அவசரப் பயணம்




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுவாமிநாதன் கிளம்பி விட்டார். நண்பர்கள் அவருக்குப் பிரியாவிடை விருந்து வைத்து நினைவுப் பரிசுகளை வழங்கி நெஞ்சோடு கட்டித் தழுவி விடைபெற்றுக் கொண்டார்கள். ஏறக்குறைய நாற்பத்தைந்து வருடகால வாழ்வைத் தந்த சிங்கை மண்ணில் இருந்து பிரிய முடியாத நினைவுகளோடு. நெஞ்சம் கனக்க விமானத்தில் ஏறி தம் இருக்கையைத் தேடிப்பிடித்து அமர்ந்து விட்டார்.
செலாமாட் மாலாம்.. குட் ஈவ்னிங்.. என்ற இனிய குரல்களின வரவேற்புடன் புன்னகை பூவாய் மலரும் பணிப் பெண்களின் முகத்தைப் பார்த்தபோது நெஞ்சு குளிர்ந்து போனது அவருக்கு. எவ்வளவு பணிவான அன்பு உபசரிப்பும் கவனிப்பும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டே விமான இருக்கையின் பெல்ட்டை சரியாகப் போட்டுக் கொண்டார். இந்த நாற்பத்தி ஐந்தாண்டுக் கால சிங்கை வாழ்க்கையில் இதுபோல் இரண்டு மூன்று முறை போய் வந்தவர்தாம் என்றாலும், இந்தப் பயணம் அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக அமைந்து விட்டதுதான் கொஞ்சம் மனதில் சலனத்தை உண்டு பண்ணியது.
எல்லாமே அவரை விட்டுப் பிரிவது போன்ற உணர்வு. சன்னல் வழியே தெரியும் வானம், அந்த மேகம், மின்னும் நட்சத்திரம் என்று எல்லாமே தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் உணர்வு மேலிட கண்ணில் நீர் பெருக ஆரம்பிக்கின்றது.
மணமுடித்து கணவன் வீடு செல்கின்ற பெண் தன் பிறந்த வீடைப் பிரியும்போது ஏற்படும் சோகம் இப்போது அவரைத் தொற்றிக் கொண்டது. விமானப் பணிப்பெண் எச்சரிக்கை செய்தாள். எல்லாப் பயணிகளும் தங்கள் இருக்கையைச் சரிபார்த்து அமர்ந்து கொள்கின்றனர். விமானம் மேலே கிளம்பி விட்டது. அமைதியாய் சாய்ந்து கொள்கிறார்.
அவர் முதல்பயணத்தையும், இந்தக் கடைசிப் பயணத்தையும் நினைத்தபோது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது.
பிழைப்பு தேடி வந்த கூட்டத்தோடு ஒண்டிக் கொண்டு வந்த அந்தக் காலம் கண்ணில் நிழலாடியது. அன்றைய வறுமை… அதுவும் இளமையில் வறுமை… அதுதான் எத்தனைக் கொடுமையானது. அந்தக் கொடுமைகளிலிருந்து மீண்டுவர அவர்பட்ட கஷ்டங்கள் அதன்பின் அவர் அடைந்த வெற்றிகள் எல்லாமே ஓர் இனிய கனவாகவே அவருக்குத் தெரிந்தது.
சாமிநாதனைப் பொறுத்தவரை புடம் போடப்பட்ட தங்கம் அவர். எல்லாக் காலங்களிலும் சோதனைத் தீயில் வெந்து வெண்சங்காக வெளியே வந்திருப்பவர். ஒரு காலத்தில் ஒரு நாலணா காசைக் கூட கையில் வைத்திருக்க முடியாத சூழ்நிலையில் இருந்தவர். இன்று அதே மண்ணில்,, அதாவது அவர் பிறந்த பட்டுக் கோட்டையில் ஒரு நாலுமாடி வீட்டுக்குச் சொந்தக்காரர் ஆகியிருப்பது அந்த மனிதரைப் பொறுத்தவரையில் மாபெரும் சாதனைதானே!
நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டவரின் மனக் கண்ணில் மனைவி மீனாட்சி தெரிகிறாள். நிச்சயமாக அவள் அதிர்ந்துதான் போவாள். அவளுக்கு அதிர்ச்சியைத் தரவேண்டும் என்பதற்காகவே தமது வருகையின் உட்பொருளடக்கத்தை இன்னமும் அவர் அவளிடம் சொல்லாமல் இருக்கிறார்.
மனைவி, மகன், மகள், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் அவரைப் பார்த்து அதிசயிக்கப் போகிறார்கள் என்ற நினைப்பே அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விமானப் பணிப் பெண் கொண்டு வந்த உணவை ருசிக்க ஆரம்பித்தார்.
வீடு வந்து சேர்ந்த மூன்றாம் நாள் மனைவியிடம் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சாமிநாதனுக்குக் குடும்பநிலை கொஞ்சம் புரிய ஆரம்பித்து. இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான பின்னும் வேலைவெட்டி இல்லாமல் உட்கார்ந்து தின்று கொண்டிருக்கும் மகனும், மாதத்திற்கு ஒரு முறை மாமூல் வாங்க வந்துவிடும் மருமகனும், படிப்பைப்பற்றிய கவலை இலாமல் சதா ஊர் சுற்றித் திரியும் பேரப் பிள்ளையும் அவருக்குக் கவலை உண்டாக்கினர்.
எண்பது வயதை முழுங்கப் போகும் அவருக்கு மனதில் முதன் முதலில் சிறு கலக்கம் பிறக்க ஆரம்பித்தது. எழுந்துபோய் மொட்டை மாடியின் விளிம்பில் நின்று விரக்தியுடன் வெளியே பார்க்கிறார். அந்தத் தெருவில் அவர் மட்டுமே உயர்ந்த இடத்தில் நிற்பது அவருக்குப் புலனாகிறது. ஆனால் அவரது மடபிள்ளைகள் அப்படி வாழ்வார்களா என்ற கவலை புதியதாய் வந்து ஒட்டிக் கொண்டு முகத்தில் சோகத்தைப் பூசுகிறது.
மனைவி அருகில் வருகிறாள். தோளில் கை வைத்து தன்பக்கம் திரும்புகிறாள். அந்த ஐம்பது வயதிலும் மேனியில் மின்னும் நகைகள் அவர் கண்களைக் கூசச் செய்கிறது. மௌனமாய்ப் பார்க்கிறார்.
“கவலைப் படாதீங்க.. அடுத்த பயணம் வர்றப்ப எல்லாம் சரியாப் போய்டும், புள்ளைங்களுக்குப் பொறுப்பு வந்துடும்”
சுரீர் என்று முதுகில் சூடுவிழுந்தது போன்ற வலி.
“அடுத்த பயணத்தில்” அப்படியானால் அவர் மறுபடியும் சம்பாதிக்க புறப்பட்டாக வேண்டும் என்று அவள் எதிர் பார்க்கிறாளா…?
அவர் எதுவும் பேசாமல் கீழே இறங்கி வெளியே நடக்கிறார். ஒரு காலத்தில் அவர் கூலி வேலை செய்து வயிற்றை நிரப்பிய பூமி இப்போது அவருக்குச் சொந்தமாகி இருந்தது. ஏகபோகச் சக்கரவர்த்தியாய் அந்த பசுமை போர்த்திய வயல்களைப் பார்த்துக் கொண்டு நடந்தவரின் முன்னே உறவுக்காரர்கள் மூவர் வந்து வணக்கம் சொன்னார்கள்.
“எப்பப் பயணம் வெச்சிருக்கீங்க மச்சான்? உங்களுக்கு விருந்து வெச்சு கௌரவப் படுத்தணும்.. நம்ம குடும்பத்துல நீங்கதான் அக்கரைச் சீமைக்குப் போய் நல்லா ஐஸ்வர்யத்தோட இருக்கீங்க.. எங்களுக்கெல்லாம் பெருமைதானே!
காலணி இல்லாத காலில் ஏதோ முள் குத்திட்ட வலி. பதில் சொல்லாமல் தலையை ஆட்டியவாறு நடக்கிறார். மனதில் ஏதோ புதுப்புது கேள்விகள் வலம்வரத் தொடங்கின. களத்து மேட்டில் பந்தலாய் நின்றிருந்த கருவேல மரத்தின் அடியில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் ஓய்வு கொள்ள விரும்பி படுக்கிறார். அருமையான தென்றல் வந்து தழுவிக் கொள்கிறது. நித்திராதேவி அவரை அணைக்கிறாள். கவலை மறந்து உறங்கிப் போகிறார்.
திடீரென்று மஞ்சள் மணம் மூக்கைத் துளைக்க கண் விழிக்கிறார். அவரது மூத்த மகள் திருமேனி அவரின் நெற்றியில் கை வைத்து “அப்பா” என்ற அப்பொழுக அழைக்கிறாள். மனம் குளிர மகளைப் பார்த்து புன்னகைபுரிகிறார்.
“என்னப்பா இங்கே வந்து தனியாப் படுத்திட்டீங்க. எழுந்திருச்சு காப்பி சாப்பிடுங்கப்பா..” மகளின் பரிவும் பாசமும் கையில் இருந்த வெள்ளி டம்ளரில் காப்பியாக உருமாறி வந்தது. காப்பியை வாங்கி கொண்டு மகளிடம் வீட்டு நிலவரத்தை விசாரிக்கிறார். பெருமையாக அவருக்குப் பதில் சொல்கிறாள் மகள்.
“எல்லாம் நல்ல இருக்குப்பா.. இந்தத் தடவை நீங்க பயணம் போய்க் கொஞ்சம் பணம் அனுப்பினா அத்தான் ஒரு எலக்ட்ரிக் கடை வைக்கலாம்னு ஆசைப்படுறாரு.. நானும் அப்பாகிட்ட சொல்றேன்னு சொல்லியிருக்கேன். அவருடைய ஆசையை நீங்கதான் நிறைவேத்தணும்.
சாமிநாதன் உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்துப் போகிறது. திடீரென்று ஓர் நெருப்புப் புயல் வீசி அதில் மாட்டிக் கொண்ட வெம்மை அவரைத் தகிக்கின்றது.
மகளை ஆதரவாய்த் தட்டிக் கொடுக்கிறார். வந்தவேலை முடிந்த திருப்தியில் அவள் வீடு திரும்புகிறாள். அவர் மனம் அந்தத் தனிமையில் ஓவென்று அழ ஆரம்பிக்கின்றது. வந்து சேர்ந்த இந்த மூன்று நாள்களில் யாராவது ஒருவர் அவரிடம்.
“நீங்கள் இன்னும் ஏன் பயணம் வைக்கிறீங்க.. இதுவரை உழைத்தது போதாதா.. நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.. இங்கேயே தங்கி விடுங்களேன்’ என்று ஒருமுறை.. ஒரேமுறை கூற மாட்டார்களா.. என்று உள்ளமும் கூடவே உடம்பும் ஏங்கியது.
இத்தனை காலம் இவன் உழைத்து ஓடாய்த் தேய்ந்து நம்மை எல்லாம் உயர்த்திவிட்டானே.. சாகப்போகும் காலத்திலாவது கொஞ்சம் சந்தோஷமாய் வைத்திருந்து கவனிப்போமே என்ற எண்ணம் ஏன் இந்த மனைவிக்கோ மக்களுக்கோ வரவில்லை…! இவன் இங்கே உட்கார்ந்து விட்டால் சொகுசாகத் தாங்கள் வாழ முடியாமல் போய்விடும் என்ற எண்ணம்தான் இவர்களை இப்படி பாசமில்லாமல் வைத்துவிட்டதா…
சுவாமிநாதன் கை கால்களைக் கழுவிக் கொண்டு உள்ளே நுழைகிறார். மனைவி கோயிலுக்குப் போகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். பூஜைத் தட்டில் பட்டுப் புடவை. மாலை மரியாதைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
“எல்லாம் நல்ல இருக்குப்பா.. இந்தத் தடவை நீங்க பயணம் போய்க் கொஞ்சம் பணம் அனுப்பினா அத்தான் ஒரு எலக்ட்ரிக் கடை வைக்கலாம்னு ஆசைப்படுறாரு.. நானும் அப்பாகிட்ட சொல்றேன்னு சொல்லியிருக்கேன். அவருடைய ஆசையை நீங்கதான் நிறைவேத்தணும்.
சாமிநாதன் உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்துப் போகிறது. திடீரென்று ஓர் நெருப்புப் புயல் வீசி அதில் மாட்டிக் கொண்ட வெம்மை அவரைத் தகிக்கின்றது.
மகளை ஆதரவாய்த் தட்டிக் கொடுக்கிறார். வந்தவேலை முடிந்த திருப்தியில் அவள் வீடு திரும்புகிறாள். அவர் மனம் அந்தத் தனிமையில் ஓவென்று அழ ஆரம்பிக்கின்றது. வந்து சேர்ந்த இந்த மூன்று நாள்களில் யாராவது ஒருவர் அவரிடம்
“நீங்கள் இன்னும் ஏன் பயணம் வைக்கிறீங்க.. இதுவரை உழைத்தது போதாதா.. நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.. இங்கேயே தங்கி விடுங்களேன்’ என்று ஒருமுறை.. ஒரேமுறை கூற மாட்டார்களா.. என்று உள்ளமும் கூடவே உடம்பும் ஏங்கியது.
இத்தனை காலம் இவன் உழைத்து ஓடாய்த் தேய்ந்து நம்மை எல்லாம் உயர்த்திவிட்டானே.. சாகப்போகும் காலத்திலாவது கொஞ்சம் சந்தோஷமாய் வைத்திருந்து கவனிப்போமே என்ற எண்ணம் ஏன் இந்த மனைவிக்கோ மக்களுக்கோ வரவில்லை…! இவன் இங்கே உட்கார்ந்து விட்டால் சொகுசாகத் தாங்கள் வாழ முடியாமல் போய்விடும் என்ற எண்ணம்தான் இவர்களை இப்படி பாசமில்லாமல் வைத்துவிட்டதா…
சுவாமிநாதன் கை கால்களைக் கழுவிக் கொண்டு உள்ளே நுழைகிறார். மனைவி கோயிலுக்குப் போகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். பூஜைத் தட்டில் பட்டுப் புடவை. மாலை மரியாதைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
வாங்க வாங்க .. நம்ம ஊர் எல்லையம்மன் கோயில்ல இன்னிக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை எல்லாம் வெச்சிருக்காங்க.. ஏழைகளுக்குத் துணிமணி எல்லாம் உங்க கையாலே கொடுக்கணும்னு பிரார்த்தனை பண்ணி இருக்கிறோம்.. நீங்க கைகால் சுகத்தோட ஆரோக்கியமா இருந்தாதானே நாங்க சந்தோஷமா இருக்க முடியும். புது வேட்டி, துண்டெல்லாம் வெச்சிருக்கேன்.. உடுத்திக்கிட்டுப் புறப்படுங்க..
உற்சாகம் பொங்க பௌவ்யமா சொல்லிக் கொண்டு கொண்டையில் ஒரு பந்து மல்லிகைக் பூவைச் சுற்றினாள் மனைவி. சாமிநாதனின் உணர்வுகள் நிலை குத்திக் போகின்றன!
“எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்து விட்டேன்.. என் நாடு என் சொந்தம்.. என மக்கள் என்று நம்பி… என்னை வளர்த்து மனிதனாக்கி உயர்த்திய அந்த நாட்டை உதாசீனப்படுத்தி ஓடிவந்த எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்” மனதுக்குள் முணகிக் கொண்டார்.
“இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. புறப்படு..அது எப்போதும் உன்நாடு. அதுதான் உன் தாய்நாடு.. அதற்கே உன்னைக் கொடு. அந்த மண்ணில் புதைந்தது மறுபடியும் எழும் அதுதான் சொர்க்கம்.. மனம் பேசியது.
மனைவியின் அழகிய தோள்களை ஆர்வமுடன் பற்றினார். கண்களில் களிப்பு பொங்கக் கூறினார். “மீனாட்சி.. நீ போய்ட்டு வா.. மனசு நிறைஞ்சு அம்மனை கும்பிடு.. உன் எண்ணம் எல்லாமே நல்லா இருக்கும்.. நானும் நல்லா இருப்பேன்.. இப்பவே நான் சென்னைக்குப் போற வேலை இருக்கு.. நீ உன் வேலையைப் பாரு.. நான் என் பயண வேலையைக் கவனிக்கணும்.
அவசர அழைப்புக்குப் புறப்படும் ராணுவ வீரனைப்போல் அவர் காரியத்தில் இறங்கிவிட்டார். மீனாட்சியின் பதட்டமோ பரபரப்போ அவர் காதில் விழவே இல்லை.
– செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2007, வெளியீடு: சிங்கை தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்.