ஆறில் சனியும் ஆட்டத்தின் வேகமும்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 235 
 
 

‘அரண்மனையாட்ட இருக்கற என்ற ஊட்டுல இல்லாதது ஒன்னுமில்ல’ என்பவர்கள், மனதில் நிறைந்த அன்பும், உடலில் நிறைந்த ஆரோக்யமும் குடும்பத்தில் அனைவரிடமும் இருக்கிறதா? என்பதைப்பற்றி சிறிதும் யோசிப்பதில்லை.

கார்கள், பங்களா போன்ற பெரிய வீடுகள், நவீன உபகரணங்கள், வேலையாட்கள், பல நூறு கோடி சொத்துக்கள், உயர்ந்த பதவி, பணம் , புகழ் பற்றி மட்டுமே பெரிதென நினைத்து அன்றாட வாழ்வின் அருமை புரியாமல் வெட்டிக்கௌரவத்தில் தகுதி பார்த்து, தனித்திருந்து, தங்களை விட வசதியில் குறைவானவர்களை தாழ்த்திப்பேசி தங்களது மதிப்பு மிக்க வாழ்நாளை இழந்து கொண்டுள்ளனர். 

இப்படிப்பட்டவர்களை பெரும்பான்மையான மக்கள் மதிப்பதே இல்லை என்பது கூட புரியாமல், ‘தானே உயர்ந்தவன்’ என நினைத்து அறியாமையில் வாழ்கின்றனர்.

“த, பாரு ஒன்னி மேலு என்ற ஊட்டுப்பக்கம் தல வெச்சுப்படுக்கப்படாது. சொந்தக்காரன்னா விசேசத்துக்கு மண்டபத்துக்கு வந்துட்டு சாப்புட்டு போட்டு போயிட்டே இருக்கோணும். சொந்தம்னு சொல்லி என்ற பேரக்கெடுக்காதீங்க. என்னச்சொந்தம்னு சொன்னா உனக்கு கௌரவம். உன்னச்சொந்தம்னு சொன்னா எவனாச்சும் பெரிய மனுசன் என்ன மதிப்பானா? உன்ற மூஞ்சிக்கும், நீ போட்டிருக்கிற சட்டைக்கும், நீ வந்திருக்கிற ஓட்ட பைக்குக்கும் என்ற பங்களாவுக்கு செக்யூரிட்டி வேலைக்கு கூட வெச்சுக்க மாட்டேன். உன்ற கூட நான் சமமா பழக முடியுமா? நான் யாருன்னு தெரியுமா உனக்கு….?” தண்டியப்பன் பேசியதைக்கேட்டு கிராமத்திலிருந்து வந்திருந்த உறவினர் மாரியப்பன் வெலவெலத்துப்போய் கண்ணீர்வடித்தபடி வெளியேறினான்.

தண்டியப்பனும் கிராமத்துக்காரன் தான். சிறு வயதிலேயே நகரத்தில் சாதாரண எடுபிடி வேலையில் சேர்ந்து, பின் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கோடிகளில் மிதப்பவன். 

ஊரில் நடக்கும் பொது விசேசங்களுக்கு தாராளமாக நன்கொடை கொடுத்து தனது மதிப்பை பெரிய செல்வந்தர் என சொல்ல வைத்ததோடு, தனது வீட்டு வேலைக்காரர்களிடம் தனது வீட்டை பங்களா வீடு என்று தான் வெளியில் சொல்லவேண்டும் என கண்டிசன் போட்டிருப்பதால் தண்டியப்பன் பங்களா என்றே பெயர் வந்து விட்டது.

தனது சொத்துக்களைக்காப்பாற்றிக்கொள்ள ஆளும் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, பொதுக்கூட்டங்களுக்கு பணத்தை வாரி இறைத்தால் பெரிய பதவியைப்பெற்று, முதலமைச்சரை சந்தித்து எடுத்த புகைப்படத்தை போட்டு கட்டவுட்டுகளை வைத்து விளம்பரப்படுத்தி அவனது வியாபாரத்திற்கு எதிரிகள் இல்லாமல் பார்த்துக்கொண்டான்.

பணம் பெருகிய அளவிற்கு‌ தண்டியப்பனிடம் குணம் பெருகவில்லை. மாறாக ஆணவம் அதிகரித்து விட்டது. யாரையும் மதிக்காமல் பேசுவது. சிறுவயதிலிருந்து தன்னை மதிக்காமல், தன்னை உதாசீனப்படுத்தியவர்களுக்கு இடையூறுகளைக்கொடுத்து அவர்களைக்கதற விட்டு வேடிக்கை பார்ப்பது என மனதளவில் ஓர் அரக்கனாகவே மாறியிருந்தான்.

“தண்டியப்பன் அட்டகாசம் தாங்க முடியலை தம்பி. ஊர் சாபத்தப்பூராத்தையும் ஒட்டுமொத்தமா தலைல கட்டிக்கப்போறான் பாரு. அதிகாரம் இருக்குதுன்னு அக்கிரமம் பண்ணறான். நீயே சொல்லு சொந்தமா ஊடு கூட இல்லாம,சாராயம் வித்துட்டுத்திரிஞ்சவனுக்கு, அடி தடி ரகளைக்கு அருவாள் எடுத்துட்டு போனவனுக்கு பச்சக்கிளியாட்ட இருக்கற, நல்லாப்படிச்சு வேலைக்கு போற பொண்ண கேட்டா குடுக்க முடியுமா? முப்பது வருசத்துக்கு முன்னாடி நாம்பொண்ணுக்குடுக்கிலீங்கிறத மனசுல வெச்சுட்டு என்னால தொழிலே பண்ண முடியாம பல விதத்துல ரவுடிகளை வெச்சுட்டு எடைஞ்சல் பண்ணறான். அல்பனுக்கு வாழ்வு வந்து அர்த்த ராத்திரில கொடைப்புடிச்சானாமா அந்தக்கோப்பால்ல இருக்குது…” மளிகைக்கடை நடத்தும் ரங்கையா கண்ணீர் வடிய பேசியதைக்கேட்டு அவரது வாடிக்கையாளரான ரவியும் கண்கலங்கினார்.

“நெருப்புக்கு பயந்து போட்டு கொளத்து தண்ணீல குதிச்சு நீச்சல் தெரியாம மூழ்குனவங்கதையா போயறப்படாது ரங்கையா உன்ற கதை. பொறுத்து பாரு. உலகத்தையே ஒரு கொடைக்கடில ஆண்ட மன்னனே மண்ணோட மண்ணா கலந்து காணாமப்போயிட்டான். இவனென்ன பெரிய சங்கதி? அவனோட ராசிக்கு ஆறுல சனி இப்போ…. ஆட்டத்தோட வேகம் அதிகமாத்தா இருக்கும். எட்டுக்கு வந்துச்சுன்னா கட்டிப்போட்டுருமில்ல. அஷ்டமத்துல சனி வந்தா லஞ்சங்குடுத்து தடுத்து அவனால நிறுத்தவா முடியும்? அப்ப பாத்துக்கலாம்….” சோதிடராக இருக்கும் ரவி சொன்ன வார்த்தையில் நம்பிக்கை பிறந்ததால் மனதில் நிம்மதி வந்தது மளிகைக்கடை ரங்கையாவிற்கு. 

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *