இரண்டு மேதைகள் சந்தித்த போது





மோனா லிசாவை வரைந்த விஞ்ஞான மேதை டாவின்சிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. பத்து வருட கடின உழைப்பிற்கு பிறகு, பல விதமான தோல்விகளுக்குப் பிறகு, அவர் வடிவமைத்த காலப்பயண இயந்திரம் இறுதியாக வேலை செய்தது. தன்னுடைய முதல் காலப்பயணத்தில் எந்த வருடத்திற்கு செல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார். தீவிர யோசனைக்குப் பின், எதிர்காலத்திற்குச் சென்று அங்குள்ள இளம் விஞ்ஞானிகளை சந்திக்கலாம் என்று முடிவு செய்தார்.

அவரது முதல் சந்திப்பு இருபத்தி மூன்று வயதான இளம் விஞ்ஞானி ஐசக் நியூட்டனுடன். கால இயந்திரத்தில் பயணித்து 1666ம் வருடத்திற்கு டாவின்சி வந்து இறங்கிய போது, இளம் நியூட்டன் தனது குழந்தை பருவ வீட்டிற்குப் பின்னால் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தார். நியூட்டன் தனது மானசீக குருவான டாவின்சியை சந்தித்ததில் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த இரண்டு மணி நேரம் இருவரும் அறிவியல், கலை மற்றும் பொறியியல் என்று பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் உரையாடலில் மிகுந்த ஆர்வத்துடன் மூழ்கியிருந்ததால், நியூட்டன் தனக்கு பக்கத்திலிருந்த மரத்திலிருந்து விழுந்த ஆப்பிளை கவனிக்க தவறி விட்டார்.