ஆசையா.. கோபமா…?





(2012ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் – 13

பூர்ணிமா கூட… குணசீலனின் கோபமான கேள்வியில் அயர்ந்து போக.. லிஸி அயராமல் முகம் மலர்ந்தாள்…
“ஹைய்யோ… அப்படி மட்டும் நீங்க இடம் கொடுத்தீங்கன்னா எவ்வளவு நல்லாயிருக்கும்.. தெரியுமா சார்..?”
இப்படியொரு பதிலை குணசீலன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்கவில்லை யென்பதை அவனது முகமே காட்டிக் கொடுத்து விட்டது…
முகம் மாறிப் போனவனாக அவன் அவசரமாக பூர்ணிமாவைப் பார்த்தான்.. அவன் பயந்ததைப் போலவே அவள் முகம் கடுகடுப்பாக இருந்தது..
‘போச்சுடா.. இவ சும்மாவே என்னைச் சந்தேகப் பட்டுத் தொலைப்பா.. இந்தப் பெண் வேற எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றி வைக்கிறாளே..’
சமீப காலமாக பூர்ணிமாவுடன் ஜாடையாகக் கூடப் பேச முடியாமல் தவித்துப் போயிருந்தான் குணசீலன்…
ஊடே வைத்துப் பேச அரவிந்தனும்.. அதைத் தூண்டி விட சரளாவும் கூட இல்லாத காரணத்தினால் பூர்ணிமாவுடன்… வெறும் பார்வையை மட்டுமே அவனால் பகிர்ந்து கொள்ள முடிந்தது…
‘இந்த மகராசி எங்கேயிருந்து வந்தாளோ. வெறும் பார்வை பார்க்கக் கூட முடியாமல் அதுக்கும் வேட்டு வைச்சிட்டாளா.. ?’ அவன் நொந்தே போனான்.
இனிமேலும் நாகரிகம் பார்த்தால் வேலைக்கு ஆகாது என்ற முடிவுடன் அவன் லிஸியை ஒரு நேர் பார்வை பார்த்தான்…
“லுக் லிஸி… எனக்கு வேலை பார்க்கனும்.. உங்களுக்கு பேசனும்னு தோணிச்சுன்னா… வேலை வெட்டி இல்லாதவங்க கிட்டப் போய் பேசுங்க.. என்னிடம் ரம்பம் போடாதீங்க.. ஆல்ரெடி உங்க பேச்சால் எனக்கு தலைவலியே வந்துருச்சு… இப்பத்தான் வெளியே போய் விடுதலைக் காத்தை சுவாசித்து… ஒரு காபியைக் குடித்து… தலைவலியை விரட்டி விட்டு வருகிறேன்.. திரும்பவும் போன தலைவலியை வர வைத்துராதீங்க… ப்ளீஸ்… உங்களுக்கு கோடி புண்ணியமா போயிடும்… வாங்குகிற சம்பளத்துக்கு வேலையைப் பார்க்க விடுங்கம்மா…”
விட்டால் கையெடுத்துக் கும்பிட்டு விடுபவனைப் போல குணசீலன் பேசிய விதத்தில் பூர்ணிமாவின் முகத்திலிருந்த கடுமை குறைந்தது…
அதைப் பார்த்த பின்னால்தான் குணசீலனுக்கு போன நிம்மதி மீண்டு வந்தது…
அவன் பேசிய வார்த்தைகளுக்கு வேறு ஒருவராக இருந்தால் சங்கடப்பட்டுப் போயிருப்பார்கள்…
லிஸி.. எதற்கும் அசைந்து கொடுக்காத ரகமாக இருந்தாள்…
“ஹைய்யோ… செம ஜோக் அடிக்கறிங்க சார்.. உங்க கூடப் பேசிக்கிட்டிருந்தா நேரம் ஓடுறதே தெரியலை… பட்.. ஜோக்கா இருந்தாலும்.. நீங்க சரியாச் சொன்னீங்க சார்.. வாங்குகிற சம்பளத்துக்கு வேலை பார்க்கனும்.. இட் இஸ் ஸோ கிரேட்.. ஐ லைக் யு வெரிமச்…”
முகத்தில் மாறாத சிரிப்புடன் அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டதில்… குணசீலன் தற்காலிக நிம்மதியடைந்த தவனாக பூர்ணிமாவைப் பார்த்தான்…
‘இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறானே…’ அவள் முகத்தில் லேசான சிரிப்பிருந்தது…
‘இவளுக்கு என்நிலைமையைப் பார்த்தா சிரிப்பு வருதா…’ அவனுக்கும் சிரிப்பு வந்தது…
நீண்ட நாள்களுக்குப் பின்னர்.. அவர்கள் மனதால் நெருங்கி விட்டதைப் போல உணர்ந்தார்கள்.
வேலை முடிந்து எழுந்த குணசீலனுடன் சேர்ந்து நடந்த லிஸி…
“காலையில் ஆட்டோவில் வந்தேன் சார்..” என்றாள்..
“ம்ம்ம்…” குணசீலன் வேகமாக நடந்தான்…
“திரும்பிப் போகிறது எப்படின்னு யோசிச்சேன்… நல்ல வேளையாக நீங்க இருக்கிங்க…”
அவன் அந்த பேங்கில் இருப்பதற்கும் அவளது நல்ல வேளைக்கும் என்ன சம்பந்தம் என்று அவனுக்குச் சுத்தமாகப் புரியவில்லை…
அவனுடைய பஜாஜ் டிஸ்கவர் வண்டிக்குப் பக்கத்தில் தான் பூர்ணிமா அவளுடைய ஸ்கூட்டியை நிறுத்தியிருந்தாள்…
‘இன்னைக்கு சிரிச்ச முகமா இருக்கிறா…’ என்ற நினைவு அவனுக்கு….
அவள் வண்டியை எடுக்க வரும்போது.. தனிமையில் இரண்டு வார்த்தை அவளுடன் பேசிவிட வேண்டுமென்று அவன் எண்ணியிருந்தான்…
அதற்கு வசதியாக பூர்ணிமாவை முன்னால் நடக்க விட்டு.. பின்னால் அவன் விரையும் போது. வேகத்தடையைப் போல லிஸி.. அவனைத் தனது பேச்சால் வழிமறித்தால்…
“ஏங்க வேலையைத்தான் பார்க்க விடலைன்னா.. வீட்டுக்கும் என்னைப் போக விட மாட்டிங்களா…?”
“உங்க கூட வீட்டுக்கு வரத்தான் நானும் உங்க கூடவே வர்றேன்… சார்..”
“என்னது.”
அவள் பேசியது பூர்ணிமாவின் காதுகளில் விழுந்து விடக்கூடாதே என்ற கவலையுடன் கடவுளை மனதிற்குள் வேண்டித் துணைக்கழைத்தபடி… குணசீலன் முன்னே பார்த்தான்…
அவன் வேண்டியபோது.. கடவுள் தூங்கி விட்டார் போல.. லிஸியின் சத்தமான பேச்சு.. மிகச்சரியாக பூர்ணிமாவின் காதுகளில் விழுந்து வைத்தது…
குணசீலனைத் திரும்பிப் பார்த்த பூர்ணிமாவின் முகத்தில் எள்ளும்.. கொள்ளும் வெடித்தது…
‘அவதான் எப்படிக் கண்டித்தாலும்… தட்டி விட்டுப் போகிற ரகமாய் இருந்து தொலைக்கிறாளே… இன்னும் அவகூட இவனுக்கு பேச்சென்ன வேண்டிக்கிடக்கு..’
பாவம்.. குணசீலனுக்கு பூர்ணிமாவின் கடைக் கண் பார்வையைத் தவிர வேறு எதுவும் வேண்டியிருக்க வில்லை என்பதை பூர்ணிமா உணராமல் போனாள்.
“ஏம்மா… நீங்க தெளிவாத்தான் இருக்கீங்களா.” குணசீலன் லிஸியிடம் பல்லைக் கடிக்க…
‘அவ தெளிவாத்தான் இருக்கா…’ என்று பூர்ணிமா பல்லைக் கடித்தாள்…
“ஏன் சார்.. அப்படிக் கேட்கறிங்க..?” லிஸி அப்பாவியாய் இமை கொட்டினாள்…
‘இவள் ஒன்றுமே தெரியாத பேபின்னா.. இந்த உலகத்தில் எல்லோருமே விவரமில்லாத பச்சைக் குழந்தைகள் தான்…’ பூர்ணிமாவுக்கு தாங்கவில்லை..
“என்கூட ஏம்மா நீங்க வரனும்.. ?” குணசீலன் கேள்வியை வீச…
“உங்க கூட வீட்டுக்குத்தான் வரனும் சார்…. வேறெங்கே வரனும்.. ?” என்று.. என்னவோ குணசீலன் அவளை வீட்டைத்தவிர வேறு இடத்திற்கு அழைத்ததைப் போலவும்.. அதற்கு.. அவள் முடியாதென்று மறுப்பதைப் போலவும் அவள் சொல்லிவைத்தாள்…
குணசீலன்.. தலையைப் பிடித்துக் கொண்டு பூர்ணிமாவைப் பார்க்க..
‘இது உனக்குத் தேவைதானா…?’ என்று அவள் பார்வையால் எரித்தாள்…
“வாட் டு யு மீன் லிஸி.. ?” பொறுக்க முடியாமல் குணசீலன் அதட்டி வைக்க…
“எனக்கு உங்க வண்டியில் லிப்ட் கொடுங்க சார்.. நீங்களும்.. நானும் ஒரே வீட்டிற்குத்தானே போகிறோம்..” என்று ஒருவழியாக பதில் சொன்னாள் லிஸி…
“ஒரே வீட்டுக்கா..?” குணசீலனின் புருவங்கள் உயர்ந்தன….
“ஐ மீன்… ஒரே தெருவிலிருக்கிற வீடுகளுக்குன்னு சொல்ல வந்தேன் சார்..” லிஸி விளக்கம் சொன்னாள்…
அதற்கு மேலும் அங்கே தாமதிக்க முடியாதவளாக பூர்ணிமா அவளது ஸ்கூட்டியில் ஏறிப் பறந்துவிட்டாள்….
அவளது வேகத்திலிருந்தே.. அவளது கோபத்தின் பரிணாமம் தெரிய.. குணசீலன் வெகுண்டான்…
“என் வண்டியில் லேடிஸை உட்கார வைத்து ஓட்டியதில்லை லிஸி…”
“ஸோ.. நான்தான் உங்களுக்கு பர்ஸ்ட் லேடின்னு சொல்லுங்க…”
“ஊஹீம்.. தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்காதீங்க…”
“என்ன சார்.. இப்படிச் சொல்கிறிங்க… நான் உங்களையே நம்பி வந்தவள் சார்…”
“த்சு.. கடுப்பைக் கிளப்பாம ஆட்டோவைப் பிடிச்சு.. வீட்டுக்குப் போய் சேருங்க…”
பூர்ணிமாவுடன் பேச முடியாத கோபத்தை, வண்டியை உதைத்து கிளப்புவதில் காட்டிய குணசீலன்.. போய் விட்டான்…
‘சிக்க மாட்டேன்கிறானே…’
லிஸியின் முகத்தில் ஏமாற்றம் கவிந்தது…
“நீ வேலை பார்க்கப் போகும் பேங்கில்தான் அவனும் வேலை பார்க்கிறான்… அப்பா டெபுடி தாசில்தார்… அம்மா பெரிய இடத்தில் பிறந்தவங்க.. ஒரே தம்பிதான்.. அவனும் இரண்டு வருசத்தில் சம்பாதிக்க ஆரம்பிச்சுருவான்… திருநெல்வேலியில் இந்த ஏரியாவில்.. இவ்வளவு பெரிய வீடிருக்குன்னா சும்மாவா… இவங்களுக்கு இன்னும் இரண்டு வீடும் இருக்கு… அம்பாசமுத்திரம் பக்கத்திலே பூர்விக கிராமத்திலே வயல் தோட்டம்ன்னு பூர்விக சொத்தும் இருக்கு… பேங்க் ஆபிஸருக்கு பரிட்சை எழுதியிருக்-கானாம்.. எம்பிஏ படிக்க சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போனானாம்.. அந்தப் படிப்பையும் முடிச்சுட்டு.. போன வருசம்தான்.. திரும்பவும் இந்த ஊருக்கு திரும்பி வந்தானாம்…’
ஆள் பார்க்க கம்பீரமாக இருக்கிறானே என்ற நினைவிலே அவன் யாரென்று கேட்டு வைத்த லிஸிக்கு.. ஆனந்தன் இத்தனை விவரங்களையும் அள்ளிக் கொட்டினார்.. கேட்டுக் கொண்டிருந்தவளின் மனம் கணக்குப் போட்டது…
இப்படிப்பட்ட மனக் கணக்குகளைப் போடுவதில் அவள் வல்லவள்.. அவளுடைய பிண்ணனி அப்படிப்பட்டது.
வேலை செய்யப் போய்… வீட்டுக்காரியாக மாறிய தாய்க்கு மகளாகப் பிறந்தவள் அவள்..
ஊரறிய மனைவியென்று சொல்லாமல் போனாலும்… ஓரளவு வசதிகளை அளித்திருந்த அந்த மனிதரிடம்.. ஒட்டுண்ணியாக உறிஞ்சி… தன் வசதிகளை மேம்படுத்திக் கொண்ட தாயின் அத்தனை சாகஸங்களையும் கண் கூடாகக் கண்டிருந்தவள் அவள்…
அவரும் ஒருநாள் போய் சேர்ந்து விட்டார்.. அதற்குப் பின்னால் தான்.. வாழ்க்கையின் கஷ்டமான பகுதியை அவள் பார்க்க நேர்ந்தது…
சட்டப்படி உரிமையில்லாத மனைவியான லிஸியின் தாய்க்கு எந்தவிதப் பொருளாதாரப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை.. குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கொடுக்கக்கூட வசதியில்லாமல் அவள் மீண்டும் வேலைக்காரியாக மாற வேண்டியிருந்தது…
‘சொந்த வீடு..’
இது லிஸிக்கு பெரிய கனவு…
அவள் வேலை பார்த்து.. சேர்த்து வைத்து.. அவளைப் போலச் சம்பாதிக்கும் ஒருவனை மணம் செய்து.. அதன் பின்னால்.. இருவருமாக சேமித்து.. ஒரு வீட்டைக் கட்டும் நீண்டகாலத் திட்டத்திற்கு அவன் தயாராக இல்லை…
அவளுக்குத் தெரியும்.. அவளுடைய வாழ்க்கையின் பிண்ணனியைக் காரணம் காட்டி.. நிறைய ஆண்கள் அவளை மணமுடிக்கத் தயங்கி ஒதுங்கிப் போவார்கள் என்பது..
எனவேதான் அவள் வலை விரிக்க முடிவு செய்தாள்..
அவளுடைய தாயைப் போல.. மனைவியுடன் இருப்பவனுக்கு வலை விரிக்காமல்… திருமண வயதில்.. நல்ல வேலையுடனும்.. சொந்த வீட்டுடனும் இருக்கும் வசதியான மாப்பிள்ளைக்கு வலை விரிக்க வேண்டும் என்பது அவளது தீர்மானம்…
அவள்… தாயைப் போல வாழ்க்கையில் தோற்றவளாக இருக்கக்கூடாது… தாய் இழந்த அனைத்தையும் ஜெயிப்பவளாக இருக்கவேண்டும்…
அத்தியாயம் – 14
இப்படியாகத்தான் குணசீலன் லிஸியின் மனக்கணக்கில் மாட்டிக் கொண்டு விட்டான் என்றால்.. பாவம்.. தானுண்டு.. வேலையுண்டு.. மனதில் குணசீலன் தன்னைக் காதலிக்கிறானா.. இல்லையா.. என்ற போராட்டமுண்டு என்று இருந்த பூர்ணிமா.. வேறு ஒன்றில் மாட்டிக் கொண்டாள்…
சரளாவின் இடத்திற்கு லிஸி வந்து சேர்ந்த இரண்டு நாளில் அரவிந்தனின் இடத்திற்கு.. தர்மபுரியிலிருந்து மாறுதலாகி வந்து சேர்ந்தான் சுரேஷ்…
வந்து சேர்ந்தவன் யதேச்சையாக சுகுணாவிடம் அவனுடைய ஊரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது. அவனுடைய இனம் எதுவென்று சொல்லி விட்டான்…
“அப்படியா.. அதோ.. அந்தக் கார்னர் சீட்டில் இருக்கிறாளே பூர்ணிமா.. அவளும் உங்க ஆளுகதான்.” என்று சுகுணா சொல்லி விட்டாள்…
இன அபிமானம் கொண்ட சுரேஷ் பூர்ணிமாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.. அவளுடைய சொந்த ஊர் பெரியகுளம்.. அப்பா வசதியான வியாபாரி.. ஒரே அண்ணன் இன்ஜினியராக வேலை பார்க்கிறான்.. தங்கைக்கு திருமணம் முடித்து விட்டுத்தான் தனது திருமணம் என்று சொல்லிவிட்டான்.. என்பது போன்ற விவரங்கள் தெரிய வந்ததில் அவன் மகிழ்ந்தே போய்விட்டான்…
இப்படிப்பட்ட பெண்ணைத்தான் அவனும் தேடிக் கொண்டிருந்தான்.. அவனைச் சொல்லியும் குற்றமில்லை.. ஊரில்.. உலகத்தில் திருமணத்திற்காக பெண்ணையோ.. மாப்பிள்ளையையோ தேடுகிறவர்கள் என்ன மாதிரியான விவரங்களை சேகரித்து திருப்தி கொள்வார்களோ.. அதையேதான் அவனும் செய்தான்…
பூர்ணிமாவை அணுகி பேச முயன்றபோது.. அவள் இயல்பாக அவன் முகம் பார்த்துப் பேசினாள்…
சுரேஷிடம் முகம் பார்த்துப் பேசுவதில்தான் அவளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையே…
அவள் முகம் பார்த்துப் பேச ஆரம்பிக்கும் போதே.. கைகள் நடுங்கி… வார்த்தைகள் தந்தியடித்து.. வாயைத் திறந்தால் வார்த்தைகள் வராமல் காற்று மட்டுமே வந்து சேர்வதற்கு.. அவனென்ன குணசீலனா..? சுரேஷ் ஆயிற்றே….
அவளைப் பொறுத்தவரை அவன் அவளுடன் வேலை பார்ப்பவன்.. அதனால்.. அரவிந்தனிடம் பேசுவதைப் போல… இயல்பாக அவன் முகம் பார்த்துப் பேச அவளால் முடிந்தது…
அதைப் புரிந்து கொள்ளாமல் குணசீலன் முகம் கருத்தான்…
அரவிந்தன் குணசீலனின் நண்பன்.. பூர்ணிமாவின் தோழியான சரளாவின் காதலன்…
அவனுடன் பூர்ணிமா பேசுவதற்கும்.. சுரேஷிடம் பேசுவதற்கும் வித்தியாசம் இல்லையா என்று அவன் நினைத்தான்…
அடிக்கடி குணசீலனிடம் பேசும் சாக்கில் வருகிற சுரேஷின் பார்வை… குணசீலனின் அருகே அமர்ந்து ரம்பம் போட்டுக் கொண்டிருக்கும் லிஸியின்மீது படியாமல்.. பூர்ணிமாவைத் தேடிப் போய்.. அவள் மீது படிவதை அவன் கண்டு கொண்டிருந்தான்…
‘இவன் எதுக்கு.. அவளை நோட்டம் போடறான்..?’
அவனுக்கு ஒன்று தெரியாமல் போனது.. அது.. அவனையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் லிஸியின் கவனத்தில் குணசீலனின் முகமாறுதல் பட்டுவிடும் என்பது…
‘இவன் எதுக்காக அவளை யார் நோட்டம் விட்டாலும் ஜெர்க் ஆகிறான்…’
இயல்பான பார்வைக்கும்… மற்ற பார்வைகளுக்கும் இருக்கும் வித்தியாத்தைப் பற்றி.. லிஸிக்கா தெரியாது..?
பூர்ணிமாவைப் பார்க்கும் குணசீலனின் பார்வையில் தெரியும் சொந்தம் அவளைக் கலங்கடித்தது…
அவளுக்கு அப்படியொன்றும் குணசீலனின் மேல் காவியக்காதல் இல்லைதான்…
ஏன்… வெறும் சாதாரணக் காதல் கூட இல்லையே.. அவளுடையது காதலில்லை… வெறும் மனக்கணக்கு மட்டும்தான்….
இருப்பவர்க்கு ஒரு வீடு.. இல்லாதவர்க்கு பலவீடு.. என்ற மனக்கணக்கும் அவளிடம் உண்டு…
குணசீலன் கிடைக்காவிட்டால்… வேறு ஏதாவது ஒரு குணக்குன்றை அவள் தேடிப் பிடித்துக் கொள்வாள்.. அதற்கான சாமர்த்தியம் அவளிடம் இருந்தது…
என்ன ஒன்று.. அதற்காக சிலகாலம் காத்திருக்க வேண்டும்… அப்படியே கிடைத்தாலும்.. குணசீலனைப் போல.. எல்ல நிறைகளும் உள்ள ஒருவன் கிடைக்க மாட்டான்…
அதனால்.. குணசீலனை இழப்பதற்கு லிஸிக்கு துளிக்கூட விருப்பமில்லாமல் இருந்தது… அதே சமயத்தில் அணுக முடியாத குணசீலனை அணுகவும் அவளால் முடியவில்லை…
லிஸிக்கு அவளின் கவர்ச்சியின் மேல் அபார் நம்பிக்கையுண்டு.. ஒரு சிரிப்பிலேயே.. காரியத்தை சாதித்து விடும் சாகஸ வித்தைகளை கற்றவள் அவள். பலமுறை அவற்றைப் பலரிடம் பிரயோகித்து வெற்றியும் கண்டிருக்கிறாள்…
குணசீலனை கைப்பற்ற.. சிரிப்பு முதற் கொண்டு அவளிடமிருக்கிற அனைத்து சாகஸ அஸ்திரங்களையும் பிரயோகித்து விட்டாள் அவள்…
வெற்றிதான் கிடைக்கவில்லை… எந்த முயற்சியை அவள் மேற்கொண்டாலும்.. எளிதாக அதை முறியடித்து ஒதுங்கிக் கொண்டான் குணசீலன்…
தங்குவதற்கு இடம் கேட்பது போல… அவன் வீட்டிற்கு எதிர் வீட்டில்தான் அவள் இருக்கிறாள் என்பதை தெரியப் படுத்தி விட்டாள்… அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை… ஒரே தெருதானே என்ற சொந்தத்தைச் சொல்லி… அவனுடைய வண்டியில் தொற்றிக்கொள்ள முயன்றாள்.. ஒருநாள்தானே என்று அவன் கூப்பிட்டுக் கொண்டு போனால்.. அதையே தொடர்கதையாக்கி விட வேண்டும் என்பது அவளது திட்டமாக இருந்தது…
அதற்கும் அவன் முகத்தில் அடித்ததைப் போல ஒரு பதிலைச் சொல்லி அவளை புறக்கணித்து விட்டான்…
அதற்கெல்லாம் அயர்ந்து.. ஒதுங்கிக் கொண்டால்… அவள் லிஸி ஆகிவிட மாட்டாளே…
அவள் சற்றும் மனம் தளராமல் தன் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்…
“வணக்கம் ஆண்ட்டி.. நான் எதிர் வீட்டில் குடியிருக்கிற ஆனந்தன் மாமா வீட்டில் பேயிங் கெஸ்டா இருக்கேன்…”
பாந்தமாக சேலையுடுத்தி.. அதைக்கண்ணியமாக தோளைச் சுற்றிப் போர்த்தியிருக்கும்படி மடிப்பு வைத்து பின் பண்ணி.. தலைமுடியை ஒழுங்காகப் பின்னலிட்டு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டுக்கு மேல் விபூதிக் கீற்றிட்டு.. கை குவித்தபடி காந்திமதியின் முன்னால் போய் பிரசன்னமாகி விட்டாள்..
முன்னறையில் சோபாவில் சரிந்து அமர்ந்து… கால்களை டீப்பாயின் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு.. டிவியில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்திருந்த சத்தியசீலன் தன் சுதந்திரம் பாதிக்கப்பட்டதில் கடுப்புக்கு ஆளானான்..
‘இவ எதிர்வீட்டுக்கு புதுசா வந்திருக்கிற லேடியாச்சே.. தினமும் ஒரு மார்க்கமா டிரெஸ் பண்ணிக்கிட்டு… அந்த ஆனந்தனின் பின்னாலே உட்கார்ந்துக்கிட்டுப் போவா.. இன்னைக்கு என்ன திடிர்ன்னு இழுத்துப் போர்த்திக்கிட்டு இங்கே ஆஜராகியிருக்கிறா..?’
சத்தியசீலனுக்கு அவளை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விட்டது…
அவன் லிஸியை.. திருநெல்வேலியின் பல இடங்களில் நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருந்த போதும் பார்த்திருக்கிறான்…
ஒவ்வொரு முறையும் அவள்.. சுற்றியிருக்கும் ஆண்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விதத்தில் பேசிச் சிரித்திருக்கிறாள்…
அவளது அந்த இயல்பான தோற்றத்திலும்.. நடவடிக்கைகளிலும் சத்தியசீலன் தவறு காணவில்லை…
அது அவளுடைய உரிமை.. சுதந்திரம்.. அதில் தலையிடவோ கருத்துச் சொல்லவோ மற்றவர்களுக்கு உரிமையில்லை என்பது அவனின் எண்ணம்…
அதே சமயத்தில்.. அவளது அந்த இயல்பை மறைத்து.. வேறு மாதிரியான தோற்றத்தில்… இயல்பில்லாத பொய்யான நடையுடை பாவனைகளுடன் அவள் காந்திமதியைக் கவர முயன்றதை அவன் துளிக்கூட விரும்பவில்லை…
அது சரியில்லை என்பது அவனின் எண்ணம்…
“அப்படியாம்மா… உட்காரு..”
எதிலும் குற்றம் காணாத அன்பான காந்திமதி.. பரிவுடன் லிஸியை அமரச் சொன்னபோது.. சத்தியசீலன் தாயை முறைத்தான்..
அதை காந்திமதி கண்டு கொள்ளவில்லை… லிஸி கண்டுகொண்டாள்… அதன் விளைவாக.. சத்தியசீலனை வசீகரிக்கிறேன் பேர்வழியென்று ஒரு சாகஸச் சிரிப்பை உதிர்த்தும் வைத்தாள்…
அவள் அந்தச் சிரிப்பை சிரித்து வைக்காமல் இருந்திருத்தால் கூட சத்தியசீலன் அவளைக் கண்டு கொள்ளாமல் எழுந்து போய் விட்டிருப்பான்..
அவள் சிரித்து வைக்கவும் யோசனையுடன் அங்கேயே அமர்ந்து விட்டான்..
‘இந்த அம்மாவுக்கு சூதுவாது தெரிந்து தொலைக்காது.. இவ எந்த நோக்கத்தோட வீட்டுக்கு வந்து தொலைத்திருக்கான்னே தெரியலையே… இவகூட அம்மாவை தனியா விட்டுட்டுப் போகக் கூடாது..’
அவன் அங்கேயே அமர்ந்து விட.. லிஸி அதைத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாள்..
‘இவன் என்னைப் பார்க்க நினைக்கிறானா..?’ அவள் மனதில் வெற்றிப் புன்னகை உதித்தது… அவள் காந்திமதியுடன் பேசியபடி சத்தியசீலனை ஊடும்.. பாடும் பார்த்துக் கொண்டிருந்தாள்…
அந்தப்பார்வை அவனுக்கு உவப்பானதாக இருக்கவில்லை…
‘இவ எதுக்காக என்னை இப்படி பார்த்து வைக்கிறா..’ சத்தியசீலன் எரிச்சல் பட்டான்…
“நான் உங்க மகனோடதான் வேலை பார்க்கிறேன் ஆண்ட்டி..”
லிஸி வெகு பவ்யமாக காந்திமதியின் முகத்தைப் பார்த்துக் கூறியதும்.. அவள்..
“அடடே.. அப்படியா..?” என்று ஆச்சரியப்பட்டாள்..
“ஆமாம் ஆண்ட்டி.. இதை உங்க மகன் உங்களிடம் சொல்லவில்லையா..?” லிஸி உரிமையுடன் கேட்டாள்..
‘இதில் சொல்ல என்ன இருக்கு..?’ சத்தியசீலன் பல்லைக் கடித்தான்…
“அவன் பெண்களைப் பற்றியெல்லாம் வீட்டில் வந்து பேச மாட்டான்ம்மா..” காந்திமதி பெருமையுடன் சொன்னாள்…
சத்தியசீலனின் முகத்தில் கேலிப் புன்னகை உதித்தது.. அதைப் பார்த்த லிஸிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது…
அவன் அவளை கேலிப் பார்வையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் என்ற விவரம் அப்போதுதான் அவளது புத்திக்கு உறைத்தது…
அண்ணன்காரனிடம் தோற்றுவிட்டதைப் போல… தம்பிகாரனிடமும் தான் தோற்றுவிட்டதை உணர்ந்து கொண்டாள் லிஸி..
‘அவனைப் போலவே இவனும் எதுக்கும் மசியாத ரகமாய் இருக்கிறானே…’ அவளுக்கு ஆற்றாமையாக இருந்தது…
“காபி சாப்பிடும்மா..” காந்திமதி உபசரனையாகக் கூறினாள்..
“எதுக்கு ஆண்ட்டி வீணாய் சிரமப்பட்டுக்கறிங்க..? நம்ம வீட்டில் நான் எப்ப வேனும்னாலும் காபி சாப்பிட்டுக்குவேன் நமக்குள்ளே எதுக்கு ஃபார்மாலிட்டிஸ் எல்லாம்.. ? நானென்ன மூன்றாம் மனுஷியா..?” காந்திமதியை உட்கார வைத்துக் கொண்டாள் லிஸி…
அடுத்துக் கொஞ்ச நேரம் அவள் தேன் தடவிய போலி வார்த்தைகளை அள்ளிவிட.. சத்தியசீலன் பொறுத்துக் கொள்ள முடியாதவனாக ஆனான்…
“அம்மா… நைட் டிபன் ரெடி பண்ணலியா.. ? எனக்கு பசிக்குது..”
வேறு வழியின்றி காந்திமதி எழுந்து கொள்ள.. லிஸியும் விடைபெற வேண்டியதாகி விட்டது…
சத்தியசீலனின் உதாசினப் பார்வையை உதாசினம் செய்தவளாய் அவள் அவனைப் பார்த்து ஒரு சாகஸ சிரிப்பை உதிர்த்து விட்டுத்தான் சென்றாள்…
“ரொம்ப நல்ல மாதிரியான பொண்ணுடா..” காந்திமதி சிலாகித்தாள்…
‘இவளா நல்ல மாதிரியான பொண்ணு…?’ சத்தியசீலன் தாயை முறைத்தான்…
அத்தியாயம் – 15
அன்றைய இரவு உணவு நேரத்தின் போது.. காந்திமதி எதிர்வீட்டுக்கு புதிதாக வந்திருக்கும் பெண்ணைப் பற்றியே உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தாள்…
“அடக்க ஒடுக்கமான பொண்ணுடா… இவ உன் பேங்கில் வேலை செய்கிறான்னு என் நீ முதலிலேயே.. சொல்லலை…?”
அவள் குணசீலனைப் பார்த்து கேட்டு வைக்க.. அவன் எந்த அடக்க ஒடுக்கமான பெண்ணைப் பற்றித் தாய் கேட்கிறாள் என்று புரியாமல் குழம்பிப் போனான்.. மாடிக்குப் போனபோது… தனிமையில் சத்தியசீலன் அவனிடம் அகப்பட்டான்..
“யாரைடா சொல்கிறாங்க…?” தம்பியை அவன் கேட்டுவைக்க…
“அதுதாண்ணா… அந்த ஆனந்தனின் வீட்டுக்கு வந்திருக்கே அந்தப் பெண்ணைச் சொல்கிறாங்க…” அவன் எடுத்துக் கொடுத்தான்…
“அதுவா அடக்க ஒடுக்கமான பொண்ணு…?” குணசீலன் ஆச்சரியத்துடன் தம்பியை பார்த்தான்…
“அம்மாவைப் பற்றி உனக்குத் தெரியாதா..? அது இழுத்துப் போர்த்திக்கிட்டு வந்து போஸ் கொடுத்துச்சு… உடனே அடக்க ஒடுக்கமான பொண்ணுன்னு செர்டிவிகேட் கொடுத்திட்டாங்க..”
“கஷ்டகாலம்டா… அது ஆபிஸில் என் உயிரைப் போட்டு வாங்குது…”
“எதுக்காம்…?”
“தெரியலையே…”
“பார்த்துடா அண்ணா.. எனக்கென்னவோ அவ மனசில ஏதோ ஒரு திட்டத்தோட இருக்கிறதைப் போலத் தோணுது…
”இருக்குமாடா சத்யா..?”
“ம்ம்ம்… இல்லாமலா உன்னைப் ஃபாலோ பண்றா… ஆனாலும் அண்ணா… உனக்காக ஒருத்தி வீடு வரைக்கும் வருவாங்கிறதை இன்னைக்குத்தான் நான் பார்க்கிறேன்..”
அதற்குப் பின்னால்… குணசீலன் லிஸியிடமிருந்து அதிகமாக ஒதுங்கிப் போனான்… வழக்கமாக அவளைக் கண்டால் ஆறடிக்கு தள்ளிப் போகிறவன்.. இப்போது அறுபது அடிக்குத் தள்ளிப் போனான்…
அநாவசியமாக என்றில்லாமல்… அவசியமாகக்கூட அவளிடம் பேசுவதை அவன் தவிர்த்தான்..
அவனை முகாமிட முடியாமல் லிஸி காந்திமதியை முகாமிட்டாள்…
“கோவிலுக்குப் போகலாமா ஆண்ட்டி…”
“நான் காய் நறுக்கிக் கொடுக்கவா ஆண்ட்டி…”
“தலைவலியா ஆண்ட்டி.. நான் காபி போட்டுக் கொடுக்கவா?”
மெல்ல.. மெல்ல.. காந்திமதியின் மனதில் அவள் இடம் பிடித்து விடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருப்பதை.. சத்தியசீலன்.. குணசீலனுக்கு அறிவுறுத்தினான்..
“டேய் அண்ணா.. எனக்கு அண்ணியாக வரப் போகிறவர்களைப் பற்றி எனக்குன்னு சில கற்பனைகளும்.. எதிர்பார்ப்புகளும் இருக்கு..”
“ஏண்டா.. எனக்குப் பெண்டாட்டியா வரப் போகிறவளைப் பற்றி எனக்குத்தான் நீ சொன்ன இரண்டும் இருக்கனும்.. உனக் கேண்டா அதெல்லாம் இருக்கு..?”
“நல்ல கதையாய் இருக்கே… உனக்குப் பெண்டாட்டின்னா.. எனக்கு அவங்க அண்ணியாச்சே.”
“அதுக்கென்னடா இப்ப..?”
“எதிர் வீட்டு சில்க் ஸ்மிதாவெல்லாம் எனக்கு அண்ணியாகக் கூடாது…”
“அடேய் பாவி…! நான் அப்படிச் சொன்னேனாடா.?” “அம்மா அப்படிச் சொல்லிருவாங்களோன்னு பயமாய் இருக்குடா…”
“ஏண்டா இப்படிச் சொல்ற…?”
”உனக்கே தெரியும்.. இந்த வீட்டில இருக்கிற நாலு ஜீவன்களிலேயே கடைஞ்செடுத்த வினயகாரர் நம்மைப் பெற்ற விசுவநாதன்…”
“அப்பான்னு சொல்லேண்டா…”
“ஓகே.. நம்ம அப்பப்பா..! போதுமா?”
“போதும்..”
“கொஞ்சம் கூட வினய மில்லாத… ஊரில இருக்கிறவங்க எல்லோரும் உத்தம புத்திரன்களும்… உத்தம புத்திரிகளும் தான்னு நினைக்கிற வெகுளி நம்ம அம்மா…”
“அட… ஆமாம்டா சத்தியா…”
“எப்படித்தான்.. இதுக ரெண்டும் ஜோடி சேர்ந்துச்சுகளோ…”
“டேய் குரங்கே… அவங்க நம்ம அப்பாவும்.. அம்மாவும்டா…”
“அப்பனும்.. ஆத்தாளும்தான்.. யாரு இல்லைன்னு சொன்னது..? அந்த அருமை அம்மாவை.. எதிர்வீட்டு ஜெகன் மோகினி வசியம் பண்ணிட்டாளோன்னு எனக்குள்ளே ஒரு சம்சயம்…”
சத்தியசீலன் புத்திசாலி… உறுதியாக எதையும் உணராமல் அவன் அதைச் சொல்ல மாட்டான்…
குணசீலனின் நெற்றியில் சிந்தனை ரேகைகள் படிந்தன….
“அப்படியெதுவும்.. காலக் கொடுமை இந்த வீட்டில் நடந்து போச்சுன்னு வைச்சுக்க.. நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்.. ஹாஸ்டலுக்கு ஓடிடுவேன்.. முதலிலேயே சொல்லிட்டேன்.. இதை உன் மனசில் வைச்சுக்க..”
“அடச்சீ… வாயைக் கழுவு…”
“அதெல்லாம் மவுத் வாஷாலேயே கொப்பளித் – துட்டுத்தான் வந்திருக்கேன்.. அந்த சொப்பன சுந்தரி என்னையே ஒரு மார்க்கமா பார்த்து சிரிச்சு வைக்கிறாடா அண்ணா…”
“உன்னை மட்டுமில்லை.. நிறையப் பேரை அப்படித்தான் அந்த மகராசி பார்த்து வைக்கிறா…”
“அவ போய் எனக்கு அண்ணியாய் வருவதா.?”
“அதுக்குப் பதில் நான் ஊரைவிட்டே ஓடி விடுவேன்டா நீ கவலையே படாதே…”
குணசீலன் உத்தரவாதம் கொடுத்த பின்னால்தான்.. சத்தியசீலன் அந்தப் பேச்சையே விட்டான்….]
‘இதை இப்படியே விட்டு விடக் கூடாது…’
சுரேஷ் வேறு… பூர்ணிமாவைச் சுற்றிச்சுற்றி வார ஆரம்பிக்க… குணசீலன்.. காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் பார்வையிட ஆரம்பிப்பதா என்று கொதித்துப் போனான்…
பூர்ணிமாவை ஜாடையாகப் பார்க்காமல்… நேரடியாக அவன் முறைக்க ஆரம்பிக்க.. அவள் தடுமாறிப் போனாள்…
‘எதுக்குக் கோபப் படுகிறான்..?’
அவளுக்குப் புரியாதது.. லிஸிக்கு புரிந்து விட்டது..
‘இவன்… இவளைக் காதலிக்கிறானா..?’
அதை உறுதி படுத்துவதைப் போல.. அன்று சுரேஷ் பூர்ணிமாவுடன் பேச வந்த போது.. இடையில் குறுக்கிட்டு குணசீலன் பேசினான்…
“பூர்ணிமா.. எஸ்.பி. டோட்டல் என்ன..?”
அதுவரை அவளது பெயரைச் சொல்லி நேரடியாய் அவளை அழைத்துப் பேசியிராதவன்.. முதன் முதலாக அவளைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசியதும்.. பூர்ணிமா ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனாள்…
“என்.. என்ன.. கேட்டிங்க..?”
“எஸ்.பி..டோட்டல் கேட்டேன்.. அதுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்.. ? ஊம்.. ? மெதுவா.. நிதானமா பதில் சொல்லுங்க…”
சுரேஷை மறந்து போனவளாக பூர்ணிமா குணசீலனின் பக்கம் திரும்பி விட.. சுரேஷ் திரும்பிப் போய்விட்டான்… குணசீலனின் முகத்தில் திருப்தி வந்தது.. அவனுடைய வார்த்தையைக் கேட்டதும்.. அவனுடைய காதலி.. சுரேஷைப் பொருட் படுத்தாமல் அவன் கேட்டதைச் செய்து விட்டாள் என்பதில் அவனது ஆண்மை கர்வம் கொண்டது…
பூர்ணிமா சந்தோசப் பூங்காற்றில் திளைத்துக் கொண்டிருந்தாள்..
‘அவன் என்னிடம் பேசிவிட்டான்..’
அடிக்கடி.. அவளது பார்வை.. ஆவலுடன் அவன் பக்கம் பாய ஆரம்பித்தது.. அதை மறக்காமல் அவன் பார்வை எதிர்கொண்டது…
இனமகள் படபடக்க அவனைப் பார்ப்பதும்.. அவனது பார்வையை உணர்ந்ததும் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க.. இமைகளைத் தாழ்த்திக் கொள்வதுமாக இருந்தாள் பூர்ணிமா…
கால்கள் தரையில் படாமல்.. வானத்தில் மிதப்பதைப் போல அவளுக்கு இருந்தது…
அவளிடமிருந்து வெளிப்பட்ட சந்தோச ஊற்றை அவனும் ரசித்துக் கொண்டுதான் இருந்தான்..
“இந்த நாள்.. இனிய நாள்…”
அவர்கள் இருவருமே.. ஒன்று போல இதை நினைத்தார்கள்…
அன்று மாலையில்.. அவர்களது பேங்கின்.. புது வருடக் கொண்டாட்ட விழா நடந்தது.. விருந்தின் ஆரம்பத்தில் பூர்ணிமாவைப் பாடச் சொல்லி அழைத்தார்கள்..
அது வழக்கமாக நிகழும் நிகழ்வுதான்.. இனிமையான குரல்வளம் கொண்ட பூர்ணிமா முறையான சங்கீதப் பயிற்சியைப் பெற்றவள்.. அதனால்.. அலுவலக விழாக்களில் தயக்கமில்லாமல் பாடுவாள்…
அன்றைய மகிழ்வில்.. அவள் மனம் சந்தோச ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.. அதுவரை அவனை முறைத்துக் கொண்டிருந்த காதலன் ஒருவார்த்தை வாயைத் திறந்து அவளிடம் பேசிவிட்டான்…. அவள் அந்தத் தாளாமுடியாத மன சந்தோசத்தில் ஆழ்ந்து போயிருந்தாள்…
அவள் மேல் அவனுக்கு இருப்பது என்ன.?
ஆசையா..? இல்லை.. கோபமா..?’ இன்னும் அவளால் அதை அனுமானிக்க முடியவில்லைதான்.. ஆனாலும்.. கோபமுகத்தை மட்டுமே அதுவரை காட்டி வந்தவன்.. அன்பாய் ஒரு வார்த்தை பேசியதில்… அவள் இறக்கையில்லாமல் வானில் பறந்து கொண்டிருந்தாள்.
“உன் பழக்கத்தில் ஏனிந்த துடிப்பு..?
என் பருவத்தில் ஏனிந்த தவிப்பு…?
ஆசையா..? கோபமா..?
ஆசையா.. கோபமா..?
ஆ..சை… யா..? கோ.. ப.. மா..?”
அதுவரை அவள் இப்படிப்பட்ட உல்லாசமான காதல் பாடலைப் பாடியதேயில்லை.. குணசீலனைப் பார்த்தபடி பாடிய அவளின் பாடல் அவனை கொக்கி போட்டு இழுக்க.. அவன் புருவங்கள் ஏறி இறங்கின…
அவன் என்ன செய்யப் போகிறான் என்று அவள் அனுமானிக்கும் முன்னரே.. அவன் அவளருகில் இணைந்து நின்று மைக்கைப் பிடித்து விட்டான்…
“உன் கண்களில் ஏனிந்த சிரிப்பு…?
உன் கன்னத்தில் ஏனிந்த கொதிப்பு..?
ஆசையா..? கோபமா..?
ஆசையா..? கோபமா..?
ஆ..சை…யா..? கோ.. ப.. மா…?”
அவளுடைய பாடலுடன் இணைந்து அவன் பாட ஆரம்பித்ததும்… கேட்டுக் கொண்டிருந்தவர்களின் மத்தியில் உற்சாக வெள்ளம் கரை புரண்டோடியது…
“விழியழகில் சிறு தோரணம்…
விளையாடும் பந்தாட்டம் என்ன..?
காதல் இல்லாத காட்டு மலர்கள்
காட்டும் கண்ஜாடை என்ன..?
பூந்தோட்டம் ஆடுவதென்ன..?
அந்தக் கோலத்தை மூடுவதென்ன..?
ஆசையா..? கோபமா…?”
குணசீலன் லேசாக கால்களை ஆட்டிய வண்ணம் பாடியது பூர்ணிமாவுக்கு பிடித்திருந்தது.. பதிலுக்கு அவளும் உதடுகளில் இளநகையோடு அவனைப் பார்த்து புருவங்களை உயர்த்திய வண்ணம் பாடினாள்…
“என் இதழின் இளம் மேனியில்….
இந்தக் கோலம் நீ காணலாமா…?
கேட்பாரில்லாமல் தோட்டம் கண்டு..
ஆட்டம் நீ போடலாமா…?
மலர் சூடும் முன்னால் என்ன ராகம்..?
மனம் ஆகும் முன்னால் என்ன தாளம்..?
ஆசையா..? கோபமா..?”
அன்றைய மாலைப் பொழுது… பொன் மாலைப் பொழுதாக அவர்கள் இருவருக்கும் மாறிப் போனது…
விருந்து முடிந்து.. கிளம்பிய போது.. அவர்கள் இருவரின் மனமும் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது..
“பூர்ணிமா…”
ஸ்கூட்டியை எடுக்கப் போனவளின் பின்புறமிருந்து குணசீலனின் குரல் ஒலிக்க.. சட்டென்று திரும்பியவன்.. நெருக்கமா நின்றிருந்தவனின் மேல் மோதித் தடுமாறி விலகினாள்…
“த்சு.. எதுக்கு இந்தப் பதட்டம்..?”
உரிமையுடன் அதட்டியவனின் கை… அவளது முடிகோதி விலகியது..
– தொடரும்…
– ஆசையா.. கோபமா… (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2012, லட்சுமி பாலாஜி பதிப்பகம், திண்டுக்கல்.