அப்பா பாவம்
(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு நாட்களுக்கு முன்புதான், யாழ்ப்பாணத்தி லிருந்து கொழும்பிற்குத் திரும்பினோம் நாங்கள் நாங்க ளென்றால், நான், அப்பா, அம்மா எல்லோரும்தான். நான், இப்போதுதான் முதல் முதல் யாழ்ப்பாணம் போனேன். ஏன், அம்மாகூட இப்போதான் முதல் முறையாக யாழ்ப்பாணம் வந்தாராம். நான்தான் சின்னவன்; அம்மா இவ்வளவு நாட்களும் ஏன் அங்கே போகவில்லை? அப்பாவிடம் இதைக் கேட்டேன். அப்பா சொன்னார், “உன்னைப் போலத்தான் உன்ர அம்மாவும் இங்க பிறந்து வளர்ந்தவ” என்று.
அப்பாவுக்குத்தான் சொந்த ஊர். யாழ்ப்பாணம். அவருடைய அப்பா, அம்மா எல்லோரும், அங்கேதா னிருக்கிறார்களாம். ஆனால், தான் பத்து வருஷமாக அங்கே போகவில்லை என்று அப்பா சொன்னார். அப்பாவிற்கு இப்போது கூட அங்கே போக விருப்பமில்லையென்று எனக்குத் தெரியும். ஆனால், பாலா மாமாதான் அடிக்கடி வந்து ‘ஒருக்காப் போட்டு வாடா, சிவா’ என்று தொல்லைப் படுத்துவார். பாலா மாமா, நல்ல ‘பிள்ளை’. அப்பாவின் தங்கச்சியுடைய ‘புருஷ’ராம். அவர். எங்களுடைய சொந்தக்காரரில் அவர் ஒருத்தரைத் தான் எனக்குத் தெரியும்.
பாலா மாமாவுக்காக, அப்பா யாழ்ப்பாணம் புறப்பட்டார். அம்மா, அப்பா, நான், பாலா மாமா நாலு பேரும் போனோம். போகும் பொழுது “அங்கை எப்பிடியும், இரண்டு கிழமை நிண்டிட்டுத்தான் வரவேணும்” என்று பாலா மாமா சொன்னதற்கு, அப்பா தலையாட்டினார். ஆனால், அங்கே இரண்டு நாள் நின்றவுடனேயே ஏன் திரும்பினோம்?
ரயிலில் போவதுதான் எவ்வளவு சந்தோஷம்? அதற்கு முதல், நான் ஒருதரம் கண்டியிலிருந்து கொழும்பிற்கு வந்திருக்கிறேன். ரயிலில், யாழ்ப்பாணப் பாதை, கண்டிப்பாதையைப் போல அவ்வளவு அழகில்லைத்தான். ஆனால் நல்ல வேகமாக ஓடியது. எனக்கும் நல்ல சந் தோஷம். வழிநெடுக, அப்பாவும். பாலா மாமாவும் ‘யாழ்ப்பாணம் போன பிறகு என்ன செய்வது’ என்று பேசிக்கொண்டு வந்தனர். ரயிலுக்குள்ளே அம்மா சொன்னார் “இளங்கோ அங்கே உன்னோட விளையாட கனக்க அண்ணை, மச்சான்மார், எல்லாம். இருக்கிறான்கள்…” என்று. ஆனால், அங்கே ஒருதரும் என்னுடன் விளையாட வரவில்லை.
போகும் பொழுது, அப்பாவிற்குப் பயம்; அம்மாவிற்கும் பயம். நானும் பாலா மாமாவும், என்னென்னவோ யோசித்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டு போனோம். வரும்பொழுது, எல்லோருக்குமே கவலை,
‘ஸ்ரேஷ’னுக்கு, ஒருதரும் வரவில்லை. மாமா, ஒரு கார் பிடித்து எங்களை அப்பா வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போனார். அப்பா ஸ்ரேஷன் கட்டிடத்தைப் பார்த்து, “அட எப்படிக் கட்டிப்போட்டான்கள், இப்ப…” என்றார். பாலா மாமா சொன்னார், “பத்து வருஷமெல்லே? வந்து பார். இன்னும் எத்தினை புதினங்களெண்டு.”
கார் ஓட ஓட புதுப்புது விதமான இடங்களைப் பார்த்தேன். கொழும்பைப் போல இல்லை மாமா, எனக்கும் அம்மாவுக்கும் எல்லாவற்றையும் விளங்கப் படுத்திக் கொண்டு வந்தார். அப்பா ஒன்றும் பேசாமல், அங்கு மிங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு வந்தார். அம்மா, ‘தம்பி. அங்க போய்க் குழப்படி பணக கூடாது. நல்லபிள்ளையா யிருக்க வேணும்’ என்று சொன்னார். உடனே பாலாமாமா. ‘ராசாவுக்கு அங்க ஒரு பாட்டா, ஒரு பாட்டி, ஒரு சித்தப்பா, இரண்டு மாமி எல்லாரும் இருக்கினம்; வந்து பாரேன்…” என்று என்னைக் கொஞ்சினார். கார், ஒரு ஒழுங்கைக்குள்ளே போய், ஒரு பெரிய ‘கேற்’றுக்கு முன்னே நின்றது.
***
பெரிய பழைய வீடு. ஒருவருமே வெளியில் இல்லை. இருந்தாற்போல, ஒரு கிழவி ஓடிவந்து, ‘எட வந்திட்டியே… வந்திட்டியே..?’ என்று கேட்டுக் கொண்டு அப்பாவின் கன்னத்திலே ‘பளார் பளார்’ என்று அடித்தாள். எனக்குக் கோபங் கோபமாய் வந்தது. என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. மாமாதான் தூக்கி வைத்திருந்தாரே? அம்மா தலையைக் குனிந்து கொண்டு நின்றார்.
அடித்த கிழவி, இருந்தாற் போல அழுதாள். அழுது கொண்டு அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள்- அப்பா என்னைக் கொஞ்சுவது போல. அப்பாவும் அழுதார். “என்ர ராசா இவ்வளவு நாளா எங்க போனனீ…” என்று அந்தக் கிழவி விம்மினாள்.
“இவதான் ராசான்ர பாட்டி” பாலா மாமா, காதுக்குள்ளே மெல்லமாகச் சொன்னார். “பாட்டியெண்டால்…”. எனக்கு விளங்கவில்லை. “அப்பாவுடைய அம்மா…” அப்பாவும், அவருடைய அம்மாவும், இன்னும் அழுதுகொண்டு தானிருந்தனர். எனக்குச் சிரிப்பு வந்தது? ஏன் அழுகிறார்கள்?
முன்புற அறையின் ஜன்னலிலிருந்து என்னைப் போன்ற நாலைந்து முகங்கள் எட்டிப் பார்த்தன. அம்மாவைப் போலவும், யாரோ நின்றார்கள். ‘டக் டக்’கென்று சத்தங் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஒரு கிழவர் வீட்டுக்குள் ளிருந்து வந்தார். வெள்ளைத் தலை. அப்பாவைப் போல முகம் அப்பாவின் அப்பாவோ? மாமாவைக் கேட்டேன்.
“கெட்டிக்காரப் பயலடா நீ” என்றார்.
பாட்டா, பாட்டியைப் போல அப்பாவுக்கு முன்னே போய் நிற்கவில்லை. நேரே அம்மாவிடம் போய் நின்று, உற்றுப் பார்த்தார். அம்மா, அவருடைய காலில் வீழ்ந்து வணங்கியதும், தலையைத் தடவி “எழும்பு” என்றார். பிறகு மாமாவுக்குப் பக்கத்தில் நின்று, என்னைப் பார்த்தார். எனக்கு ஒரே வெட்கம். பாட்டாவைப் பார்த்துச் சிரித்தேன்.
பாட்டி அப்பாவை விட்டு அம்மாவின் கையைப் பிடித்து “உள்ளுக்கு வா.. ” என்று சொல்லி, முன்னே போனார். எல்லோரும் உள்ளே போனோம். எங்களுடைய கொழும்பு வீட்டைப் போல வடிவில்லைத்தான்: ஆனாலும் பென்னம் பெரிய வீடு.
சிறிது நேரங் கழித்து, அப்பாவின் தம்பியும், தங்கையும், அவர்களுடைய பிள்ளைகளும் வந்து எங்களைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். மாமா, ஒவ்வொருவரும் யார் யாரென்று மெதுவாகச் சொன்னார். எல்லோரும் அப்பாவைத் தான் கேள்விகள் கேட்டார்கள். அம்மாவைக் கவனிக்கவில்லை.
அன்று பின்னேரம், யார் யாரோவெல்லாம் வந்தார்கள், அப்பாவைப் பார்க்க. ஒரு பெண் பாட்டியைக் கேட்டாள், ‘இவன்தானே சிவசுப்பிரமணியத்தின்ர பெடியன்?’
பாட்டி தலையசைத்தாள்,
“நல்ல சிவலையாயிருக்கிறான், தேப்பன் கரிக்கட்டை மாதிரி!… தாயைப் போலை.. என்ன?”
“ம்ம்…”
“என்னவாம், மருமகள்?”
‘போ போ… நீதான் போய்க்கேள். அவளுக்குத் தமிழுந் தெரியுமோ, என்ன இழவோ?” அம்மாவுக்குத் தமிழ் தெரியாதா? பாட்டி என்ன கதைக்கிறார்? நான் எழுந்து ஓடினேன்.
கூடத்திற்குள் ஏதோ சத்தங்கேட்டு ஓடிப்போனேன். அப்பாவுஞ் சித்தப்பாவுஞ் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். சித்தப்பா, கத்தினார்.
“பத்து வருஷத்துக்கு இந்தப் பக்கம் எட்டிப்பாரா இருந்திட்டுப் பிறகு இப்ப ஏன் வந்தாய்..?”
அப்பாவும் பதிலுக்கு கத்தினார்.
“டேய், பாலா ‘வாவா’ எண்டு கூப்பிட்டுத்தா வந்தனான். அம்மா அப்பாளைப் பார்க்க வந்தனான். உன்னையும் உன்ர தங்கையை யுமில்லை?”
“பத்து வருஷமா இல்லாத அம்மா அப்பா, இப்ப எப்பிடி வந்தவை? சொத்துப் பிறிக்கப் போறியோ?”
“டேய், மடையா…” – அப்பாவுக்கு கோபத்தில் என்ன சொல்வதென்று புரியவில்யோ?
“சின்னனகை, நீ இஞ்சவா” பெரியமாமி வந்து சித்தப்பாவைக் கூட்டிக்கொண்டு போனார். பாலா மாமா தங்களுடைய வீட்டுக்கும் – சின்னமாமி வீட்டுக்கும் – போய் விட்டாரோ? அவரிருந்தால் இவர்கள் சண்டை போட்டிருக்க மாட்டார்கள். அம்மாவையுங் காணவில்லை. எனக்குப் பயமாயிருந்தது. தேடிப் போனேன்.
காலையிற்கண்ட பையன்கள் ‘அண்ணைமார், மச்சான் மார்’ என்று மாமா சொன்னது இவர்களைத் தானோ. எதிரில் வந்தார்கள். சித்தப்பாவின் மூத்தமகன், என்னிலும் சின்னவன், முன்னே வந்தான்.
“டேய் சில்வா…. இங்கே வாடா”
மற்றவன், அவனை இடித்துக்கொண்டு முன்னால் வந்தான்.
‘சில்வா இல்லை? பெர்ரரா, டேய் பெரரா இங்கே வாடா..”
இரண்டு பேரும். என்னைத்தான் கூப்பிட்டார்கள்.
“என் பெயர் இளங்கோ” என்றேன்.
“இளங்கோ… கிழங்கோ! என்ன பேரடா இது?” எல்லோருஞ் சிரித்தார்கள். எனக்கு அழுகை வந்தது: அழுதேன். ‘இளங்கோ!.. கிழங்கோ?..’ என்று எல்லோருங் கூவினார்கள்.
பெரியமாமி அங்கே வந்தாள்.
“ஏனடா கத்துறீங்கள்?… அவனுக்குக் கிழங்கெண்டா என்னண்டு தெரியுமோ… அரைத் தமிழன்! ஓடுங்கடா அங்கே…”
மாமி, போய் விட்டாள்.
அழுது கொண்டே அம்மாவிடம் போய், நடந்ததைச் சொன்னேன். அம்மா என் கண்களைத் துடைத்துவிட்டுத் தன் கண்களையுந் துடைத்துக் கொண்டாள்.
அம்மா எழுந்து. என்னையுங் கூட்டிக்கொண்டு, அடுக்களைக்குப் போனாள். பாட்டி அங்கில்லை. பெரிய மாமியும். சின்னம்மாவுந்தான் இருந்தார்கள்.
”ஏதாவது வேலை இருக்கா? நானும் செய்யிறேன்?” அம்மா கேட்டாள்.
“ஒண்டுமில்லை. வெளியிலே இருங்களேன்…” சின்னம்மா, சிடுசிடுத்தாள். வெளியே வந்துவிட்டோம்.
இரவு, சாப்பிட்டபின் அப்பா என்னையுங் கூட அழைத்துக் கொண்டு, கை கழுவக் கோடிப் பக்கம் போனார். பின பக்க அறைக்குள், பெரிய மாமியும், சின்னம்மாவும் பேசி, கொண்டிருந்தார்கள்.
“அவள் சரியான கெறுக்குப் பிடிச்சவள் எண்டு நீங்க சொன்னது சரிதான் மச்சாள்…”
“பின்னே? சரியான சிங்களத்தி! அண்ணையும் ‘அள்ளிக் கொண்டு’ வந்தார் எங்கயிருந்தோ?..” அப்பா, உள்ளே பாய்ந்தார்.
“எடி தங்கச்சீ… என்ன பேசுகிறாய்? உனக்கென்ன பைத்தியமே…?”
மாமி, திடுக்கிட்டுத் திரும்பினாள்.
“பின்னையென்ன… நான் சொன்னதிலை, என்ன பிழை? அவள் சிங்களத்திதானே?”
சண்டை பலத்து விட்டது. சித்தப்பா, பாட்டா, பாட்டி, எல்லோரும் வந்து கூடினார்கள். அம்மா மெதுவாக என்னைத் தூக்கிச் சென்று படுக்க வைத்தாள். தூக்கம் வரவில்லை.
‘அம்மா, சிங்களத்தியா? அம்மாவா…? இது என்ன இது? சிங்களத்தியென்றால், எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பீரிஸ் மாமாவின் பெண்சாதி யல்லவோ? அங்கே ‘மார்க்கற்’றுக்குள்ளே கடை வைத்திருக்கும் அலிஸ் அல்லவோ?… அம்மா சிங்களத்தியெண்டா கவுணும் போடவில்லை? ‘சர’முங் கட்டவில்லையே? பாட்டியைப் போல பெரிய மாமியைப் போல; சின்னம்மாவைப் போல, சேலை தானே கட்டியிருக்கிறா; நெத்தியிலை குங்குமப் பொட்டிருக்கு?… அம்மா தமிழல்லவோ பேசுறா? அதிலே என்ன பிழை?…’
‘சரி சிங்களத்தி யெண்டுதான் இருக்கட்டும். அதிலே குறைவு என்ன? ஏன் ஏசினம் எல்லாரும்? சிங்களவரெண்டாலும் இரண்டு கால், இரண்டு கை தானே? கொழும்பிலை, ‘தமிழரெண்டா, சிங்களவர் பகிடி பண்ணினம்: இங்கே ‘சிங்கௗ’ வரெண்டா, ஏசினம்! நல்ல முசுப்பாத்தான்..
எனக்கு. அது புதுமையாக விருந்தது-அம்மா ‘சிங்களத்தி’! அதற்கென்ன? ஆனால் நான் என்ன இனம்?
தமிழனா சிங்களவனா?
அப்பா உள்ளே வந்தார்.
“நாளை விடிய வெளிக்கிட வேண்டியது தான். லீலா”
‘லீலா!’ இது சிங்களப் பெயரோ? அப்போ, சிவசுப் பிரமணியம்?… பேரிலை என்ன..?
நான் தூங்கிப் போனேன்.
அடுத்த நாட் காலை நான் எழும்ப முன்னமே பாலா மாமா வந்திருந்தார். அவர் பெண்சாதி சின்னமாமியும் வந்திருந்தா.
‘அண்ணை… அண்ணை… மச்சாள்… மச்சாள்…’ எண்டு அம்மாவையும் அப்பாவையும் சுற்றிச்சுற்றி வந்தா. என்னைக் கொஞ்சியது தான் அவருடைய வேலை அன்று முழுவதும்.
“எல்லாம் வீணாய்ப்போச்சே அண்ணா” என்று அழுதா.
அப்பா சொன்னார்…. “பாலா… இப்ப நான் உங்க வீட்ட வாறன். பின்னேர மெயிலுக்குப் புறப்பட்டாச் சரி’
மாமா மெல்லத் தலையசைத்தார்.
‘டேய்.. பாலா. நீ சொன்னதுக்காகவும் அப்பா அம்மாவைப் பார்க்கிறதுக்காக வுந்தான் வந்தேன். ஆனா அவையள் சரியா முகங்கூடக் கொடுத்துக் கதைக்கலையே.. அப்பா..அம்மாவோடை தான் ஆறுதலாகக் கொஞ்சம் கதைக்க ஆசைப்பட்டன். சரி வராது போலிருக்கு’
அப்பாவின் தொண்டை கம்மியது. கண்களிலே நீர் வழிந்தோடியது. பாலா மாமா, மாமி, அம்மா, நான் எல்லோருமே அழுது விடுவோம் போலிருந்தது.
அப்பா விம்மினார்.
பாவம் அப்பா!
– விவேகி, 01-08-1967.
– பார்வை (சிறுகதைகள்), முதலாம் பதிப்பு: சித்திரை 1970, யாழ் இலக்கிய நண்பர் கழகம், தெல்லிப்பளை.