அரசகுமாரியின் ஆவி




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இது து நிஜமாய் நடந்தது” என்றார் நண்பர். அவர் சொன்னால், அதில் சந்தேகத்துக்கே இடமில்லை. அவர் ஆவியுலக ஆராய்ச்சியாளர் அல்ல; மூட நம்பிக்கை உள்ளவரும் அல்ல. என்னைப்பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. நான் எந்த விஷயத்தையும் சுலபத்தில் நம்புவதில்லை. நன்றாய்த் தீர விசாரித்து, உண்மை என்று ஏற்பட்டதைத்தான் நம்புவேன்; அல்லது உண்மை என்று ஏற்படக்கூடியதாகவாவது இருக்கவேண்டும். நண்பர் சொன்னார். நான் நம்பினேன். சத்தியம் வலைக்குள் விழுந்து விட்டது.
அநேக வருஷங்களுக்கு முன்னே, வடக்கே எங்கேயோ இருந்து – ஹைதராபாதிலிருந்து என்று நண்பர் சொன்ன ஞாபகம்-கால் பந்தாட்டக் கோஷ்டி ஒன்று சென்னைக்கு வந்தது. அந்த வடக்கத்திக் கோஷ்டியுடன், சென்னைக் கோஷ்டி ஒன்று விளையாட ஏற்பாடு ஆகியிருந்தது.
வடக்கத்திக் கோஷ்டியார் சென்னையின் விருந்தாளிகள் அல்லவா? அவர்கள் தங்க ஒரு புராதன மான மாளிகை ஏற்பாடாகியிருந்தது. க்ஷேத்திர கணிதக் கருவிகளைக்கொண்டு அமைத்தவை போன்ற வளைவுகளையும் கோணங்களையும்கொண்ட வெகு கணக்கான கட்டிடம். உயிர்ப் பிராணியோ இயற்கை யில் காணும் செடி கொடியோ எதையும் சுட்டிக் காட்டக்கூடிய சிற்பம் அல்லது சித்திரம் ஒன்றுகூட இல்லாமல், மகா சுத்தமாக இருந்தது அதன் அமைப்பு. தாஜ்மகலின் சலவைக்கல் செளந்தரியம் எந்தச் சிற்பக்கலைக்கு உரியதோ, அதே கலைக்கு உரிய தாகத் திகழ்ந்தது இந்தக் கட்டிடமும். பூர்வகால ஆர்க்காட்டு நவாபின் பரிவாரத்தைச் சேர்ந்த எவரோ ஒருவர் இந்த மாளிகையின் சொந்தக்காரர் என்று சொல்லுகிறார்கள்.
மாளிகையைச் சூழ ஒரு பெரிய சுற்றுச் சுவர் நின்றது. அது இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் சிறிது சிறிது இடிந்து வெள்ளிப் பூண் கட்டிய செம் பற்களைக் காட்டிக் கோரமாய்ச் சிரிக்கும் பூதவாய் போல் மூளியாக இருந்தது. பழுது பார்க்காத சுவர்; ஆனால், அதற்குத் துணையாகப் புதிய முட்கம்பி வேலி ஒன்று அமைந்திருந்தது. சுவர் கறுத்துப் பாசி படர்ந்து ‘புண்யபுஷ்கரணி’களின் வாசனையைப்போல் வாசனை வீசிக்கொண்டிருந்தது.
மாளிகையின் நாலு புறத்திலும் அகன்ற தோட்டம் ஒன்று இருந்தது. அதில் அங்கங்கே இரண்டொரு மரங்கள் நின்றன. நவாபு மாளிகை யிலே துளசி நாச்சியாருக்கு என்ன வேலை என்று நாம் நினைப்போம். ஆனால் நாச்சியார் அப்படி நினைக்க வில்லை. அந்தத் தோட்டத்திலே தோன்றிய இடங்களிலே தாராளமாய் அவரும் கோயில்கொண் டிருந் தார். நம் சூரிய பகவான் முஸ்லிம்களுக்கு காய்கிறார்; நம் வருண பகவான் அவர்களுக்கும் பெய்கிறார்; நம் வாயு பகவான் அவர்களின் மூக்கிலும் உலவுகிறார். அவர்களுடைய அல்லா நம்மையும் படைத்து அளித்துப் பாதுகாக்கிறார். நவாபு வீட்டிலே துளசி நாச்சியார் போய்க் குடிபுகுந்ததும் இந்த மாதிரி ஒரு விஷயந்தான். காட்டுப் பூஞ்செடிகளும் நெருஞ்சி முள்ளும் சிற்சில இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன.
மாளிகை ஜன்னல்களில் பச்சை, சிவப்பு, மஞ்சள் கண்ணாடிக் கதவுகள் போட்டிருந்தன. ஆனால் அவற்றில் சில உடைந்து, காகிதப் பிளாஸ்திரியோடு துலங்கின. ஓர் ஆள் கட்டியணைக்க முடியாத வட்டத் தூண்கள், முன்ஹாலில் நின்றன. நாலு புறமும் அறைகள். நடுவிலே பெரிய பண்டபம்.
மண்டபத்தின் ஒரு மூலையிலே, ஒரு பீரோ கிடந்தது. இரண்டு மடக்கு மேஜைகளும், ஒரு டஜன் மடக்கு நாற்காலிகளும் இன்னொரு பக்கத்தை அலங் கரித்துக்கொண் டிருந்தன. இவையெல்லாம் விருந் தாளிகளின் உபயோகத்துக்காக வந்திருப்பவை. அவர்கள் போனதும் இவையும் போய்விடும்.
மற்றவர்களெல்லாம், உள்ளூர் நண்பர்களின் அழைப்புக்கு இணங்கி வெளியே போய்விட்டார்கள். இப்திகாருத்தீன் மட்டில் பின் தங்கிவிட்டான்.. இப்தி ஒரு கவிஞன்; அப்படியென்றால் பாட்டுக்கள் பல கட்டியிருக்கிறான் என்று அர்த்தமல்ல. பாட்டுக் கள் கட்டினால் தான் கவிஞனா? பாட்டுக்கள் கட்டுகிற வனெல்லாந்தான் கவிஞன் ஆகிவிடுவானா? கொட்டினா லும் கொட்டாவிட்டாலும், தேள் தேள்தான்; பிள்ளைப் பூச்சியாகாது. தேளுக்குக் கொடுக்கே ருசு; கவிஞனுக்குக் கற்பனையே ருசு. கவியுள்ளம் படைத் தவனே கவிஞன்; தனிமையில் இன்பம் காண்பவனே கவிஞன். இப்தி இப்படிப்பட்ட ஒருவனே. அவன் ஈயும் எறும்பும்போலச் சமுதாயப் பிராணி அல்ல; ஏகாந்த ஜீவன். அவன் எப்படி விளையாட்டுக் கோஷ்டியில் சேர்ந்தான் என்றால், அதை இயற்கை விசித்திரங்களில் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும்.
மாலை வெயில், ஜன்னல் கண்ணாடிகளின் வழியே மண்டபத்தின் உள்ளே வர்ணக்கோலம் போட்டுக் கொண்டிருந்தது. இப்திக்கு அது பிரமாத ஆனந்தம் உண்டாக்கியது. அதை அவன் உற்று உற்றுப் பார்த்தான். அற்புத தீபத்தை எடுக்கப்போன அல்லாவுத்தீன், பொன்னும் மணியும் முத்தும் ரத்தின மும் குவிந்து கிடந்த குகைக்குள் புகுந்தபோது என்ன கு தூகலம் அடைந்திருப்பானோ அதேபோல் இப்தியின் உள்ளமும் குதூகலம் அடைந்தது.
இப்தி இந்தப் பரவச நிலையில் ஆழ்ந்திருந்த போது சமையற்காரன் அந்தப் பக்கமாக வந்தான்.
“ஐயா எல்லாரும் எப்ப வருவாங்க?’ என்று அவன் கேட்டான்.
இப்திக்கு அது காதில் வி ழ வேயில்லை. புருவத்தைச் சுளித்தபடி இப்தி எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான்.
சமையற்காரனுக்கு எரிச்சலாக இருந்தது. அவன் பொறியை அவன்தானே தொலைக்கவேண்டும்?
”என்னாங்கோ? இப்ப வருவாங்களா? ராத்திரி தான் வருவாங்களா? பாலு வாங்கணும்” என்றான் சமையற்காரன்.
சமையற்காரனின் நச்சரிப்பு இப்திக்குத் தாங்க வில்லை. “போப்பா. எல்லாரும் ராத்திரிதான் வருவாங்க. ‘என்னைத் தொல்லை பண்ணாதே. போ” என்றான் இப்தி.
சமையற்காரனுக்கு வெகு சந்தோஷம். ஒரு சின்ன லோட்டாவுடன் அவள் வெளியே போய் விட்டான்.
இன்பச் சிந்தனைகளைக் கலைத்தால், தூங்கும் பம்பரத்தைத் தள்ளிவிட்ட தந்தளிப்பை அடைகிறது மனச. அது மீண்டும் ஒரு நிலை கொள்ளும் வரையில் தான் என்ன வேதனை! இப்தியின் மனசு எங்கெங்கோ தாவியது. ஊர் நினைவு, ரெயில் பிரயாணத்தில் பட்ட அவஸ்தையின் நினைவு,பெஜவாடா பிளாட்பாரத்தில் அன்ன நடை போட்ட ஒரு பூதகியின் நினைவு (அப்பாடா! அவளை நினைத்தாலே, உடல் எப்படிக் குலுங்குகிறது!), நாளைக்கு நடக்கப்போகும் போட்டி விளையாட்டின் நினைவு – ஆம், அந்த நினைவுந்தான் வந்தது. இரண்டு வருஷத்துக்கு முன், காசியில் இப்தி ஒரு ‘கோல்’ போட்டானே,ஆகா,அது என்ன விறுவிறுப்பு! எதிர்த்த கட்சியில் இருந்த ஒரு குண்டோதரன் கடைசி நிமிஷத்தில் என்ன பாடு படுத்திவிட்டான்! மல்லுக் கட்டி அவனையும் எற்றிப் பந்தை உந்திவிட்டானே இப்தி; அப்போது என்ன கரகோஷம்! எப்படித்தான் அவனை இவன் ஜயித் தானோ? இப்திக்கே அது மகா ஆச்சரியமாக இருந்தது.
மேஜையின் மேலே பூநூல் தொப்பி ஒன்று கிடந்தது. அதை என்னவோ ஞாபகமாக இப்தி தன் கையிலே எடுத்தான். அதைப் பிசைந்து சுருட்டினான். பாதி பச்சையும் பாதி வெள்ளையுமான கால் பந்தாட்டச் சல்லடம் ஒன்றைப் பீரோவி லிருந்து எடுத்து இந்தத் தொப்பி மீது உருட்டிக் கட்டினான். பிறகு. அதைக் கால் பந்து போல் கீழே போட்டு, காலால் எற்றத் தொடங்கிவிட்டான். காசிக் குண்டோதரனுடன் மல்லுக் கட்டும்போது, எப்படி முழங்கை முட்டியது? கால் பின்னி இழுத்தது? அதையெல்லாம் இப்தி மறுபடியும் நடித்துப் பார்க்கலானான். போராட்டம் ஒரு முறையா நடந்தது? பல முறை அல்லவா?
இப்தி பலவிதமாய் நடித்தான். ஒத்திகை வர வர மும்முரமாகிவிட்டது. இப்தி ஓடினான்; ஆடினான். ஒவ்வொரு நாற்காலியும் பந்தைப் பறிக்க வந்த எதிரிபோல் அவனுக்குத் தோன்றியது. நாற்காலிகளைத் தள்ளினான்; முட்டினான்; வீழ்த்தினான். தாலும் சில சமயம் விழுந்தான். சண்டை வேறே; விளையாட்டு வேறே; விளையாட்டின் நடிப்பு வேறே – இப்படிப் பாமரர்கள் நினைக்கலாம். இப்திக்கு அந்த வித்தியாசமெல்லாம் இல்லை. அவன் கவியுள்ளம் படைத்தவன்.
நெற்றியிலே முத்துப்போல் துளித்த வேர்வையை இப்தி கட்டைவிரலால் வழித்து எறிந்தான். பெருமூச்சுவிட்டான். படம் எடுத்தாடும் சர்ப்பத்தின் பெருமூச்சு; குஸ்திப் பயில்வான்கள் உடம்பிலே எண்ணெய் தடவி, அத்தனையும் வேர்வையால் சுத்தியாகும்வரையில் பஸ்கிபோடும்போது உண்டா கும் உச்சுவாஸ நிசுவாஸப் பெருமூச்சு. அவன் உடல் துவண்டது. நா வறண்டது. தாகமெடுத்தது. அதையெல்லாம் இப்தி லட்சியம் செய்யவேயில்லை. கடைசியிலே பந்து எதிரிகளை யெல்லாம் – அவை தான் நாற்காலிகள் – கடந்துவிட்டது. இப்தி கோல் போட்டு விட்டான்.
வெறி பிடித்ததுபோல், அவன், “கோல் கோல்!” என்று கத்தவும் கத்திவிட்டான்.
அப்போது என்ன அதிசயம்! என்ன அதிசயம்! படார் என்று ஒரு சத்தம் கேட்டது. கலகல வென்று ஒரு சிரிப்பொலி எழுந்தது.
அந்தி மயங்கும் நேரம். மண்டபத்திலே இருந்த வர்ணக்கோலங்கள் மறைந்துவிட்டன. இதுதானே தூண் பிளந்து, நரசிங்கமூர்த்தி தோன்றிய நேரம்? ஆனால், இந்தச் சத்தம், அண்டம் கிடுகிடுக்கத் தூண் வெடித்த சத்தம் அல்ல. இந்தச் சிரிப்பொலியும், மேகங்கள் முட்டி மின்னி உருண்ட இடிச் சிரிப்பல்ல.
இப்தியை ஏதோ ஒரு மோகன மந்திரவலை வந்து கவிந்ததுபோல் இருந்தது. அது அவன் மனசைத் திகைக்கச் செய்தது. ஆனால், அவன் உடம்பு என்னவோ புளகிதம் அடைந்தது.
அந்தச் சத்தம்! ஏதோ ஒரு பொன்னுலகின் கதவு திறந்ததுபோன்ற சத்தமே அது. சிரிப்பொலியோ சொர்ண கலசத்தில் மெல்லக் குலுங்கிய முத்தொலி தான்!
இப்தி இமையா நாட்டம் பெற்ற தேவனைப் போல் பார்த்தான். ஆனால், அவன் கண்கள் சிறிது இடுங்கியிருந்தன.
ஒரு கை! அந்தரத்திலே திடீரென்று எங்கிருந்தோ ஒரு கை வந்து தோன்றியது! இளந்தளிர் போன்ற கை! ஓவியன் எழுதிய சித்திரம் போன்ற கை! வளையல் கிணு கிணுத்த கை! எவளோ ஒரு வன
தேவதையின் கை!
அந்தக் கையிலே ஒரு வெண்மையான தட்டு. அதன் மேலே ஒரு டீ கப்! தேவமடந்தையின் கையிலே டீ கப்! ஏன் இருக்கக்கூடாது? நாகரிகம் என்பது மானிடரின் ஏகபோக உரிமையா? தேவ லோகத்திலும் நவநாகரிக டீ பரவியிருக்கக் கூடா தென்பது என்ன கட்டாயம்? அவர்களும் சோம பானத்தைக் கைவிட்டிருக்கலாம்.
அந்தக் கை-டீ கப் பிடித்த கை – லாகவமாய் அந்த ரத்திலே மிதந்து, மெல்ல மெல்ல இப்தியின் உதட் டருகே வந்தது.
ஓ! இதோ இன்னொரு கை தோன்றிவிட்டது. புஜத்திலிருந்து அலைந்த தாவணி நுனியைத் தள்ளி விட்டு, இப்தியின் தலையைப் பிடித்தது. அந்த மறு கை.
பிறகு, ஒரு சிரிப்பு வட்டம் வெட்டவெளியிலே தோன்றியது. ஆலிஸ் கண்ட அற்புத உலகத்தின் மாயப் பூனை சிரித்த சிரிப்பு மட்டிலும் தனிப்பட்டு அந்தரத்திலே சுழன் றதல்லவா? பூனை மறைந்த பின்பு, சிரிப்பு வட்டம் போட்டது அங்கே. இங்கே சிரிப்புத் தோன்றிய பின்பு. ஓவியன் தீட்டிய சித்திரம்போல், சந்திரபிம்ப முகம் ஒன்று உதய மாயிற்று.
அதன் பிறகு, மெல்ல மெல்ல ஒரு சம்பூர்ண உருவமே – ‘மகா சுகிர்த ரூபசுந்தரி’ ஒருத்தியின் உருவம் – கொடிபோல் துவண்டு, இப்தியின் எதிரே திரண்டு நின்றது.
அந்த அதிரூப மோகினி, தன் பவளவாய் திறந்து, முத்துப் பற்கள் தெரிய, அன்பு கனியும் புன்சிரிப்புப் பூத்து, இப்தியின் தலையை ஒரு கையால் பிடித்து, மறு கையால் டீ கப் பானத்தை அவன் உதட்டில் வைத்து அவனைக் குடிக்கச் செய்தாள்.
அவள் சிரித்தாள். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சிரிப்பு. ஆனால் பேசவில்லை.இப்தியும் பேசவில்லை. மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்புபோல் அவன் அவசமாய் மயங்கி நின்றான். பானத்தையும் மடக்கு மடக்கென்று குடித்தான்.
படீரென்று ஒரு சத்தம் கேட்டது. இப்தியைத் தூக்கிவாரிப் போட்டது. கனவிலிருந்து விழித்தது போல் கண்ணைத் துடைத்துக்கொண்டு சுற்று முற்றும் பார்த்தான். எதிரே இருந்த மோகன சுந்தரியைக் காணவில்லை; அவள் மறைந்துவிட்டாள்.
அப்போது சமையற்காரன் ஏற்றிவந்த பெட்ரோ மாக்ஸ் விளக்கொளியில், கீழே சிதறிக்கிடந்த தட்டும் டீ கப்பும் அவன் கண்ணுக்குத் தென்பட்டன.
“எலெக்டிரிக் விளக்கு ரிப்பேராயிடிச்சிங்க. இந்த விளக்கை வெச்சுக்கச் சொன்னாங்க…அடேடே! இதென்னாங்க? தட்டும் கப்பும் உடைஞ்சு கிடக்கு!… பரவாயில்லை. போகுதுங்க. யாரு பணம்? எவனோ குடுக்கறான்; எவனோ வாங்கறான்; எவனோ உடைக் கிறான்” என்று பாதி இப்தியை நோக்கியும் பாதி தனக்குத் தானேயும் பேசிக்கொண்டு, அந்த விளக்கை ஒரு மேஜைமீது வைத்துவிட்டுப் போனான் சமையற்காரன்.
அவன் பேசியது ஒன்றையும் இப்தி காதில் வாங்கவேயில்லை. தான் கண்ட அற்புதக் காட்சியைப் பற்றிய சிந்தனையிலே மூழ்கியவனாக, ஒரு சாய்வு நாற்காலியில் படுத்து. அவன் ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
நண்பர்கள் வந்துவிட்டார்கள். ஒரே கலகலப்பு. இப்தி மட்டிலும், என்னவோ ஒரு மாதிரி ஒதுங்கி யிருந்தான். எல்லாரும் உணவு கொண்டார்கள். இப்தி உண்ணவில்லை. “தலைவலி” என்று சொல்லி விட்டான்.
விஷயத்தை யாரிடமாவது சொல்லலாமா? இதென்ன பைத்தியக்காரத்தனம்! சொன்னால், யார் நம்புவார்கள்! ஆனால், அவனுக்குச் சந்தேகமே இல்லை. கண்ணுக்குக் கண்ணெதிரே கண்ட காட்சி பொய்யா? அப்படியானால், இந்த உலகமே பொய் என்று சொல்ல வேண்டியதுதான்.
இரவு எட்டு மணியாயிற்று. லேசாக நில வெறித்தது. நண்பர்களெல்லாம் மாளிகையைச் சூழ்ந்த தோட்டத்திலே மெல்ல உலவினார்கள்; உட்கார்ந்தார்கள்; வம்பளந்தார்கள். அடுத்த நாள் ஆட்டம் பற்றிச் சர்ச்சை செய்தார்கள்; சிரித்தார்கள்; கூச்சலிட்டார்கள். இப்தி எதிலும் கலந்துகொள்ள வில்லை. மாளிகையைவிட்டு வெளியே போகவே அவனுக்குப் பயமாக இருந்தது. உள்ளேயும் அவனுக்கு வெறிச்சென்று தோன்றியது. இப்தி முன்வாயிற்படியில் போய் உட்கார்ந்தான். அங்கேயும் தலைநிமிரப் பயம். நிலவொளியிலே காற்றில் ஆடிய மரங்கள் பேய்களைப்போல் தோன்றின, இப்தியின் கண்ணுக்கு.
அந்தக் காட்சியை-மோகினி தரிசனத்தை – நினைத் தால், ஒரு புறம் பரவசமாக இருக்கிறது; மறுபுறம் ஓர் ஏக்கமும் வேதனையும் உண்டாகின்றன. நண்பர் களிடம் சொல்லுவதா, சொல்லாது விடுவதா? மறு படியும்.. மறுபடியும் அது நிகழுமானால்..? அதன் விளைவு என்ன ஆகுமோ? யாரிடமாவது சொன்னால் தான், அவனது ஆதங்கம் தீரும்.
அந்தக் கோஷ்டிக்குள்ளேயே அவனுக்கு மிகவும் நெருங்கிய நண்பன் பிரபாசங்கர்தான்.
“சங்கர்,இங்கே வா ஒரு விஷயம்” என்றான் இப்தி.
சங்கரிடம் இப்தி அந்த விஷயத்தைச் சொன்னான். கதை முழுவதையும் கேட்டு முடித்தான் சங்கர். இந்தப் பேய் பிசாசு விஷயங்களில், சங்கருக்கு மனசுக்குள்ளே கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் சந்தேகம் இரண்டும் உண்டு. ஆனால், துளிகூட நம்பிக்கை இல்லாதவன் போல்தான் வெளிக்குப் பேசுவான்.
சங்கர் சிரித்துக்கொண்டே நகர்ந்தான்.
சிறிது நேரத்தில், விஷயம் எல்லாரிடமும் பரவி விட்டது.
சமையற்காரனை விசாரித்தார்கள். அவனுக்கு என்ன தெரியும்? “இப்தி ஐயா தனியாக இருக்கையில், யாரும் வரவேயில்லை” என்று அவன் கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.
“ஐயாவுக்கு யாரோ ஒரு பெண்பிள்ளை டீ கொண்டுவந்து கொடுத்தாளாமே! அவள் யார்? இங்கே எவளாவது வருகிற வழக்கமுண்டா?” என்று கோபி ரெட்டி கேட்டான்.
சமையற்காரன் சிரித்துக்கொண்டே கண்ணைக் குறும்பாகச் சிமிட்டிவிட்டு, “பெண்பிள்ளையா? இங்கே கூட்டுக்காரிகூடக் கிடையாதே. நான் தானுங்க டீ கொடுத்தேன். ஐயா வாங்கிக்கிட்டாரு. நான் போய் விளக்கேத்திக்கிட்டு வந்தேன்’ என்றான்.
“நானா? டீயா? உன் கையிலேயிருந்து வாங்கி னேனா? என்னடா உளறுகிறாய்?” என்றான் இப்தி.
“உங்கமாதிரிதானுங்க இருந்திச்சு. ஆனா அந்தி மயங்கின அந்த நேரத்திலே என்னத்தைச் சொல்ற துங்க!” என்று சொல்லிப் போய்விட்டான் சமையற் காரன். அநாவசியக் குறுக்கு விசாரணைக்கெல்லாம் அவன் இடம் கொடுக்கவில்லை.
விஷயம் யாருக்கு எப்படித் தோன்றினாலும் சரி; இப்தி மட்டும், தான் கண்ட மோகினியின் உருவத்தைத் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்திப் பார்த்தான். அவன் மனசு நிலைகொள்ளவில்லை. ராத்திரி அவள் வந்து மீண்டும் இவனைச் சந்திப் பாளோ? சந்திப்பதில் இவனுக்கு ஆசைதான். என்றாலும், தனியே படுத்திருக்க இவனுக்குப் பயமாக இருந்தது.ஓர் அறையிலே, லேசான ஒளிகொண்ட ஒரு விடிவிளக்குடன் சங்கரையும் துணைக்கு வைத்துக் கொண்டு இப்தி படுத்தான்.
இப்தி தூங்கினான். நல்ல தூக்கந்தான்.என்றாலும், புரண்டுகொண்டே இருந்தான். எத்தனை நேரம் தூங்கியிருப்பான் என்று சொல்ல முடியாது.
பாதி ராத்திரி இருக்கலாம். ஏதோ ஒரு கீதக் குரல்: “இப்தி, இப்தி, என் மன்னவா!” என்று அழைத்தது.
இப்தி பல்லைக் கடித்துக்கொண்டு சஞ்சலத்துடன் தூக்கத்திலே, “ஊஹும்! ஊஹும்!” என்று முனகினான்.
அந்தக் குரல், “இப்தி, இப்தி, என்னை மறந்தாயோ? என் டீயை மறந்தாயோ?” என்று மறுபடியும் கேட்டது.
இனி முடியாது. இனி அந்தக் குரலின் கவர்ச் சியை நிக்கிரகிக்க முடியாது. அது பாசக்கயிறுபோல் இப்தியை இழுத்தது.
இப்தி பாதி மூடிய கண்ணுடன் எழுந்திருந்தான். குரல் வந்த திசையிலே, “வந்தேன், வந்தேன்; இதோ வந்தேன், மோகினி!” என்று முணுமுணுத்துக்கொண்டே ஓடினான். அவனால் கத்த முடியவில்லை. அவன் வாயை யாரோ தையல் போட்டுவிட்டதுபோல் இருந்தது.
சூரிய ஒளி மாலையிலே கோலம் போட்ட அதே மண்டபந்தான். நிலவொளியுந்தான் இப்போது கோலம் போட்டிருந்தது. ஆனால் மகா மங்கலான கோலம்.
மோகினி பரிபூர்ணமாய் இப்தியின் முன்னே. பிரத்தியட்சமாகி நின்றாள். சற்று நேரம் அவனுடன் அவள் ஓடி விளையாடினாள்.
”நீ யார்?” என்றான் இப்தி
“நானா? நான் நான்தான்” என்று சொல்லிக். கல கலவென்று சிரித்தாள் மோகினி.
மறுபடியும் கொஞ்ச நேரம் என்னவோ வாக்கு, வாதம் – மோகனராஜன், மோகினிராணி தர்க்கம் மாதிரி ஒரு வாக்குவாதம்.
கடைசியில், அந்த மோகினி தன் கதையைச் சொன்னாள்: “இதோ பார், இந்த மாளிகையில் சில தலைமுறைகளுக்கு முன்னே, நவாபின் உத்தியோ கஸ்தன் ஒருவன் இருந்தான். நான் அவனுடைய நாயகிகளில் ஒருத்தி. என்னை அவன் சிறைப்பிடித்து வந்துவிட்டான். அதாவது கள்ளத்தனமாய் ஆள் விட்டு என்னைத் தூக்கி வந்துவிட்டான். என் தந்தை ராஜ வம்சத்தில் பிறந்தவர். சிற்றரசர் என்ற பட்டம் உள்ளவர். ஆகவே நான் ஓர் அரசகுமாரி. என் இளமைப் பருவத்திலே நான் ஒரு வாலிபனுடன் காதல் கொண்டேன். அவனுக்கும் என்னிடம் அளவற்ற காதல். நாங்கள் ஒருவரை ஒருவர் மாலையிட இருந்த சமயத்தில், இந்த துர்ப்பாக்கியம் எனக்கு நேர்ந்தது. நான் அந்த வாலிபனை மறக்கவே முடிய வில்லை. அவனுக்கு ரகசியமாய்த் தூது அனுப்பினேன். அவனும் பெண் வேஷம் பூண்டு, இங்கே வந்து என் வேலைக்காரியாக அமர்ந்துகொண்டான். இப்படிநானும் அவனும் பலகாலம் இன்பமாக வாழ்ந்தோம். பிறகு. ஒருநாள் அவனைக் காணவில்லை. இந்த மாளிகையின் அதிபதிக்கு ரகசியம் தெரிந்து. அவனை இவன் தொலைத்துவிட்டான் என்றுதான் இப்போது நிச்சய மாய் நினைக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், என்னையும் விஷமிட்டுக் கொன்றுவிட்டான் இந்தக் கிராதகன்.
“அல்பாயுசிலே அநியாயமாக நான் துர்மரண மடைந்தேன். இந்த உலகத்தைவிட்டு நான் எப்படிப் போவேன்? எத்தனையோ வருஷங்களாக இந்த மாளிகையைச் சுற்றிக்கொண் டிருக்கிறேன். இங்கே தானே நான் செத்தேன்? என் காதலன் வருவானோ வருவானோ என்று காத்துக் காத்து என் உள்ளம் உடைந்து போயிற்று. இப்தி, இப்தி, உன்னைக் கண்டதும், நான் மோகமுற்றேன். இப்தி உன்னைப் போலவே இருப்பான் என் காதலன். அப்படியே அவனை உரித்து வைத்திருக்கிறது உன் உருவம். சாயல், குணம், நடை, பேச்சு, பாவனை அத்தனையிலும் அவனே தான் நீ. இப்தி நான் உன்னை விடமாட்டேன். இப்தி என்னை விட்டு ஓடிப்போய்விடாதே நீ. இப்தி, இப்தி, என் மனோகரா, என் மாணிக்கமே…!”
மோகினி இப்தியைக் கெட்டியாய்க் கட்டிக் கொண்டாள்.
இப்தி நடு நடுங்கிப்போனான். “ஐயோ! ஐயோ! சங்கர், கோபி வாருங்களேன்; எல்லாரும் வாருங்களேன். இவள் விடமாட்டேன் என்கிறாளே” என்று அலறினான். இப்போது அவன் வாய் திறந்துவிட்டது.
நண்பர்கள் ஓடினார்கள். ஒருவன் நல்லவேளையாக விளக்கை ஞாபகமாக எடுத்துக் கொண்டு வந்தான்.
இப்தியை மண்டபத்திலே ஒரு மூலையில் கண் டார்கள். அவன் தலை திரும்பியிருந்தது முகம் பார்க்க பரிதாபமாக இருந்தது. கண்கள் ஒரேயடியாய் வெறித்து மருண்டிருந்தன. அவன் நின்றுகொண்டு ஒரு உருவத்தைக் கட்டிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த உருவத்தைப் பார்க்கப் பயந்து
அவன் மறுபுறம் திரும்பிக்கொண் டிருந்தான்.
“என்னப்பா இது? அதை விட்டு விட்டு இப்படி வா” என்றான் சங்கர்.
“அவள் விட்டால்தானே நான் வர முடியும்? என்னை விடுவியுங்களேன்” என்று கோரப் பார்வையுடன் கெஞ்சினான் இப்தி.
நண்பர்கள் நகைத்தார்கள். கிட்டப்போய் இப்தியின் கையை விடுவித்தார்கள். இப்தி அப்படியே, ”அப்பாடா!” என்று மூர்ச்சித்து விழுந்தான்.
முகத்திலே தண்ணீர் அடித்து, விசிறியால் விசிறி குடிக்க ஜலம் கொடுத்து, இப்தியை நண்பர்கள் மயக்கம் தெளிவித்தார்கள். கைலாகு கொடுத்து, படுக்கைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
இப்திக்குச் சுயநினைவு வந்தது. “எங்கே, எங்கே, என் அரசகுமாரி எங்கே? ஐயோ, அவளை விரட்டி விட்டீர்களா?” என்றான்.
“உன் அரசகுமாரிதானே? அவள் அங்கேயே இருக்கிறாள். பத்திரமாய் இருக்கிறாள். வெள்ளி முளைத்துவிட்டது. கொஞ்சம் பொறு. நன்றாய் வெளிச்சமானதும், உன் அரசகுமாரியை நீ சந்திக்கலாம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் கோபி.
சூரியோதயம் ஆகிவிட்டது.
இப்தியைக் கோபியும் சங்கரும் நடு மண்டபத் துக்கு அழைத்துச் சென்றார்கள். இந்தாப்பா, இதோபார் உன் அரச குமாரியை. வேண்டுமானால் மறுபடியும் கட்டிக்கொள்” என்று சொல்லி, அந்த மூலையில் கிடந்த பீரோவை அவனுக்குச் சுட்டிக் காட்டினார்கள்.
”என்ன இது! என்ன புரளி! கேலியா செய்கிறீர்கள்?” என்று கேட்டான் இப்தி.
“இந்த பீரோவைத்தான் அப்பா நீ கட்டிக் கொண்டிருந்தாய். அடேயப்பா! கையை என்னமாய்க் கொக்கி போட்டு பின்னிக் கட்டியிருந்தாய்! அதை விடுவிப்பதற்குள் எங்கள் பாடு பெரும் பாடாய் போய்விட்டதே!” என்றான் சங்கர்.
“பொய், பொய், பொய்” என்றான் இப்தி. வேலைக்காரனும் மர பீரோவுந்தானா அவன் கண்ட மோகினி! இப்தி ஒரு நாளும் இதை நம்ப முடியாது; நம்பவில்லை. அந்த அரச குமாரியின் ஆவி உண்மையில் அந்த மாளிகையைச் சுற்றியதோ இல்லையோ; இப்போது இப்தியின் மனத்தில் ஐயம் திரிபறப் பலமாய் சுற்றத் தொடங்கி விட்டது.
இதற்குப் பிறகுதான், இப்தி நிஜமாகவே கவிதை புனைய ஆரம்பித்தான். கவிதை என்றால், இசைக்கவிதை; பாட்டுக்கள்; கருப்பஞ்சாறு போன்ற சிங்கார ரச சாகித்தியங்கள். இப்தியின் பாட்டுக்களுக்குச் சினிமா உலகத்தில் பிரமாத டிமாண்டு.
அவன் என்ன செய்தாலும் சரி, அவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பவே கூடாதென்று குறுக்கே விழுந்து தடுத்த புண்ணியமும் சினிமா உற்பத்தி நிபுணர்களையே சேர்ந்ததாகும்.
– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.