அம்பிகாவோடு ஒரு நேர்காணல்
யார் இந்த அம்பிகா? உறவு முகம் காட்டி மறைந்து போன, சடம் மரத்த நிழல்களில் இதுவும் ஒன்று. ஆம் பிரியாவின் மனதில் இந்த, அம்பிகா குறித்து அப்படித்தான் நினைக்கத் தோன்றியது. புற்றீசல் போல் கிளம்பி வரும் இந்தநினைவுகள் முழுதும் உளூத்துப் போன வெறும் சங்கதிகள் மட்டுமே. அதில் ஒன்றாகாவே, இவளூம் ஒரு பிரசித்தி பெற்ற பல் டாக்டராய் இருக்கிற, அவளுக்கு பல் குறித்து சங்கதிகளெல்லாம் அத்துபடி. இதற்கு மேலே உன்னதமான வாழ்க்கை சத்திய அனுபங்களுக்கு முன்னால் இவள் வெறும் நிழற் புள்ளியே.

அவள் பிரியாவிற்கு நெருங்கிய உறவாக, இருந்தாலும் பார்த்துப் பழகிய முகமாக அவள் இல்லாமற் போனது விதி செய்த சதி. உன்னதமான மனஉணர்வுகளின் சங்கமத்தையே காண முடியாமற் போன ஒரு வெற்று நிழல் வாழ்க்கை. அவளுக்கு மட்டுமல்ல, பிரியாவுக்கும் கூடத்தான். சேற்று மண் குளிக்கும் ஒரே குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட பாவம்.
அவளை பிரியா நேர்முகமாய் சந்தித்து அந்தக், காலக்கணக்கு ஒரு யுகம் போலாகிறது. இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னதாக ஒரு நாள், பிரியாவின் கணவன் சந்துருவின் வீட்டிற்கு போக நேர்ந்த போது, அந்த சின்னஞ்சிறு வீட்டு முற்றத்தின் நிழல் படர்ந்த மாமரச் சோலை நடுவே அவளும் புருஷனுமாக கை கோர்த்துக் கொண்டு, உலா வருவதை அவள் காண நேர்ந்தது. அவள் கணவன் கேசவன் தாதியர் கல்லூரியில் படித்து ஓர் ஆண் நர்ஸாக, யாழ் போதனா வைத்தியசாலயில் பணி புரியும் வேளையில் தான், இருவருக்குமிடையில் காதல் மலர்ந்ததாக யாரோ சொல்லித் தான், பிரியாவுக்குத் தெரியும். அவளைப் பொறுத்தவரை, அவ்வீட்டுச் சங்கதிகள் மறை பொருளாகவே நடந்தேறும். சந்துருவுக்கே உறவு நெருக்கமற்ற, எடுப்படாத ஒரு கைப்பொமை போலத்தான் அவள். இந்த லட்சணத்தில் அவள் யாரோ அம்பிகா யாரோ தான். அதன் பிறகு பிரியாவுக்கு அவளை காண சந்தர்ப்பம் வரவேயில்லை.
இப்போது அவளின் முகமே மறந்து விட்டது பிரியா நாட்டுச் சூழ்நிலை காரணமாக, இடம் பெயர்ந்து குடும்பத்தோடு கொழும்புக்கு வந்தே, எவ்வளவு காலமாகிறது. அண்ணன் சந்துருவைப் பார்க்க கேசவனும் அபூர்வமாகத் தான் எப்போதாவது ஒரு நாள் வந்து போவான். மற்றபடி குடும்பமாக வந்ததேயில்லை.
சில வருடங்களுக்கு முன்னால், திடீரென்று ஒரு நாள் மாரடைப்பு வந்து அவன் இறந்து போனான். அந்த இழவு வீட்டிற்ற்குப் போய், துக்கம் கொண்டாடி திரும்பி வருகிற மனோ நிலை அவளுக்கு வரவேயில்லை. பரஸ்பர உறவு நெருக்கம் இல்லாமல், போலியாக வாழ்ந்து பொய்யாக நடிக்க நேர்ந்தால், குற்றவுணர்வு தான் மிஞ்சும்.
அவளை உறவாக ஏற்றுக்கொள்ளாமல், மூலையில் தள்ளி விட்டு, வேடம் கட்டி ஆட நேர்கின்ற இந்தப் பாசங்குத் தனத்துக்கு உடந்தையாகி[ப் போய், சேறு குளிக்க மனம் வராமலே அவளின் இந்தக் கரை ஒதுங்கிப் போன நடத்தையும் கை கழுவி விடுதலும் தன் சுய இருப்புக்கே பங்கம், விளைவித்த மாதிரித் தான், இதுவும் என்று அவளுக்குப் பட்டது.
இது நடந்து சில வருடங்கள் கழித்து, சந்துருவும் இறந்து போனான். அவள் தலையில் விழுந்த இடி இது போல் பலவுண்டு. அது நிகழ்ந்த போது அந்த மரணச் சடங்கை அவளும் பிள்ளைகளூமாகத் தனியாகவே நின்று நடத்தி முடித்தார்கள். யாரோ சந்துவின் கடைசித் தம்பியாம் கதிர் என்று அவன் பெயர் கூட மறந்து போச்சு. அங்கு வந்து முகம் காட்டி விட்டு ஒருநொடியில் மறைந்து போனான். இதனால், பெரிய விழுக்காடு ஒன்றுமில்லை அவளுக்கு.
அம்பிகாவுக்கு இது தெரியுமோ என்னவோ, அவள் பக்கத்திலே தான் இருக்கிறாள். வெள்ளவத்தையிலிருந்து தெஹிவளைக்கு வருவதானல், அரை மணித்தியாலம் போதும். ஏன் வரவில்லை அவள்? ஓ! புரிகிறது பழிக்குப் பழி..நான் போகவில்லை என்று தானே அவளும் வராமல் போனாள். ஒரு வார்த்தை போனில் கூட அவள் பேசவில்லை, அவள் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்னைப் பற்றி? இங்கு வந்தால் நான் சூன்யம் வைத்து விடுவேன் என்று கேசவன் வீட்டில் சொல்லிக் கொடுத்தற்கு இணங்கவே இந்த உறவுச் சிக்கலும் திரிபு நடத்தையும். உண்மையில் நான் யார்? அவளுக்கு இந்த சத்தியத்தை என் மாசுபடாத, புனித இருப்பை யார் அவளுக்கு எடுத்து சொல்ல முடியும்? நான் கூறாவிட்டால் கடவுள் தான் வர வேண்டும். அவர் வருவாரா?
உயிரின் சத்தியத்தைக் காப்பாற்ற அவர் ஏன் வரப் போகிறார்? அவரே சத்தியப் பிழம்பு எங்கும் வியாபித்து ஆத்ம சொரூபமாக, விளங்குபவரும், அவரே இந்த பேருண்மையை பேரிருப்பை பிரியா அறிந்திருந்தாலும் ஆத்மா என்பதையே அறியாமல்க், அறிவு மழுங்கி, வாழ்கிற அம்பிகாவிடம் போய் எடுத்து சொன்னால், என்ன நடக்கும்?
என் சத்திய இருப்பை அவளுக்குக் காட்ட வேண்டுமானல், அனுமானைப் போல், மார்பை பிளந்து தான் காட்ட வேண்டும். இது நடக்குமா?
ஏன் நடக்காது..? வாழ்க்கையே ஒரு புதிர் தான் புதிருக்குள்ளிருந்து, பூதம் புறபட்டு வந்தது போல், மயூரபதி அம்மன் கோவிலில், அவள் தரிசனம் கிடைத்தது. பம்பலப்பிட்டி மாணிக்க பிள்ளையார் கோவிலிருந்து காலை எட்டு மணிக்குத் தொடங்கிய மகளிர் அணியின் பால் குட பவனி ஊர்வலம் பகல் பதிநொரு மணிக்குத் தான் முடிந்தது. வழமை போல கோவில் வழிபாடு செய்ய பிரியாவும் அப்போது அங்கு வந்திருந்தாள்.
அவர்கள் அந்தப் பால்குட கதாநாயகிகள் நீண்ட வரிசையில், ஊர்வலமாக வரும் போது பிரியா வழிபாடு முடிந்து வாசலில் நின்று அதையே பார்த்துக் கொண்டிருந்தாள், இடை நடுவே அபிராமியின் முகம், தெரிந்தது. உன்னிப்பாக பார்த்தாள். சந்தேகமில்லை. அவளே தான் உடல் வருத்தி கால்கள் களைக்க பால்குட பவனி நேர்ந்து வைக்கும் அளவுக்கு வாழ்க்கையில் அவளுக்கு என்ன பிரச்சனை வந்திருக்கும். அதுவும் தையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய காதல் கணவனோடு வாழ்ந்தவள். அவளுக்குமா பிரச்சனை? இதை யாரிடம் போய்க் போய்க் கேட்பது? அவள் என்னோடு முகம் கொடுத்துப் பேசுவாளா என்று கூடத் தெரியவிலை, முயன்று பார்ப்போம், நல்லதே நடக்கும், எல்லாம் முடிந்து பெரும் களைப்புடன் வெளியே வரும் கூட்ட நெரிசலில் அவள் முகம் தெரிந்தது கிட்ட வந்து விட்டாள்.
இதோ முன் நிற்கிறாள் சிரிக்கத் தோன்றாமல் அவள் பிரியாவைப் பார்த்ததும் முகம் திருப்பி போக முற்பட்ட போது தடுத்து நிறுத்தி அன்பாக ஆதரவாக பிரியா கேட்டாள் என்ன பேசாமல், போறியள்? என்னைத் தெரியாதே?
நீங்கள் ஆர்?
கிழிச்சுது, எவ்வளவு கிட்டத்து சொந்தம். உங்கடை ஆசை காதலனின், அண்ணன் பெஞ்சாதி நான் இது கூடவா தெரியாது?
உங்களோடை பழகவே ஏன் உங்களைப் பார்க்கவே கூடாது என்று தானே கேசவன் சொன்னவர்.
இது ஆர் சொன்ன வேதம்?
எனக்குத் தெரியாது. நீங்கள் செய்வினை செய்யிற ஆள் என்று கேசவன் மட்டுமல்ல அவையளுமே சொல்லிப் போட்டினம் என்ன விட்டிடுங்கோ.
அவள் குரலில் பயம் தெரிந்தது நடுக்கம் தெரிந்தது. தலை தெறிக்க ஓடி விடுவாள் போல் தோன்றியது.
அங்கேயே அந்தப் பழிச் சொல்லை கிரகித்தவாறு பிரியா பேச வராமல், வாயடைத்துப் போய் நின்றிருந்தாள். அபிராமியோடு கூடிய நேர்காணல் அத்தோடு முடிந்தது. அவளைக் காணவில்லை.
நிஜம் பற்றாமல் சத்தியமே தலை குனிந்து தோற்றுப் போன இடத்தில் பிரியாவின் ஒளியில் மிதக்கும் ஆழ்ந்து அகன்ற விழிகளுக்கு முன்னால், அவள் கண்ட காட்சி, மனிதம் வாழ வேண்டிய இடத்தில், ஒரு ராட்சத பூதமே வாயை பிளந்து கொண்டு தன்னை விழுங்க வருவதாக, உள்ளார்ந்த சிலிர்ப்புடம் அவள் நினைவு கூர்ந்தாள்.
இது இன்று நேற்று நடக்கிற விடயமல்ல. சதா சர்வகாலமும், பூதமே வெளிப்படுக் கொண்டிருந்தால், என்ன நடக்கும்? பூமியை விழுங்குகிற கதை தான் மிக எளிதாக நடக்கும்.
ஒருவனுடைய நிஜமும் சத்தியமும் உயிரை தோண்டிப் பார்த்தால் தான் தெரியும். அது வரை இருட்டு சூனியம் வெறிக்க, இருளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான். இந்த இருள் கண்ணை மறைக்குப் போது, காட்சி உலகமுமிலை கனவு இல்லை. கடவுள் மட்டும் தான் என்று நினைத்து அவள் தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
அந்த அமைதியாக மேலோங்கிய சுய இருப்பில் அவள் கண்களுக்கு முன்னால் எல்லாமே பூத்துக் குலுங்குவது போல் பட்டது.