அழகி…!
கடற்கைரையில் ஒன்றாக அமர்ந்து, பேசிப் பிரியும் ஜோடியைப் பார்த்ததும் நளாயினிக்கு அதிர்ச்சி.
” ஏய்ய்…! நில்லு… நில்லு. ..! தன்னைக் கவனிக்காமல் சென்ற தோழியைப் போய் வழி மறைத்தாள்.
” ஏய்ய். ..! நளா….! ” அவளுக்கும் தோழியைப் பார்த்த மகிழ்ச்சி, ஆனந்தம்.
” நான் கேட்குற கேள்விக்கு மொதல்ல பதில் சொல். .? ” நளாயினி நேரடியாகவே விசயத்திற்கு வந்தாள்.
” என்ன கேள்வி. .? என்ன பதில். .? ” இவளும் அவளைக் கேட்டாள்.
” இப்போ உன்னோட இருந்து பேசிப் போனது யார். .? ”
” ஏன். .? ”
” பதில் சொல் ..? ”
” சத்தியம் உன் அண்ணன் இல்லே. .”
” இந்த ஜோக்கடிக்கிற வேலையெல்லாம் அப்புறம். இப்போ என் கேள்விக்குப் பதில். .”
” பேர் முரளி. ”
” என்ன செய்றீங்க. .? ”
” காதலிக்கிறோம். .! ”
” நிசமா. .” அதிர்வாய்ப் பார்த்தாள்.
” நிசம் .! ”
நளாயினிக்கு திகைப்பை அடக்க முடியவில்லை. மட்டுப்படுத்திக்கொண்டு…
” நீ யார். ..? ” கேட்டு தோழியக் கூர்ந்து பார்த்தாள்.
” என்னடி இது. .? ” கலா நளாயினியை அதிர்வாய்ப் பார்த்தாள்.
” பதில். ”
” நான். . கலா. ..”
” மீதியை நான் சொல்றேன். நீ கல்லூரி அழகு ராணி. அழகுப் பசங்க என்ன. ..பெரிய பெரிய பணக்காரப் பசங்களெல்லாம் உன் கடைக்கண் பார்வைக்காகவும், காதலுக்காகவும் ஏங்கி இருக்காங்க. ஏன். ..பணக்கார இடத்திலிருந்து அழகான மாப்பிள்ளைகள் வந்து நிராகரிச்சுட்டே. அப்படிப்பட்ட நீ…. அழகுக்கு அஸ்திவாரமே இல்லாத இவனைக் காதலிக்கிறது அதிர்ச்சி, ஆச்சரியமா இருக்கு. உனக்குப் பைத்தியம் கியித்தியம் பிடிக்கலையே. .? !..” கேட்டாள்.
” எனக்கு அப்படியெல்லாம் ஒன்னும் ஆகல. நல்ல இருக்கேன். தெளிவாவும் இருக்கேன். முரளிதான் என் காதலர், கணவர். ” திட்ட வட்டமாய்ச் சொன்னாள்.
” என்னடி இது. .” நளாயினி அதிர்ந்தாள்.
” காரணம் சொல்றேன் கேள். மொதல்ல இந்த மாதிரி ஆளை எவளும் திரும்பிப் பார்க்க மாட்டாள். ஐயோன்னு மனசொடிஞ்சு கிடப்பாங்க. என்னை மாதிரி அழகான பெண் காதலிச்சா.. லக்கி பரிசே அடிச்சது மாதிரி சந்தோசப்படுவாங்க. கலியாணம் முடிச்சா… கண்ணுக்குள்ள வைச்சும் காப்பாத்துவாங்க. நம்ம இஷ்டத்துக்கு வேலை வாங்கிக்கலாம். ஆள் அடிமையா நம்ம காலடியில கிடப்பான். எல்லாத்தையும்விட சூப்பர்… அழகுக்கு அழகு எடுபடாது. இந்த மாதிரி ஆளோட சேர்ந்து போனா…நம்ம அழகு குறையாது. அழகு தூக்கலாவும் தெரியும். ” முடித்தாள்.
கேட்ட நளாயினிக்கு மயக்கம் வராத குறை. !!