ஆற்றோரத்தில் ஒரு மாளிகை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: March 3, 2025
பார்வையிட்டோர்: 4,762 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13

அத்தியாயம்-10

நடந்தவற்றைக் கூறிக்கொண்டே வந்த கலியப்பெருமாள் சற்று நிறுத்தினார். 

சோபாவில் உட்கார்ந்திருந்த மணிவண்ணன் இடை இடையே கேள்விகள் கேட்டான். மற்றப்படி பெரும்பாலும் மௌனமாகவே இருந்துவிட்டான். கலா எதுவுமே கேட்காமல் வைரப்பன் உடலைப் பார்ப்பதும், மாடியில் ஏதாவது சத்தம் வருகிறதா என மேல் நோக்குவதுமாக இருந்தாள். தன் மாமனாரின் பழைய இழிவான வாழ்க்கையை அறிந்து கொள்ள அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அவளால் எதையும் ஆழமாகச் சிந்திக்க முடியவில்லை. ஒரு விதமான குழப்பமான நிலையில் அவள் இருந்தாள். 

கலியப்பெருமாள் தொடர்ந்தார். 

“ரகசியச் சங்கக் குண்டர்கள் மூலமா மங்களத்தை விபச்சார விடுதியில் கொண்டு போய் விட்டதன் மூலம் மிகப் பயங்கரமா அங்கப்பன், மங்களத்தைப் பழி வாங்கிட்டான். பரமநாயகம் தலைமறைவானான். ஆயிரம் ஆயிரமா பணத்தைக் களவாடிய பரமநாயகம் எங்கே போனான்னு யாருக்குமே தெரியாது. மாணிக்கம் கொலை உட்பட எல்லாத்தையும் நான் மறைச்சுட்டேன்.” 

மாணிக்கத்தின் கொலைக்குப் பின்னரும் மங்களத்தைப்பழி வாங்கும் படலத்திற்குப் பின்னரும் அங்கப்பன் தன் மன நிம்மதியை இழந்தான். ஒருவித மன நோய்க்காளானான். இந்த நிலையில்தான் அங்கப்பன் கலியப்பெருமாளிடம் வந்தான். பாதிச் சொத்துப் பாழான நிலையில் வந்தான். மீதமிருந்த சொத்துகளைப்பற்றிய பத்திரங்களைக் கலியப்பெருமாளிடம் கொடுத்தான். அனைத்துக் கோப்புகளும் தன் அலுவலகத்தில் இருப்பதாகக் கூறி முடித்த கலியப்பெருமாள். 

“தம்பி, வைரப்பன் மரணம் பயங்கரமானது. நாம் எல்லாரும் மிக மிக ஆபத்தான சூழ்நிலையில இருக்கோம். எனக்கு…. எனக்கு… எப்படிச் சொல்றதுன்னே தெரியலை” என்றார். 

மணிவண்ணன் அவர் என்ன கூற வருகிறார் என்பதை ஓரளவு புரிந்துகொண்டான். 

“கொலையுண்ட மாணிக்கத்தின் ஆவிதான் வைரப்பனின் மரணத்துக்குக் காரணமுன்னு சொல்றீங்களா..?” என்று அவன் கேட்ட கேள்விக்கு… “ஆமா, தம்பி. நாம… எப்படி. அதுகிட்ட இருந்து தப்பப் போறோம்முன்னு எனக்குத் தெரியலை….” என்று கூறமுடியாமல் கூறி நிறுத்தினார். 

“எனக்கு எப்பவுமே… பேய் பிசாசுங்கள்ல நம்பிக்கை இருந்தது இல்லை. நம்பறவங்க நம்பட்டும். இருண்ட குகை போன்ற குடிசையில என் அம்மாவை நான் பயத்தோட கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருந்தப்ப… என் அம்மா ஒண்ணு சொல்லுவாங்க….’ பக்கத்தில மாரியாத்தா இருக்கா… நீ பயப்படாதேன்னு சொல்லுவாங்க. கறுத்த மாரியின் பேரைச் சொன்னா காலனும் அஞ்சுமடான்னு பாரதியோட பாட்டையும் நான் படிச்சிருக்கேன். அந்தத் தெய்வம் காப்பத்தறதா இருந்தா காப்பாத்தட்டும். நாம இப்பப் பயந்தா ஆகப்போறது எதுவுமே இல்லை. அடுத்து நாம செய்ய எதுவுமே இல்லை. வெள்ளம் பெருகிட்டது. வெளியே போக முடியாது. இந்த மாளிகையை விட்டு வெளியேற முடியாது. முதலில் ஒரு ஹெலிகாப்டர் போச்சுது. அடுத்து ஏதாவது இப்படி ஹெலிகாப்டர் போகலாம்; உதவிக்கு அழைப்போம். இல்லை….” என்று கூறிவந்த மணிவண்ணன் சற்று நிறுத்திப் பின் தொடர்ந்தான்: “எது வந்தாலும் வரட்டும்னு காத்திருப்போம்.” என்று முடித்தான். 

கலா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். 

கலியப்பெருமாள் ஏதோ கூற வந்தார். அவரைக் கையமர்த்தி……நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குத் தெரியுது. கதிரவன், பத்மா பற்றித்தானே சொல்ல வர்றீங்க. அது எனக்குப் புரியுது. அவுங்க மூலமா ஏதோ ஒரு வகைப் போராட்டம் ஆரம்பமாகி இருக்கு. மேலும் விளக்கம் கொடுக்க எனக்குத் தெரியலை. போராடிப் பார்ப்போம்.” என்று மணிவண்ணன் கூறியபோது… 

நிலவறையில் பெரும் ஒலியுடன் ஏதோ விழும் சத்தம் கேட்டது. 

மூவரும் திடுக்கிட்டு எழுந்தனர். மணிவண்ணன் நிலவறை நோக்கிச் சென்றான். கலியப்பெருமாள் பின் தொடர்ந்தார். 

நிலவறையின் ஒரு பக்கச் சுவர் இடிந்து விழுந்து வெள்ளம் “குபு குபு” என உள்புகுந்து கொண்டிருந்தது. 

நிலவறையில் இருந்த பழைய நாளிதழ்கள்… கட்டு கட்டாக இருந்த கோப்புகள் ஆகியனவற்றைக் காப்பாற்ற முடியாத நிலை. ஒரு சில விநாடிகளில் நிலவறை நீரால் நிறைந்தது. நிலவறைக் கதவை இருவருமாகச் சேர்ந்து மூடினர். ஆனால், நீர் கசியத் தொடங்கியது. எனவே, முன் பின் பக்கக் கதவுகள் நிலவறைக் கதவு என மூன்று வழிகளில் மாளிகைக்குள் நீர் புகுந்து கொண்டிருந்தது. அதிகநேரம் கீழ்த்தளத்தில் இருக்க முடியாது என்பது தெளிவாகியது. 

வைரப்பன் உடலைத் தழுவி நீர் ஓடத் தொடங்கியது. 

மணிவண்ணனும், கலியப்பெருமாளும் வைரப்பன் உடலை உணவு மேசை மீது கிடத்தினர். வைரப்பனின் உடலைப் பார்த்தபோது கலாவின் இதயமே வெடித்துவிடும்போல் இருந்தது. தன் பத்து வயது மகள் மீனாட்சி பற்றி வைரப்பன் பெருமையோடு கூறியதையும் அவளை நன்றாகப் படிக்க வைத்து ஒரு தமிழாசிரியராக அவள் வரவேண்டும் என்று தன் ஆசையைக் கூறியதையும் நினைவுகூர்ந்தபோது அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. 

அவள் மனநிலையை அறிந்துகொண்டவனாக மணிவண்ணன் எதுவும் பேசாமல் செயலாற்றினான். 

ஒளி தந்துகொண்டிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்குகள், ஏற்றப்படாமல் இருந்த மெழுகு திரிகள் தீப்பெட்டி ஆகியனவற்றை எடுத்துக்கொண்டனர். கலா, தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள். முருகன் திருப்பாடல்கள் கொண்ட நூலை இறுகப் பற்றிக்கொண்டாள். மேல் மாடியில் ஒரே அறையில் மூவரும் தங்கிக்கொள்ளலாம் என்று கலா கூறியதை முதியவரான கலியப்பெருமாள் உடனே ஏற்றுக்கொண்டார். தனியாக ஓர் அறையில் இருக்க அவருக்கும் சற்று அச்சமாக இருந்தது. 

முதலில் கலா படி ஏறினாள். அடுத்து கலியப்பெருமாளும் இறுதியாக மணிவண்ணனும் ஏறினர். 

மாடியில் பத்மா…மெதுவாக நடந்து செல்வது தெரிந்தது. 

“பத்மா…” என்று மெதுவாகக் கலா அழைத்தாள். 

மணிவண்ணன் பார்த்தான்; கலியப்பெருமாளும் பார்த்தார். 

தூக்கத்தில் நடப்பது போலப் பத்மா வலப்பக்கத்தில் இருந்து வந்து அறைக்குள் சென்றாள். கதவு மூடிக்கொண்டது. 

மூவரும் மேல் மாடிக்கு வந்தனர். கலியப்பெருமாள் வலப்பக்கத்தை நோக்கினார்; “ஆ” என்றார். மணிவண்ணனும் பார்த்தான். 

எந்த அறையின் கதவைத் திறக்க முடியாது; பூட்டை உடைத்துத்தான் திறக்க முடியும் என்று கூறப்பட்டதோ அந்தக் கதவு அகலத்திறந்துகிடந்தது. 

“தம்பி…” என்று ஏதோ கூற வந்த கலியப்பெருமாள் அச்சத்துடன் சுற்றும் முற்றும் தன் பார்வையைச் செலுத்தினார். 

அவர் உடல் நடுங்கியது. ஆடைகள் நனைந்துவிட்டதனால் ஏற்பட்ட குளிர் நடுக்கமா அல்லது அச்சத்தால் ஏற்பட்ட நடுக்கமா…? 

“ரூம்க்குள்ள போயிடுவோம்…” என்றார். 

“சரி” என்பது போலத்தலையாட்டினான். மணிவண்ணன். 

கதிரவன் பத்மா இருவருடைய அறை அருகே சென்று ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று மணிவண்ணன் காது கொடுத்துக்கேட்டான். கதிரவனின் குறட்டை விடும் ஒலி கேட்டது. கூப்பிடலாமா, வேண்டாமா என்று யோசித்தான். வேண்டாம் என்று முடிவு செய்தான். 

ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கைப் படிகளுக்கு அருகே வைத்தான். மின்விளக்கின் ஒளியோடு இணைந்து அந்த இடம் பகல் போல் காட்சியளித்தது. 

அறைக்குள் வந்தனர். அறைக்கதவு திறந்தே இருந்தது. 

“தம்பி, அந்த அறைதான் உங்க அப்பாவோட படுக்கை அறை. மாணிக்கமும், மங்களமும் அந்த அறையிலதான் இருந்தாங்கங்கிற கோபத்துல… அந்த அறைக்கதவு பூட்டை உடைச்சுக் கதவைத் திறக்க முடியாம செஞ்சுட்டாரு… ஆனா… இப்ப…” அச்சத்துடன் கலியப்பெருமாள் மேசையை இறுகப் பிடித்துக்கொண்டார். “நாம மேலே வர்றப்பப் பத்மா அந்த அறைப் பக்கமா இருந்து வந்தமாதிரி இருந்துச்சு,” என்று கூறிய அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. 

நேர் எதிரே இடப்பக்கமாக “அந்த” அறை இருந்தது. 

மணிவண்ணன் அந்த அறையைப் பார்த்தான். 

விளக்கு வெளிச்சத்தில் சுவர் ஓரமாக இருந்த ஒரு சாய்வு நாற்காலியும் (easy chair) சோபாவும் அவனுக்கு நன்கு தெரிந்தன. 

மணிவண்ணன் அறையை விட்டுவெளியே வந்தான். 

“அத்தான்” என்றாள் கலா. அவள் குரல் நடுங்கியது. 

“நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க. நான் போய் அறையைப் பார்த்துட்டு வர்றேன்….” என்று கூறிக்கொண்டே அறையை நோக்கிச் சென்றான். 

வேணாம் தம்பி.. வேணாம்.” என்று மணிவண்ணனைப் பின்தொடர்ந்த கலியப்பெருமாள் இடையிலே நின்றார். கலா செய்வதறியாது சுவரோடு சாய்ந்துவிட்டாள். அவள் இருதயம் படபடவென்று அடித்துக்கொள்ளத்தொடங்கியது. 

மணிவண்ணன் கதவோரத்தில் இருந்த சுவிட்சைத் தட்டினான். அறையில் இருள் முழுமையாக விலகி ஒளி பரவியது. 

ஆடம்பரமான படுக்கை அறை. ஆனால், பல நாள் மூடியே கிடந்ததாலோ என்னவோ ஒரு வித வாடை அடித்தது. உல்லாசமான கட்டில். போர்வையும். தலையணிகளும் தாறுமாறாகக் கிடந்தன. தரை எங்கும் தூசு. ஆனால், சிறிய காலணி – ஒரு பெண்ணின் காலணிச் சுவடுகள் வாயிற்படியில் இருந்து கட்டில் வரை இருந்தன. வேறு சுவடு காணப்படவில்லை. 

கண்ணாடி ஜன்னல் வழி வெளியே பார்த்தபோது ஒரே இருட்டாக இருந்தது. 

ஒரு சில விநாடிகளில் மணிவண்ணன் அனைத்தையும் பார்த்துத் திரும்பினான். 

அதே வேளையில் கதவு படீர் என்று மூடிக்கொண்டது. ஒரு சிறு இடைவெளியில் மணிவண்ணன் முகத்தை உராய்ந்துகொண்டு கதவு மூடியது. 

தன்னையும் அறியாமல் மணிவண்ணன் ‘ஆ’ என்றான். 

“அத்தான்” என்று கலா அலறினாள். “தம்பி, தம்பி” என்று கலியப்பெருமாள் கூப்பிடுவது கேட்டது. 

ஒரு கணம் மணிவண்ணன் நிலை குலைந்தான். “அம்மா” என்று தன் தாயாரை நினைத்துக்கொண்டான். 

“கலா, பயப்படாதே. ரெண்டு பேரும் தைரியமா இருங்க. சத்தம் போடுறதுனால பயனில்லை” என்றான். 

கதவுக் குமிழைத் திருக முயன்றான். முடியவில்லை. கதவைப் பலங்கொண்ட மட்டும்… மோதினான். கதவு அசையவில்லை. 

கதவின் அருகில் கலா வந்து “அத்தான், அத்தான்” என்று விம்மினாள். அவள் குரல் லேசாக மணிவண்ணனுக்குக் கேட்டது. 

“கலா” என்று அழைத்தான். 

“என்னங்க என்னங்க” என்று பதில் கொடுத்தாள். மேற்கொண்டு அவளால் பேச முடியவில்ல. விம்மத் தொடங்கினாள். 

“இதோ பாரு கலா… தைரியமா இரு. கலியப்பெருமாள் எங்கே…?” என்று மணிவண்ணன் கேட்டதும் செய்வதறியாது நின்று கொண்டிருந்த கலியப்பெருமாள்… 

“தம்பி… தம்பி எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை… போகவேணாம்ன்னு சொன்னேன். போனீங்க… இப்ப… இப்ப… தம்பி… நான் கீழே போய்ப் பாராங்கத்தி, சுத்தியல் இருக்கான்னு பார்த்து எடுத்துக்கிட்டு வர்றேன். கதவை உடைச்சுடுறேன்…” என்றார். 

அந்த முதியவரின் குரலில் ஒலித்த அந்தத் தன்னம்பிக்கை மணிவண்ணன் உள்ளத்தில் ஒரு திண்மையை அளித்தது. 

“ஆமா… அப்படியே செய்யுங்க… நானும் முயற்சி பண்றேன்” என்றான் மணிவண்ணன். 

“பெட்ரோமாக்ஸ்” விளக்குடன் கலியப்பெருமாள் கீழே படிகளில் இறங்கினார். 

கலா. மணிவண்ணன் சிக்கிக்கொண்ட அறையின் கதவருகே தரையில் அமர்ந்தாள். 

கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். இரவு மணி ஒன்றரை. அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் நேரம் நகர்ந்ததை உணரமுடியவில்லை. 

அடுத்து மூன்று நான்கு மணிநேரத்தில் இரவு கடந்துவிடும் – பொழுது விடிந்துவிடும் – பொழுது விடிந்துவிட்டால் ஏதாவது ஒரு வகையில் உதவி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை கலாவுக்கு ஏற்பட்டது. 

அறைக்குள் இருந்த மணிவண்ணன் ஜன்னல் வழியாகக் கீழே இறங்க முடியுமா எனச் சிந்தித்தான். 

ஜன்னலை அவன் திறந்தபோது வெளியே தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதுதெரிந்தது. 

அறைமுழுவதையும் நோட்டமிட்டான். கட்டில் அருகே உடைந்த வளையல் கிடந்தது. குளியல் அறையைத் திறந்தபோது அங்கே கரப்பான் பூச்சிகள் ஓடுவதைக் கண்டு கதவை மூடினான். 

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. 

கலியப்பெருமாள் கீழ்த்தளத்திற்கு வந்தார். கடைசிப் படியில் நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. வெள்ளம் ‘ஹால்’ முழுமையும் நிறைந்து நின்றது. வெளியில் இருந்து கதவுகளின் வழியாகவும் நிலவறை மூலமாகவும் வெள்ளம் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. 

மெதுவாகக் கலியப்பெருமாள் நடந்தார். உணவு மேசை மீது கிடத்தப்பட்டிருந்த வைரப்பன் உடலைப் பார்க்க ஏனோ அவருக்குத் துணிவில்லை. பார்த்தும் பார்க்காததுபோல வேகமாகச் சமையல் அறைக்குச் சென்றார். 

சமையல் அறையில் விளக்கொளி பிரகாசமாக இருந்தது. அடுப்பின் அருகே…. கோழி இறைச்சி முதலியனவற்றைத் துண்டுதுண்டாக 

வெட்டப் பயன்படுத்தப்படும் கூரிய பெரிய கத்தி காணப்பட்டது. அதனால் பூட்டை உடைக்க முடியுமா எனச் சிந்தித்தவாறு மேசை டிராவரைத் (drawer -இழுப்பறை) திறந்தார். அங்கே ஓர் அரிவாள் இருந்தது. 

இரண்டையும் ஒரு கையில் எடுத்துக்கொண்டு ‘பெட்ரோமாக்ஸ் விளக்கை மற்றொரு கையில் தூக்கிப்பிடித்துக்கொண்டு மேல் மாடியை நோக்கி நடந்தார். 

மேலே… கல… காத்திருந்தாள். 

அறைக்குள்ளே…. மணிவண்ணன்… யோசித்தவாறு… நின்றுகொண்டிருந்தான். துர்நாற்றம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அறையில் பிண வாடை அடிக்கத் தொடங்கியது. 

அத்தியாயம்-11

குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்த கதிரவன் திடுக்கிட்டு விழித்தான். ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை. ஒருவித மயக்கநிலை. 

கடினப்பட்டுக் கண்களைத்திறந்தான். அறை வெளிச்சமாக இருந்தது. 

அவன் கண்ட காட்சியை அவனால் நம்ப முடியவில்லை. அது கனவு போல் இருந்தது. 

நாற்காலியில் பத்மா அலங்கோலமான உடையில் கண்களை மூடியவாறு ஒருவித மயக்க நிலையில் அமர்ந்திருக்கிறாள். நாற்காலியின் பின்புறமாக நின்று மார்பில் கை வைத்து அணைத்தவாறு கலியப்பெருமாள் அவளை முத்தமிடுகிறார் – தன்னை மறந்து முத்தமிடுகிறார்.” 

கண்களைக் கசக்கிக்கொண்டு கதிரவன் பார்த்தான். 

“டேய் கலியப்பெருமாள்” என்று கத்தினான். 

திடுக்கிட்டு நிமிர்ந்த கலியப்பெருமாள் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடுகிறார்… 

“எங்கேடா நீ போய்விட முடியும். இரு உன்னை நான் கவனிச்சுக்கிறேன்” என்று கூறிய கதிரவன் நாற்காலியில் அமர்ந்திருந்த பத்மாவைப் பிடித்துக்குலுக்கினான். 

“பத்மா… பத்மா…” என்று அழைத்தவாறு அவள் தலை முடியையும் கன்னத்தையும் தடவினான். மயக்க நிலையில் இருந்து பத்மா விடுபடாமல் இருந்தாள். அப்படியே அவளை விட்டு விட்டு வெளியே வந்தான். 

மூடப்பட்ட கதவருகே சோர்ந்து போய் உட்கார்ந்திருந்த கலா, கதிரவன் குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள். 

அறைக்குள் அடைபட்டுக் கிடந்த மணிவண்ணனுக்கும் கதிரவன் குரல் லேசாகக் கேட்டது. 

“என்ன கலா, என்ன?” என்று அவன் கேட்டதற்கு மறுமொழி தருவதற்குள் கதிரவன் அறையை விட்டு வெளியே வந்தான். 

“எங்கே அந்தக் கலியப்பெருமாள்?” என்று கத்தினான். 

அதே சமயத்தில் படிகளில் கலியப்பெருமாள் ஏறி வந்து கொண்டிருந்ததைக் கதிரவன் பார்த்தான். 

“ஓ…அரிவாளோட வர்றியா…? என்னைக் கொல்ல வர்றியா?” என்றான். கதிரவனின் முகம் பயங்கரமாக மாறியது. 

ஏதோ ஆபத்து வருகிறது என்பதைக் கலா உணர்ந்து கொண்டாள். 

“கதிரவன்… நீங்க என்ன சொல்றீங்க… இதோ இந்த அறையில அத்தான் சிக்கிக்கிட்டாரு. கதவை உடைக்க கலியப்பெருமாள் கீழே போனாரு…” என்று படபடப்பாகக் கலா 

கூறி முடிப்பதற்குள் கதிரவன், “கலா. கலியப்பெருமாள், அந்தக் கிழப்பய என்ன தெரியுமா செஞ்சான். மயக்கத்தில் இருந்த பத்மாவைக் கட்டிப்பிடிச்சு முத்தமிட்டுக்கிட்டு இருந்தான்…” 

“இல்லை… இல்லை… அவர் என் கூடவே… இருந்தாரு…” என்று கூறிக்கொண்டே படிகளுக்கு அருகே… வந்து நின்று கொண்டாள். 

கதிரவன் ஏதோ ஒரு தீய சக்திக்கு ஆட்பட்டுவிட்டான் என்பதைக் கலியப்பெருமாள் உணர்ந்துகொண்டார். அவர் கைகள் நடுங்கின. பெட்ரோமாக்ஸ் விளக்கை இறுகப்பற்றிக்கொண்டார். அரிவாளையும் கத்தியையும் நடுக்கத்துடன் படியில் வைத்தார். 

கலா சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் போலக் கதிரவன் ஒதுங்கி நின்றான். 

விறுவிறு என்று படிகளைத் தாண்டிக் கலா அருகில் வந்து நின்ற கலியப்பெருமாள். “தம்பி… பத்மா எனக்கு மக மாதிரி… நம்மை எல்லாம் ஏதோ ஒரு தீய சக்தி ஆட்டிப்படைக்குது…” 

கதிரவன் படிகளில் பாய்ந்து இறங்கினான். அவன் எதற்கு இறங்குகிறான் என்பதைக் கலியப்பெருமாள் உணர்ந்து கொண்டார். 

அரிவாளுடன் கதிரவன் வந்தான். “கதிரவன்.. பிளீஸ்… வேணாம்… வேணாம்” என்று கலா கதறினாள். “அத்தான்…. கதிரவன்…அரிவாளோட வர்றாரு…” கலா கத்தினாள். 

மணிவண்ணன், “கதிரவன். கதிரவன்… நான் சொல்றதைக் கேளு.” என்று கதவை ஓங்கி ஓங்கி உதைத்தான். 

கலியப்பெருமாள் கதவு திறந்திருந்த வேறு ஓர் அறைக்குள் ஓட… நினைத்தார். ஆனால், அந்த அறைக்கு அருகிலேதான் கதிரவன் நின்று கொண்டிருந்தான். எனவே அறைக்குள் போக முடியாது. 

“வேணாம் தம்பி.. வேணாம்…” என்று அந்த முதியவர் கெஞ்சினார். 

“பத்மா… பத்மா…” என்று கலா கூப்பிட்டாள். பத்மா எழுந்து வந்து அந்த இக்கட்டான சூழ்நிலையில் கலியப்பெருமாளைக் காப்பாற்றமாட்டாளா என்ற நப்பாசையில் பத்மாவைக் கூப்பிட்டாள். 

வலக்கையில் ஓங்கிய அரிவாளுடன் நின்ற கதிரவன் கலா அலறுவதையோ கலியப்பெருமாள் கெஞ்சுவதையோ அறைக்குள் இருந்து கதவை இடித்த வண்ணம் மணிவண்ணன் கூப்பிடுவதையோ கேட்கவில்லை. 

“கலா… குறுக்கே நிக்காதே… போ…” என்றான் அவனுக்கும் கலியப்பெருமாளுக்கும் இடையே நின்று கொண்டிருந்த கலாவை நோக்கி முன்னால் வந்தான். 

“கதிரவன்… please… I beg you… please,” என்றாள். 

கதிரவன் அவளிடம் நெருங்கினான். அவள் தோள்பட்டையை இடக்கையால் பற்றி லேசாகத் தள்ளினான். 

அவன் பார்வை; தோளை அவன் பற்றிய விதம்.. 

அச்சத்தைத் தந்தன. 

கலா விலகினாள். 

அடுத்த விநாடி…. 

அரிவாளால் தாறுமாறாகக் கலியப்பெருமாளை வெட்டினான். தலை, கை, இடுப்பு… மார்பு… என வெட்டுகள் வீழ்ந்தன. கலியப்பெருமாள் ஓட முயன்று கீழே விழுந்தார். 

கசாப்புக்கடைக்காரர் இறைச்சியைத் துண்டுதுண்டாக வெட்டுவது போல் அவர் உடலை மூர்க்கத்தனமாகக் கதிரவன் வெட்டிச் சிதைத்தான். ரத்தம் எங்கும் பீறிட்டு அடித்தது. வேதனையால் துடி துடித்துக் கதறிய கலியப்பெருமாளின் குரல் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஓய்ந்தது. 

கொடூரமான அந்தக் காட்சியைப் பார்த்த கலா அலறினாள்; மூர்ச்சையானாள். 

அறைக்குள் இருந்த மணிவண்ணன் கதவை இடித்தான்… “கல… கலா” என்று கதறினான். 

கதவு திறந்தது. 

அங்கே அவன் கண்ட காட்சி… கலியப்பெருமாளின் உடலை அரிவாளால் வெட்டிக் கொண்டிருந்தான் கதிரவன். 

தரை, சுவர் என எங்கும் ரத்தம். கதிரவன் முகம் – தலை ஆடை… ரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. 

தரையில் மண்டியிட்டுக் கலியப்பெருமாளின் உயிரற்ற உடலைத் துண்டாடிக்கொண்டிருந்த கதிரவன் முகத்தில் ஓங்கி உதைத்தான் மணிவண்ணன். ‘ஆ’ என்ற ஒலியுடன் கதிரவன் தரையில் வீழ்ந்து உருண்டான்; அவன் கையில் இருந்த அரிவாள் தூரத்தில் போய் விழுந்தது. 

அடுத்தவிநாடி தரையில் மயங்கிக்கிடந்த கலாவை நிமிர்த்திச் சுவரோடு சாய்ந்த நிலையில் உட்காரவைத்தான். 

திட்டுத்திட்டாக அவள் சேலையில் ரத்தத்துளிகள் படிந்திருந்தன. 

“கலா… கலா” என்று கன்னத்தை லேசாகத் தட்டிக் கூப்பிட்டான். மூடிய விழிகளை மெல்லத் திறந்த கலா, மணிவண்ணனைக் கண்டதும் ‘அத்தான்’ என்று அவனை இறுக அணைத்துக்கொண்டு விம்ம ஆரம்பித்தாள். 

மணிவண்ணனால் உதைக்கப்பட்டுத் தரையில் மல்லாந்து விழுந்த கதிரவன் மெதுவாகத் தட்டுத்தடுமாறி எழுந்தான். தரையில் இருந்து எழ முயன்றான்: முடியவில்லை. 

தன்னால் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டுக்கிடந்த கலியப்பெருமாளின் உடலை அவன் பார்த்தான். அதைப் பார்க்க விரும்பாதவனைப்போல் தலையைத் திருப்பிக்கொண்டான். சுவர் ஓரமாக உட்கார்ந்திருந்த மணிவண்ணனையும் கலாவையும் பார்த்தான். 

மணிவண்ணன் வெறுப்புடன் அவனை நோக்கினான். 

கதிரவன் ஏதோ கூற முயன்றான். உதடுகள் துடித்தன. 

“மணி..” என்றான் மெதுவாக. “மணி” என்ற சொல் கேட்டுக் கலா பட்டென்று தலையை நிமிர்த்திக் கதிரவனைப் பார்த்தாள். 

“பாபி… கலியப்பெருமாளை வெட்டிக்கொன்னுட்டீயே. என்கூடவே.. இருந்த அந்த முதியவர் பத்மாவை முத்தமிட்டார்னு சொல்லி அவரைக் கொலையே செய்துட்டீயே” என்று ஆக்ரோஷமாகக் கத்தினாள். 

கதிரவன் தட்டுத்தடுமாறி எழுந்தான். அவன் தாக்குவான் என எதிர்பார்த்து மணிவண்ணன் தயாராக எழுந்து நின்றான். 

எழுந்த கதிரவன்… “மணி, கலா… எனக்கு… எனக்கு… என்ன நடந்துச்சுன்னே தெரியலை… சத்தியமா சொல்றேன்… இங்க வந்தவுடன் விஸ்கி சாப்பிட்டேன். கொஞ்சம்தான் சாப்பிட்டேன். ஆனா… ஆனா… மயக்கத்திலே ஆழ்ந்துட்டேன். அதன்பிற்பாடு..ஏதோ.. நிழல்… நிழல்மாதிரி… ஓர் உருவம்… அது என்கிட்ட வந்தது. அதன் பிற்பாடு… எனக்கு எதுவுமே தெரியலை. கொஞ்ச நேரத்துக்கு முந்தி… திடீர்னு கண் விழிச்சேன்… அப்ப… பத்மாவை… கலியப்பெருமாள்… ஆமா… கலியப்பெருமாள்… முத்தமிட்டதை… இல்லை. அது… கலியப்பெருமாள் இல்லை… ஒரு நிழல் உருவம்… என்று கூறிக்கொண்டே வந்த கதிரவன். “ஐயோ என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு.” என்று தலையை இரு கரங்களாலும் அழுத்திப்பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தான். 

அப்போது அறையில் இருந்த பத்மா “அப்பா… அப்பா” என்று அலறிக்கூப்பிடுவது கேட்டது. 

அதுவரை நடந்த பெரும் போராட்டத்தின்போது மயங்கிக்கிடந்த பத்மா. பயந்த குழந்தை தன் தந்தையைக் காணாமல் கூப்பிடுவது போல் அந்தக் குரல் ஒலித்தது. 

கதிரவனால் எழ முடியவில்லை. அதே இடத்தில் அமர்ந்திருந்தான். ஆனால், கலாவையும் மணிவண்ணனையும் பார்த்தான். 

அப்போது.. “கல… நீ எங்கே இருக்கே கலா?” என்று பத்மா பரிதாபகரமான குரலில் கூப்பிட்டாள். 

கலா தயக்கத்துடன் மணிவண்ணனைப் பார்த்தாள். 

“போ. நான் கூடவே வர்றேன்” என்றான். தரை எங்கும் கலியப்பெருமாளின் ரத்தம் சிதறிக்கிடந்ததால் அருவருப்புடன் கீழே பார்க்காமல் மணிவண்ணன் கையை இறுகப்பற்றிய வண்ணம் கலா நடந்தாள். 

இருவரும் அறைக்குள் சென்றனர். 

கட்டில் நடுவே… பத்மா அமர்ந்திருந்தாள். அவள் ஆடை சற்று அலங்கோலமாக இருந்தது. மணிவண்ணனைப் பார்த்ததும் அவள் தன் ஆடையைச் சரி செய்ய முயன்றாள். அதைக்கண்ட மணிவண்ணன் வாயிற்படி அருகே வந்து நின்று கொண்டான். 

கதிரவன் போன்றே பத்மாவும் தெளிவுடன் காணப்பட்டாள். சில மணி நேரங்களுக்கு முன் ஏதோ ஒரு தீய சக்திக்கு கட்டுப்பட்டு இருந்த பத்மா பழைய நிலைக்குத் திரும்பி இருந்தாள். ஏன் எப்படி இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டது என்பது புரியாத புதிராக இருந்தது. அடுத்து என்ன நடக்கும் – என்ன நடக்கப்போகின்றது என்று குழம்பிய நிலையில் மணிவண்ணன் வாயிற்படியில் நின்றுகொண்டிருந்தான். கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இரவு மணி இரண்டு. 

பத்மா அருகில் செல்லாமல் கலா சற்று விலகியே நின்றாள். தன்னைப் பத்மா கட்டி அணைத்து வாயில் முத்தமிட முயன்றதைக் கலா மறக்கவில்லை. அவளைக் கலா அச்சத்துடன் பார்த்தாள். 

“கலா… நான்… நான்…. பலியாகிட்டேன். கொஞ்சம்….. கொஞ்சம்… நினைவு இருக்… கனவுல நடந்தது போல இருக்கு.. என்னை… ஒருத்தன்… அவன் மனுசனே இல்லை… இல்லை… பேய்..” என்று பட படவென்று பேசிய பத்மா “கலா… நீ போயிடு… இந்த மாளிகையில் இருந்து தப்பிப் போயிடு… அவன்… அவன்… கண்கள்ல இருந்து நீ தப்பவே முடியாது… அப்பாகிட்ட காலையிலதான் சொன்னேன். போகாதே…. போகவேணாம்னு சொன்னாங்க… நான் கேக்கலை… எல்லாமே.. போச்சு.. கதிரவன் எங்கே..? I want to see him…. I want to see him” என்று கத்திக்கொண்டே கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள். 

கலா சட்டென்று ஒதுங்கி நின்றுகொண்டாள். 

தெளிவு கிடைத்ததும் நடந்த சம்பவங்களால் அவள் மனம் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதை மணிவண்ணன் அறிந்துகொண்டான். 

கதிரவன் எழுந்து நின்றான். அவன் ஆடைகள் முழுமையும் ரத்தத்துளிகள். பத்மா பார்த்தாள். கீழே தரையில் வெட்டுண்டு கிடந்த கலியப்பெருமாளின் உடலையும் பார்த்தாள். 

“இது.. என்ன… என்… what happened…. oh… God… what happened.” 

அலறினாள்…மீண்டும்… மீண்டும்… அதையே கூறிக் கத்தினாள்; கதறினாள்… அவள் குரல் மாளிகை முழுமையும் எதிரொலித்தது. 

கலா… சிலைபோல் நின்றாள். மணிவண்ணன் அவள் அருகில் நின்றான். 

கதறிய பத்மாவின் குரல் அடைத்தது. 

கதிரவன்… பரிதாபமாகப் பத்மாவைப் பார்த்தான்… 

“பத்மா… கலியபெருமாளை நான்தான்… வெட்டிக் கொன்றேன்.” 

பத்மா வெறித்து நோக்கினாள். 

“ஏன்னா… அவன்… இல்ல…. இவரு… உன்னை… முத்தமிட்டுக் கொண்டிருந்ததை….” அவன் முடிக்கவில்லை. 

அறைக்குள் இருந்து சிரிப்பொலி எழுந்தது. 

கலா, மணிவண்ணன் கரங்களைப்பற்றிக்கொண்டாள். 

பத்மா… அறையை நோக்கினாள். 

அறைக்கதவு லேசாகக் காற்றில் அசைந்தது. 

“You bastard… you bastard… வாடா வெளியே,” என்று கத்திக்கொண்டே பத்மா அறைக்குள் பாய்ந்தாள். 

”பத்மா… போகாதே” என்று கூறிக்கொண்டே மணிவண்ணன் பின்தொடர்ந்தான். 

“பத்மா” என்று தடுமாறிய கதிரவன்… தள்ளாடி அறைக்குள் சென்றான். 

அறைக்கு வெளியே தனியாக நின்ற கலா அதே இடத்தில் அசையாமல் நின்றாள். அவளால் நடக்க முடியவில்லை: சிந்திக்கமுடியவில்லை: அப்படியே நின்றாள். 

அறைக்குள் பத்மா, மணிவண்ணன் கதிரவன் மூவரும் இருந்தனர். 

ஆற்றோரமாக இருந்த அந்த அறையின் கண்ணாடி ஜன்னலில் ஓர் உருவம் தெரிந்தது. அந்த உருவம் “மாணிக்கத்தின்” உருவம். 

“You bastard என்னைக் கெடுத்திட்டீயேடா! என் உடம்பெல்லாம் எரியிது.” என்று கத்தியவண்ணம் பத்மா கண்ணாடி ஜன்னலை நோக்கிப் பாய்ந்தாள். 

கண்ணாடி சிதறியது… பத்மா ஜன்னல் வழியாக வெளியே வீழ்ந்தாள். கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் அது நடந்தது. மணிவண்ணன் பாய்ந்துசென்று சிதறிய கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே விழவிருந்த பத்மாவின் கால்களைப் பற்றினான். ஆனால், கால்கள் நழுவின. பத்மா… தலை குப்புற “அப்பா…” என்ற அலறலுடன் வெள்ளத்தில் வீழ்ந்தாள். 

“என்ன ஆச்சு… என் பத்மாவுக்கு என்ன…” என்று அலறியவண்ணம் சிதறுண்ட கண்ணாடி ஜன்னல் வழியாக கதிரவன் குதிக்க முயன்றான். 

“கதிரவன்… பிளீஸ்.. இனி எதுவும் செய்ய முடியாது…” என்று மணிவண்ணன், கதிரவனைப் பிடித்துக்கொண்டான்.” 

“இல்லை…இல்லை.. என் பத்மா… என் பத்மா… I want to die…. I want to die.. with my பத்மா…” என்று கதறி ஜன்னலை நோக்கிச் செல்ல முயன்ற கதிரவனை மணிவண்ணன் பின்புறமாகப் பிடித்துத் தரையில் தள்ளினான். 

தரையில் தள்ளப்பட்ட கதிரவன் மீது அறையில் இருந்த நாற்காலி மோதியது. மோதிய வேகத்தில் கதிரவன் “ஐயோ” என்ற அலறலுடன் வெளியே வந்து வீழ்ந்தான். 

அதே சமயத்தில் அறைக்கதவு இரண்டாவது முறையாக மூடிக்கொண்டது. 

அறைக்குள்ளே மணிவண்ணன் சிக்கிக்கொண்டான். 

அறைக்கு வெளியே கலா நின்றாள். 

கதவு மூடிக்கொண்டதும் “அத்தான்” என்று அலறக்கூடச் சக்தி இல்லாமல் அப்படியே அசைவற்று நின்று கொண்டிருந்தாள். 

“கலா… நீ போயிடு… இந்த மாளிகையில இருந்து தப்பிப் போயிடு. “அவன்… அவன்” கண்கள்’ல இருந்து நீ தப்பவே முடியாது.” என்று பத்மா கூறிய சொற்கள் அவள் காதில் எதிரொலித்தன. 

நாற்காலியால் அறைக்கு வெளியே தள்ளப்பட்ட கதிரவன்… மெதுவாக எழுந்து நிற்க முயன்றான். தரையில் சிந்திக் கிடந்த கலியப்பெருமாளின் ரத்தம் முழுமையாக அவன் ஆடையில் ஒட்டிக் கொண்டது. 

“மணி… மணி… என்ன இது மணி…” என்று தள்ளாடியவண்ணம். மூடிக்கொண்ட அறைக்கதவைத் தட்டினான். 

அறைக்குள் இருந்த மணிவண்ணன், “கலா… எங்கே… ஏன் பேசாம இருக்கா… கலா எங்கே?” என்று கேட்டான். அவன் குரல் கரகரத்தது. தொடர்ந்து பேச அவனால் முடியவில்லை. 

“She is here…” என்றான் கதிரவன். 

அப்போது…. 

மின்சார விளக்கு விட்டு விட்டு எரியத்தொடங்கியது. 

அறைக்குள் இருந்த மணிவண்ணனுக்கு ஏதோ ஒரு முடிவு வரப்போகின்றது என்று தெரிந்தது. 

அந்த முடிவு…? 

அத்தியாயம்-12

பரம நாயகத்தின் ஒரே மகள் பத்மா. தன் பத்தாவது வயதிலேயே தாயை இழந்தவள். தன் மனைவி கண்மணியின் மறைவுக்குப்பின் பரம நாயகம் பத்மாவை மிகவும் செல்லமாக வளர்த்தார். அதிகமான செல்லத்தினால் பத்மா பிடிவாத குணமுடையவளாகத் தன் போக்கிலேயே வளர்ந்தாள். பதிவுத் திருமணத்திற்குப் பிறகு கதிரவனுடன் அடிக்கடி வெளியில் செல்வதும் நேரம் கழித்து வருவதுமாக இருந்தாள். பரம நாயகத்திற்கு அது உடன்பாடாக இல்லை என்றாலும். பத்மாவிடம் அது குறித்துப் பேச அவருக்கு ஏனோ அச்சமாக இருந்தது. ஒருவர் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்துவிட்டால் அந்த ஒருவரிடம் உள்ள குறைகளை எடுத்துக்கூற ஏற்படும் அச்சமே பரமநாயகத்திற்கு இருந்தது. 

மலாயாப் பயணம் பற்றி அன்று காலைதான் பத்மா தன் தந்தையிடம் கூறினாள். முன்பு இரண்டு முறை மலாக்காவுக்குக் கதிரவனுடன் சென்றபோதும் கடைசி நிமிடத்தில் பயணம் பற்றிக்கூறி இருக்கிறாள். ஆனால், பெக்கானுக்குப் போகப் போவதாகக் கூறியதும் பரம நாயகம் அதிர்ச்சி அடைந்தார். அதுவும் சுங்கை திங்கி ஆற்றோரத்தில் அமைந்திருந்த ஒரு மாளிகையில் ஓர் இரவு தங்கப்போவதாகக் கூறியதும் தடுமாறி நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எப்படி ஏன் இந்த ஏற்பாடுகள் என்று பரமநாயகம் படபடப்பாகக் கேட்டதற்குத் தெளிவான பதில் பத்மாவிடம் இருந்து வரவில்லை. 

“அவர் நண்பர் மணிங்கிறவரோட உயில் சம்பந்தமா ஏதோ ஒரு மாளிகையைப் பார்க்கணுமாம். என்னையும் கூப்பிட்டாரு. சரின்னு சொன்னேன். நாளைக்குத் திரும்பிடுவோம்.” என்றாள் பத்மா. 

“ஏன் நேத்தே சொல்லலை…?” என்று கேட்டதற்கு பத்மாவிடமிருந்து எந்தவிதப் பதிலும் வரவில்லை. அந்தக் கேள்வி அவள் காதில் விழுந்ததா என்றும் தெரியவில்லை. 

“பத்மா.. நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே… எந்த மாளிகைன்னு எனக்குத் தெரியலை… ஆனா… அங்கே போகவேணாம்…” என்றார். 

பத்மா வியப்புடன் தன் தந்தையைப் பார்த்தாள். 

“ஏன்… ஏன்…. போகவேணாம்” என்று பத்மா கேட்டதற்குப் பரமநாயகத்தால் பதில் கூறமுடியவில்லை. 

அப்போது தொலைபேசி மணி ஒலித்தது. கதிரவன்தான் பேசினான். பத்மாவை அழைத்துச்செல்ல சுமார் பத்து நிமிடங்களில் வருவதாகக்கூறினான். 

எதுவும் பேச முடியாத நிலமையில் அப்படியே சோர்ந்துபோய் பரமநாயகம் உட்கார்ந்துவிட்டார். கதிரவன் வந்தபோது…”என்ன உயில்… என்ன சொத்து..?” என்று பட்டும் படாமல் விசாரித்தபோதுதான் “யார்… எவர்…” என்ற விவரங்கள் அவருக்குத் தெரியவந்தன. அவற்றை ஜீரணிக்க முயன்று கொண்டிருந்த வேளையில் “அப்பா, போயிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டுப் பத்மா புறப்பட்டாள். 

பழைய நினைவுகள் அவர் அகக்கண்முன்னே விஸ்வரூபம் எடுத்து நின்றன; ருத்ர தாண்டவம் புரிந்தன. 


பரமநாயகம், மங்களத்தின் தம்பி என்னும் முறையில் அங்கப்பனின் அரவணைப்பில் சுகபோகங்களை அனுபவித்தான். அந்தக் காலகட்டத்தில் கோலாலம்பூரில் புகழ்பெற்றிருந்த ஜவுளிக்கடை முதலாளி ஒருவரின் மகளான கண்மணியைக் கண்டான்; காதல் கொண்டான். 

இதற்கிடையில் மங்களம், அங்கப்பனை மறந்து மாணிக்கத்தின் மடியில் வீழ்ந்து கிடப்பதையும் கண்டான். அதை பரமநாயகம் பொருட்படுத்தவில்லை. ஆனால், கண்மணி பற்றி ஒருநாள் தன் அக்கா மங்களத்திடம் கூறியபோது அருகில் இருந்த மாணிக்கம் மிகுந்த ஆவலுடன் கண்மணியைப் பற்றிக் கேட்டதையும், தானே முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்கப் போவதாகக் கூறியதையும் பரமநாயகம் ஏனோ விரும்பவில்லை. அப்போதுதான் தன் அக்காவுக்கும் மாணிக்கத்திற்கும் இடையில் உள்ள கள்ள உறவை அவன் வெறுக்கத்தொடங்கினான். கண்மணியின் அப்பா ஒரு ஜாதி வெறியர். தன் மகளைத் தன் ஜாதிக்காரருக்குத்தான் மணமுடித்துத்தர உறுதியாக இருந்தார். 

பரமநாயகத்திற்கும் கண்மணிக்கும், அவர்கள் காதல் வெற்றி பெற ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. 

“ஊரைவிட்டு ஓடுவது,” 

பரமநாயகம் அங்கப்பனின் பணத்தில் வேண்டிய அளவு எடுத்துக்கொண்டான். கண்மணியும் தனக்குரிய பொன் ஆபரணங்களை எடுத்துக்கொண்டாள். பணத்தோடும் பொன்னோடும் சிங்கப்பூர் வந்த அவ்விருவரும் புது வாழ்வு தொடங்கினர். அந்தப் புது வாழ்வில் மலர்ந்த மலர்தான் பத்மா. 

தஞ்சோங் பகார் பகுதியில் உணவுக் கடை தொடங்கிய பரமநாயகம் நல்வாழ்வு அமைத்துக்கொண்டான். 

பழையனவற்றை மறக்க முயன்ற பரமநாயகத்திற்கு மங்களத்தை நினைவூட்டுவதாகப் பத்மாவின் முகத்தோற்றம் அமைந்திருந்தது. 

பழைய நினைவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். கண்மணியும் தன் பெற்றோரை அவ்வப்போது நினைத்துக் கொள்வாள். ஆனால், சொந்த ஊருக்குப் போகவே.. தொடர்பு கொள்ளவோ இருவருமே முயற்சி செய்யவில்லை. விருப்பம் இருந்தாலும் துணிவு இல்லை. 

விபச்சார விடுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட மங்களம் நரக வேதனை அனுபவித்ததையோ இறுதியில் காசநோயினால் பீடிக்கப்பட்டுச் சிவப்பு விளக்குப் பகுதியில் துர்நாற்றம் வீசும் சாக்கடை ஓரத்தில் செத்துக்கிடந்தது பற்றியோ பரம நாயகத்திற்குத் தெரியாது. 


நேரம் ஆக ஆகப் பரமநாயகம் நிலை குலைந்தார். இனம் தெரியாத அச்சம் மனத்தில் ஏற்பட்டுக் கலங்கினார். 

கண்மணி கார் விபத்தில் சிக்கிப் பொது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது பரமநாயகத்திற்கு மனநிலை எப்படி இருந்ததோ, அதே நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். 

பிற்பகல் மணி மூன்று. கோலாலம்பூருக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து பெக்கானுக்கு வாடகை வண்டி மூலம் செல்ல முடிவு செய்தார். மாலை 5.00 மணிக்குப் பாயலேபார் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம். மாலை 6.00 மணிக்குக் கோலாலம்பூர் சென்றடைந்தது. விமான நிலையத்தில் இருந்தே வாடகை வண்டியில் புறப்பட்ட பரமநாயகம் வெள்ளத்தின் காரணமாகவும் கரடுமுரடான சாலைகளாலும் பின்னிரவு 1.30 மணிக்குப் பெக்கான் சென்றடைந்தார். போகப்போக வாடகை வண்டியின் கட்டணத்தை ஓட்டுநர் கூட்டிக்கொண்டே போனார். ஓட்டுநர் கேட்ட தொகையைக் கொடுக்க உறுதி அளித்தார் பரமநாயகம். சுங்கை திங்கி ஆற்றின் அருகே இருந்த கிராமங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. 

நிவாரணப் பணிகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன. வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் ஒரு பள்ளியில் அடைக்கலம் புகுந்திருந்தனர். அந்த முகாமுக்கு பொறுப்பேற்றிருந்த இராணுவ அதிகாரியை அணுகினார். பரமநாயகம். 

அத்தியாயம்-13

அறைக்குள் சிக்கிக்கொண்ட மணிவண்ணன் உடைந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தான். அறை விளக்கொளியில் வெளியே சுவரின் பக்கத்தை ஒட்டிய ஒடுங்கிய நீள் விளிம்பு (ledge) தெரிந்தது. 

சுவரைப்பற்றிய வண்ணம் அடுத்த அறைக்குச் சென்று விடலாம். ஆனால், அவ்வாறு செல்வது தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது என்பது மணிவண்ணனுக்குத் தெரியும். சற்றுத் தடுமாறினாலும் ஆற்றிலே விழவேண்டிய நிலை ஏற்படலாம். அறையிலேயே அடைந்து கிடப்பதைவிட.. அந்த முயற்சியை மேற்கொள்வது சாலச்சிறந்தது என்ற முடிவுக்கு வந்தான். 

கதவோரமாக வந்து… “கலா” என்று கூப்பிட்டான். 

கதவோரத்தில் நெஞ்சம் படபடக்க ஒருவித மயக்க நிலையில் நின்றிருந்த கலா திடுக்கிட்டு, “என்ன அத்தான்… ஐயோ… என்ன அத்தான்” என்றாள். 

“கலா… இப்ப நான் சிக்கிக்கிட்ட அறைக்கு அடுத்த அறைக்கு நீ போயிடு. ஜன்னலைத் திறந்து வை… நான்… சுவர் ஓரமா உள்ள பகுதியில் – அதாவது ledge மூலமா வந்துடுறேன். விளக்கு எந்த நிமிடத்திலேயும் நிக்கப்போகுது… அறைக்குப் போ… மெழுகுதிரிகளை ஏத்திவை..” என்று கத்தினான். 

“சரி” என்று கலாவால் கூறமுடியவில்லை. 

அறைக்குள் தட்டுத்தடுமாறி ஓடினாள். 

கதிரவன் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தான்… 

அறைக்குள் ஓடிய கலா… முதலில் முருகன் பாடல்கள் கொண்ட தொகுப்பு நூல் இருக்கின்றதா எனப் பார்த்தாள். மேஜையில் இருந்தது. ‘முருகா… முருகா… என்று கூறிக்கொண்டே மெழுகுதிரிகளை ஏற்றி வைத்தாள். 

ஜன்னலில் இருந்து மெதுவாக மணிவண்ணன் கீழே விளிம்பில் இறங்கினான். விளிம்பு. சுமார் 40 சென்டிமீட்டர் அகலம் இருந்தது. மழைச்சாரல் அடித்தது. கீழே எதுவுமே தெரியாத நிலையில் இருளாக இருந்தது. மூடிக்கொண்ட அறையின் விளக்கொளியும் கலா சென்ற அறையின் விளக்கொளியும் ஜன்னலுக்கு அருகில் மட்டும் தெரிந்தன. மற்றப் பகுதிகளில் இருள் படிந்திருந்தது. மணிவண்ணன் பின்புறமாகச் சுவரோடு சாய்ந்துகொண்டு பக்கவாட்டில் மெதுமெதுவாக… நகர்ந்தான். சுமார் 10 மீட்டரை அவன் கடக்கவேண்டும். மழை நீர் அவன் உடலை நனைத்துக்கொண்டிருந்தது. சற்றுத் தடுமாறினால் அவன் தலைகுப்புறக் கீழே விழவேண்டியதுதான். ஆற்றிலே விழுந்தால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவான். ஆழமில்லாத பகுதியில் வீழ்ந்தால் கைகால்கள் முறியலாம்… அல்லது… 

எப்படியும் அவன் அடுத்த அறைக்குச் சென்றுவிட வேண்டும் – கலாவைக் காப்பாற்றவேண்டும். 

சிறுவனாக மணிவண்ணன் இருக்கிறான். கொட்டும் மழையில் அவன் அம்மா அவன் கையைப்பிடித்து அழைத்துச்செல்கிறாள். அந்த இருளில் – அந்த மழையில் அவன் தன் தாயாரின் கரத்தை இறுகப்பற்றிக்கொண்டு… “அம்மா” என்று கூப்பிடுகிறான்… கூப்பிட்டுக்கொண்டே நடக்கின்றான்… 

அம்மாவை நினைத்துக் கொண்டான். ஒரு தைரியம் வந்தது. பாதங்களைச் சறுக்கியபடி நகர்ந்தான். 

அறைக்குள் கலா மெழுகுதிரிகளை ஏற்றிவைத்தாள். திறக்கப்பட்ட ஜன்னல் வழியாக உள்ளே வீசிய காற்றில் மெழுகுதிரிகள் அணைந்துவிடாமல் இருக்க அவற்றை ஜன்னலுக்குக் கீழே வைத்தாள். மணிவண்ணன் எப்படியும் வந்துவிடுவான் என்ற தைரியம் அவளுக்கு இருந்தது. 

அறைக்கு வெளியே நின்றிருந்த கதிரவனுக்குச் சிரிப்பொலி கேட்டது. அதிர்ச்சியுடன் திரும்பினான். அங்கே “மாணிக்கம்” நின்றுகொண்டிருந்தான். 

மனித உருவமாகவும் இல்லை: ஆவி உருவமாகவும் இல்லை. இரண்டும் கலந்த ஒரு விதப் பயங்கரத் தோற்றமாக இருந்தது. 

“என்… பத்மா சாவுக்கு… நீ… நீதானே… காரணம்” என்று. கத்தினான். கத்தியவேகத்தில் அந்த உருவத்தின்மீது பாய்ந்தான்.. மாணிக்கத்தின் உருவம் கலைந்து சிதைந்தது. அதே வேளையில் கதிரவன் மேலே தூக்கி எறியப்பட்டான். மேலே தொங்கிக் கொண்டிருந்த விளக்கில் அவன் உடல் மோதியது. விளக்கு உடைந்து சிதறியது. உடைந்த விளக்கில் இருந்து தீப்பொறிகள் கிளம்பின. கீழே வந்து விழுந்த கதிரவன் வாயில் இருந்து இரத்தம் கொட்டியது. எந்தவித ஒலியும் அவனிடமிருந்து வரவில்லை. 

ரத்தம் கக்கிக் கதிரவன் மடிந்தான். 

அறைக்குள் இருந்த கலாவுக்குக் கதிரவனின் குரல் கேட்டதும் அறைக்கு வெளியே பார்த்தாள். 

நிழல் உருவம் தெரிந்தது. கதிரவன்… நிற்பதும் தெரிந்தது. 

ஏதோ ஒரு வேகத்தில் கதவைச் சாத்தினாள். அவள் உடல் வெடவெட என்று நடுங்கத்தொடங்கியது. ஜன்னலுக்கு அருகில் ஓடி வந்து “அத்தான்… அத்தான்” என்று அலறினாள். 

அதே வேகத்தில் ஜன்னல் மெதுவாக மூடத் தொடங்கியது. யாரோ வெளியே இருந்து ஜன்னலை மூடுவது போல இருந்தது. கலா அச்சத்துடன் விலகி நின்றாள். 

ஜன்னல் இறுக மூடிக்கொண்டது. திறக்க முயன்றாள்; முடியவில்லை. 

ஓர் உணர்வு. பின்னால் யாரோ நிற்பது போன்ற உணர்வு. 

விளிம்பில் (ledge) மெது மெதுவாக நகர்ந்து வந்த மணிவண்ணனுக்கு கலா “அத்தான்… அத்தான்” என்று கூப்பிட்டது லேசாகக் கேட்டது. கலாவின் குரல் கம்மலாக இருந்ததாலும் மழை பெய்யும் ஒலியின் இரைச்சலாலும் குரல் தெளிவாகக் கேட்கவில்லை. 

ஜன்னல் மூடிக்கொண்டதும் அவனுக்குத் தெரியாது. ஜன்னலுக்கும் அவனுக்கும் இடையில் இன்னும் ஐந்து மீட்டர் இருந்தது. 

ஆற்று நீரின் ஒலி நன்கு கேட்டது. அதாவது மணிவண்ணன் அப்போது ஆற்றுக்கு மேலே நீள் விளிம்பில் நகர்ந்துகொண்டிருந்தான். 

கலா அசையாமல் நின்றாள். 

“கலா, நான்தான்” அது மணிவண்ணனின் குரல். 

திடுக்கிட்ட கலா “அத்தான்” என்று திரும்பினாள். 

ஆனால்.. 

அங்கே மணிவண்ணன் இல்லை… “மாணிக்கம்” நின்று கொண்டிருந்தான். 

“ஆ” என்று அலற முயன்றாள். முடியவில்லை. 

மாணிக்கத்தின் கண்கள் அவள் கண்களை ஊடுருவின. 

“கலா. பயப்படாதே…. அழகின் பிறப்பிடமே… இன்பத்தின் உறைவிடமே….” என்று அந்த ‘உருவம்’ கூறிக்கொண்டே கலாவை நெருங்கியது. கலா ஏதோ ஒரு சக்தியில் இருந்து – அந்தக் கண்களில் இருந்து விடுபட முயன்றாள்; முடியவில்லை. 

“பத்மா மூலமா உன் செக்கச் சிவந்த உதடுகளை முத்தமிட நினைச்சேன். முடியலை…. இப்ப… ஆசை தீர… முத்தமிடப் போகிறேன்…” 

மாணிக்கம்…. கலாவை அணைத்தான். “அவன்” கைப்பட்டதும் கலா ஒரு கையால் மேஜையைப் பற்றிக் கொண்டாள். 

மாணிக்கம் கலாவின் தாடையைப் பற்றினான். அவன் கை ஜில்லென்று – ‘ஐஸ்’ கட்டி போன்று இருந்தது. 

கலா முகத்தருகே ‘அவன்’ முகம் நெருங்கியது. 

மேஜையைப் பற்றி இருந்த கலாவின் கை நடுங்கியது. அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது. 

நூல் அசைந்தது; நகர்ந்தது; கலா கரத்தில் உராய்ந்தது. 

ஒரு மின்வெட்டு. 

புத்தகத்தைப் பற்றினாள். 

தன்னையும் அறியாமல் “முருகா” என்று கத்தினாள். 

“மாணிக்கம்” விலகினான். 

அவன் பிடியில் இருந்து விலகிக்கொண்ட கலா அந்த ‘உருவத்தை நோக்கி முருகன் பாடல்கள் நூலை வீசினாள். 

சக்கரம் போல் அந்த நூல் சுழன்று சென்று ‘மாணிக்கத்தின்’ கண்களைக் குத்திக் கிழித்தது. அதே வேளையில் ஜன்னல் கண்ணாடி உடைந்து சிதறியது; மின்னல் மின்னியது – ஒளி சிதறியது. 

“ஆ” என்ற அலறலுடன் மாணிக்கத்தின் உருவம் மறைந்தது. 

ஜன்னலுக்குச் சற்றுத் தூரத்தில் மணிவண்ணன் நகர்ந்து வந்துகொண்டிருந்தபோதுதான் மின்னல் மின்னிக் கண்ணாடி உடைந்தது. 

“கலா” என்று அலறினான். 

கலா ஜன்னலுக்கருகே தடுமாறி வந்தாள். மெதுவாக… நகர்ந்து வந்து…அறைக்குள் குதித்த மணிவண்ணன் கலாவை அணைத்துக்கொண்டான். 

கலா விம்மிக்கொண்டே “முருகன் காப்பாத்திட்டான்… என் முருகன் காப்பாத்திட்டான்” என்று கூறிக்கொண்டே மூர்ச்சையானாள். சரிந்து விழுந்த அவளைத் தோளில் சுமந்து கொண்டான். தரையில் கிடந்த முருகன் பாடல்கள் தொகுப்பு நூலைக் கையில் எடுத்துக்கொண்டான். 

அப்போது மின்விளக்குகள் அணைந்தன. வெளியே வெடிக்கும் சத்தம் கேட்டது. இருளில் மெதுவாகக் கதவை திறந்துகொண்டு மணிவண்ணன் வெளியே வந்தான். 

எந்த விளக்கின்மீது கதிரவன் மோதப்பட்டுக் கீழே வந்து விழுந்தானோ… அந்த விளக்கில் ஏற்பட்ட மின்சாரத் தாக்கத்தால் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. அந்த நெருப்பு எங்கும் பரவத் தொடங்கியது. 

இன்னும் சிறிது நேரத்தில் மாளிகை முழுமையும் தீ பரவிவிடும் என்பதை மணிவண்ணன் உணர்ந்தான். 

அப்போது ஹெலிகாப்டர் வரும் ஒலி கேட்டது. 

ஜன்னலுக்கு அருகே சென்று சைகை காண்பிக்கலாம் என்று எண்ணியபோது. ஜன்னலுக்கு அருகில் “மாணிக்கம்” நிற்பது தெரிந்தது. 

நெருப்புச் சுற்றி வளைத்தது. 

ஹெலிகாப்டர் சத்தம் நெருங்கி வந்தது. ஜன்னல் ஓரமாகச் சென்றால்தான் ஹெலிகாப்டரில் இருப்பவர்களின் உதவியைப் பெறமுடியும். ஆனால், குறுக்கே “மாணிக்கம்” – அதன் ஒரு கண் இருண்ட நிலையில் நின்றுகொண்டிருந்தது. 

ஓர் ஆவியுடன் போராட முடியுமா என்ற வினாவும் மணிவண்ணனுக்கு எழுந்தது. “முருகன் காப்பாத்திட்டான்”னு கலா சொன்னதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது. 

அப்போது பயங்கரமான ஒரு குரல் “டேய், மாணிக்கம்” என்று எழுந்தது. அந்தக் குரலைக் கேட்டு மாணிக்கத்தின் உருவம் அங்குமிங்கும் பார்த்தது. 

திடீர் என்று ஓர் உருவம் தோன்றியது. அந்த உருவத்தைப் பார்த்ததும் மணிவண்ணன் திடுக்கிட்டான். தெரிந்த உருவமாக இருந்தது. ஆம்….. சிறு வயதில் மணிவண்ணன் பார்த்த தன் தந்தையின் உருவம். ஆனால் உருவம் சிதைந்திருந்தது. 

“மகனே…” “மகளே” என்றான் ஆவி வடிவில் இருந்த “அங்கப்பன்.” 

“போங்க… போங்க…” என்று அங்கப்பன் கை அசைத்தான். வாழ்ந்த காலத்தில் புறக்கணித்த மகனை மறைந்த காலத்தில் பார்த்தது “அங்கப்பன்”. அதேவேளையில் “மாணிக்கம்” உருவம் கலைந்தது. அடுத்த கணம் மாணிக்கத்தின்மீது அங்கப்பன் பாய்ந்தான். 

“மாணிக்கம்” அலறலுடன் மறைந்தான். 

இக்கட்டான நேரத்தில் ‘அங்கப்பன்’ ஆவி வந்து மகனையும் மருமகளையும் காப்பாற்றிவிட்டது. ஹெலிகாப்டர் கீழே இறங்கியது. 

ஹெலிகாப்டரில் ஏறியதும் கீழே மணிவண்ணன் பார்த்தான். மாளிகை முழுமையும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. 

தன் தாயார் மரகதத்தை நினைத்துக்கொண்டான். கடைசி நேரத்தில் ‘அப்பா’ வந்து காப்பாற்றியதையும் நினைத்துக் கொண்டான். வானத்தை நோக்கி அவன் கைகள் குவிந்தன. 

முடிவு 

மகள் மாண்டாள் என்று அறிந்து பரமநாயகம் குலுங்கிக் குலுங்கி அழுதார். 


கலியப்பெருமாளின் அலுவலகத்திற்குச் சென்று பத்திரங்களை மணிவண்ணன் பார்வையிட்டான். தன் தந்தையின் சொத்தில் தனக்கு எந்தப் பங்கும் வேண்டாம் என்று மணிவண்ணன் கூறிவிட்டான். தங்களுக்காக உயிர்நீத்த கலியப்பெருமாள் குடும்பத்துக்கும் வைரப்பன் குடும்பத்துக்கும் கணிசமான பங்கும் ரோஸ்லின் நடத்தும் அனாதை இல்லத்துக்கு ஒரு பங்கும் சேரும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

மூன்று வாரங்களில் அந்த ஏற்பாடுகளை மணிவண்ணன் செய்தான். இரண்டு முறை அவன் குவாந்தானுக்கும் கோலாலம்பூருக்கும் போகவேண்டி இருந்தது. 

மணிவண்ணனும் கலாவும் வைரப்பன் வீட்டிற்கே சென்றனர். 

வைரப்பன் மனைவி கையெடுத்துக்கும்பிட்டாள். 

“மீனாட்சி, உன் அப்பா உன்னைப்பற்றித்தான் பேசிக்கிட்டே இருப்பாரு. நீ படிச்சு வரணும். சிங்கப்பூர்லேயே உனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுத்துடுவோம். எங்க மகளாக எங்க வீட்டிலேயே இருந்துடலாம்” என்றாள் கலா. மீனாட்சியின் கன்னத்தைத் தடவிக்கொடுத்தவாறு. 

மீனாட்சி சிரித்தாள். 


அப்போது… 

மரத்தாண்டவருக்குப் பால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார் ஒரு பெரியவர். பால் முருகன் திருமுகத்தில் வழிந்தோடியபோது… 

“பாரய்யா..முருகன் சிரிக்கிற மாதிரி இல்ல?” என்றார். 

“மாதிரி என்னைய்யா மாதிரி, அவன் சிரிக்கிறான்,” என்றார் வேறு ஒருவர்.

(முற்றும்)

– ஆற்றோரத்தில் ஒரு மாளிகை, முதற் பாதிப்பு: 2000, எஸ்.என்.பி எடிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *