அவரவர் பார்வையில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2025
பார்வையிட்டோர்: 366 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சிலருடைய வாழ்க்கை முரண் நிறைந்தது . நகை முறண் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாய் இருக்கும். என்னுடைய அக்கா பெண் கிருத்திகாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைச் சொன்னால் உங்களுக்கு நன்கு விளங்கும்.

கிருத்திகா ரொம்ப நல்ல பெண். படிப்பில் கெட்டிக்காரி. நல்ல அழகும், அழகுக்கேற்ற படிப்பும் படிப்புக்கேற்ற குணமும் உடையவள். நாவல்களில் வர்ணனை வருமே . பொற்சிலை போல் இருப்பாள்…. அது மாதிரி ரொம்ப அழகாயிருப்பாள். தாமரையை விட மென்மையானவள் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யறா. ஜாதகம் பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து திலீப்பைக் கல்யாணம் செஞ்சுண்டு ஒரு வருஷம்தான் ஆச்சு . கணவன் கொடுமை தாங்க முடியாமல் கிருத்திகா குடும்பம் என்னும் வட்டத்தில் அடங்காமல் பிறந்த வீட்டுக்கு வந்துட்டா. திரும்பிப் போக மாட்டேன் என்று திட்ட வட்டமா சொல்லிண்டு இருக்கா.

ஒரு நாள் என்னுடைய அக்கா கிட்டேயிருந்து போன் வந்தது. ” கிருத்திகா ஆத்துக்காரரின் சித்தப்பாவும் சித்தியும் பேச வந்திருக்காங்க . நாராயணா, நீயும் கூட இருந்தா நல்லா இருக்கும்.உடனே கிளம்பி வா..”

நான் உடனே அக்கா வீட்டுக்குப் போனேன்.. அவளைப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவது சம்பந்தமாகத்தான் இருக்கும்ன்னு . நான் நினைச்சது ரொம்பச் சரி. அங்கு வந்திருந்த திலீபின் சித்தி ” கணவன் மனைவிக்குள்ளே சண்டை வர்றது சகஜம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறத்துக்கு நாள் ஆகும். உங்களுக்குள்ளே ஈகோதான் பிரச்சனை. பேசித் தீர்த்துக்கலாமே. கிருத்திகா நீ எங்க கூட வா. .” என்று கெஞ்சினாள்.

”அவன் பயங்கர முரடன் . குடிப்பான். என் நகையெல்லாம் எடுத்து வித்துட்டான். பொய், களவு , சூதாட்டம், குடி ஆகிய எல்லா கெட்ட பழக்கமும் அவங்கிட்டே இருக்கு. போதாததுக்குக் கெட்ட வார்த்தையிலே திட்டுவான். என்னைப் போட்டு அடிப்பான். கிள்ளக் கூடாத இடத்திலே கிள்ளுவான். நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு வீட்டை விட்டு துரத்திட்டான். அவன் நாசமாப் போக . நா அவனுடன் வாழ மாட்டேன், அவனை விவாகரத்து செய்யப் போறேன்” என்று தெளிவாச் சொன்னாள்.

அக்காவுக்குத்தான் மனக்குறை. “ஏண்டி நல்லா யோசிச்சுதான் முடிவு எடுத்தியா? அப்புறம் வருத்தப் படப்போறே. என்றாள்.

“அவளுக்கு எது சரின்னு படறதோ அவளே தீர்மானிக்கட்டும்” என்று விட்டேத்ந்தியா சொன்னார் கிருத்திகாவின் அப்பா.

”மென்மையான கிருத்திகாவுக்கு இப்படி ஒரு புருஷன் அமையணுமா”. என்று எனக்குத் தோன்றியது. விவாகரத்துன்னு முடிவு எடுத்துட்டாயானா ஜீவனாம்சம் கேள். அதுக்கு உனக்கு உரிமை இருக்கு.” என்றேன்.

“எனக்கு ஜீவனாம்சம் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். நா அவர் கிட்டேயிருந்து விடுபட்டா போதும். கணவன் அமைவது எல்லாம் அவரவர் தலைவிதின்னு இருந்த காலம் எல்லாம் போயாச்சு. இப்போ எல்லாம். பிடிக்கலன்னா டைவர்ஸ்தான்.”

அன்னைக்கு அவ சொன்னது போல் அட்வகேட் வசுமதியைப் பார்த்து விவாக ரத்துக்கு நோட்டீஸ் கொடுத்துட்டா.

எனக்கு என்னமோ, ”அவள் இன்னும் ஒரு வருஷம் பொறுத்திருந்திருக்கலாம். அதற்குள் அவசர முடிவு எடுத்துவிட்டதாய்” தோன்றியது.

நான் வேலை விஷயமாய் டெல்லி போய்விட்டேன்.. ஒரு நாள் ”கிருத்திகாவுக்கு விவாக ரத்து கிடைச்சுட்டது” என்று என் அக்கா அலைபேசியில் சொன்னாள் ..

டெல்லியிருந்து திரும்பி வந்ததும் கிருத்திகாவைப் பார்க்க அவ வீட்டுக்குப் போய் அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்தவன் .சிகப்பாய் களையாய் இருந்தான்.. நெற்றியில் திருமண். “கிருத்திகா இல்லையா? என்று கேட்டதிற்கு, “உள்ளே இருக்கிறாள். உட்காருங்க இப்ப வந்துடுவா” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே “மாமா” என்று உரக்கக் கத்திக்கொண்டே கிருத்திகா வந்துவிட்டாள் அவள் கழுத்தில் தாலி. மடிசார் கட்டிலிருந்த அவளைப் பார்த்து வியந்தேன். ”கிருத்திகா,உனக்கு கல்யாணம் எப்போ நடந்தது, நல்லா இருக்கியா?” என்றேன்.

“கல்யாணம் நடந்து நாலு மாசம் ஆச்சு மாமா. சந்தோஷமாய் இருக்கோம். இவர் என் கணவர். நீல மாதவன் – அவள் தன் கணவனை அறிமுகம் செய்து வைத்தாள்

”நீ…..ல மாதவன், நீல… மாதவன்” மனசுக்குள் சொன்னேன்.

சாரி, நீங்க டெல்லியிலே இருந்ததாலே உங்களிடம் என் கல்யாணத்தைப் பத்திச் சொல்ல முடியவில்லை.

“இதோ காபி போட்டு எடுத்துண்டு வரேன்” சமையலறைக்குள் சென்றாள்.

நீல மாதவன் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, எனக்கும் இது இரண்டாம் கல்யாணம்தான். என் முதல் மனைவியை விவாகரத்து செயதுவிட்டேன். அவ என்னை ரொமபக் கொடுமைப் படுத்தினா. அடங்காப் பிடாரி. என்னை ஒருமையிலேதான் பேசுவா. டெல்லியில் பிறந்து வளர்ந்தவ. ரொம்ப அல்ட்ரா மாடர்ன் டைப். சொந்தமா மீடியா கம்பெனி நட்த்தறா. கம்பெனிக்கு எம்.டி. அவதான். எப்பவும் பார்டி, மீட்டிங்னு ராத்திரி பத்து மணிக்குத்தான் வருவா அதுவும் குடிச்சுட்டு வருவா. பார்ட்டிக்குப் போகும்போது தாலியைக் கழட்டி வீட்டிலே வைச்சுட்டுப் போவாள்.. எப்போதும் காத்தாலே எட்டு மணிக்கு முன்னாலே எழுந்திருக்க மாட்டா.

சமையல்காரி வைச்சிருந்தா. அவ லீவுன்னா நாந்தான் சமையல் செய்யணும். ஒரு நாள் கூடக் கோவிலுக்கு வரமாட்டா. என் பூஜை புனஸ்காரம் குணத்துக்கு அவ ஒத்துப் போகலை. இப்படி இருந்தா நா எப்படி அவ கூட வாழ முடியும்? குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாக ரத்து சம்பந்தமா அட்வேகேட் வசுமதியின் ஆபீஸ் போகும்போதுதான் கிருத்திகாவைப் பார்த்தேன். முதல் முதல் பார்வையில் அவளும் ராங்கிகாரியாய் இருப்பாள் என்று நினைத்தேன். என்று சொல்லிவிட்டு நிறுத்தினான். கிருத்திகா காபியைக் கொண்டு வந்து கொடுத்தாள்.”மாமா காபியைச் சாப்பிடுங்க.” லேசாகச் சிரித்த நீல மாதவன், ”கிருத்திகா நீ மீதியைச் சொல்லு. ”என்றான்.

கிருத்திகா தொடர்ந்தாள்.. . ” நான் என் விவகரத்து விசயமாய் அட்வகேட் வசுமதியை அடிக்கடி பார்க்கப் போவேன். அப்படி ஒரு முறை போகும்போது அவரை அட்வகேட் வசுமதியின் ஆபிஸில் பார்த்தேன். அன்று நான் அவசரமா ஆபீஸ்க்குப் போக வேண்டும். என் முகத்திலிருந்த டென்சனைப் பார்த்து, ”நீங்க வேண்டுமானாலும் முதலில் அட்வகேட்டைப் பாருங்கள்”என்று பெருந்தன்மையாய் முதலில் என்னை அட்வகேட்டைப் பார்க்கச் செய்தார். அவரின் விட்டுக் கொடுக்கும் பண்பு எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது..

மறுபடியும் அவரிடம் பேசும் போது. அவர் பெயர் நீல மாதவன் ; பல் மருத்துவர் ; மாம்பலத்தில் கிளினிக் வைத்திருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். அவரின் மென்மையான சுபாவத்தால் ஈர்க்கப்பட்டேன். அவர் மனைவியைப் பற்றிச் சொன்னார். என் நிலைமை மாதிரியே அவர் நிலைமையும் இருந்ததால் எங்களுக்குள் ஒரு நட்பு ஏற்பட்டு விட்டது.

இரண்டு பேருக்கும் ஒரே நாளில் கோர்ட் தீர்ப்பு கிடைத்தது.

அன்று இரவு கட்டிலில் படுத்ததும் விழிகளை மூடி என் வருங்காலத்தைப் பற்றி சிந்தித்தேன். தோழிகள் சொலவது போல் திருமணமே செய்து கொள்ளாமலே இருக்கலாமா அல்லது யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாமா? என்று யோசித்ததில் யாரையாவது என்ன? நீல மாதவனையே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று என் உள் மனசு சொல்லியது. அன்றிரவு நீல மாதவன் என் கைத்தலத்தைப் பற்றுகிற மாதிரி கனவு கண்டேன்.

அட்வகேட் கிட்டேயிருந்து கோர்ட் ஆர்டர் வாங்கப் போன அன்று அவரும் ஆர்டர் வாங்க வந்திருந்தார்.

மகிழ்ச்சியோடு இனிப்பை அவரிடம் கொடுத்து,”அடுத்தது என்ன?”என்று கேட்டேன். ”அடுத்தது நிம்மதியான வாழ்க்கைதான்” என்றார்.

இருவரும் சிரித்தோம்.

”நாம் இனி சேர்ந்து வாழலாம்” என்று நான் தான் அவரிடம் என் காதலைத் தெரிவித்தேன்.. அவர் உடனே சம்மதிக்கவில்லை. ”என் வழி வேறு” என்று நாசுக்காக ஒதுங்கிக் கொண்டார். என்னால்தான் அவரை மறக்க முடியவில்லை. பல முறை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். அவர் அலைபேசியை எடுக்கவில்லை…

வேறு வழியில்லாமல் அவர் கிளினிக்க்குப் போய் அவரிடம் கெஞ்சினேன். அவர் ஒரு நிபந்தனையோடு என்னை மணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். அவர் ஆசாரமா இருப்பவர். நானும் பூஜை, புனஸ்காரமென்று அவர் வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அவர் போட்ட நிபந்தனை. அதற்கு நான் ஒப்புக் கொண்டேன். எங்கள் திருமணம் இனிதாக நடந்தது. நாங்க இரண்டு பேரும் சந்தோஷப் பறவைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வேடிக்கையைக் கேளுங்கோ.

”போனவாரம் நானும் என் கணவரும் சரவணபவன் ஒட்டலுக்குச் சாப்பிடப்போனோம். அங்குச் சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு பேர் என்னைக் கவர்ந்தனர். . தலையை விரித்துப் போட்டுக் கொண்டு மாடர்னா உடை உடுத்தியிருந்த பெண்மணியின் கழுத்தில் வட இந்திய பெண்கள் அணிவது போல் கருக மணி தாலி தொங்கிக்கொண்டிருந்தது. அவள் கூட இருந்தவனைப் பார்த்து அதிர்ந்தேன். என ஆத்துக்காரரிடம் கண் ஜாடை காட்டி, “அங்கே பாருங்க, அவன்.. அவன்;;; என்று முணுமுணுத்தேன். என் கணவரும் அவங்களைப் பார்த்துவிட்டு திகைத்து,

அவள், அவள் என்று கிசுகிசுத்தார்.

“அவ கூட இருக்கிற ராட்சதன்தான் என் மாஜி புருஷன் தீலீப்..”

“அந்த ராட்சசிதான் என் மாஜி மனைவி பூமிகா”.

அப்படின்னா! !

அப்படிதான்!!!

”நாங்க காரில் திரும்பி வரும்போது விதியின் விளையாட்டை நினைச்சு விழுந்து விழுந்து சிரிச்சுண்டே வந்தோம்.” என்று சிரித்த்தாள் கிருத்திகா. நானும் விழுந்து விழுந்து சிரித்தேன்.

– எதிர்வீடு (சிறுகதைகள்), வெளியீடு: FreeTamilEbooks.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *