அம்மாகாரி
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, ஒரு அம்மாகாரி இருந்தா. அவளுக்கு ஒரு மகன் இருந்தர். மகனுக்கு வயசு வந்திருச்சு. சட்டுப்புட்டுண்டு, மகனுக்கு கலியாணத்த முடிச்சுட்டா. வந்த மருமக, மாமியாளுக்கு அடங்கி நடந்தா. என்னத்துக்கு, அடங்கி நடந்தாண்டா, அவ ஒண்ணு கூடக் கொண்டு வரல. சீர் சிரத்த எதுவுமே கெடையாது. மாமியா, அத மனசுல வச்சுக்கிட்டு, மருமகளோட அடிக்கடி சண்ட போடுவாளாம்.
ஒரு நா, மாமியாளுக்கும் – மருமகளுக்கும் பெலமாத் தகராறு நடக்குது. அண்ணக்கித்தான் மருமக மாமியாள எதுத்துப் பேசுறா. வந்தது போல, வீட்ட வீட்டு வெளில போடிண்டு, மாமியா சொல்லிட்டா. மருமகளுக்கும் ரோசம் வந்திருச்சு. வீட்ட விட்டு வெளியேறிப் போறா.
அப்டிப் போகயில, பொழுது விழுந்து இருட்டிப் போச்சு. அதுக்கு மேல நடக்கப் பயந்துக்கிட்டு, ஒரு ஆலாமரத்து மேல ஏறி ஒக்காந்துக்கிட்டா. கோழி கூப்டுது. களவாணிக வெளியெலாம் போயிக் கழவாண்டுகிட்டு வந்த, தங்க நகைகள, அந்த மரத்தடில போட்டுப் பகுந்துகிட்டு இருக்காங்க. அப்ப: லேசாக் காலுக் கொலுச ஆட்டுறா. ஆட்டவும் திருடங்க மேல பாத்தாங்க, பாத்திட்டு பேயிண்டு நெனச்சு நகைகளப் போட்டுட்டு பயந்து ஓடிட்டாங்க. அந்த நகைகள அள்ளி கழுத்துல, காதுல மாட்டிக்கிட்டு, வீட்டுக்கு திரும்பி வாரா.
வர்ரத, பக்கத்து வீட்டுக்காரி பாத்தா. பாத்திட்டு, இவளுக்கு ஏது இவ்வளவு நகைகண்டு நெனச்சுக்கிட்டு, வரவும், ஏதுடி ஒனக்கு இவ்வளவு நகைங்கண்டு கேட்டா. அதுக்கு இவ, மாமியா கூடச் சண்ட புடுச்சிட்டு கோவுச்சிக்கிட்டுப் போனே. போகயில , இருட்டிப் போச்சு. ஒரு மரத்து மேல ஏறி ஒக்காந்துகிட்டேன். என்னயப் பேயிண்டு நெனச்சுப் பயந்து, நகைகளப் போட்டுட்டு, திருட்டுப் பயக ஓடிப் போனாங்க. அத அள்ளிக்கிட்டு வரேண்டு சொல்றா. சொல்லவும்,
அவ என்னா செஞ்சா, மாமியாகூடச் சண்ட போட்டுட்டு, கோவுச்சுக்கிட்டுப் போயி-, அந்த மரத்ல ஏறி ஒக்காந்துகிட்டிருக்கா. அப்ப, திருடங்க கழவாண்ட்டு வந்து, அந்த மரத்தடியில போட்டுப் பகுந்தாங்க. பகுறயில், பயந்து ஓடட்டுமிண்டு லேசாச் சத்தங் காட்னா. திருடங்க பயந்து ஓடல. ஓடாம நேத்து நம்மள ஏமாத்தி பூராத்தயும் அள்ளிக்கிட்டுப் போனவண்டு சொல்லிப் புடுச்சு, அடி-அடிண்டு அடுச்சுப் போட்டுட்டுப் போயிட்டாங்க. பெறகு முக்கிக்கிட்டு மொனங்கிக்கிட்டு விடியங்காட்டில் எந்திருச்சு வந்தாளாம்.
கடவுளு பாத்து குடுக்கணும். இவள மாதிரி பொறாமப் பட்டா என்ன கெடைக்கும்? பூசதான் கெடைக்கும். பெறகு என்னா கெடைக்கும்?
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.