அமைச்சர் ஆகும் தகுதி எவருக்கு இருக்கிறது?




மகாபாரதப் போர் முடிந்தது. பாண்டவர் வெற்றி பெற… கௌரவர்கள் அடியோடு அழிந்தனர். போர் புரிவதும், பகைவனைக் கொல்வதும் க்ஷத்திரிய தருமமாக இருப்பினும், சகோதரர்கள் மற்றும் உறவினர்களைக் கொன்று கிடைத்த பதவியும் செல்வமும் தனக்குத் தேவையில்லை என்று மனம் கலங்கினார் தருமர்.
எனவே தன் சகோதரர்களிடம், ”பிரிய மானவர்களே! பூமி நமதாயிற்று என்பது உண்மைதான் என்றாலும் சுற்றத்தார் மாண் டனர். அன்புக்குரிய மைந்தர்களையும் பலி கொடுத்தோம்! எனவே, இந்த வெற்றி ‘அப ஜெயமாகவே’ எனக்குத் தோன்றுகிறது. துறவு பூண்டு வனத்தில் வாழ்ந்தால்தான் இந்தப் பாவம் நீங்கும். எனவே தேசத்தை நீங்கள் ஆளுங்கள்” என்றார் தருமர்.
இதைக்கேட்ட அர்ஜுனன் மற்றும் பீமன் ஆகிய இருவரும் தருமரை தேற்றும் விதமாக… இல்லற சிறப்பு, கிரகஸ்தாஸ்ரமத்தில் செய்யக் கூடிய புண்ணியங்கள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துக் கூறினர்.
இறுதியாக,”க்ஷத்திரியர்களுக்கு சந்நியாசம் கூடாது. கடமைகளைச் செய்வதே அவர்களது வாழ்க்கை முறை” என்றும் எடுத்துரைத்தனர். நகுலசகாதேவர்களும் தங்கள் பங்குக்கு பற்பல நியாயங்களை தர்மரிடம் எடுத்துரைத்தனர்.
தருமரை சமாதானப்படுத்தும் விதமாக பாஞ்சாலியும் சில கருத்துக்களை உரைத்தாள்: ”சுவாமி, துரியோதனன் மற்றும் அவனைச் சார்ந்தவர் களைக் கொன்றது எந்த விதத்திலும் குற்றமில்லை. எனவே, வருந்தாதீர்கள். அரசனது கடமைகளில் தண்டனை அளிப்பதும் ஒன்று. மேலும் இது, ராஜ தருமமும் கூட! எனவே இந்த தேசத்தை ஆளுவதே தங்களது கடமை!” என்றாள். ஆனால், எவரது சொற்களும் தருமரை சமாதானப் படுத்தவில்லை.
இறுதியில் அனைவரும், அம்புப் படுக்கையில் வீழ்ந்தபடி, உத்திராயன புண்ணிய காலத்தை எதிர் நோக்கியிருக்கும் பீஷ்மரிடம் சென்றனர். பிதாமகனான அவரை வணங்கியவர்கள், அவரிடம் தருமரின் சந்தேகங்களையும் மனக் கலக்கத்தையும் போக்கும்படி வேண்டினர்.
பீஷ்மரும், எண்ணற்ற நியாய தருமங்களை விளக்கிக் கூறி, நகரத்துக்கு சென்று ஆட்சி நடத்தும்படி தருமரை அறிவுறுத்தினார் (மகாபாரதத்தில் பீஷ்மர் செய்த இந்த தர்மோபதேசம், ‘சாந்தி பருவம்’ எனும் புகழ்மிக்க பகுதியாகும்).
அதன்பிறகு, அஸ்தினாபுரத்தில் முறைப்படி ராஜ்யாபிஷேகம் நடந்தது. பீஷ்மரின் தர்மோபதேசத்தால் தருமர் முடிசூட்டிக் கொண்டாலும், அவரது மனம் கலக்கத்துடனேயே இருந்தது.
ஒருநாள் சகோதர்களுடன் சென்று பீஷ்மருக்கு அருகில் அமர்ந்த தருமர், தமது உள்ளத்தில் இருந்த சந்தேகங்களைக் கேட்டார்: ”பிதாமகரே! நல்ல குலத்தில் பிறந்தவர்கள் எவரும் வாய்க்காத நிலையில், நற்குணமும் பண்பும் நிறைந்த வேற்று குலத்தவரை தனது அமைச்சராகவோ நண்பராகவோ ஓர் அரசன் ஏற்றுக் கொள்ளலாமா?”
பீஷ்மர் பதிலளித்தார்: ”தருமா! இதுகுறித்து ஒரு கதை கூறுகிறேன் கேள்… மனித நடமாட்டம் அதிகம் இல்லாத வனத்தில் முனிவர் ஒருவர் வசித்தார்.
மகா யோகியான அவர், முக்காலமும் உணர்ந்தவர். அந்த வனத்தில் உள்ள கொடிய விலங்குகள் கூட அவரிடம் சகஜமாக பழகி வந்தன. அங்கு, நாய் ஒன்றும் இருந்தது. முனிவரைப் போலவே அந்த நாயும் சாத்வீகமானது. மாமிசத்தை ஏறெடுத்தும் பார்க்காமல், காய்கனிகளை மட்டுமே சாப்பிட்டு வந்தது.
ஒரு நாள், அந்த நாயைக் கொன்று சாப்பிடும் எண் ணத்தில் சிறுத்தை ஒன்று அதை நெருங்கியது. இதனால் பயந்து போன நாய், ஒரே பாய்ச்சலாக ஓடி வந்து முனிவரைச் சரணடைந்தது.
உடனே முனிவர், அதன் உருவத்தை சிறுத்தையாக மாற்றினார். சிறுத்தையாக மாறிய நாயைக் கண்ட நிஜ சிறுத்தை, ‘அட… இதுவும் நம்ம இனம்தான்!’ என்ற எண்ணத் துடன் அதை தாக்காமல் திரும்பியது.
சிறுத்தை உருவத்துடனேயே உலவிய நாய், வழக்கம் போலவே காய் கனிகளைத் தின்று வாழ்ந்து வந்தது. இந்த நிலையில் ஒரு நாள், கொடிய புலி ஒன்று, சிறுத்தை உருவில் இருந்த நாயைத் துரத்தியது! தலை தெறிக்க ஓடி வந்த நாய், முனிவரிடம் ‘என்னை புலியிடமிருந்து காப்பாற்றுங்கள்’ என்று கதறியது.
இந்த முறை, நாயை புலியாக மாற்றினார் முனிவர். உண்மையான புலியும், ‘இது நம்ம இனம்’ என்று நினைப்பில் அங்கிருந்து அகன்றது.
புலியாக மாறிய நாய், தனது பழைய குணங்களை விட்டு விட்டு, புலியைப் போலவே மற்ற விலங்குகளை அடித்துக் கொன்று, தின்று கொழுக்க ஆரம்பித்தது.
அடுத்து ஒரு நாள்! இந்த முறை மத யானை ஒன்று துரத்தியது! புலி வடிவில் இருந்த நாய் வழக்கம் போல், ஓடி வந்து முனிவரிடம் நின்றது. முனிவரின் கருணையால் யானையாக மாறியது நாய். நிஜ யானையும் ஒன்றும் செய்யாமல் விருட்டென கிளம்பியது.
யானை வடிவில் இருந்த நாய், எந்தக் கவலையுமின்றி நிம்மதியாய் வனத்தில் உலவியது. இந்த முறை சிங்கம், ஆக்ரோஷமாக துரத்த, யானை உருவில் இருந்த நாயும் அலறித்துடித்தபடி முனிவரிடம் செல்ல, அவரும் நாயை சிங்கமாக மாற்ற, அந்த சிங்கமும் ஒன்றும் செய்யாமல் திரும்பியது. பின்னர் சிங்க உருவில் இருந்த நாயை, எட்டுக் கால்களைக் கொண்ட சரபம் எனும் கொடிய விலங்கு துரத்த, பதறி
ஓடிவந்த நாயை, சரபமாக மாற்றினார் முனிவர்.
சரபமாக மாறிய நாய் வனத்தை சுற்றி வந்தது. ஒருநாள், நாய்க்கு உதித்தது அந்த எண்ணம்.’நாயாக இருந்தாலும், நம்மை சிறுத்தை, புலி, யானை, சிங்கம் மற்றும் சரபம் என்று மாற்றிய இந்த முனிவர், நாளை பிற விலங்குகளையும் என்னைப் போலவே சரபமாய் மாற்றி விட்டால் என்ன செய்வது? முனிவரை இனி உயிருடன் விடக் கூடாது. எனவே அவரைக் கொல்ல வேண்டும்’ என்று தீர்மானித்தபடி, அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றது. தனது ஞானத்தால் நாயின் கெட்ட எண்ணத்தை உணர்ந்தார் முனிவர்.
சரப வடிவில் இருந்த நாய் ஆவேசமாக வந்தது.
நாயை தடுத்து நிறுத்தினார் முனிவர்: ”தீய எண்ணம் கொண்ட நாயே! நன்றி மறந்த நீ, நாயாகவே மாறக் கடவது’ என்று சபிக்க… அடுத்த நிமிடமே நாயாக மாறியது”
இந்த இடத்தில் கதையை முடித்தார் பீஷ்மர்: ”தர்ம புத்திரா… நாயின் மனப் போக்கைப் பார்த்தாயா?… இந்த குணத்தை கொண்டவன் எந்த குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அமைச்சனாகவோ, நண்பனாகவோ ஒருபோதும் ஏற்கக் கூடாது. கல்வி, அறிவு, பொறுமை, நேர்மை, ஒழுக்கம் முதலான குணங்கள் கொண்டவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவர்களை ஏற்கலாம். இந்த குணங்கள் இல்லாமல், உயர் குலத்திலே பிறந்தவராக இருந்தாலும், அவர்களை நெருங்க விடவே கூடாது!’ என்று முடித்தார் பீஷ்மர்.
– ஜூன் 2008