ஆற்றோரத்தில் ஒரு மாளிகை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: February 27, 2025
பார்வையிட்டோர்: 7,719 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

கடந்தவற்றைக் கூறிக்கொண்டு வந்த கலியப்பெருமாள் சற்று நிறுத்தினார். நிறுத்தியவர் தொடர்ந்தார்: 

“அங்கிருந்து வெளியேறிய நான் என் பழைய வழக்கறிஞர் தொழிலுக்கே போயிட்டேன். மரகதமும் மணிவண்ணனும் வீட்டை விட்டுப் போய்விட்டதாவும் கேள்விப்பட்டேன். மங்களத்தை அங்கப்பன் பதிவுத் திருமணம் செய்துக்கிட்டாங்கிற தகவலும் கிடைச்சுது. நல்லா இருந்த குடும்பத்தை அங்கப்பன் பாழாக்கிட்டானேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். அங்கப்பன் ஒருத்தன் இருந்தாங்கிறதையே நான் மறந்துட்டேன். ஆமா, தம்பி தோட்டத்தில் இருந்து வெளியேறிய நீங்க…?” என்று கலியப்பெருமாள் ஒரு கேள்விக்குறியோடு நிறுத்தினார். ஒரு கணம் மௌனமாக இருந்த மணிவண்ணன், “சுருக்கமா சொல்றேன். கலாவோட அப்பாதான் ராமலிங்கம். அப்ப கலாவுக்கு வயது ரெண்டு இருக்கும். செம்பவாங் எஸ்டேட்டில் அம்மாவுக்கும் எனக்கும் துணையா இருந்தவங்க மாமா ராமலிங்கம். அத்தை பார்வதி. கலா” என்று கூறிக் கலாவைப் பார்த்தான். கலா தன் கணவன் முகத்தைப் பார்த்தாள். ஒரு பெருமூச்சுடன் மணிவண்ணன் தொடர்ந்தான். 

“எங்களுக்கெல்லாம் துணையா இருந்தவங்க ஒரு சின்னக் குடிசையில இருந்த மாரியம்மன். அந்தக் குடிசைக்குப் பக்கத்திலதான் எங்க குடிசை இருந்தது. என் அம்மா பல தோட்டங்களுக்குச் சொந்தக்காரரின் மனைவியான அம்மா புல் வெட்டுகிற வேலையில சேர்ந்தாங்க. காலையில இருந்து பிற்பகல் வரை கடும் வெயில்ல வியர்வைத் துளிகள் முத்து முத்தா வழிந்தோட வேலை செய்தாங்க. ஒரு காசு -அஞ்சு காசுன்னு ஒரு சின்ன உண்டியல்ல போடுவாங்க. போட்டுட்டு. ‘மணி, நீ நல்லா படிச்சு வரணும்’ன்னு சொல்லுவாங்க. ஆனா பள்ளிக்கூடம் போக பள்ளிக்கூடம் இல்லை. ரத்தினங்கிற ஒரு தொழிற்சங்கவாதி ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடத்தைத் தோட்டத்துக்குப் பக்கத்தில இருந்த பழைய குடிசையில ஆரம்பிச்சாரு. அந்தப் பள்ளிக்கூடத்தில அம்மா என்னை சேர்த்துவிட்டாங்க. படிச்சேன்…. ஒரே வெறி… படித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்து என் அம்மாவை வீட்டிலேயே வச்சுப் பாதுகாக்கணுங்கிற வெறியில படிச்சேன். இதற்கிடையில ஆங்கிலப்பள்ளி ஒண்ணும் ஆரம்பிக்கப்பட்டது. அம்மாவோட ஆசைப்படி நான் ஆங்கிலப்பள்ளிக்குப் போனேன். படித்து.. ஒரு நல்ல வேலையில் அமர்ந்தேன். என் குறிக்கோள் நிறைவேறியது. என் அம்மா எப்போதும் என் கூடவே இருப்பாங்கண்ணு நினைச்சேன். எனக்கும் கலாவுக்கும் திருமணத்தை நடத்தி வைச்சுட்டு அவுங்க என்னைப் பிரிஞ்சாங்க,” என்று கடந்த கால வாழ்வைக் கூறிவந்த மணிவண்ணன், தொடர முடியாமல் நிறுத்தினான். அவன் குரல் கரகரத்தது. அருகில் இருந்த கலா அவன் கைகளைத் தன் கைகளோடு இணைத்துக்கொண்டாள். 

அதுவரை மௌனமாக இருந்த கதிரவன்… “மிஸ்டர் கலியப்பெருமாள். இப்ப… எனக்கு ஓரளவு என்ன நடந்ததுன்னு புரியுது. எப்படி நீங்க மணிவண்ணனோட தற்போதைய இடத்தைக் கண்டுபிடிச்சீங்க…? உங்களை அடிக்கக் கை ஓங்கிய அங்கப்பனைப் பிறகு எப்பச் சந்திச்சீங்க…?” 

“ஒரு வருசத்துக்கு முந்தி ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு என்னைத் தேடிக்கிட்டு அங்கப்பன் வந்தான். பழைய கம்பீரம் – பழைய செருக்கு, திமிர், ஆணவம் எல்லாம் இல்லை. என் கால்ல விழ வந்தான். ஒதுங்கி நின்னுக்கிட்டேன். ஏதோ ஒரு அதிர்ச்சியில-பயத்தில் இருந்தான். தெளிவா பேச முடியலை; திக்கித் திக்கிப்பேசினான். திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டுப் பேசினான். மரகதத்தைப் பத்தியும் மகன் மணிவண்ணன் பத்தியும் பேசும்போது விம்மி விம்மி அழுதான். சொத்தை எல்லாம் மங்களமும் அவ தம்பி பரமநாயகமும் சூறையாடிட்டதாகவும் கடைசியா ஒரே பங்களா – மாளிகை இருக்கிறதாகவும் சொன்ன அங்கப்பன், அந்த மாளிகையைத் தன் மகன் மணிவண்ணனுக்கு உயில் எழுதி வைக்கப் போறதா சொல்லி உடனடியா உயில் தயாரிக்கச் சொன்னான். 

உயிலை நேரடியாகவே மரகதத்துக்கிட்டேயும் மணிவண்ணன்கிட்டேயும் கொடுக்கணுமுன்னு சொன்னான். ரெண்டு நாள்ல உயிலைத் தயாரிச்சு அவன்கிட்ட நான் கொடுத்தேன். அதை வாங்கிப் பார்த்தான். அப்பதான் அங்கப்பன் முகத்துல ஒரு மகிழ்ச்சி. அடுத்த கணம் நெஞ்சு வலிக்குதுன்னான். சுருண்டு கீழே விழப்போனவனை நான் தாங்கிப் பிடிச்சேன். அவன் உயிர் பிரிஞ்சுது.” என்று கலியப்பெருமாள் கூறி நிறுத்தினார். 

அனைவரும் மௌனமாக இருந்தனர். 

“அதன் பிற்பாடு மரகதத்தையும் மணிவண்ணனையும் தேடித் தோட்டத்திற்குப் போனேன். கலாவோட சித்தப்பா கணபதி அதே தோட்டத்தில் இருந்ததால சுலபமா மணிவண்ணனோட முகவரி எனக்குக் கிடைச்சுது.” என்று கலியப்பெருமாள் பழைய வரலாற்றைக் கூறி முடித்தார். 


ஆற்றோரத்தில் அமைந்த அந்த மாளிகை தனக்கு வேண்டாம் என்று மணிவண்ணன் கூறினான். நீண்ட விவாதத்திற்குப் பின் மணிவண்ணனின் நெருங்கிய நண்பனும் வழக்கறிஞனுமான கதிரவன் எளிதான ஒரு முடிவைக் கூறினான். “நாம் எல்லாரும் அந்த மாளிகையைப் போய்ப் பார்ப்போம். பிறகு என்ன செய்யலாம்’ன்னு முடிவு செய்வோம். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்ன ஒரு லட்சம் வெள்ளிக்கு வாங்கப்பட அந்த மாளிகை இப்ப.. இருபது… முப்பது லட்சம் ரிங்கிட்டுக்கு விலை போகலாம். பிற்பாடு முடிவு பண்ணுவோம்” என்று கதிரவன் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். 

இரு வாரங்களுக்குப்பின் மணிவண்ணன், கலா, கதிரவன், அவன் வருங்கால மனைவி பத்மா ஆகியோர் மாளிகை காணப் புறப்பட்டனர். 

அத்தியாயம்-5 

ஆண்டுக்கு ஒரு முறையாவது மணிவண்ணனும் கலாவும் கோலாலம்பூர் பத்துமலைக்குச் சென்றுவிடுவார்கள். முருகப் பெருமானைத் தரிசித்த பிறகு கோலாலம்பூரில் இருக்கும் கலாவின் உறவினர் வீட்டில் ஓரிருநாள் தங்கியிருந்துவிட்டு வீடு திரும்புவார்கள். 

‘மாளிகையில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இரண்டு நாள் மாளிகையில் தங்கி இருந்துவிட்டு வரலாம்’ என்று கலியப்பெருமாள் கூறினார். மாளிகையில் இருநாள் தங்கி இருந்துவிட்டுப் பத்துமலைக்குச் சென்று சிங்கப்பூர் திரும்பலாம் எனக் கதிரவன் கூறியதை மணிவண்ணன் ஏற்றுக்கொண்டான். வசதிகளைப் பொறுத்து மாளிகையில் ஒரு நாள் தங்குவதா இரண்டு நாள் தங்குவதா என்பதைப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்மானித்துக்கொண்டனர். 

கலியப்பெருமாள் கொடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு கதிரவன் கூறக் கூற மணிவண்ணன் காரை ஓட்டினான். பெண்கள் இருவரும் பலவற்றைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர். Pekan பட்டணத்தைத் தாண்டிக்கார் சென்றுகொண்டிருந்தது. சிறுசிறு மலாய்க் கிராமங்கள். பின்னர்ப் பொட்டல்வெளிகள் காடுகள் எனக் காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன. 

“அதோ… அந்தச் சாலையில் திரும்பு மணி…” என்றான் கதிரவன். 

குறுகலான சாலை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே பொட்டல் வெளி. ஆங்காங்கே சில மரங்கள்.. புதர்கள்.. 

சற்றுத்தொலைவில் மாளிகை தெரிந்தது. 

“அதுதான்… மாளிகை.” என்று கதிரவன் கூவினான். 

மாளிகை கம்பீரமாக ஆற்றின் அருகே நின்றது. 

ஆற்றோரத்தில் நின்று காரைப் பார்த்துக்கொண்டிருந்த கலியப்பெருமாள் காரை நோக்கி வந்தார். 

காரில் இருந்து இறங்கிய மணிவண்ணன். கதிரவன், கலா ஆகியோரை. “வாங்க தம்பி… வாங்கம்மா…” என்று கூறிய கலியப்பெருமாள். இறுதியாக இறங்கிய பத்மாவைப் பார்த்ததும் திடுக்கிட்டவராக அவளை நோக்கினார். 

“என்ன சார்… அப்படிப் பார்க்கிறீங்க… என் பேரு பத்மா….” என்று கூறிக் கதிரவனைப் பார்த்தாள். 

அதற்குள் கலா குறுக்கிட்டு, “இவதான் கதிரவனோட வருங்கால மனைவி.” என்று அறிமுகப்படுத்தினாள். 

“என்னை மன்னிச்சுடுங்க. எங்கேயோ பார்த்த முகமா இருக்கேன்னு அப்படிப் பார்த்தேன்.” என்றார். அதற்குள் மாளிகையில் இருந்து ஒருவன் வெளியே வந்தான். அவனைக் கண்டதும், “வா, வைரப்பா.. கார்ல இருந்து பொருள்களை எடுத்துக்கொண்டு போய் வை…” என்று கூறிவிட்டு, “வைரப்பன் பெக்கானுக்குப் பக்கத்திலே உள்ள ஒரு கிராமத்திலதான் இருக்கான். வாரத்துல ஒரு நாள் வந்து மாளிகையைச் சுத்தம் செஞ்சுட்டுப் போவான். ரொம்ப நம்பிக்கையானவன்,” என்று கூறியவர். “தம்பி, மாளிகை எப்படி இருக்கு?” என்று மணிவண்ணனை நோக்கிக் கேட்டார். “இப்படிப்பட்ட பங்களாக்களை மாளிகைகளைச் சாங்கி, செம்பவாங் பகுதிகள்ல பார்த்திருக்கேன். உயர் பதவியில RAF – Naval Base-ல இருந்த ஆங்கிலேயர்களுக்காகக் கட்டப்பட்ட அந்தப் பங்களாக்கள் மாதிரி இருக்கே” என்றான் மணிவண்ணன். 

“சரியாச் சொன்னீங்க தம்பி. பக்கத்துல ஒரு ரப்பர் எஸ்டேட் இருந்தது. அந்த எஸ்டேட்டுக்குச் சொந்தக்காரனாக இருந்த ஓர் ஆங்கிலேயன் இந்த மாளிகையைக் காலனித்துவக் கட்டட அமைப்பு முறைப்படிக் கட்டி இருந்தான். பிறகு ஒரு சீனன் இதை வாங்கினான். அவன்கிட்ட இருந்துதான் உங்க அப்பா வாங்கினாரு.ம் வாங்க….” என்று கலியப்பெருமாள் முன் செல்ல மணிவண்ணன், கலா, கதிரவன், பத்மா நால்வரும் பின் தொடர்ந்தனர். 

பத்மாவுக்கு ஒரே ஆனந்தம். சின்னக் குழந்தைபோல பரபரவென்று அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள். 

இரண்டு மாடி கொண்ட அந்த மாளிகையில் கீழ்த்தளத்தில் வேலைக்காரர்களுக்கு என இரண்டு அறைகளும், ஒரு ‘ஸ்டோர்’ ரூமும் இருந்தன. அதனை நிலவறை என்று குறிப்பிட்ட கலியப்பெருமாள் அது பற்றிப் பிறகு கூறுவதாகக் கூறினார். 

மேல் மாடியில் ஐந்து அறைகள் இருந்தன. அந்த ஐந்து அறைகளில் நான்கு அறைகள் திறந்திருந்தன. ஒவ்வொரு அறையிலும் இருவர் படுத்துக்கொள்ளக் கட்டிலும் எழுதப் படிக்க ஒரு மேசையும் படுக்கை அறையுடன் இணைக்கப்பட்ட குளியல் அறையும் இருந்தன. நவீன வசதிகளுடன் கூடிய அந்த அறைகள் ஹோட்டல் அறைகளை நினைவூட்டக் கூடியவையாக இருந்தன. 

இரண்டு அறைகள் ஆற்றை நோக்கி இருந்தன. ஓர் அறையில் மணிவண்ணனும் கலாவும் தங்கிக்கொள்ளலாம் என்றும் அடுத்த அறையில் கதிரவவனும் பத்மாவும் தங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. தன் அறையைப் பத்மாவே தேர்ந்தெடுத்துக்கொண்டாள். ஓர் அறையில் கலியப்பெருமாள் தங்கிக்கொள்வதாகக் கூறினார். 

“பலமுறை இங்க வந்திருக்கேன். ஆனா… தங்கினதே கிடையாது” என்றார் கலியப்பெருமாள். 

கதிரவன் பத்மா தேர்ந்தெடுத்த அறைக்கு எதிரே இருந்த அறையைச் சுட்டிக்காட்டிய கலியப்பெருமாள், “நான் முதன் முதலா வந்தப்பவே கதவு திறக்க முடியாம இருந்தது. இதோ பாருங்க. கதவைத் திறக்க முடியாம பூட்டை யாரோ உடைச்சிருக்காங்க. அது அப்படியே stuck ஆகிட்டுது.” என்றார். 

மணிவண்ணன் கதவுக் குமிழைத் திருப்ப முயன்றான். முடியவில்லை. 

குமிழ் இருந்த இடத்தைக் காண்பித்து, “இந்தப் பகுதியை வெட்டி எடுத்தாத்தான் கதவைத் திறக்க முடியும். பிறகு புதுசா ஒரு கதவு செய்யணும். அதனாலதான் அப்படியே விட்டுவச்சுட்டேன். இன்னும் இரண்டு நாள்ல கதவை உடைச்சு வேறு கதவு போட ஏற்பாடு செஞ்சிடுறேன்.” என்று கூறிய கலியப்பெருமாள் “ம் வாங்க கீழே போகலாம்.” என்றார். 

மணிவண்ணன் தயங்கிக்கொண்டே. நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த மாளிகையைச் சுத்தம் செய்து பராமரிக்கவும் – வைரப்பனுக்குச் சம்பளம்.. கொடுக்கவும்.?.” 

“எப்படிப் பணம் கிடைக்குதுன்னு கேட்கிறீங்களா தம்பி? கடைசியா என்னைச் சந்திச்சு உயில் எழுதச் சொன்னப்பவே உங்க அப்பா ரொக்கமாக இருபதாயிரம் ரிங்கிட் கொடுத்தாரு. அதைக் கொண்டுதான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கேன்.” என்று கலியப்பெருமாள் விளக்கம் தந்தார். 

கீழே வந்தபோது. காபி. வாட்டப்பெற்ற ரொட்டித்துண்டுகளுடன் வைரப்பன் காத்திருந்தான். 

“ம்…. எல்லாரும் காப்பி குடிங்க,” என்று கூறிய கலியப்பெருமாள் “காலையில சிங்கப்பூர்ல இருந்து புறப்பட்ட நீங்க இங்க சரியா மூணு நாலு மணிக்கு வந்துடுவீங்கன்னு எனக்குத் தெரியும். அதே மாதிரி மூன்றரை மணிக்கு வந்துட்டீங்க. சரி… இனி உங்க முடிவுதான்… அதாவது இங்க தங்கப் போறீங்களா… அல்லது..?” கலியப்பெருமாள் கூறி முடிப்பதற்குள் பத்மா, “Oh. I like this place. Please, let it be a picnic for us,” என்றாள். 

”உங்களுக்கெல்லாம் இந்த மாளிகை ரொம்பப் பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியும். முன்பு நாம பேசினப்படி நீங்க எத்தனை நாளைக்கு வேணுமுன்னாலும் இங்க இருக்கலாம். இன்னைக்குச் சாப்பாட்டுக்குன்னு வைரப்பன்… இதோ மீ கோரேங், ரோஜா, புராட்டான்னு நிறைய வாங்கிட்டு வந்திருக்கான். நாளைக்குக் காலைச் சிற்றுண்டிக்கு ஏதாவது… வாங்கிட்டு வந்துடுவான். சொந்தமா சமைக்கணுமின்னாலும் அதுக்குள்ள வசதிகளும் இருக்கு.” என்று கூறிய கலியப்பெருமாள் சமையல் அறையையும் காண்பித்தார். 

மின்சார சமையல் சாதனங்களுடன் அடுப்புக்கரி, மண்ணெண்ணெய் பயன்படுத்தும் பழைய முறை அடுப்புகளும் இருந்தன. 

“எப்போதாவது மின்சாரத் தடை ஏற்பட்டா எந்தவிதப் பாதிப்பும் இல்லாம தொடர்ந்து செயலாற்றலாம். இதே போல் மெழுகுவத்திகளும், பெட்ரோமாக்ஸ் விளக்கும் இருக்குது,” என்று கலியப்பெருமாள் கூறி, “தம்பி, இதுதான் நிலவறை,” என்று சுட்டிக்காட்டினார். 

“இது ஸ்டோர் ரூம் மாதிரி இருக்கே.” என்று கதிரவன் கேட்டதற்கு “ஆமா. ஆனா, மணிவண்ணன் அப்பா இதை இடிச்சுக்கட்டிப் பூமிக்கடியில ஓர் அறையைக் கட்டிட்டாரு.” என்று கூறி அறைக்கதவைத் திறந்தார். 

படிகளுடன் கூடிய அந்த நிலவறை, குகை போல் காட்சியளித்தது. 

சுவிட்சைப் போட்டதும் விளக்கொளியில் படிகள் தெரிந்தன. 

“நானும் மணிவண்ணனும் முதல்ல போறோம்.” என்று கூறிய கலியப்பெருமாள் படிகளில் இறங்கினார். 

சுவரோடு நின்ற அடுக்குகளில் (cabinets) பல விதமான கோப்புகளும் – (files) பழைய நாளிதழ்கள் சஞ்சிகைகள் போன்றவை அடுக்கடுக்காக வைக்கப் பட்டிருந்தன. ஒரு பெட்டிக்குள் அங்கப்பனின் நாட்குறிப்புகளும் (diaries) புகைப்பட ஆல்பம்களும் (photo albums) இருந்தன. “தம்பி, அங்கப்பன் கடைசிக் காலத்தில் இந்த அறையைப்பற்றித்தான் என்கிட்ட சொன்னான். உங்க அப்பாவோட வாழ்க்கை பற்றிய குறிப்புகள் இதுல கிடைக்கும். சாவகாசமா இதை எல்லாம் படிச்சுப்பாருங்க. வேண்டியதை எடுத்து வச்சுக்கலாம். வாங்க. போகலாம்.” என்று கூறிக் கிளம்பினார். 

கதிரவன் மட்டும் நிலவறையைப் பார்க்க விரும்பினான். 

‘ராஜாராணி திரைப்படங்கள்ல உள்ள சுரங்கப்பாதைபோல இருக்கு… பயமா இருக்கு..’ என்று கூறிக் கலாவும் பத்மாவும் நிலவறையைப் பார்க்க விரும்பவில்லை. 

“இந்த மாளிகையைப் பார்த்தா… டவுனுல இருந்து ரொம்பத் தூரத்தில் இருக்கிற மாதிரி இருக்கு. ஆனா மின்சாரம், டெலிபோன் எல்லா வசதிகளும் இருக்கு. இது எப்படி?” என்று கதிரவன் கேட்டதற்குக் கலியப்பெருமாள். “நீங்க பிரதான சாலையில் இருந்து வந்ததால – தூரமா தெரியுது. ஆனா, இங்கே இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், குவாந்தானுக்குப் போற சாலையில் தொழிற்சாலைகள் உள்ள பகுதி இருக்கு. அங்கே இருந்து இங்கே மின்சார வசதி நீட்டிக்கப்பட்டிருக்கு” என்று கலியப்பெருமாள் விளக்கம் தந்தார். 

‘குவாந்தான்’ என்ற சொல்லைக்கேட்ட கலா “குவாந்தான்னு சொன்னீங்களே… அப்ப மாரான்…?” என்று ஆவலோடு கேட்டாள். 

“இங்கே இருந்து சுமார் 120-130 கிலோ மீட்டர் தூரத்திலதான் மரத்தாண்டவர் இருக்காரு” என்று கலியப்பெருமாள் கூறியபோது கலாவின் கண்கள் படபடத்தன. அதே வேளையில் ஹாலுக்கு அருகில் இருந்த வேலைக்காரர்களின் ஓர் அறைக்குள் சென்ற பத்மா “அப்பா” என்று அலறினாள். 

அவள் அலறல் சத்தம் கேட்டு அனைவரும் அந்த அறைக்குச் சென்றனர். 

“என்ன பத்மா. என்ன பத்மா” என்று அவள் அருகில் சென்ற கதிரவனைப் பயத்துடன் இறுக அணைத்துக் கொண்டாள். அவள் உடல் நடுங்கியது. 

“அதோ பாருங்க…” என்று சுட்டிக்காட்டிய திசையில் 

அனைவர் பார்வையும் சென்றது. 

அங்கே மூலையில் ஓர் எலி விழித்துக்கொண்டிருந்தது. 

அதைப் பார்த்ததும் கதிரவனுக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. “என்ன பத்மா, உன்னைப் பார்த்துத்தான் எலி நடுங்கிப் போயிருக்கு….” என்று கூறி முடிப்பதற்குள், “இந்தக் கேலி பேச்செல்லாம் வேணாம். என்னை விடுங்க.” என்று கதிரவன் கையை உதறிவிட்டுச் சென்றாள். கலா அவளைத் தொடர்ந்தாள். 

இதற்குள் அங்கு வந்த வைரப்பன். “எப்படியோ இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு எலிங்க வந்துடுது. நாளைக்கு இதுக்கு ஒரு வழி பண்ணிடுறேன்,” என்று கூறி எலியை அடிக்கத் துடைப்பத்தை எடுத்தான். அதற்குள் அந்த எலி வெளியே ஓடி மறைந்தது. வானத்தில் இடி முழங்கியது. “மழை வரும்போல இருக்கு. எல்லாரும் குளிச்சிட்டு உடை மாத்திக்கிட்டு வந்துடுங்க. பிறகு பேசிக்கிட்டு இருக்கலாம்.” என்று கலியப்பெருமாள் கூறினார். 

சோபாவில் கோபத்துடன் உட்கார்ந்திருந்த பத்மாவைச் சமாதானப்படுத்தும் நோக்கத்தில், “பத்மா வா ரூமுக்குப் போய் குளிச்சிட்டு உடை மாத்திக்கிட்டு வருவோம்.” என்று கன்னத்தைத் தடவி அழைத்தான். சிறு குழந்தையைப் போலச் சிணுங்கிக்கொண்டே பத்மா கதிரவனைப் பின் தொடர்ந்தாள். 

அவ்விருவரும் மேல் மாடிக்குச் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த கலியப்பெருமாள், “பத்மா குடும்பத்தைப்பத்தி உங்களுக்கு நல்லா தெரியுமுல்ல,” என்று மணிவண்ணனைப் பார்த்துக் கேட்டார். கதிரவனுக்கும் தனக்கும் நீண்ட நாள் பழக்கம் என்றும், பத்மா அண்மையில்தான் தங்களுக்கு அறிமுகமானாள் என்றும் மணிவண்ணன் மறுமொழி தந்தான். 

நிலவறையில் இருந்த சில ஆல்பம்களையும், நாளிதழ்களையும் புரட்டிப் பார்க்க மணிவண்ணன் நிலவறைக்குச் சென்றான். வைரப்பனுக்கு உதவி செய்யக் கலா சமையல் அறைக்குச் சென்றாள். 

கலியப்பெருமாள் ஹால் விளக்குகளை எரியவிட்டார். விலை உயர்ந்த விளக்குகள் தந்த ஒளி, மாளிகைக்கு மேலும் அழகு சேர்த்தது. மழை பெய்யத் தொடங்கியது. பெய்தது என்று கூறுவதைவிட வானத்தில் இருந்து நீர் கொட்டியது என்றே கூறவேண்டும். 


தங்கள் அறைக்கு வந்த கதிரவனும் பத்மாவும் சுவிட்சைப் போட்டனர். விளக்கொளி எங்கும் பரவியது. 

“ரொம்ப அழகான அறை,” என்று பத்மா கூறிக் கொண்டே ஜன்னலுக்கு அருகில் சென்றாள். மணி ஆறு என்றாலும் மழையின் காரணமாக வெளியே இருட்டாக இருந்தது. எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. 

அவளைப் பின்புறமாகத்தழுவினான் கதிரவன். திரும்பிய பத்மா அவனை அணைத்துக்கொண்டாள். “பத்மா” என்று மெதுவாகக் கூறி அவளின் செக்கச் சிவந்த உதடுகளில் முத்தமிட்டான். 

கண்களை மூடி இருந்த பத்மாவுக்குத் தங்களை யாரோ பார்ப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. கண்களைத் திறந்தாள். அறைக்கதவு லேசாக ஆடியது போன்றிருந்தது. கதிரவன் பிடியில் இருந்து பட்டென்று விடுவித்துக்கொண்டாள். 

“என்ன பத்மா… என்னது?” என்றான். 

“கதவை நீங்க சரியா பூட்டலை… யாரே… வந்தது போல இருந்தது.” என்றாள். 

பத்மாவைத் தன் பிடியில் இருந்து விட்டுக் கதவருகே சென்றான். கதவு சாத்தப்படாமல் இருந்தது. 

உள்ளே வந்தபோது கதவை இழுத்து மூடியது கதிரவன் நினைவுக்கு வந்தது. ஆனால், இப்போது கதவு சாத்தப்படாமல் இருந்ததைக் கவனித்தான். 

“என்ன யோசிக்கிறீங்க?” என்றாள். “இல்லை… இல்லை… கதவை நான்தான் சரியா சாத்தலைபோல இருக்கு….இங்க யார் வரப்போறா? எலியைப்பார்த்து….” என்று கூறியவன் பத்மா கோபித்துக் கொள்வாளே என்று சட்டென்று நிறுத்திவிட்டுக் கதவை இழுத்து மூடினான். 

பத்மாவை மீண்டும் முத்தமிட்ட கதிரவன் காதோரமாக ஏதோ கூறினான். 

“ம்ஹீம்… கோவில் கல்யாணத்திற்குப் பிறகுதான்….” என்று கூறி அவன் கன்னத்தில் லேசாகத் தட்டினாள். 

“Ok… Madam.” என்றான் கதிரவன். 

இருவருக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றுவிட்டது. அடுத்த இரண்டு மாதங்களில் கோவில் திருமணம் நடைபெறவிருந்தது. இருவரும் நெருங்கிப் பழகினாலும் பண்பாட்டை மீறவில்லை. 

“நான் போய் குளிச்சுட்டு வந்துடுறேன்.” என்று கூறிக் குளியல் அறைக்குள் பத்மா சென்றாள். 

பிரயாணப் பையைத் (travelling bag) திறந்த கதிரவன் அதில் இருந்து விஸ்கி போத்தலை எடுத்தான். உடன் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கோப்பையில் சிறிது விஸ்கியை ஊற்றினான். பின்னர்ச் சோடா டின்னைப் பட்டென்று திறந்து சோடாவைக் கலந்தான்; குடித்தான்; தெம்பாக இருந்தது. 

மேஜையில் விஸ்கியை வைத்துவிட்டு உடன் கொண்டு வந்த ஃபைலை (கோப்பு) எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். அது ஒரு வழக்குத் தொடர்பான ஃபைல். இரண்டாவது முறையாக விஸ்கியைச் சிறிது அருந்தினான். 

அப்போது.. ஏதோ நிழல் மேஜையில் படர்ந்ததுபோல் அவனுக்குத் தோன்றியது. திடுக்கிட்டவனாக மீண்டும் பார்த்தான். 

வேறு ஒன்றுமில்லை… பிளாஸ்டிக் கோப்பையை அவன் வாயருகே கொண்டு வந்தபோது விளக்கொளிபட்டு அவன் கை நிழல், மேசையில் படர்ந்தது என்பதை உணர்ந்து தனக்குள் சிரித்துக்கொண்டான். 

மேலும் கொஞ்சம் சோடாவுடன் விஸ்கியைக் கலந்து அருந்தினான். பெரும்பாலும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் தன் தனி அறையில் அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விஸ்கியைப் பருகிக்கொண்டே சில வழக்குகள் பற்றிய குறிப்புகளைச் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் எடுத்துவிடுவான். 

இரண்டாவது முறையாக விஸ்கியைக் குடித்தவுடன் கதிரவனுக்குத் தலை சுற்றுவதுபோல் இருந்தது. அது அவனுக்கு வியப்பாக இருந்தது. பிரயாணக் களைப்பினால் அவ்வாறு மயக்கம் வருகிறதா என்று யோசித்தான். முடியாது… இரண்டே இரண்டு ‘பெக்’ விஸ்கியைச் சோடாவுடன் கலந்து குடித்து இப்படி மயக்கம் வருவது என்றால்…. நாற்காலியில் இருந்து எழ முயன்றான்.. முடியவில்லை. தலை சுற்றியது. அப்படியே மேசைமீது தலையைக் கவிழ்த்தான். கண்கள் இருண்டன. இறுக மூடிக் கொண்டான். மூடிய கண்களை அவனால் திறக்க முடியவில்லை. 

குளியல் அறையில் பத்மா குளித்துக்கொண்டிருந்தாள். வெந்நீர் தங்கநிகர் உடலைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது. வெளியே மழை நீர் கடுமையாகப் பெய்துகொண்டிருந்தது குளியல் அறை ஜன்னல் வழியாகத் தெரிந்தது. பத்மாவுக்கு யாரோ தன்னைப்பார்ப்பது போன்றிருந்தது. அறையைப் பார்த்தாள். யாரும் இல்லை. எதுவும் தெரியவில்லை. ஆனாலும், பத்மாவுக்கு ஒருவித அச்சமான உணர்வு மேலோங்கியது. நீர்க்குழாயை மூடிவிட்டுத் தொங்கிய துவாலையை எடுத்துத் தன் உடலை மறைத்துக்கொண்டாள். 

“கதிரவன்… கதிரவன்” என்று கூப்பிட்டாள். பதில் இல்லை. மெதுவாகக் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தாள். கதிரவன் மேசைமீது தலைவைத்துப் படுத்திருந்தது தெரிந்தது. மீண்டும் கதிரவன் என்று கூப்பிட்டாள். பதில் இல்லை. 

பையில் இருந்து புதிய ஆடைகளை அணிந்து கொண்டாள். 

கதிரவன்… தோளில் கை வைத்து “என்னங்க….” என்று கூப்பிட்டாள். லேசாகத் தோளைக் குலுக்கினாள். 

“ம்…எனக்குப்… பத்மா..” என்று உளறலுடன் கதிரவன் கூறி… மௌனமானான். 

‘விஸ்கியை மடக்கென்று குடிச்சிருப்பாரு. மயக்கம் வந்துட்டுதுபோல இருக்கு’ என்று எண்ணியவளாகக் கீழே செல்லலாம் என்று கதவை மெதுவாகத் திறந்து வெளியே வந்தாள். 

நேர் எதிரே…இருந்த அறைக்கதவு திறந்து கிடந்தது. 

கதவை உடைத்துத்தான் திறக்கமுடியும் என்று கலியப்பெருமாள் கூறிய கதவு அகலத் திறந்து கிடந்தது. உள்ளே… யாரோ இருப்பது போல் இருந்தது. கதவை நெம்பித் திறந்துவிட்டு உள்ளே கலியப்பெருமாளோ வைரப்பனோ இருக்கிறார்கள் என்று நினைத்த பத்மா சற்றுத்தயங்கி நின்றாள். 

“பத்மா, நான்தான்!” 

ஆம். அது கலாவின் குரல். 

‘கலா, நீயா… என்ன செஞ்சுக்கிட்டு இருக்கே…?’ என்று அறையை எட்டிப்பார்த்தாள். 

ஜன்னல் ஓரத்தில் ‘கலா’ நிற்பது தெரிந்தது. அவள் முதுகுப்புறம்தான் தெரிந்தது. பத்மா அருகில் சென்றாள். 

‘கலா’ திரும்பினாள். 

கலா இல்லை. உயரமான வாட்டசாட்டமான ஓர் ஆண். 

“பத்மா” என்றான் அவன். 

“ஆ” என்று அலற முயன்ற பத்மாவை இறுக அணைத்து வாயை மூடினான் அவன். பத்மா திமிர முயன்றாள். 

“பத்மா, பத்மா” என்று மெதுவாகக் கூறிய அவன் அவள் முகத்தைத் தன்பக்கம் திருப்பினான். பத்மா… அவனைப் பார்த்தாள்…கம்பீரமான முகம்… அவன் கண்களைப் பார்த்தாள்… அந்தக் கண்கள் அவள் இதயத்தை ஊடுருவின. 

“பத்மா… என் அழகுத் தெய்வமே… என் பொற்கொடியே…” என்று அவள் காதருகே கூறினான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பத்மா.. 

அவன் பத்மாவை இறுக அணைத்து அவள் உதடுகளில் முத்தமிட்டான். 

அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்த பத்மா அவனை இறுக அணைத்தாள். 

திறந்திருந்த கதவு மெதுவாக மூடிக்கொண்டது. 

அத்தியாயம்-6 

புகைப்பட ஆல்பத்தை மணிவண்ணன் பார்த்துக்கொண்டிருந்தான். கலியப்பெருமாள் ஒவ்வொரு படமாக விளக்கம் கூறிக் கொண்டிருந்தார். 

“இதோ… இதுதான் உன் அப்பா அங்கப்பன்…” என்று கூறி அந்தக் காலத்து புஷ் கோட்டுடன் இருந்த ஒரு படத்தைக் காண்பித்தார். 

“பார்த்தீங்களா தம்பி… நீங்க உங்க அப்பா மாதிரியே இருக்கீங்க..” என்று கூறினார். 

அன்போடும் அரவணைப்போடும் வளரவேண்டிய அந்தச் சின்னஞ்சிறு பருவத்தில் தன்னையும் தன் தாயையும் புறக்கணித்துக் கண்டவளோடு சுற்றித் திரிந்த அங்கப்பனை மணிவண்ணனால் மன்னிக்கமுடியவில்லை. 

அந்தப் படத்தைப் பார்த்தபோது எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தான். 

“தம்பி. இதோ இவதான் மங்களம்!” என்று கூறி ஒரு படத்தைக் கலியப்பெருமாள் காண்பித்தார். 

அங்கப்பன் அருகில் மங்களம் நின்று கொண்டிருந்தாள். 

தன் தாயின் வாழ்க்கையை முற்றாய் அழித்த அவளை – மங்களத்தை – மணிவண்ணன் பார்க்க விரும்பவில்லை – ஆனால் பார்த்தான். 

பார்த்தவன் திடுக்கிட்டான். 

“என்ன தம்பி, அப்படிப் பார்க்கிறீங்க…? பத்மா…மாதிரியே இல்லை…?” 

ஆம்… அதே முகச்சாயல்… அதே கண்கள்… அதே தோற்றம்… 

“ஆமா ஆமாம்… பத்மா, மங்களம் போன்றே இருக்கிறாள்.” என்ற வியப்புடன் மணிவண்ணன் கூறினான். “அதனால்தான் பத்மாவை நீங்க முதன்முதலாகப் பார்த்தப்ப அப்படிப் பார்த்தீங்களா?” என்று கேட்டான். 

‘ஆமாம்’ என்பதுபோல தலை ஆட்டிய கலியப்பெருமாள் “மங்களத்துக்கும் பத்மாவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன்” என்று கூறிய கலியப்பெருமாள் அடுத்த ஒரு படத்தில் இருந்த ஒருவனைச் சுட்டிக்காட்டி. “இதோ இவன்தான் மங்களத்தின் தம்பி பரமநாயகம்” என்றார். 

”பரம்… பரமநாயகம்.” என்று முணுமுணுத்த மணிவண்ணன் “ஏதோ கேள்விப்பட்ட பெயரா இருக்கே… ஓ… ஆமா…தன்னுடைய வருங்கால மாமனார் அதாவது பத்மாவின் அப்பா பெயர் பரமநாயகம் என்று கதிரவன் சொன்னது நினைவில் இருக்கு,” என்றான். 

புதிருக்கு விடை கிடைத்து விட்டது. மங்களத்தின் தம்பி மகள்தான் பத்மா என்று தெரிந்தது. தற்போது உறுதி செய்யாமல் பின்னர்ப் பத்மாவிடமே உறுதி செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தனர். 

அங்கப்பன் கலந்துகொண்ட கோவில் தொடர்பான விழாக்கள். கலை நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என வேறு படங்களும் இருந்தன. 

தன் மனைவி மரகதம், மகன் மணிவண்ணனுடன் அங்கப்பன் நிற்கும் நான்கு படங்கள் மட்டும் ஒரு கடித உறையில் இருந்தன. அந்தப் படங்களில் மணிவண்ணன் மூன்று நான்கு வயதுச் சிறுவனாக இருந்தான். மங்களத்தின் தொடர்பு ஏற்பட்டதும் தன் குடும்பப் படங்களைத் தனியாக ஓர் உறையில் அங்கப்பன் வைத்திருந்தான் என்பது புலனாகியது. 

படங்களை ஓரளவு பார்த்தபின்னர் நாட்குறிப்புகளைப் புரட்டினான். தன் பெற்றோரின் கடந்த கால வாழ்வைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள மணிவண்ணனுக்கு ஆவல் மிகுந்தது. 

சமையல் அறையில் வைரப்பனுடன் உரையாடிக் கொண்டே உணவு வகைகளை வாணலியில் சூடேற்றிக் கொண்டிருந்தாள் கலா. 

மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. கதிரவனும், பத்மாவும் மாடிக்குச் சென்று ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகின்றதே எனக் கலியப்பெருமாள் எண்ணினார். 

அதே வேளையில்… 

“பத்மா… போடு… அதை… பத்மா…” என்று கதிரவன் கத்தியது கேட்டது. மழை பெய்யும் ஒலியையும் மீறிக் கதிரவன் குரல் கேட்டது. 

“போடப்போறியா…. இல்லையா?” என்று மீண்டும் கத்தினான். பத்மாவின் குரல் கேட்கவில்லை. 

இருவருக்கும் இடையில் ஏதோ தகறாரு… என்று மேல் மாடிக்குச் செல்ல மணிவண்ணன் படிகளுக்கு அருகில் வந்தான். கலியப்பெருமாளும் எழுந்து நின்றார். குரல் ஒலி கேட்டுக் கலாவும் வைரப்பனும் ஹாலுக்கு வந்தனர். 

படிகளில் பத்மா இறங்கி வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மேல் தளத்தில் இருந்த கதிரவன் பத்மா கீழே இறங்கி வந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

முதல் படியில் கால் வைத்துப் படி ஏற நின்ற மணிவண்ணன் அப்படியே திகைத்து நின்றான். அவன் அருகில் வந்த கலியப்பெருமாளும் வெறித்து நோக்கினார். 

செத்த எலியைத் தூக்கிப் பிடித்தவாறு பத்மா படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தாள். 

பத்மாவை எலியுடன் பார்த்த கலா ‘ஆ’ என்று அலற முயன்று தன் வாயைப் பொத்திக்கொண்டாள். எலியைப் பார்த்து அலறிய பத்மா அதைக் கையில் அலட்சியமாகத் தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்த வைரப்பன் அதிர்ச்சி அடைந்தான். 

கடைசிப் படிக்கு வந்த பத்மா, “பார்த்தீங்களா…என்னைப் பயமுறுத்திய எலியைத் தேடிக் கண்டுபிடிச்சு அடிச்சுக் கொன்னுட்டேன்.” என்று கூறிச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு. சித்தம் கலங்கிய ஒருத்தியின் சிரிப்பாக இருந்தது. 

கதிரவன் தட தடவென்று படிகளில் கீழ் இறங்கி வந்தான். 

“பத்மா…எலியைப் போடப் போறீயா…இல்லைய…?” என்று கத்தினான். 

“ஏன் இப்படிக் கத்துறே?” என்று கதிரவனை முறைத்தாள். 

அந்தப் பார்வை – குரலில் இழைந்தோடிய கரகரப்பு – கதிரவனைப் பின்னடையச் செய்தன. 

வைரப்பன் உடனே பத்மா அருகில் வந்து “அம்மா. அதை என்கிட்டே கொடுங்க,” என்று பணிவாகக் கேட்டான். 

தன் தலையை ஒரு மாதிரியாகச் சாய்த்துக்கொண்டே அலட்சியமாக எலியை வைரப்பனிடம் நீட்டினாள். வாங்கிக்கொண்ட வைரப்பன், அந்த எலியைப் பார்த்தான். காலணி அல்லது தடித்த ஒரு கருவியால் எலி அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. அதன் உடல் உருக்குலைந்திருந்தது. வைரப்பன் ஜன்னலைத் திறந்து எலியை வீசினான். ஜன்னல் திறக்கப்பட்டபோது மழைச்சாரலின் வேகம் கடுமையாக இருந்தது. 

“அங்க இங்க ஓடப்பார்த்த எலியைப் பிடிச்சு என் சிலிப்பர்னா’ல அடி அடின்னு அடிச்சே கொன்னுட்டேன்,” என்று கூறிய பத்மா எல்லாரையும் பார்த்தாள். 

அனைவரும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர். பத்மா படியில் தடுமாறினாள். சாய்ந்தாள். அவளைப் பிடிக்கக் கதிரவன் முயன்றான். ஆனால் முடியவில்லை. அருகில் நின்றுகொண்டிருந்த கலியப்பெருமாள் மீது சாய்ந்தாள். கலியப்பெருமாள் அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டார். தாங்கிப்பிடித்துக்கொண்ட கலியப்பெருமாளை கட்டி அணைத்தாள் பத்மா. அதைக் கலியப்பெருமாள் எதிர்பார்க்கவில்லை. அணைத்தவள் கைகள் துவண்டு விழுந்தன. 

பத்மா மூர்ச்சையானாள். கதிரவன் அவளைத் தூக்கிச் சோபாவில் படுக்கவைத்தான். 

“பத்மா… பத்மா உனக்கு என்ன பத்மா?” என்று கதறினான். 

மணிவண்ணன் கதிரவன் தோள்பட்டையில் கை வைத்துக், “கதிரவன். அமைதியா இரு… பத்மாவுக்கு ஒண்ணுமில்லை…” என்றான். 

சமையல் அறைக்கு விரைந்து சென்ற கலா ஒரு கோப்பையில் குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து பத்மா முகத்தில் தெளித்தாள். அவள் அருகில் அமர்ந்து “பத்ம… பத்மா…” என்று கன்னத்தைத் தட்டினாள். 

பத்மாவின் இமைகள் துடித்தன. ஆனால் விழிகளைத் திறக்கவில்லை. ஏதோ முணுமுணுத்தாள். பத்மா என்ன கூறுகிறாள்…? என்ன கூற விரும்புகிறாள்? என்று தெளிவாகக் கேட்கவில்லை. 

கலா, அவள் வாயருகே தன் காதை வைத்துக்கேட்டாள். 

“அவன்… அவன்… no…. sex…no…” என முணுமுணுத்தாள் பத்மா. 

கலாவின் முகம் மாறியது. 

“என்ன பத்ம…என்ன சொல்றே?” என்று மெதுவாகக் கேட்டாள். 

பத்மா தன் உடலை முறுக்கிக் கொண்டாள். யாருடனோ எதுவுடனே…போராடுவது போல் இருந்தது. 

கதிரவன் பத்மாவை அணைத்துப்பிடித்துக்கொண்டு, “பத்மா… பத்மா…” என்றான். 

“ஆ” என்று அலறிய பத்மா “கதிரவன்… கதிரவன்… நீங்க எங்கே?” என்று கத்தினாள். 

“பத்மா… இங்கதான் இருக்கேன்… இங்கதான் இருக்கேன்”. என்று பதறினான் கதிரவன். 

தூக்கத்தில் இருந்து எழுவதுபோல் கண்களை அகலத் திறந்தாள். 

கதிரவனை ஏறிட்டு நோக்கிய பத்மா… அவனை அணைத்துப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். 

ஒரு குழந்தையை அணைத்து முதுகில் தட்டிக் கொடுப்பது போலப் பத்மாவை அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தான். அழுகை நின்றது. பத்மா லேசாக விம்ம ஆரம்பித்தாள். 

கலியப்பெருமாள் சிந்தனையில் ஆழ்ந்தார். கலா பிரமை பிடித்தவள்போல் உணவு மேஜை அருகே அமர்ந்தாள். 

மணிவண்ணன் பத்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். 

அங்கே… அந்தக் கூடத்தில் மயான அமைதி நிலவியது. மாளிகைக்கு வெளியே “ச… சட “வென்று கொட்டும் மழையும். ஆற்றின் ஒலியும் மாளிகைக்குள் நிலவிய அந்த மயான அமைதியைக் கலைக்க முயன்றுகொண்டிருந்தன. 

பத்மாவிடமிருந்து வந்த விம்மல் ஒலி சிறிது சிறிதாக அடங்கியது. அவள் தூக்கத்தில் ஆழ்ந்தாள். 

கலியப்பெருமாள் எழுந்தார். மணிவண்ணனை நோக்கி “தம்பி எனக்குத் தெரிந்த ஒரு டாக்டருக்குப் ஃபோன் போடலாம்’ன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார். 

“ஆமாம். அதுதான் நல்லது. பத்மாவைப்பற்றி எனக்குப் பயமா இருக்கு. அவளை டாக்டருக்கிட்ட கொண்டு போறது அல்லது அவரை இங்க வரச் சொல்றதுதான் நல்லது,” என்று மணிவண்ணன் கூறினான். 

கலியப்பெருமாள்… ஹாலின் மூலையில் இருந்த தொலைபேசியை எடுத்தார். 

கருவியில் எந்தவிதச் சத்தமும் இல்லை. 

கலியப்பெருமாளின் முகம் மாறியது. “Oh… it is dead…” என்று கலியப்பெருமாள் கூறி டெலிபோன் கருவியை இரண்டு முறை அழுத்தினார். 

இதற்குள் மணிவண்ணன் அவர் அருகில் சென்று தொலைபேசிக் கருவியை வாங்கி, காதில் வைத்துப் பார்த்தான். எந்த ஒலியும் இல்லை. 

“தொலைபேசி செயல்படவில்லை. போன் போடமுடியாது.” என்று மணிவண்ணன் கூறினான். 

கதிரவன் சட்டென்று எழுந்தான். 

“மிஸ்டர் கலியப்பெருமாள். உண்மையிலேயே டெலிபோன் செயல்பட்டதா…. அல்லது… போலியா… வைக்கப்பட்டதா..?” என்று கலியப்பெருமாள் அருகில் சென்று, ஆள்காட்டி விரலை அவர் எதிரே… நீட்டியவாறு கதிரவன் கேட்டான். அவன் குரல் ‘ஹாலில்’ எதிரொலித்தது. அவன் கண்கள் சிவந்தன. 

“தம்பி, நீங்க என்ன சொல்றீங்க..?” என்று தடுமாறினார் கலியப்பெருமாள். 

“இந்தப் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்தவர் நீங்க… எல்லாம் சரியா இருக்கான்னு நீங்கதானே பார்த்துக்கணும். It is your responsibility Mr. Kaliaperumal….” என்று கதிரவன் ஏதேதோ கூறத்தொடங்கினான். 

“கதிரவன்,” என்று மணிவண்ணன் உரத்தக் குரலில் கத்தினான். 

கதிரவன் திடுக்கிட்டு நின்றான். கலியப்பெருமாள் இதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்று ஜன்னல் அருகே சென்று நின்றுகொண்டார். 

“கதிரவன், படிச்ச நீயே இப்படிப் பேசலாமா? மழையினால் கேபிள் பாதிப்படைஞ்சிருக்கலாம். பத்மாவுக்கு என்னங்கிறதுதான் இப்ப முக்கியம். ஒருவர் மேல இன்னொருவர் குற்றம் சாட்டிக்கிட்டு இருக்கிறது இப்ப முக்கியம் இல்லை.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினான். 

கதிரவன் ஒரு கணம் தள்ளாடினான். சோபாவின் விளிம்பைப் பிடித்தவாறு தரையில் உட்கார்ந்து கால்களுக்கு இடையில் தன் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டான். மணிவண்ணன் அருகில் வந்த கலா அவன் கரத்தை இறுகப்பற்றிக்கொண்டாள். அவள் கரம் நடுங்கியது. 

“அத்தான்.. எனக்கு என்னவோ பயமா இருக்கு. நாம இங்கிருந்…” அவளால் முடிக்க முடியவில்லை. 

மணிவண்ணன் அவள் கரத்தை லேசாக அழுத்திப்பிடித்தான். “எப்போதும் படிப்பியே…. கந்த சஷ்டி கவசம்… அதை இப்ப எடுத்துப்படி….” என்றான். 

மெதுவாகத் தலையாட்டினாள். திருமுருகன் பாடல்கள் கொண்ட நூலில் கந்த சஷ்டி கவசமும் இருந்தது. அவள் கொண்டு வந்த கைப்பையில் அந்த நூல் இருந்தது. 

“வைரப்பன்… என்னுடைய hand bag எங்கே,” என்று கேட்டாள். 

“மேல் மாடியில நீங்க தங்கப் போற ரூம்ல கொண்டு போய் வச்சுட்டேன்… வேணுமா, அம்மா?” என்றான். 

“ஆமா” என்று தலையாட்டினாள். வைரப்பன் படிகளை நோக்கிச் சென்றான். ஜன்னல் வழியாக மணிவண்ணன் வெளியே பார்த்தான். இருட்டில் எதுவுமே தெரியவில்லை. 

“இருங்க தம்பி… நிலவறையில torch light இருக்கு எடுத்துக்கிட்டு வந்துடுறேன்.” என்று நிலவறைக்குச் சென்று கை மின்விளக்குடன் வந்தார். 

மணிவண்ணன் முன் வாயிற்படிக் கதவைத் திறந்தான். மழைச்சாரல் அடித்தது. டார்ச் லைட் ஒளி பாய்ச்சப்பட்டது. எங்கும் வெள்ளம். காரின் டயர்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி இருந்தன. 

“தம்பி, வெள்ளம்… பெருகிட்டது.. மழை இன்னமும் விடாமல் பெய்யுது..” என்றார். 

மணிவண்ணன் எதுவும் கூறாமல் முன் கதவைச் சாத்தினான். 

“மாளிகைக்குப் பின்புறத்திலதானே ஆறு ஓடுது..?” 

“ஆமா, தம்பி… பின்பக்கக் கதவு வழியாப் பார்க்கலாம்” என்றார். 

சமையல் அறைக்குச் சென்றனர். கதவின் அருகே வந்தபோது ஆற்றின் ஒலி தெளிவாகக் கேட்டது. 

கதவு இடுக்கின் வழியாக நீர் கசிந்துகொண்டிருந்தது. கலியப்பெருமாள் கதவைத் திறந்தார். டார்ச் லைட் ஒளி பரவியது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. மழை நீர் கொட்டிக் கொண்டிருந்தது. சாரல் அடிக்கவே கலியப்பெருமாள் கதவைப் படீர் என்று சாத்தினார். 

அப்போது… 


மேல் மாடிக்கு வந்த வைரப்பன். அறைக்குள் நுழைந்தான். கலாவின் கைப்பை மேஜைமீது இருந்தது. அதை எடுக்கக் கை நீட்டியபோது அறை விளக்கு பட்டென்று அணைந்தது. வைரப்பன் இருளில் நின்றான். அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. அவனுடன்… அவனுக்கு மிக மிக அருகில் யாரோ இருப்பது போன்று இருந்தது. 

அவன் விடும் மூச்சே… அவனுக்கு அச்சத்தைத் தந்தது. ஏதோ ஒரு வேகத்தில் அந்த இருளில் கலாவின் கைப்பையைப் பற்றினான். இருளில் தட்டுத் தடுமாறி அறையில் இருந்து வெளியேறினான். படிகளுக்கு அருகே வந்தபோது 

பின்புறமாகச் சிரிப்பொலி கேட்டது. தன்னையும் அறியாமல்…”ஐயா… ஐயா” என்று அலறினான். 

“என்ன… என்ன வைரப்பன்” என்று மணிவண்ணன் கீழே இருந்து கேட்டான். டார்ச் லைட் ஒளியை மணிவண்ணன் பாய்ச்சினான். வைரப்பனுக்குத் தைரியம் ஏற்பட்டது. 

“அங்கேயே இரு; நான் வர்றேன்” என்று மணிவண்ணன் கூறியதும் விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒளி எங்கும் பரவியது. 

வைரப்பன் விடுவிடெனப் படிகளில் இறங்கி வந்தான். 

அவனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. 

“என்ன வைரப்பன்… என்னது?” என்றான் மணிவண்ணன் பதற்றத்துடன். 

“திடீர்னு… விள… விளக்குங்க அணைஞ்சதனாலே…. எனக்கு…எனக்குப் பயமாயிட்டது. அதனால…. நான்….” கூற முடியாமல் நிறுத்தினான். வேறு ஒன்றையும் அவன் கூறவில்லை. யாரோ அறையில் இருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதையோ சிரிப்பொலி கேட்டதையோ வைரப்பன் கூறவில்லை. 

வைரப்பன் பத்மாவைப் பார்த்தான். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அது உறக்கமா அல்லது மயக்கமா என்று தெரியவில்லை. விளக்குகள் அணைந்தபோது மணிவண்ணனும் கலியப்பெருமாளும் சமையல் அறையில் இருந்தனர். கையில் பற்றியிருந்த ‘டார்ச் லைட் மணிவண்ணனுக்குப் பேருதவியாக இருந்தது. விளக்கு ஒளியில் கலா பிரமையுடன் நிற்பது தெரிந்தது. அவள் அருகில் வந்த மணிவண்ணன் அவளை அணைத்துக்கொண்டான். கதிரவன் மீது ஒளியைப் பாய்ச்சினான். தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போலக் கதிரவன் எழுந்து, “என்ன, மணி? என்ன..?” என்று கேட்க, ‘ஒன்றுமில்லை… விளக்குங்க அணைஞ்சு போச்சு,” என்று மறுமொழி கொடுத்தபோதுதான் மேல் மாடியில் இருந்து வைரப்பன் “ஐயா… ஐய..” என்று கூப்பிட்டான். 


சிந்தனையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்த கலியப்பெருமாள் “தம்பி மணிவண்ணன்… விளக்குங்க மீண்டும் அணைஞ்சு போனாலும் போகலாம். நாம தயாரா பெட்ரோமாக்ஸ் விளக்குங்க. மெழுகுதிரிங்க, சிம்னி விளக்குங்க… இதையெல்லாம் ஏற்றி வச்சுட்டா நல்லது,” என்றார். 

அந்த யோசனையை மணிவண்ணன் ஏற்றுக்கொண்டான். இருவரும் நிலவறைக்குச் சென்றனர். மேல் மாடியைப் பார்த்த வண்ணம் வைரப்பன் அவர்களைப் பின் தொடர்ந்தான். 

திருமுருகன் பாடல்கள் தொகுப்பு நூலை எடுத்த கலா ‘கந்தர் சஷ்டி கவசத்தை மெதுவாகப் படிக்க ஆரம்பித்தாள். 

பத்மா புரண்டு படுத்தாள். அவளிடமிருந்து முனகல் சத்தம் வந்தது. கதிரவன் அவளையே பார்த்துகொண்டிருந்தான். விளக்குகள் மெழுகுதிரிகள் ஆகியன ஓர் அட்டைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. 

“வைரப்பன், எல்லாத்தையும் சுத்தம் செஞ்சு ‘கரெக்டா’ இந்தப் பெட்டியில் வச்சுடுவான். என்று கூறிய கலியப்பெருமாள். ஹாலுக்கு எடுத்துச் சென்று விளக்குகளை ஏற்றும்படி வைரப்பனிடம் கூறினார். வைரப்பன் சென்றதும் “தம்பி எனக்கு மனசு சரியா இல்லை…” என்றார். 

“எனக்கும் குழப்பமாகத்தான் இருக்கு. பத்மாவுக்கு என்ன…? கதிரவனுக்கு என்ன…? இதே கேள்விகளை நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். விடைதான் கிடைக்கலை.” என்றான் மணிவண்ணன். இருவரும் நிலவறையை விட்டு வெளியே வந்தனர். 

பெட்ரோமாக்ஸ் ஏற்றிக்கொண்டிருந்த வைரப்பன், “சார் குசினில் (சமையல் அறை) தண்ணி ஓட ஆரம்பிச்சிட்டுது… மண்ணெண்ணெய் எடுக்கப் போனப்பப் பார்த்தேன்.” என்றான். 

மணிவண்ணன்… சமையல் அறைக்குச் சென்று பார்த்தான். ஆம். கதவு இடுக்கின் வழியாக நீர் உள் புகுந்து கொண்டிருந்தது. 

வெள்ளம் பெருகிக்கொண்டிருக்கிறது என்பது நன்கு புலனாகியது. 

இரண்டு பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைரப்பன் ஏற்றியதும் மின் விளக்குகள் ஒளியோடு கலந்து மாளிகை ஒளிமயமாக காட்சியளித்தது. 

“வெள்ளம் முழுமையாகப் பெருகிடும். அதுக்குள்ள நான் எப்படியாவது பக்கத்து டவுனுக்குப் போய் உதவிக்கு யாரையாவது அழைச்சுக்கிட்டு வந்துடுறேன்.” என்றான் வைரப்பன். 

பாடலைப் படித்துக்கொண்டிருந்த கலா படிப்பதை நிறுத்தி வைரப்பனைப் பார்த்தாள். 

“வைரப்பா, உனக்கு இந்த இடம் நல்லா தெரியும். இருந்தாலும்…என்று சற்றுத் தயக்கத்துடன் கலியப்பெருமாள் கூறினார். 

“இங்கே இருந்து 300 மீட்டரில் ஆற்றின் இடையே ஒரு மரப்பாலம் வரும். கொஞ்சம் உயரமான பாலம். பாலம் வெள்ளத்திலே மூழ்க வாய்ப்பில்லை. பாலத்தின் வழியா அடுத்தப்பக்கத்துக்குப் போயிட்டா… உயரமான பகுதி வரும். அதன் வழியா பக்கத்தில உள்ள டவுனுக்குப் போயிடலாம்,” என்றான் வைரப்பன். 

அதுவரை பேசாமல் இருந்த கதிரவன். “ஆமா… வைரப்பன் சொல்றது சரி. டெலிபோன் கட்டாயிட்டுது…. வெள்ளம் வேற உயர்ந்துக்கிட்டே இருக்கு. வைரப்பன் போய் உதவி கேக்கிறதுதான் நல்லது. இங்க இருக்கவே எனக்குப் பிடிக்கலை. பத்மாவைத் தோள்ல சுமந்துக்கிட்டு வெள்ளத்தில போயிடலாமுன்னு இருக்கு,” என்று படபடவென்று பேசினான். 

“வைரப்பா, வெள்ளத்தோட நிலைமையைப் பார்த்துக்க.. முடியும்ன்னா போ. இல்லைன்னா திரும்பி வந்துடு” என்றான் மணிவண்ணன். ‘சரிங்க, சரிங்க” என்று தலையாட்டினான் வைரப்பன். “போற வழியில டெலிபோன் வசதி இருந்தா இந்த இடத்தைப்பத்திப் போலிஸ் நிலையத்துக்குத் தெரியப்படுத்திடு” என்று தொடர்ந்து மணிவண்ணன் கூறினான். 

பக்கத்துக் கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியும் நடைபெறலாம். அவ்வாறு மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களைச் சந்திக்க நேர்ந்தால் மாளிகை பற்றிக் கூறவும் கலியப்பெருமாள் ஆலோசனை கூறினார். 

“எப்படியாவது ஒருமணி…. அல்லது ஒன்றரை மணி நேரத்தில ஒரு நல்ல செய்தியோட நான் வந்துடுறேன்.” என்று கூறிப் புறப்பட்டான் வைரப்பன். 

“பல வெள்ளத்தையும் மழையையும் கண்டவன் நான்” என்று கூறிக் குடையும் இல்லாமல் கொட்டும் மழையில் அவன் சென்றான். செல்வதற்கு முன் கலா அருகில் வந்த வைரப்பன் ஏதோ கூற “அம்மா…” என்றான். பிறகு எதுவும் கூறாமல் முன் கதவை நோக்கிச் சென்றான். 

“வைரப்பன்… நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்க… போக முடியலேன்னா திரும்பிடு.” என்று மணிவண்ணன் மீண்டும் கூறினான். 

“சரிங்க..” என்று கூறிக் கதவைத் திறந்தான். வெள்ளம் விரைந்து உள் புகுந்தது. 

அதே சமயத்தில் தாழ்வாக ஒரு ஹெலிகாப்டர் வந்து கொண்டிருந்த சத்தமும் கேட்டது. 

“அதோ ஒரு ஹெலிகாப்டர்… டார்ச் லைட்டை அடி…”. என்றான் மணிவண்ணன். ஆனால், அதற்குள் ஹெலிகாப்டர் மாளிகையைத் தாண்டிச் சென்றது. 

“வெள்ளம் உள்ள வருதுங்க…. கதவைச் சாத்திடுங்க… நான் போயிட்டு வர்றேன்.” என்று கூறிக்கொண்டே வைரப்பன் நடந்தான். 

கதவு சாத்தப்பட்டது. மாளிகையைச் சுற்றி வெள்ளம் முழங்கால் அளவுக்கு இருந்தது. ஒரே இருட்டு. டார்ச் லைட் ஒளியோடு செடி கொடிகள் – மரங்களின் அடிப்பாகம் நீரில் மூழ்கி இருப்பதைப் பார்த்து வெள்ளத்தின் அளவை ஓரளவு அறிந்து கொண்டு மேடான பகுதியில் நடந்தான். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு செல்வதையும் பார்த்தான். 

மாளிகையை விட்டு வெளியேறியதில் வைரப்பனுக்கு ஓர் ஆறுதல். பலமுறை மாளிகையைச் சுத்தம் செய்ய வந்திருக்கிறான். பெரும்பாலும் பகல் நேரத்திலேயே வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி விடுவான். சுமார் மூன்று மாதங்களுக்கு முன் பிற்பகலில் தாமதமாக வந்ததால் இரவு 7.00 மணிக்கு மேல் வேலை செய்ய வேண்டியதாயிற்று. ஓர் அறையைச் சுத்தம் செய்துவிட்டுக் கதவை இழுத்து மூடிவிட்டுத் திரும்பிய போது… பூட்டப்பட்டே கிடக்கும் அறைக்கதவு திறந்து மூடப்பட்டது போல் இருந்தது. அது தன் மனப்பிரமை என்று நினைத்துப் படிகளில் இறங்கி வந்தபோது சிரிப்பொலி கேட்டது. பயத்துடன் முன்ஹாலுக்கு வந்துவிட்டான். அதே வேளையில் சைக்கிளில் வந்த இரு மலாய் இளைஞர்கள் ஆற்றோரத்தில் நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததும் தெரிந்தது. அவர்களுடைய சிரிப்பொலிதான் சற்று முன்னர்க் கேட்ட சிரிப்பொலி என்று தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டான். ஆனால், இன்று அவன் கேட்ட சிரிப்பொலி… 

கலாவை வைரப்பனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு சில மணி நேரங்களில் அவள் மீது அவனுக்கு மரியாதையும் அன்பும் ஏற்பட்டன. கலாவும் வைரப்பனின் மகள் மீனாட்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டாள். 

மாளிகையில் இருந்து புறப்பட்டபோது…கலாவிடம் “அம்மா, மேல் மாடிக்குத் தனியா போயிடாதீங்க” என்று ஏனோ கூற நினைத்தான்…. முடியவில்லை… 

மெதுவாக வெள்ளத்தில் வைரப்பன் நடந்தான். எப்படியாவது வெள்ளத்தைத்தாண்டி உதவி பெற்றுவிடலாம் என்று வைரப்பன் நினைத்தான். மாளிகைக்குத் திரும்பிப் போகும்போது. மீட்புக் குழுவினரோடு போகலாம் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. 


“ஹெலிகாப்டர் போனதுலேயிருந்… வெள்ளத்தினால்… இந்தப் பகுதி பாதிக்கப்பட்டிருக்குன்னு தெரியுது. மீட்புப் பணியும் நடைபெறலாம்.” என்று கலியப்பெருமாள் கூறிக் கொண்டிருந்தார். அப்போது ஷோபாவில் படுத்திருந்த பத்மா கண் விழித்தாள். 

“கதிரவன்… கதிரவன்…” என்றாள். 

அருகில் அமர்ந்திருந்த கதிரவன் வேகமாக எழுந்து பத்மா அருகில் சென்றான். அவனை அணைத்தவாறு பத்மா லேசாக விம்மினாள். 

“என்ன பத்மா…என்ன?” என்று கதிரவன் கேட்டான். 

கலா அருகில் வந்து “பத்மா” என்றாள். 

பத்மா திரும்பிப் பார்த்தாள். சற்று முன் விம்மிய அவள், கலாவைப் பார்த்துப் புன்னகை பூத்தாள்! 

அவள் கண்கள்…. அந்தக் கண்களைப் பார்க்கக் கலாவுக்கு அச்சமாக இருந்தது… திரும்ப நினைத்தாள்…. 

அடுத்த கணம்…. 

உட்கார்ந்திருந்த பத்மா பட்டென்று எழுந்து கலாவை இறுக அணைத்தாள். ஓர் ஆண் ஒரு பெண்ணை வெறியுடன் தழுவுவதுபோல் ஆரத்தழுவினாள். கலா திமிறினாள். முடியவில்லை. கலா முகத்தைத் திருப்பி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். உதட்டில் முத்தமிட முயன்றபோது கலா, “பத்மா… பைசாசமே.” என்று கத்தியவண்ணம் பத்மாவை பிடித்துத் தள்ளினாள். தள்ளியவேகத்தில் பத்மா ஷோபாவில் விழுந்தாள் விழுந்தவள் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்து ஓய்யாரமாகக் கலியபெருமாளைப் பார்த்தாள், 

அனைத்தும் ஒரு சில விநாடிகளில் நடந்து முடிந்தன. 

கலாவைப் பத்மா அணைத்தபோது அதைப்பார்த்துக் கதிரவன் ”Yes, it’s a show of affection among friends” என்று சிரித்துக்கொண்டே கூறினான். 

மணிவண்ணன் அதிர்ச்சி அடைந்து, நடப்பன என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாமல் திக்பிரமையுடன் நின்றான். கலா அவன் அருகில் வந்தபோதுதான் அவன் சுய நினைவு பெற்றான். 

கலியப்பெருமாள் உடல் நடுங்கியது. முதியவரான அவருக்குப் பத்மாவும் கதிரவனும் தங்கள் சுயநினைவில் இல்லை; ஏதோ ஒரு தீய சக்திக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். 

”I don’t like this place வாங்க நாம மேல் மாடிக்குப் போயிடுவோம்.” என்று கூறிக்கொண்டே பத்மா எழுந்தாள். 

“Ok. As you wish` என்றான் கதிரவன். 

“Good-night folks என்று கூறிக்கொண்டே கதிரவனும் பத்மாவும் கைகோத்துக்கொண்டு மாடிப்படிகளில் ஏறினர். 

இரண்டு படிகள் ஏறியதும் பத்மா, “Please carry me என்று சிறு குழந்தைபோல் சிணுங்கினாள். 

சிரித்துக்கொண்டே கதிரவன் பத்மாவை இரு கரங்களில் சுமந்துகொண்டு படி ஏறினான். 

மேல் மாடியில் கதவு படீர் என்று சாத்தப்பட்ட ஒலி கேட்டது. 

“நாம இங்க இருக்கக்கூடாது… வெளியேறிடுவோம். என்னால… முடியாது” என்று விம்மலுடன் கலா புலம்பினாள். 

“வைரப்பன் எப்படியும் இங்க உதவிக்கு யாரையாவது அழைச்சுக்கிட்டு வந்துடுவான். அதுவரைக்கும் பொறுமையா இரு.” என்றான். 

கலியப்பெருமாள் எதுவும் கூறாமல் நாற்காலியில் நிலை குத்தி அமர்ந்திருந்தார். 

– தொடரும்…

– ஆற்றோரத்தில் ஒரு மாளிகை, முதற் பாதிப்பு: 2000, எஸ்.என்.பி எடிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *