வெள்ளைமரம்
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2024
பார்வையிட்டோர்: 1,172
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஏழு பிள்ளைகளுள் இருவரைப் பற்றிய போக்குகள் என்னைப் பெரிதும் வாட்டிக் கொண்டிருந்தன.
மனித வர்க்கம் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு தகப்பனுக்கும் மக்களைப் பற்றிய துயரம் இருந்துதான் வந்திருக்கிறது.
கால் நூற்றாண்டாய்த்தான் ஒரு தகப்பனாக நான் இருப்பதால், அது என்னைப் பெரிதுமே வாட்டியது.
நண்பர் கேயெஸ் முன்பு அடிக்கடி என்னிடம் சொல்வார்:-
“கவிதைகளிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, உங்கட பிரின்ஸிப்பள்ஸ் வெரி க்ளீன் என்ட் பியூவ! ஐ லைக்கிட்! ஆனாலும் பாருங்கோ, உங்கட இறுக்கத்தக் கவிதைகளில் சாடையாக் குறைச்சீங்களெண்டால் கன பேர் விளங்கிக் கொள்ளுவாங்கள்! பிள்ளயள் விடயத்திலயும் இதக் கடப்பிடிச்சீங்களெண்டால் அவையள் உங்கட வழிக்கு வருவாங்கள்! உங்கட பிரின்ஸிபள்ஸ் கூடாதெண்டு நான் சொல்லயில்ல; :பட், சாடையா இறுக்கத்த தளர்த்துங்கோ!… புதிய ஜெனரேஷன் அல்லவா!.
என்னாலது கை கூடியும் பிள்ளைகளால் கூடவில்லை.
குமைந்து குமைந்து
திடீரென்றொரு நாள் மனதில் பெரியதோர் ஆவேசமே முறுகி எழுந்தது!
சிலரிடமாவது சொல்லியழுதால்தான் வருத்தம் தீருமென்று ஒரு முரட்டுத் திருப்பமும்!
ஒரு சிலரிடம் சொல்வதை விட ஆயிரம் பேரிடமோ முழு உலகத்திடமோ சொல்ல வேண்டுமென ஓர் அரிப்பும் பரிணாமப்பட்டது எனக்காக மட்டுமல்ல, என்னைப் போன்ற எத்தனையோ பெற்றார்கள் சார்பில்.
உள்ளிலும் வெளியிலுமுள்ள சகல சம்பந்தங்களும் ஒன்று திரண்டு, என் நெஞ்சில் வடிவமிடத் தொடங்கின.
இனிப் பொறுக்க இயலாது என்ற ஓர் அவஸ்தை இரவில், இவர்களைப் பற்றி எழுதுவதற்காக உட்கார்ந்தேன்.
அதுவரையில் பார்வையாளனாக இருந்த என் கௌரவத்துக்குரிய மனக்குறளி பேசியது:-
“பிரயோஜனமில்லாத காரியம் செய்யப் போகிறாய்! உன் மக்களைப்பற்றி நீ எழுதுவதை விட ஒரு மரத்தைப் பற்றி எழுதலாம் போ!”
ஓர் அறை விழுந்தாற் போல் பளீரென எனக்குள் மின்னியது வெள்ளை மரம்!
எங்கள் சுடுகந்தைத் தோட்டத்தின் ‘ஸ்வாமி மரம்’!
மனக்குறளி, அதிலும் என்னது எனக்கு, அதியத்தியாவசிய நேரத்தில் வழிகாட்டிதான்.
வெள்ளை மரத்தினதுவும் எழுதப்படவேண்டிய ஒரு வரலாறுதான்.
மானஸீகம் பெருக்கெடுத்தது.
எங்கள் தோட்டத்து ஜனங்களால், இந்த வெள்ளை மரத்தை மறந்து வாழ்ந்திருக்க முடியவில்லைதான் – ஒரு காலத்தில். ஆனால் பசி வந்திடப் பறந்த பத்துக்குள் ஒன்றாக இப்போது அது மாறி விட்டதா?
அன்றெல்லாம் –
“வெள்ள மரத்தையா! நீ இருந்தாக் கேளு!’ என்று பாதிப்புகள் பிரலாபிக்கும்.
“வெள்ள மரத்துக்கொரு நேத்திக் கடன் வச்சா எல்லாஞ் சரியாப் போய்றும்!” என்று பெரிய கட்டைகளும் சின்னப் பளுக்குகளுங்கூடச் சிக்கல்களை ரொம்பச் சுளுவாகத் தூக்கி எறியும்.
“வெள்ள மரத்துக்குக் கைல இருக்கிற மாதிரிக் காணிக்க போட்டுட்டுப் போ!’ என்று மூப்புகள் லயங்களிலிருந்து யாருக்கும் விடை கொடுக்கும்.
இன்று?
மனிதரினத்தைப் போல, ஒரு மரத்தின் வரலாற்றையும் எழுதச் சுவையாகத் தான் இருக்கிறது. ஏனென்றால் ஆலமரம், அரச மரம், வேல மரம் என்று வரலாறு பேசும் மரங்களைப் போல, இந்த வெள்ளை மரமும் ஒரு வரலாற்றைத்தான் பேசுகிறது; அவ்வரலாற்றின் சின்னமாகத்தான் நிற்கிறது.
மனிதனின் அந்தஸ்தைவிட உயர்ந்து, ஓர் அமானுஷ்யத்தின் அந்தஸ்தை அடைந்த மரம்! தனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமற் போன விரக்தியில், அதையொரு மரத்தின் மீதேற்றித் திருப்தி காணத் தலைப்பட்ட வனும் மனித மரம்தான்!
அல்லது ஆண்டவனுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை இவன் பலாத்காரமாக மறுத்து இப்படிச் செய்தானோ?…..
மாத்தளைக்குப் போங்கள். வடக்குச் சாலையில் ஒரு மைல் போனால், சாலை இரு கூறாகப் பிரியும். வலப்பக்கம் திரும்புங்கள்; ரத்தோட்டைப் பாதை. அதில் ஒரு மைல் காலாறப் போனால் (வண்டிகள் நிறைய உண்டு) பழங் காலத்து இரும்புப் பாலம் ஒன்று கிழக்கு மேற்காகப் படுத்துக் கிடக்கும்.
பாலத்துக்கு இப்பால் வலது பக்கமாக தெரிகிறதே ஒரு மாடி வீடு, அதுதான் எங்கள் பகுதியில் முதன் முதலாகக் கட்டப்பட்ட மாடி வீடு. இலக்கியத்துக்காக உயிர் கரைத்த துரை விஸ்வநாதன் அவர்களின் வியர்வைத்துளி அவ்வீடு. எண்பத்து மூன்றின் இருட்டு இவரையும் பயமுறுத்திய போது, வெள்ளை மரத்தையாதான் இவருக்கு ஒளி காட்டிக் கொழும்புப் பக்கமாகச் சேர்த்திருக்க வேண்டும்!
இப்போதெல்லாம் சந்நியாஸம் வாங்கிக் கிடக்கும் இந்தப் பாலத்துக்கு முன்னரெல்லாம் கறுப்புப் பெயிண்ட்தான் பூசுவார்கள்.
அந்த இரும்புப் பாலத்தின் கீழே ஓடும் ஆற்றின் பெயர் “சுதுகங்கை’. அதே ஆறு இன்னும் கொஞ்சம் கீழே ஓடினால் “அம்பான் கங்கை’ ஆகிறது. அதன் கீழே என்ன பெயரோ தெரியாது!..
பொறாமை பிடித்த மொழிகளுள் தமிழ்தான் சக்கரவர்த்தி! “ஷேக்ஸ்பியர்” தமிழில் ‘செகசிற்பியர்’ ஆகியது ஓர் உதாரணம். புதுக் கவிதைக்காரர்களை நினைத்தால் இன்னும் பயமாகக் கிடக்கிறது இவர் ‘ஸெக்ஸ்ப்ரியர்’ ஆகிவிடுவாரோ என்று!.
சிங்களப் பெயராகிய “சுதுகங்கை” தமிழில் “வெண்ணாறு” ஆகாமல் ”சுடுகந்தை’ ஆகி விட்டது! “சுடுகந்தை” எனப்படுவது அந்த ஆற்றை மட்டுமல்ல, எங்கள் தோட்டத்தையும் குறிக்கிறது.
மனிதனின் செயல்களுக்குரிய மூலங்களைக் கண்டுபிடிக்கும் வரையில், அல்லது இறைவன் படைத்த மனிதனை மனிதனே படைக்கத் தொடங்கும் வரையில் உலகம் அழியப் போவதில்லை!…
ஆற்றோரமாகத் தோட்டக்கணக்கு நிலத்தில் அமைந்திருக்கிறது இந்த மரம்.
மகாவலியின் திருப்பத்தால் ஆறு வேறு வழியில் புகழ் பெற்றுவிட்டது. ஆனால் தோட்டம்தான் கந்தையாகப் போய் விட்டது! ஐநூறேக்கர்த் தோட்டம் ஐநூறு ஒட்டுப் போட்ட கந்தை மாதிரி ஆகி விட்டது!
நினைக்க மனம் சுடுகிறது. பெயர் வைத்தவனின் புதை குழியில் போய் நின்று அவனை வாழ்த்த வேண்டும் போல் அரிக்கிறது! அவன் பெயர் வைத்ததால்தான் கந்தையாகியதா, அல்லது அவன் இது கந்தையாகும் என்று தெரிந்திருந்துதான் பெயர் வைத்தானா?….
என் பாலியத்தில் இவ்வாறு வாளிப்பாகத்தான் இருந்தது தோட்டத்தைப் போலுமே. காவிரி, கங்கை, நைல், தேம்ஸ், மிசூரி என்றெல்லாம் படித்த காலங்களில், இந்த ஆற்றை மனங்கொண்டே அவற்றுக்கு உருவம் வைப்பேன்.
செழிய தாவரங்கள் இரு புறமும் குடி கொண்டு சாமரம் வீச, பளிங்குப் பொடி மெத்தையான புது மணற் பொதியலின் மேல், தேன் கடலை நாட்டுக்குள் ஊற்றிவிட்டது போல், மெழுகி வரும் மணப்பெண்மை!
இப்போது அம் மணப் பெண், முரட்டுக் குடிகாரக் கணவனிடம் அகப்பட்டுக் கொண்ட ரௌத்ர கண்ணகியாகத்தான் எனக்குத் தென்படுகிறாள்!
அதே சாமரங்கள் கூடப் பாசான் பிடித்த தீ ஜுவாலைகளாகத்தான் தென்படுகின்றன!
அணை அடைப்பட்டு நீர் மெலிந்திருக்கும் சமயத்தில், தேன் கடல் ஒழுகிப் பரவிய பொதிமணல் இல்லாத : பாவம். ஏராளமான சொறி பிடித்த பாறைகள்தான் நீட்டிக் கொண்டிருக்கின்றன.
மகாவலி வெறியனின் பைசாசப் படர்வுகளால் சீரழிந்து போன ஒரு தீர்த்தம்!…
திடீரென்று படர்வான்; அவ்வாறே காணாமலும் போய் விடுவான். இந்த நீரில்லத்துக்குள் அழுக்கு விருந்தினர்கள் நுழைவது அபாயகரமானது இன்று!
தொழிலாளர்களின் அவநம்பிக்கையாலேயே சீதேவித் தனம் அழிந்து போன பிரமை!…
வெள்ளை மரத்தைப் பற்றிப் பேச வந்தவனுக்கு வெண்ணாறு குறித்தும் பேசாமலிருக்க முடியாது.
தோட்டத்தின் தெற்கு மேற்கு எல்லைகளாக, மூன்று நான்கு மைல்களுக்குச் சுற்றி ஓடி வரும் இந்த நீர் வேலியின் பரிச்சயம் எனக்கு ஏராளம்.
ஆடுபாலத் துறை, வண்ணான் துறை, கடவுத் துறை, மாரியம்மன் கோவில் துறை, கொட்டாங்காய் மரத்துத் துறை, பாலத்துறை எனப் பல துறைகள். டைனமைட் கரை, மீன் வெட்டிக் கரை என்று மீன் பிடித் துறைகள் வேறு.
அனைத்தையும் மீறிப் பசுமையாகத் தனித்துவம் கொண்டிருப்பது இந்த வெள்ளை மரத்துத் துறைதான்! நானும் என் நட்புகளும் அடிக்கடி குதூகலிக்கும் நீர்வெளி!
காலைக் குளிப்புகளை ஐந்தாறு நிமிஷத்துக்குள் வைத்துக் கொள்வோம் பனி நீர் பாய்வதால். விடுமுறைக் காலத்துப் பகற் குளிப்பென்றால் அது வித்தியாசம்தான்! அரை நாளாகும் இளஞ்சூட்டு நீர் பாய்வதால்.
வெள்ளை மரத்துத் துறையின் எதிர்க் கரைப் புண்ணியவான்கள், பருவத்துக்கு உருவம் கொடுக்கிற பாணியில் மா, பலா, தோடை, கொய்யா வாழையென நட்டதுமல்லாமல் வற்றாளை, மரவள்ளிகளையும் எங்களுக்காக வேண் டி என்பதைப் போல் படர விட்டிருந்தார்கள்.
விடுமுறை நாட்களின் தலைக் குளியல் அக்கரையில்தான்.
இரண்டாவதாக மணற் குளியல். தீக் கோழிகள் தோற்றுப் போகும்!
அதையும் முடித்துவிட்டுச் சாப்பிடுவதற்கு முன் கை அலம்பிக் கொள்வது மாதிரி ஆற்றில் இறங்குமுன் ஆற்றின் கரையோரமாகவே அயிரை மீன்களைக் கை வலைகளால் கலங்கடிப்போம்!
இந்தச் சடங்குகளோடு முழுகத் தொடங்குகையில், உச்சி லயத்திலிருந்து எங்கள் அம்மாமார்கள், “அடேஏஏஏய்…. வேலாய்ய்ய்ய்தோ ஓஓஓம்!” என்றோ, “எருமக் கெடாஆஆஆ!” என்றோ அவசரத்துக்குத் தகுந்த சுருதியில் சங்கூதுவார்கள்.
எங்கள் காதுகளில் நீரோ மணலோ நட்புகளோ அடைத்திருந்தால், பென்னாம் பெருத்த சிறாய்க் கம்புகளோடு எங்கள் அப்பாமார்கள் தப்படிக்க இறங்கி வருவார்கள் எங்கள் பின்னம் புறங்களில்!
அக்காலத்து மார்கழிகளில் தான் சுடுகந்தையாறு ஆவேசமாகப் பெருக்கெடுக்கும். வருஷாந்திரப் பரீட்சைகளில் சந்தோஷம் அடைந்தவர்கள் விருந்து கொள்வதுவும் அவ்வெள்ளத்தில்தான், தோஷம் பிடித்தவர்கள் தேற்றிக் கொள்வதுவும்தான் அவ்வெள்ளத்தில்தான் என்ற மாதிரிப் பெருக்கெடுக்கும்!
பத்துப் பதினைந்தடி ஆழத்துக்குக் கண் காணாமலும், ஐம்பதறுபதடி அகலத்துக்குக் கண் காணும்படியாகவும் மண்ணிறத்தில் பெருகி, வெள்ளை மரத்தடியைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு பாய்ந்து கழியும் அந்தப் பிள்ளைத்தாய்ச்சி ஆறு, சுழித்தும் நுரைத்தும் எங்களை லயங்களிலிருந்து சுண்டி இழுக்கும்.
றெயில்வே ஸ்ட்டேஷனில் வந்து நிற்கும் டீஸல் எஞ்சினின் ஓர் உம்காரத் தொனி அரைக் கட்டைக்கும் கேட்கும். லயத்திலிருந்து வேடிக்கை பார்க்க அற்புதமாக இருக்கும் அந்தப் பெருக்கு.
அந்தப் பிள்ளைத்தாய்ச்சி ஆற்றை நாங்கள் வாண்டுகள் றெயில் வண்டியாகவே ஆக்கிக் கொள்வோம்.
வெள்ளை மரத்து மேட்டில் ஓர் ஏழெட்டு அடிகளை அளந்து ஓடுவோம். வாங்கி அதாவது ஆற்றின் விளிம்பு வந்தவுடன், ஆற்றில் குபீரெனப் பாய்வோம். ஆகாயத்தில் கால்களை முன் பின்னாக, ஏதோ நீடப்பதுபோல், உதறிக் கொண்டு பாய்வோம். தொபீரென்று வெள்ளத்துள் திணிவோம்.
றெயில்வே போன்ற நீர்ப்போக்கில் இழுபட்டு நீந்தி எதிர்க் கரையை அடைகையில், கீழே இரும்புப் பாலத்துக் கால் மைலில் நிற்போம்.
பிறகு அரை மைலாக அதே பக்கத்தில் கரை வழியே நடந்து மேலே போகும்போது, அக்கரைப் புண்ணியவானின் தாக சாந்திகள்!
துரைவி ஐயா எங்களின் இளமைக் காலத்தில் இங்கே வாசம் செய்யவில்லை. வாசம் செய்திருந்தாரானால் அவர்தான் எங்களின் அக்கரைப் புண்ணியவானாகவும் இருந்திருப்பார்!…..
அந்தக் கரையில் நாங்கள் பாலத்துப் பக்கத்திலிருந்து கால் மைல் மேற்பக்கமாக வரும்போதே வெள்ளை மரம் நேருக்கு நேராக இருக்கும். மேலும் கால் மைல் போலப் போய்க் குதித்தால்தான் சரியாக வெள்ளை மரத்தடியில் இந்தப் பக்கமாகக் கரை சேர முடியும். அவ்வளவு வேகமான பெருக்கு!
இளம் கன்றுகள்; பயம் அறிந்திருக்கவில்லை.
பயமறியாததன் விசேஷ காரணம், வெள்ளை மரத்தையாதான்! அவரை வேண்டிக்கொண்டு பாய்ந்த எவருமே இது வரையில் வெள்ள ஆபத்திற் சிக்கியதாகச் சரித்திரமே இல்லை!
வெள்ளை மரமா, வெள்ள மரமா?
இரண்டுந்தானா, வேறொன்றேயா?…….
வெள்ளை மரம் ஆற்றிலிருந்து பத்துப் பதினைந்தடி உயரத்தில் இருக்கிறது வெள்ளை மரம்.
எப்படிப் புடைத்தெழும்பி ஒரு விரியனைப் போல நிற்கிறது!….
அம்மரத்தின் உண்மையான வகை என்னவென்று எனக்குத் தெரியாது. அக்காலத்தில் அறியும் அக்கறை இருக்கவில்லை. யாராவது காட்டிலாகாக்காரர் பெயர் தெரிந்து கூறினால்தான்.
மரமும் அப்படியொன்றும் வெள்ளையாக இல்லை; ஏதோ ஒரு சாம்பல் பூப்பு. வளர்ந்தோங்கிக் கிளை பரப்பி பிரம்மாண்டமாய் நிற்கிறது.
உயரம் நூறடிக்கும் மேல்தான் இருக்க வேண்டும். உயரம் காரணமாய்த்தான் மெலிந்த தோற்றத்தைத் தருகிறது மரம். அடி மரத்தைக் கட்டிப் பிடிக்க மூன்று பேர்களாவது வேண்டும்!
நீண்டும் முறுகியும் சப்பை வாள்களாய் எழும்பியும் மண்ணுள்ளும் பள்ளத்துள்ளும் திணிந்தும் கிடைக்கும் அதன் வேர்களைக் காணும்போது, ஜடாமகுடதாரியான ஒரு ரிஷி எத்தனையோ வருஷங்களாகத் தலை கீழாய் நின்று தவம் செய்வதாக ஒரு குறியீடு தோன்றும்!
எத்தனை வருஷங்கள் இருக்கும்?…. சரியாகக் குறிப்பிடக் கூடியவர் இல்லை. மார்க்கண்டேய மரம் என்றும் பெயரிட்டிருக்கலாம்! ஐம்பதோ எண்பதோ நூற்றுக்கும் மேலோ யாருக்குத் தெரியும் ?
அநுராதபுரியில் ஒரு மரம் ஆயிரக் கணக்கான வருஷங்களில் நிற்கும் போது, சுடுகந்தையில் ஒன்று சில நூறு வருஷங்களாக நிற்கக் கூடாதா?
எம்ஜியாரை இளமையானவர் என்று சிலாகித்துச் சிலாகித்தே அந்தாள் கண்ணூறு பட்டே கிழண்டு போனார்! பிறகு நம்பியார் என்றார்கள்!மேற்கேயும் இதே எவர்கிரீன் வம்பு! :பிரிஜட் :பாடோவாம்; ஜோன் கொலீன்ஸாம்…..
இவையெல்லாம் ஆப்பிள் ஜூஸ் சமாச்சாரங்கள். நமது கஞ்சித் தண்ணிக்கும் சோத்துக்கும் வருவோமா?
பஷீர் என் எழுத்து நண்பர். தாய் மொழி நண்பருங்கூட! அவருடைய மகள் கல்யாணம் பார்க்கப் போனோம். விடை பெறும் போது அவரிடம் ஓர் உண்மையை ஜோக் மாதிரிச் சமர்ப்பித்தேன்:-
“ஒங்க கல்யாணம் எப்ப?”
எனக்கு மட்டும் என்ன வாழ்கிறது? மூத்த பயல்களோடு வெளியே போனால் தம்பிமாரா என்கிறார்கள்!…
வெள்ளை மரத்தடியில் வளர்ந்ததால்தானா இப்படியொரு நரையிளமை எனக்குக் கிடைத்திருக்கிறது? இருக்கலாம்.
இருக்கவும் முடியாது! ஏனென்றால், என் தோட்டத்து நண்பர்கள் பலர் கருமுடி இருந்தும் கிழண்டு போயிருக்கிறார்களே! எப்படியோ, இந்த விளம்பரதாரிகளின் சோப்புகளையோ பவுடர்களையோ டொனிக்குகளையோ தொடாததால்தான் என் இளமை நின்று பிடிக்கிறதென்பதுதான் சத்தியம்!
ஆகா, என்ன இளமை இந்த வெள்ளை மரம்!
செத்துப் போன எங்கள் முத்தையாத் தேவர்த் தாத்தாவையும் நினைக்க வருகிறது. தொண்ணூறு என்றார் அம்மா. பகல் பதினொரு மணியைப் போல் வீட்டின் பின் பக்கமாகக் கட்டை வாழை நடுவதற்காகக் குழி வெட்டியவருக்கு மறு நாள் நாங்கள் குழி வெட்ட வேண்டியதாக இருந்தது.
இப்படிப்பட்ட மகா கம்பீரங்களோடு நிற்கிறது வெள்ளை மரம். ‘ஆற்றங் கரையின் மர’ மென்று எந்த நூற்றண்டிலோ ஓர் இந்தியப் புலமை பாடியது. இந்த நூற்றாண்டிலும் அது சுடுகந்தையில் எழுதப்பட்டிருக்கிறது!
பொது மக்களை ஸீட்டாலின் கொன்ற கணக்கில் தோட்டத்து மரங்களையெல்லாம் கோடரிகள் பழி வாங்கி விட்டன. மனித நேயம் மாதிரி இந்த ஒரே ஒரு மரம்தான் கோடரி மனம் படாமல் நிற்கிறது.
ரத்தோட்டைப் பாதைக்காரர்களுக்குக் காளி கோவில். அங்கே பணிவு, பயம், பணம்!
சுடுகந்தைப் பாதைக்காரர்களுக்கு வெள்ளை மரம்! ஆனால் இங்கே பணிவுதான் அதிகம் ! பயம் ஓரளவுதான்! பக்திப் பயம். அங்கே கொடுக்காது போகப் பயம்; இங்கே இருந்தாற் கொடுக்கலாம்! வெள்ளை மரத்தையாவுக்கு லௌகீகமே கிடையாது.
சிறுச்சிறு சதங்கள் மரத்தடியில் சேரும். யாருமே அவற்றை எடுப்பதில்லை. எடுக்கப்பயம்!
மரத்தோடு ஒரு பொந்து இருக்கிறது. அதுதான் உண்டியல். அதில் நேரடியாகவும் போடுவார்கள்; மரத்தடியிலும் வைத்துவிட்டுப் போவார்கள். அப்படி நிலப் பரப்பில் வைக்கப்படும் சில்லறைகளை யாராவது பிறகு பொறுக்கிப் பொந்தில் போட்டு விடுவார்கள்.
பொந்து எவ்வளவு தூரம் இறங்குகிறதென்று யாருக்கும் தெரியாது. அந்தக் காணிக்கை அப்படியே பாதாளம் வரையிற் போய்ப் பிறகு தேவ லோகத்துக்கு எடுத்துச் செல்லப்படுமாம். அவரவர் கணக்கில் அது பதியப்படுமாம். உண்டியல் இத்தனைக் காலமாகவும் நிரம்பாததற்குக் காரணம் இதுதான்!
சிறிது நாஸ்த்திகமாக நினைத்தோமானால்-
மரத்தடியைத் தோண்டினால், பளுவான ஒரு புதையல் கிடைப்பது நிச்சயம்! இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கும் இலக்கியவாதியைப் போன்றது இந்த உண்டியற் பணம்! மத்திய வங்கி இதற்கு உரிமை கொண்டாடலாம்.
ஆனால் யார்தான் நாஸ்த்திகராக விரும்புவது? வெள்ளை மரத்தையா அந்தப் பொந்தில்தானே வெள்ளை நாகமாகக் காவலிருக்கிறார்?……
தொடையளவு பருமனென்று தரிசித்திருப்பவர்கள் மனம் பேதலிக்கிருக் கையில், யார்தான் துணியப் போகிறார்கள்? அதிலும் மயிரளவே பெருத்துக் கிடந்த நிர்வாக நாகங்களையே தோண்டத் துணியாத சாதுக்களா?…..
வெள்ளைக்காரன் அக்காலத்தில் தோட்டத்தை ஆண்டிருந்த போது சொல்லியிருப்பான், “வெரி சிம்பிள் :கோட்” என்று!
மரத்தடியில் எவ்விதக் கட்டுமானமும் இல்லை. இப்போதெல்லாம் சரிந்தே கிடக்கும் ஓரடி நீள அகலத்திலான முக்கோணக் கல்தான் ஸ்வாமியம் முன்னரெல்லாம் கம்பீர மரியாதையிற் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும்.
சில நாட்களில் விருந்தாடி போன மாதிரியோ அவதார அவசியம் தீர்ந்து போன மாதிரியோ ஸ்வாமி காணாமற் போய் விடுவார். பிறகு யாராவது அது யாராகவும் இருக்கலாம் இன்னொரு புதிய ஸ்வாமியை ஆற்றுப் படுகையிலிருந்து தேர்ந்து கொணர்ந்து வைப்பார்.
சில திகதிகளில், சந்தனமோ குங்குமமோ அல்லது இரண்டுமோ ஸ்வாமியின் நெற்றிப் பிரிவில் தெரியும். சில அபூர்வங்களிற் பாலாபிஷேகமும் உண்டு.
“இன்னைக்கிப் பால் நல்லா வடியணும் சாமி!” என்று, காலை நேர்ச்சைகள் தவறுவதில்லை. நேர்ந்துகொண்டபடியாகப் பால் வடியாமற் போனாலும், பெயரே கிடைக்காமற் போனாலும்கூட, ஸ்வாமியைத் திட்டுவாரும் இல்லை; அடுத்த பொழுதும் வந்து நேராதாரும் இல்லை! அப்படிக்குகந்த ஓர் அப்பிராணிச் சாமி ஜனங்களைப் போலுமே!
ஸ்வாமியைப் போலுமே அடிக்கடி சரிந்து கொள்ளும் இரண்டடி உயரமான ஒரு சூலாயுதமும் முன்னர் காவலாக நிற்கும். சில உற்சவங்களில் அதன் தலைகளிலும் தேசிக்காய்களோ மஞ்சள் துணிகளோ ஏறியிருந்து பிறகு காணாமற் போகும்.
அடிக்கடி வெள்ளை மரத்தையாவுக்குக் கிடைப்பது சிதறு தேங்காய்தான். அதை மனிதரும் தின்னலாம்; விலங்கு, பறவைகளும் தின்னலாம். ஸ்வாமி, யாருமில்லாத வேளை சாப்பிடுவாராம். நாங்கள் வைத்துவிட்டுப் போய் விடுவோம்.
இருந்துநின்று ஸ்வாமிக்குப் பொங்கலோ பழமோ கிடைக்கவும் செய்யும்! அவருக்கென்று படைத்துவிட்டுப் போனதை மனிதர்கள் தின்னக் கூடாது! மிருக, பறவை, ஊர்வனவற்றின் உருவங்களில் ஸ்வாமி சாப்பிடுவார் என்பது ஐதீகம்.
எங்கள் வீட்டுக் காவல் நாய் ஒரு முறை அங்கே பொங்கல் திருவமுது செய்வதைக் கண்டு, நாங்கள் பல காலம் வைரவர் வாகனத்தைப் பக்தி சிரத்தையோடு பராமரித்து வந்தோம். பிறகு அதுவும் ஒரு நாள் திடீரென்று ஸ்வாமியைப் போலவே காணாமற் போய்விட்டது அதன் பிறகு அப்பா வேறு நாய் தேடவில்லை.
கற்பூரம் அல்லது ஊதுபத்தி வெள்ளை மரத்தையாவுக்கு நாள் தவறாமற் கிடைக்கும். தீபாவளி, திருக்கார்த்திகைக்குச் சிட்டி விளக்கெரியும் -காற்று அணைக்கும் வரையில்.
நான் கார்த்திகையில் பிறந்தவனாதலால், கண்டிப்பாக என் தீபம் இருக்கும்!
இவற்றோடு, வருஷத்துக்கு ஒரு முறை வரும் தோட்டத்து மாரியம்மன் கோவில் சாமி கும்பிடின் போது ஒரு பூஜையும் கிடைக்கும் வருஷ போனஸ் மாதிரி.
கோழி நேர்த்திக் கடன்தான் வெள்ளை மரத்தையாவுக்கு விசேஷம். சேவல் அல்லது கோழி. குஞ்சை நேர்ந்ததாகத் தெரியவில்லை.
நேர்ந்ததைக் கொண்டு வந்து காவு கொடுப்பார்கள். உரித்து, ஈரலை ஒரு குச்சியாற் குத்தி, நெருப்பு வளர்த்து வாட்டுவார்கள். அதிலொரு துண்டைப் பிய்த்தோ அப்படியேவோ ஸ்வாமியின் முன்னால் வைப்பார்கள் – இலையில் அல்லது ஸ்வாமி தலையில். ஒரு குச்சியிற் குத்தி நிலத்திலும் நட்டு வைப்பார்கள்.
இவருக்குப் பொருத்தமான பானம் திப்பிலிக் கள்ளுதான். சிரட்டை நிறைய வார்த்து வைப்பார்கள் -ஈரலுக்குப் பக்கத்தில். :போத்தலின் வாய்ப் பக்கத்தில் இருக்கும் ஈ, எறும்பு, பூச்சி எதையுமே துப்புரவாக்கத் தேவையில்லை ஸ்வாமிக்கு அவை பிடிக்கும் என்பதைப் போல!
காரசாரமான விஷயமானால்தான் சாராயம். கால் சிரட்டைதான் கணக்கு! அதிகமாகினால் நேர்ச்சை கெட்டுப் போய் விடலாம்.
எனக்குத் தெரிந்த வரையில் கசிப்பு இல்லை! தோட்டத்திலோ அருகிலோ அது காய்ச்சப்படாததால் இருக்கலாம்!
ஒரு சுருட்டையும் கூடவே வைத்துவிடுவார்கள். பீடி, சிகரெட் வைத்ததாக நினைவில்லை. தீப்பெட்டியும் தேவையில்லை. அதுதான் விளக்கு இருக்கிறதே!
இதன் பிறகு, நேர்ச்சைக்காரர் ஏதாவது சொல்வதற்கிருந்தாற் சொல்லிக் கொள்ளுவார். என்னைப் போல் யாராவது பள்ளிக் கூடம் போகிறவர்கள் கிட்டத்தில் நின்றிருந்தால் தேவாரம் பாட வேண்டும். அவ்வளவுதான். பானத்தில் மீதியை எஞ்சியிருக்கும் ஈரலோடு முடித்துக் கொள்வார்கள். எங்கள் வாய்களில் வேண்டுமானால் போத்தலின் வியர்வை போல் ஒரு சொட்டு விழும்! கோழியை வீட்டுக்குக் கொண்டு போய் விடுவார்கள்.
மறுபடியும் – ஜனங்களைப் போலுமே, சாப்பாட்டிலும் மிகவும் சிக்கனமான ஸ்வாமி! ஜனங்களோடு ஒத்துப் போகத் தெரியாத ஸ்வாமியாயிருந்தால் இவ்வளவு காலம் தள்ளியிருக்க முடியுமா?
ஜனங்களுக்கு வெறும் பாதங்கள்தான். சில பித்த வெடிப்புக்களுக்கோ கல்யாணங்களுக்கோ தூரப் பயணங்களுக்கோ மாத்திரம் நூற்றுக்கு ஒரு வீதம் செருப்பு இருக்கும். துரை, கண்டாக்கு, கிளார்க்கரையாமார்களைக் கண்டால் கழற்றிவிட்டு ஒதுங்க வேண்டும். அதற்காகவே பலர் வீணாகச் செருப்புக்குக் காசு செலவழிப்பதில்லை.
வெள்ளை மரத்துக்கும் இந்த மரியாதை உண்டு. செருப்பைக் கழற்றிய பாதங்களின் மேல் கைகள் உயரும்; தலை தாழும். மறுபடியும் செருப்புகள்.
ஆனால் சில புதிய வாரிசுகளும் பாடசாலைப் பசிகளும், கண்டாக்கையாவையோ கிளார்க்கரையாவையோ துரையையோ வெள்ளை மரத்தையாவையோ பொருட்படுத்துவதே இல்லை! ஒரு வேளை செருப்பைத்தான் கழற்ற வேண்டும், சப்பாத்தை அவிழ்க்கத் தேவையில்லை என்பது போல் ஒன்றாக இருக்குமோ என்னவோ!
வாகனங்களில் போவோர் வருவோர், வெள்ளை மரத்தையா முன்னால் வந்ததும் ஒரு தரம் எழும்பி உட்காருவார்கள் – நாங்கள் நகரத்தில் பிண ஊர்வலம் போகக் கண்டால் :பஸ்ஸில் எழும்பி உட்கார்வதைப் போல.
அந்தக் காலத்தில் டிறகட்டர் கிளீனர் கணபதிப்பிள்ளை ஓடிக்கொண்டிருக்கும் டிறக்ட்டரில் எழும்பி நின்று தலையில் மூன்று தரம் குட்டிக் கொள்வான். வண்டியின் ஆட்டத்தால் குட்டுகள் நாலைந்தும் விழுந்துகொள்ளும்.
டிறைவர் அமரசேக்கர சிங்களவர். எழும்ப மாட்டார். அவர் அரச மரத்தைக் கண்டால்தான் எழும்புவார்.
புதிதாகத் தோட்டத்துக்கு வந்திருந்த அந்தோணிமுத்து ஒரு தமிழனாயிருந்தும் ஒரு தமிழ் சாமியைக் கண்டும் எழும்பாதது குறித்து நாங்கள் சிலர் அக்காலத்தில் அவன் மீது அந்நியம் கொண்டிருந்ததுண்டு.
கல்யாணக்காரர்கள் வந்தாலும் போனாலும் ஓர் அர்ச்சனை கண்டிப்பாக உண்டு. எவர் வேண்டுமானாலும் பூசாரியாகிக் கொள்ளலாம்.
புதிய மனித உயிர் தோட்டத்துக்குள் வந்தால், பெற்றவர்களும் பெரியவர்களும் அர்ச்சனை செய்து கும்பிட்டுக் கொள்வார்கள். பழைய மனிதச் சடலம் வெளிப் போக நேர்ந்தால் தூக்கிச் செல்பவர்கள் கும்பிட்டுக் கொள்வார்கள். திரும்பி வரும்போது வெள்ளை மரத்துத் துறையிற் குளித்துவிட்டுப் பூஜை பண்ணியும் பண்ணாமலும் கூடப் போவார்கள். ஸ்வாமி வாய் திறக்கமாட்டார்.
என்னைப் போன்ற இருட்டுப் பயந்தாங் கொள்ளிகள் இப்பாதையில் தனித்துச் செல்வதெல்லாம் வெள்ளை மரத்தையா இருக்கிறார் என்ற துணிவில்தான்!
பஸ்ஸிலிருந்து தனியாக்கப்பட்டவுடன் காளி முதல் அபயம் அளிப்பாள். கையில் வெளிச்சம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நிலவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், சீட்டியோ சினிமாப் பாடலோ கால்களை நடக்க வைக்கும். வெள்ளை மரம் நேர்ப்பட்டவுடன் இவர்தான் அடுத்த அபயம்.
பயம் போக்கிக் கொள்ளும் பயத்தில் வெள்ளை மரத்தையாவுக்கு ஒரு கும்பிடு. வெள்ளை நாகம் தெரிகிறதா என்றும் ஓர் ஓரப் பார்வை! சின்னப் பசங்களை இது பயமுறுத்தாது!
மனம் ஓரளவுக்குத் தெளிந்து கொடுக்கும். அடுத்த சீட்டியோடோ சினிமாப் பாடலோடோ வீடு! எனக்கென்றால் தேவாரம்தான்!
மலையுச்சியின் கீழ்ச்சரிவில் தொங்குகிறது எங்கள் லயம் – சரிவேற்பட்டால் சாவதற்குத் தயார் என்பது போல. எங்கள் லயம் வெள்ளை மரத்தைப் பார்த்து இருக்கிறது. எங்கள் லயத்தின் வலக்கைப் பக்கமாக மேற்பக்கத்து மலையில் ஒரு மரம் இருக்கிறது. அரச மரம். நாலாம் நம்பருக்கு அம்மரத்தின் வழியாகத்தான் போக வேண்டும்.
எங்களின் பள்ளிக்கூடத்துக் காலத்தில், அடுத்த வீட்டிலிருந்த முதியான்ஸே, அரச மரத்தைக் கௌரவப்படுத்த முனைந்தார். எத்தனையோ தடைவைகள் மாத்தளையிலிருந்து சிலைகளைக் கொண்டு வந்து இந்த மரத்தடியில் வைத்துப் பார்த்தார். ஒரு முறை தலதாவிலிருந்தும் கொண்டு வந்து வைத்தார்.
வெள்ளை மரம் அவற்றை அவர் வைக்க வைக்க முயலோ காட்டுப் பன்றியோ இழுத்துக் கொண்டு போய்விடும். விளக்கும் போட்டுப் பார்த்தார். சரிவரவேயில்லை. அதன் பிறகு முயற்சியைக் கைவிட்டு விட்டார்.
எங்கள் லயத்தின் இடது பக்கமாகப் பார்த்தால், பள்ளத்தில் வெள்ளை மரம் தெரியும். இன்னும் அப்பால், லயத்தின் மட்டத்துக்கு, மாத்தளையின் மேற்கு எல்லையான அழகர் மலை விசாலமாகத் தெரியும் – ஆகாயக் கோட்டை மாதிரி.
இந்த அழகர் மலையிலிருந்து இந்த அரச மரத்துக்கு அமாவாசை இரவுகளில் ஒரு முனி பாயுமாம். அந்த முனி, அரச மரத்துக்குப் பாய்ந்த கையோடு, வெள்ளை மரத்தில் மறுபடியும் பாய்ந்துதான் சங்கமமாகுமாம்!
அக்காலத்து இரவுகளில் எங்கள் தந்தையார் வெளியே தெருவே போய் வந்தாரானால், இந்தக் கதை மறு நாளிலிருந்து தோட்டம் பூராவும் பரவிவிடும்!
பிரதி பலன்:-
அரச மரத்துக்கும் வெள்ளை மரத்துக்கும் கோழிக் காவுகள்!
எனது சிறு பராயத்தின் சிலேட்டுமக் காலங்களில், நான் பயங்கரக் கனவுகள் காண்பதுண்டு. ஒரு பேய் அல்லது அமானுஷ்யம் என்னைக் கட்டிப்பிடித்து இறுக்கிக் கொல்லப் போவதாகப் பயமுறுத்தும். அந்தக் கனவை நான் வேறிடத்திலிருந்து கண்டாலும், எங்கள் லயத்தின் திண்ணையிலிருந்து காண்பதாகத்தான் இருக்கும்! மேற் பக்கமாக உள்ள அரச மரத்துப் பேய்தான் என்னை அப்படிக் கட்டிப் பிடித்துக் கொல்லப் போவதாக இருக்கும்!
எவ்வளவோ முயற்சிப்பேன் – கத்துவதற்கு. ஆனால் சத்தமே வராது! மூச்சு விடவே முடியாதது போல் இருக்கும்! அப்பாவிடம் சொன்னால் கோழிக் காவுதான்.
இந்தக் கனவு இந்தக் காலத்திலும் தொடர்வதுண்டு! ஆனால் கோழிக் காவுதான் இல்லை அப்பா இல்லாததைப் போல.
இப்படி எல்லாம் இந்த வெள்ளை மரம் தோட்டத்து ஜனங்களின் வாழ்க்கையோடு பிணைந்திருந்தது அன்று.
இன்றுதான் அவர்களுக்கு வாழ்க்கையே இல்லாது போய் விட்டதே!….
ஒரு மரத்தைப் பற்றி, ‘வெள்ளை மர’த்தைப் பற்றி எனக்குத் தெரிந்ததையெல்லாம் எழுதிவிட்டு வாசித்துப் பார்த்தேன்.
மனக்குறளி குறிப்பிட்ட ‘மரம்’ இதுவாக இராது போல் பட்டது! அதன் குறியீடென்ன, இந்த மரத்தின் குறியீடென்ன?
தெளிவு பிறக்கலாம் என்று மரத்தைத் தொடர்ந்தேன்.
ஒரு மட்டு மரியாதை இல்லாத மரியாதை கிடைத்தது வெள்ளை மரத்துக்கு. இத்தனைக்கும் வெள்ளை மரம் அவர்களுக்கு என்னதான் செய்திருக்கிறது? எல்லாம் குருவி உட்கார்ந்த கதைதானா?
மக்களின் நிலைதான் இன்று இப்படி, மரத்தின் நிலை என்ன?
எங்கள் தேவர்த் தாத்தாவைப் போல் நிற்கிறதா?
பிற்காலத்தைய ஈரான் ஷாவைப்போல் நிற்கிறதா?
அந்தத் தோட்டத்தில் மிஞ்சிக் கிடப்பவர்கள் அனைவருமே முஸ்லிம்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ மாறிவிட்டதைப் போல் நிற்கிறதா?
ஒரு மரத்தைப் பற்றி இதற்கு மேல் என்னதான் எழுதுவது?
ஓர் அறை விழுந்தாற் போல் மீண்டும் பளீரென எனக்குள் மின்னியது.
அந்த வெள்ளைமரம் என்னைப் போல் நிற்கிறது!
அல்லது
நான் அந்த வெள்ளைமரம் போல் நிற்கிறேன்!
மனக்குறளி முற்றுப் புள்ளி இட்டது:-
“பிறகேன் உன் மக்களைப் பற்றி நீ குறைப்படுகிறாய்?”
– வீரகேசரி.
– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.-