ஆசை




கண்ணத்தாக் கிழவி குடிசை வாசலுக்கு வந்து பேரன் கண்ணன் சைக்கிளில்
வேலைக்குப் போவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
கண்ணனும் பாசத்துடன் அவளைப் பார்த்து புன்சிரிப்புடன், “ஆயா, போ உள்ளே
போய் பெசாமே குந்தி ரெஸ்ட் எடு. தினப்படி பாடற பாட்டை இன்னிக்கும்
பாடதே. எனக்கு இப்போவே நேரமாயிடுச்ச்சு.” என்று சொல்லிக் கொண்டே
புறப்பட்டான்.
கண்ணாத்தாக் கிழவிக்கு கிட்டத்தட்ட எண்பத்திரெண்டு வயதாகிறது. கண்ணனின்
பெற்றோர் இருவரும் பஸ் விபத்தில் இறந்து விடவே சிறு குழந்தையாய் இருந்த
கண்ணணை வளர்க்கும் பெரிய பொறுப்பு அவன் பாட்டி கண்ணாத்தா தலையில்
விழுந்தது.
ஏழ்மையில் வாடியபோதும் கண்ணாத்தா சந்தோஷத்தோடும் பொறுப்போடும் தன்
செல்லப்பேரனை வளர்த்து ஒரு இருபத்தைந்து வயது இளைஞனாக உருவாக்கி,
இதைத் தன் பெரிய சாதனையாக எல்லோ¡ரிடமும் சொல்லிசொல்லி பூரித்துப்
போவாள். அவள் அறிந்த உலகம் கண்ணன் தான். கண்ணனுக்கும் பாட்டி என்றால்
உயிர். அவளைத் தவிர வேறு சொந்தம் யாரும் அவனுக்கு இல்லை.
இந்தத் தள்ளாத வயதிலும் பாட்டி தனக்காக சிரமப்பட்டு உழைப்பதில் கண்ணனுக்கு
விருப்பம் கொஞ்சம் கூட இல்லைதான். ஆனால் அதே சமயத்தில் கல்யாணம்
செய்துகொள்வதிலும் அவனுக்கு தீவிர நாட்டம் இல்லை.
கிழவியும் தினம்தோறும் பேரனை ‘கண்ணால’ விஷயமாக நச்சரிக்காமல் விட மாட்டாள்.
“எலே பேராண்டி, நெதம்நெதம் இந்தக் கிழவி பேத்திக்கிட்டு இருக்கான்னு அலட்சியமா
இருக்காதடா. எனக்கும் ஒடம்பு தளந்து போச்சு. கண் பார்வை சுத்தமா மங்கிப்போச்சு.
காதும் சரியா கேக்கலை. எந்த நிமிஷமும் என்னை மேலே கூப்பிட்டுக்கலாம். நான்
சாகறத்துக்கு முன்னாடி உனக்குக் கண்ணாலம் ஆயி, உனக்கு ஒரு குழந்தையும் பிறந்து
என் கண்ணாலே பாத்துட்டா நிம்மதியா கண்ணை மூடிடுவேன். அதனாலே சீக்கிரமே
ஏதாவது செய்டா கண்ணா .” கீறல் விழுந்த ரிகார்ட் போல ஒரு முறை புலம்பித்
தீர்ப்பாள்.
ஆயாவின் இந்தப் பேச்சைக் கேட்கும்போதெல்லாம் கண்ணன் மனம் நெகிழ்ந்துவிடும்.
கிழவி அவனிடம் தனக்காக வேறெதுவும் வேண்டும் என்று கேட்டதே இல்லை. அவள்
ஒரே ஆசை இதுதான். தனக்காக உழைத்து ஓடாகிப்போன அவள் ஆசையை
நிறைவேற்றி வைக்க வேண்டியது அவனுடைய கடமை என்ற உணர்வு அவனை
ஆட்டிப் படைக்கும்.
பத்து நாட்கள் பறந்தோடின.
கண்ணாத்தாக் கிழவி காய்ச்சலால் படுத்த படுக்கையாகிவிட்டாள். கண்ணனுக்கு பயம்
வந்து விட்டது. இனி தாமதிப்பத்¢ல் பயனில்லை என்று ஒரு முடிவுக்கு வந்தான்.
அன்று மாலை கண்ணன் தனியாக வீட்டுக்கு வரவில்லை. இடுப்பில் சிறுகுழந்தையுடன்
இருபது வயதுப்பெண் ஒருத்தியும் அவன் கூட வந்தாள்.
“ஆயா, நீ ஆசைப்பட்டதை முடிச்சிட்டேன்! பாரு. இந்தப் பொண்ணோட புருஷன்
எங்க பாக்டரிலே தான் வேலை செஞ்சுகிட்டிருந்தான். ரெண்டு மாசத்துக்கு முந்தி
ஒரு விபத்துலே செத்துப் போயிட்டான். இப்போ இவளுக்கு சொந்த பந்தம்னு
சொல்லிக்க யாருமே இல்லை. சின்ன வயசு, அனாத வேற. குப்பத்திலே இருக்கிற
தடியனுங்க இவளை கன்ன பின்னான்னு தொந்திரவு பண்ணாங்க. அதனாலே நான்
அவளை கோவில்லே வெச்சு மாலை மாத்தி கண்ணாலம் கட்டிகிட்டு வந்துட்டேன்.
உனக்கு சந்தோஷம் தானே? என் பிள்ளையை பாக்கணும்னு ஆசைப்பட்டே இல்லையா,
இதோ பாரு.. இவ பிள்ளை இனிமே என் பிள்ளை. உன்னைப் பார்த்து எப்படி
சிரிக்கிறான் பாரு.” – முகத்தில் ஆனந்தம் பொங்கக் கூறிய பேரனை வாஞ்சையுடன்
பார்த்து பொக்கைவாய்ச் சிரிப்பை வீசினாள் கண்ணாத்தா.
அடுத்த நாள் காலையில் கண்ணாத்தாக்கிழவி படுக்கையை விட்டு எழுந்திருக்கவே
இல்லை.