இதுவும் கூட புரட்சி தான்!





கிருஷ்ண குமார் அந்த காலனியில் குடியிருக்கும் தன் நண்பர்களுக்கு பிறந்த நாளன்று ஸ்டார் ஹோட்டலில் தடபுடலாக விருந்து கொடுப்பது வழக்கம்.
அந்த காலனிக்கு கிருஷ்ண குமார் தான் குடியிருப்போர் நல சங்கத் தலைவர். மற்ற காலனிவாசிகளைப் போல சாதாரண தொழிலாளியாகத் தன் வாழ்க்கைப் பயணத்தை அதே காலனியில் தொடங்கிய கிருஷ்ண குமார் தன் கடின உழைப்பால் இன்று கோவையில் ஒரு மிகப் பெரிய பம்பு செட் கம்பெனியின் முதலாளியாக மாறி விட்டார்..
ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்த நட்பை மறக்காமல், எல்லோரிடமும் இன்றும் அதே நட்புடனேயே பழகி வந்தார். அந்த காலனி நண்பர்களுக்கு வருடா வருடம் தன் பிறந்த நாள் அன்று ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுப்பது வழக்கம்.
அதனால் அந்த காலனி நண்பர்கள் இந்த வருடமும் கிருஷ்ண குமாரின் பிறந்த நாளை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருந்தனர்.
கிருஷ்ண குமாரின் பிறந்த நாளன்று காலையில் அவர் வீட்டின் முன் சாமியானா போட்டு, நாலு வரிசையில் ஐம்பது சேர்கள் போட்டார்கள். அதன் பின் காலனி நண்பர்களுக்கு. அழைப்பு போனது.
வருடா வருடம் இரவு தான் அவர் ஹோட்டலில் விருந்து கொடுப்பார். அன்று காலையிலேயே அவர் கூப்பிட்டு அனுப்பியது அதிசயமாகவே இருந்தது! குழப்பத்தோடு வந்த நண்பர்களை உட்கார வைத்து, வீட்டிலிருந்து டிபன் கொண்டு வரச் சொல்லி எல்லோருக்கும் வழங்கினார்.
“ நண்பர்களே!..இந்த வருஷம் என் பிறந்த நாளை சற்று வித்தியாசமாக கொண்டாட இருக்கிறேன்….இந்த வருஷம் கோடை வெயில் தகிக்கிறது. ஒரு காலத்தில் நம் கோவையை ஏழைகளின் ஊட்டி என்று சொல்வார்கள். இன்று தினசரி பேப்பரைப் பார்த்தால், சென்னையை விட கோவையில் தான் வெயில் வாட்டி எடுக்கிறது. அதற்கு காரணம் நாம் எல்லா மரங்களையும் கடந்த சில வருடங்களில் வெட்டி விட்டோம்…அதனால் பருவ மழையும் பொய்த்து விட்டது. வெயிலும் நம்மை வாட்டி எடுக்கிறது.
அதை தடுக்க ஒரே வழி மீண்டும் நிழல் தரும் மரங்களை உருவாக்க வேண்டும்…அதற்கு முதல் கட்டமாக நம்ம காலனியில் உள்ள ஐம்பது வீடுகளுக்கு முன்னாலும் ஐம்பது மரங்கள் நடப்பட்டு, அதற்கு கம்பி வேலியிட்டு, உரம் போட்டு, தண்ணீர் பாய்ச்சி பாதுகாத்து அடுத்த வருஷமே ஆள் உயரம் வளரக்கூடிய சில மரங்களை நடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
அந்த ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வதற்காகவே கோவையில் ஒரு கம்பெனி இருக்கிறது. அதன் உரிமையாளர் திரு ஜெகதீசன் இங்கு வந்திருக்கிறார்..அவரிடம் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் பேசி அழைத்து வந்திருக்கிறேன். உங்கள் ஆசியோடு முதல் தவணையாக ஐம்பதாயிரத்திற்குரிய ‘செக்’கை அவருக்கு வழங்க இருக்கிறேன்.
அடுத்து வரும் என்னுடைய மூன்றாம் பிறந்த நாளுக்குள் நம் காலனியில் இரு புறமும் மரங்கள் வளர்ந்து நிழல் தருவதோடு, குளிர்ந்த காற்றும் வீச வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்.
நம் காலனி பசுமை பூங்காவாக மாறும் வரை, என்னுடைய பிறந்த நாள், என் வீட்டு வாசலிலேயே சிற்றுண்டியோடு கொண்டாடுவதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்காதென்று நம்புகிறேன்!.. நண்பர்களே இதில் உங்கள் எண்ணம் என்ன?…”
நண்பர்கள் செய்த பலத்த கரகோஷம், இதை விட சிறப்பாக பிறந்த நாளைக் கொண்டாட முடியாது என்பதை உணர்த்தியது! இதுவும் கூட ஒருவகையில் புரட்சி தான்!
– பாக்யா 2016 நவம்பர் 25 இதழ்