இது கதையல்ல! – ஒரு பக்கக் கதை






மூன்றாம் வகுப்பு படிக்கும் பேத்தி இலக்கியா வற்புறுத்திக் கேட்டதால், பார்வதி பாட்டி கதை சொல்லத் தொடங்கினாள்…
‘‘ஒரு ஊர்ல, ஒரு நிலா…’’
‘‘ஐயோ பாட்டி! ஊருக்கு ஒரு நிலால்லாம் இல்ல. உலகத்துக்கே ஒரே ஒரு நிலாதான்..!’’ -கதையின் ஆரம்பத்திலேயே குறுக்கிட்டுத் திருத்தினாள் இலக்கியா.

‘‘சரி… அந்த நிலாவுல, ஒரு ஆயா வடை சுட்டுக்கிட்டு இருந்தாளாம்…’’
‘ப்ப்ர்ர்ர்…’ என்று சிரித்தாள் இலக்கியா. ‘‘நிலாவுல ஆக்ஸிஜனே கிடையாது பாட்டி. அப்புறம் எப்படி அங்கே அடுப்பு எரிக்க முடியும், வடை சுட முடியும்?’’
‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. எப்படியோ சுட்டாங்க. அப்போ அங்கே ஒரு காக்கா வந்து…’’ – பார்வதி பாட்டி முடிப்பதற்குள், ‘‘தப்பு, தப்பு! காக்காவால நிலாவுல உயிர் வாழவே முடியாது!’’ என இலக்கியா இடைமறிக்க, கடுப்பானாள் பாட்டி.
‘‘அப்போ நரியாலேயும் அங்கே போக முடியாதுன்னுவே! போ! என்னாலயும் உனக்குக் கதை சொல்ல முடியாது!’’ என்று முறைக்க,
‘‘போ பாட்டி… கதைன்னாலும் ஒரு லாஜிக் வேணாமா?’’ என்று சிணுங்கியபடியே எழுந்து போனாள் இலக்கியா.
அதன்பிறகு, பார்வதிப் பாட்டி அந்தக் கதையை மறந்தும்கூட யாருக்கும் சொல்லவில்லை.
– மே 2006