ஆங் பாவ்
கதையாசிரியர்: சிங்கை மா.இளங்கண்ணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2026
பார்வையிட்டோர்: 87
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செங்கியான் மனக்கண் முன் மார்க்கெட் ஸ்ட்ரீட்டில் உள்ள ஆனா ழானா, பேனா ரீனா, மூனா, ஆனா ழானா உருவம் தெரிந்தது.
கன்னங்களில் புன்னகை மின்னியது.
உதடுகள் நெளிந்தன.
‘ஆனா ழானா, பேனா, ரீனா, மூனா, ஆனா ழானா’ எனும் எழுத்துக்களைச் சொல்லிப் பார்த்தார்! நா குழறியது. இறுதியில் அழகப்பன் என்ற பெயரை மட்டும் சொன்னார்.
‘அழகப்பனைப் போய்ப் பார்க்க வேண்டும்!’
அவர் வேறு யாரிடமும் சொல்லவில்லை. கண்ணாடியில் தெரிந்த தம் உருவத்தைப் பார்த்துத்தான் புன்னகை சிந்தச் சொன்னார்.
செங் கியான் கையிலிருந்து சீப்பு தன் பணியை நிறுத்தவில்லை.
அவர் உள்ளத்தைப் போல் இருந்த வெள்ளிக் கம்பித் தலைமுடியை வாரிக் கொண்டிருந்தது. ‘பிரைல் கிரீம்’ போட்டு படிய நீவிக் கொண்டிருந்தார்.
அவர் முகத்தில் விழுந்த சுருக்கங்கள் சற்று ஏறத்தாழ அறுபத்தைந்து அகவை இருக்கும் என்று காட்டின.
மஞ்சள் நிறக் கன்னங்களில் குங்குமப்பூச் சிவப்பில் ஓடிய குருதி நாளக் கொடிகள் செல்வச் செழிப்பைச் செப்பின.
அந்தச் செழிப்பு அழகப்பனாரிடம் தொடர்பு ஏற்பட்ட பின் வந்தது. அவருக்கும், அழகப்பனாருக்கும் முப்பதாண்டுப் பழக்கம் இருக்கும்.
உடுத்திக் கொண்டதும் மேல் மாடியில் இருந்து இறங்கினார்.
கீழே, வாசலுக்கு வந்ததும் தோட்டத்தை நோட்டமிட்டார்!
பச்சைக் கம்பளம் விரித்துக்கிடந்த தோட்டத்து மூலையைப் பார்த்தார்.
காய்களையும், முதிர்ந்த கனிகளையும் தாங்க முடியாமல் வளைந்திருந்த மாதுளங்கிளைக்கு நண்டு ஒடுகள் வேறு பார மாக இருந்தன. மாதுளை செழித்து வளர்ந்து நிறையக் காய்கள் காய்த்தால் குடும்பம் செல்வச் சிறப்போடு திகழும் என்பது அவர் நம்பிக்கை.
அந்தச் செழிப்பைச் சிலர் கண் பட்டுக் காய்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே நண்டு ஓடுகள் கட்டப்பட்டிருந்தன.
வீட்டுக்கு வெளியே பக்கவாட்டில் அடுக்கப்பட்டிருந்த சலவைக் கற்களைப் பார்த்துக் கொண்டு நின்ற கெம்கி வாச லில் வந்து நின்ற செங் கியானைப் பார்த்து விட்டாள்.
அவர் மனைவியின் பெயர் தாம் கெம் கி.
அவளுக்கும் அகவை ஐம்பதைத் தாண்டிவிட்டிருந்தது.
முடியைப் படிய வாரிக் கொட்டாங் கச்சியைப்போல் சிறிய கொண்டை போட்டிருந்தாள்.
அதில் நாலைந்து பற்களே உள்ள மாட்டுக் கொம்பு சீப்பு செருகப்பட்டிருந்தது. இடக்கை மணிக்கட்டில் பச்சைக்கல் காப்பும், வலக்கையில் சீனத் தங்கத்தில் செய்த காப்பும் அணிந் திருந்தாள்.
பெண் குழந்தை பிறந்ததுமே பாதங்களை இறுகக் கட்டி விடும் பழங்காலப் பழக்கத்தால் அவள் பாதங்கள் மூன்று நான்கு வயதுள்ள குழந்தைகளின் பாதங்களைப் போல் சிறுத்து விட்டிருந்தன. சூம்பிப் போய் இருந்த பாதங்களை மெள்ள எடுத்துவைத்து நடந்தாள்.
செங் கியானை நோக்கித் தத்துநடை போட்டபடியே, ‘அழகப்பனைப் பார்க்கப் போகிறேன் என்றீர்களே வெறுங் கையோடவா போகப் போகிறீர்கள்?’ என்றாள் கெம் கி.
என்ன கொண்டு போகச் சொல்கிறாய்?
‘மாதுளம் பழம் என்றால் நிரம்பப் பிடிக்கும் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கிறாரே! பறித்துக்கொண்டு போங்களே! அதான் அவர் பணம் கொடுத்த நேரம் நம் வீட்டில் மாதுளம் பழம் நன்கு பழுத்திருக்கிறதே! அவருக்கில்லாத பழமா?’ என்றாள்.
‘ஆமாம், அவருக்கு மாதுளம் பழம் என்றால் ஆசை என்று எனக்கும் தெரியும்!’ என்றவாறு செங் கியான் மெர்சிடிஸ்ட் பென்சு அருகில் நின்றிருந்த ஓட்டுநர் உடையப்பனைப் பார்த்தார்.
ஓட்டுநர் உடையப்பனுக்குச் சீனமொழி பேசத் தெரியும். ‘பறித்துக் கொண்டு வரவா?’ என்றார்.
‘நல்ல பழமாகப் பறித்துக் கொண்டு வாருங்கள்!’
உடையப்பன் விரைந்தார்.
கைக்கு எட்டிய உயரத்தில் பழுத்துக் கனிந்து வெடித்து மாணிக்கப் பரல்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்த இரு பழங்களைப் பறித்ததும் திரும்பிப் பார்த்தார். யாரிடம் எந்தப் பொருள் கொடுத்தாலும் சீன மரபுப்படி இரட்டைப் படக் கொடுக்க வேண்டும் என்பதால்…
‘நாலு பழமாக இருக்கட்டும்!’ என்றார் செங் கியான்.
உடையப்பன் மேலும் இரண்டு பழங்களைப் பறித்துக் கொண்டு வருவதற்கும், தத்துநடை பயின்ற கெங் கி தன் கணவர் அருகில் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.
‘நல்ல பழம்!’ கெம் கி.
‘ஆமாம் நல்ல பழம்!’ என்றவாறு கெங்கி யான் ஓட்டுநரிட மிருந்த பழங்களை வாங்கினார்.
‘அழகப்பனிடம். பழங்களைக் கொடுத்துவிட்டுப் புத்தாண்டு அன்று வீட்டுக்கு வரச் சொல்லுங்கள். அவருக்கு இந்த ஆண்டு நாம் நினைத்தபடி ‘ஆங் பாவ்’ கொடுக்க வேண்டும். இதை மறந்துட்டு உங்களுடைய வியாபாரத் திறமையைப் பற்றி அளந்துவிடாதீர்கள்! அவரிடம் இருந்தும் நல்லதைத் தெரிந்து கொள்ளுங்கள்!’ என்றாள்.
‘என்ன பேச்சோடு பேச்சாகக் குத்திக் காட்டுகிறாய்! முதலில்தான் எனக்கு நேரம் கிடைக்காது! இப்போதுதான் எல்லாவற்றையும் உன் மகன் கவனித்துக் கொள்கிறானே! இனி மேல் நான் நேரப்பட பேசிக்கொண்டு இருந்தாலும் கவலை இல்லை! அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறேன்!’ என்றபடி சிரித்தார்.
கெம் கி வாயெல்லாம் மாதுளம் மணிகள்.
சீனப்புத்தாண்டு அன்று சிவப்புத்தாள் உறையில் ‘ஆங் பாவ்’ கொடுப்பது சீன மரபு. சிறுவர்களுக்கு இருபது அல்லது நாற்பது காசு என்றும் பெரியவர்களுக்கு இரண்டு அல்லது நான்கு வெள்ளி என்றும் இரட்டைப்படக் கொடுப்பது வழக்கம். பொருளாதார நிலைமைக்கேற்ப ஆயிரக்கணக்கில் கொடுப்பதும் உண்டு. ஏழை எளியோர்க்கும் அறநிறுவனங்களுக்கும் கொடுப்பார்கள்.
ஓட்டுநர் உடையப்பன் வண்டியின் பின் கதவைத் திறந்து விட்டார்.
வண்டியில் உள்ள வானொலி சீன மெல்லிசையை எழுப்பிக் கொண்டே இருந்தது. அவர்களின் பேச்சுக்கு இனிமை கூட்டிக் கொண்டிருந்த அந்த இசையோடு ‘கிணிங்… கிணிங்…’ என்னும் ஓசையும் குழைந்து ஒலித்தது.
செங் கியான் திரும்பிப் பார்த்தார்.
அஞ்சல்காரர் அருகில் வந்ததும் அவரிடம் சில மடல்களைக் கொடுத்தார்.
அக்கடிதங்களுள் அறநிறுவனங்களில் இருந்து வந்த ஆங் பாவ் வெற்றுறைகளும் இருந்தன.
செங் கியானுக்கு ஒரே மகிழ்ச்சி.
அவற்றை வாங்கிப் பார்த்த பின் கெம் கியிடம் கொடுத்து விட்டு வண்டியில் ஏறினார்.
வண்டி நகர்ந்தது.
கையில் கடிதங்களுடன் நின்ற கெம் கி பார்த்துக் கொண்டு நின்றாள். வண்டி விரைந்து சென்று சாலையில் திரும்பியதும் அவளும் வீட்டுப் பக்கம் திரும்பினாள்.
வண்டிக்குப் பின்னால் புதிய புதிய கட்டிடங்கள் விரைந்து சுருங்கி மறைந்த வண்ணம் இருந்தன. செங்கியான் அந்தக் கட் டிடங்களைப் பார்த்துக் கொண்டே சென்றார்.
அக்கட்டிடங்களுள் அவர் குத்தகை எடுத்துச் சலவைக்கல் பதித்த கட்டிடங்களும் இருந்தன.
வண்டி மார்க்கெட் ஸ்ட்ரீட் மூலையில் போய்த் திரும்பியது.
தூரக்கிழக்கு ஆசியாவிலேயே உயரமாக உள்ள ஓசிபிசியின் ஐம்பது மாடிக் கட்டிடமும் அவர் கண்களிலிருந்து மறைந்தது.
வண்டி கிட்டங்கி வாயிலில் நின்றதும் செங்கியான் இறங்கி னார்.
கல்லாப்பெட்டி முன் சம்மணம் கூட்டி.அமர்ந்திருந்த அழ கப்பனார் மெய்ம்மறந்து கையில் இருந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘உங்க வாடிக்கைக் காரவுக வர்றாக!’ என்று அழகப்பனார் பெட்டி அடிக்கு அருகில் உள்ளவர் சொன்ன பிறகுதான் அழ கப்பனார் படத்தைப் பெட்டிக்கு மேலே வைத்தபடி திரும்பிப் பார்த்தார். அவர் முகத்தில் மாதுளம் பூ உதிர்ந்தது.
செங் கியான் காலணியை வாசலிலேயே கழற்றிப் போட்டு விட்டு உள்ளே சென்றார்.
கல்லாப் பெட்டியைச் சிறிது இழுத்துக் கொண்டே ‘வாருங்கள்!’ என்றார் அழகப்பனார்.
‘நலமாக இருக்கிறீர்களா?’ என்றபடி செங்கியான் மாதுளம் பழங்களை நீட்டினார்.
பழங்களை வாங்கியபடியே, ‘நலந்தான்! வீட்டில் எல்லாரும் நலந்தானே!’ என்றார் அழகப்பனார்.
‘எல்லாரும் நலந்தான். கெம் கிதான் மாதுளம் பழம் பறித்துக் கொண்டு போங்கள் என்றாள்!’
‘அப்படியா?’
இருவர் முகத்திலும் மாதுளம் பூக்கள்!
அப்போது அந்தப் பக்கம் கூட்டு முறை வந்தார்.
அவரிடம், ‘தவுக்கே வந்திருக்காக போய் ஆர்லைக்ஸ் வாங் கிக்கிட்டு வர்!’ என்றார் அழகப்பனார்.
‘எவ்வளவு வாங்கிக்கிட்டு வர?’ கூட்டுமுறை வினவினார். ‘ஆர்லைக்ஸ்’ என்ற சொல்லில் இருந்தே புரிந்து கொண்ட செங் கியான். ‘நான் இப்போதுதான் பசியாறிவிட்டு வருகிறேன்!’ என்றார்.
‘அதற்கென்ன சும்மா குடியுங்கள்…’
‘விடமாட்டீர்கள் போல் இருக்கே!’
அழகப்பனார் கணக்குப் பிள்ளை பக்கம் திரும்பி, ‘கூட்டு முறைக்கிட்டே’ ஐம்பது காசு கொடுங்க!’ என்றார்.
கணக்குப்பிள்ளை ஐம்பது காசு கொடுத்துவிட்டு நாள் சிட்டையை எடுத்தார்.
முப்பது ஆண்டுக்கு முன்.
ஒரு நாள் புதிய பத்து மாடிக் கட்டிடக் கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது.
மேல்தளத்தில் கறுப்பு நிறச் ‘சங் பூ’ உடையும், சிவப்பு நிறத் துணித் தொப்பியும் அணிந்துள்ள சீனக் கிழவியர் வெயிலைப் பொருட்படுத்தாமல் காண்டாப் போட்டு கட்டுமானப் பொருட்களைத் தூக்கிச் செல்வதும் வருவதுமாக இருந்தனர்.
இடையிடையே கட்டடத்திற்குள் இருந்து ‘டுமில் டுமில்’ என்னும் ஒலி கேட்டது. துப்பாக்கி ஒலி அன்று! சன்னல்களுக் குப் பாதுகாப்புக் கம்பி பொருத்த எஃகு ஆணி அடிக்கும் துமுக் கி ஒலி தாம் அது.
சிற்றுளிகளின் இரைச்சலும், தரையில் சலவைக் கல் கீற்றும் இயந்திர இரைச்சலும் காதைத் தொளைத்தன.
சாரத்தில் நின்று சாயம் பூசிக்கொண்டிருந்த தொழிலாளர் கள் உயிரைத் துச்சமாக நினைத்துக்கொண்டு வேலை செய்த னர். வயிறு ஒன்று இருந்ததால் அவர்களிடம் அச்சம் என்ற ஒன்று இல்லை.
சமையல் அறைப் பகுதியில் சலவைக் கல் பதித்துக்கொண் டிருந்தார் செங்கியான். அவர் வேலை செய்துகொண்டிருந்தர் லும் அவர் மனம் அவரிடம் இல்லை.
‘கூலிக்கு வேலை செய்தால் எப்படி முன்னேற முடியும்?’ என்று அவர் தன்னைத்தானே கேட்டுக் கொண்டு வெளியே பார்த்தார்.
புதிய கட்டிடத்தின் முன் வந்து கார் நின்றது.
அந்தக் காரில் இருந்து மொத்தக் குத்தகையாளர் இறங்கி னார். கட்டிட வேலைகள் எப்படி நடக்கின்றன என்று பார்ப்ப தற்காகவே வந்திருந்தார். அவர் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்.
அவரைப் பார்த்ததும் ‘நான் அவரைப் போல் முன்னேற முடியாதா?’ எனும் கேள்வி செங் கியாவின் உள்ளத்தில் அழுத் தமாக எழுந்தது.
‘எப்படி முடியும் ? ஒரு நாளைக்குச் சம்பளமே பன்னிரண்டு வெள்ளிதான்! அதில்தான் வயதான பெற்றோர், மனைவி-மக் கள் எல்லாரும் காலந்தள்ள வேண்டும். வீட்டில் பன்றியும், கோழியும் வளர்க்காவிட்டால் இந்தச் சம்பளமும் செலவுக்குக் கூட காணாதே! இப்படி இருக்கும்போது நான் எப்படி முதலாளி ஆக முடியும்? முதல் வேண்டுமே!’ என்னும் சோர் வும் ஏக காலத்தில் எழுந்தது.
வாளிநீரில் நனைய வைத்திருந்த சலவைக் கற்களிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்தார். சிறிது காரையை அப்பி சுவரில் வைத்து, கரண்டிக் கைப் பிடியால் மெதுவாகத் தட்டிக் கொண் டிருந்தார்.
சிறு சிறு கற்கள் சுவர்களை நிறைத்துக்கொண்டதும் அறை பார்ப்பதற்குப் பளபளப்பாகவும், அழகாகவும் இருந்தது. சிறு துளி பெருவெள்ளம் என்பதையும் அது அவருக்கு நினைவுகூர்ந்தது.
‘சிறுகச் சிறுகச் சேர்த்து எப்போது தொழில் செய்வது? அதற் குள் அகவை ஆகிவிடுமே!’ இப்படி ஒரு கேள்வி அவர் மனத் தில் எழுந்ததும் சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் மனக்கண்முன் சம்பள நாள் அன்று தவணைப் பணம் தண்டல் செய்ய வரும் அழகப்பனார் உருவம் தெரிந்தது.
‘பழக்கமில்லாதவரிடம் எப்படிக் கேட்பது?’ என்று சற்று தயங்கினாலும் இறுதியில் கேட்டுப் பார்த்துவிடலாம் என்னும் முடிவுக்கு வந்தார்.
மறுநாள் மார்க்கெட் ஸ்ட்ரீட்டுக்குச் சென்றார்.
இனம் புரியாத அச்சத்தால் அவர் மனம் டிக் டிக் என்று அடித் துக்கொண்டிருந்தது.
கிட்டங்கியில் வரிசையாக இருக்கும் கல்லாப் பட்டிகளின் மீது பார்வையை ஓடவிட்டார். அழகப்பனார் பெட்டியடி கிட் டங்கி மூலையில் இருந்தது. கடன் வாங்க வந்திருப்போர்சிலர் சில கல்லாப் பெட்டிகளின் முன் அமர்ந்திருந்தனர். அவர்கள் ளைப் பார்த்துக் கொண்டே அழகப்பனாரின் பெட்டியடியை நோக்கி நடந்தார்.
அருகில் சென்றதும் செங் கியானின் நெஞ்சத்துடிப்பு மேலும் கூடியது. தயங்கியபடியே நின்றார்.
அழகப்பனார்க்குச் செங்கியானை எங்கோ பார்த்த நினைவு. அடுத்தநொடியே பார்த்த இடம் நினைவுக்கு வந்தது. ‘வாருங்கள்!’ என்று வரவேற்று அமரச் சொன்னார்.
தரையில் சம்மணம் கூட்டி அமர்ந்து பழக்கமில்லாததால் அக்கம் பக்கத்தில் அமர்ந்திருப்போரைப் பார்த்தார்.
அவர்களுள் சீனர் சிலர் இருந்தனர். அவர்களைப் போல் செங் கியானும் கால்களை மடக்கிக் கொண்டு தரையில் அமர்ந்தபடி அழகப்பனாரைப் பார்த்தார்.
அழகப்பனார் மிளகாய் மார்க் முழுக்கை பனியன் அணிந்திருந்தார். திருநீறு பூசிய நெற்றியில் சிறிய அழகான சந்தனப் பொட்டுக்குள் மற்றொரு குங்குமப்பொட்டும் சிறிதாக இருந்தது. மடியில் கைத்தறித் துண்டும் ஒலை விசிறியும் கிடந்தன.
அவருக்குப் பின்னால் மரத்தால் செய்த பெட்டகம் கிடந்தது.நேர் மேலே சுவரில் விநாயகர் முருகன் படங்கள் தொங்கின. அதற்குப் பக்கத்தில் காந்தியார், வள்ளலார், நேதாஜி போன்றோரின் படங்களும் கிடந்தன. மாலையிடப்பட்டிருந்த தெய்வப்படத்திற்கு முன் சற்று முன் கொளுத்தி வைத்திருந்த ஊதுவத்தியும் வெங்கலத் தூபக்காலில் இட்டிருந்த சாம்பிராணியும் நறுமணப் புகையைக் கக்கிக் கொண்டிருந்தன.
அடுத்தடுத்து உள்ள பெட்டியடிகளில் உள்ளவர்கள் கணக்கெழுதிக் கொண்டிருந்தனர். ஒருவர் ஈரத்துண்டோடு பிள்ளையார் படத்திற்கு முன் நின்று முணுமுணுத்தபடி உக்கி போட்டுக் கொண்டிருந்தார்.
‘நாலு நாலு எட்டு’ என்று மற்றொருவர் பண நாதனின் அருள் கிடைக்க எண்களை ஒதிக்கொண்டிருந்தார்.
சிலர் காதைக் கடித்துக் கொண்டிருந்தனர்.
வாடிக்கையாளர்களிடம் ஏதோதோ குசுகுசுத்தனர்.
இதையெல்லாம் கூச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்த செங் கியானிடம், ‘என்ன செய்தி? இந்தப் பக்கம் காற்றடிக்கிறது?’ என்று அழகப்பனார் சிரித்தபடி வினவினார். செங்கியானின் வாயை விட்டுச் சொற்கள் வெளிவரத் தடுமாறின.
அவர் தடுமாறியதலிருந்தே செங்கியானை அழகப்பனார் ஓரளவு எடை போட்டு விட்டார்.
‘வந்து இப்போது நான் நாள் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன். அந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை! சிறுசிறு குத்தகைகளைப் பிடித்துச் சொந்தத்தில் வேலை செய்யலாம் என்று நினைக்கிறேன். அதற்குச் சிறிது பணம் தேவைப்படுகிறது. அதனால்தான் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்’ என்று ஒரு வழியாகச் சொல்லி விட்டார்.
பென்சிலை நெற்றிப்பொட்டில் வைத்து உருட்டிக் கொண்டிருந்த அழகப்பனார் சிந்தனையில் ஆழ்ந்தபடி, ‘இப்போது தோதுப்படாதே!’ என்று இழுத்தார்.
‘நான் இதற்கு முன் யாரிடமும் கடன் வாங்கிப் பழக்கமில்லை. இப்போதுதான் முதன் முதலில் உங்களிடம் வாய்விட்டுக் கேட்கிறேன்! அதுவும் நல்லா யோசித்துப் பார்த்துவிட்டுத் தான் கேட்கிறேன், எனக்குச் சொந்த வீடு இருக்கிறது. அதை எழுதிவைத்து விடுகிறேன். என் மனைவியையும் ஜாமின் கையெழுத்துப் போடச் சொல்கிறேன். தயவு செய்து இல்லையென்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்!’ என்றார் செங்கியான்.
அழகப்பனார் மேலும் சிந்தனையில் ஆழ்ந்தார்.
அப்போது செங்கியான் வீடு இருக்கும் பகுதியில் மளிகைக்கடை வைத்திருக்கும் சிவத்த மரைக்காயர் அங்கு வந்தார்.
செங்கியானைப் பார்த்ததும், ‘எப்படி நலமா?’ என்றார்.
கூச்சப்பட்டுக்கொண்டிருந்த செங் கியான் உள்ளம் கூனிக்குறுகியது, இருந்தாலும், ‘நலந்தான்’ என்று சமாளித்தார்.
சிவந்த மரைக்காயர் சிரித்தபடி அழகப்பனார் பக்கம் திரும்பினார்.
‘வாங்க! இப்பத்தான் நோட்டுக்கு முத்திரை அடிக்கப் போயிருக்காக! இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்திடுவாக! உங்களுக்கு வெளிலே ஏதாகிலும் வேலையிருந்தா பாத்துட்டு வாங்க’ என்றார்.
செவத்த மரைக்காயர் நிலைமையைப் புரிந்து கொண்டும் ‘அப்போ நான் போய்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டும் நடந்தார்.
‘போயிட்டு வாங்க’
அவர் சென்றதும் செங் கியானைப் பார்த்து இந்தச் சமயத்தில் வந்து கேட்கிறீர்களே!
‘எனக்கு இதுதான் நல்ல சமயம். எங்க சாமியாரும் நல்ல நேரம் என்று சொல்லுகிறார். நீங்கள் தான் எப்படியும் உதவி செய்ய வேண்டும். இந்த உதவியை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன்!’
‘எவ்வளவு தேவைப்படும்!’
‘ஐயாயிரம் வெள்ளி தேவைப்படும்!’
‘பெரிய தொகையாக இருக்கிறதே, பத்தாயிரத்துக்குள்தானே தொழிலே ஓடுது!’
‘அதற்குக் குறைந்து எதுவும் செய்ய முடியாது. என் வீடு ஐயாயிரத்துக்கு மேலேயே பெறும். அதையடுத்துப் பன்றிக் கொட்டகையும், கோழிக்கூடும் இருக்கின்றன. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நேரில் வந்து பாருங்கள்! எல்லாம் சேர்த்தால் எட்டாயிரம் வெள்ளி பெறும்!’ என்று செங்கியான் நயமாகச் சொன்னார்.
அழகப்பனாரின் சிந்தனை நீண்டது. சிவத்த மரைக்காயருக்குத் தெரிந்த ஆளாக இருப்பதாலும், ஆள் நம்பிக்கையோடு பேசுவதாலும் அவரிடம் விசாரித்துப் பார்க்கலாம் என எண்ணிக் கொண்டே ‘எதற்கும் நீங்கள் நாளைக்கு வாருங்கள்! (உண்டு, இல்லை) என்று இரண்டில் ஒன்று சொல்லிவிடுகிறேன்’ என்றார் அழகப்பனார்.
செங்கியான் முகம் வாடியது.
அழகப்பனாரை இரக்கத்தோடு பார்த்தபடி, ‘நீங்கள்தான் இந்த நேரத்தில் உதவி செய்ய வேண்டும். உங்களைத்தான் நம்பி இருக்கிறேன்!’
‘பார்க்கலாம்!’
செங்கியான் விடை பெற்றுச் சென்றார்.
அவர் சென்று சிறிது நேரம் கழித்துச் சிவத்த மரைக்காயர் வந்தார்.
அவரிடம் செங்கியானைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போதே முத்திரை அடிக்கச் சென்றிருந்த கூட்டு முறையும் திரும்பி விட்டார்.
மறுநாள்.
செங்கியான் வந்திருந்தார், அவர் முகம் வாடியிருந்தது.
‘நீங்கள் எடுக்கப்போகும் குத்தகையில் லாபம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?’
‘நிச்சயமாகக் கிடைக்கும்!’
‘எதிர்பாராமல்….’
‘நட்டத்திற்கு இடமில்லை!’
அழகப்பனார் தலையைச் சொறிந்து கொண்டார். ஆளையும் மீண்டும் ஒரு முறை நோட்டமிட்டார். சிறு பிள்ளை முதலே செங்கியானிடம் பழகிய சிவத்தமரைக்காயர் சொல்லியதைப் போல் எதிலும் நிதானப் போக்குள்ள வராகவும், நாணயமுள்ளவராகவும், நல்லவராகவுமே தெரிந்தது.
பணம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தவராய் எதிர்ச்சுவரில் மாட்டியிருந்த நாள் காட்டியைப் பார்த்தார்.
என்ன பதில் சொல்லப் போகிறாரோ என்ற விரக்தியில் செங்கியான் அழகப்பனாரைப் பார்த்தார்.
ஐந்தாம் தேதி உங்கள் மனைவியையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். இப்போது இருவருடைய அடையாள அட்டைகளும் வேண்டுமே! என்றார் அழகப்பனார்.
செங்கியான் உள்ளத்தில் தேன் சிந்தியது. ‘கொண்டு வந்திருக்கிறேன்!’ என்று சொல்லியவாறே பையிலிருந்த தம் அடையாள அட்டையையும் எடுத்துக் கொடுத்தார்.
அழகப்பனார் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
எதிலும் முன் யோசனையோடு இருப்பது நல்லது! என்றவாறு அட்டைகளை வாங்கி அருகில் இருந்த கணக்குப் பிள்ளையிடம் கொடுத்தார்.
பெட்டகத்திற்கு நேராக மேலே இருந்த படத்தைப் பார்த்தார். படத்தில் இருந்த திருமுருகனின் கடைக்கண் பார்வை செங்கியான் மேல் விழுந்தது.
ஐந்தாம் தேதி வந்துது. செங்கி தயானும் அவர் மனைவியும் அழகப்பனாரைப் பார்க்கச் சென்றனர்.
வாக்குறுதிக் கடன் பத்திரம் முத்திரை அடிக்கப்பட்டு அவர்களின் வரவுக்காகக் காத்திருந்தது.
செங்கியான் சீனமொழியில் கையொப்பமிட்டார். கெம் கி கைநாட்டு வைத்தாள்.
கணக்குப்பிள்ளை, கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்துவிட்டு அழகப்பனாரிடம் கொடுத்தார்.
அவரும் ஒரு முறை எண்ணிப் பார்த்தார். பணம் மூன்றாவது கைக்கு மாறியது.
அதைக் கெம் கி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனம் அழகப்பனாருக்கு நன்றி சொல்லத் துடித்தது.
‘எப்படிச் சொல்வது? மலாய் மொழி தெரியாதே!’ எனத் தயங்கியவள் தன் தாய் மொழியிலேயே ‘கம சியா தவக்கே, கம் சியா!’ என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.
அழகப்பனாருக்குச் சீன மொழி தெரியாது. இருந்தாலும் அவள் நன்றி சொல்லியது புரிந்தது. பரவா இல்லை என்று மலாய் மொழியில் சொல்லியபடி கையமர்த்தினார்.
செங்கியான் முகத்தில் மாதுளம்பூ!
பணம் கிடைத்து விட்டதை நினைத்து மட்டும் அவர் மகிழ்ச்சியடையவில்லை. தம் மனைவி கெம் கியும், அழகப்பனாரும் பேசிக் கொள்வதைச் செவிமடுத்துத்தான்; சிரித்தார்.
‘ஏன் சிரிக்கிறீர்கள் – கெம் கி’
அதே கேள்வியை அழகப்பனாரும் செங்கியானிடம் கேட்டார்.
‘நீங்கள் இருவரும் பேசிக் கொள்வதை செவிமடுத்தால் சிரிப்புத்தானே வருகிறது!’ என்றார்.
கணக்குப் பிள்ளையும் சிரித்துவிட்டார்.
சிரிப்பு அடங்கச் சிறிது நேரம் சென்றது. செங்கியான் நன்றி தெரிவித்து விட்டுத் தம் மனைவியின் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு நடந்தார்.
அவள் தத்தித்தத்தி நடப்பதைப் பார்த்துப் பலர் இரக்கப்பட்டனர். சிலருக்கு அதுகூட வேடிக்கையாகவும், நகைப்பாகவும் இருந்தது.
‘இப்படித் தெரிஞ்சிருந்தா அந்த அம்மாவை வரச்சொல்லி இருக்க வேண்டாம்! நாமே போயிட்டு வந்திருக்கலாம்’ என்றவாறு அழகப்பனார் கணக்குப்பிள்ளையைப் பார்த்தார்.
‘நானும் அப்படித்தான் நினைத்தேன்!’ என்றார் கணக்குப்பிள்ளை.
அடுத்தநாள் செங்கியான் குடும்பத்துடன் சீனக் கோவிலுக்குச் சென்றார். கெம் கி தீக்குண்டத்தில் பணத்தைக் கட்டுக் கட்டாய்ப் போட்டாள். உண்மையான பணமில்லை. பணத்தைப் போல் அச்சடிக்கப்பட்ட தாள்களைத் தாம் தீயில் போட்டாள். அது கொழுந்துவிட்டெரிந்தது. அவ்வாறு தெய்வத்திற்குக் கொளுத்தினால் சொர்க்கத்தில் உள்ள தங்கள் உறவினர்களின் ஆன்மா அமைதியுற்று நன்மை செய்யும் என்பது நம்பிக்கை. செங் கியான் சீன ஊதுவத்திகளையும் சிவப்பு நிற மெழுகுவர்த்திகளையும் கொளுத்தித் தெய்வத்தின் முன் உள்ள மேடை மீது வைத்தார். பழங்கள், சீனப் பணியாரங்கள் படைக்கப்பட்டன. வட்டில் போன்ற வெங்கலத் தூபக்காலில் சந்தனச் சுள்ளி எரிந்து கொண்டிருந்தது. அதில் சந்தனப் பொடியைத் தூவினார். நறுமணப் புகை மேலெழுந்து மேகத்தைப் போல் நகர்ந்ததும் படத்தில் உள்ள தெய்வம் வானுலகில் வலம் வந்தது.
எல்லாரும் மண்டியிட்டு ‘தபேக்கொங்’க் கும்பிட்டனர்.
‘கடவுளே! தொழில் நல்லபடியாக நடக்க வேண்டும். செல்வம்பெருக வேண்டும்! உன்னைத்தான் நம்பி இருக்கிறோம்’ என்று ஒரு மனத்தோடு வேண்டிக் கொண்டனர்.
அதையடுத்து செங்கியான் மேசை மீது இருந்த கறுப்பு நிறத்திருவூலக் கட்டையை எடுத்தார். கைகளுக்குள் வைத்துப் பொத்திக் கொண்டு இமைகளை மூடினார். வாய் முணுமுணுத்தது.
சிறிது நேரம் கழித்து மண்டியிட்டு நெற்றியை நிலத்தில் வைத்துக் கும்பிட்டுவிட்டு கையிலிருந்த திருவூலக் கட்டையைத் தெய்வத்தின் முன் குலுக்கிப் போட்டார்.
அடுத்த நொடியே அனைவர் முகங்களும் மலர்ந்தன. திருவூலக் கட்டையின் வழி தெய்வம் வெற்றி எனத் தெரிவித்து விட்டிருந்தது.
செங் கியான் நம்பிக்கையோடு சிறுசிறு குத்தகைகளைப் பிடித்தார்; சிலரை வேலைக்கு அமர்த்திக் கொண்டு வெயில் மழை என்று பாராமல் கடுமையாக உழைத்தார். சில சமயம் விளக்கின் துணையோடு இரவிலும் வேலை செய்தார்.
அவருடைய மஞ்சள் நிற மேனி கறுத்துவிட்டது.
நெருங்கிய நண்பர் சிலர் அவரைக் ‘கிளங்கியா!’ என்று கூட அழைத்தனர்.
கலிங்க மன்னனின் பெயர்தாம் இப்படி மருவித் தமிழர்களின் பட்டப் பெயராக ஆகிவிட்டது!
செங் கியான் அதைப் பொருட்படுத்தவில்லை, முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளில் உழைத்துக் கொண்டே இருந்தார்.
எலி,பசு,புலி,முயல், கடல்நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி எனும் பன்னிரண்டு பெயர்களைக் கொண்டுள்ள சீன ஆண்டுகள் நகர்ந்தன.
செங் கியான் வீட்டில் நட்டுவைத்திருந்த மாதுளை தளதளவென ஓங்கி வளர்ந்தது. அரும்பிப் பூத்து, காய்த்துத் தீங்கனிகளை நல்கியது. அது செல்வ வளர்ச்சியை மட்டும் காட்டவில்லை. தேவைப்படும் போதெல்லாம் ஆயிரம், இரண்டாயிரம் என்று கொடுத்துதவி கை தூக்கிவிட்ட அழகப்பனாரிடம் வளர்ந்து விட்ட நட்பையும் காட்டியது.
கடல்நாக ஆண்டு இரண்டு தடவை வந்து போய்விட்டது; மூன்றாம் தடவை வந்துகொண்டிருந்தது.
செங்கியானுக்கு இப்போதெல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் புரட்டுவது சாதாரணம். தம் முழுக்கவனத் தையும் பொருளாதாரத்திலேயே செலுத்திக் குறிப்பிடத்தக்க புள்ளிகளில் ஒருவராகிவிட்டார்.
அழகப்பனாரிடம் பணம் வாங்கி முதலீடு செய்த நாளிலிருந்து படிப்படியாக முன்னேற்றம் கண்டு வந்த செங் கியாங் அழகப்பனார் முன்னேறவில்லையே என்று மனம் வருந்தினார். அவருக்கு உதவிசெய்ய வேண்டும் என செங் கியான் நன்றி உள்ளம் துடித்தது. அந்தத் துடிப்புத்தான் ஆங் பாவ்’ எனும் உருவில் வந்து நின்றது.
கடந்த புத்தாண்டுகளைப் போல் விருந்தோடு நிறுத்திவிடக் கூடாது என்று எண்ணினார்.
கூட்டுமுறை ‘ஆர்லைக்ஸ்’ வாங்கி வந்திருந்தார். செங்கியான் ‘ஹார்லிக்ஸ்’ பருகியபடியே அழகப்பனாரிடம் பேசிக்கொண்டிருந்தார். வரும்போதெல்லாம் நேரமில்லை இன்னொரு நாளைக்குப் பேசிக்கொள்ளலாம் என்று ஓடிவிடும் செங்கியான் அன்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்; வேலைகளை மகன் கவனித்துக் கொள்வான் எனும் துணிவில்!
அவ்வாறு நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்ததால் உள் மனத்தில் சூழ்ந்திருந்த இருள் அகன்றது; ஒளி பிறந்தது.
அழகப்பனாரையே கூர்ந்து பார்த்தார். முதுமையைத் தவிர அவரிடம் எந்த மாற்றமும் செங் கியானுக்குத் தெரியவில்லை. அன்று அணிந்திருந்த அதே மிளகாய் மார்க் பனியன் அணிந்திருந்தார். அதுவும் கம்புக்கூட்டுக் கருகில் சிறிது கிழிந்திருந்தது. நாலுமுழ கைத்தறி வேட்டியைக் கட்டிக் கொண்டு அன்றிருந்த அதே இடத்தில் அதே கல்லாப்பெட்டி முன் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அதே கல்லாப்பெட்டி முன் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தார் கணக்குப் பிள்ளை. அவருக்குப் பின்னால் அதே மரப்பெட்டகம், சுவரில் மாட்டியிருந்த அதே தெய்வப்படங்கள்.
செங் கியான் அன்று கண்ட அதே காட்சியைப் பார்த்துவிட்டு அழகப்பனாரைப் பார்த்தார். அவர் பார்வைக்கு அழகப்பனார் ‘தனிப்பிறவி’யாகத் தெரிந்தார்.
‘தயவு செய்து புத்தாண்டுக்கு வந்துவிடுங்கள்!’
‘வந்து விடுகிறோம்!’
செங் கியான் விடை பெற்றுக் கொண்டு சென்றார்.
அழகப்பனாரை வந்து பார்த்துவிட்டுப் போகும் போதெல்லாம் செங்கியான் வெறுங்கையோடு போனதில்லை. பணம் வாங்கிக் கொண்டுதான் போயிருக்கிறார். ஆனால் அவர் அன்று வெறுங்கையோடு சென்றார். வெறும் மனத்தோடு மட்டும் செல்லவில்லை! திருப்பிக் கொடுக்க முடியாத கடனை அழகப்பனாரிடம் இருந்து பெற்றுக் கொண்டு நெஞ்சில் சுமந்து சென்றார்.
கிட்டங்கி வாசலில் நின்ற மெர்சிடிஸ் பென்சு விரைந்தது.
அருகில் உள்ள ஐம்பது மாடிக் கட்டிடத்தைக்கூட அவர் பார்க்கவில்லை, அதைவிட உயர்ந்து நிற்கும் அழகப்பனாரின் உருவமே அவர் கண்முன் நின்றது.
வீட்டை அடைந்ததும், ‘அழகப்பாவைப் பார்த்தீங்களா?’ என்று கெம் கி வினவினாள்.
‘பார்த்தேன்!’
‘என்ன சொன்னார்?’
புத்தாண்டுக்கு வருவதாகச் சொன்னார். ஆனால் நாம் நினைத்தபடி ஆங் பாவ் கொடுப்பதுதான் சந்தேகம்’
‘ஏன்?’
‘அவர் நினைத்தால் நம் அலுவலகத்தைப் போல் எத்தனை அலுவலகம் வேண்டுமானாலும் திறக்க முடியும். நம்மிடம் இருக்கும் கார்களைப் போல் பல கார்கள் வாங்க முடியும்.’
‘என்ன சொல்கிறீர்கள்?’
‘உனக்கு வியப்பாக இருக்கிறதா? நாம்தான் அவருடைய எளிய தோற்றத்தைப் பார்த்து தவறாக எடைபோட்டு விட்டோம். அவர் பரம்பரைப் பணக்காரர். தமிழ்நாட்டில் அவருக்குப் பல தொழில்கள் நடக்கின்றனவாம். அது மட்டுமில்லை. அவர் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மருத்துவமனையே கட்டி விட்டிருக்கிறாராம்! அந்த மருத்துவமனைப்படத்தைப் பார்த்தேன்; இவ்வளவு நாள் தொடர்பு வைத்திருந்தும் இதைத் தெரிந்து கொள்ளவில்லையே என்பதை நினைக்கும்போது என் மனம் என்னபாடு படுகிறது தெரியுமா? நீ சொன்னதைப் போல் நான் என் தொழில் திறமையை மட்டும் பேசி விட்டுவந்ததால் தான் அவரைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. விளம்பரம் விரும்பும் இந்த உலகத்தில் இப்படியும் ஒருவர் இருப்பதை நினைக்கும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது. இதைக்கூட அவர் சொல்லவில்லை. அவர் தொலைபேசியில் யாருடனோ பேசச் சென்ற போது கல்லாப்பெட்டி மேல் கிடந்த படத்தைப் பார்த்துவிட்டுக் கணக்குப் பிள்ளையிடம் கேட்ட பிறகுதான் உண்மையே தெரிந்தது; கணக்குப் பிள்ளை எல்லா விவரத்தையும் சொன்னார்!’ என்றார் செங் கியான்.
கெம் கி அசந்தே போய் விட்டாள்.
‘அப்படியா?’
‘ஆமாம்!’
‘பார்த்தால் அப்படித் தெரியவில்லையே’
‘இந்தக் கேள்வியைத்தான் என்னை நானே கேட்டுக்கொண்டேன். அதே கேள்வியை நீயும் கேட்கிறாய்? ஆரவாரமின்றி எளிய முறையில் வாழ்வது என்றென்றும் நிலையானது; தூய்மையானது என நினைத்துக்கொண்டு அடக்கமாக இருக்கிறார்!’
கெம் கி முகம் வியப்பால் விரிந்தது.
செங் கியான் உள்ளத்தில் புத்துணர்வு பிறந்தது. தம் கார்செட்டைப் பார்த்துவிட்டுத் தோட்டத்தைப் பார்த்தார். ஒடிந்து விடுவதைப்போல் இருந்த கனிகள் நிறைந்த மாதுளங்கிளையை ஓட்டுநர் உடையப்பன் சிம்பு வைத்துக் கட்டிவிட்டு நிமிர்ந்ததும் மாதுளங் கிளையும் நிமிர்ந்து நின்றது; செங் கியான் உள்ளத்தில் மனத்தில் எங்கோ ஓர் இடத்தில் ஏற்பட்டிருந்த வளைவு நிமிர்ந்து விட்டதைப்போல்!
‘அப்படி என்றால் ஆங் பாவ் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்’ என்றாள் கெம் கி. அவள் மனம் உடைந்துவிட்டிருந்தது.
செங் கியான் திரும்பினார். மேசைமீது கிடந்த சிவப்புநிற ஆங் பாவ் உறைகள் கண்களில்பட்டுச் சிரித்தன.
அஞ்சலில் வந்திருந்த அந்த உறைகளைப் பார்த்ததும், அவர் மனம் குளிர்ந்தது. நாம் நினைத்தபடி ஆங் பாவ் கொடுத்தே ஆக வேண்டம் என்றார்.
கடல்நாகப் புத்தாண்டு பிறந்தது.
சீனர்களின் இல்லங்களில் எல்லாம் புதுப் பொலிவு தெரிந்தது; உள்ளங்களில் புத்துணர்ச்சி தவழ்ந்தது.
தெருக்களில் வந்த ஊர்வலம் கண்ணையும் கருத்தையும் ஈர்த்தது. கடல்நாக, சிங்க நடனங்களும், ஆள் உயரத்திற்குக் கம்புகளில் நடந்துவந்த பொய்க்கால் நடையர்களின் ஆட்டமும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே அழகப்பனாரும், கணக்குப்பிள்ளையும் செங் கியான் வீட்டை நெருங்கிவிட்டனர்.
‘நம்மை வரச்சொல்லி விட்டுச் செங் கியான் எங்கே போயிருப்பார். காரைக் காணாமே!’ என்று அழகப்பனார் கார் செட்டைப் பார்த்தபடி சொன்னார்.
‘அவர் மகன் எடுத்துப் போயிருப்பான்னு நினைக்கிறேன்.’
‘அவர் மகனுக்குத்தான் தோயோட்டா வாங்கிக் கொடுத்திருக்கிறாரே!’ வாசலையும் நெருங்கி விட்டனர்.
பணத்தைப் போல் தங்க- வெள்ளி நிறங்களில் அச்சடித்த தாள்கள் எரிந்து சாம்பலாக மாறி தோட்டம் முழுதும் இரைந்து கிடந்தன. கடவுளின் திருப்பெயர்கள் அச்சிட்ட சிவப்புத் தாள்கள் கதவுகளில் ஒட்டப்பட்டிருந்தன. வாசலில் சிவப்புத் துணி தோரணத்தைப் போல் கட்டப்பட்டிருந்தது. வண்ணவண்ண கண்ணாடித்தாள் ஒட்டிய மூங்கில் கூட்டு விளக்குகள் இருபக்க வாசல் நிலைக்கு நேராக முகட்டில் இரண்டு பக்கங்களிலும் தொங்கின. வாசல் முன் ‘தபேக் கொங்குக்குப்’ படையல் போடப்பட்டிருந்தன. சீன ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது; சிவப்பு நிற மெழுகுவத்திகள் எரிந்து கொண்டிருந்தன. பழங்களும், பலவகைப் பலகாரங்களும் அழகுபட அடுக்கப்பட்டிருந்தன. கீச்சாப் எனப்படும் உப்புநீர் விட்டு அவித்த முழுக்கோழிகளும், வாத்துகளும் வெவ்வேறு தட்டுகளில் இருந்தன. பன்றி இறைச்சியும் வெட்டிய பரங்கிக்கீற்றைப் போல் இருந்தது. படைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களைப் பார்த்துக் கொண்டே அழகப்பனாரும் கணக்கப்பிள்ளையும் வாசலை அடைந்துவிட்டனர்.
உள்ளே மீ சூப் பருகிக் கொண்டிருந்த செங்கியான் அவர்களைப் பார்த்துவிட்டார். மீ சூப் பையும் உணவு உண்ணப் பயன்படும் இரு குச்சிகளையும் மேசை மீது வைத்தார். தமக்கு எதிரில் இருந்த கெம் கியிடம் ‘இதோ வந்துவிட்டார்கள்!’ என்றவாறு இருக்கையில் இருந்து எழுந்தார்.
கெம் கி வாசற் பக்கம் திரும்பினாள்.
அழகப்பனார் நடையனை வாசலில் கழற்றிப் போட்டவாறு, ‘கொங்கீ பட் சாய்! என்றார்.
‘வாழ்த்தும் ஆயுசும் பெருகட்டும்!’ என்று அவர் சொல்லியதுமே கெம் கியின் முகத்தில் புன்னகை மின்னியது. நெஞ்சமெல்லாம் தேன் மழை பொழிந்தது. அவளும் வாழ்த்தி வரவேற்றாள்.
அனைவர் முகத்திலும் புன்னகை.
கெம் கி மெள்ள நடந்து சென்று ஒரு தட்டில் தின்பதற்கு நொறுவை எடுத்து வைத்தாள். அதில் ‘சின் சூ’ இருந்தது. சின் சூ என்றால் அழகப்பனாருக்கு விருப்பம். அப்பளத்தைப் போல் பொரு பொரு வென்றும், போளியைப் போல் சுருளாகவும் இருக்கும் சின் சூவை எடுத்துச் சுவைத்தார்; கணக்குப் பிள்ளையும்தான்.
‘நன்றாக இருக்கிறது? இந்த ஆண்டும் நீங்கள்தான் செய்தீர்களா?’ என்று வினவினார்.
‘ஆமாம்! இப்போது உள்ள பிள்ளைகள் இதை எங்கே செய்கிறார்கள். செய்வதற்குச் சிரமம் கர்நாடகப் பலகாரம் என்று விட்டுவிடுகிறார்கள்; செய்து கொடுத்தால் மட்டும் விடமாட்டேங்கிறார்கள்’ என்றாள்.
‘பலகாரத்தில்கூட கர்நாடகம் வந்துவிட்டதா? வேடிக்கையான உலகம்!’ என்று சொல்லிவிட்டு செங் கியான் பக்கம் திரும்பி, ‘உங்கள் வண்டியைக் கார்செட்டில் காணோமே’ எங்கே? என்றார்.
‘விற்றுவிட்டேன்’ என்றார் செங் கியான்.
அழகப்பனாருக்கு அதிர்ச்சி. அவர் மனத்தில் ஏதும் எதிர்பாராத கடன் தொல்லை வந்துவிட்டதா; இல்லை இழப்பு ஏதாகிலும் ஏற்பட்டுவிட்டதா என்ற ஐயம் மின்னல்போல் தோன்றி மறைந்தது. ஏன்? என்றார்.
நான் தான் அந்த வண்டியைப் பயன்படுத்தி வந்தேன். எனக்கு ஏன் அவ்வளவு பெரிய வண்டி? எங்கேயாகிலும் வெளியே தெருவே போக வேண்டும் என்றால் என் மகன் வைத்திருக்கும் தோயோத்தாவே போதும் என்று நினைத்துத்தான் விற்றுவிட்டேன்! உடையப்பன்கூட என் மகன் வண்டியைத் தான் ஓட்டுகிறார்.
அப்படியா! அழகப்பனார் மனம் சற்று ஆறுதல் அடைந்தது. ஏன் வீண் ஆடம்பரம் என்றாள் கெம் கி. எல்லாரும் பேசிக் கொண்டே நொறுவையைத் தின்றனர்; சுவை நீர் பருகினர். கெம் கியான் மேசை மீது வைத்திருந்த ‘ஆங் பாவ்’ உறையை எடுத்து அழகப்பனாரிடம் நீட்டினார்.
இதெல்லாம் என்ன? என்றார் அழகப்பனார்.
ஆங் பாவ் என்று சிரித்தாள் கெம். கி. ஆமாம். புத்தாண்டு அன்று கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லக்கூடாது! என்றார் செங் கியாங்.
கணக்குப் பிள்ளை பார்த்துச்சிரித்துக் கொண்டே நொறுவையைத் தின்றார்.
அழகப்பனாருக்கு மனம் என்னவோ போல் இருந்தது. புத்தாண்டு அன்று ‘ஆங் பாவ்’ கொடுப்பதை மறுக்க முடியாத நிலை.
‘இதற்குத்தான் வரச்சொன்னீர்களா?’
‘நீங்கள் கைகொடுத்து உதவாதிருந்தால் நாங்கள் இந்த நிலைக்கு வந்திருக்கவே முடியாது’ – கெம் கி
‘அது தொழில்’
‘அதற்காக நன்றி மறக்கச் சொல்கிறீர்களா? நீங்கள் அந்த நேரத்தில் உதவி செய்தது மட்டும் இல்லை. இப்போது என் கண்ணையும் திறந்துவிட்டிருக்கிறீர்கள். மனிதனுக்குப் பணம் இருந்தால் மட்டும் போதாது; இரக்கக் குணமும் வேண்டும் என்று கற்றுக் கொடுத்துவிட்டீர்கள். இது நான் உங்களுக்குக் கொடுக்கும் ஆங் பாவ்!’ இல்லை உங்கள் மூலம் கொடுக்கும் ஆங் பாவ்!’ என்று உணர்ச்சி ததும்பச் சொன்னார்.
அழகப்பனார் மனம் எதையெதையோ எண்ணியது.
அவர்களின் அன்பு வேண்டுகோளைத் தட்டிக் கழிக்க முடியாமல் ‘ஆங் பாவ்’ வை வாங்கிக் கொண்டார், அதற்குப் பதிலாக என்ன உதவி செய்து செங் கியானை வியப்பில் ஆழ்த்தலாம் என்று எண்ணியபடி.
செங் கியான் முகத்திலும், கெம் கி முகத்திலும் மாதுளம் பூக்கள் உதிர்ந்தன.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட்டனர்.
செங் கியான் வழியனுப்பச் சாலை வரை சென்றார்.
கெம் கி மனம்சாலைக்குச் சென்று விட்டது, ஆனால் விரைந்து நடக்கமுடியாமல் கோலை ஊன்றிக் கொண்டு மெள்ளத் தத்து நடை போட்டாள்.
திரும்பிப் பார்த்த அழகப்பனார், ‘நீங்கள் ஏன் வருகிறீர்கள்? நாங்கள் போய் வருகிறோம்!’ என்று கையசைத்துச் சொல்லிவிட்டு மீண்டும் திரும்பினார்.
டாக்சி வந்து நின்றது.
விடைபெற்றுக் கொண்டனர்.
வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாக அழகப்பனார் ‘ஆங் பாவ்’ உறையைப் பிரித்தார். அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.
ஆங் பாவ் உறைக்குள் மற்றோர் ‘ஆங் பாவ்’ உறையும், காசோலையும் இருந்தன. அவற்றோடு அச்சிட்ட தாளும் பிணைக்கப்பட்டிருந்தது. அந்தத் தாளில் பார்வையற்றோர் இல்லம் என்ற எழுத்துக்களும் அதன் அடையாளமும் பொறிக்கப்பட்டிருந்தன.
அந்தத்தாளையும் காசோலையையும் கணக்குப் பிள்ளையிடம் கொடுத்தார். அவர் வாங்கிப் பார்த்துவிட்டு ‘கையிலுள்ள ஈரம் காய்வதற்குள் நன்றி மறக்கிற இந்த உலகத்துல இப்படி நெஞ்சில் ஈரம் உள்ளவங்களுந்தான் இருக்கிறாங்க!’ என்றார்.
புன்னகை முகத்தில் மின்ன ‘ஆமாம்’ என்று பொருள்பட தலையை ஆட்டிய அழகப்பனார் ‘நம்ம செக் புக்கை எடுங்க!’ என்றார்.
கணக்குப்பிள்ளை செக்புக்கை எடுத்தார்.
ஒரு கிழமை ஓடியது.
பார்வையற்றோர் இல்லத்திலிருந்து அழகப்பனாருக்கும், செங் கியானுக்கும் தனித்தனியாக ஒரே நாளில் மடல் எழுதியிருந்தனர்.
‘அழகப்பாவுக்கு எழுதாமல் எனக்கு எழுதி யிருக்கிறாங்களே!’ என்று எண்ணியபடி செங் கியான் மடலைப் பிரித்தார். நன்கொடை கொடுத்ததற்காக பார்வையற்றோர் இல்லத்திலிருந்து நன்றி தெரிவித்து எழுதப்பட்டிருந்தது.
கண்களில் இன்பக் கண்ணீர் துளிர்த்தது.
செங் கியான் மடலில் குறிப்பிட்டிருந்த தொகையைப் பார்த்தார். தான் அழகப்பனார் பெயரைப் போட்டுநல்கிய தொகையை விடத் தன் பெயருக்கு அழகப்பனார் போட்ட தொகை கூடுதலாக இருந்தது.
அவர் நெஞ்சம் இனித்தது. ‘கெம் கி’ என்று குரல் கொடுத்தார். அந்த மகிழ்ச்சியில் அவளும் பங்குபெற!
– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
![]() |
1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
1 நிமிட கதைகள் 2
ராமன் செல்வராஜ்
October 24, 2026
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
