இயற்கைத்தாய்!




பஞ்சம் என்பதே இல்லையடா, பண ஆசைதான் உனக்குத்தொல்லையடா.
வஞ்சம் கொள்வதே பலரின் வேலையடா, வறுமையில் உள்ளவன் கோழையடா.
பறவைகள் போலே வாழ்ந்திடடா, பசியை தினமும் போக்கிடவே பழ மரங்களைத்தேடி சென்றிடடா.
பாத்திரம் எடுப்பதை விட்டிடடா, நல்ல பாத்திரமாக வாழ்ந்திடடா.
ஆத்திரம் வருது உனைக்கண்டால், அன்னச்சத்திரம் போவதை நிறுத்திடடா.
இயற்கைத்தாயை மறந்தாயடா, இலவசம் பெறவே சென்றாயடா!
பிச்சையாக வாங்கிய உணவுப்பொட்டலம் கட்டப்பட்டிருந்த பழைய நாளிதழின் காகிதத்தில் வெளியாகியிருந்த மேற்கண்ட கவிதை நடையில் இருந்த கருத்துக்களை கண்களில் பட்டதும் படித்துப்பார்த்த இளைஞனான ரஞ்சன் அந்த உணவுப்பொட்டலத்தை தனதருகே கையேந்தி நின்ற, நடக்க இயலாத வயதான ஒருவரிடம் கொடுத்து விட்டு அன்னச்சத்திரத்தை விட்டு வெளியேறினான்!

அந்த ஊரில் குடியிருக்கும் வசதியான ஒரு நல்ல மனிதர் தனது சொந்த செலவில் ஓர் அன்னச்சத்திரம் கட்டி, ஏழைகளும், உழைக்க இயலாதவர்களும் தினமும் வயிறார உண்டு உறங்கிட வழிவகை செய்துள்ளார்!
தனது இடைவிடாத மது பழக்கத்தால் இருந்த சொத்துக்களை இழந்த பின் வேலைக்குப்போக விரும்பாமல், அன்னச்சத்திரத்தில் தன்னை அனாதை எனக்கூறி தங்கியதோடு, அங்கே கொடுக்கும் உணவை வாங்கி உண்டவன் யாராவது இரக்கப்பட்டு பணம் காசு கொடுப்பதை மது வாங்க பயன்படுத்திக்கொள்வான். இந்த வாழ்க்கை அவனுக்கு பழக்கமாகி விட்ட நிலையில் இன்று படித்த கவிதை மனதை புரட்டிப்போட்டதை உணர்ந்தான்!
கால் போன போக்கில் காடுகள் நிறைந்த பகுதிக்குச்சென்றான். பறவைகள் பழ மரங்களில் பழங்களைத்தின்று பசி தீர்ப்பதைக்கண்டான். தானும் கீழே கிடந்த சில பழங்களை எடுத்துத்தின்றான். பசி தீர்ந்தது. ‘அடடா… வாழ்க்கை இவ்வளவு எளிதாக இருக்கிறதே….?!’ என நினைத்தபடி அருகிலிருந்த நீரூற்றில் தாகம் போக்கினான். மரத்தடியில் படுத்த போது நன்றாக உறக்கம் வந்தது!
இயற்கையை நினைத்தான். மனிதர்களுக்குத்தேவையான அனைத்தையுமே படைத்து விட்டுத்தான் மனிதர்களைப்படைத்திருக்க வேண்டும். காற்று வீசுகிறது. மழை பெய்கிறது . மரங்கள் வளர்ந்து பசிக்குப்பழங்களைத்தருகின்றன. அதைப்பறிக்க வேண்டுமென்பது கூட இல்லை. சாப்பிடும் பக்குவத்தில் தானாக உதிர்கின்றன. பார்த்து எடுத்து தின்ன சூரியனால் வெளிச்சம் கிடைக்கிறது!
மனிதர்கள் தேவையற்ற விசயங்களுக்காகக்கவலை கொண்டு விலை மதிக்கமுடியாத உடலைப்பேணி காக்காமல் விட்டு விட்டு நோயால் வாடுகின்றனர். இப்பூமியில் வாழ்வது மிக,மிக எளிதாக உள்ளதே…!
விதைகளைக்கூட பறவைகளின் எச்சங்கள் மூலமாகவும், காற்றைப்பயன்படுத்தியும் காடுகளில் இயற்கை தாமாகவே பயிரிடுகிறது. இன விருத்திக்கு ஆண் பெண் எனப்படைத்த நிலையில் , மிருகங்களிடமிருந்து காத்துக்கொள்ள அறிவைக்கொடுத்து, ஞாபக சக்தியையைக்கொடுத்து, பெற்ற தாயை விட மேலாகக்காக்கிறதே…! இயற்கைத்தாயின் செயல்பாடுகளை எண்ணிப்பார்க்கும் போது அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது!
இயற்கை பாகுபாடு பார்ப்பதில்லை. மரங்கள் மனிதர்களைப்போல தான் உருவாக்குவதை தானே உண்பதில்லை. மனிதர்களுக்குள் தான் வஞ்சகம் ஏற்பட்டு பலருக்கு பயன்படுவதை ஒருவரே எடுத்துக்கொள்ளும், அபகரிக்கும் சூழ்ச்சியால் வேறுபாடு உண்டாகும் நிலை, வறுமை, பசிக்கு உணவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பலரின் உழைப்பைக்கொள்ளையடித்து, ஏமாற்றி வாழ்பவர் உழைத்தவர்களது செயலால் கிடைத்ததை சிறிதாக எடுத்து அவர்களுக்கே பிச்சையாகப்போடுகிறார்.
ஒரு நாள் உறவினர் ஒருவர் ரஞ்சனின் நிலையைக்கண்டு “சொத்தப்பூராத்தையும் அழிச்சுட்டு எப்புடி வாழப்போறே?” எனக்கேட்டதற்கு, “சொத்துப்போனா வாழமுடியும், செத்துப்போனாத்தான் வாழ முடியாது…” என அறிவாளித்தனமான பதிலைக்கூறி அவர்களது வாயை அடைத்து விட்டான். ‘இத்தனை வளங்கள் பூமியில் இலவசமாகக்கொட்டிக்கிடக்கும் நிலையில் வறுமையால் தற்கொலை என்பது அறியாமை’ என தத்துவம் பேசினான்.
ரஞ்சன் மற்றவர்களைப்போல கஞ்சன் கிடையாது. தனக்கு அனுதாபப்பட்டு கொடுக்கப்படும் தர்மத்தால் கிடைக்கும் பணத்தைக்கூட பிறருக்கு கொடுத்து விட்டு பசியுடன் இருந்து விடுவான். மது குடிக்கும் போது பணம் தீரும் வரை அனைவருக்கும் வாங்கிக்கொடுத்து விடுவான். கையிலோ, பையிலோ பத்து ரூபாய் கூட வைத்துக்கொள்ள மாட்டான்.
காட்டு வாழ்க்கை அவனது மனநிலையையே முற்றிலுமாக மாற்றி விட்டது.மதுவின் ஞாபகமே இல்லாமல் போனது. பணம் தேவைப்படவில்லை.’ துறவிகள் இதனால் தான் காட்டில் வாழ்கின்றனரோ…? ‘ என நினைத்தான்.
மரங்கள் இல்லாத இடங்களில் தினமும் செடிகளை நட்டு நீரூற்றினான். சில வருடங்களில் அவ்விடம் சோலைவனமாக காட்சி தந்தது. பறவைகளின் வருகை அதிகரித்தது. தினமும் பழங்களை எடுத்துச்சென்று அருகே உள்ள கிராமத்தில் இருக்கும் முப்பது வீடுகளின் முன் அவர்கள் எழுவதற்க்குள் வைத்து விட்டு வந்து விடுவான். ‘யார் பழங்களை வைப்பது?’ என புரியாமல் இருந்த கிராம வாசிகள் விழித்திருந்து ரஞ்சனின் செயல் என தெரிந்த பின் அவனை தெய்வப்பிறவியாக எண்ணினர். ‘அவன் முன் சென்றால் மறுநாள் வராமல் போய்விடுவானோ….?’ என நினைத்ததால் அவன் வந்து பழம் வைத்துச்சென்ற பின்பே வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
இயற்கை வளத்தை இலவசமாக்க திட்டமிட்டான். ஒவ்வொரு வீட்டிற்க்கும் பழம் வைத்தவன், பழம் தரும் செடிகளை அதனோடு வைத்தான். அவன் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அனைவரும் வீட்டுத்தோட்டமாக செடிகளை நட்டு வளர்த்தனர்.
தன் திட்டத்தை நகரத்துக்கும் விரிவு படுத்தினான். ‘தன் உணவு தனது சமையலறையில்’ என்பதை மாற்றி ‘தன் உணவு தனது வீட்டுத்தோட்டத்தில்’ என மாற்றினான். மீன் பிடித்துக்கொடுப்பதை விட மீன் பிடிக்கக்கற்றுக்கொள்ள வேண்டும் எனும் பழமொழியின் கருத்துப்படி பழங்களைக்கொடுத்தவன், பழங்கள் தரும் செடிகளைக்கொடுத்ததன் விளைவாக சிலநூறு, ஆயிரங்களாக, லட்சங்களாக, கோடிகளாக, நாடு முழுவதும் பின்பற்றப்பட்டதில் பெருமிதம் கொண்டான்.
பசி, பசி என்று பாத்திரத்தைத்தூக்கும் பிச்சைக்காரர்களைப்பார்ப்பதற்கு பதிலாக எந்த வீட்டிற்கு சென்றாலும் பழங்களை பணமாக்காமல் பைகளில் நிரப்பி உறவுகளுக்கும், நட்புகளுக்கும், பாதையில் செல்வோருக்கும் தேடித்தேடி, ஓடியோடிக்கொடுக்கும் பழக்கத்தைப்பார்த்துப்பூரித்துப்போனான். அனைத்துக்கும் மேலாக தங்கள் வீட்டில் காய்த்த பழங்களை தங்களின் தேவை போக மீதமிருப்பதை தங்கள் வீட்டின் முன் ஒரு பெட்டியில் வைத்து விடுவதும், அதை பசி உள்ளவர்கள் எடுத்துச்செல்வதும் விந்தையாக, வித்தியாசமாக இருந்தது. கொடுப்பது தன்மை இயற்கைக்கு மட்டுமே உண்டு. மனிதனால் கொடுக்கப்படுவது கூட பிச்சையென, பிரதிபலன் எதிர்பார்க்கும் நிலை ஆகி விடுமென நினைத்த மக்கள் உரிமையுடன் எடுத்துச்செல்லும் வாய்ப்பைக்கொடுத்தனர்!
சொத்துக்களை இழந்து வீட்டில் உண்ண வழியின்றி பிச்சையெடுத்து வாழ்ந்த தன் நிலையை ஒரேயொரு கவிதை, நாடே பிச்சையெடுக்காமல் வாழும் வழியை தன் மூலம் காட்ட வைத்ததை எண்ணிய போது எழுத்தின் வலிமையைப்புரிந்து கொண்ட ரஞ்சன், ‘உணவு விலையில்லை’ என மக்களுக்குப்புரிய வைத்தது போல் கல்வியும் விலை கொடுக்காமல் அனைவரையும் பெற வைக்கும் நிலைக்கு மாற்றிட வேண்டும் எனும் யோசனையில் ஆழ்ந்தான்!