அறிஞரின் பழமை நட்பு
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மாபெரும் புலவராகிய மீனாட்சிசுந்தரம்பிள்ளை. ஒருநாள் தம் மாணவர் பலரோடு வழிநடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு கிழ மனி தன் மூட்டையோடு வந்து கொண்டிருந்தான். அந்தக் கிழவன் மீனாட்சிசுந்தரம்பிள்ளையைக் கண்டவுடன், “மீனாட்சி சுந்தரம்! நலமாக இருக்கிறாயா?” என்று நன்மை உசாவினான்.
அப்போது உ.வே.சாமிநாதையர் முதலிய பல மாணவர்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களோடு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு கிழவன் தம் ஆசிரியரைப் பெயர் சொல்லி அழைத்ததையும், ஆசிரியர் அதற்குச் சினந்து கொள்ளாமல் அக்கிழவனோடு பேசிக்கொண்டிருப்பதையுங் கண்டு வியப்படைந்தார்கள்.
அக்கிழவன் சென்ற பிறகு அவர்கள் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களைப் பார்த்து, “இந்தக் கிழவர் யார்? தங்களைப் பெயர் சொல்லி அழைத்தாரே, தங்களைப் பெயர்சொல்லி அழைத்துப் பேசியவர்களை நாங்கள் இதுவரையிற் பார்த்ததில்லையே?” என்று கேட்டார்கள்.
அதற்கு மீனாட்சிசுந்தரம்பிள்ளை, “இவர் சிறு பருவத்தில் என்னுடன் பள்ளிக்கூடத்திலே கல்வி பயின்றுகொண்டிருந்தவர். பள்ளிக்கூடத்தை விட்ட பிறகும் என்னோடு சிலகாலம் படித்துக்கொண்டிருந்தார். பிறகு குடும்பத் தொல்லையால் மேற்கொண்டு படிப்பதை நிறுத்திவிட்டார். பழைய நண்பராகையால் கண்டால் இவ்வாறுதான் பேசுவார். அதில் தவறென்ன?” என்று கேட்டார். பிள்ளையவர்களின் தொன்மைமறவாக் குணம் போற்றத்தக்கதன்றோ?
“தொன்மை மறவேல்” (இ – ள்.) தொன்மை – பழமையாகிய நட்பை , மறமேல் – மறந்துவிடாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,