அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2024
பார்வையிட்டோர்: 1,568 
 
 

வெளியிலிருந்து பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக காட்சியளிக்கும் அந்த வீடு பாலக்காட்டில் உள்ள பட்டம்பி கிராமத்தில் மிகவும் பிரபலமடைந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை..

வீட்டில் நுழைந்ததும் வரவேற்பது இரட்டை திண்ணை தான்.. நாலுபேர் தாராளமாய் உட்கார்ந்து கொண்டு நடுவில் வெற்றிலைப் பெட்டிசகிதம், வெற்றிலையுடன் சேர்ந்து ஊர்வம்பையும் மென்று துப்ப இது போதாதா என்ன ?

அதைத் தாண்டி ரேழியைக் கடந்து உள்ளே போனால் வழுவழுவென்று முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி மின்னும் சிவப்புத்தரையுடன் கம்பீரமான கூடம்…

அங்கு மாட்டியிருந்த பெரிய புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் பார்வதியால்தான் அந்த அறைக்கு கம்பீரம் என்பதை உள்ளே நுழைபவர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் அந்த புகைப்படமே ஈர்த்துக் கொண்டு விடுவதால்தான் என்பதை யாரால் மறுக்க முடியும்??

ஒரு முறை பார்த்தவர்கள் அதிலிருந்து கண்ணை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்ற என்ன காரணம்??

பார்வதியின் ‘ மோனா லிசா ‘ புன்னகைதான்.. வேறென்ன…?

மோனாலிசா என்ற பெயர் தெரிந்தவர்கள் அதை மனக்கண் முன் கொண்டு வரும்போது முதலில் கவனத்திற்கு வருவது அவளது புன்னகை.

யார் இந்த ‘ மோனாலிசா?

மோனா லிசா அல்லது லா ஜியோகொண்டா எனப்படுவது, ஓவியர் லியோனார்டோ டாவின்சி என்பவரால், பொப்லார் பலகையில் வரையப்பட்ட, 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எண்ணெய் வர்ண ஓவியம் ஆகும். இது உலகின் புகழ் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும்.

பிரான்ஸ் அரசுக்குச் சொந்தமான இந்த ஓவியம், லூவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஓவியம் உலகப்புகழ் பெறுவதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், பலரது கருத்துப்படி ‘ மோனாலிசா புன்னகை ‘தான் முக்கியமான காரணமாயிருக்கக் கூடும்.

அளவான, கத்தரித்து விடப்பட்டது போன்ற முறுவல் …ஒரு சிறிதளவு கூடினாலோ, குறைந்தாலோ சரித்திரம் மாறிவிட்டிருக்கும்..

ஓவியத்தை உற்று நோக்கியவர்களுக்குப் புரிந்திருக்கும்…

அளவான கச்சிதமான, ஓராயிரம் உணர்ச்சிகளை உள்ளடக்கிய புன் முறுவல்..

சிரிக்கலாமா வேண்டாமா என்பதுபோல்..!

உள்ளுக்குள் உடைந்துபோய், வெளியில் மகிழ்ச்சியாக இருக்க முற்படுகிறாளா?

அமைதியாக எல்லாவற்றையும் ஏற்றுக்குக் கொண்டு, பொறுமையின் வெளிப்பாட்டை புன்னகையால் பதிலாகத் தருகிறாளா??

பார்க்கப் பார்க்க, சிந்தனையைத் தூண்டும் அதே வண்ண சித்திரம் போல காட்சியளிக்கிறாள் பார்வதி…!


பார்வதி…

மோனாலிசாவை ஓவியத்தில் கண்முன்னே கொண்டுவந்த டாவின்சியைவிட தான் ஒரு சிறிதும் சளைத்தவனில்லை என்று நிரூபிக்கும் வகையில் பார்வதியை ஒரு சட்டத்துக்குள் சிறைப்பிடித்த புகைப்பட கலைஞன் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என்றுதான் கூறத் தோன்றுகிறது…

பார்க்கப்போனால் ஒவியத்தில் அளவான புன்னகையை கொண்டுவருவது அந்த ஓவியனின் திறமையைப் பொறுத்தது…ஆனால் புகைப்படத்திலோ அது இயலாத ஒன்று…அந்த அளவான புன்னகையை பார்வதி நினைத்தால் மட்டுமே தந்திருக்க இயலும்..

பார்வதியை பேரழகி என்று கூற முடியாது..அளவான தீர்க்கமான கண்கள்… அதில் தவழும் சாந்தம்…உருண்டையான மாசு மருவற்ற முகம்…

மோனாலிசா புன்னகை… ஆயிரம் கதைகளை தேக்கி வைத்த புன்னகை…சோகங்களை புதைத்து வைத்த புன்னகை… எடுக்கும் தீர்மானத்தில் உறுதியாக நிற்ப்பேன் என்று பறைசாற்றும் புன்னகை… மர்மம் நிறைந்த புன்னகை..

புகைப்படத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்க அவளின் புன்னகைதான் காரணமோ??

கூடத்தில் அமைதி நிலவிக் கொண்டிருந்தது…நிசப்தத்தை கிழித்துக் கொண்டு வெங்கல உருளியைக் கவிழ்த்தது போல ஒரு கம்பீரக் குரல்.

“ரங்கா…! ரங்கா…”!

கைக்காரியத்தை அப்படியே விட்டுவிட்டு,

“அண்ணா …என்ன வேணும்?”

ராஜகோபால் சர்மா முன்னால் விரைந்து ஓடி வந்தான் ரங்கன்.

“ஒரு சொம்பு ஜில்லுன்னு ஜலம் கொண்டுவா..நாக்கெல்லாம் வறண்டு போறது..”

“இதோ வரேன் ” என்று சொன்னவன்,

“வேணும்னா மோர் தரட்டுமா..? கரைச்சு ரெடியா இருக்கு “

“பேஷா ஆகட்டும்..ஆனா உப்பு மட்டாப் போடு…இல்ல..வேண்டாம்..உப்பே போடாத..பிரஷர் ஏறின மாறி இருக்கு. “

“நம்ப டாக்டர் பரசுராம கூப்ட்டு பிரஷர் பாத்துடுங்களேன்..”

“பாக்கலாம்…சரியாய்டும்..”

“சரிண்ணா…”

இன்றைக்கு அவர் முகமே சரியில்லாததுபோல ரங்கனுக்கு தோன்றியது…


ராஜகோபால் சர்மாவுக்கு எழுபது வயசு பூர்த்தியாகப் போகிறது.. மெலிந்த, நீண்டு நெடிய தேகம்.

இப்போதல்ல..எப்பவுமே அளவெடுத்தமாதிரி ஒரே உடல்வாகு .பார்வதியை மனைவியாக்கிக் கொள்ளும்போது அவருக்கு வயது இருபத்தேழு …பார்வதிக்கு பதினேழு..

திருமணத்தில் ஆர்வமேயில்லாமல் இருந்தவருக்கு என்னவோ பார்வதியைப் பிடித்துவிட்டது .

சேர்ந்து வாழ்ந்ததென்னமோ முப்பது வருஷம் தான்.

இரண்டு வருஷத்துக்கொருமுறை பிறந்தகம் போய் குழந்தையோடு திரும்பி வருவாள்… ஒரு பிள்ளையும் மூன்று பெண்களும்.

ராஜகோபாலன் குழந்தைகள் முகத்தை பார்ப்பதோடு சரி… கடைக்குட்டி ராதையைமட்டும் தூக்கிக் கொஞ்சியிருப்பார்.. அதுவும் இரண்டு மூணு தடவை இருக்கும்..

பார்வதியை கடைசிவரை பேர் சொல்லி கூப்பிட்டதேயில்லை.. எல்லாம் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருக்கும்.. ஏகத்துக்கும் நிலபுலன்… ஆனாலும் ராஜகோபாலன் பள்ளிக்கூடத்தில் சமஸ்க்ருத வாத்தியார் ஆக சில காலம் வேலை பார்த்தார்..

நாற்பது வயது வரைக்கும்தான்..

அப்புறம் இதோ இப்போது உட்கார்ந்திருக்கிறாரே, அந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவர் தான் ..அதோடு ஐக்கியமாகி விட்டார்.. நிலபுலன்கள் கணக்கு வழக்கு பார்ப்பதற்கே நேரம் போதவில்லை…

சாய்வு நாற்காலி ஆடும் விதமே அவரது மனநிலையைக் காட்டிக் கொடுத்து விடும்…

நிதானமாக ஒரே தாள கதியில் ஆடினால் மனக்கிலேசமில்லாமல் இருக்கிறார் என்று புரிந்துவிடும்.. படிப்படியாக ஆட்டம் குறைந்தால் உறங்கப் போகிறார்..சத்தமே மில்லாமல் நின்றுவிட்டால் உறங்கிவிட்டார் …

வேகமான ‘க்ரீச் க்ரீச்’ சப்தம் எந்த நிலையிலும் எரிமலை வெடிக்க காத்திருக்கும் எச்சரிக்கை மணி..

பார்வதியின் படம் மாட்டியிருக்கும் கூடத்தை ஒட்டிய ரேழியில்தான் சாய்வு நாற்காலியின் யதாஸ்தானம்..

அங்கிருந்தே அவ்வப்பொழுது அவர் கண்கள் பார்வதி மேல் பதிந்து நகரும்.

ஒவ்வொரு முறையும் அவருக்கு ஏதோவொரு சம்பவத்தை நினைவூட்டுவதை, நாற்காலியில் ஆட்டத்தை வைத்தே கணித்து விடலாம்…

இப்போது அவரும், சமையல்காரர் ரங்கனும்தான்..வீடே வெறிச்சோடிக் கிடக்கிறது…


” அர்ஜுன்! தாத்தாவ நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிக்கோ…”

” அம்மா.. வந்ததும் உடனே பண்ணிட்டேம்மா…”

” அப்பிடியே பாட்டி படத்துக்கும் பண்ணிட்டு வா..”

” யெஸ்..டன்..”

பேரன் பேத்தி சகிதம் மாறி மாறி தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கின வண்ணம் வீடே அமர்க்களப்படுகிறது..

பட்டம்பி கிராமமே புது வர்ணம் பூசிக் கொண்டது மாதிரி…

பத்து வருடங்கள் மௌனத்தில் சஞ்சரித்த வீடு..இன்றைக்கு சுவரெல்லாம் பட்டு எதிரொலிக்கும் குரல்களால் ரொம்பி வழிகிறது..

ராஜகோபாலனின் மொத்த குடும்பமே சேர்ந்து இருப்பது பத்து வருஷத்துக்கப்புறம் இப்போதுதான் என்றால் ??

ஆமாம்… அப்பாவின் எழுபது வயதைக் கொண்டாட எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு…

அம்மா போனபோது இதேபோன்ற காட்சி.. ஆனால் அன்று கனத்த மௌனம்..

அப்புறம் நளினியும், மோகனும் மட்டும் ஒருதடவை அப்பாவை வந்து பார்த்த தோடு சரி…

பார்வதியின் படத்தில் மகிழம்பூ மாலை ! வீடே மணக்கிறது…

அப்பாவின் எழுபதுக்கு இன்னும் ஒருவாரம் இருக்கிறது…

கூடத்தில் ஊரிலிருந்து வந்த அலுப்பில் சிலர் படுத்துக் கொண்டும், தூணில் சாய்ந்து கொண்டும், பேரன் பேத்திகள் இருப்புக் கொள்ளாமல் ஒருவரையொருவர் சீண்டிக்கொண்டும்..

கூட்டத்தில் ராஜகோபாலன் மிஸ்ஸிங்..ரேழியில் சாய்வு நாற்காலியின் தாளம் பிசகாத ஆட்டம்..

“நளினி..அம்மா முகத்துல என்ன ஒரு சாந்தம்…நம்ப ஒருத்தருமே அம்மாவைக் கொள்ளலியே..”

“யார் சொன்னது ? ராது பொண்ணு பார்வதி அச்சு அசல் பாட்டிதான்…அதே உருண்ட மூஞ்சி… அந்த சிரிப்பு ஒண்ணே போதுமே “

ராதைக்கு பெருமையாக இருந்தது…

படுத்துக் கொண்டிருந்த மோகன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்..

” ஆமா.. அம்மாவுக்கும் இந்த வருஷம் தானே அறுபது.. அதுக்கு ஒரு சின்ன ஃபங்ஷன் வச்சுக்கலாமே…அம்மாவுக்கு பிடிச்சதெல்லாம் பண்ணி ஜமாய்ச்சுடலாம்.. வாட் டூ யூ ஸே…?”

எல்லோரையும் பார்த்து பொதுவாகக் கேட்டான்..

“ஒய் நாட்…? சூப்பர் ஐடியா..!! இந்த அஞ்சு நாளும் சும்மாதானே இருக்கோம் ??

“அது சரி… அம்மாவுக்கு என்ன பிடிக்கும்..?


ராத்திரி எல்லோருக்கும் கூடத்தில்தான் படுக்கை… தூக்கம் வந்தால் தானே..!!
பே ஏரியா வின் குளிரில் ஒன்றுக்கு இரண்டாக கம்ஃபர்ட்டரைப் போத்தி மூடிக்கொண்டு தூங்கிப் பழகினவர்களுக்கு, ஜமுக்காளம் தரை எல்லாம் சுட்டது… மின்விசிறி அனல் காற்றை அள்ளி வீசியது..

தூக்கம் வராததற்கு இது மட்டுமா காரணம்..? அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?? மண்டையை குடைந்தது..

“நளினி..அம்மாவுக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்.. நாள், கிழமை தவறாம பண்ணுவா…”

நளினி கடகடவென்று சிரித்தாள்.

“எதுக்கு சிரிக்கிற…?”

காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை…

” அது எனக்கு ரொம்ப பிடிக்கும்னு ஒரு நாள் சொன்னேன்… அவ்வளவுதான்!”

” அப்போ பயத்தம் லாடு…”

“அது என்னோட ஃபேவரைட்..”

மோகன் பெருமையாக சொன்னதைக் கேட்டு நளினிக்கு ஒரே ஆச்சரியம்..

“சாப்பாட்டை விடுங்கோ.. அம்மாவுக்கு பிடிச்ச கலர்ல பத்து பேருக்கு புடவை வாங்கித் தரணும்…”

“நேவி ப்ளூ..”

எல்லோருடைய குரலும் ஒருமித்து ஒலித்தது..!!

ரேழியில் ஆடிக் கொண்டிருந்த சாய்வு நாற்காலி’ க்ரீச்’ என்ற சப்தத்துடன் நின்றது…

” போறும்…என்ன கூத்து..மணி என்ன?? எல்லாரும் லைட்ட அடிச்சுட்டு தூங்கற வழியைப் பாருங்கோ..! “

ரேழியிலிருந்து சிம்ம கர்ஜனை…கப்சிப்பானது கூடம்…


இன்றைக்கு பார்வதி மிகவும் அழகாகத் தெரிந்தாள்.. புகைப்படத்தில் மர்மப் புன்னகை உதிர்க்கும் பார்வதி மட்டுமல்ல..ராதுவின் பெண் பார்வதியும் தான்..

பார்வதியின் புகைப்படத்தை பலவித நிறங்களிலான ரோஜா மலர் மாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது… இன்றைக்கு இருந்தால் அறுபது வயது ஆகியிருக்கும்…

” அம்மாக்கு ரோஜாப்பூ ரொம்ப பிடிக்கும்னு நெனைக்கிறேன்..ரங்கன் கிட்ட கேக்கணும்..”

நளினி வைத்த கண் வாங்காமல் அம்மா படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. கண்கள் கலங்கியது..

பார்வதி இன்று பட்டுப் புடவையில் தகதகத்தாள்…காதில சிவப்புக் கல் பதித்த ஜிமிக்கி கன்னத்தை வருடிக் கொண்டிருந்தது… காலில் கொலுசு ‘ சலங்.. சலங்.. என்று சப்த்தமிட அங்குமிங்கும் துள்ளித் திரிந்தாள்…

“அப்பா..பார்வதியைப் பார்த்தேளா…?? அப்பிடியே அம்மா மாதிரி இல்ல..”

“எந்த பார்வதி..?

சாய்வு நாற்காலியிலிருந்து பார்வதியின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த ராஜகோபாலன் சட்டென்று திரும்பினார்..

கண்ணெதிரே நின்று கொண்டிருந்த பார்வதியிடம் பார்வை தாவியது..

“இது யாரு..?? என் பேத்தி பார்வதியா..??

“வாம்மா !! தாத்தா பக்கத்தில வா..அது என்ன ?? காதுல..? ஜிமிக்கியா..? உனக்கு ஜிமிக்கி ரொம்ப பிடிக்குமா…?”

“ஆமா தாத்தா..ரொம்ப ரொம்ப.. !கொலுசும் பிடிக்கும்…”

சப்தமிட்டு காட்டினாள்…தலை நிறைய மல்லிகை…!!

“அம்மா நிறைய ஜிமிக்கி வாங்கித் தருவா..ஆனா அங்க போடத்தான் சமயம் கெடைக்காது…”

தட்டுத்தடுமாறி தமிழில் கொஞ்சிப் பேசினாள்…

‘இவள்… இவள்… என் பேத்தியா..? இல்லை…இது..’


எல்லோரையும் பொதுவாக நமஸ்கரித்து எழுந்த பார்வதியை நிமிர்ந்து பார்த்தார் ராஜகோபாலன்..

காதில் தங்க ஜிமிக்கி ஊஞ்சலாட, தலை நிறைய மல்லிகைப்பூவும், காலில் கொலுசுமாய் தன் முன் நின்ற பார்வதியை பார்த்ததும் மனதில் ஆனந்தமும் பயமும் ஒருசேர, ‘இவளா பார்வதி..? இத்தனை அழகையும் என்னால் கட்டி ஆளமுடியுமா..? இவளுக்கு நான் பொருத்தமானவனா..?’

இவள் அழகி மட்டுமல்ல..புத்திசாலி என்றும் கேள்விப்பட்டிருக்கிறார்..

எதற்காக இவளைப் பெண் பார்க்க ஒப்புக் கொண்டோம்.

“என்ன? கோபாலா? எந்த உலகத்துல இருக்க..? ஏற்கனவே பேசி முடிஞ்ச விஷயம்தானே! தட்ட மாத்திட்டு நாள் குறிச்சுடலாம்..”

அப்பா தீர்மானமாய் சொல்ல தலையாட்டினார் ராஜகோபாலன்..

ஆனாலாம் அவர் மனதின் ஓரத்தில் அவளின் ஜிமிக்கியும், மல்லிகைப்பூவும், கொலுசு சத்தமும் முள்தைத்தாற்போல உறுத்திக் கொண்டிருந்த்து…

திருமணமாகி பத்து நாள் கழித்துத்தான் பார்வதியை தனியாக சந்திக்கும் நாள் குறிக்கப்பட்டது..

பெண் பார்க்கப் போனபோது கண்ட பார்வதியின் முகம் ஆழமாகப் பதிந்திருந்தது..
அவளைப்பார்க்கப்போகும் ஆர்வத்தைவிட பயமே மிகுந்திருந்தது.

‘கட்டின பெண்டாட்டியிடம் ஏன் இந்த பயம்..?’ அவர் மேலேயே அவருக்கு வெறுப்பு வந்தது…

ஆனால் உள்ளே நுழைந்த பார்வதியயைக் கண்டதும் அந்த பயமெல்லாம் அர்த்தமற்று போனது…

காதில் ஜிமிக்கி இல்லை..கொலுசுக்குப்பதில் மெட்டி…கிள்ளி வைத்தாற்போல் மல்லிகை.. அளவான புன்னகை.

அடுத்து வந்த நாட்களில் அவளிடம் தயக்கமின்றி நெருங்க முடிந்தது..

அன்று நெருங்கிய உறவினர் வீட்டில் விருந்து..பார்வதிக்காகத் தயாராய் காத்திருந்தார் கோபாலன்..

பார்வதியைப் பார்த்ததும் வயிற்றில் நெருப்பு பந்து கொழுந்து விட்டு எரிந்தது..

பெண் பார்க்கப் போனபோது இருந்த அதே தோற்றத்தில் கலகலவென்று சிரித்துக் கொண்டே வந்தாள் பார்வதி…

“காதுல அது என்னது…?”

“ஜிமிக்கி…! எனக்கு ரொம்ப பிடிக்கும்…”

“எனக்குப் பிடிக்கல..அத முதல்ல கழட்டி வை.கொலுசையும்தான்..”

பார்வதியின் சிரிப்பு நின்றது…

‘ஜிமிக்கியைக் கழட்டி வீசி விடலாமா..?’

‘எனக்குப் பிடிக்கும்’ என்று பிடிவாதமாய் கழட்ட மறுக்கலாமா..?

‘பேசாமல் கழட்டி வைத்து விட்டு , ‘நான் வரல..’ என்று சொல்லலாமா..?

வேகமாய் உள்ளே ஓடினாள் பார்வதி..ஐந்து நிமிடத்தில் ஒன்றுமே நடக்காத மாதிரி,

“போலாம்..வாங்கோ…” என்ற பார்வதியைப் பார்க்க ராஜகோபாலனுக்கு எதையோ சாதித்து விட்ட கர்வம் தலைதூக்கி நின்றது…பார்வதியின் புன்னகை ?


வரிசையாக குழந்தைகள் பிறந்ததைத் தவிர சொல்லிக் கொள்ளும்படி அவர்கள் வாழ்க்கையில் ஒன்றுமில்லை..

இப்போதெல்லாம் அவர்களுக்கிடையே ஒற்றை வாரத்தையுடன் பேச்சு முடிந்து போனது… சிலநாட்கள் மௌனமே மொழியானது..

அன்று பார்வதி அவருக்கு பிடித்த தேங்காய்த் துவையலும், மிளகு ரசமும் பண்ணியிருந்தாள்.

பரிமாறியவளை என்றுமில்லாத வழக்கமாய் உற்று நோக்கிக் கொண்டே சாப்பிட்டார்..

பாராட்டு வராவிட்டாலும் பிடித்ததைக் கேட்டு வாங்கிக் கொள்வார்.. பார்வதியும் அதற்குமேல் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதில்லை..

ஆனால் அன்றைக்கு ஒரு வார்த்தை பேசவில்லை..

சாப்பிட்டதும் சாய்வு நாற்காலியில் படுப்பவர் அன்று அவசரமாய் கிளம்பி வெளியில் போனார்..

வந்தவர் கையில் இரண்டு, மூன்று பைகள்..

“இந்தா..எடுத்துக்கோ…”

“என்னது?”

“பிரிச்சு பாரு…”

மூன்று கருநீல நிறத்தில், மூன்று அழுத்தமான பச்சையில்..!!ஒரே மாதிரி புடவைகள்…!!

இதுவரை தனக்கென்று ஒன்றுமே வாங்கித் தராத கணவரின் அன்புப் பரிசு?

“கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுமாச்சு..கசகசன்னு பூப்போட்டு என்ன புடவ?? இனிமே இதையே கட்டிக்கோ..”

குழந்தை பெற்றதற்கும் பூப்போட்ட புடவை கட்டுவதற்கும் உள்ள சம்பந்தம் அவளுக்கு புரியவேயில்லை…

கதைப் புத்தகங்கள் படிப்பது, பாட்டு பாடுவது, கண்ணாடி வளையல்கள் போடுவது … பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசுவது……!

அவளுக்கும் பிடித்தமான எதுவுமே அவருக்கு ஏன் பிடிக்காமல் போனது..?


அம்மாவுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து வைத்துக் கொள்ளாதது குழந்தைகள் மனதை உறுத்தியது.

“வாங்க.தாத்தா கிட்ட கேக்கலாம்.ஹி வில் பீ தி ரைட் பெர்ஸன் “

பார்வதிக்கு தாத்தாவிடம் பயம் சுத்தமாகப் போய்விட்டது..

ஒரு பாடலை முணுமுணுத்தபடி பார்வதி முன்னால் செல்ல மற்றவர்கள் தொடர்ந்தனர்..

“பார்வதி..!! நீ பாடுவியா…?”

பார்வதி என்ற பெயரை இவ்வளவு அழுத்தமாய் தாத்தா உச்சரித்து கேட்டதேயில்லை…

“ஆமா தாத்தா..பாட்டுன்னா எனக்கு உயிர்.. அங்க பாட்டு கத்துக்கிறேனே..”

முத்துப்பல் வரிசையாகத் தெரிய சிரித்தாள் பார்வதி..

“அப்பா… அம்மாக்கு என்னெல்லாம் பிடிக்கும்.. உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்..”

” பார்வதிக்கா..? என் பார்வதிக்கா..? இந்த குட்டிப் பார்வதிக்கு பிடிச்ச எல்லாமே அவளுக்கும் பிடிக்கும்..”

தொண்டைவரை வந்த வார்த்தைகளை வெளியே வரவிடாமல் எது உள்ளே தள்ளி அமுக்கியது?

அவருடைய அகம்பாவமும் ஆணவமுமா..?? ஈகோவா..? பயமா..? தாழ்வு உணர்ச்சியா..?”

“சொல்லுங்க தாத்தா…”

“சொல்லுங்கப்பா..”

ராஜகோபாலன் முகம் இறுகியது..

“அவ எங்கிட்ட என்ன பிடிக்கும்னு சொன்னதில்லை..நீங்களே கண்டுபிடிங்கோ…என்ன இதிலெல்லாம் இழுக்காதீங்கோ…”

நின்றிருந்த சாய்வு நாற்காலி ஆட்டத்தை தொடங்கியது..!

படத்திலிருந்த பார்வதி மர்மப் புன்னகையை பதிலாக உதிர்த்தாள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *