ஆஹா..




கேட்டுக்கோ மீனாட்சி.. நான் செத்தாலும் அதுக்கு ஒத்துக்கமாட்டேன்.. சொல்லிட்டேன். என்ன எப்பிடியாவது சமாதானம் பண்ணி இந்த கல்யாணத்த நடத்திடலாம்னு கனவு காணாதீங்க. சொல்லி வை உன் பொண்ணுக்கிட்ட. காதலாம் காதல்..
என் பொண்ணா? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்துதான பெத்துகிட்டோம். என்னமோ போங்க. நீங்களாச்சி. உங்க பொண்ணாச்சி. ஒரு தடவ அந்த பையன பாருங்களேன். நல்லாதான் இருக்கான். இத பாருங்க போடோவ என்று தன் மொபைலை காட்ட.., வாங்கி தூக்கி எரிந்தான் சரவணன். சுக்கு நூறாக தெறித்து ஓடியது மொபைல்.
ப்ரீத்தி மிகவும் சோகமாக இருந்தாள். மீனாட்சியின் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

சரவணன் உடனடியாக அவரது குடும்ப ஜோசியரை அணுகி ப்ரீத்தியின் ஜாதகத்தை காண்பிக்க.. சூழ்நிலைகள் சாதகமாக உள்ளது.. குருபலன் வந்துவிட்டதால் சீக்கிரமே கல்யாண ப்ராப்தி நடக்கும் யோகம் உள்ளது என்றார். அவருக்குத் தெரிந்த பையன் இருப்பதாகவும்.. நல்ல குடும்பம், உத்யோகம்.. பார்க்கலாமா என்ற கூறிய உடனேயே.. உடனே வரச்சொல்லுங்க ஜோசியர, என்றான் சரவணன்..
மீனாட்சி.. நாளைக்கு ப்ரீத்திய பொண்ணு பாக்க வராங்க. எந்த தகறாரும் பண்ணாம ரெடியாகச் சொல்லு உன் பொண்ண.. தெரியுதா.. சிரிடீ..உம் முனு இருக்காத..
பொண்ணு ஏன் அலங்காரம் கூட இல்லாம இப்படி இருக்கா..
என் பொண்ணுக்கு சிம்பிளா இருந்தாதான் பிடிக்கும் என்றாள் மீனாட்சி..
ஏன்டீ என் மானத்த வாங்கரீங்க. கொஞ்சம் சிரிச்சாமாதிரி இருங்கடீ ரெண்டு பேரும். அந்த காபியை கொண்டு போய் குடுக்கச் சொல்லு..
டொக் என்று எல்லா காபி டம்ளரை வைத்தாள் ப்ரீத்தி. பெண்பார்க்க வந்தவர்களின் முகம் மாறியது.
என்னம்மா.. சரியா தூங்கலையா நைட்டு, கண்ணு வீங்கினா மாதிரி இருக்கு..
ஆமாம்.. தூங்கல என்ன இப்போ..
சார்.. உங்க பொண்ணுக்கு இஷ்டம் இல்லையோ. காதல்.. அது இதூன்னு.. எதாவது..
சேச்சே.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவுளுக்கு இந்த காதல் கத்திரிக்கால்லாம் சுத்தமா பிடிக்காது. அப்பா அம்மா கிழிச்ச கோட்ட தாண்டமாட்டா.
ரொம்ப சந்தோஷம். என் பையனும் அப்படித்தான். மாமா.. என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க என்றவன் டமாலென சரவணன் காலில் விழ.. அப்படியே நெகிழ்ந்து போனான்..
அத்தை நீங்களும் என்ன..என்று மீனாட்சி காலில் விழப்போனவனை.. போதும் போதும்.. இதெல்லாம் யார் கேட்டா.. ஏய் நீ உள்ள போடி என்று அதட்டினாள் ப்ரீத்தியை..
அங்கு நடந்தது எதுவும் வந்தவர்களுக்கு பிடிக்காத போதிலும்.. ப்ரீத்தியை பிடித்துப் போனது எல்லோருக்கும்.. பெண் பார்க்கும் படலம் முடிவதற்குள் மூன்று நான்கு முறை சரவணன் காலில் விழுந்தெழுந்தான் ராகுல்..
ரொம்ப அவமானமாப் போச்சுடி எனக்கு. எவ்வளோ மரியாதையான பையன் தெரியுமா. பாத்தீங்க இல்ல.. அவன்கூட தான் இவ கல்யாணம். நான் முடிவு பண்ணிட்டேன். போய் அவள சமாதானப் படுத்து. கப்பலே கவுந்துட்டா மாதிரி இருக்கா பாரு.
என்னவோ போங்க. எந்த குடும்பத்துல பொம்பளைங்க பேச்சு எடுபட்டிருக்கு. ஆம்பளைங்க ராஜ்ஜியந்தான் எங்கேயும்..
கல்யாணம் முடிந்தது. அன்று இரவு எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது.. பையனின் தாத்தா சரவணனிடம் வந்து.. சமையல் எல்லாம் பிரம்மாதம். ஜமாய்ச்சிட்டீங்க என்றார்.. அதுவும் அந்த காசி அல்வா..no chance..
எங்க ஊர்க்காரரு அவரு. அவரோட டேட் கெடைக்கிறதே ரொம்ப கஷ்டம் என்றான் சரவணன் பெருமித்துடன்..
எது எப்பிடியோ சம்மந்தி.
நீங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சது பெரிய விஷயம் என்ற பெரியவரை சந்தேகத்துடன் பார்க்க..
அப்பா..வாங்க உள்ள என்று தர தரவென இழுத்துக் கொண்டு சென்றார் ராகுலின் அப்பா.. எதுக்கு இதெல்லாம் பேசற அவர்கிட்ட.. இப்ப வரைக்கும் இது arranged marriage னு தான் நினைச்சிகிட்டிருக்காரு அவரு என்று பெண்பார்க்கும் படலம் நிகழ்வை விளக்கிக் கூறினார். ப்ரீத்தியோட அம்மாவின் ஸ்கிரிப்ட் தான் இதெல்லாம்..
ஏன்டா நீ இத முன்னாடியே சொல்லிருந்தா நான் கேட்டிருக்க மாட்டேன் இல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த சரவணனின் காலில் விழுந்து என்ன மன்னிச்சிருங்க மாமா என்றான் ராகுல்..
மாப்ள..இதுவாவது உண்மையா இல்ல ஸ்கிரிப்டா..என்று கேட்க..எல்லாரும் சமாதானப் படுத்தினர் சரவணனை..
அப்படின்னா நான் கெளம்பட்டுமா என்று கூறிய ஜோசியரின் கையில் ஒரு கவரை திணித்தாள் மீனாட்சி..
இதைத்தான் ஒரு வேளை.. Love cum arranged marriage என்கிறார்களோ..