ஆண்பிள்ளை
(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்தக் கிச்சான் பயலைப் பார்த்தியாடா?” என்று கேட்டார் மாமா.
“இல்லே மாமா, இனிமேத்தான் போவணும்.”
“வேணாம். அந்தப் பொம்பிளைப் பொறுக்கியை நீ ஒண்ணும் பார்க்கவும் வேணாம், பழகவும் வேணாம். அந்தப் பேமானி இந்த வீட்டு வாசல் படியை மிதிக்கட்டும். நல்லா லாடம் கட்டின செருப்பாலே அடிச்சி, நாயை விரட்டுற மாதிரி அவனை நான் விரட்டலேன்னா, என் பேரை மாத்தி வைச்சுடு. ‘ஏண்டா ஜாட்டான்’னு என்னை நீ கேட்கலாம்.”
எனக்கு உண்மையில் சொரேல் என்றது. கிச்சானையா இவர் இப்படித் திட்டுகிறார். என்ன அருமையான மனிதர் அந்தக் கிச்சான்?
“ஏன் மாமா?” என்றேன் எனக்கே சரியாகக் கேட்காத குரலில்.
“இந்த ஏன் எவடன்னு கேள்வி கேக்கற பழக்கத்தை இனியோட உட்டுடு. உருப்படப்பாரு. பெரியவங்க ஒண்ணு சொல்றாங்கன்னா அதில நியாயம் இருக்கும். அந்தக் கம்மனாட்டியை நீ பார்த்ததா, பழகினதா எனக்கு சேதி வந்தது; அப்புறம் நீயும் இந்த வீட்டுப் படியை மிதிக்கப்படாது.”
நான் அப்போதைக்குச் “சரி மாமா” என்று சொல்லி வைத்தேன். எனக்கு மனம் வலித்தது. ஒரு வருஷத்துக்குப் பிறகு என் சொந்த ஊருக்கு வந்து, உடனே மாமாவைப் பார்க்க வேண்டும் என்று ஓடி வந்த இடத்தில், மாமா இப்படிச் சீறி விழுந்தது. அதுவும் கிச்சானைப் பத்தி என்னென்னமோ சொன்னது என்னைக் குழப்பியது.
கிச்சானைப் பார்ப்பதே ஓர் அனுபவம். என்னமோ அதைப் பார்த்தவுடன், நம் மனசில் ஒரு சந்தோஷம் பற்றிக் கொள்ளும். ஆள் குண்டு. குண்டென்றால் சாதாரணக் குண்டில்லை. பீரங்கிக் குண்டு. இதில் சோடா பாட்டில் கண்ணாடி வேறு. எப்போதும் போலீஸ் காரர் தலை மாதிரி ஒட்ட வெட்டின கிராப்பு. பயங்கரமான அகலத் தில் பேண்ட் என்று ஒன்று போட்டிருக்கும். உடம்பைப் பிடித்துக் கொண்டு ஒரு சட்டை. அதில் வயிற்றுப் பகுதி பட்டனை அது போட்டு நான் பார்த்ததே இல்லை. எப்போதும் பல் தெரியச் சிரிக்கிற அசட்டுத்தனமான முகம்.
இந்த உடம்புக்குள் தான் எத்தனை ஆற்றல்கள் ஒளிந்து கிடந்தன! நானும் கிச்சான் மாமாவும் அடுத்தடுத்துக் கட்டடங் களில், வெவ்வேறு அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டி ருந்தோம். சரியாக ஒரு மணிக்குப் போன் பண்ணும்.
“வர்றயாடா?”
“என்ன இன்னிக்கு ஸ்பெஷல்?”
“தயிர் சாதம், கத்தரிக்காய் துவட்டல்.”
“உடனே இப்பவே கிளம்பிட்டேன்.”
“சர்த்தான் வாடா.”
எனக்கு முன்பாக ஒரு நாலைந்து அதன் அலுவலக நண்பர்கள் காத்திருப்பார்கள். கிச்சான் தயிர் சாதம் பண்ணி நீங்கள் சாப்பிட வேண்டும். பெண்களுக்கும் கைவரா செய் நேர்த்தி அதுக்குக் கிட்டி யிருந்தது. கோழிக்கறிக்குத் தேவையான மசாலாக்களைப் போட்டுக் கத்தரிக்காய் வதக்கல் பண்ணியிருக்கும். ஒரு துண்டு வதக்கலுக்கு நாலு கவளம் தயிர்சாதம் சுவடு தெரியாமல் இறங்கும். புளித்து, கள் நாற்றம் எடுக்காத தயிரும், சம அளவாக நறுக்கிப் போட்ட மாங்காய்த் தேங்காய்த் துணுக்குகளும், வயிறு நிறைத்து மனசை நிறைக்கும். எங்களுக்கெல்லாம் கொடுத்து நாங்கள் ருசித்துச் சாப்பிடுவதைச் சிரித்துக் கொண்டே பார்த்துப் பசியாறும் அது.
கிச்சான் இது மாதிரி விருந்தோம்பியதுக்குப் பின்னே ஒரு கதை இருந்தது. சின்ன வயதில் எங்கள் வீட்டிலும், மாமா வீட்டிலும் முறை வைத்துக்கொண்டு சாப்பிட்டு வளர்ந்தது அது. இத்தனைக்கும் எங்கள் மாமாவின் சொந்த அண்ணன் மகன் அது. நொடித்துப் போன குடும்பத்தின் ஒற்றை வாரிசு. அப்பாதான் அதுக்குச் சம்பளம் கட்டியதெல்லாம். எனக்கும் கிச்சானுக்கும் ஏழெட்டு வயசு வித்தியாசம் இருந்தது. வெள்ளிக்கிழமை தொடங்கித் திங்கள் இரவு வரை எங்கள் வீட்டில் அது சாப்பிடும். உறவுக்காரர்தானே என்று நேரே வீட்டுக்குள் வந்து விடாது. திண்ணையை ஒட்டிச் சாப்பாட்டு நேரத்துக்கு வந்து நிற்கும். கையோடு கொண்டு வந்த புத்தகத்தை வாசித்துக் கொண்டு நிற்கும்.
அப்பாதான் சாப்பாட்டு நேரத்துக்கு வெளியே வந்து கிச்சானைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து இலையில் உட்கார வைப்பார். கிச்சான் இல்லாமல் இந்த நான்கு நாட்களும் அந்தக் காலத்தில் நான் சாப்பிட்டதே இல்லை.
கிச்சானுக்குக் கைவந்த இன்னொரு கலை கோலம். மார்கழி மாசத்தில் எங்கள் வீட்டுக்கு முன்னால் கிச்சான் கோலம் போடு வதை இன்றும் என் மனக்கண்ணில் காண முடிகிறது. நாலு மணிக்கு எழுந்து விடுவேன். முந்தின நாளே தயார் பண்ணின செங்கல் பொடி, பச்சை மஞ்சள் பொடிகளோடு, தெருவைப் பெருக்கிவிட்டுக் கோலத்தைத் தொடங்கும். தெருவை அடைத்துக் கொண்டு புள்ளி வைக்கும். எனக்கு எப்படி இந்தப் புள்ளிகளைச் சேர்த்துக் கோலத் தைப் பூர்த்தி பண்ணும் என்று திக்திக் என்று மனசு அடித்துக் கொள்ளும். பக்கத்து, எதிர்த்த வீட்டுப் பெண்கள் துடைப்பமும் சாண நீருமாகக் கதவைத் திறந்து கொண்டு வந்தவர்கள் தங்கள் தொழிலை மறந்து, கிச்சான் கோலத்தையே கன்னத்தில் கை வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டு நிற்பார்கள். விடியும் போது கோலமும் பூர்த்தியாகும். ஒரு தேர் புறப்படத் தயாராய் நிற்கும்; அல்லது நாலு பக்கமும் அன்னப் பறவைகள் பறக்கத் துடிக்கும்; அல்லது ஒரு மயில் பாம்பை வாயில் கவ்விக் கொண்டு தோகை விரிக்கும். எனக்குக் கோலத்தை யாரும் மிதித்து விடக் கூடாதே என்றிருக்கும். கோலத்தை மிதிப்பது கிச்சானை மிதிப்பதே அல்லவா! தெருவில் போவோர் யாருக்கு இது தெரிகிறது?
மாமா, “அவன் கிடக்கான் பொட்டைப் பயல்” என்பார். பெண்கள் தான் கோலம் போடவேண்டும் என்பது விதியா என்ன? பெரியவரிடம் யார் என்ன சொல்ல முடியும்? கிச்சானைப் போய் பொட்டை என்கிறாரே மாமா என்று எனக்குக் கஷ்டமாய் இருக்கும்.
நல்லவேளை, கிச்சான் அலுவலகத்தில் இருந்தது. மேஜையில் குனிந்து என்னவோ எழுதிக் கொண்டிருந்தது. மெல்லப்போய் எதிரில் அமர்ந்தேன். சில நிமிஷங்களுக்குப் பிறகுதான் என்னைப் பார்த்தது அது.
“அடடே வைத்தி! எப்படா வந்தே?” என்றது.
“இப்பத்தான்.”
பேனாவைக் கீழே போட்டது. என்னை முழுக்கக் கூர்மையாய்ப் பார்த்து, “ஏண்டா, மெட்ராஸ் போயி எத்தனை மாசம் ஆச்சு, ஒரு லெட்டர் போடக் கூடாதா? நீ எப்படி இருக்கியோன்னு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு எனக்கு” என்றது.
சோடா பாட்டில் கண்ணாடிக்குள்ளே இருந்த அந்த வீங்கின கண்கள் நீர் கோத்துக் கொண்டதை நான் கவனித்தேன். இந்த ஓராண்டுக்குள்ளேயே முன்நெற்றி வழுக்கை விழுந்து விட்டிருந்தது அதுக்கு. காதோரம் ஒன்றிரண்டு நரை.
“எப்படி இருக்கீங்க?”
“இருக்கேன். எவ்வளவோ நடந்து போச்சு…”
சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்து, “ஒரு அரை மணி இரு. இதை முடிச்சுடறேன். அப்புறம் வீட்டுக்குப் போகலாம்.”
“வீட்டுக்கா!”
என்னை உற்றுப் பார்த்து விட்டுச் சிரித்துக் கொண்டு சொல்லியது:
“இப்ப நான் சம்சாரிடா.”
எழுந்து போய் எங்கிருந்தோ இரண்டு பத்திரிகைகளை எடுத்து வந்து என் முன் போட்டது.
சரியாக ஒன்றடித்த பின், அலுவலகத்தை விட்டு இருவரும் கிளம்பினோம்.
“வா காப்பி ஹவுசில் காப்பி சாப்பிடுவோம்” என்று அழைத்துப் போயிற்று. அந்த நேரத்தில் காப்பி ஹவுஸ் காலியாகத் தான் இருக்கும். மூலையாக உட்கார்ந்து கொண்டோம்.
காப்பியை உறிஞ்சியபடி அது கேட்டது.
“அப்பா ஏதாவது என்னைப் பத்திச் சொன்னாங்களா?” “இல்லே.”
“அவங்க பெரியவங்க. மாமாவைப் பார்த்தியா?”
“உம்.”
“அவரு என்னைப் பத்தி ஏதாவது சொன்னாரா?”
“ஏதோ சொன்னாரு.”
“அதுக்குத்தான் கேட்டேன்.”
அப்புறம் அது சொல்லிக் கொண்டு போயிற்று.
கிச்சானுக்கு அடுத்த மேசையில் இருந்து பணியாற்றியவன் சந்த்ரு. சந்திரசேகரன். நானும் பார்த்திருக்கிறேன். ரொம்ப நவீனமாக இருப்பான். உடையும், பேச்சும், நடவடிக்கைகளும் ரொம்பவும் நாசுக்காக இருக்கும். கிச்சான்தான் யாரிடமும் ஒட்டுமே. அவனிட மும் ஒட்டிக் கொண்டது. எல்லாரிடமும் சமச்சீராகப் பழகும். அந்த அலுவலகத்தின் கீழே இருந்த பேன்சி ஸ்டோரில் பணியாற்றியவள் செண்பகா. ரொம்ப அழகாய் ஒயர் கூடை செய்வாளாம்…
“ரொம்ப நல்ல, அழகான பெண்” என்றது.
“உங்களுக்கு நல்லதும் தெரியாது. கெட்டதும் தெரியாது. யாரை நீங்க அழகில்லாதவள்ன்னு சொல்லுவீங்க?’
“ஏண்டா, என்னை என்ன முட்டாள்ன்னு நினைச்சியா?” என்று கூறிவிட்டு, “வைத்தி, அழகுங்கறது உடம்புலயா இருக்கு?’ என்று சீரியசாகத் தொடங்கியது.
“உஸ்… அழகு எங்க இருக்குன்னு அப்புறமா சாவகாசமா முடிவு பண்ணிக்கலாம்…” என்று மறித்தேன்.
செண்பகாவுக்கும் சந்த்ருவுக்கும் சினேகம் ஏற்பட்டு விட்டது. எப்படி ஏற்பட்டது? எல்லாப் பையன்களுக்கும் பெண்களுக்கும் அது எவ்வாறு அரும்புமோ அந்த வழியாகத்தான். அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். இந்தக் கிச்சான் அவர்கள் காதலை இரண்டு கைகளாலும் ஆசி கூறியிருக்கிறது. அவர்கள் சந்திப்பதற்காகத் தான் குடியிருந்த அறையையே ஒழித்து விட்டிருக்கிறது.
இருவருக்கும் தன் கையாலேயே சமைத்து விருந்திட்டிருக்கிறது. கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள் என்று புத்தி சொல்லியி ருக்கிறது. இடையில் துபாய்ப் பணம் சந்த்ருவை எப்படியோ அழைக்க, ஒரு நாள், காலில் ஒட்டியிருந்த இந்திய மண்ணைத் துடைத்துச் சுத்தம் செய்துவிட்டு விமானம் ஏறிப் போய்விட்டான் சந்த்ரு. போயே விட்டான்.
“வைத்தி! நீயே யோசிச்சுப் பாரு. ஒரு பெண்ணைக் கெடுத்து மோசம் பண்ணிட்டுப் போறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். செண்பகம் அவனை ஏத்துக்கிட்டதோட அவனோட குழந்தையையும் ஏத்துக்கிட்டா. நம்பிட்டா. என்ன பண்ண முடியும்? மனுஷன் குணம் முகத்திலேயா எழுதி வச்சிருக்கு? இல்லையே.”
“அந்தப் பெண்ணோட வாழ்க்கை என்னவாறது? ஒண்ணு அவ செத்துப் போவா அல்லது கெட்டுப் போயி தெருவிலே நிப்பா. அது நல்லதா? ஒரு பொண்ணு விபசாரியானா அது நமக்குத் தானே கேவலம்? ஒரு சினேகிதியா, அவளோட பழகிட்டேன். சரி, என் மிச்ச வாழ்க்கையை அவளோட சேர்ந்து, அவளுக்கு நான் துணையா, எனக்கு அவ உதவியா இருந்துடுவோம்னு தீர்மானிச் சிட்டோம். வைத்தி, என்னை உனக்கு நல்லாத் தெரியும்.நான் சினேகிதம்னு நினைக்கிற ஒன்றிரண்டு பேர்ல நீயும் ஒருத்தன். நான் செஞ்சது தப்பா?”
கிச்சான் என் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டது. நான் என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன்.
“உங்களால தப்பு செய்ய முடியுமா… நீங்க செஞ்சது தான் சரி” என்றேன்.
என்னை வீட்டுக்கு அழைத்துப் போயிற்று. செங்குந்தர் வீதியில் ஒரு சின்ன மேற்குப் பார்த்த வீடு. ஒரு வெளிப்புற அறை. தீப்பெட்டி மாதிரி அடக்கமான முற்றம். அதில் ‘மணிபிளாண்ட்’ வாசல் தூணைப் பற்றிச் சுற்றிக் கொண்டு, வளர்ந்திருந்தது. அந்தச் செடிக்காகவே அந்தத் தூண் நின்றது போலிருந்தது.
“செண்பகா, இவன்தான் நான் அடிக்கடி சொல்லுவேனே அந்த வைத்தி, வைத்தியநாதன். இவன் அம்மா போட்ட சோறுதான் என் உடம்புல ஓடற இரத்தம்.”
“ச்…சும்மா இருங்க” என்றேன்.
“வாங்க” என்று இரு கையும் கூப்பிக் கும்பிட்டது அந்தப் பெண். அவள் இடுப்பில் இருந்த அந்தக் குழந்தை, “ப்பா” என்று கிச்சானை நோக்கித் தாவிக் கொண்டு வந்தது.
“வாடி என் கண்ணே” என்று குழந்தையை எடுத்துக் கொண்டது அது.
“உக்காருங்க” என்று சொல்லி மடக்கு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டாள் செண்பகா. நூல் புடவை உடுத்தியிருந்தாள். புடவைகள் கட்டுகின்ற முறையில்தான் அழகு பெறுகின்றன.
நான் சொல்வது சத்தியம். செண்பகா கும்பிட்டு நின்றதுபோல, ஒரு நிலையை நான் கோயில்களில் சிற்பமாகப் பார்த்திருக்கிறேன். அன்றைக்குக் காலையில் பூத்த புஷ்பம் மனசுக்குள் தோன்றியது. ஒரு வைகறைப் பொழுதில், இலை நுனியில் ஒட்டிக் கொண்டிருக்கிற பனித்துளியை நினைவு படுத்தினாள் செண்பகா. ஏனோ தெரியவில்லை. எனக்கு என் அம்மா முகம் நெஞ்சில் நிழலாடியது.
“செண்பகா, வைத்தியை அழைச்சுப் போயி வெறும் காப்பி வாங்கிக் கொடுத்தேன். ரெண்டு பேருமே சாப்பிடணும், முடியு மில்லையா” என்று கேட்டது கிச்சான்.
“முடியுமாவாவது, வீடுன்னு ஒண்ணு இருக்கும்போது எதுக்காக ஓட்டலுக்கு அழைச்சுப் போறது. தோ செத்தெ இருங்க. இலை போடறேன். இருங்கண்ணா” என்று அதையும், கடைசியாக என்னை யும் பார்த்துச் சொல்லிவிட்டு உள்ளே போனாள் செண்பகா.
பிரமிப்பு நீங்காமல், “கையைக் கொடுங்க, நீங்க தப்பே பண்ண முடியாது” என்று என் கையை நீட்டியவாறு சொன்னேன்.
சோடா பாட்டில் கண்ணாடி வழியாக என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, என் கையைப் பற்றிக் கொண்டது அது.
– 1984
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.