ஆரோக்கிய சாமி





தனியார் மருத்துவமனை,
மாலை நேரம் ,
மருத்துவர் அறையில் 40 வயதிற்கு மேல் இருந்த வாட்ட சாட்டமான நபர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.

“டாக்டர் , வணக்கம். உங்கள பத்தி நெறைய கேள்விபட்டேன். அதான் வந்தேன் “ என்று கூறியபடி உள்ளே நுழைந்தார் , வாட்டசாட்டமான உடல் அமைப்புடன் இருந்த நபர்.
“வணக்கம் , என்ன பத்தி கேள்வி பட்டீங்களா ? கேள்வி பட்டது நல்லவிதமா தான ? “ என்று மருத்துவர் சுந்தரம் சிரித்த படி கேட்டார்.
“நல்ல விதமாவா ! உங்கள எல்லாரும் கை ராசி டாக்டர் என்று தானே ஊரே சொல்லிட்டு இருக்கு “ என்று அந்த நபர் கூறினார்.
“கை ராசி , எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க பிரச்னை என்னான்னு சொல்லுங்க.” என்று சுந்தரம் கூறினார்.
“அதுக்கு தான டாக்டர் வந்திருக்கேன். உங்க கை பட்டா நோய் எல்லாம் குணம் ஆகிரும்னு ஊர் காரங்க சொன்னாங்க. அதான் என் வியாதியை குணம் படுதிருவீங்க என்று நம்பிக்கையோடு வந்திருக்கேன் “ என்று அந்த நபர் கூறினார்.
“அது சரி , உங்க உடம்புல என்ன பிரச்னை அத சொல்லுங்க. ? “ என்று மருத்துவர் சுந்தரம் கூறினார்.
“டாக்டர் , ரொம்ப தூரம் நடக்க முடியல. மூட்டு வலி உயிரே போகிறும் போல வலிக்குது. அப்போ சரி கொஞ்ச நேரம் உட்கருவோம்னு நெனைச்சா குறுக்கு வலி வந்திருது. பத்து நிமிஷத்திற்கு மேல தொடர்ந்து உட்கார முடியல , நடக்க முடியல, நிக்க முடியல.”
“இதனால வேலைக்கு போக முடியல. வீட்ல ஓய்வு எடுப்போம் என்று தூங்கினா மூச்சு விட முடியல. நைட் தூங்க முடியல.”
“அப்புறம் பசிக்குதுன்னு சாப்பாடு சாப்பிட்டா , செரிமானம் ஆக மாட்டேங்குது. அப்போ சரி சாப்பாடு சரியா சாப்பிடாம விட்டா சுகர் கூடி போயிருது. நல்லா சாப்பிட முடியல , சாப்பிடாம இருக்கவும் முடியல.”
“இதுக்கெல்லாம் ஒரு மருந்து கொடுங்க , டாக்டர். வியாதி எல்லாம் சரியாய் போய்ரனும். “ என்று நீண்ட வியாதி பட்டியலை கூறினார் அந்த நபர்.
“இத்தன வியாதிக்கும் ஒரே மருந்து கண்டுபிடிக்கணும். “ என்று டாக்டர் சுந்தரம் , அந்த நபரிடம் கூறிய படி , அவரின் உடலை சோதனை செய்து விட்டு , மருந்து சீட்டை எடுத்து வைத்தார்.
“சரி , நான் மாத்திரை மருந்து எழுதி தாரேன். அத சாப்பிடுங்க. ஒரு வாரம் கழிச்சு வாங்க. அப்புறம் எப்டி இருக்குன்னு சொல்லுங்க. அப்புறமா அடுத்த ட்ரீட்மென்ட் பார்ப்போம் “ என்று கூறிய படி , மருந்து சீட்டில் மருந்துகளை எழுத ஆரம்பித்தார்.
மருந்து சீட்டில் தேதி எழுதி விட்டு , பெயர் எழுதும் இடத்தில் பேனாவை கொண்டு சென்ற டாக்டர் சுந்தரம் ,
“ஆமாம்ப்பா, உங்க பேர சொல்லுங்க , மருந்து எழுதி தாரேன் “ என்று கூறினார்.
அதற்க்கு அந்த நபர் “ என் பெயர் ஆரோக்கிய சாமி. என் அம்மா அப்பா வச்ச பெயர். எல்லாரும் என்னை செல்லமா ஆரோக்கியம் , ஆரோக்கியம் என்று தான் கூப்பிடுவாங்க டாக்டர் “ என்று (அந்த நபர்) ஆரோக்கிய சாமி கூறினார்.
பெயரை கேட்டதும் , மருத்துவர் சுந்தரத்திற்கு சிரிப்பு வந்தது.
“உங்க பெயரில் மட்டும் தான் இப்போ ஆரோக்கியம் இருக்கு. உடம்புல இல்ல. எல்லாம் சரி பண்ணிருவோம். பெயருக்கு ஏற்றவாறு !“ என்று சிரித்தபடி மருத்துவர் சுந்தரம் , அந்த மருந்து சீட்டை ஆரோக்கிய சாமியிடம் நீட்டினார்.