அமெரிக்காவில் கிச்சா

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 14, 2026
பார்வையிட்டோர்: 148 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2006ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-23

22

இந்திய காலண்டர்படி அக்டோபர் பதினாறாம் தேதி (அமெரிக்க காலண்டர்படி அன்று அக்டோபர் பதினைந்து) ரேலே ஸ்டேஜில் மாது ப்ளஸ் டூ நாடகம் ப்ளஸ் என் பிறந்தநாள் – இரண்டையும் முடித்துக்கொண்டு அட்லாண்டாவுக்குப் பறந்தோம்.

அட்லாண்டாவில் அன்று அமெரிக்க காலண்டர்படி பதினாறாம் தேதி. இங்கு எங்களுடைய மாது ப்ளஸ் டூ நாடகத்துக்கு ஏற்பாடு செய்த திருமதி ஆண்டாள் பாலு கேட்டுக்கொண்டதன் பேரில் மறுபடியும் ஒரு தபா என்னுடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அன்று அமெரிக்கர் ஒருவர், “இந்தியா ஏன் இப்படி எல்லா வகையிலும் பின்தங்கி இருக்கிறது? நாளை, அதாவது எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்குக் கவலையே இல்லையா?” என்று எங்களை சதாய்த்துக் கொண்டிருந்தார். பதில் பேச முடியாமல் நாங்கள் முழித்துக்கொண்டிருந்தபோது, கிச்சா குறுக்கிட்டு, ‘எக்ஸ்க்யூஸ் மி சார். ரொம்பத்தான் எகிறாதீங்க. நீங்க என்னதான் முன்னேறினாலும் காலண்டர், கடிகாரத்தை வெச்சுப் பாத்தா எங்களைவிட நீங்க ஒரு நாள் பின்தங்கித்தான் இருக்கீங்க. பதினாறாம் தேதி பொறந்த மோகனுக்கு ரேலேவுல பதினைந்தாம் தேதி பிறந்தநாள் கொண்டாடினாங்க. அதாவது, நாளைக்குப் பொறந்தவனுக்கு இன்னிக்குப் பொறந்த நாள். நீங்க சொன்ன எதிர்காலத்தை வெச்சுப் பாத்தா எங்க ஊர் மோகன்தான் நாளைய மனிதன்” என்று கேணத்தனமாக ஒரு லாஜிக்கைக் கூறி அவர் வாயை அடைத்தான்.

கோக் என்று செல்லமாக அழைக்கப்படும் கோகோ கோலாவின் ஹெட் குவார்ட்டர்ஸ் அட்லாண்டாவில் உள்ளது. அந்த இடத்துக்கு விசிட் செய்தோம்.

அங்கு ஓர் இடத்தில் ஆரஞ்சு, லெமெனேட், பைனாப்பிள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட ருசியில் தயாரிக்கப்பட்ட கோகோ கோலாவை எங்களுக்கு ஓசியில் குடிக்கக் கொடுத்தார்கள். அப்போது எங்கள் கூடவே இருந்த ஆக்ரோஷமான ஓர் அமெரிக்க அபிதகுஜாம்பாள், எஜமான விஸ்வாசத்தில் தன் கம்பெனியைப் பற்றி ஏகமாகப் பீத்திக்கொண்டிருந்தாள்.

பொறுத்துப் பொறுத்து அலுத்துப் போய் கோகோ கோலாவில் சாரிடானைப் போட்டது போல நுரை ததும்ப பொங்கி எழுந்தான் கிச்சா. அவளுக்கு எதிரிலேயே ஒரு பேப்பரைக் கொளுத்தி, தாற்காலிகமாக அடுப்பு ஒன்றை மூட்டினான். தாகசாந்திக்காக நாங்கள் கையோடு எடுத்து வந்திருந்த மோரை அந்த அடுப்பில் கொதிக்கவைத்தான். அதில்தான் எப்போதும் கைவசம் வைத்திருக்கும் சோம்பு, கிராம்பு, லவங்கம், மிளகு, கடுக்காய் என்று கையில் கிடைத்த டப்பா செட்டிக்கடை அயிட்டங்களை எல்லாம் தாளித்துக் கொட்டினான். திராவகம் போல கொப்பளித்து அடங்கிய அந்த பானத்தை அந்த அமெரிக்க அபிதகுஜாம்பாளிடம் கொடுத்து “டேஸ்ட் என்று கூற, அவள் அதை டேஸ்ட் செய்துவிட்டு “வாவ், வாவ், வாவ்!” என்று இம்போஸிஷன் போல இருபது இருபத்தஞ்சு ‘வாவ்’ பிளிறினாள். உன்னிப்பாகக் கேட்டபோதுதான் புரிந்தது, அவள் வாயில் வந்தது ஆச்சரிய ‘வாவ்’ அல்ல, அஸிடிடி ‘ஏவ்’ சத்த ஏப்பம் என்பது!

ஏப்பகோஷம் முடிந்ததும் அந்த அ.குஜாம்பாள் கிச்சாவைப் பார்த்து கண்களில் நன்றி ததும்ப “சார், ஆறு வருஷமா வாயு உபத்திரவத்தால் அவஸ்தைப் படறேன். போகாத சர்ச் கிடையாது, முழுகாத ஸ்விம்மிங்பூல் கிடையாது. ஆனா, இப்ப நீங்க தந்த பானத்தைக் குடிச்சுட்டு விட்ட ஏப்பத்துல என்னோட அஸிடிடி போயே போச்சு” என்று கூறியவள் உடனடியாக இதைப்பற்றி கம்பனியின் ஜெனரல் மேனேஜரிடம் சொல்ல, அவர் ஸ்தலத்துக்கு விரைந்தார்.

கிச்சா தயாரித்த மோரின் ஃபார்முலாவைக் கேட்டு “ராயல்டியாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்..?” என்று கோகோ கோலாவின் ஜி.எம். மன்றாடி கேட்டுக்கொண்டார். கிச்சா பதிலுக்கு அவரிடம் “சார், ராயல்டி எல்லாம் வேணாம். ஆனா, லாயல்டியா இந்த மோர் பானத்துக்கு ‘கிச்சா கோலா’ னு என் பேரை வையுங்க” என்று பெரிய மனுஷத்தனமாகக் கூறிவிட்டு ஃபார்முலா கேட்ட அவரிடம் மோரில் போட்ட லவங்கம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்ற அயிட்டங்களின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி, மறக்காமல் மயிலாப்பூர் கச்சேரி ரோடு டப்பா செட்டிக் கடையில் வாங்குமாறு கூறி, அதன் அட்ரஸையும் தந்தான்.

பிறகு, ஜி.எம். கேட்டுக்கொண்டதன் பேரில் கிச்சா தான் தயாரித்த ‘கிச்சா கோலா’ என்ற மோர் பானத்தில் மாங்கா பத்தையைத் துண்டுதுண்டாக நறுக்கிப் போட்டு, ஐஸ் கட்டிகளை மிதக்கவிட்டு “ஏ, ஜில் மாங்கா மோர்” என்று ஷாரூக்கான் ஸ்டைலில் கூற, அது விளம்பரப்படமாக எடுக்கப்பட்டு அமெரிக்க டி.வி.களில் போடப்பட்டது!

மூன்று நாள்கள் கழித்து நாங்கள் வாஷிங்டனுக்கு பிளேனில் சென்றபோது, நாங்கள் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் கிச்சா வேட்டியில் வந்தான். விமான நிலையத்தில் இருந்த அமெரிக்கர்கள் அவனை ஒரு விநோதமான வஸ்துவைப் பார்ப்பதுபோல பார்த்தார்கள். “இவனுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை” என்பது போல நாங்கள் கிச்சாவைக் கைகழுவிவிட்டு தனியாக ஒதுங்கி நின்றோம்.

அப்போது எங்களை வரவேற்க வாஷிங்டன் எய்ம்ஸ் கல்ச்சுரல் அகாதெமியைச் சேர்ந்த விஜய் ஆனந்த், கிரி போன்ற தமிழ்ப்பற்று மிக்கவர்கள் எங்களுக்கு தமிழ் வரவேற்பு அளிக்க அந்தக் குளிரிலும் வேட்டி சட்டையில் வந்திருந்தார்கள்.

“நாங்கள் உங்களுக்கு சர்ப்ரைஸாக வேட்டியில் வந்து வரவேற்பு அளிக்க நினைத்தோம். ஆனால், உங்கள் கிச்சா எங்களை முந்திக் கொண்டு விட்டார்” என்று கிச்சாவைச் சிலாகித்துவிட்டு, வழக்கம்போல எனக்குப் போடவந்த மாலையை கிச்சா கழுத்தில் போட்டார்கள்.

விஜய் ஆனந்த், கிரி இருவரிடமும் தனது தமிழ்ப்பற்றை கூடுதல் போனஸாகக் காட்டிக்கொள்ள நினைத்த கிச்சா, “சார், எனக்கு இருக்கற தமிழ் ஆர்வத்துக்கு என்னை மட்டும் அமெரிக்காவுக்கு ஜனாதிபதியா நியமிச்சா, வாஷிங்டனை சுத்தத் தமிழ்ல வண்ணாரப்பேட்டைன்னு மாத்திடுவேன்” என்று கூற, கிச்சா விவரம் கெட்ட ஒரு லூச்சா என்பதை அவர்கள் புரிந்துகொண்டு, ஏன் இந்த மூதேவிக்கு மாலை போட்டோம் என்று வருத்தப்பட்டார்கள்.

வாஷிங்டனில் பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் பேரனும் எங்கள் குழுவின் டைரக்டர் காந்துவின் மருமகனுமான சதீஷ் வீட்டில் நாங்கள் தங்கியிருந்தபோது, எங்களை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் தங்கும் ஒயிட்ஹவுஸைச் சுற்றிக்காட்ட அழைத்துப் போனார்கள்.

திருப்பதி தர்மதரிசன க்யூ போல நீண்ட க்யூவில் நின்றிருந்தவர்களை அமெரிக்க போலீஸ் ஆங்கிலத்தில் “ஜரகண்டி, ஜரகண்டி” சொல்லி அவசரப்படுத்தினார்கள். வெள்ளை மாளிகையைச் சுற்றிக்காட்டிய கைடு எங்களை ரூம் ரூமாக அழைத்துச்சென்று, “இது நிக்ஸன் நிருபர்களைச் சந்தித்த இடம், இங்குதான் ஆப்ரகாம் லிங்கன் ஆப்பிள் சாப்பிட்டார். கென்னடியின் மூக்குக்கண்ணாடி உடைந்த இடம்” என்று ஸ்தல புராணம் பாடினார்.

அப்போது கிச்சா “இதெல்லாம் வுடுங்க சார், நம்ப தலைவர் (கிளிண்டன்) மோனிகாவை செட்டப் பண்ண இடம் எது?” என்று ஏடாகூடமாகக் கேட்டு வைக்க, அருகிலிருந்த அதிகாரி ஆக்ரோஷமாகி “வாட், வாட் டிட் யூ ஸே, மோனிகா?” என்று கூவியபடி கிச்சாவை நோக்கி துப்பாக்கியோடு பாய்ந்து வந்தார். நான் உடனே “சார், மோனிகா இல்லை, கோனிகா கேமரா. கேமராவால போட்டோ எடுக்கலாமானு கேக்கறான்” என்று சமாளிக்க, அவர் சாந்தமானார்.

நல்லவேளையாக கிச்சா தமிழில் கேட்டதால் அதிகாரிக்குப் புரியவில்லை. புரிந்திருந்தால் இந்நேரம் கிச்சா அமெரிக்கச் சிறையில் செக்கிழுத்த செம்மலாகியிருப்பான்.

ஒயிட் ஹவுஸ் பூங்காவில் போட்டோ எடுத்துக்கொள்ள பிரியப்பட்ட கிச்சாவுடன் சதீஷ் தங்கிவிட, நாங்கள் வீடு திரும்பினோம். இந்தியர்களாகிய எங்களைச் சந்திக்க சுதாவின் பக்கத்து வீட்டு மாமா பிலிப்ஸ் வந்திருந்தார். கிளிண்டன் ஜாடையிலிருந்த பிலிப்ஸைப் பார்த்ததும் எங்கள் எல்லோருக்கும் ஏக மனதாக கிச்சாவை டபாய்க்கும் ஐடியா தோன்றியது.

பிலிப்ஸுக்கு கோட்டு சூட்டு போட்டு டூப் கிளிண்ட்டனாக்கி ஓரமாக உட்காரவைத்து, கிச்சா வந்ததும் அவனிடம், “இதோ பாரு. பில் கிளிண்டன்” என்று கூறி கிச்சாவை முட்டாளாக்க முடிவு செய்தோம்.

கிச்சாவும் சதீஷும் இரவு பத்து மணிக்குத்தான் வந்தார்கள். நான் கிச்சாவிடம் “கிச்சா, இப்ப நான் உனக்கு ஒண்ணு காட்டப் போறேன். நீ ஆச்சரியத்துல அம்பேலாகப் போற” என்று சொல்லி முடிப்பதற்குள், “மோகன், நான் இப்ப உனக்கு ஒண்ணு காட்டப் போறேன். நீ ஆச்சரியத்துல அம்பேலாகி அப்பீட் ஆகப் போற” என்ற கூறி, ஒரு போட்டோ ஆல்பத்தைத் தந்தான் கிச்சா.

ஆல்பத்தில் கிச்சாவும் அசல் அக்மார்க் முத்திரை குத்திய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்ட்டனும் ஆரத்தழுவியபடி, கைகுலுக்கியபடி, தோளில் கைபோட்டபடி எடுத்துக்கொண்ட போட்டோக்கள் நிரம்பி வழிந்தன!

அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்ற எங்களைப் பார்த்து நக்கலாகச் சிரித்துவிட்டு, “டெல் மேன், டெல்” என்று சதீஷிடம் கிச்சா சொல்ல, கிச்சா-கிளிண்டன் சந்திப்பை டெல்லினான் சதீஷ்.

ஒயிட்ஹவுஸ் கார்டனில் போட்டோ எடுத்துக்கொண்டிருந்த கிச்சா, அங்கு முதுகில் ராமர் மூன்று கோடுகள் போடாத ராட்சஸ சைஸ் ராவண அணிலை க்ளோசப் ரேஞ்சில் போட்டோ எடுக்க, ஓடும் அணிலைத் துரத்தியிருக்கிறான்.

அப்போது ஒயிட்ஹவுஸ் கார்டனில் மனைவி ஹிலாரி, மகள் செல்ஷியாவோடு செக்யூரிட்டி சுற்றம் சூழ ஜாகிங் செய்துகொண்டிருந்தாராம் ஜனாதிபதி கிளிண்டன். அரசர் கிளிண்ட்டனிடம் அணில் அடைக்கலம் புக, வேடன் போல ஓடிவந்த கிச்சா, கிளிண்டன் யார் என்று அடையாளம் தெரியாமல் அணிலைத் தரும்படி தமிழில் அழிச்சாட்டியம் செய்திருக்கிறான்.

பாவம், கிளிண்டன். அணிலையும் கிச்சாவையும் சமாதானம் செய்துவைத்து, பின்னர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கிச்சாவின் குலம் கோத்திரங்களை விசாரித்திருக்கிறார். கிளிண்ட்டனுக்கு நாலு வேதம். உபநிடதம், அர்த்த சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்று ஆரம்பித்து திருக்குறள் வரை பாரதக் கலாசாரத்தை மெகா சீரியல் போல கிச்சா விஸ்தாரமாகக் கூற, புல்லரித்துப் போன கிளிண்டன், கிச்சாவோடு போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்.

கிளம்பும்போது கிளிண்ட்டனிடம் “கிட்டத்தட்ட நூறு கோடி ஜனங்கள் சார்பா கேட்டுக்கறேன். நீங்களும் மாமியும் (ஹிலாரி கிளிண்டன்) உங்க பொண்ணோட (செல்ஷியா..) இந்தியாவுக்கு ஒரு நடை வந்துட்டுப் போகணும்” என்று கிச்சா கோரிக்கை விடுக்க, கிளிண்டன் “ஷ்யூர், ஷ்யூர்” என்று அவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு ஜாக்கிங்கைத் தொடர்ந்தாராம்.

எது எப்படியோ, வாஜ்பாய், சந்திரபாபு நாயுடுவுக்கு முன்பே கிளிண்ட்டனை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தது நமது கட்டுரை நாயகன் மிஸ்டர் கிச்சாதான்!

23

அமெரிக்காவில் நாடகம் போட வீடு, மனைவி, மக்களை பிரிந்து வந்ததில் எங்களுக்கெல்லாம் ஹோம் சிக் வந்தது என்றால், பாணா காத்தாடி நூலுக்குக்கூட பக்தி சிரத்தையோடு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரசாதமான மஞ்ச காப்பைத் தடவி மாஞ்சா காப்பாகப் போடும் அளவுக்கு பெருமாள்மீது தெய்வீகக் காதல் கொண்ட கிச்சாவுக்கு ‘பெருமாள் சிக்’ வந்துவிட்டது.

திருப்பதி ஜாடையில் மலை மேல் அமைந்துள்ள ஊரான பிட்ஸ்பர்குக்கு நாடகம் போடப் போனபோது, கிச்சாவின் பெருமாள் ஜுரத்துக்கு மருந்து தருவதாகக் கூறிய டாக்டர் பழனிச்சாமி, “இங்க ஒரு பெருமாள் கோயில் இருக்கு. ஆனா, பார்த்தசாரதி பெருமாள் இல்லை. வெங்கடாசலபதி. ஓகேயா?” என்று கிச்சாவிடம் கேட்டார். உடனே கிச்சா, “என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. வெங்கடாசலபதி யாரு டாக்டர்? பார்த்தசாரதிப் பெருமாளோட கஸின் காட்தானே” என்று ஒரு போடு போட்டவன், எங்களுடைய மேக் அப் பெட்டியிலிருந்து கத்தி, கத்திரிக்கோல், சோப் ஆகியவற்றை எடுக்க ஆரம்பிக்க, நாங்கள் குழப்பமாகப் பார்த்தோம்.

குழந்தையாக இருந்தபோது வந்த கக்குவான் இருமலில் ஆரம்பித்து, பொடுகு, சேத்துப்புண், நகசுத்து, மெட்ராஸ்-ஐ என்று நாப்பது வயது வரை தனக்கு வந்த ஸ்மால் ஸ்கேல் வியாதிகளுக்கு எல்லாம் வெங்கடாசலபதியைத் தொந்தரவு செய்து, திருப்பதி வந்து மொட்டை போடுவதாக வேண்டிக் கொண்ட கிச்சா, தான் போடாமல் விட்ட அத்தனை மொட்டைகளுக்கும் சேர்த்து மொட்ஸ்பர்கில் ஸாரி. பிட்ஸ்பர்கில் மொட்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தான்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ரியர்வ்யூ மிரரில் பார்த்தபடித் தலையை செல்ஃப் ஷேவிங் செய்துகொண்டிருந்த கிச்சாவை, வீதியில் ஜாக்கிங் செய்துகொண்டிருந்த அமெரிக்கத் தொப்பைகள் சூழ்ந்துகொண்டு “என்ன ஸ்வாமி இது?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்கள். மொட்டைக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை என்று யோசித்து அலுத்த கிச்சா, மழித்த தலையை தடவிக்காட்டி, “டாப்லெஸ் டாப்லெஸ்” என்று கூறிவிட்டு.

“தலைக்கு மொட்டை போட்டா ‘ஹெட் வெயிட்’ சுத்தமா போயிடும். அப்பால அங்கப்பிரதட்சணம் செய்து ஆண்டவன் கிட்ட சரண்டர் ஆயிடலாம்” என்று வைணவர்களின் சரணாகதி தத்துவத்தை தமிழ், ஆங்கிலம், அபிநயம் மூன்றும் கலந்து அவர்களுக்கு விளங்கவைத்தான். அவர்கள் என்ன புரிந்துகொண்டார்களோ தெரியாது. நாங்கள் பிட்ஸ்பர்கிலிருந்து கொலம்பஸுக்குக் கிளம்பியபோது, பத்துப் பதினைந்து அமெரிக்க மொட்டைகள் பார்க்கில் “கோழிந்தோ… கோழிந்தோ” என்று கூவியபடி அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டு இருந்ததைப் பார்த்தோம்.

கொலம்பஸ் பஸ் ஸ்டாண்டில் எங்களை வரவேற்க பன்னிரண்டு மாலைகளோடு வந்த ராம்மோகன், சந்திரசேகர், கஜானனன், ஹரி, சரவணகுமார் ஆகியோர் எங்களுக்கு மாலைகளைப் போட்டுவிட்டு, மீதி ஒரு மாலை இருப்பதைக் கூறியபோதுதான் நாங்கள் பாழாய் போன கிச்சா, காணாமல் போன கிச்சா ஆனதை உணர்ந்து பதறினோம்.

போலீஸுக்குப் புகார் கொடுத்ததில் அவர்கள் டி.வி.யில் கிச்சாவின் போட்டோவை ஐந்து நிமிடத்துக்கு ஒரு தபா போட்டுக்காட்டி, காணாமல் போன அறிவிப்பை கர்மசிரத்தையாகச் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், கிச்சாவைத் தேடி கொலம்பஸில் அலைந்துகொண்டிருந்த சரவணகுமார், ஒரு ரெஸ்டாரெண்டில் உள்ள டி.வி.யில் ‘கா.போ.கிச்சா’ பற்றிய அறிவிப்பைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர் கூடவே கிச்சாவும் பிஸ்கட் சாப்பிட்டபடி பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். மொட்டையில் இருந்த கிச்சாவை சரவணகுமாருக்கு அடையாளம் தெரியவில்லை. தலைக்கு உள்ளேயும் – தற்சமயம் வெளியேயும் எதுவும் இல்லாத கிச்சாவும் சரவணகுமாரை நெருங்கி “சார், நானும் உங்கள மாதிரி தமிழன்தான். என்ன இது டி.வி.யில் என் போட்டோவைப் போட்டு என்னமோ சொன்னாங்களே. பிட்ஸ்பர்குல நான் மொட்டை போட்டு அங்கப்பிரதட்சணம் பண்ணது அமெரிக்கா பூரா பரவிடுத்தா என்ன?” என்று காணாமல் போன கவலை சற்றும் இல்லாமல் கேட்டுவிட்டு, “பை தி பை, மை நேம் இஸ் கிச்சா. மிஸ்டர் சரவணகுமார்ங்கறவர் வீட்டுக்கு வழிசொல்ல முடியுமா?” என்று வெகுளியாக வினவ, கிச்சாவை கோழி அமுக்குவது போல அமுக்கி, காரில் போட்டுக்கொண்டு வந்து எங்களிடம் சேர்த்தார் சரவணகுமார்.

“எப்படிடா காணாம போனே?” என்று நாங்கள் கேட்க, அதற்கு கிச்சா “அதை விடு. ஒண்ணு கவனிச்சியா, அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது கொலம்பஸ். ஆனா கொலம்பஸைக் கண்டுபிடிச்சது கொலம்பஸைக் கண்டுபிடிச்சது காணாம போன இந்த கிச்சா” என்று கவலையில் இருந்த எங்களிடம் ஸ்டைலாகப் பீத்திக்கொள்ள, கடுப்பான நாங்கள் பதினோரு பேரும் கிச்சாவின் மொட்டைத் தலையை ஜாகிர் உசேன் தபேலாவாக பாவித்து சாத்து சாத்தென்று சாத்தினோம்.

டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் என்ற ஊருக்கு விஜி ராஜனின் அழைப்புக்கிணங்கி நாடகம் போட க்ரேஹவுண்ட் பஸ்ஸில் சென்றோம்.

அப்போது, எங்கள் பஸ்ஸைத் தாண்டிச் சென்ற ஒரு கார் டிரைவர் “ஃபயர்.. ஃபயர்” என்று கத்த, டிரைவர் பஸ்ஸை நிப்பாட்டினார். நாங்களெல்லாம் அடித்துப் புரண்டு கீழே இறங்கிப் பார்த்தால், பஸ்ஸின் பின்பக்கம் ஆயில் கசிவால் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது.

டிரைவர் செல்போனில் ஃபயர் சர்வீஸுக்கு போன் செய்து முடிப்பதற்குள் ஆர்.எஸ். மனோகர் டிராமாவில் பட்டாசு வெடித்து மகாவிஷ்ணு, நாரதர் போன்றவர்கள் பளிச்சென்று தோன்றுவது போல எங்கிருந்தோ மாயமாக இரண்டு ஃபயர் இன்ஜின்களும் ஒரு ஆம்புலன்ஸும் வந்து நின்றன.

ஃபயர் சர்வீஸ் ஆட்களுக்கு உதவியாக கிச்சா தன் பங்குக்கு நெருப்பை வாயால் ஊதி ஊதி அணைக்க, கிச்சாவின் அணைப்பைக் கண்டு புல்லரித்த அவர்கள், கிச்சாவை மெய்சிலிர்க்க அணைத்துக் கொண்டார்கள்.

எனது கஸின் சிஸ்டர் விமலாவும் அவளது கணவர் ராஜாஜியும் எங்களுக்கு டெக்ஸாஸின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் கௌ-பாய்ஸைக் காட்ட அழைத்துச்சென்றார்கள். அங்கு ஒரு கௌ-பாய். ஸாரி, கௌ- கிழம் ஆகாயத்தில் கோகோ கோலா டின்னைத் தூக்கி எறிந்து, அது மறுபடி மண்ணில் விழாதபடிக்கு துப்பாக்கியால் சுட்டுத் தடுத்தபடி அரை மணி நேரம் சாவகாச சாகசம் செய்துகொண்டிருந்தார். பிறகு, கூடியிருந்த கும்பலைப் பார்த்து “இப்ப நான் செஞ்சதை யார் செஞ்சு காட்டறாங்களோ அவங்களுக்கு என்னோட கேர்ளைக் கட்டி வெக்கறேன்” என்று குடிபோதையில் சவால் விட்டு, “அப்பா, ஊரைக் கூட்டி மானத்தை வாங்காதே” என்று வீட்டுக்குள்ளிலிருந்து கூவிய தன் மகளுக்கு சுயம்வரம் வைத்தார்.

முரட்டு ஜீன்ஸ் பேண்ட், முழுக்கை சட்டை, பெல்ட், கழுத்தில் கர்சீப், மொட்டையை மறைக்க பெரிய தொப்பி கெட்அப்பில், பார்க்க கௌ-பாய் போல் இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு கன்னுக்குட்டி-பாய் ரேஞ்சில் இருந்த கிச்சாவுக்கு அந்தக் குடிகார கிழ கௌ-பாயின் சுயம்வர சவால் எரிச்சலை உண்டாக்கியது. கிச்சா கோதாவுக்குள் குதித்தான்.

கிச்சாவிடம் அந்த பெரிசு துப்பாக்கியை நீட்ட, “நோ தாங்க்ஸ்” என்று கூறியவன், அங்கிருந்த மரத்திலிருந்து ஆங்கில ‘வி’ ஷேப்பில் இருந்த கிளையை உடை டைத்து அதில் கயிறைக் கட்டி, தாற்காலிகமாக ஒரு உண்டிவில்லைத் தயாரித்தான்.

பிறகு, தன் தலையில் போட்டிருந்த தொப்பியை ஆகாயத்தில் வீசி எறிந்துவிட்டு, ராமர் போல ஏழு மரத்துக்குப் பின்னால் மறைந்து நின்று, அங்கிருந்த கூழாங்கற்களைப் பொறுக்கி உண்டிவில்லில் வைத்து அடித்து, அந்தத் தொப்பியை அந்தரத்திலேயே அரை மணி நேரம் அல்லாட வைத்தான்.

முத்தாய்ப்பாக, உண்டிவில் தாக்குதல் நின்றதும் அந்தத் தொப்பி, தலையாய விஸ்வாசத்தோடு கிச்சாவின் தலையில் வந்து அமர, அங்கிருந்த கௌ-பாய்ஸ் கூட்டம் கிச்சாவை வெஸ்டர்ன் ஆக்ட்டிங் ஃபிலிம் புகழ் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டைப் பார்ப்பது போல பிரமிப்போடு பார்த்தது.

அதோடு நில்லாமல், குறிபார்த்து கோலி அடிப்பதில் கில்லாடியான கிச்சா, அந்த கிழ கௌ-பாயிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி அங்கிருந்த மரத்தில் உள்ள ஆப்பிள்களைச் சுட்டு வீழ்த்தி, “உங்களுக்கு சுட்ட பழம் வேணுமா? இல்லை, சுடாத பழம் வேணுமா?” என்று ஆடியன்ஸைக் கேட்டு முடிப்பதற்குள், ஆச்சரியத்தில் பிளந்த அவர்கள் வாயில், கிச்சா சுட்ட பழங்கள் வந்து விழுந்தன.

நவம்பர் இருபதாம் தேதி மறுபடி நியூ ஜெர்ஸியில் எங்களுடைய கடைசி ஷோ. முந்தின நாள் இரவு அமெரிக்காவைப் பிரியப்போகும் ஏக்கத்தைப் போக்கிக்கொள்ள விடிய விடிய தமிழ் சினிமா காஸெட்டுகளை போட்டுப் பார்த்தபடி இருந்தோம். நாங்கள் தங்கிய வெங்கட் வீட்டில் இருந்த தமிழ் காஸெட் எல்லாமே நாட்டியப் பேரொளி பத்மினி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘சித்தி’, ‘வியட்நாம் வீடு’ போன்ற படங்கள்.

வைகுண்ட ஏகாதசி அன்று விடிய விடிய கண் முழித்து பெருமாளை நினைத்துக்கொண்டிருந்தால் வைகுண்ட தரிசனம் கிட்டும் என்பது ஐதீகம். அதுபோல பத்மினி நடித்த படங்களையே விடிய விடிய பார்த்ததன் பலனோ என்னவோ தெரியவில்லை, காலையில் எழுந்து பார்த்தால் வரவேற்பறையில் பத்மினி உட்கார்ந்திருந்தார்.

நாங்கள் பத்மினியோடு பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு இன்னமும் நடிப்பில் உள்ள ஆர்வம் புரிந்தது. நான் தயங்கித் தயங்கி “எங்கள் நாடகத்தில் நடிக்கிறீர்களா?” என்று விண்ணப்பித்தபோது “ஒய் நாட்?” என்று கூறி பத்மினி ஒப்புதல் அளிக்க, நான் “இது கனவா. இல்லை நனவா?” என்று குழப்பத்தில் பக்கத்திலிருந்த பாலாஜியின் கையை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

நாட்டியப் பேரொளி பத்மினியோடுஅதுவும் நாடகத்தில் சேர்ந்து நடிக்கப்போகும் சந்தோஷத்தில் நான் இருந்தபோது, டாக்டராக பத்மினி மேடையில் நுழைந்தார். காட்சிப்படி மயங்கி விழுந்த குஷ்மா தேவியை செக்கப் செய்யவேண்டும். பிறகு நானும் பத்மினியும் பேசுவதுபோல காட்சி. சோபாலால் வேஷத்தில் இருந்த படுபாவி கிச்சா, “டாக்டர், குஷ்மா தேவி மயக்கம் போட்டுட்டா. செக்கப் பண்ணி சொல்லுங்க, உடலும் உள்ளமும் நலந்தானா?” என்று பத்மினியிடம் தில்லானா மோகனாம்பாள் பாடலை பொருத்தமாகக் கூற, அரங்கமே கிச்சாவின் சாமர்த்தியத்துக்கு எழுந்துநின்று அப்ளாஸ் அளித்தது. பிறகு என்ன கிச்சா ஏதேதோ பேச, பதிலுக்கு நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த அனுபவம் மிக்கவரான பத்மினி பதிலடி கொடுக்க, நாங்கள் அசடு வழிய பார்த்துக்கொண்டிருந்தோம்.

அன்று இரவு நியூ யார்க் ஏர்போர்ட்டில் சென்னைக்கு ப்ளேன் பிடிக்க போனோம். மெட்ராஸ் போனவுடன் அமெரிக்க டூரில் என் கூடவே இருந்து குழி பறித்த கிச்சாவை முதல் காரியமாக ஆள் வைத்து அடிப்பது என நான் முடிவு செய்தேன்.

அப்போது எங்களை வழியனுப்ப வந்த பார்கவி சுந்தர்ராஜன், எங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் சங்கீத கச்சேரி செய்யப்போகும் பாடகி நித்யஸ்ரீயையும் அவருடைய குழுவினரையும், “வெல்கம் டு அமெரிக்கா” கூறி வரவேற்று அழைத்து வந்தார்.

நான் நித்யஸ்ரீயோடு பேசிக்கொண்டிருந்தபோது, தன்னுடைய கச்சேரிகளுக்கு வழக்கமாக தம்பூரா போடுபவர் தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியாமல் போனது குறித்து கூறினார் அவர். “உங்க ட்ரூப்ல யாருக்காவது தம்பூரா போடத் தெரியுமா?” என்று என்னிடம் நித்யஸ்ரீ கேட்க, வழக்கம்போல தம்பூரா போடும் போஸில் தலையைச் சொறிந்துகொள்ள கிச்சா கையைத் தூக்க, கிச்சாவின் அமெரிக்கப் பயணம் மீண்டும் மறு ஒளிபரப்பாகத் தொடங்கியது.

(முற்றும்)

– அமெரிக்காவில் கிச்சா, முதற் பதிப்பு: மார்ச் 2006, கிழக்கு பதிப்பகம், சென்னை.

கிரேசி மோகன் கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019) தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *