கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 19, 2025
பார்வையிட்டோர்: 6,108 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஹேமாவிற்கு அது காதலா என்று தெரியவில்லை. சத்யனின் சிரிப்பு, சுறுசுறுப்பு, சீரான தோற்றம் எல்லாம் பிடித்திருந்தன. அவன் அருகிலிருக்க தனி உல்லாசம் உணர்ந்தாள். 

ஆனால் அவனுடன் காலம் முழுதும் இணைந்து நடக்குமளவு இந்தப் பிடித்தம் பலப்பட்டு நேசமாகி… ‘ஆழ்ந்த காதல் முத்தாய் இறுகுமா’ என்று புத்திசாலிகள் காதலிப்பது சாத்தியமேயில்லை. என்று வாதிடும் ராம் அவள் – நின்று யோசித்தாள். 

இயல்பான பார்வை, பேச்சு மீறி அவ்வப்போது ஜாடையான சிரிப்பு – வார்த்தைகள் சில நேர்ந்தபோதும் அவள் தன் மனதை முழுவதுமாய் இழந்துவிடவில்லை. 

சத்யன் அவள் வீட்டு ஒற்றை அறை மாடி போர்ஷனில் குடியிருந்தான். பெரியப்பாவின் சிபாரிசுடன் அவர் ஊரிலிருந்து வந்ததால் பிரம்மச்சாரியான அவனுக்கு மேல்வீட்டைத் திறந்துவிட வேண்டிய நிர்ப்பந்தம் அப்பாவுக்கு. ஆனால் மூன்றே மாதங்களில் ‘அண்ணாச்சி சொன்னதுபோல குணமான பையந்தான். தவிர அவத் தர்ற முந்நூறு ரொம்ப ஒத்தாசைஹேமா. பென்ஷன் பணம், சம்பளத்தில் மூணுல ஒரு பங்குதானே? ஒரு வருஷமா செலவை இழுத்து பிடிக்கச் சிரமப்பட்டேன்” என்றார். அப்பாவாயும் மனசும் திறந்து பேசுவது என்பது அன்றாட நடப்பல்ல. 

”சொந்த வீடுதானப்பா நம்மது?” 

“காலங்கடந்து உள்ளையப் பெத்துக்கிட்டோமேம்மா. உன் அக்காமார் கல்யாணக் கடன் தீர்த்ததே பெரும்பாடு.” 

“தீர்ந்துடுச்சில்ல? பெரும் புண்ணியம். வர்ற ஜூல்லேருந்து நான் ஒரு இன்ஜினியர்ப்பா, வேலையும் அமைஞ்சுட்டா பிறகு பிரச்னையில்லை.”

“புரியாத பேசறியேம்மா. அம்மா இருந்திருந்தா இதுக்குள்ளே உனக்கு மாப்பிள்ளை பார்த்து, தன் பங்குக்கு ஏதோ பாத்திரம், பண்டம்ன்னு வச்சிருப்பா. அவ இருந்த தைரியத்திலே உங்கக்காமார் கல்யாணம் நடத்தினேன்” 

அம்மா நினைவில் அவர் குரல் ஓடுங்குவதை உணர்ந்த அவள் முகத்திலும் இறுக்கம் – அதை மாற்ற இடைவெட்டினாள்; 

”சரி அதுக்கு இப்போ என்னப்பா” 

“சத்யன்கிட்ட கூட இருநூறு கேட்கலாமான்னு யோசனை”

“ஐந்நூறாவா?” – விழிகள் விரிந்தன. 

“லெக்சரருக்கு நல்ல சம்பளம். கைக்கே நாலாயிரத்துக்கு மேலே வரும்.” 

“ஆனாலும், அவருக்கும் செலவெல்லாம் இருக்குமில்லையாப்பா?” 

“யாருக்குச் செவலில்லை? அப்பப்ப காபி டிபன் தர்றோம். காத்து தண்ணின்னு குறையில்லாத இடமில்லையாம்மா?” 

“அவர் அம்மாவுக்கு காட்ராக்டாம். ஆபரேஷன் இந்த வருஷம் செய்திடணும். கல்யாணத்துக்கு ஒரு தங்கையும் இருக்காப்பா!” 

“அப்போ அவன் வேற வீட்டுக்கு மாறிக்கிடட்டும்”

”கிடைக்கிற முந்நூறும் நின்னுடுமே?” 

அப்படி நடக்காதென்பதாய்த் தலையசைத்தார். 

“இத்தனை வசதியா வேற வீடேது இந்தப் பக்கம்? காவேஜுக்கு நடந்தே போயிடறான். அந்த வகையில் மிச்சப்படறத நமக்குக் கொடுக்கட்டுமே.” 

“ஆனாலும் ஒரேயடியா இருநூறா கேட்கறது…?” 

“அப்பத்தான் நூறாவது ஏறும்.” 

அப்பா சாணக்கிய சிரிப்புடன் நகர, ஹேமாவிற்குக் குறுகுறுவென்றது. நான்காம் மாசம் வாடகையைக் கூட்டிக் கேட்பது அநியாயமென்று தோன்றியது – அது சத்தியனாய் இல்லாதிருந்தாலும் கூட. 

ஆனாலும் அது ஒன்றும் சத்யனால் சமாளிக்கக் கூடாத பிரச்னை அல்லவென்றும் தோன்றியது. 

ஆனால் குமைச்சல் மறுநாள் கவலையானது. 

“பய வேற வீடுபார்த்துக்கறேங்கறான்… போகட்டுமே” – அப்பா சிடுசிடுத்தார். 

“ஒத்தாசைன்னு சொன்ன முந்நூறும் போச்சு” – இவளும் பதிலுக்குச் சிடுசிடுத்தாள். 

“பாங்க் உத்தியோகஸ்தன் யாரோ தனி வீடு தேடிட்டிருக்கானாம் – தனி ஆள் தான்” 

“முதல்ல ஆள் எப்படின்னு விசாரிங்க” – இவள் இழுத்துச் செருகியபடி வெளிநடப்புச் செய்தாள். 

முன்புபோல் சத்யனைக் கண்டதும் இயல்பாய் பேச்சு ஓடவில்லை. 

‘இன்னைக்கு செகண்ட்சாட்டர்டே லீவாச்சேன்னு பிரியாணி செய்தேன்’ சூடான பாத்திரத்தை நீட்ட முடியவில்லை. அதற்கேற்றாற்போல எஜூகேஷன் டூர், பரீட்சைகள், ப்ராக்டிகல்ஸ், பேச்சுப் போட்டி, பிரிவுபசார விழா என்று அவள் நேரத்தைப் பலதும் பிடுங்கிக் கொள்ள – ஒன்றரை மாதம் ஒடியே போனது. 

ஊர் போய் வந்தவனிடம், ‘ஊரிலே எல்லாரும் சௌக்யந்தானே” என்று அசடு வழிய விசாரித்ததோடு நிறுத்திக் கொண்டாள். 

பரீட்சை நெருங்க, மூச்சு விடவும் யோசிக்க வேண்டியிருந்தது. மனம் அநாவசியமாய் அலைபாயவில்லை. பரீட்சை முடிவுகளில் தன் எதிர்காலம் முழுவதும் தொக்கி நிற்பதாக அவள் நினைத்தாள். வெறியாய் படித்தாள். 

அவ்வப்போது சத்யனின் சிரிப்பும், வாடகைப் பிரச்னையும் சிந்தனையை இழுத்தாலும், தட்டி அதட்டி அமர்த்தினாள். தந்தையிடம் அதுபற்றி கேட்பதையும் தவிர்த்தாள். 

தேர்வுகள் முடிந்தபோது முழுசாய் மூன்று மாதங்கள் முடிந்திருந்தன. அன்று மதியம் திருப்தியாய்த் தூங்கி எழுந்தவள், 

இத்தனை நாள் கவனிப்பாரற்றுக் கிடந்த வீட்டை ஒழுங்கு செய்து கொண்டிருந்தபோதுதான் ஜன்னல் வழியே சத்யனைப் பார்த்தாள். சிவப்பு, மஞ்சள், பச்சை என வண்ணமயமாய் இலைகளைப் பரப்பியிருந்த இரண்டு குரோட்டன்ஸ் செடிகளை மாடிப்படியின் இருபுறமும் நட்டுக் கொண்டிருந்தவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள். 

‘ஓ? நூறு ரூபாய் கூட்டித் தருவதாய்ச் சொல்லிலிட்டாரோ?’ கேள்விக்குறியில் சந்தோஷமும் தொற்றிக் கொண்டு ஆடியது. அப்பா ஏன் தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லை? இல்லாவிட்டால் இவர் ஆசையால் செடிவை இங்கே நடுவானேன்? 

படபடக்கும் நெஞ்சுடன் வாசலுக்கு வந்தாள்.

“ஹலோ… பரீட்சை நல்லா எழுதியிருப்பிங்க” 

“ஆமா… பரவாயில்லை. அழகான குரோட்டன்ஸ்!” 

“ம், என் ஸ்டூடண்டோட அப்பா ஒருத்தர் நர்ஸரி நடத்தறார். கேட்டு வாங்கினேன்.” 

“ஓ?”

“அவன் டைபாயிட்லே விழுந்து ஒரு மாசமா க்ளாஸுக்கு வரலை. பத்து நாளா தினம் அரைமணி நேரம் ட்யூஷன் எடுத்தேன்.” 

“பரவாயில்லை. ரெண்டு செடிக்கு எக்ஸ்ட்ரா க்ளாஸுங்கறது நியாயமான ஃபீஸ்தான்!” – புன்னகைத்தாள். 

“நோ… நோ… அதுக்கு நூறு ரூபாய் தனியா வாங்கிட்டேன். இது கொசுறு” கண்சிமிட்டிச் சிரித்தான். 

‘ஒ’ இவள் குரலின் சுருதி சற்றே இறங்கி நின்றது.

“ஒரு மாணவனுக்கு உதவறது உங்க கடமைதானே?”

“கத்திரிக்கா போங்க. உங்கப்பாவைக்கூட இப்படித்தான் சமாளிச்சேன். வாடகை கூட்டிக் கேட்டார் – தெரியுமா உங்களுக்கு?” 

தலையசைத்தாள் – அது மட்டுந்தான் முடிந்தது. 

“அவர்கிட்ட வேற வீடு பார்த்துக்கறேன்னு சொன்னது ஒரு பேச்சுக்குத்தான். இங்கே இருக்கற வசதியை அப்படி விட்டுற முடியுமா?” கண்கள் விஷமமாய் அவளை ஏறிட்டன. முன்புபோல அதை அவள் இன்று ரசிக்கவில்லை. 

“உங்க சின்னத்தான் அவர் தம்பிக்கு காலேஜ் அட்மிஷன் கேட்டு எழுதியிருந்தார் போல…?” இழுத்தான், 

“தெரியலை… பரீட்சை சமயத்தில் அப்பாவும் எதுவும் சொல்றதில்லை. நானும் காதிலே வாங்கிக்கறதில்லை.” 

“வேற வழியில்லாம சார் எங்கிட்டதான் வந்தார். ‘எனக்கு ஒரு சீட் கோட்டா உண்டு. அது உங்களுக்குத்தான் சார்’ன்னுட்டேன். மற்றபடி ‘காமர்ஸ் சீட் வேணும்னா குறைஞ்சது அஞ்சாயிரத்திலே இழுத்து விட்டிரும்’ன்னு ஒரு பின்குறிப்பும் கோர்த்துவிட, அவர் அப்புறம் ‘கூட்டித்தா’ன்ற பேச்சையே எடுக்கலை. கொசுறு வாடகையிலே ஒரு ஐம்பது ரூபாய் குறைப்பாரான்னுகூட கேட்கலாமான்னு யோசனை” – அவன் பகபகவென்று சிரித்தான்.

‘முடியாது சார்’ என்று அவன் சண்டையிட்டிருந்தாலும் சந்தோஷம். ‘ஒரு வருஷமான பிறகு ஏதோ கூட்டித் தர்றேன் சார்’ என்று நியாயம் பேசியிருக்கலாம். அல்லது மிரட்டியது போல காலி செய்துவிட்டு விலகியிருக்கலாம். இது என்ன குறுக்குவழி தந்திரம்? 

அதுவரை சந்தேகத்தில் நின்ற அவளது கேள்வி இதுதான். ‘காதலென்பதா’ என்று மயங்கிய அந்தச் சிறு சந்தேகம் – மதிப்புக் கயிறு அறுந்ததில் உருண்டு போனது, 

“ஆக இனி எனக்கு இடம் பற்றிக் கவலையில்லை” – மிக மென்மையான, இனிமையான ஒரு இடத்தை இழந்து விட்டதை அறியாமல் தொடர்ந்து சிரித்தான் அவன். 

– வாரமுரசு, தீபாவளி மலர் – 1994. 

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *