ஆன்லைன் கல்வி




லளிகம், தர்மபுரிக்கு அருகே மிகச் சிறிய கிராமம்.
காலை ஆறு மணிக்கு சரோஜா எழுந்து தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தைகள் மணிமாறன், பொற்கொடியை எழுப்பிவிட்டாள். அடுத்து பல்லைத் தேய்த்துவிட்டு, வயதான மாமனார் மாமியாருக்கு காபி போட சமையல் அறைக்குச் சென்றாள்.
கணவன் மாரிச்சாமியும் எழுந்து அனைவரின் படுக்கைகளையும் எடுத்து உதறி மடித்து வைத்தான். அந்தக் குடும்பம் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது.
சரோஜா, முகக் கவசம் அணிந்துகொண்டு ஆறரை மணி வாக்கில் கிளம்பி வீட்டுவேலை செய்ய மதுரம் மாமி வீட்டிற்குச் சென்றாள். அதிசயமாக இவளுக்காக மாமி திண்ணையிலேயே காத்திருந்தாள்.
“அப்படியே நில்லு சரோஜா… நீ இனிமே நம்மாத்து வேலைக்கு வரவேண்டாம். ஊரெல்லாம் கொரோனா கொரோனான்னு ஒரே பயமா இருக்கு… அதெல்லாம் ஓஞ்சப்புறம் நீ வேலைக்கு வந்தா போதும். இன்னிக்கி தேதி இருபதுதான். ஆனா இந்த மாசம் சம்பளம் மொத்தமா மூவாயிரம் இந்தா வாங்கிக்க..”
மாமி பணத்தை நீட்டினாள்.
சரோஜா இதை எதிர் பார்க்கவில்லை.
“என்ன மாமி இப்படி திடீர்ன்னு… அவருக்கும் தர்மபுரி அட்டை டப்பா கம்பெனில வேலை போயிருச்சு மாமி… இப்ப ரெண்டு மாசமா வீட்லதான் இருக்காரு…”
“உன் கஷ்டம் எனக்கு நன்னா புரியறதுடி சரோஜா. அவரு நேத்து டிஷ்வாஷர் வாங்கிட்டு வந்துட்டாரு. உனக்கே தெரியும் நம்மாத்துல வாஷிங்மெஷின் ஏற்கனவே இருக்கு. ஆத்தை மட்டும் நான் பெருக்கி தொடைக்கணும்… எனக்கு அது ரொம்பக் கஷ்டம்தான். ஆனால் கொரோனாவை நெனச்சா ரொம்ப பயமா இருக்கு சரோஜா…”
“………………..”
“அவருக்கு வேணுமின்னா, என்னோட ஆத்துக்காரர்கிட்ட சொல்லி அவர் வேலை செய்யற தர்மபுரி கலெக்டரேட்ல ஏதாவது வேலை கிடைக்குமான்னு பாக்கச் சொல்றேன். தவிர மாசா மாசம் ஒனக்கு ஒரு ஆயிரம் ரீடெய்னர்ஷிப் பணம் தர முடியுமான்னு ஆத்துக்காரர்கிட்ட கேட்டுச் சொல்றேன்…”
“உங்க நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி மாமி… எப்ப வேணுமோ அப்ப சொல்லி அனுப்புங்க….”
வருத்தத்துடன் பணத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வீட்டிற்கு திரும்பினாள்.
“என்ன தாயி அதுக்குள்ளே திரும்பி வந்திட்டே? ஐயர் வீட்ல யாரும் இல்லையா?”
சரோஜா நடந்ததைச் சொன்னாள்.
அந்த வீடே சோகத்தில் மூழ்கியது…
இனிமே தன்னிடம் இருக்கும் சிறிய சொந்த நிலத்தில் பாடுபட வேண்டியதுதான் என்று மாரிச்சாமி நினைத்துக்கொண்டான்.
மாரிச்சாமிக்கு வாழ்க்கையின் ஒரே லட்சியம், தனியார் பள்ளியில் படிக்கும் மகன் மணிமாறனை நன்றாகப் படிக்கவைத்து, அவன் ஐஏஎஸ் எழுதித் தேர்வாகி கலெக்டர் ஆக்குவது. அதற்கு ஏதுவாக ஒன்பதாவது படிக்கும் மகன், படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி எப்போதும் முதலாவதாகத்தான் வருவான். மகள் பொற்கொடி அதே பள்ளியில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள். தனியார் பள்ளியின் ஹெட்மாஸ்டர் மாரிச்சாமியின் கனவை புரிந்துகொண்டு நன்கு படிக்கும் மணிமாறனை ஊக்குவித்தார். மணிமாறனிடம் அடிக்கடி, “கல்வி மட்டும்தான் நம்மைக் காப்பாற்றும். மற்ற எல்லாத்தையும் நம்மிடமிருந்து ஒருவன் அடித்துப் பிடுங்கிவிட முடியும், கற்ற கல்வியைத் தவிர…” என்பார்.
நேர்மையான கனவுடன் அந்த ஏழைக் குடும்பம் உழன்று கொண்டிருந்தது.
நல்லவேளையாக மாரிச்சாமியின் வீடு சொந்த வீடு. அதனால் வாடகை செலவு இல்லை. ஒரே ஒரு பெட்ரூம், ஒரு சின்ன ஹால், கிச்சன் அவ்வளவுதான். வீட்டின் வெளியே பாத்ரூம, கழிப்பறை தனியாக இருந்தது. பெட்ரூமில் மரிச்சாமியின் வயதான அம்மா, அப்பா என வீட்டில் மொத்தம் ஆறு பேர்.
குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே உள்ள புளிய மரத்தடி அல்லது வேப்ப மரத்தடியில்தான் உட்கார்ந்துகொண்டு படிப்பார்கள். மாரிச்சாமிக்கு மட்டும் என ஒரு சாதாரண மொபைல் போன் இருக்கிறது. அதில்தான் எல்லோருமே பேசிக்கொள்வார்கள். ரொம்பச் சிக்கனமாக சரோஜா தன் குடும்பத்தை திறம்பட நடத்தி வந்தாள்.
அப்போதுதான் கடந்த மார்ச் மாத இறுதியில் லாக்டவுன் ஆரம்பித்தது. மாரிச்சாமி வேலைக்குச் செல்வது நின்றுபோனது. அவனுக்கு வந்து கொண்டிருந்த மாதச் சம்பளமும் நின்றுபோனது. தற்போது சரோஜாவும் வேலையை இழந்து நிற்கிறாள்.
சரோஜா கட்டும் செட்டுமாக குடும்பத்தை நடத்திச் சென்றதால், கையில் முப்பதாயிரம் சேமிப்புத் தொகை இருந்தது.
இந்த நிலையில்தான் பள்ளியின் ஹெட் மாஸ்டர் மாரிச்சாமிக்கு மொபைலில் போன் செய்து தன்னை நேரில் வந்து பார்க்கச் சொன்னார்.
ஒருவேளை ஸ்கூல் பீஸ் கட்டச் சொல்வாரோ என்று கையிலிருந்த சேமிப்பு முப்பதாயிரத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினான். டவுன்பஸ் வசதிகள் நின்று போனதால், தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு தர்மபுரி சென்று ஹெட்மாஸ்டரைப் போய்ப் பார்த்தான்.
“வா மாரி…ஒக்காரு. கொரோனாவினால் நம் பள்ளி இப்போதைக்கு திறக்காது. எப்போது திறக்குமோ அதுவும் தெரியாது. அதற்காக குழந்தைகளின் படிப்பை வீணாக்கி விடுவோமா என்ன? இன்னும் பத்து நாள்ல ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்து விடுவோம்… உங்கிட்ட ஸ்மார்ட் போன்கள் கிடையாது என்பது எனக்குத் தெரியும். நீ உடனே மணிமாறனுக்கு, பொற்கொடிக்குன்னு ரெண்டு ஸ்மார்ட் போன்கள் வாங்கணும், இல்லேன்னா ரெண்டு லாப்டாப்கள் வாங்கணும் ஆனா அதுக்கு ரொம்ப செலவாகும்…”
“ஸ்மார்ட் போன்னா என்னங்க ஐய்யா?”
“அதுல நிறைய ஆப்கள் ஏத்திக்கலாம். வீடியோ கம்யூனிகேஷன் கிடைக்கும். வசதிகள் அதிகம். குறிப்பாக உன் குழந்தைகளின் கல்விக்கு அவசியம் தேவைப்படும்.”
“அப்படியா?… ஒரு போனுக்கு எவ்வளவு செலவாகும்?”
“பத்திலிருந்து பன்னிரண்டாயிரம் வரை ஆகும்…”
“ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒரு போன் வாங்கினாப் போதுமா?”
“அப்படி இல்ல மாரி… ரெண்டு பேரும் வேறு வேறு வகுப்புகள். டீச்சர்ஸ் விருப்பப்படி விருப்பப்பட்ட நேரத்துல க்ளாஸ்கள் எடுப்பாங்க. அதனால டைமிங் ஒத்துவராது. தனித்தனியே இரண்டு போன்கள் கண்டிப்பாக வேண்டும்..”
“அவ்வளவு பணம் செலவாகுமா?”
“உனக்கு ஏதாவது பண உதவி வேணும்னா தனிப்பட்ட முறையில் நான் உனக்கு உதவத் தயார் மாரி… ஏன்னா, மணிமாறன் நம்ம பள்ளியின் சிறந்த மாணவன். அவனோட கல்வியும், உன்னோட கனவும் எனக்கு மிக முக்கியம்.”
“மிக்க நன்றி ஐயா. என்னிடம் இப்பவே முப்பதாயிரம் இருக்கு…”
“ஓ குட். அப்புறம் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்கு ஸ்மார்ட் போன்கள் மட்டும் இருந்தால் போதாது. உன் வீட்டில் மிக வேகமான இன்டர்நெட் இணைப்பும் தேவைப்படும். அதனால உன் வீட்ல வைபை வசதி இருக்கா?”
“அப்படீன்னா?”
“அதாவது அலைக்கற்றை வசதி… சரி வீட்ல பிஎஸ்என்எல் போன் இருந்தா அதுலயே வைபை எனேபிள் பண்ணிக்கலாம்… இல்லேன்னா தர்மபுரிலேயே பிஎஸ்என்எல் ஆபீஸுக்கு போய் ரௌட்டர் கனெக்ஷன் மட்டும் வாங்கிக்கலாம்.”
“…………………..”
“இவ்வளவு தூரம் வந்திருக்கே மாரி. இப்பவே அந்த ஆபீஸ் போயி, குழந்தைகள் கல்விக்காகன்னு சொல்லி சீக்கிரம் ரௌட்டர் வாங்கி இணைப்பு தரச்சொல்லு… சரியா?”
மாரி உடனே கிளம்பினான். பிஎஸ்என்எல் போய் பணம் செலுத்தி அப்ளை செய்தான். கனெக்ஷன் தர ஒருவாரம் ஆகும் என்றார்கள். அப்புறம் இரண்டு நல்ல ஸாம்சன் ஸ்மார்ட் போன்கள் வாங்கிக்கொண்டு சைக்கிளில் வீடு திரும்பினான்.
அவனுக்கு இந்த ஸ்மார்ட் போன்கள்; ரௌட்டர், இன்டர்நெட் வசதி என்பதெல்லாம் புதிதாகவும் மலைப்பாகவும் இருந்தது. எனினும் எவ்வளவு பணம் செலவானாலும் சரி, குழந்தைகளின் கல்விதான் முக்கியம் என்று சமாதானமடைந்தான்.
வீட்டையடைந்து மிச்சமிருந்த எட்டாயிரம் பணத்தை சரோஜாவிடம் கொடுத்தான்.
“இத பத்திரமா வச்சிக்க தாயி… இன்னமும் நான் ஸ்கூல் பீஸ் கட்டல… நமக்கு இப்ப வேலையும் இல்ல. நாம எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ எனக்கு மலைப்பா இருக்கு தாயி…”
பிஎஸ்என்எல் கனெக்ஷன் சீக்கிரம் கிடைத்தது.
குழந்தைகளின் கல்வி ஆரம்பமானது.
ஆசிரயைகள் ஸ்மார்ட் போனில் வகுப்புகள் எடுத்தார்கள். ஒரே நேரத்தில் இருவருக்கும் வகுப்புகள் இருந்ததால், மணிமாறன் பெட்ரூமிலும்; பொற்கொடி சின்ன ஹாலிலும் சிரமப்பட்டனர்.
இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், வகுப்பு நடக்கும்போது மாரிச்சாமியின் வயதான பெற்றோர்கள் இருமவோ, தும்மவோ முடியாமல் அவதிப்பட்டனர்.
அதைவிடக் கொடுமை ஸ்மார்ட் போன் கனெக்ஷன் சரியாக இயங்காமல் அடிக்கடி துண்டிக்கப்பட்டது… லளிகத்தை சுற்றி மலை இருப்பதால் அப்படித்தான் இருக்கும் என்றார்கள். குழந்தைகளின் படிப்பு அடிக்கடி தடைப்பட்டது.
இதற்காக மலையை வெட்ட முடியுமா? இல்லை வேறு வீடுதான் மாற்றிச் செல்ல முடியுமா?
அன்று காலை குழந்தைகள் கனெக்ஷன் கிடைக்காமல் அவதிப்பட்டபோது, மாரிச்சாமி பயங்கரக் கடுப்பாகிவிட்டான்…
கோபத்தில் மணிமாறனின் போனைப் பிடுங்கி சுவற்றில் ஓங்கி அடித்தான்.
அது உடைந்து சிதறியது.
“இனிமே நீ ஒண்ணும் படிச்சுக் கிளிக்க வேணாம் மணிமாறா, என் கூட வயல்ல வந்து வேல செய்யி… பொற்கொடி அம்மாவுக்கு உதவியா வீட்ல இருப்பா… கொரோனா முடிஞ்சப்புறம் முடிஞ்சா அடுத்த வருஷம் உன் படிப்பைத் தொடரலாம்…”
மணிமாறன் விக்கித்து நின்றான்.