அவசர புத்தி
இளைஞன் ஒருவன் அவசர புத்தி கொண்டவன். அவன் ஒரு முறை பயணம் மேற்கொண்டபோது நல்ல கோடைக்காலம்! வெயில் சுட்டெரித்தது. தாகத்தினால் தவித்த அந்த இளைஞன் ஆற்றுப் படுகை ஒன்றைக் கண்டான். ஆனால் ஆற்றில் துளிக்கூட நீரில்லை. வெறும் மணலாகக் காட்சியளித்தது!
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியே துறவி ஒருவர் வந்தார். அவரிடம் தாகத்தைத் தணிக்க ஏதாவது வழி சொல்லும்படிக் கேட்டுக்கொண்டான் அந்த இளைஞன்.
அதற்கு துறவி, “”இந்த ஆற்றுப் படுகையிலேயே நீர் இருக்கின்றது. நீ மணலில் தோண்டிப் பார்… நிச்சயம் தண்ணீர் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து அந்தத் துறவி மீண்டும் அந்த வழியே திரும்பி வந்தார். மிகவும் களைத்துப் போய் ஒரு கல்லின் மீது அமர்ந்திருந்த அந்த இளைஞனைப் பார்த்தார்.
“”உனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையா? ஏன் இப்படிக் களைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன், “”ஐயா, நீங்கள் சொன்னபடியே இந்த இடம் முழுவதும் தோண்டிப் பார்த்துவிட்டேன். எங்கேயும் தண்ணீர் கிடைக்கவில்லை. அதோ பாருங்கள்…” என்று காட்டினான்.
இளைஞன் காட்டிய இடத்தைப் பார்த்த துறவிக்கு வியப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. ஆமாம்! இளைஞன் காட்டிய இடத்தில் பல குழிகள் காணப்பட்டன.
உடனே இளைஞனைப் பார்த்து அந்தத் துறவி, “”ஏனப்பா நீ இத்தனை குழிகள் தோண்டியிருக்கிறாய்? இத்தனை குழிகள் தோண்டிய நீ, ஒரே இடத்திலேயே சற்று ஆழமாகத் தோண்டியிருந்தால் சுவையான நீர் கிடைத்திருக்குமே! நீயும் தாகத்தைத் தணித்திருக்கலாம்… இப்போது என்ன நடந்ததது பார்த்தாயா? பொறுமை இல்லாமல் இத்தனை குழிகளைத் தோண்டியதால் உனக்குத் தண்ணீரும் கிடைக்கவில்லை… உனது ஆற்றலும் வீணாகிக் களைத்துப் போய் விட்டாய்…” என்றார்.
பின்னர் அவரே, தன் கையிலிருந்த தடியால் ஓரிடத்தில் தோண்ட ஆரம்பித்தார். சற்றே ஆழமாகத் தோண்டினார். அங்கே சுவையான நீர் ஊற்றெடுத்தது. துறவி அந்த இளைஞனைக் குடிக்கச் செய்து அவனது தாகத்தைத் தணித்தார்.
இளைஞன் தனது அவசர புத்தியை உணர்ந்தான். அன்றிலிருந்து நிதானமாக, யோசித்து எதிலும் முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டு, துறவிக்கு நன்றி கூறிவிட்டுக் கிளம்பினான்.
– கீர்த்தி, கொளத்தூர் (ஏப்ரல் 2012)