ஆணிவேர்
கதையாசிரியர்: ஜோவலன் வாஸ்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 297
(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நிர்மலா ! உனக்கு மூளை இருக்கா? கிணறு என்று தெரிந்தும் அதில் விழப் போகிறேன் என்கிறாயே” என் அப்பா ஆத்திரத்துடனும் படபடப்புடனும் கூறினார்.
நான் மௌனமாக அம்மாவைப் பார்த்தேன். “அம்மா, நான் செய்த முடிவு தவறா? என்னை மணந்து கொள்ள மறுத்த ஒருவர் நோயால் அவதிப்படுகிறார். அவரை வாழ்விக்க நான் போகிறேன் என்கிறேன். இது தவறா அம்மா ! நீயே சொல்லம்மா !” என் கண்கள் பேசின.
“நிர்மலா, அப்பாவும் உன் நன்மைக்குத்தானே அம்மா சொல்கிறார். அன்று உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டிய தினத்திலே எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்திவிட்டுப் போனானே, அவன் காலிலா போய் மண்டியிடப் போகிறாய்?” என்று கெஞ்சினாள் அம்மா.
“இல்லையம்மா, மண்டியிடப் போவதில்லை. என் தியாக உணர்ச்சியை அவருக்கு எடுத்துக்காட்டி, அவரை மண்டியிடச் செய்யப் போகிறேன் !” என்று வாதாடினேன்.
“சயரோகத்தினால் பீடிக்கப்பட்ட ஒருவனுக்கு நீ மனைவியாகி வாழ்ந்து சாவதை விட, என் வீட்டிலேயே கன்னியாக செத்து விடு ! போ உள்ளே!” என்று கர்ச்சித்தார் அப்பா.
“அப்பா !” என்ற கத்தினேன் நான். “அவர் ஷயரோகியாக இருக்கலாம். அவர் எனக்கு கயரோகம் என்று கதையை கட்டி அன்று ஒதுக்கியும் விட்டிருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு ஒருவன்தானப்பா கணவன் ! என்று என்னை அவருக்கு என்று நிச்சயம் செய்தீர்களோ, அன்றைக்கே நான் அவர் மனைவியாகிவிட்டேன். அவர் என் கணவர் ஆகிவிட்டார். என் மனச்சாட்சியின் படி நான் வாழாவெட்டி என்று பெயர் பெற்று வாழ்வதைவிடக் கணவனுக்குப் பணிவிடை செய்து சாகவிரும்புகிறேன் அப்பா !” என் உள்ளம் வடித்த கண்ணீர் வார்த்தைகளாக வெடித்துச் சிதறின.
“சீ ! கழுதை ! எதிர்த்துப் பேசுற அளவுக்குத் துணிந்து விட்டாயா? போ உள்ளே?” என்று என் கையைப் பிடித்திழுத்து அறைக்குள் தள்ளினார் அப்பா. வெளியே கதவு பூட்டப்பட்டது. என் இதயக் கதவு அவருக்காக திறந்துதான் கிடந்தது !
கட்டிலில் படுத்துக்கொண்டே தலையணையை நனைத்துக் கொண்டிருந்தேன். காரிருளில் மின்னலென பழைய சம்பவங்கள் ‘பளிச், பளிச்’ என்று மின்னிக் கொண்டிருந்தன ! ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த அச்சம்பவம் சுழன்று சுழன்று புயலாக வீசியது என் உள்ளத்திலே !
அன்று….
கெட்டி மேளம் முழங்கி, நாதஸ்வரம் இசைத்து, பொட்டும் பூவும், சந்தனமும், தாம்பூலமும் நிறைந்து இருக்கவேண்டிய அந்தக் கலியாண வீடு…….
அமைதி முத்திரையின் ஆட்சிக்கடிமையாகிய பாலைவனம் போல் வறண்டு கிடந்தது. “மாப்பிள்ளை இன்னமும் வரவில்லையா?” கல்யாணவீட்டிற்கு வந்திருந்த ஒருவரின் கேள்வி இது.
‘இல்லை’, இல்லை என்ற சொல் என்மீது இடிஇடித்தது போலிருந்தது. அந்தப் பிள்ளையை பெற்றவர், என் மாமனாராக வர வேண்டிய நாராயணப்பிள்ளை. தலை குனிற்தபடி நின்றார். ஒரே பையன் என்ற காரணத்தால் மிகவும் செல்லமாக வளர்ந்து விட்டதன் பலன் எல்லோர் முன்னிலையிலும் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டது.
“இந்தாங்க ! இப்படி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டிருப்பதால் யாருக்கு என்ன இலாபம் ! கல்யாணம் என்னவோ நின்று போச்சு. இனி யாருக்கும் பிரயோசனமில்லாமல் இங்கே ஏன் இருக்க வேண்டும் !” என்று நாராயணபிள்ளையிடம் கூறினாள். அவர் மனைவி பார்வதி நீண்ட பெருமூச்செறிந்து அவளைப்பார்த்தார் நாராயணப்பிள்ளை. “பார்வதி ! நம்ம நாகராசன் கடைசி நிமிஷத்தில இந்த மாதிரிக் கல்லைத் துாக்கிப் போடுவான் என்று நான் நினைக்கவே இல்லை. இதற்குத்தான் அவனுக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்கா என்று மீண்டும் மீண்டும் கேட்டேன். அந்தப் பொண்ணு நிர்மலாவை நினைச்சால் தான் “ என்று கலங்கினார் அவர்.
“அவனும் தான் பெண்ணைப் பிடிச்சிருக்குது என்றான். இப்போ என்ன வந்ததோ கேடு?” என்று வருந்தினாள் பார்வதி.
நடந்தது வேறோன்றுமில்லை. மனையிலே உட்கார வேண்டிய மாப்பிள்ளைக்கு யாரோ போய்ச் சொன்னார்களாம் எனக்கு சயரோகம் என்று ! என் அழகிலே மனதைப் பறிகொடுத்ததாக கூறிய மாப்பிள்ளையும், என் மெலிந்த உடலை நினைத்துப் பார்த்து அந்த ‘உண்மையை ஒப்புக் கொண்டுவிட்டார்.
அதன் பின்னர் எழுந்த ரகளையை என் மனம் மீண்டும் எப்படி எண்ணும்? மண வாழ்க்கையில் மகிழவேண்டிய நான் மனம் நோக அழுதுகொண்டிருந்தேன்!
கூட்டம் கூட்டமாகப் பெண்களும் ஆண்களும்குசு குசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். “கல்யாணம் ஏன் திடீரென்று நின்றுபோச்சு?” என்று யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“பெண்ணுக்கு ஷயரோகம் என்று பையன் ஒதுக்கிட்டானாம் !” கதை பரவிக் கொண்டிருந்தது.
“அது பற்றி முன்னாலே விசாரிக்கவில்லையாமோ?” என்றது ஒரு குரல்.
“விசாரித்தார்களாம். ஆனால் சொல்லித் தெரியக் கூடிய விஷயமா? அவளைப் பார்த்தாலும். டி.பி. காரி மாதிரித்தானே மெலிந்து போயிருக்கிறாள். உண்மையாக டீ.பி.யாக இல்லாது போனால் பையன் ஏன் ஒதுக்க வேண்டும் !” என்ற தீர்ப்புக் கூறியது வேறொரு குரல்.
பலரது ஏளன மொழிகளைக் கேட்டுக் கொண்டிருந்த நான் என்னருகில் வந்து நின்ற நாராயணப் பிள்ளையையும் அவர் மனைவியையும் கவனிக்கவில்லை.
“நிர்மலா !” என்றழைத்தார் அவர்.
திடுக்குற்றுப் பார்த்த நான் ஆவேசம் வந்தவள் போல் எழுந்தேன். “உங்களை யார் வரச் சொன்னார்கள் இங்கு? போய்விடுங்கள் வெளியே! என் அறைக்குள் வராதீர்கள் ! என் வியாதி உங்களையும் பற்றிக் கொள்ளும் போய்விடுங்கள் வெளியே” என்று கோபத்தால் கூச்சலிட்டேன்.
“நிர்மலா ! எங்களை மன்னித்துவிடம்மா ! உன் அப்பாவின் குணமும் உன் குணமும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். உனக்கு வியாதி ஒன்றுமில்லை. என்றும் தெரியும். ஆனால் உன்னை விரும்பாமல் யார் பேச்சையோ கேட்டு தன் அறிவை அடைவு வைத்துவிட்டான் என் மகன். வற்புறுத்தி மணம் முடித்து வைத்தால் அவனிடம் நீ என்ன சுகத்தை காணப்போகிறாய் என்றுதான் நானும் வற்புறுத்தவில்லை !” என்று தழதழத்த குரலில் கூறினார் நாராயணப்பிள்ளை!
“மாமா……..!” என்று அலறிவிட்டேன் நான். பார்வதி அம்மாள் என்னை அணைத்துக் கொண்டாள். “மாமா !” எனக்கும் உங்கள் மகனுக்கும் திருமணம் முறைப்படி நடக்காது போனாலும் உங்கள் மகனையே கணவனாக வரித்துவிட்டேன். இனி நான் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.
அதிர்ச்சியடைந்தார் நாராயணப்பிள்ளை. “இல்லை நிர்மலா நீ வாழ வேண்டும். என் மகனை மறந்துவிட்டு வேறொருவரைப் பார்த்துக் கல்யாணம் செய்துகொள். உன் வாழ்க்கை இன்பமாக மலரட்டும்.
நாட்கள் சீறிப்பாய மாதங்கள் பயந்து ஓடின. இரண்டு நாட்கள் முன்வரையிலும் எவ்விதச் சலனமும் இன்றி ஓடியயது என் வாழ்க்கை. ஆனால் காமினி வந்து புயலை உண்ணடாக்கி விட்டாளே.
“நிர்மலா, சேதி தெரியுமா?” என்று கூறிக்கொடே வந்தாள் அவள்.
“என்ன காமினி?” என்று கேட்டேன்.
“உனக்கு டி.பி. என்று ஒதுக்கினானே ஒரு மடையன் அவனுக்கு டி.பி.யாமே!”
“என்ன? நாகராசருக்கு டி.பி.யா? யார் சொன்னார்கள்?” பரபரப்புடன் கேட்டேன்.
“அத்தான் பட்டணத்திலிருந்து வந்திருக்கிறார். அவர்தான் சொன்னார்” என்றாள் காமினி.
“ஐயோ, அவள் ஏன் இந்தச் செய்தியைச் சொன்னாள்” நெஞ்சின் சுமையால் மூச்சே நின்று விடும்போலிருந்தது.
“நிர்மலா, நிர்மலா ! என்று பரிவுடன் அழைத்துக் கொண்டு கதவைத் திறந்து வந்தாள் அம்மா. கட்டிலில் கிடந்து கொண்டே எண்ணச் சுழிகளில் ஆழ்த்தியிருந்த நான் சுய உணர்வு பெற்றேன். “அம்மா ! என் மீது உனக்கு இரக்கம் இல்லையாம்மா?”
“நிர்மலா! நீ உன் பிடிவாதத்தை விடமாட்டேன் என்கிறாயே !” என்று வருந்தினாள் அம்மா.
“ஒரேயொருமுறை அம்மா நான் நாராயணப் பிள்ளை வீட்டுக்குப் போய் வருகிறேன் அம்மா. டி.பி. நோயில் கிடக்கும் அவரிடமே கேட்டுப்பார்க்கிறேன் அம்மா. இரகசியமா நான் போய் வருகிறேன். அவர் விரும்பினால் சேர்ந்து வாழ்கிறேன். இல்லாது போனால் திரும்பி வருகிறேன்!” என்று கண்களில் நீர் மல்கக் கெஞ்சினேன்.
“அப்பாவிடம் சொல்லிப் பார்க்கிறேன்!” என்று இழுத்தாள் அம்மா. “வேண்டியதே இல்லை!” என்று கூறிக்கொண்டே அப்பா உள்ளே வந்தார். “நிர்மலா, நீ அம்மாவிடம் சொன்னதைக் கேட்டேன். உன் வாழ்க்கைக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன். உனக்கு அறிவு இருக்கிறது. சகிப்பத் தன்மை இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உறுதியிருக்கிறது. நீ பிழைத்துக் கொள்வாய் போய் வா, நிர்மலா!” என்று மனம் நிறையக் கூறினார் அப்பா!
நான் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்தேன். என் மனதுள் நம்பிக்கை வேரூன்றியது.
புறப்பட்டேன்.
ஜோவலன் வாஸ்
ஈழத்துப்பத்திரிகைகள் அனைத்திலும் சிறுகதைகள் எழுதிப் பேசப்பட்டவர். ஈழநாட்டில் பல தக்க சிறுகதைகள் எழுதியுள்ளார். ஆணிவேர் தக்கதொரு சிறுகதையாகும்.
– 30.08.1966, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.