ஆண்மை
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒழுக்கமாகப், பண்பாக வாழவேண்டுமென்று முழுமூச்சாக எண்ணுகிறபொழுது எப்படியோ அதற்கொரு சோதனை ஏற்பட்டுவிடுகிறது. இலட்சியமாவது, ஒழுக்கமாவது, எப்படியோ வாழ்ந்துவிட்டுப் போவோம் என்று எண்ணுகிறபொழுது மிகவும் யோக்கியனாக வாழமுடிகிறது. இதுதான் சத்திய சோதனையோ? இந்த உலகில் மனிதப் பூச்சியாக உதிர்ந்துவிட்ட முப்பது வருட வாழ்க்கை அனுபவத்தில் இந்தப் பிரச்சினைக்கான முடிவு காண்பதில் நான் அலுத்துக் களைத்துப்போனேன்; ஆனால் அந்தப் பிரச்சனை மட்டும் உள்ளத்தில் நிலைத்துநின்று இடையிடையே விசுவரூபமெடுத்துக் கொண்டுதானிருந்தது. அந்தச் சம்பவம் நடந்தபொழுதும், நடக்க உருவாகிக் கொண்டிருந்த பொழுதும், ஏன் அதற்குப் பின்னுங்கூட இந்த ஆராய்ச்சி மனோபாவம் என்னைவிட்டுத் தலைமுழுகிப் போய்விடவில்லை. என்ன செய்வது? அது என்கூடப்பிறந்த குற்றமோ!
ஐந்து வருடங்களுக்கு முன்னர்-
எங்கள் பள்ளியில் உயர்தர வகுப்பில் இராணியும் நானும் ஒன்றாகப் படித்தோம். அப்பொழுது இராணி வெள்ளை உள்ளத்தினள். அழகின் ஓவியம்; பருவ மங்கை. மாணவ குழாத்திற்கு ஒரு வியப்புக்குறி. அவள் அன்புக்கு, கடைக்கண் பார்வைக்கு ‘தவமிருந்த’ காளையர் பலர்!’ ஆனால் நான் இப்பொழுது போலவே அப்பொழுதும் ஒரு விசித்திரப் பிறவி! எவெரெவர் அவள் அன்புக்கு ஏங்கியபோதும் நான் நானாகவே இருந்தேன். அழகு என்ற மூலதனத்துக்கு விலைபோகாத ஆண்மை அன்றும் இன்றும் எனக்கு இருப்பதில் ஒரு பெருமை. ஆனால் இராணி-என்னைக் காணும்போது பேசும் பேசும் போது ‘புதிய ஒரு உலகத்திற்கு’ப் போக அழைப்பு விடுத்தாள். குறும்பும், உதாசீனமும், அலட்சிய சுபாவமும் என் கூடப்பிறந்த சொத்துக்கள். அவளை அலட்சியம் செய்தேன். அவளுக்கு ஆத்திரம்-எனக்கு வெற்றி. ஆனால் எனது சக மாணவ நண்பர்களுக்கு மனக்குமைச்சல்! அவர்கள் உள்ளங்களில் உருவாயது ஒரு சூழ்ச்சி. ஏனோ எனக்கு அது புரியவில்லை அப்போது! எனக்கு உற்காக மது ஊற்றினார்கள், அனுபவமற்ற உள்ளமல்லவா. போதை தலைக்கேறியது. அவ்வளவு நாட்களும் என் அலட்சியத்தினால் உள்ளத்தைப் புண்ணாக்கிக்கொண்டவள் அல்லவா அவள்? எனவே எங்கு தனக்கொரு சந்தர்ப்பம் கிடைக்கும் ஆத்திரத்தைக் கொட்டித்தீர்க்க என்று பொருமிக் கொண்டிருந்தபோது, நண்பர்களின் தூண்டுதலுக்கு எடுபட்ட நான் எழுதினேன், அவளுக்கு ஒரு கடிதம் ; ‘காதலிப்போம்’ என்று! பதில்வந்தது – பள்ளியதிபர் என்னை உடனே பார்க்க விரும்புவதாக! இராணி என்னைப் பழிவாங்கிவிட்டாளா…?
அதிபர் முன்னே நின்று கெஞ்சிக் கூத்தாடி, மன்னிப்புப் பா பாடித் தப்பித்துக் கொள்ளப் பட்டபாட்டில் அரை உயிர் போய்விட்டது எனக்கு! வகுப்பில் எனக்குள்ள திறமையையும், செல்வாக்கையும் எண்ணி அதிபர் ஒருவாறு மன்னித்துவிட்டார். ஆனால் . மனம் ஒரு மாயக்குரங்கு. எதை எப்பொழுது நினைவுகொள்ளக்கூடாது என்று உறுதி செய்கிறோமோ அதை அப்பொழுது நினைத்து, நினைத்து உருகவேண்டியிருக்கிறதே. முன்பு எள்ளத்தனையும் கவனியாத எனக்கு அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அவளைப் பார்க்காமலிருக்கவே முடியவில்லை. உண்மையில் அவள் கொள்ளை அழகிதான். குறுகுறுத்த நீலோற்பல விழிகளும், மாவின் வடு வகிரன்ன நெற்றியும், செவ்விள நீர்க்ககுவையெனத் திமிர்ந்த நெஞ்சகமும், இதழ்க்கடையில் நெளிந்தோடும் புன்னகையும் என்னுள்ளத்தில் எண்ணற்ற கற்பனை விதைகளைத் தூவின. என்றாலும் அவளை ‘அப்படி’ எண்ணிட முடியுமா? சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாதே, அதுபோலப் பறிபோகும் மனதிற்குக் கடிவாளம் அறிவுரை எல்லாம், ‘அதிபரை’ நினைத்தவுடனேயே கிடைத்துவிடும் பொருள்களாகவன்றோ முன்னைய அனுபவம் முத்திரையிட்டிருக்கின்றது. எனவே எனக்கு அவள் எட்டாக் கனியோ என்னவோ!
பள்ளி வாழ்க்கை இத்தகைய உணர்ச்சி மோதல்களின் நிலைக்களனாக நின்று, நகர்ந்து மறைந்ததை இப்பொழுது எண்ணிப்பார்க்கும்போது கூட ஒரு தனி இன்பம் தளிர்க்கின்றது என் மனத்தில்!
காலச் சுழற்சியில்தான் எத்தனை மாற்றங்கள் மலர்ந்துவிடுகின்றன. ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் இப்பொழுது நான் ஒருமனிதன். உழைக்கத் தெரிந்தவனைத் தானே மனிதன் என்போம். எங்கோ பிறந்து வளர்ந்து உழைப்பதற்காக வந்த என்னை வேலை காத்திருக்கவில்லை. அந்த வேலைக்குக் காத்திருந்தவன்போல அச்சகமொன்றில் வர்த்தகப்பகுதி மனேஜராகவும் ‘கன்வச’ ராகவும் நான் கடமை ஏற்றேன். காலமெல்லாம் இலக்கியத்தோடு ஒன்றிப் பழகிக் கிடந்த எனக்கு அந்த வேலை அதிக வருமானத்தைத் தராவிட்டாலும், ஓரளவு மன நிம்மதியை அளித்தது என்பதில் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தச் சலனமற்ற வாழ்வில் சலனமேற்படவேண்டுமென்ற நியதியோ என்னவோ இராணி மீண்டும் என் வாழ்வில் எதிர்பாராத வகையில் குறுக்கிட்டாள் !
ஒரு சனிக்கிழமை மாலை! நகரத்தின் சௌந்தரியமெல்லாம் கொடி கட்டிப் பறக்கும் நேரம் அது! எங்கு பார்த்தாலும் ஒரே ஜனக்கும்பல்! சற்று வெளியே சென்றுவரலாம் என்று கிளம்பிய நான் நகரத்து வேடிக்கைகளையெல்லாம் பார்த்துக் களைத்தவனாகப் பிரபல ஹோட்டல் ஒன்றில் சிற்றுண்டியருந்தச் சென்றேன். பிரபல ஹோட்டல் அல்லவா அது ? ரொம்பக் கூட்டமாயிருந்தது! இளைஞர்கள், யுவதிகள், முதியவர்கள் எல்லாருமிருந்தனர். எங்கோ ஒரு மூலையில் போய் அமர்ந்துகொண்ட நான் சிப்பந்தி கொண்டுவந்து வைத்த உணவுகளைச் சுவைத்தபடியே பார்வையை அலையவிட்டிருந்தேன். ஒரே மகிழ்ச்சிதான் அங்கு சுருதி கூட்டியது. துன்பத்தின் சிறு அணு இளைதானும் அங்கில்லை. அவர்கள் எல்லாரும் வாழ்வைச் சுவைக்கிறார்கள்! பார்வையும் சிந்தனையும் ‘தத்துவம்’ பேசின.
“மிஸ்டர் ராஜன்….”!
ஒரு மோகன மணிக்குரல் இளைய முல்லை முறுவலித்தது. திடுக்கிட்டுத் திரும்பிய என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி நின்றாள் இராணி. அவள் பக்கத்தில் ஒரு சிறுமி மிரள விழித்துப்பார்த்தாள் என்னை.
“இராணி… நீயா…?”
அசட்டுச் சிரிப்புடன் ஏதோ சொல்லி வைத்தேன். அவள் மீண்டும் ‘கலீ’ரென்று சிரித்தாள். எனக்கென்னமோ போலிருந்தது. ஐந்து வருடத்திற்கு முன்பு நான் கண்ட இராணியா இவள் …? ஒல்லியான அவள் உடம்பில் சதைப்பிடிப்பு வைத்திருந்தது. செக்கச் சிவந்த மேனியில் துறுதுறுத்த இளமை நடனமாடுகிறது. அந்தக் கண்கள், நெற்றிக் குங்குமம், நீண்ட இரட்டைப் பின்னல்கள்… வயது ஏற ஏறப் பெண்கள் இளமை குலைகிறார்கள் என்று எந்த மடையன் கூறினான்? இராணியைப் பார்த்தால் ஐந்துவயது குறைந்தவள் போலத் தோன்றுகிறளே! சே, என்ன மனசு எனக்கு ? வந்தவளோடு பேசத் தெரியவில்லை. கற்பனை பண்ணுகிறேனாம்!
‘பில்’லுக்குரிய பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்தேன். இராணியும் சிறுமியுந்தான் வந்தார்கள். பேசுதற்கு எதுவுமேயில்லாத சூனியத்தில் எதனைப் பேசுவது ? மெல்ல நடந்தபடியே ‘நான் வருகிறேன் இராணி’ என்றெனோ இல்லையோ எங்கே?’ என்று கேட்டாள் இராணி!
‘டிறைவர் காரைப் பக்கத்தில் கொணர்ந்து நிறுத்தினான். “ஏறிக்கொள்ளுங்கள்” என்ற ‘உத்தரவு’ பிறந்தது. அந்தப் கார்ப் பிரயாணத்தின் போது ஐந்துவருட வாழ்வின் வரலாறு பரிமாறப்பட்டது எங்களுக்குள். இராணி மிஸஸ் இராமதாஸ் இப்பொழுது! அவர்களுக்குக் குழந்தையில்லை. அந்தச் சிறுமி வளர்ப்பு மகள்! நான் ஒரு அச்சக மனேஜர், கட்டைப்பிரம்சாரி என்பது இந்த உரையாடலின் அடக்கம்.
எனது விடுதியின் வாசலில், கார் என்னை இறக்கிவிட்டபொழுது ‘மிஸ்டர் இராசன். எங்கள் வீட்டுப்பக்கம் வசதியான போது வந்து போங்கள். ஒரே ஊர்க்காரர்களல்லவா நாம்!’ என்ற மணிக்குரல் மீண்டும் இழைந்தது. அந்தக் குரலுக்குரியவளின் அன்பை எண்ணி அகமகிழ்ந்து கொண்டே உள் நுழைந்தேன்!’
அந்தச் சந்திப்புக்குப் பின்னர் பல தடவைகள் இராணியின் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் இராணி மிக மிக இனியவளாகப் பழகியிருக்கின்றாள். அவள் கணவர் இராமதாஸ் இங்கிதமான மனிதராகக் காணப்பட்டார். அவரதிகம் என்னுடன் பேசாவிட்டாலும் அவரது பெருந்தன்மையை எண்ணிப் பிரமித்திருக்கிறேன். ஒரே ஊர்க்காரர்கள் என்பதற்காக இராணியும் நானும் சகசமாகப் பழகுவதை அவர் கண்டிக்காதிருப்பதே பெருந்தன்மையன்றோ. ஆனால் இராணி?
இளமை தெறிக்கும் அவள் உடல் அசைவுகள், சுழலும் விழிகள், பாசப்பரவலை உதிர்க்கும் உரையாடல்கள், எல்லாம் வரம்பு கடந்தனபோல எனக்குத் தோன்றுகின்றனவே! வீண் பிரமையா? முன்னொருபோது அவளால் அடைந்த அவமான நினைவு நெஞ்சிலிருந்து நீங்கமுன்னர் மீண்டும் அவளால்… மனமே நீ மிகப் பொல்லாத குரங்கு! என்ன மாதிரியெல்லாம் என்னை ஆட்டிப் படைக்கிறாய்? அவளைச் சந்தித்துவிட்டுச் செல்லும் ஒவ்வொரு கணமும் உள்ளஞ் சலனப்படுகிறதே எதற்காக… ?
‘போகப்போகிறீர்களா? சரி போய் வாருங்கள்’ என்று வாசல்வரை வந்து வழியனுப்பிவைத்தவள் கரம் ஏதோ ஒன்றை என் சட்டைப்பைக்குள் திணித்தது. அது என்ன ? நெஞ்சுச் சட்டையல்ல, நெஞ்சமே கனத்துக்கொண்டிருந்தது. வீட்டிற்கு வந்து தட்டுத்தடுமாறியபடி இருட்டில் மின்விளக்கைப் பொருத்திய பின்னர் அந்த ஒன்றை-கடிதத்தை எடுத்துப் பார்த்தேன்.
ஐயோ, என்று அலறவேண்டும் போலிருந்தது! அடி பாவிப் பெண்ணே, உன்னுடைய தீராக் காதலுக்கு நான்தானா அகப்பட்டேன் ? பாவம் பார்த்துக் கைபிடிப்பதற்கும் நீ கன்னியல்லவே. அன்னியன் ஒருவனின் மனைவியாச்சே. உன் கணவன் ஆண்மையில்லாதவன் என்றால், இளமை வாழ்வில் கூடா நெறிக்குட்பட்டு ஆண்மையைத் தீர்த்துக்கொண்டவன் என்றால், மருத்துவர்கள் அவன் மனைவியுடன் பழகக்கூடாது என்று கூறியிருக்கிறார்களென்றால் அதற்காக நான் உன்னைக் காதலிக்க முடியுமா? அன்றும் இன்றும் நீ என்னை மனதாரக் காதலிக்கிறாய் என்றால் அதற்காக நான் மனிதத்தன்மையை இழந்துவிட வேண்டுமா? பிறன்மனை நோக்காப் பேராண்மையைத் துறந்துவிட வேண்டுமா?
உள்ளம் அலறியது. மனச்சாட்சி ஓலமிட்டது! ஆண்மை விழித்துக்கொண்டது. அதற்குப்பிறகு இராணியின் வீடு செல்ல எனக்குத் துணிவு பிறக்கவில்லை. ஆனால்-
அவள்…
ஒரு தலைப்பட்ட ஆசையுணர்வு ஒரு பேய்! இல்லாவிட்டால் இராணியின் வீட்டுக்கு நான் போகாமல் விட்டதற்காக என் வீடுதேடி வருவாளா அவள் ? அதுவும் நான் என் மனது கவர்ந்த அவருடன் எங்கேயோ சென்று வாழப்போகிறேன் என்று மிஸ்டர் இராமதாஸுக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு ‘நட்டநடு’ இரவில், என்னைவந்து எழுப்பி இந்தக் கதையைக் கூறுவதென்றால், அவள் துணிவுக்கு என்ன பெயரிட்டழைப்பது?
அந்தப் பயங்கர இரவில் எனது ‘தர்மோபதேசத்தைக்’ கேட்க அவள் தயாராக இல்லை. எனது வாழ்வின் இலட்சியத்தைப் பாழடிக்க யானும் தயாராயில்லை. எது நீதி, ஒழுக்கம், ஆண்மை என்று விடாப்பிடியாக எண்ணி வந்தேனோ அதற்காக, அவளை ஏற்றுக்கொள்ள என் மனம் ஒப்பவில்லை. முடிவாக எனது கருத்தை அழுத்திக் கூறியபொழுது அவள் தோற்றம் தீராக் கோபத்தல் கொதிக்கும் மோகினிப்பேய் போலிருந்தது. என்ன வெல்லாமோ ஏசித் தீர்த்துவிட்டு வெளியே போனவள், எங்கு போனாளோ? போனவள் தான் !
வாழ்வின் நியதி என்னவோ எப்பொழுதும் புதுமையாகத்தானிருக்கிறது! வாழத்துடிக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வரத்தெரியாத ‘வாழ்வு’ நினையாத நேரத்தில் சந்து பொந்து தேடிக் குறுக்குப் பாதைவழியாகக் கண்சிமிட்டி அழைக்கிறது! கடவுளும் சாத்தானும் மனிதனைத் தேடிவருகிற பாதைகள் என்றுமே வேறு வேறுதானோ ? தத்துவார்த்த மயக்கம் என்று இதைக்கூறிச் சில பேர் சிரித்தாலும் தூய்மையின் புதைகுழிக்கு நுழைவாயிலாக அமையாத ஆண்மையின் வெற்றி தரும் மனச்சாந்தி மனிதனை அமரனாகத்தான் மாற்றுகிறது இல்லையா?
– கலைச்செல்வி, கார்த்திகை 1961.
– தெய்வ மகன் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1963, தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் (இலங்கை).
![]() |
நாவேந்தன் (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது. நாவேந்தன் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. பயிற்றப்பட்ட ஆசிரியராகி சட்டமுதற் தேர்வில் சித்திபெற்று முதலாந்தர அதிபராகப் பதவியில்…மேலும் படிக்க... |