ஆற்றோரத்தில் ஒரு மாளிகை





(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-13
அத்தியாயம்-7

இடுப்பளவு வெள்ளத்தில் வைரப்பன் மெதுவாக நடந்து கொண்டிருந்தான். மழை பெய்துகொண்டிருந்தது. இடியுடன் கூடிய மழையாதலால் அவ்வப்போது மின்னல் ‘பளீர்…பளீர்’ என்று மின்னியது. மின்னல் ஒளியில் அவ்வப்போது சுற்றுச் சூழல் தெரிந்தது; பின்னர் இருள் சூழ்ந்தது. ஒவ்வோர் அடியையும் நிதானமாக எடுத்து வைத்தான். டார்ச் லைட் ஒளியைப்பாய்ச்சிப் பாலம் தெரிகிறதா எனப்பார்த்தான். பாலம் தெரிந்தது. வெள்ளம் பாலத்தை எட்டிப் பிடிக்க முயன்றதும் தெரிந்தது. எளிதில் பாலத்தைக் கடந்து மேடான அடுத்த பகுதிக்குச் சென்று விடலாம் என்ற நிம்மதி வைரப்பனுக்கு ஏற்பட்டது. ஒரு கையால் நீரை விலக்கிக்கொண்டு பாலத்தை நோக்கிச் சென்றான்.
பாலத்தை அடைந்தபோது மறுமுனையில் உயரமான ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது தெரிந்தது.
திடுக்கிட்ட வைரப்பன் அதே இடத்தில் அப்படியே நின்றான். அப்போது இடி இடித்து மின்னல் மின்னியது. மின்னல் ஒளியில் அந்த உருவம் தெரிந்தது. மின்னல் மறைந்ததும் இருளில் அந்த உருவம் தெளிவாகத் தெரியவில்லை. டார்ச் லைட் ஒளியில் அந்த உருவத்தைப் பார்க்க ஏனோ வைரப்பனுக்குத் துணிவு ஏற்படவில்லை.
“என்ன அப்படியே நின்னுட்டே? என் பேரு மாணிக்கம் – ஆமா மாணிக்கம். சும்மா வா” என்று அந்த உருவம் கூறிச் சிரித்தது.
அந்தச் சிரிப்பு…

மாளிகையில் வைரப்பன் கேட்ட அதே சிரிப்பு.. திரும்பினான். நீரை இரு கைகளாலும் விலக்கிக்கொண்டு… வேகமாக நடந்தான். கால் தடுக்கியது போல் இருந்தது. நீரில் தலை குப்புற வீழ்ந்தான். டார்ச் லைட் வெள்ளத்தில் மறைந்தது. வைரப்பன் வீழ்ந்த பகுதி ஆழமான பகுதி. நீந்த முயன்றான்; முடியவில்லை. அவனுடைய இரு கால்களும் எதிலோ சிக்கிக்கொண்டன போல் இருந்தது. நீரில் இருந்து மேல் நோக்கி முழுமையாக வெளிவர முடியவில்லை.
சிறிதளவு மேல் வருவதும் பின்னர்க் கீழே இழுக்கப்படுவதுமாக இருந்தது. கைகளால் நீரை தாறுமாறாக அடித்துக்கொண்டு கத்த முயன்றான். சத்தம் வெளிவரவில்லை; செம்மண் கலந்த நீர் வாயினுள் சென்றது.
தன் இரு கால்களையும் யாரோ இறுகப்பற்றி இருப்பதை உணர்ந்தான். பிடியிலிருந்து விடுபட முயன்றான். முடியவில்லை. இரும்பால் இரு கால்களும் இறுகப் பிணைக்கப்பட்டிருப்பது போல் இருந்தது.
அத்தியாயம்-8
தன் ஆடையைச் சரி செய்துகொண்டு பத்மா கட்டிலில் இருந்து இறங்கினாள். கதிரவன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான். பத்மா ஒரு வித மயக்கத்தில் இருந்தாள். மேல் மாடி அறைக்கு வந்ததும் கதிரவன் சிறிதளவு விஸ்கி அருந்தினான். மது அருந்தி பழக்கமில்லாத பத்மா முதன்முறையாகச் சிறிது விஸ்கி குடித்தாள். அந்த மயக்கம்… விஸ்கி குடித்ததால் ஏற்பட்ட மயக்கமா அல்லது… பத்மாவால் சிந்திக்க முடியவில்லை. தலை லேசாக வலித்தது.
அப்போது… கதவு மெதுவாகத் திறந்தது. திறக்கப்பட்ட கதவின் இடைவெளியில் “அவன்” நின்று கொண்டிருந்தது. தெரிந்தது.
பத்மா தடுமாறினாள். கட்டில் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அவள், கதிரவனைத் தட்டி எழுப்ப முயல்கின்றவள் போல அவன் கால்களை அசைத்தாள்.
கதவு முழுமையாகத் திறந்தது.
“பத்ம….என் ஆசைக்கிளியே… … வா….” என்றான் தாழ்ந்த குரலில் தன் கைகளை நீட்டியவண்ணம்.
பத்மா… நிமிர்ந்தாள்.
அவன் கண்களைப் பார்த்தாள். அவனுடைய கரங்களில் கட்டுண்டாள். அவளை அவன் அழைத்துக்கொண்டு நடந்தான். கதவு மெதுவாக மூடிக்கொண்டது. கதிரவன் லேசான குறட்டை ஒலியுடன் தூங்கிக்கொண்டிருந்தான்.
மணிவண்ணன் தன் தந்தையின் நாள்குறிப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான். 1941-ஆம் ஆண்டு டயரி முழுமையாகக் காலியாக இருந்தது. எதுவும் எழுதப்படவில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளில் சில நாள்கள் எழுதப்பட்டிருந்தன. சில நாள்கள் விடுபட்டிருந்தன. பல இடங்களில் கை எழுத்துப் புரியவில்லை. பிறகு சாவகாசமாகப் பார்க்கலாம் என்று பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தான்.
யாருக்கும் பசியோ சாப்பிட வேண்டும் என்ற எண்ணமோ வரவில்லை.
“ஒரு கப் காஃபி குடிக்கலாம் போல இருக்கு. ” என்று கலியப்பெருமாள் கூறியதும், கலா சமையல் அறைக்குக் காபி கலக்கச் சென்றாள். உடன் கலியப்பெருமாளும் துணைக்குச் சென்றார். பின் பக்கக் கதவில் ஆற்று வெள்ளம் மோதுவது நன்கு கேட்டது. சமையல் அறையில் வெள்ளம் பெருகத் தொடங்கி இருந்தது.
நிலைமை மோசமாகிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
“வைரப்பன் போய் ஒரு மணி நேரத்துக்கு மேலாகுதே…” என்றாள் கலா. விரைவில் உதவியோடு வைரப்பன் வரமாட்டானா என்ற துடிப்பு அவள் குரலில் இழைந்தோடியது.
“வெள்ளத்தைக் கடந்து போறது சாமான்யமானது இல்லேம்மா, வைரப்பன் கெட்டிக்காரன், வந்துடுவான்.” என்றார் கலியப்பெருமாள்.
அப்போது முன்பக்கக்கதவு தட்டப்பட்டது போன்ற ஒலி கேட்டது.
ஹாலில் அமர்ந்திருந்த மணிவண்ணன், வெள்ளம் மோதுகின்ற ஒலியா அல்லது யாராவது கதவைப் பலமாகத்தட்டும் ஒலியா என்று ஒரு கணம் யோசித்தான். மீண்டும் அதே ஒலி கேட்டது. மணிவண்ணன் விரைவாகச் சென்று கதவைத் திறந்தான்.
வெள்ளம் வேகமாக உள்ளே பாய்ந்தது. வெள்ளத்துடன் வைரப்பனும் வந்து மோதினான். மோதப்பட்ட மணிவண்ணன் மல்லாந்த நிலையில் தரையில் விழுந்தான். அனைத்தும் ஓரிரு விநாடிகளில் நடந்தன.
‘அத்தான்’ என்ற அலறலுடன் கலா பாய்ந்து வந்தாள். கையில் பிடித்திருந்த கோப்பையை அப்படியே கீழே போட்டுவிட்டுக் கலியப்பெருமாள் ஓடி வந்தார். மணிவண்ணன் தட்டுத்தடுமாறி எழுந்தான். முதலில் அவன் வைரப்பனைத்தான் பார்த்தான்.
திறந்த கதவின் வழியாக வெள்ளம் குபு குபு என்று உள் புகுவதைக் கண்ட கலியப்பெருமாள் கதவைச் சாத்த முயன்றார்; முடியவில்லை. மணிவண்ணன் எழுந்து இருவருமாகக் கதவைச் சாத்தினர்.
கலா, வைரப்பன் அருகில் வந்தாள். “வைரப்பன், வைரப்பன்” என்று உடலை அசைத்தாள். மெதுவாகக் கண்களைத் திறந்தான் வைரப்பன்.
‘அம்மா’ என்று கூறியவன் கலியப்பெருமாளைப் பார்த்தான். அருகில் வரும்படி சைகை காட்டினான்.
கலியப்பெருமாள் தரையில் அவன் அருகே அமர்ந்தார்.
வைரப்பன் ஏதோ கூறினான். தெளிவாகக் கேட்கவில்லை. கலியப்பெருமாள் குனிந்து கேட்டார். மணிவண்ணனும் உன்னிப்பாகக் கேட்டான்.
“மாணிக்கம் – பேய்” என்று வைரப்பன் முணுமுணுத்தான்.
“மாணிக்கம் – மாணிக்கமா?” என்று அதிர்ச்சியுடன் கலியப்பெருமாள் கேட்டார்.
“ஆ… ஆமா… என்னை… வெள்ளத்தில மூழ்… மூழ்கடிச்சுட்டான்… மாணிக்கம்.” என்று கண்களை மூடிக்கொண்டே கூறிய வைரப்பன் மௌனமானான். வைரப்பனிடமிருந்து எந்தவிதச் சத்தமும் வரவில்லை. வாயில் இருந்து ரத்தம் குபுகுபுவென்று வெளியாயிற்று.
மாணிக்கம் பற்றிக் கூறத் தன் இறுதி மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தவன் போலக் கூறி முடித்ததும் உயிர் துறந்தான் வைரப்பன்.
எழுந்து நின்ற கலா விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். வைரப்பனின் மரணத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.
மணிவண்ணன் கலியப்பெருமாளை நோக்கி, “யார் அந்த மாணிக்கம்?” என்றான்.
கலியப்பெருமாள் பதில் கூறாமல் இருந்தார்.
அவரையே மணிவண்ணன் பார்த்துக் கொண்டிருந்தான். மீண்டும் அதே கேள்வியை அவரிடம் கேட்டான்.
தலைநிமிர்ந்த கலியப்பெருமாள் “தம்பி, இதை நான் சொல்லக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா சொல்லவேண்டிய நிலைமை வந்துட்டுது. உங்க அப்பாவினால் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு மடிஞ்சவன்தான் மாணிக்கம்.” என்றார்.
விம்மலுக்கு இடையே ‘ஆ’ என்றாள் கலா.
“என்ன சொன்னீங்க? அப்பாவினால் கொலை செய்யப்பட்டவனா மாணிக்கம்? ஏன்… ஏன்… அவரு இந்தக் கொலையைச் செஞ்சாரு..?”
அத்தியாயம்-9
தன் அழகாலும் சாகசத்தாலும் அங்கப்பனைத் தன் வசமாக்கிக் கொண்டாள் மங்களம், காமத்துக்கு அடிமையாகி மதி இழந்து மங்களத்தின் காலடியே தஞ்சமென அவன் கிடந்தான். “நீங்கள் என் உலகம்; நீங்கள் என் உயிர்; எனக்கு வாழ்வு தந்த நீங்கள் என் தெய்வம்,” என்றெல்லாம் மங்களம் கூறியதை அங்கப்பன் உண்மை மொழிகள் என நம்பினான். ஆனால், மங்களத்திற்கு இருந்த ஒரே குறிக்கோள் அங்கப்பனின் பணம் – சொத்து அனைத்தையும் அடைதல்.
உடல் இன்பத்திற்கு அவள் சிலரை நாடினாள். அவர்களிலே ஒருவன்தான் மாணிக்கம்.
செல்வம் பெருகுகின்றபோது வளமான வாழ்வு வந்தடைகின்றபோது ஒரு சிலரே நிதானத்தை இழக்காமல், கடந்த கால வாழ்வை மறக்காமல் இருப்பார்கள். பலர் மறந்துவிட்டு ஆட்டம் போடுவார்கள். அந்த நிலைமைக்குத்தான் அங்கப்பன் ஆளானான்.
குடித்துக் கும்மாளம் போடுவதற்குச் சில நண்பர்கள்; விபச்சாரிகளை அறிமுகம் செய்து வைக்கச் சில நண்பர்கள்; சூதாட்டம் ஆடச் சில நண்பர்கள் என நண்பர் வட்டம் வளர்ந்தது.
ஓர் உண்டுறை விடுதியில் (hotel) மானேஜராக இருந்தவன் மாணிக்கம். அந்தப் பிரபலமான ஹோட்டலில் நடைபெற்ற ஒரு விருந்தின்போதுதான் அவன் அங்கப்பனுக்கு அறிமுகமானான். அந்த அறிமுகத்தால் பல பெண்களும் அங்கப்பனுக்கு அறிமுகமாயினர்.
பல பெண்களோடு தொடர்பு கொண்டவன் மாணிக்கம். அவனுடைய கண்கள் சற்று நீல நிறமாகவும் எவரையும் மயக்கும் தன்மை உடையதாகவும் இருந்தன. மாந்திரீகத்தின் மூலமாகப் புருவத்தில் மை தீட்டிப் பெண்களை மயக்கு கின்றானா அல்லது ஹிப்னோட்டீஸம் (hypnotism) என்ற முறையில் பெண்களை ஈர்க்கின்றானா என்று திட்டவட்டமாகக் கூறமுடியாத நிலை. எப்படி இருப்பினும், அடைய நினைத்த மங்கையரை அவன் எளிதில் அடைந்தான். அங்கப்பனுக்கும் அவர்களில் சிலரை அறிமுகம் செய்து வைத்தான்.
இதற்கிடையில் ஆற்றோரத்தில் அமைந்த மாளிகையை அங்கப்பன் வாங்கினான். மிகவும் ஆடம்பரமாக ‘house- warming’ஐக்-கிரகப்பிரவேசத்தை நடத்தினான். பல பிரமுகர்களும், நண்பர்களும் புதுமனை புகுவிழா விருந்திலே கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் பட்டுப்புடவை உடுத்தி விலை உயர்ந்த அணிகலன்களுடன் ஒரு தேவதைபோல் மங்களம் காட்சியளித்தாள். முதன் முறையாக மாணிக்கம் அவளைப் பார்த்தான். மங்களத்தின் அழகுக்கு அடிமையானான். அவளிடம் ஒரு சில நிமிடங்கள் பேசினான். அவள் அவனுக்கு அடிமையானாள். அடுத்த நாளே இருவரும் தனிமையில் சந்தித்தனர்.
நாள்கள்..வாரங்கள….ாதங்களாகின. மாணிக்கம் மங்களம் உறவு ஆழமாகத் தொடர்ந்தது.
வியாபார நிமித்தமாகவும் வேறு அலுவல்கள் காரணமாகவும் சிங்கப்பூர், பினாங்கு. கோலாலம்பூர் எனப் பல நகர்களுக்கு அங்கப்பன் சென்று திரும்ப இரண்டு மூன்று தினங்கள் ஆகும். அப்பொதெல்லாம் மாணிக்கம் மாளிகையில் வந்து தங்கிவிடுவான்.
அங்கப்பனுக்குத் துளியும் சந்தேகம் ஏற்படாமல் மங்களம் கவனித்துக்கொண்டாள்.
கலியப்பெருமாள். அங்கப்பனை விட்டு விலகிச் சென்றபின் அங்கப்பன் தன் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஆங்கிலோ இந்தியப் பெண் ரோஸ்லின் என்பவளிடம் ஒப்படைத்தான். நாற்பது வயதுக்கும் மேலான ரோஸ்லின் நன்கு ஆங்கிலம் கற்று மிகத் திறமையாக நிர்வாகம் செய்ததால், அனைத்துப் பொறுப்புகளையும் அவளிடம் தந்ததோடு அவள்மீது முழு நம்பிக்கையும் அவன் வைத்திருந்தான். நம்பிக்கையோடு ஒருவித மரியாதையும் அவனுக்கு இருந்தது. அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலோ இந்தியர்களை மற்றத் தமிழர்கள் “சட்டைக்காரர்கள்” என்று அழைப்பார்கள். மற்றவர்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்துடன் அவர்கள் ஆங்கிலேயர்களைப் போலவே தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டார்கள். ஆனால், ரோஸ்லின், “என் அப்பன் ஒரு இங்கிலீஸ்காரனாக இருக்கலாம். ஆனா, என் அம்மா ஒரு தமிழச்சி. அதனால், நான் ஒரு தமிழச்சி – தமிழ்ப் பண்போடு வாழ விரும்புகிறேன்.” என்றாள்.
வேலையில் அமர்ந்த இரண்டு தினங்களுக்குப் பிறகு ரோஸ்லினுடைய சிவந்த நிறமும் வாளிப்பான உடற்கட்டழகும் அங்கப்பனை மயக்கின. ஆங்கிலப் பெண் போல் இருந்த அவள் தன் இச்சைக்கு இணங்குவாள் என நினைத்து அவளை நெருங்கியபோதுதான், “நான் ஒரு தமிழச்சியாகத் தமிழ்ப் பண்போடு வாழ விரும்புகிறேன்” என்று அவள் கூறினாள். அன்றிலிருந்துதான் அங்கப்பனுக்கு அவளிடம் மிகுந்த மரியாதை ஏற்பட்டது.
திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்த ரோஸ்லின் ஓய்வு கிடைத்த போதெல்லாம் ஒரு குழந்தைகள் அநாதை விடுதிக்குச் சென்று சேவை செய்வாள். அங்கப்பனிடமிருந்து அந்த விடுதிக்கு என நிதி உதவியும் பெற்றிருக்கிறாள்.
ரோஸ்லின்தான், மங்களம் – மாணிக்கம் உறவு பற்றிக் கூறினாள். உறவு பற்றிக் கூறினாள் என்பதைவிட மங்களம் – அங்கப்பன் வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து மாணிக்கம் கணக்கிற்கு ஆயிரம் ஆயிரமாகப் பணம் மாறிக்கொண்டிருந்ததைப் பற்றி ரோஸ்லின் கூறினாள் என்று கூறுவதே பொருத்தமானது.
கணக்குகளைச் சரி பார்த்தபோதுதான் அந்த முறைகேடு நடந்த விஷயத்தை அறிந்து கொண்டதாகவும் வங்கியோடு தொடர்பு கொண்டு அதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் தெரியப்படுத்தினாள்.
அப்போதுதான் அங்கப்பன் தான் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்தான்.
சொத்துகள் – வங்கிகளில் இருக்கும் பணம் ஆகிய அனைத்தும் அங்கப்பன் – மங்களம் இருவர் பெயராலும் இருந்தன. மற்றொருவரின் கையெழுத்து இல்லாமலேயே பணத்தைப் பெறலாம்; வேறு கணக்குக்கு மாற்றலாம்…அல்லது…
1952-ஆம் ஆண்டு பினாங்கில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு அங்கப்பனுக்கு நினைவுக்கு வந்தது. சொத்தை அபகரிக்க எண்ணிய ஒரு சீன மாது தன் கள்ளக் காதலனுடன் திட்டமிட்டுக் கணவனைக் கொலை செய்த வழக்கு அன்று பரபரப்பை உண்டு பண்ணியயிருந்தது.
தானும் கொலை செய்யப்படலாம் என்று அங்கப்பன் எண்ணியபோது வேதனை அழுத்தியது. எவளுக்காகத் தன் அருமை மனைவியையும் ஒரே மகனையும் வீட்டை விட்டு விரட்டினானோ… அவள் இப்போது மாற்றான் மடியில் தலை சாய்த்ததோடு கணவன் தலையைத் துண்டாடவும் துணிந்துவிட்டாள்.
ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அங்கப்பனுக்கு ஞானோதயம் பிறந்தது. மனைவி மரகதத்தையும் மகனையும் நினைந்து கலங்கினான். வழிகாட்டிகளாகவும் நண்பர்களாகவும் இருந்த கலியப்பெருமாளையும் காதர் மைதீனையும் நினைவு கூர்ந்து வருந்தினான்.
கடந்த ஆறு ஏழு மாதங்களாக மங்களம் தன்னிடமிருந்து ஒதுங்கி இருந்ததற்கான காரணமும் புலனாகியது.
மாளிகைக்குச் சென்று மங்களத்திடம் மாணிக்கம் பற்றிக் கேட்கலாமா என நினைத்தான். பயனில்லை; அழுவாள் அல்லது சீறிப்பாய்வாள் அல்லது வீட்டை விட்டு உடனே கிளம்பி விடுவாள். மங்களத்தின் முன் அங்கப்பன் பலமுறை செயல் இழந்து நின்றிருக்கிறான். எனவே. மங்களத்தைப் பார்க்க அங்கப்பன் விரும்பவில்லை. ஒன்று அவன் உணர்ச்சி வயப்படுவான் அல்லது கோபம் கொள்வான்.
சுமார் ஒரு மணி நேரம் தன் தனி அறையில் அங்கப்பன் அமர்ந்திருந்து சிந்தித்தான். இறுதியாக ரோஸலினை அழைத்தான்.
“ரோஸலின், வீட்டுக்குப் போன் போடு. தோட்டத்து ஆபீஸ்ல இருந்து நான் போன் போட்டதாவும் போன் கிடைக்கலைன்னும், அதனாலதான் நீ இப்பப் போன் போடுறதாவும் சொல்லு. வேலைத் தொடர்பா பினாங்குக்குப் போறதாகவும் திரும்பி வர மூணு நாளாகும்னும் நான் சொல்லச் சொன்னதாகச் சொல்லு.” என்றான் அங்கப்பன்.
ரோஸலின் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அதோட சில பொறுப்புகளை மங்களத்தோட தம்பி பரம நாயகத்துக்கிட்ட கொடுத்திருந்தேன். தோட்டத்தில உள்ள சின்ன office’ல அவன் இருக்கான். முடிஞ்சா நாளைக்குப் போய் அங்குள்ள கணக்குகளையும் பார்க்கணும்.” என்று கூறிய அங்கப்பன், நாற்காலியில் இருந்து எழுந்தான்.
அன்றைய சூழ்நிலையில் செல்வர்களாகவும் பிரமுகர்களாகவும் இருந்த அங்கப்பன் போன்றவர்களுக்கு இரு வேறுப்பட்ட துறையினரிடம் செல்வாக்கும் ஆதிக்கமும் இருந்தன. ஒன்று, காவல் துறையினர். இரண்டு, ரகசியச் சங்கக் குண்டர்கள். தங்களுடைய தில்லு முல்லு காரியங்களுக்கும் சட்ட விரோதச் செயல்களுக்கும் அவர்களுடைய உதவியும் நட்பும் இவர்களுக்குத் தேவைப்பட்டன. இவர்களுடைய பணம் அவர்களுக்குத் தேவைப்பட்டது.
அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அங்கப்பன் குவாந்தானுக்கு வந்து தன் சீன நண்பனான Ah Hai-யைச் சந்தித்தான்.
அந்தச் சந்திப்புச் சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. பின்னர் முன் சென்றிராத ஒரு ஹோட்டலுக்குச் சென்று ஓர் அறை எடுத்துத் தங்கினான். விடிய விடிய மது அருந்தினான்.
காலை 7.00 மணிக்கு Ah Hai தொலைபேசி வழி தொடர்பு கொண்டான். அவன் கொடுத்த தகவல்: “மாளிகையின் முன் – 763 என்ற எண் கொண்ட கார் இரவு முழுமையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை என்னுடைய ஆட்கள் பார்த்திருக்கிறார்கள்.”
அந்தக் கார் மாணிக்கத்தின் கார் என்று அங்கப்பனுக்குத் தெரியும்.
காலை மணி ஒன்பது.
அன்பு முத்தங்களுக்குப் பிறகு மாணிக்கம் மங்களத்திடமிருந்து விடை பெற்றான். வாயிற்படிவரை வழியனுப்பி வைத்தாள். வேலைக்காரப் பெண் முத்துலட்சுமி எதையும் கவனிக்காமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அங்கே இருக்கிறாள் என்பது பற்றி மங்களம் கவலைப்படவே இல்லை.
மாணிக்கத்தின் கார் மாளிகைச்சாலையில் இருந்து திரும்பி, பிரதான சாலைக்குச் சென்றபோது… ஒரு சீனன் சைக்கிளில் குறுக்கே வந்தான். மாணிக்கம் காரை வளைத்தான். ஆனால், கார் சைக்கிளை மோதியது. சைக்கிளில் வந்த சீனன் லாவகமாக அடிபடாமல் புல் தரையில் குதித்தான். மாணிக்கம் பதறிப் போய் காரை நிறுத்திவிட்டுக் காரில் இருந்து இறங்கினான். சைக்கிள் வண்டியில் (bicycle) இருந்து குதித்தவன் எழுந்தான். சீனத்தில் அசிங்கமான மொழியில் திட்டியவாறு மாணிக்கத்தை எட்டி உதைத்தான். அதே கணத்தில் மரங்களுக்கிடையே மறைந்திருந்த ஐந்து சீனர்கள் பாய்ந்து வந்தனர். மாணிக்கம் காருக்குள் தள்ளப்பட்டான். சரமாரியான குத்துகளால் மாணிக்கம் மூர்ச்சையானான். எதிரே நிறுத்தப்பட்டிருந்த Morris Minor – காரின் பின்புறம் சைக்கிள் வைக்கப்பட்டது. ஆறு பேரில் இருவர் காரில் ஏறினர். நால்வர் மாணிக்கம் காரில் அமர்ந்தனர். இரு கரங்களிலும் பச்சைக் குறிகள் உடைய சீன இளைஞன். கார் பந்தயத்தில் காரைச் செலுத்துவது போலக் காரைச் செலுத்தினான்.
முற்பகல் மணி பதினொன்று. அங்கப்பனுக்குத் தலை ‘விண் விண்’ என்று வலித்தது. இரவு முழுமையும் பீர், விஸ்கி என்று குடித்ததாலும், தூங்காமல் இருந்ததாலும் தலை வெடிப்பது போல் இருந்தது.
டெலிபோன் ஒலி: Ah Hai – பேசினான்.
“Semua suda siyap” – everything is ready” என்றான். எல்லாவற்றையும் முடித்துவிட்டோம்; எல்லாம் தயாராக இருக்கிறது; என்று மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் கூறினான். எந்த இடத்தில் “எல்லாம் தயாராக இருக்கிறது” என்றும் கூறினான்.
அந்த இடம்..
சாலையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் அடர்ந்த காட்டின் நடுவே… ஓர் ஓடையின் அருகே….
இரத்த வெள்ளத்தில் மாணிக்கம் கிடந்தான்.
“டேய் மாணிக்கம்….”என்று குரல் கேட்டுப் பொறுக்க முடியாத வேதனையுடன் தன் கண்களைத் திறந்தான்.
எதிரே அங்கப்பன் நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது…. தன் இரு கைகளைத் தூக்க முடியாமல் உயரே தூக்கினான்.
“என்னை மன்னிச்சிடு…I am…sorry…” என்றான். அருகில் நின்றுகொண்டிருந்த சீனன் ஓர் அரிவாளை வைத்திருந்தான். அதை அங்கப்பன் வாங்கினான்.
மாணிக்கம்… “சார்… சார்….” “என்னை…என்னை…ஒண்ணும் செஞ்சிடாதீங்க…” என்று கெஞ்சினான்.
ஒரே வீச்சு. மாணிக்கம் அலறினான். தூக்கிய கைகள் வெட்டப்பட்டு வீழ்ந்தன.
அங்கப்பன். வெறி பிடித்தவனாக மாணிக்கத்தின் உடலைக் கண்டம் துண்டமாக வெட்டினான்.
ரகசியச் சங்கக் குண்டர்கள் தலைவன் “Ah Hai” அங்கப்பனை அழைத்து… மெதுவாக அரிவாளை வாங்கித் தூக்கி எறிந்தான்.
மயங்கிய நிலையில் இருந்த அங்கப்பனைத் தன் காரில் ஏற்றி அவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கே அழைத்துச் சென்றான். அங்கப்பனுடைய கார் பத்திரமாக அதே ஹோட்டலுக்குக் கொண்டு வரப்பட்டது.
அன்று முழுமையும் அங்கப்பன் ஏதோ ஒரு மயக்கத்தில் படுத்திருந்தான். அந்த மயக்கத்தில் நிழல் போல் மனைவி மரகதம் வந்தாள்…. மகன் மாணிக்கம் தவழ்ந்து வந்தான். மங்களம் ஒய்யாரமாக அசைந்து வந்தாள். மாணிக்கம் அவளை அணைத்து முத்தமிட்டான்…. அங்கப்பன்… மாணிக்கத்தை அங்குலம் அங்குலமாக வெட்டினான்..!
இந்தக் காட்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன.
இரவு மணி ஏழு…
மங்களம் மாணிக்கம் வேலை செய்யும் ஹோட்டலுக்குப் போன் போட்டாள். அவன் அன்று வேலைக்கு வரவில்லை என்று கூறப்பட்டது. மருத்துவ விடுப்பு (medical leave) எடுத்துக் கொள்ளப்போவதாக முன்தினம் கூறியிருந்த மாணிக்கம், நேராக ஹோட்டலுக்குப் போவதாகவும் பிறகு மாளிகைக்கு வந்துவிடுவதாகவும் கூறியிருந்தான். என்ன காரணம் என்று அவளுக்குப் புரியவில்லை..குளித்துவிட்டு உடை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தவளாகக் குளியல் அறைக்குச் சென்றாள்.
குளித்துக்கொண்டிருந்தபோது “மங்களம்” என்று மாணிக்கம் அழைத்த குரல் கேட்டது.
“ஓ. வந்துட்டீங்களா,” என்று குளியல் அறைக் கதவைத் திறந்து கேட்டாள்.
யாரும் இல்லை. ம்…நான் அவனையே நினைச்சுக்கிட்டே இருந்ததால் அவன் வந்து கூப்பிட்டது போல இருக்கு என்று தன்னைச் சமாதானம் செய்துகொண்டாள்.
ஆனால்… அவளுக்கு என்னவோ ஒரு மாதிரியாக இருந்தது. விரைவாகக் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டாள்.
அறைக்கு வெளியே வந்து “லட்சுமி” என்று கூப்பிட்டாள். சமையல் அறையில் இருந்த முத்துலட்சுமி படிக்கட்டுகளுக்கு அருகில் ஓடிவந்து, “என்ன அம்மா?” என்றாள்.
“நாயகம் வந்துட்டானா?” என்றாள்.
“இல்லை அம்மா” என்று பதில் வந்தது.
தன் தம்பி பரமநாயகம் முற்றும் மாறிவிட்டான் என்பதை நினைத்துப்பார்த்தபோது… மங்களத்திற்கு வேதனையாக இருந்தது. தமிழ் நாட்டில் இருந்து அவனை வரவழைத்து இந்த நாட்டிலே ஒரு வாழ்வு தந்ததையெல்லாம் யாரோ ஒரு பெண்ணுக்காக அவன் மறந்துவிட்டதை…
அவள் தன் தம்பியைப்பற்றி எண்ணிக் கொண்டிருந்த போது இரண்டு கார்கள் கிறீச்சிட்ட ஒலியுடன் மாளிகை முன் வந்து நின்றன. அடுத்த கணம் கதவு படபடவென்று தட்டப்படுவதும் காலால் உதைக்கப்படுவதும் கேட்டது.
“Buka lakas buka” – (திற. விரைவாகத் திற) என்று மலாய் மொழியில் கூறப்படுவதும் கேட்டது.
அப்படி முன்பு நடந்ததே இல்லை. வேகமாக மங்களம் கீழே இறங்கி வந்தாள்.
வேலைக்காரப் பெண் முத்துலட்சுமி திகிலுடன் நின்று கொண்டிருந்தாள்.
கதவு தொடர்ந்து தட்டப்பட்டது – உதைக்கப்பட்டது.
“Who is that….? What do you want?”
பதில் வந்தது. “Buka… buka” (திற திற)
வந்தவர்கள் கதவை உடைத்துக்கொண்டு வந்து விடுவார்கள் என்பது புலனாகியது.
மங்களம் தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத்திறந்தாள்.
மூன்று சீனர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நாலைந்து பேர்.
அவர்களுக்கெல்லாம் தலைவன் போலத் தோன்றியவன் உள்ளே நுழைந்தான்.
“Do you know whose house is this..?” மங்களம் முடிக்கவில்லை…
“I know… I know… Saya thauv, (எனக்குத் தெரியும்). Mr Angappan” என்று முதலில் வந்தவன் முடித்து வைத்தான்.
சீன மொழியில் ஏதோ கூறினான். முரட்டுக் காளைகள் போல நின்றிருந்த இருவர்… மங்களத்தைப் பிடித்தனர். அவள் அலறியவண்ணம் திமிறினாள். ஆனால்… அந்த இருவரில் ஒருவன் அப்படியே… அவளைத் தூக்கி… வெளியே கொண்டு சென்று கதவு திறக்கப்பட்டிருந்த காருக்குள் தள்ளினான். கால்களை உதைத்துக்கொண்டும் அலறிக்கொண்டும் இருந்த மங்களத்தின் முகத்தில் ஒருவன் ஓங்கிக் குத்தினான். “அம்மா” என்ற அலறலுடன் மங்களம் மூர்ச்சையானாள்.
அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்துலட்சும்…”ஐயோ… ஐயோ…” என்று அலறியவாறு வெளியே ஓட முயன்றாள்.
ஒருவன் அவளைப் பிடித்து “வாயை மூடிக்கொண்டிரு” என்று பாதி மலாய் மொழியிலும் பாதி ஆங்கிலத்திலும் கூறினான்.
ஒரு ரப்பர்த் தோட்டத்தில் இருந்து வேலைக்கு வந்த முத்துலட்சுமி, தன் தாயையும் தோட்டத்தின் காவல் தெய்வமான முனீஸ்வரரையும் நினைத்துக்கொண்டாள். அவள் உடல் அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது.
பயத்தால் இரவு முழுமையும் அதே இடத்தில் உட்கார்ந்திருந்த முத்துலட்சுமி, இரவு இரண்டு மணிக்கு மேல் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
விடியற்காலை கண் விழித்தவள் தன் சேலை துணிமணிகளை எடுத்துக்கொண்டு அந்த மாளிகையை விட்டு வெளியேறினாள்.
மங்களம் கண் விழித்தாள். ஒரு பெரிய அறையில் தான் இருப்பதை உணர்ந்தாள். அவள் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
தாய்லாந்து. இந்தோனேசிய, மலாய், சீன எனப் பல இனப் பெண்கள்….
தரையில் சிலர் படுத்திருந்தனர்; ஒரு சிலர் சுவரில் சாய்ந்திருந்தன…
ஜன்னல்கள் கறுப்புத் துணியால் மூடப்பட்டிருந்தன.
வெளியே Majong (சீன சூதாட்டம்) விளையாடும் ஒலி கேட்டது. திடீர் என்று அடுத்த அறையில் இருந்து ஒரு பெண் அலறும் ஒலி சுவரைத் தாண்டி வந்தது. Mai, PaaMai Paa” (அடிக்காதே…அடிக்காதே) என்று அந்தப் பெண் சீனத்தில் கதறினாள். உடன் ஓர் ஆணின் குரலும் அடி விழும் ஒலியும் ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் கேட்டன.
அறையில் இருந்த பெண்கள் பயத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மங்களத்திற்கு எதுவுமே புரியவில்லை. அருகில் இருந்த பெண்களிடம் மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் கேட்டாள்.
அவர்களிடமிருந்து எந்தவிதப்பதிலும் வரவில்லை.
Majong விளையாட்டு ஒலி தொடர்ந்தது.
காலை மணி ஏழு.
அங்கப்பனுக்குத் தொலைபேசி வழி செய்தி வந்தது.
அந்தச் செய்தி.
“மங்களம் விபச்சார விடுதியில் சேர்க்கப்பட்டு விட்டாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தவேண்டும். இல்லை என்றால் அவள் அடியும் உதையும் வாங்குவாள்.”
– தொடரும்…
– ஆற்றோரத்தில் ஒரு மாளிகை, முதற் பாதிப்பு: 2000, எஸ்.என்.பி எடிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சிங்கப்பூர்.