடி அமர்ந்தான் அவன்.
“வாடாப்பா, நேத்து ராத்திரி டின்னருக்கு வாறவனே!” என்று அமர்ந்தேன் நானும்-சிரிமுகம் வரவழைத்து.
திரைச்சீலையை விலக்கி எட்டிப் பார்த்து, “வாங்கண்ணேன்! அடுத்த டின்னருக்கும் நேரமாய்றிச்சி!” என்று என் கட்சியில் மீண்டவளிடம்,
”டின்னரா முக்கியம் தங்கச்சி!” என்றான் குமார். பிறகு இவன் என்னிடம் பேச்சுக் கொடுத்த போது அவள் திரைச்சீலையை விட்டாள். “என்னடா, டவுன் பூரா ஒரே வெள்ளக் கொடி? ஹாமுதுருவா எம்பீயா?”
“இந்த வார ஸ்பெஷல்! அதுதான் பத்திருவது :பெனர் கட்டியிருக்கே, வாசிக்காமயா வந்த?”
“தமிழ்ல போட்டிருந்தா வாசிச்சிருப்பேன்; இல்லாட்டி இங்கிலீஷ்ல!”
“சாபக்கேடு! ஒனக்குச் சிங்களமும் அவனுக்குத் தமிழும் தெரியாததுதாண்டா இப்ப உள்ள சாபக்கேடு!”
“சரிடா அருள்மாரி, யாருக்கு சொர்க்கம்?”
“ஏன், நரகமா இருக்கக் கூடாதோ?”
“ஒனக்குத்தான் வாயில நல்ல வார்த்தயே வராதே! ஆள் யாரு?”
“எல்லாம் ‘வெற்றி நிச்சய’த்தால் வந்த தோல்வி! ஒரு கெப்டனாம். விஜய தேவேந்திர. தேவேந்திரர்கள்கிட்டயே விஜயமாகீட்டான்! கண்டிப் பக்கம் ஊராம். ரெண்டு வருஷத்துக்கு மொதல்ல இங்க வீடு வாங்கிக் குடி வந்தவனாம். கல்யாணம் கட்டியும் பிரமச்சாரி மாதிரி ராணுவ வாழ்க்கையாம். பிள்ளை குட்டி இல்லியாம். வீடு நெறய ஷீல்டும் கப்பும்தானாம். படிப்படியா முன்னேறிக் கெப்டனாகினவனாம். ரொம்பவும் நல்ல மனுஷனாம். ரெண்டு புள்ளைங்களத் தத்தெடுத்து :போர்டிங்ல வச்சி படிப்பிக்கிறானாம். டவுன்ல மெயின் ஹோல்ட் பக்கமா ஒரு லேன்ல பெரிய வீடாம். இதெல்லாத்தயும் நேத்தும் இன்னைக்குமாத்தாங் கேள்விப்படுகிறேன். அதுவும் நம்ம வீட்டு வயர்லெஸ் மூலமா! நாங்களும் இந்த ஊருக்கு வந்து இருவது வருஷமாகுது; இப்பிடி ஒரு மையத்தப் பத்திக் கேள்விப்படல்ல. இவன நான் இதுக்கு முந்திக் கேள்விப்பட்டதுமில்ல. சரி, டவுன்ல இதெல்லாம் பெரிய விஷயமில்லியே! ஆனா பாருடா, இந்த ஊரே நேத்தையிலருந்து அவன் வீட்லதானாம். மாங்குளம் சீரிஸ்! அதுனாலதாங’ கூட்டங் கூடுதே தவிர தேவையான பெரிய மனுஷன்னு ஒண்ணுமில்ல. இதுல ஜோக் என்னன்னா நான் செத்த வீட்டுக்குப் போகல்லையாம்! போகவே வேணுமாம்! சொல்றா! ஊரே போய்றிச்சாம்; நான் போகல்லன்னா வேற மாதிரி என்னயப் பத்திக் கதைப்பாங்களாம்!”
“நீங்களே கேளுங்கண்ணேன்!” என்று மறுபடியும் திரை விலகியது. “அந்தாளப் பத்தி எங்களுக்கு மட்டுமில்ல, இந்தூர்ல தொண்ணூறு சத வீதத்துக்குமே ஒண்ணுமே தெரியாதுன்னுஞ் சொல்றாங்க! அப்பிடியிருந்தும் இவரத் தவிர எல்லாருமே போய்ட்டும் வந்துட்டாங்க!”
“இவதான் சென்ஸஸ் எடுத்தாடா!”
“அடுத்தூட்ல அந்தம்மாக்கூட நீங்க போகல்லியான்னு கேட்டாங்க. நேத்தே போய்ட்டு வந்துட்டார்னு சொல்லீட்டேன்! இது நம்ப ஊருமில்ல! ரெண்டாவது சிங்கள ஊரு. ஊர் நல்ல ஊர்தான். அதுக்காக நாம்பளும் நம்ப ஊர்ல மாதிரி நடந்துக்கிட ஏலுமான்னேன்? ஒரு எட்டுப் போய்ப் பாத்திட்டு வந்துட்டா என்னா?”
”என்னடாது, ஹீரோயிஸமா?”
“ஒரு இஸமும் இல்லடா; மனச்சாட்சி! தற்கொலக் கேஸன் பாக்கப் போறதில்ல; குடிகாரக் கேஸயும் பாக்கப் போறதில்ல. இது என்ட பொலிஸி. அதோட, இந்த நாட்டின்ட ஒரு சகோதர இனத்த அழிக்கப் போய்ச் செத்தவனயும் பாக்றதில்லன்னு ஒரு தீர்மானம்! இவ அமுல்படுத்த விடுறா இல்ல!”
“அப்ப… நீ ஒரு புலி ஸப்போட்டர்னு சொல்லு!’
“லுக், குமார்! ஒரு உண்மய மனச்சாட்சிப்படி வெளிய சொல்லீட்டா ஒடனே புலி ஸப்போட்டர் பட்டமாடா? இப்படித்தானேடா ஒவ்வொரு சிங்கத்தயும் புலிகளாக்கினீங்க; நீங்கள்லாந்தாண்டா ஒரிஜினல் புலிகள்! ஒங்களத்தாண்டா மொதல்ல கொல்லணும்!”
“ரொம்பத்தாங் கோபப்படுறாப்ல!… புலிகள எதிர்த்துச் செத்தவனப் பாக்க மாட்டேன்னு சொல்ற ஒன்னயப் புலி ஸப்போட்டர்னு சொல்லாம ராணுவ ஸப்போட்டர்னாடா சொல்ல முடியும்?”
“ஒனக்கும் இந்த டீவீ நாடகக்காரங்களுக்கும் வித்தியாசம் இல்லடா! தமிழர் பிரச்சினய அப்பிடியே அடியோட ரொம்ப லாகவமா மறைச்சிட்டு, சிங்களவுங்களுக்கு எப்பிடி எப்பிடிக் காது குத்த முடியுமோ அப்பிடி அப்பிடியெல்லாங் காது குத்துறதுதான் டீவீயில வர்ற இனப் பிரச்சினை நாடகங்கள். புலிகள மகாக் கெட்டவனுங்கள்னு காட்டி, ஒரு இனத்தோட உரிமைப் போராட்டத்தக் கொச்சைப் படுத்துற டீவீ நாடகக்காரனுக்கும், ஒரு சகோதரன இன்னொரு சகோதரன் கொல்லப் போறது நியாயமான்னு கேட்கிற என்னயப் புலீன்னு சொல்ற ஒனக்கும் என்னடா வித்தியாசம்? இன்னயத் தேதியில நான் வடக்கில இருக்கிறேன்னு வச்சிக்க! இதே மாதிரி ராணுவத்தால கொல்லப்பட்ட ஒரு புலிப் பொணம் அங்க வந்தாலும் இதே மாதிரித்தான் தீர்மானிச்சிருப்பேன்! ஏன்னா நான் மண்ணை நேசிக்கிறத விட மக்களத்தாண்டா நேசிக்கிறேன்! மண் என்னைக்குமே உள்ளது. அத யாரும் அளவுக்கு மீறி நேசிக்கத் தேவையில்ல! ஆனா மனிதர்கள் அப்பிடியில்ல. நாளைக்கு அழிஞ்சிறுவோம்! அதுனால மனுசன் மனுசனத்தான் நேசிக்கணும்; நேசிச்சே ஆகணும்!”
“இந்தாளுக்குப் பைத்தியம்ண்ணேன்; நீங்க தின்னுங்க!” என்று கடி வகையறாக்களைப் பரப்பி விட்டுப் போனாள் இவள் – இடையிடையே வரும் விதூஷகி போல.
“மக்கள நேசிக்கிறதாச் சொல்ற. தெற்கில உள்ள மக்கள நேசிச்சதுனால தான் விஜயதேவேந்திர செத்தான்! ஊரோடயாவது ஒத்துப் போடா! இந்த இனப்பிரச்சினை விஷயம், யோசிக்கிற ஒவ்வொரு நேரத்திலயும், வளர்ற ஒவ்வொரு கட்டத்திலயும், ஒவ்வொரு மாதிரியா உருவெடுக்கும்! இது இன்டர்நேஷனல் பேய்! இதெல்லாம் அரசியல்வாதிகளுக்குத்தாஞ் சரி! நாளைக்கே இன்னொரு கலவரம் வருதுன்னு வச்சிக்க…..’
“அப்பிடி பயந்து பயந்துதான்டா இவ்வளவுக்கு இழிஞ்சி போய்ட்டோம்! எது நமக்கு ஞாயம்னு படுதோ அதுதான் பெரும்பான்மைன்னு துணிஞ்சி நின்னா இப்பிடியொரு புலியும் இருக்காது; ஒரு ராணுவமும் இருக்காது! அவன் அடக்கிறதும் பயத்தாலதான்; நாம அவனுக்கு அடங்கிப் போறதும் பயத்தாலதான்!”
“சரிடா, ஒண்ட தியறியும் சிந்தனையும் சரீன்னு சொல்லுவமே! அப்பறம் ஏன் நீயும் கூரையில வெள்ளக் கொடி போட்டிருக்கிற?……கழட்டி வீசேன்!’ “வெள்ளக் கொடி இவனுக்காகவா போட்டிருக்றேங்கிற?” என்று சொல்லி விட்டு கிண்டலாகச் சிரித்தேன் நான்.
“ஒன்ட நக்கல் சிரிப்பப் பாக்ற நேரத்தில எனக்கு ஒரு ஸீன் மானசீகமா வருதுடா! எலிஸபெத் மகாராணிதான் உலகத்திலயே பெரிய பணக்காரிங்கிற செய்தியப் பாத்திட்டு ஒரு கள்ளக் கடத்தல் மன்னன் சிரிச்சானாம்!….’
”நம்ம நாட்டோட பாதிச் சொந்தக்காரன் திஸாஹாமிக்காகப் போட்ட கொடிடா அது! டயானாவோட சாவில மதர் தெரேஸாவ நன்றி கெட்ட உலகம் மறந்த மாதிரி விஜயதேவேந்திரயோட சாவில திஸாஹாமிய மறந்துட்டாய்ங்க நம்மூர்க்காரனுக! மண்ணுக்காகப் போரிட்டவன் விஜயதேவேந்திர. என்னமாவது செஞ்சிக்கங்கடான்னு தன்ட மக்களோட ஒதுங்கிப் போன பரம்பரைல வந்தவன் திஸாஹாமி. திஸாஹாமி மக்கள நேசிச்சவன்டா! அவனோட பரம்பரைல யாராவது மண்ண நேசிச்சிருந்தா எத்தன ஆயிரம் வருஷமா இந்த மண்ணில யுத்தம் நடந்துகிட்டிருக்கும்னு நெனைக்கிற?”
“ரீஸனபிள்தான்!…. ஆமா, அதென்ன பாதிச் சொந்தக்காரன்?”
“திஸாஹாமி இயக்கனா நாகனா?”
“யார் கண்டா? அநேகமா இயக்கன்!”
“இயக்கனாத்தான் இருக்கணும்.. நாகனா இருந்தாக் கூடப் பாதிச் சொந்தக்காரன்தானே?”
“இவரும் அந்த ஜாதிதாண்ணேன்!” என்று சீண்டினாள் என் தேநீர்க்காரி.
“குடுடான்னு கேட்கிற நாகன விட, குடுக்க மாட்டேன்டான்னு சொல்ற விஜயன விட, ‘நீங்களே ஒரு தீர்மானத்துக்கு வாங்கடா – என்னய விட்டுட்டு’ன்னு ஒதுக்கமா வாழ்ந்த திஸாஹாமி எனக்கென்னமோ இருபதாம் நூற்றாண்டு நாகரிகவாதியா, மனிதாபிமானியாத்தான் தெரிய்றான். நோபல் பரிசுக்கு அவனத்தான் நான் சிபாரிசு செய்வேன்.”
“அண்ணன் சாவீட்ட போகேல்லயோ?” என்றவாறே ‘அவசர’ ரூபா உள்ளே புகுந்தாள்.
“நீங்க போய்ட்டு வாறாப்ல!” என்றேன் நான்.
“ஓ, ஸொரி அண்ணை! விசிட்டர்ஸ் வந்திருக்கிறாப் போல! ஓமண்ணை! எங்கட பக்கத்தில எல்லாருமே போய் வந்திட்டினம். இவருக்கு இன்டைக்கும் நைட்டென்டவர். நானாவது போகத்தானே வேணுமண்ணை? அதுதான் எங்கட சோமாவோட போட்டு வந்த நான். நானும் பயந்து பயந்துதான் போனன் அண்ணை! போன முறையும் குழப்பினவைதானே! எனக்கு ஆக்களையும் தெரியாது. ஆனால் இன்டைக்கு நிறையத் தமிழ்ச்சனமும் முஸ்லிமாக்களும் போறவையள்! புதுமையாக் கிடந்துது! நானென்டா உள்ள போகயில்ல! பயமும் அதோட சனமுமண்ணை! சனமென்டால் சனம் அப்பிடியொரு சனம்! பெட்டி யெண்டால் ஸீல் வச்சித்தான் இருக்குதாம். சோமா உள்ள போனவள். உடம்பே இருக்கோ இல்லியோ தெரியாதெண்டு கதைச்சவை! எங்கட தேசியக் கொடியாலதான் மூடி இருந்துதாம். அந்தாளப் பத்தியும் நல்லதுதான் சொல்லுகினம் அண்ணை! அக்கம் பக்கத்துக்கெல்லாம் நிறைய உதவியள் செய்திருக்காம்! நானெண்டா ஆளக் கண்டதுமில்ல! பெம்பிளயயும் கண்ட தில்லை! இன்டைக்கும் காணக் கிடைக்கேல்லை! அக்கா எங்கண்ணை?”
”உள்ளுக்குப் போங்க!”
“இவ ஜஃப்னாக்காரியே துணிஞ்சி போய்ட்டு வந்துட்டா! ஒனக்கென்னாடா? ஒன்ட தியறிய அடுத்த பொணத்துக்கிட்ட பிரக்டீஸ் பண்ணிப் பாரு; இப்ப போய்த் தலயக் காட்டீட்டு வா. ஏன்னா வீட்டுக்குள்ளயே இது ஒரு இஷ்யூ ஆகீறக் கூடாது! நமக்குத் தெரிறத விட நம்ம பொம்பளைங்களுக்குத்தான் ஊர் நிலவரம் நல்லாத் தெரியும். தங்கச்சியும் இப்ப வந்தவளும் சரீன்னுதான் நெனைக்கிறேன். எனக்கும் இதில கொஞ்சம் அனுபவம் இருக்குடா. இந்த ஆறு மாசத்துக்கெடையில அங்கயும் அடுத்தடுத்து மூணு பொணம் வந்திறிச்சி. ஒவ்வொரு பயணமும் டென்ஷன்தான்! என்னதாம் பண்ணித் தொலைக்கிறது? பாம்பு திங்கிற ஊர்ல இருந்தா நடு முண்டம் நமக்குத்தான்னுதாஞ் சொல்லணும்!….”
“நீ இப்ப சொன்ன விஷயம் எல்லாத்தையும் நாம இதுகால வரைக்கும் நடைமுறைப்படுத்திப் பாத்தாச்சி குமார். ரிஸல்ட் என்னா? குடுக்க மாட்டேங்கிற வனோட குடுடான்னு சண்டை போடுற அளவுக்கு நம்மளக் கொண்டாந்திருச்சி பிரச்சினை. இனிமே நாம கொஞ்சம் மாறினா என்னா? பெரும்பான்மை சிறுபான்மைய அடக்கிறத ஜனநாயகம்னு சொல்றானுக; சிறுபான்மை பெரும்பான்மைய அடக்கிறத சர்வாதிகாரம்னு சொல்றானுக. பாத்தா ரெண்டுமே ஒண்ணுதான்! இப்ப பூமிக்கு ஒரு திருப்பு முனைதான் வேண்டியது. ‘மண்ணுக்காப் போராடாதே; மனுசனுக்காப் போராடு; மனுசன மனுசன் கொல்றதுக்கு எதிர்ப்பா இரு!’ – இதத்தாண்டா நான் அமுல் படுத்தப் பாக்கிறேன்! ஆனா வீட்டுக்குள்ளயே எதிர்ப்பு! இதுல நீ வேற!…. இப்ப நம்ம நாட்டுக்கு புத்தபிரான் வாரார்னு வச்சிக்க. வந்து என்னா செய்வாரு?”
“….”
“வரயிலயே இந்தியாவிலருந்து ஒரு நல்ல அனுக்குண்டா கொண்டு வந்து இங்க சண்டை போடுற அத்தனப் பேரயும் அழிச்சிட்டு இதப் பரிசுத்த பூமியாக் கீட்டுத்தான் போவாரு! எது எப்பிடிப் போனாலும் ஒண்ணே ஒண்ணு இந்த மண்ணில் நடந்தே தீரும்டா. அது நம்ம காலத்திலயும் நடக்கலாம்; இன்னும் பைத்தைநூறு வருஷம் போயும் நடக்கலாம்; ஆனா நடந்தே தீரும். இன்னைக்கெல்லாம் இந்தப் பெரும்பான்மை எந்த விஷயத்தத் தூக்கிப் புடிச்சிக்கிட்டுச் சிறுபான்மைய அழிக்கப் பாக்குதோ அதே விஷயத்த இதே பெரும்பான்மை அழிக்கப் பார்க்கும்; இல்லேன்னா அந்த விஷயம் இந்தப் பெரும்பான்மய அழிக்கப் பார்க்கும்!”
“ரொம்ப உறுதியா இருக்றாப்ல!’
“ஹண்றட் பர்ஸண்ட்! ஏன்னா, சுத்துற சில்லு வஞ்சகமாச் சுத்தாது! சரித்திரமும் அதத்தாஞ் சொல்லுது! இப்ப நம்ம நாடு போற பாதையும் அதுதானே! அறிவு வளர வளர பேதங்களும் கூடத்தாஞ் செய்யும். பேதங்கள் வளரும்னுதானே நம்ம தோட்டங்கள்ல தொழிலாளர்களோ வாரிசுகளோ படிச்சிறக் கூடாதுன்னு தொழிற்சங்கங்கள் ரொம்பக் கவனமா இருக்குதுக!”
”நான் வாறனண்ணை!” என்று ‘அவசர’ ரூபா பறிபட்டு ஓடினாள்.
மனைவியின் திரை மறுபடியும் விலகியது. “செத்துப் போன ஆமிக்காரனோட அப்பா இவுங்களோட கோவிச்சுக்கிட்டு வேறெங்கயோ இருக்கிறதாம். அங்க தேடிப் போனப்ப அந்தாளு ரட்னபுரப் பக்கம் போய்ட்டதாச் சொன்னாங்களாம். இப்ப அங்கதான் தேடிப் போயிருக்கிறாங்களாம். வந்தாலும் வராட்டியும் நாலரைக்குப் பொணத்த எடுத்துறுவாங்களாம். இன்னும் ஒரு மணித்தியாலமிருக்கு. தமிழாளுக நெறயப் பேருக வர்றாங்களாம்!.. என்னமோ ஒரு ஊரு சொன்னிச்சே ரூபா…!… சீ… மறந்திறிச்சே…”
“சரி, விஷயத்த முடிங்க!”
“அந்த ஊர்ல மொத மொதல்ல பொணம் வந்தன்னைக்கிப் பெரிய கொழப்பமாம். ரெண்டாவது பயணம் வரப்போகுது பொணம்னு தெரிஞ்சொடன தமிழாளுக கூடிப் பேசி :பெனர் போடவும் நோட்டீஸ் அடிக்கவும் அதுக்கும் இதுக்குமா ஒதவி ஒத்தாசை பண்ணி சாவு வீட்டுக்கும் திமுதிமுன்னு போனாங்களாம்! இப்ப அடுத்தடுத்து எத்தனையோ பொணம் வந்திறிச்சாம்; தமிழாளுகளுக்குப் பிரச்சினையே இல்லியாம்! அதக் கேள்விப்பட்டுத்தானோ என்னமோ இன்னைக்கி நம்ம ஊர் தமிழாளுகளும் நெறயப் போறாங்கன்னு ரூபா சொல்லிச்சி. இந்த அண்ணனோட போய்ட்டு நீங்களும் தலயக் காட்டீட்டு வாங்களேன்!”
“நீயும் தேவைக்கில்லாத புடிவாதம் புடிக்கிறதா எனக்குப் படுதுடா! போருக்குப் போறது புது விஷயமா? இப்ப நீயே சொன்ன, புத்தர் வந்தாலே போர்தாஞ் செய்வார்ன்னு! மண்ணுக்காகத்தான் ராச்சியங்கள் இருக்கே தவிர மனிதருக்காக எங்கடா ராச்சியம் இருக்கு? இந்த விஜயதேவேந்திர தமிழனயாக் கொல்லப் போனான்? அரசுக்கு எதிரியத்தான் கொல்லப்போனான். அரசு இருக்கிறது நமக்காக. அரச உண்டாக்கினது நாம. அதுனால அரசுக்கு எதிரின்னா நம்ம எதிரிதான். நாங்க தமிழரா இருக்கிறதால விஜயதேவேந்திர தமிழன அழிக்கப் போனதாச் சொல்ல முடியுமாடா? எத யோசிச்சாலும் பொதுவான ஒரு நியாயமான அடிப்படையில நின்னு யோசி. சிங்கள ஜனங்கள் முந்தி மாதிரி முட்டாள்களா இப்ப இல்ல. இது அரசியல் யுத்தமே தவிர மக்கள் யுத்தமில்லன்னு அவுங்களுக்குத் தெரிஞ்சு போனதால இப்ப இப்ப அவுங்களும் நமக்கு ஆதரவாத்தான் ஆகிக்கிட்டு வர்ராங்க. ஹாமுதுரு மாருகளே ரெண்டாகிட்டாங்களே! இதயும் நாம கொஞ்சம் யோசிக்கணும்டா!”
“நீ என்னயப் புரிஞ்சிக்கல்லடா! மண்ணுக்காக ராச்சியம் இருக்கக் கூடாதுன்னுதாஞ் சொல்றேன்; மனிதருக்காக ஏன் இருக்கக் கூடாதுன்னுந்தாங் கேட்கிறேன்! விஜயதேவேந்திர தமிழனக் கொல்லப் போனதாச் சொல்லல்ல; நம்ம சகோதரனக் கொல்லப் போனதாத்தாஞ் சொல்றேன்! நாங்க அனுப்பின அரசு வேற, இந்த யுத்தத்த நடத்துற அரசு வேறன்னுதாஞ் சொல்றேன்! தமிழ் – முஸ்லிம் வாக்கோட போன அரசு இன்னைக்கித் தமிழரையும் முஸ்லிமயும் ஒதுக்குது! உதாரணம் வேணுமா? ராணுவத்துக்கு ஆள் சேக்றாங்களே, தமிழனயோ முஸ்லிமையோ சேக்றாங்களா? ஒரு தமிழ், ஸ்லிம் மையம் நம்ப ஊருக்குள்ள வருதா? அப்பிடி வந்தா இந்தப் பிரச்சினை ஏற்படுமா? மண்ணின் மைந்தர்னா சிங்களவுங்க மட்டும்தானா? அரசே நம்மள ஒதுக்கித்தானேடா வச்சிருக்கு? நம்மள சந்தேகக் கண்ணோடதானே பாக்குது?”
“சரியான ட்றெக்கில இப்பதான் நீ வாறடா! எங்க ஊர்ல ஒரு முஸ்லிம் பொடியன் ராணுவத்திலருந்து தப்பிச்சி வந்து ஒளிஞ்சி திரியறான். கேம்ப்ல இவனுக்குச் சாப்பாட்டுப் பிரச்சினையாம்! மருந்துக்குக் கூட இன்னொரு முஸ்லிமோ தமிழனோ இல்லியாம். எல்லாருமே இவனயும் புலீன்னுதாங் கூப்புடுவாங்களாம்! இதுனாலயே இவன் ஓடி வந்துட்டானாம்! இருக்கிறவன் கூட ஓடிப் போறதுக்கு இந்தத் துவேஷமும் ஒரு காரணமானாலும் அத ஒரு மைனர் மேட்டர்னுதாஞ் சொல்லணும். தமிழனோ முஸ்லிமோ ராணுவத்தில சேராததுதான் பெரிய காரணம். பேசுற மொழி காரணமா இவுங்க சேர்றதில்லியா ராணுவமே சேக்காம ஒதுக்குதாங்கிறதும் ஒரு கண்ணோட்டம். புலிகள் பலவந்தமா ஆள் சேக்றமாதிரி அரசும் அதாவது ராணுவமும் பலவந்தமா ஆள் சேத்தாத் தமிழர் – முஸ்லிம் சிங்களர்னு ராணுவம் அமையும். அடுத்தது ராணுவத்ல சேரணும்னா ஒரு நாட்டுப்பற்று இருக்கணும், இல்லியா? ஒனக்கும் எனக்கும் அது இல்லாமப் போய்றிச்சீங்கிறதும் நமக்குத் தெரியும்; ஏன் இல்லாமப் போய்றிச்சீங்கிறதும் நமக்குத் தெரியும். அதுனால சில விஷயங்களப் பத்திப் பேசுறதுக்குக்கூட நமக்கு உரிமை இல்ல! நம்ம நெலம ரொம்பப் பரிதாபகரமானதுடா! நாம அரசு பக்கமும் இல்ல; புலிப் பக்கமும் இல்ல! ஒன்னய மாதிரி அர்த்தமில்லாத வேதாந்திகள் பக்கந்தான் நாம இருக்கிறோம். இன்னொரு விஷயத்தயும் கவனி. பொலீஸ் எப்பிடி ஒரு குத்தம் நடந்திட்டா நிரபராதியயும் குத்தவாளியா சந்தேகப்பட்டுச் செயல் படுமோ, அப்பிடித்தான் அரசும் இன்னைக்கிச் செயல்படுது. ஒரு வகயாப் பாத்தா அப்பிடித்தாஞ் செயல்படணும்! நாம இல்லன்னு நிரூபிச்சுக் கொள்றது நம்ம கடமை. நீ என்னாத்தான் இந்தப் போரை எதிர்த்தாலும் இந்தப் போர் நடக்கிறதுக்கு நீயுந்தான் பண உதவி பண்ணுறே – விரும்பியோ விரும்பாமயோ அதும் :டெய்லி! நீ செலவழிக்கிற ஒவ்வொரு செலவிலயும் யுத்த நிதி இருக்கு!”
“இப்டி நம்மளக் கொண்டே நம்மள்ல ஒரு பகுதிய அழிக்கிறதுக்கு நாம துணை போகக் கூடாதுன்னு நாஞ் சொல்றதத்தான் நீ தவறுன்னு சொல்ற!’
“நம்மள்ல ஒரு பகுதிய நாமளே அழிக்கிறதுன்னா, அது தவறில்லடா மகாக் கொடுமதான்! இப்ப உள்ள பிரச்சின அதில்ல! சுதந்திரத்துக்கு முந்தியிருந்தே சிறுபான்மைய அடக்கணும்னு செயற்பாடுகள் நடந்தது உண்மைதான். ஆனா அழிக்கிறதுன்னு சொல்றதெல்லாம் டூ மச்! அப்பிடியே இருந்தாலும் அதுக்கு எடம் குடுத்ததும் நாங்கதானே? இப்பப் பிரச்சின அது இல்ல! இது போர். ஒரு பக்கம் பிரிவினைவாதி. மறுபக்கம் ஐக்கியவாதி. நாமளும் ஏதாவது ஒரு பக்கத்த எடுத்தே ஆகணும்! இதெல்லாம் அவுங்கவுங்க தனிப்பட்ட விஷயமா இருந்தாலும் பொது விஷயமும் இதுதான். ஒனக்கும் அதத்தாஞ் சொல்லுவேன். உன் முயற்சி கல்லு மேல பெய்த மழையா ஆகக்கூடாது! உன்னுடைய இதே மனோ நிலைய ஒரு சிங்களவன் காட்டினா அது கிரேட்!”
“என்ட சிந்தனய நானே நடைமுறைப்படுத்த முடியாமப் போறது வேற விஷயம். ஆனா, எட் லீஸ்ட் ஒரு அப்றூவல் கூடக் கெடைக்காதாடா? நானும் பொழுது போகாததுக்காகச் சிந்திச்சி இந்தத் தீர்மானத்துக்கு வந்தவனில்ல!… யுத்தத்தில் சாகிறவுங்கள அங்கங்கயே பொதைச்சிடாம இப்பிடி ஊரூருக்கு அனுப்புறதால வீணா டென்ஷன் உருவாகுது. தனிச்சிங்கள ஊர இது பாதிக்காது. ஆனா இந்த மாதிரி ஊர ரொம்பப் பாதிக்குது! சமாதானத்த என்னைக்கோ தொலைச்சிட்டு ரோட்டு ரோட்டா அதத் தேடுற இன்னைக்கி இப்பிடி ஒரு பொணம் வந்தொடன அவ்வளவு முயற்சியும் போச்சே! ஆறு மாசத்துக்கு முன்ன இப்பிடித்தான் ஒரு பொணம் இங்க வந்திச்சி. ஒரு சோல்ஜர். ரெண்டு தமிழ் வீடு தரைமட்டம்; ஏழெட்டுப் பேருக்குச் செமத்தியா அடி! கொஞ்சம் வழிப்பறியும் வேற! நானும் அந்தச் சாவு வீட்டுக்குப் போயிருந்தேன். புலி ஒண்ணு வருதுன்னு என்ட முகத்துக்கு நேரயே ஒருத்தன் சொன்னான்! இருவது வருஷமா நல்லாப் பழகினவன்! இதெல்லாத்தயும் பொறுத்துக்கிடுறது நம்ம கடமைன்னு சொல்றியா?”
“….”
“எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது, இல்லியா! அதுனால அன்னைக்கே நெனச்சிக்கிட்டேன் இனிமே எந்த ராணுவத்தான் செத்தாலும் போறதில்லன்னு!”
“இந்தப் பொணத்துக்கு அப்பிடியெல்லாம் இல்லியாம் அண்ணேன்”, என்றது திரைச்சீலை. “தமிழாளுகளா இருந்தாலும் முஸ்லிம் ஆளுகளா இருந்தாலும் சிங்கள ஆளுகளா இருந்தாலும் நல்லா மரியாத பண்றாங்களாம். இதக் கேள்விப்பட்டே போகாத ஆளுககூடப் போறாங்களாம்!”
“ஒரு தமிழனோ முஸ்லிமோ ராணுவத்தில செத்து இப்பிடிக் கொண்டாந் துட்டாங்கன்னு வச்சிக்க குமார். இப்பிடி ஊரே தெரண்டு போகுமா?” என்றேன் நான்.
“பொன்னம்பலம்! ஒன்ட பேச்சில நெறய முரண்பாடு இருக்குடா! ஏன்னா நீ முரண்பாடான விஷயங்கள ஒரே விஷயம்னு சிந்திக்கிற. நான் சிங்களம் படிக்காதது சாபக்கேடுன்னு சொல்ற. நான் சிங்களத்தயும் அவன் தமிழையும் படிச்சிட்டா இனப்பிரச்சினை தீரும்னு சொல்றது ஒரு தியறியே தவிர சொலூஷன் இல்ல! அடுத்தது – புலி எப்பிடித் தமிழன், முஸ்லிம், சிங்களவன், இந்தியன், அமெரிக்கன்னு பாக்காம எதிரிகள்னு மாறீட்டா அவனக் கொல்லுதோ, அப்பிடித்தான் ராணுவமும் அரசும். இது உலக இயங்கு முறை. இத நீ ஒரு இனத்த அழிக்கிற முயற்சீன்னு சொல்றது அதீத வாதம். இன்னொரு விஷயத்தயும் நீ கணிக்கத் தவறியிருக்கிற. போரத் தொடங்கினதும் ஏரியாக்களப் பிடிச்சதும் புலிகள்தான். தற்காப்புக்காகவும் இழந்த ஏரியாக்கள மீளப் பிடிக்கிறதுக்காகவுந்தான் அரசு போர் செய்யுதே தவிர, அரசாக ஒரு போரத் தொடங்கவும் இல்ல; செய்யவும் இல்ல!”
“நீ எப்ப இருந்து அரசு ஆதரவாளனா மாறினே?’
“ஒன்ட இந்தப் பேச்சும் அதீத கற்பனாவாதம்தான்! புலிகள் போராட்டம் நியாயமானதுதான். அவுங்க போராட்டத்த நானும் மதிக்கிறேன். ஆனா அவுங்க நடத்துற எல்லாப் போர் முறையையும் அல்ல! தனிநாடு கேட்கிறாங்க. நாடு ரெண்டாப் பிரிஞ்சிட்டாப் பாகிஸ்தான் இந்தியா மாதிரிப் பகைதான் வளரும்! தெற்கில் உள்ள தமிழர், முஸ்லிம்கள் நெலம என்னாகும்? ஒன்ட பேச்சில ஒரு நேரம் தனி நாட்டுக்கு ஆதரவு தெரியிது; மறு நேரம் ஐக்கிய பாவத்துக்கு ஆதரவு தெரியிது. நீயும் நானும் முஸ்லிம்களும் ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டத்லதான் இப்ப இருக்கிறோம்!”
“அப்ப….புலிகள்ட போராட்டத்தில் அர்த்தமில்லியா?”
“தனிநாட்டுப் போராட்டம் முதல் கட்டம். அது இப்ப முடிஞ்ச கத. அதுனால பாதிப்புகள் ஏராளம்னு வடக்கு மக்களே ஒத்துக் கொள்றாங்க. ஆகவே இனித் தனிநாட்டுப் போராட்டத்தால் அர்த்தமில்ல.”
“போரைக் கைவிடணுமா?”
“தேவையில்லை! போர் விரும்பிகள் போர நடத்தட்டும். ஆனா கோரிக்கை வேறயா இருக்கணும். ‘நாங்களும் ஜனாதிபதி ஆகணும்! எந்தக் காரணத்தைக் கொண்டும், பெரும்பான்மை, சிறுபான்மைங்கிற ஜனநாயகத் துரோகம் இருக்கக் கூடாது!’ – இதுக்காகப் போர் செய்யணும்! இலங்கைதான் நம்மளப் பெத்த தாய். இப்ப அவ கண்ணீர் வடிச்சிப் பொலம்பிக்கிட்டிருக்கா. “நான்தான் இவுங்களப் பெத்தேன். ஆனா ஒருத்தன் தன்னயத் தமிழ் பெத்திச்சிங்கிறான்; இன்னொருத்தன் சிங்களம் பெத்திச்சிங்கிறான். ஒருத்தன் தன்ட தாய் இந்துங்கிறான்; இன்னொருத்தன் பௌத்தங்கிறான்; வேறொருத்தன் முஸ்லிங் கிறான்; கொஞ்சப் பேரு கிறிஸ்துவம்ங்கிறாங்க! ஆனா பெத்த தாய் என்னய அனாதையாக்கீட்டானுங்களே,”ன்னு அவ கண்ணீர் வடிக்கிறா!”
“நீ நெனைக்கிற மாதிரி அரசோ புலிகளோ நடக்குமா? நீ மட்டும் அதீதமா, முரண்பாடா கற்பனை செய்யல்லியா?”
“சந்தர்ப்ப உணர்ச்சிகளுக்குத் தகுந்த மாதிரி நீ கடைப்பிடிக்க நினைக்கிற ஒன்ட கொள்கய விட என்ட தியறி மோசமானது இல்லடா! நீ சாவு வீட்டுக்குப் போறதும் போகாததும் ஒன்ட சொந்த விஷயம். ஆனா அதுக்காக ரெண்டு பெரும் அரசியற் கொள்கைகளோட சம்பந்தப்படுத்தி ஒன்னய நீயே ஏமாத்திக்கிடாத! புலிகள் தற்கொலைப் போராளிகளா இருக்கிறதால தனிநாட்டுப் பிரச்சினையோட ஆழம் தெரியுது. அந்தப் புலிகளால் தங்களுக்குச் சாவு நிச்சயம்னு தெரிஞ்சும் ராணுவம் போய் மடியிறதால, இந்த நாட்டு ஐக்கியத்துவத்தோட ஆழமும் ஒனக்குத் தெரிஞ்சாகணும்!- சரி, கதய விடு! எனக்கு நேரமாகுது பொன்னம்பலம்!…..”
நானும் இவளுமாக அவனுடைய விஷயத்தைக் கவனிக்கத் தொடங்கினாலும், அவன் இயக்கிவிட்ட சில திருப்பங்கள் எனக்குள் ஊடாடிக் கொண்டிருந்தன. பழைய புலி ஸப்போட்டரான குமாரின் சிந்தனைகள் என்னைக் குழப்பியிருந்தன.
இது யாழ்ப்பாணப் பிரச்சினையா, தமிழ்ப் பிரச்சினையா, தமிழர் பிரச்சினையா, அரசியல்வாதிகளின் பிரச்சினையா, மண்ணின் பிரச்சினையா, மதங்களின் பிரச்சினையா, காலத்தின் பிரச்சினையா, காலம் கடத்தும் பிரச்சினையா?…….
காரண கர்த்தாக்கள் பழைய அரசியல்வாதிகளா, புதிய அரசியல்வாதிகளா, குடிமக்களா அல்லது ஏதாவது வெளிச்சக்தியா?…….
அரசியல்வாதிகள் சினிமாக் கதாநாயகர்கள் மாதிரி. சினிமாக் கதாநாயகர்கள், சினிமாச் சண்டையில் வெல்ல வேண்டுமானால், தோற்றுப் போகும் படியாக அவர்களுடன் நடிக்க வேண்டியவர்கள் சண்டை நிபுணர்களாகவே இருக்க வேண்டும்! தோற்றுப் போகும் நாம் திறமைசாலிகளாகவே இருக்கிறோம்! ஐயோ, ஐயோ!…
குமார் புறப்பட்டான்.
“அப்பிடியே நீங்களும் போய் அண்ணன விட்டுட்டுப் பாண் முடிய முந்தி நமக்குப் பாணயும் வாங்கிக்கிட்டு வந்துறுங்களேன்!”
”அப்பிடியே சாவு வீட்டுக்கும் ஒரு எட்டுப் போயிட்டு வந்துறுங்களேன்!’ என்று நான் மிமிக்ரி செய்ய மூவருமே சிரித்தோம்.
வீட்டிலிருந்து முந்நூறாவது யார் மட்டில் சந்தி; நாற்சந்தி. காலையில் காணப்பட்டதை விட அதிகமாக :பெனர்கள் காணப்பட்டன. ஒரு மந்திரிக்குக் கிடைப்பதை விட அதிகப்படியான :பெனர் மரியாதைதான், எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.
‘சேனாதிபதி!’ ‘நாடு காத்த வீரன்’ மண்ணின் மைந்த ‘னுக்குச் சொர்க்கலோகம் கேட்டும் சிலரின் துயரத்தை வெளிப்படுத்தியும் கறுப்புச் சிங்கள எழுத்துக்கள் வெள்ளை மேனியில் ஆடிக்கொண்டிருந்தன.
புதிதாக ஏற்றப்பட்டிருந்தது ஒரு தமிழ்ப் பதாகை. வாய் விட்டு வாசித்தேன்:-
“நாடு காத்த மண்ணின் மைந்தனே! கண்டியத் தலைவனே! விஜய தேவேந்திரனே! வீர அஞ்சலி!”
“பாத்தியாடா குமார் நம்ம தமிழன் புத்திய! ‘விஜய தேவேந்திர’ இப்பத் தமிழனாகீட்டாரு! விஜய தேவேந்திரன்!”
என் பின்னாலிருந்து தொம்மாய்ப்பிள்ளை பேசினதும் திரும்பினேன்:-
“பொன்னம்பலம்! விஜய தேவேந்திரன்தான் தம்பி! நாங்கள்தான் தமிழ் பெனர் போட்டம்! அவர் தமிழரெண்டு எனக்கும் ராவிலதான் தெரிய வந்துது! மனிசி சிங்களப் பெட்டயானபடியாலயும் இவரும் அநேகமா கேம்பிலயே இருந்தபடியாலயும் கன பேருக்கு உது தெரிய வாய்ப்பில்லை!…. என்ன இருந்தாலும் சிங்களச் சனங்கள் செய்யிற மரியாதயெண்டால் மரியாததான்!… நான் வீட்ட ஒருக்காப் போட்டு வாறன் தம்பி!”
குமார் என்னைப் பார்த்து விஷமாகச் சிரித்தான். “என்னடா, என்னய பஸ்லேத்தி விட்டுட்டுப் பாக்கப் போறியா, இல்ல, தொணைக்கி நானும் வரணுமா?”
“நான் போறேன்,போகாம விடுறேன்; நீ :பஸ்ஸப் பாரு! பாண் முடிய முந்தி வாங்கிக்கிட்டாத்தான்” என்று நான் நடந்தேன்.
சாவீட்டுப் பக்கமிருந்து தனக்கே உரிய அவசர உபாதையில் ரூபா ஓட்டமாக நடந்து வந்தாள்.
“கத தெரியுமாண்ணை? விஜயதேவேந்திரன் தமிழராம்!’
“தெரியுமே!”
“பாத்தீங்களா நீங்களுஞ் சொல்லேல்லத்தானே! அதில் லண்ணை முக்கியம்! அவற்ற தோப்பனார் இஞ்ச இல்லியாம். காவத்தையில இருக்கிறாரென்டு தேடிப் போனவை. ஏதோ குடும்பத் தகராறு போலக் கிடக்கு. அங்கயும் ஒரு ஆமிக்காரன்ட பிணம் வந்து ஊருக்குள்ள பிரச்சினையாம். ஒரஞ்சாறு சிங்களவங்கள் குடிச்சிப் போட்டு தமிழாக்கள்ட வீடுகள அடிச்சுடைச்சிருக்கினம். உந்தக் கிழவன் தல போட்டுதோ என்னவோ தெரியேல்ல, மண்டையில போட்டிட்டாங்களாம்! பாவம், கிழவன் முடிஞ்சிதாம்! பிணம் வந்து கொண்டிருக்குதாம்!”
– 1998ல் ‘துரைவி’ பதிப்பகம் ‘தினகர’னுடன் இணைந்து நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது.
– தினகரன்
– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.