அம்மாவின் கணிப்பு




ப்ளாஸ்பேக்-1
இப்படி “தத்தி” மாதிரி இருந்தா எதையும் கரெகடா செய்யவே மாட்டே அம்மா அரைக்கால் போட்டிருந்த என்னை வசவு பாடிக்கொண்டிருந்தாள்
நீ இப்படி சொல்லி சொல்லியே அவன் கடைசியில் எந்த வேலையும் ஒழுங்கா செய்யாமயே போயிடுவான் அப்பா எனக்கு வக்காலத்து வாங்கி பேசினார்
நிகழ்வு :
அண்ணா என்ன பண்ணுவியோ ஏது பண்ணூவியோ எனக்கு தெரியாது, அந்த பொண்ணுக்கு சரியான தண்டனை கொடுக்கணும்.
அது சரி என்னைக்கு அந்த பொண்ணு இங்க வரப்போறான்னு சொன்னே?
இன்னும் இரண்டு நாள்ல இங்க வரப்போறா.
அவமேலே உனக்கு ஏன் இவ்வளவு காட்டம்.
நான் போட்டி போடற எல்லா இடத்துலயும் அவளே போட்டி போட்டு ஜெயிக்கறா, என்னால இதை ஜீரணிக்கவே முடியலை. இப்பகூட இந்த கான்பரன்ஸ்ல முதல்ல என்னை கூப்பிடறதாதான் இருந்தது. திடீருன்னு அவளை கூப்பிட்டுட்டாங்க. இதுல வேற அவ என்னையும் கூப்பிடறா, உங்க ஊருதான, கூடவா அப்படீங்கறா.
அவகூட வர நான் தயார், ஆனா அந்த கான்பிரன்ஸ்ல கலந்துக்க எனக்கு விருப்பமில்லை. அதைவிட அவளையும் அந்த கான்பரன்ஸ்ல கலந்துக்க விடக்கூடாது.
அவ்வளவுதான கவலைய விடு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, என் தங்கச்சிக்காக இந்த காரியம் பண்ணமாட்டேனா?
அந்த ஏரியாவில் கொஞ்சம் மட்டமான லாட்ஜ் அது. அதில்தான் ஆறுமாதமாய் என்னுடைய வாசம். அதில் வாசம் செய்பவர்கள் எப்படி என்று அந்த லாட்ஜை வைத்து முடிவு செய்து கொள்ளுங்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று மங்கிப்போன அழுக்கு கட்டிலில் படுத்துக்கொண்டு மேலே சுவற்றில் பல்லி ஒன்று ஈயை கவ்வ போராடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறேன் பரவாயில்லை ஈயும்தான் பல்லியை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் பல்லி அதைவிட கூர்மை அசையாமல் அப்படியே உட்கார்ந்து அட… பிடித்து விட்டதே!
இதுவும் எனது தொழிலைப் போலத்தான். காவல்துறை பல்லியை போல என்றால் நாங்கள் ஈயைபோல .ஆனால் பல்லியிடம் ஈ மாட்டுவதை போல அவ்வளவு சீக்கிரம் மாட்டிக் கொள்ளமாட்டோம். எனக்குள் சிரித்துக் கொண்டிருந்த பொழுது நிழலாடியது. திரும்பி பார்த்தேன். டீக்கடை பையன் வாசலில் நின்றுகொண்டிருந்தான். அவன் முதலாளி பாக்கியை வசூல் பண்ணி வர சொல்லியிருப்பான்.
அப்புறம் தர்றேன்னு உங்க முதலாளிகிட்ட சொல்லு. சொல்லி விட்டு திரும்பியவன் நான் அதுக்கு வரலை, உன்னை பாக்க யாரோ இரண்டுபேர் வந்திருக்காங்க. சட்டென்று திரும்பினேன் கண்கள் மின்ன ! என்னை பாக்கறதுக்கா? ஆமாய்யா, வந்தவனுங்க நல்ல டீக்கா டிரஸ் பண்ணிகிட்டு இருக்காங்க, அவங்க வந்த காரே அம்மாடியோவ், இந்த லாட்ஜுக்குள்ள நுழையறதுக்கு சங்கடப்பட்டு, என்னைய அனுப்பிச்சிருக்கானுங்க.
அவன் பேசி முடிக்கும் வரைக்கும் கூட காத்திருக்க மனசு கேட்கவில்லை, சட்டென எழுந்தவன் நான் வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லு, வேகமாய் குளியலறைக்கு தாவினேன்.
காருக்குள் இருந்த குளிர் என்னை சொக்க வைத்தது. ஆனால் அதற்கு இடைஞ்சலாய் இருபுறமும் இரு நாகரிகமானவர்கள் என்னை இம்சைபடுத்தினர்.
முடிவா என்ன சொல்றே? அவர்களின் கேள்வி எனக்கு கொட்டாவியை வரவழைத்தது.
இங்க பாருங்க உங்களால முடியலையின்னுதான் என்னை கூப்பிடறீங்க. கொஞ்சம் பெரிய தொகையா எனக்கு வேணும். சொல்லிவிட்டு கண்களை மூடினேன். இவனுங்க கிடக்கிறானுங்க. கார் போற சுகத்துல தூக்கம் அடடா..மனம் சொர்க்கத்தை அனுபவித்தது.
அவர்கள் தங்களுக்குள் பார்த்துக் கொள்ள ஒருவன் தன்னுடைய செல்போனை எடுத்து புரியாத மொழியில் பேசினான். அப்புறம் சற்று மெளனம், அடுத்து யெஸ்..யெஸ்..என்று ஆங்கிலத்துக்கு தாவினான்.
செல்லை கால் சராயில் வைத்தவன் ஒகே சொல்லிட்டாரு, ஆனா ஒண்ணு அவங்களை கொண்டு வந்து விட்டுடறதோட உன் வேலை முடிஞ்சது. இதுக்கு நீ கேட்ட தொகை அதிகம் இருந்தாலும் பாஸ் பெரிய மனசு பண்ணி கொடுக்க சொல்லிட்டாரு.
எனக்கு தெரியும், இந்த மாதிரி பார்ட்டிகள் ஆரம்பத்தில் அமர்க்களம் பண்ணும், இறுதியில் எங்களிடம் சரண்டர் ஆகிவிடும்.
சரி சொல்லுங்கள் கேட்க ஆயத்தாமாகினேன். இரண்டு பெண்கள் நாளை கோயமுத்தூர் ஏர்போர்ட்டில் காலை பத்து மணிக்கு வந்து இறங்கப் போகிறார்கள். அவர்கள் ஒரு கல்லூரி விழாவுக்கு வருகிறார்கள். வெளியே வந்தவுடன் அவர்கள் பிரிகிறார்கள் ஒரு பெண்ணை அந்தகல்லூரி வாகனமே வந்து ஏற்றி செல்லும். அந்த பெண்ணை அங்கே கடத்துவாயோ, இல்லை போகும் வழியில் கடத்துவாயோ தெரியாது கடத்திக் கொண்டு அவிநாசி ரோடில் சென்று கொண்டே இருக்க வேண்டும் .வழியில் எங்கள் ஆள் கைகாட்டுவான். நீ வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி திரும்பி பார்க்காமல் போய்விட வேண்டும். மாலை பணம் உன் கையை தேடி வரும்.
இந்த வேலையை நீங்கள் ஏன் செய்யக்கூடாது?
கேள்வியை நீ கேட்க கூடாது, சொன்ன வேலையை செய்வதுதான் உன் வேலை, அதுக்கு எவ்வளவு ஆகுமோ அதை வாங்கினதோட உன் வேலை சரி. மிரட்டுவது போல் ஒருவன் சொன்னான்.
ஓகே..தலையை குலுக்கினேன், மேற்கொண்டு விவரம் கேட்கவேண்டாம் என்கிறீர்கள், சரி அவர்களை அடையாளம் காட்டுவது யார்?
பிளைட் வந்திறங்கும் வரைக்கும் நாங்கள் உன்கூட இருப்போம். அவர்களை அடையாளம் காட்டிவிட்டு நாங்கள் பிரிந்து விடுவோம். அதற்கப்புறம் நம் சந்திப்பே கிடையாது. அவர்கள் என்னை பொட்டானிக்கல் பார்க் ஓரம் இறக்கி விட்டார்கள். நாளை சந்திப்போம்.
ஆயாசமாய் இருந்தது, யார் அந்த பெண்கள்? அவர்களை ஏன் கடத்த வேண்டும்? அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன உறவு?
உறவை பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்? அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம். சரி நாளை அவர்களை எப்படி கடத்துவது? அவர்கள் எதற்காக வருகிறார்கள் என்று தெரிந்தாலாவது, அதைப்பற்றி தெரிந்தது போல் பேசி மடக்கலாம்..
கோயமுத்தூர் விமான நிலையத்தில் உள்புறமாய் காத்திருந்தோம். விமானம் தாழ்வாய் பறந்து ரன்வேயில் இறங்கி ஓடிநின்றது. நான் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவர் பின் ஒருவராய் வெளிவந்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண் வெளியே வந்தாள் அடுத்து இன்னொரு பெண் பின்னால் வந்தாள். இறங்கியவுடன் இருவரும்ஒன்றானார்கள்.
என் அருகில் இருந்த இருவரும் நன்றாக பார்த்துக்கொள். வலதுபுறம் இருக்கும் பெண்ணை மட்டும் கடத்த வேண்டும். அவர்கள் வெளியே வந்து, பிரிந்து ஒரு பெண் மட்டும் கார்பார்க்கில் நின்றுகொண்டிருக்கும் அந்த கல்லூரி காருக்கு செல்லுவாள். அதற்கு பிறகு உன் சாமார்த்தியம்,அந்த பெண் அந்த கல்லூரிக்கு போகககூடாது. புரிந்ததா?
என் மூளை சுறுசுறுப்பானது கார் பார்க்கிற்கும் அவர்கள் நடந்து அதை அடைவதற்கும் உள்ள இடைவெளியை கணக்கிட்டேன். எப்படியும் கார்பார்க்கை அடைய பதினைந்து நிமிடம் நடக்க வேண்டும், அதற்குள் நான் அந்த பெண்ணை கடத்தி விடவேண்டும்.
நான் கொண்டு வந்திருந்த இனோவாவை (கடத்துவதற்கு அவர்கள் கொடுத்த உபயம்) உசுப்பி தயாராய் நின்றேன்
வெளியே வந்த அவர்கள் இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் நான் வண்டியை உசுப்பி அவர்கள் அருகில் போய் நின்றுகொண்டேன். இருவருமே இப்பொழுது கார்பார்க்கை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் இன்னும் கல்லூரிக் காரைபார்த்திருக்க வாய்ப்பில்லை
சட்டென அவர்கள் குறுக்கே காரை நிறுத்தி அப்படியே இஞ்சினை ஓடவிட்டு காரை சுற்றி அவர்களிடம் வர அந்த பெண் “ஏம்ப்பா இவ்வளவு லேட்” என்று கூறி காரில் உட்கார்ந்துவிட்டாள். ஆஹா அதிர்ஷ்டமடா உனக்கு என்று வேகமாக வண்டியை கிளப்பி அவிநாசி ரோடில் பறந்தேன்..
கார் விரைவாக ஓடிக் கொண்டிருந்தது. எவ்வளவு வேகம் போக முடியுமோ அவ்வளவு வேகம் போனேன். இனோவா ஓட்டுவதற்கு சொர்க்கமாய் இருந்த்து. தூரமாய் ஒருவன் கைகாட்டுவது தெரிந்தது.புரிந்து கொண்டேன். மெல்ல வேகத்தை குறைத்தேன் இத்தோடு என்கடமை முடிகிறது. இனி இவர்கள் பாடு, இவ்வளவு சுலபமாய் காரியம் முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. கடைசியாக அந்த பெண்ணை திரும்பி பார்க்க அந்த பெண் ஆழ்ந்த உறக்கத்துக்கு போயிருந்தாள்.
வண்டி கைமாறி பறந்து விட்டது. நான் கீழே இறங்கி ரோட்டை கடந்து பஸ்நிறுத்தம் எங்கே என்று தேட ஆரம்பித்து விட்டேன்.
அன்று இரவு மீண்டும் அவர்கள் என்னை பார்க்க வந்தார்கள். எப்படியும் வருவார்கள் என காத்திருந்த நான் விரைவாக அவர்களை பார்க்க ஓடிவந்தேன். அவ்வளவு பணத்தேவை இருந்தது எனக்கு.
வந்தவர்கள் என்ன ஏது என்று யோசிக்கு முன் ஆளுக்கொரு அறை கொடுத்தார்கள். தடுமாறிவிட்டேன். ராஸ்கல் அந்த பொண்ணை கடத்திட்டு வாடான்னா, ஓணரம்மாவையே கடத்திட்டு வந்திருக்கான்.
கன்னத்தை தடவிக் கொண்டே யோசித்தேன், ஓணரம்மாவா “ஏம்ப்பா இவ்வளவு லேட்” கேட்கும் போதே புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இல்லை அவர்களோட இனோவா காரையே கடன் வாங்கி வந்திருக்ககூடாது. அதனால்தான் அந்த பெண் சாவகாசமாய் காரில் ஏறிவிட்டாள்.
முதலில் போட்டோ வாங்கி வைத்திருக்க வேண்டும். இரண்டு நிமிடத்தில் ஒரு முகத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எனக்கு சிரமம்
இதையெல்லாம் விட என் அம்மா அன்று திட்டியது இப்பொழுது ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.