அப்பாவின் நிமித்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 6, 2023
பார்வையிட்டோர்: 2,967 
 
 

மனோகரன்மாஸ்டர் எண்பது அகவைகளை நெருங்கிக்கொண்டிருக்கிறார். யோகாசனம், தியானம் என்றெல்லாம் பண்ணி கயிறுமாதிரி அவரே கட்டமைத்த வலித்த சிவந்த தேகம். அணில்மாதிரி இன்னும் துருதுருவென்றிருப்பார். கண்களில் பிரத்தியேக காந்தி, தன் கூர்த்த ஊடுருவும் பார்வையாலேயே நாங்கள் செய்யும் குழப்படிகளை ஒப்புக்கொள்ள வைத்திடுவார். இaமைக்காலத்திலிருந்தே ஞாயிற்றுக்கிழமைகளில் எவருடனும் பேசமாட்டார், மௌனவிரதம். அவருடையதந்தை நீலகண்டனுக்கு மட்டுவிலில் தோட்டம், துரவு, வயல்க்காணிகள் என்று ஏராளம் சொத்துக்கள் இருக்கவும் வசதியாக வாழ்ந்தவர். ஒரே மகனான அவருக்கு யாழ் மத்திய கல்லூரியில் உயர்தரம் படிக்கிறகாலத்திலேயே B.S.A – Bantam வகை விசையுந்தில் போய்வரும் வசதி. உயர்தரம் சித்தியடைந்ததும் மனோகரனை வங்கம் கல்கத்தா சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்துக்கே அனுப்பி ஆங்கிலம் + ஆங்கில இலக்கியத்தில் முதுமானிப் பட்டம்பெறவைத்தார். மனோகரன் 60 இல் யாழ்ப்பாணத்தில் பட்டதாரியாக வந்திறங்கவும் வேறு கல்லூரிகள் அவரை கொத்திவிடாமல் புத்தூர் ஸ்ரீசோமாஸ்கந்தக் கல்லூரியின் தர்மகர்த்தாக்கள் சபையினர் தந்தை நீலகண்டனுடன் பலாலி விமானநிலையத்துக்கே மாலை பூச்செண்டு நாதஸ்வரம் மேளதாளம் சகிதம்போய் அவரைக் கல்லூரிக்கே அழைத்துவந்துவிட்டார்கள். தத்துவம், தர்க்கம், ஆங்கில இலக்கியம் அவரது முதன்மைப்பாடங்கள். பிறகென்ன பணி ஓய்வுபெறும்வரையில் ஸ்ரீசோமாஸ்கந்தக்கல்லூரியிலேயே ஆசிரியப்பணியாற்றினார். நான் அறிவியல் கற்கைநெறியில் பயின்றமையால் அவரிடம் ஆங்கிலத்தைத்தவிர வேறுபாடங்களைப் பயிலும் வாய்ப்பு எனக்குக்கிட்டவில்லை. அக்காலத்திலேயே Austin A30 என்கிற அருகலான வகைச் சிற்றுந்தொன்றை ஐக்கிய இராட்சியத்திலிருந்து இறக்குவித்தார். சீமைமுயல்போன்ற அதன் பதுமையும், மயிலின் அகவலையொத்த மிருதுவான ஒலிப்பானும் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.

நான் 70 களில் கல்லூரியை முடிக்கும்போது அங்கே உபஅதிபராக உயர்ந்திருந்தார், அப்போதும் பிரமச்சாரிதான். அவரது பிரமச்சரிய வாழ்வுபற்றி ஊரில் பலவிதமான கதைகள் இருந்தன.

அவர் வங்கத்தில் படித்தபோது முதலாண்டிலேயே உடன்படித்த ஒரு பெர்ஸித்தேவதையின் ஜொலிப்பில் மயங்கிப்போனதாகவும், பிரக்ஞை மீண்டெழுந்து அவளை அணுகித் தன் மையலைத் தெரிவித்தபோது அவளும் பிகு’ பண்ணாமற் சம்மதித்துவிடக் குதூகலித்து அதுபற்றி இவர் அப்பாவுக்கு எழுதினார். கிழவரோ அட்டட்டா மட்டக்களப்பே…….. ’ என்று கெம்பிக்குதித்து ` அப்படி ஒரு எண்ணமிருந்தால் நீ அங்கேயே தங்கிவிடு, இங்கே எங்கட முற்றத்துக்கே நீ வரவேண்டியதில்லை , உன்னை நாங்கள் பெறவில்லையென்றே இருப்பம் ’என்று நிர்த்தாட்சண்யமாய் மடுத்ததாகவும்,

அதனால்த் தம்கனவைக் கலைத்தவரைப் பழிவாங்கவே இன்னும் பிரமச்சரியம் காக்கிறார் என்பது அதிலொன்று.

மற்றது அவர் வங்கத்தில் பௌத்தமடம் ஒன்றில் சேர்ந்து அதன் குருபீடத்திடம் சந்நியாசம் வாங்கிக்கொண்டதாகவும் (நித்திய பிரமச்சரியதீக்ஷை) பெற்றதாகவும் இருந்தன. அவர் எமது ஆசிரியர், நாங்கள் மாணவர்கள்/பொடிப்பசங்கள் என்றிருந்தோமே தவிர அவர் தனிப்பட்ட வாழ்க்கைபற்றிப் அவரிடம் நேரடியாகப் பேசவக்கானவர்களாக எவரும் இருந்தோமில்லை.

எங்க பாட்டி ஒருநாள் புத்தூர்ச்சந்தியில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருக்கையில் தன் சிற்றுந்தில் வந்த மாஸ்டர் இவரையும் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார். பாட்டியின் வாய் சும்மாகிடக்குமா, மாஸ்டரின் தாயும் தானும் பள்ளித்தோழிகள் என்பதை நினைவுபடுத்தி அவரிடம் கதைகொடுத்தவர் வீடு அண்மிக்கவும் வண்டியைவிட்டிறங்கமுதல் ஞாபகமாக

“ஏன் தம்பி நீங்கள் இன்னும் கலியாணங்கட்டேல்லை” என்றிருக்கிறார்.

“எணைஆச்சி…………… நேரங்கிடைக்கேல்லையணை, இருந்தால்க் கட்டியிருக்கமாட்டனே“ என்றாராம்.

நீலகண்டனும் இயற்கையேகியபின் தன் 40 அகவையில் அரைத்தாடிக்குள் வெள்ளிகள் காலிக்கத்தொடங்கிய பின்னரே மனோகரன் ஒருவாறாகத் திருமணபந்தத்தை விழைந்தார். அப்போது மனோகரன் மாஸ்டர் ஆத்திகரா, நாத்திகராவென்று யாரும் எதிர்வுகூறமுடியாது. அவரது ஊரான மட்டுவிலில் தேசப்பிரசித்திபெற்ற பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் கோவிலிருக்கிறது. அக்கோவிலை அண்மித்து ஒரு 300 மீட்டர் தொலைவில்த்தான் மாஸ்டர்வீடும் இருக்கிறது. ஆனால் அம்மன்கோவில் விதானம் வேய்ந்திருப்பது ஓட்டினாலா, செம்பினாலாவென்று அவருக்குத்தெரியாது. யாரும் அவரிடம் அம்மனின் மூலஸ்தானம் வடக்கே பார்த்திருக்கோ, கிழக்கே பார்த்திருக்கோவென்றால் விழிப்பார்.

அவரின் திருமணம் தாலி, ஹோமம், பூசை, புரோகிதங்கள் எதுவுமில்லாமல் இரண்டு ரோஜாமாலைகளுடன் மட்டும் நிறைவேறியது. பெண் தாய்வழியில் தூரத்து உறவென்று பேசிக்கொண்டார்கள். அடுத்தடுத்து இரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தன. தலைப்பிள்ளை ஹெகெல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும்போது 1999 இல் ஹெகலுட்பட 3 தமிழ் மாணவர்கள் மண்ணோடோ, நீரோடோ, பவனத்தோடோ கலந்து காணாமற்போயினர், அப்போது அதை ஜே.வி.பி மாணவர்களின் வேலையென்றனர், பத்துநாட்கள் கழித்து மேலுஞ்சில ஜே.வி.பி மாணவர்களும் காணாமற்போகவே அது இராணுவத்தின் / அரசின் மாயக்கரங்களின் கைங்கரியம் என்றனர். அவர்களுக்கு என்னதான் நேர்ந்ததென்று இற்றைவரை எவருக்கும் தெரியாது. அந்த மாறாத துயரம் பெற்றவளை விரைந்து பவனத்தில் கரைத்துவிட்டது.

அடுத்தவன்தான் சித்தார்த்தன். அவனுக்குப் பல்கலைக்கழகம் புக வாய்க்கவில்லை. மிலெனியத்திலிருந்து ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து வாழ்கிறான். பெர்லினில் காய்கறிகள். பச்சைப்பட்டாணி, பிஞ்சுச்சோளம், தகரப்புட்டிகளில் அடைக்கும் சிறியதொழிற்சாலை ஒன்றில் வேலைபார்க்கிறான். விரைந்தே குடியுரிமை கிடைத்துவிட்டதால் ஆறுமாதங்கள் முன்பதாகத்தான் ஊரிலிருந்தே மனைவி ஒருத்தியையும் இறக்குமதி செய்துள்ளான். வர்ஷிணி என்று பெயர். அவள் மொழியியல் பாடசாலை ஒன்றில் ஜெர்மனும் ஃப்ரெஞ்சும் படிக்கிறாள். சித்தார்த்தனுக்கு இணையாக மாமனைக் கண்ணுக்குள் வைத்துப்பார்ப்பதுடன் மாலையில் அவரிடம் ஆங்கில இலக்கியமும் படிக்கிறாள், கெட்டிக்காரி.

மனோகரன்மாஸ்டருக்கு இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறது.

“உங்கள் 100 வயதுக்கு மேலும் அது ஜோராக இயங்கப்போகுது சார் ” என்று இதயமருத்துவர் உத்தரவாதங்கொடுத்திருக்கிறார். மற்றும்படி வயதுக்குரிய சர்க்கரைவியாதியோ, குருதி உயர்வு-தாழ்வு அழுத்தமோ, கொழுப்பளவின் ஏற்றவிறக்கங்களோ, மூட்டுத்தேய்வுகளோ எதுவுமில்லை, இலேசாக உடம்பை வைத்திருக்கிறார். அண்மையில் காரறாக்ட் சித்திரசிகிச்சை செய்வித்து கண்களில் நெகிழிவில்லைகள் பொருத்தியிருக்கிறார், பார்வையும் பளிச்சென்றிருக்கு. தினமும் நாலைந்து கிலோமீட்டர் மெதுநடைபோய்வருவார். வைத்தியர்கள் ஆலோசனைப்படி தினமும் படுக்கைக்குப்போகமுதல் விட்டமின் B12 / மக்னீஷியம் குளிசைகளையே வர்ஷிணி கட்டாயப்படுத்திக் கொடுத்தாலே குடிக்கிறார்.

வர்ஷிணி வருவதற்கு இரண்டாண்டுகளுக்கு முதலே மாஸ்டர் ஜெர்மனிக்கு வந்துவிட்டார். ஏனைய விருத்தர்களைப்போல வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல், ஜெர்மனியின் பிரதான பல்கலைகள் அமைந்துள்ள நகரங்கள் ஹைடெல்பேர்க், மான்ஹைம், கார்ள்ஸ்றூக, கார்ள் மார்க்ஸின் பிறந்த நகரம், றியர், வாணிபநகரங்கள் ஃப்ராங்பேர்ட், ஹம்பேர்க், புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் வாழ்ந்த பணிசெய்த இடங்கள், மார்ட்டின் லூதர் நகரமான விட்டென்பேர்க, அருங்காட்சியகங்கள், இரும்புத்தாது/நிலக்கரிவயல்கள் நாஜிகளின் கொலைக்களங்கள், என்று ஒன்றும் விடாமல் பார்த்தார். ஜெர்மனியில் தன் பயண அனுபவங்களை கட்டுரைகளாக வடித்து ஆங்கிலப்பத்திரிகைகளுக்கும், டில்லியின் The Little Magazine க்கும் எழுதினார். இன்னும் பூர்த்தியாகாத பலகட்டுரைகள் அவரிடமுள்ளன.

அவர் பொழுதுகள் எழுத்து, வாசிப்பென்று ரம்மியமாகக் கழிந்தாலும் ஏனோ அவருக்கு தொடர்ந்து இங்கே வாழப்பிடிக்கவில்லை.

அவுஸ்திரேலியாவில் அவரது பால்யகால நண்பனான சரவணபவானந்தன் வாழ்ந்தார். அவரும் ஓய்வுநிலை ஆசிரியர்தான். தன் மகள் குடும்பத்துடனும் அவர்களின் பெயரர்கள் பெயர்த்திகளுடனும் சந்தோஷமாக வாழ்ந்துவந்தார். அவருடன் வீடியோ இணைப்பில் அடிக்கடி மனோகரன்மாஸ்டர்

பேசிக்கொள்வார். அவரிடமும் தான் ஊருக்குத் திரும்பவுள்ளதைச் சொன்னபோது அவர் அதிசயித்து

“நீர் உங்கத்தைய குளிரைக்கண்டுதான் பயப்படுகிறீர்போலகிடக்கு, அங்கே கடும் குளிர் தொடங்க இங்கே வந்துவிடுமன், அப்போ எங்களுக்குக் கோடையாக இருக்கும் “ என வருந்தி அழைத்ததில் கடந்த குளிர்காலத்தில் புறப்பட்டு அவுஸ்திரேலியாபோய் ஆறுமாதங்கள் சிட்னி, மெல்போர்ன், அடிலைட், டார்வின் என்று ஒரு மெகா சுற்றுச் சுற்றிவந்தார்.

இப்போது என்ன புதிய கக்கிசமென்றால் மெல்போணின் கடந்த குளிர்காலத்தின்போது சரவணபவானந்தன் உடம்புக்கு முடியவில்லையென்று ஒருநாட்கூட படுக்கையில் கிடவாமல் திடுப்பென இயற்கையுடன் கலந்துவிட்டார்.

அதன்பிறகு மனோகரன்மாஸ்டரின் “ ஊருக்குப்போகவேணும் ” மந்திரமும் இரவுச்சாப்பாட்டு மேசையில் அடிக்கடி உச்சாடனம்பெறத்தொடங்கின.

“ஏனப்பா….. நாங்கள் உங்களுக்கு என்ன குறைவைத்தோம்….. இங்கே வாழ்றதில என்ன பிரச்சனை உங்களுக்கு.”

“உங்களையிட்டான குறை எனக்கொன்றுமில்லை மகன். இந்த நாட்டின் இயற்கை, காற்று, அறைகளைச்சூடாக்கிக்கொண்டு புல்லோவர்களை மாட்டிக்கொண்டு வாழுற வாழ்க்கை எனக்குள்ளான இயற்கையோடு ஒருங்கிசையுதில்லை, ஏதோ Astronauts Kits களை மாட்டிக்கொண்டு வாழ்றமாதிரிக்கிடக்கு, அப்படியொரு வாழ்க்கை எதுக்கென்றிருக்கு. வாழ்ந்ததுபோதும், இனிச்சாதிக்க ஒண்டுமில்லை, எனது கடைசிமூச்சு நான் வாழ்ந்த சூழலிலேயே நிற்கவேணும்…….. Try to understand me my child. ”

“எங்களுக்கும் கடைசிவரை நீங்கள் எங்களுடனேயே இருக்கவேணும் எங்கிற எங்கட ஆசை உங்களுக்கு நோ மாட்டர், நத்திங்…… அப்படித்தானே அப்பா.”

“என்னுடைய பென்ஷன் (50,000 ரூபா) இன்னும் 10 பேரைவைத்து அங்கே தாபரிக்கப் போதும். 40 – 50 வரையிலான தென்னை மரங்களின் வருமானம் இருக்கு, சுபத்திராவைக் கூப்பிட்டேனென்றால் ஓடிப்பறந்து வந்து சமைத்துத் தந்திட்டுப்போகிறாள் ’ என்பார் அடிக்கடி. சுபத்திரா அயலில், சில ஆண்டுகளாக இவருக்குச் சமைத்துக்கொடுத்த ஒரு மாவீரனின் மனைவி. தான் திரும்பிவரும்வரையில் அவள் வளவுக்குள்ளான தென்னை மரங்களின் வருமானத்தைப் பயன்படுத்தலாமென்றும் அனுமதித்திருந்தார்

“இல்லை மகன் நீங்கள் என்னைப் பார்க்கமாட்டீர்கள் என்றில்லை……… நாந்தான் உங்களோடு இருக்கமுடியாதவனாக இருக்கிறேன்.”

“ இவர்களின்மொழி, நீங்கள் வீடுவந்து சேரும்வரும்வரையில் எனது தனிமை இதுகளைத்தான் என்னால தாங்கமுடியாமலிருக்கு. என்னுடைய பென்ஷனே எனக்குப்போதும், உங்களுக்கு ஃபினான்ஸியல் பேர்டன்ஸ் எதையும் நான் தரமாட்டேன்.”

” உங்களுக்குத்தாறது எங்களுக்கு பேர்டனா அப்பா, ஏன் அப்படி நினைக்கிறீங்கள் பேர்டங்கிற கதையை விடுங்க, சரவணபவானந்தன் அங்கிளுக்கு நடந்ததைப் பார்த்தீங்களா…… அவங்க வீட்டில அவ்ளோ பேரிருந்தும் அவர் தூக்கத்திலேயே போயிருக்கார், அவங்களுக்கு மற்றநாள் காலையிலதான் தெரியும். அப்படியொரு Ridiculous phenominen (அபத்தமான நிகழ்வு) எங்களுக்கும் வேணுமா, நாங்களும் துடிக்கணுமா………… சொல்லுங்கப்பா.”

மாஸ்டர் பிறகொன்றும்பேசவில்லை. தனக்கு ஒரு டம்ளர் காரட் ஜூஸ் மட்டும் போதுமென வர்ஷிணியிடம் வாங்கிக்குடித்துவிட்டு அமைதியாகப் படுக்கைக்குப்போனார்.

இரவு படுக்கையில்

“ஊரிலபோய்த்தான் தான் சாகவேணுங்கறத மாமா ஒரு செண்டிமென்டல் அன்ட் பிறிஸ்டிஜ் இஸுவா எடுக்கறார் போலிருக்கு’’ என்றாள் வர்ஷிணி.

“அடியேய்……… உந்த வார்த்தைகளை மட்டும் அவர் முன்னால் இன்னொருதரம் எடுத்துப்போடாத…… மனுஷன் தர்க்கம் தத்துவம் இரண்டிலும் ஸ்பெஷியல் மாஸ்டர் ஹோல்டராக்கும்………. உதெல்லாம் அவருக்கு மூக்குப்பொடி போடுறமாதிரி.”

மனோகரன்மாஸ்டரின் பிடிவாதம் வென்றது, ஒருநாள் கொழும்புநோக்கிப்பறந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறிப்பறந்தார். பன்றித்தலைச்சி அம்மன்கோவில் கிணற்றில் நல்லதண்ணீர் மொண்டுகொண்டுவந்த சுபத்திரைக்கு மனோகரன்மாஸ்டரை வாடகைக்காருள் பார்த்ததும தான் காண்பது `ஏதும் காட்சிப்பிழையோ’ என்றிருந்தது. வண்டிக்குப்பின்னால் ஓடிவந்தாள். அவர்கள்வீட்டுவாசலில் வண்டி நிற்கவும் இரண்டே இரண்டு பயணவுறைகளை சாரதி எடுத்துக்கொடுக்க அதிலொன்றை சுபத்திரை வாங்கிக்கொண்டாள். ஒன்றில் உலகமெங்கும் அவர் சேகரித்த அரிய புத்தகங்கள், மற்றையதில் அவரது எளிமையான உடுப்புக்கள்.

“என்னையா இப்படி மின்னாமல் முழங்காமல் வந்து திடுக்கிடுத்திறியள். ”

வழமையான ஒரு புன்னகை மட்டும் அவரிடமிருந்து பதிலாக வந்தது.

“ஐயா இப்படி விறாந்தையில இருங்கோ………. பத்துநிமிஷத்தில வீட்டைக்கூட்டிச் சுத்தமாக்கிவிடுறன் ’’ எனவும் அவர் பொதியுறையிலிருந்த

திறப்புக்கோர்வையைத் தேடி எடுத்துக்கொடுக்கவும், தண்ணீர் பனுக்கி வீடெங்கும் பெருக்கலானாள்.

காலைவெயில் ஏறிக்கொண்டிருந்தது. மாஸ்டர் வந்துவிட்ட சேதி நொடியில் அயலெங்கும் பரவிட ஒரு சிறுகும்பலே அங்கு கூடிவிட்டது. அதிலொரு இளைஞனைக்கொண்டு இளனி இறக்குவித்து ஆசையாகக் குடித்தார்.

மனோகரன்மாஸ்டர் எப்போதுமே காலையுணவு சாப்பிடமாட்டார். சுபத்திரா மதியம் காய்கறியுடனோ, சிறியவகை மீன்கிடைக்குமென்றால் மீனுடனோ மதியம் ஒரு சமையல் பண்ணிக்கொடுத்துவிட்டு, இரவுக்கு ஒரு புளிக்கஞ்சியோ, மெதுவாக வேகவைத்த கூழ்மாதிரியான (Stew) ஒரு திரவ உணவோ பண்ணிக்கொடுப்பாள். காலைமாலை வீட்டையும் முற்றத்தையும் பெருக்கிவைப்பதுவும் அவள் பணி. மாதம் 15,000 ரூபா அவளுக்குக் கொடுப்பார். அவளும் அவளது இரண்டு பிள்ளைகளும் அதைக்கொண்டு பிழைத்துக்கொள்வார்கள். மனோகரன்மாஸ்டர் ஊர்திரும்பியதில் சுபத்திரையைவிட சந்தோஷப்பட்ட பிறிதொருவர் இருக்கமுடியாது.

இரண்டு வாரங்கள் கழிந்தன. அதேமாதிரியான காலை, வெயில் ஏறிக்கொண்டிருக்கையில் அதே வாடகைக்காரில் சித்தார்த்தனும் வர்ஷிணியும் நான்கு பயணப்பொதிகளுடன் வந்திறங்கினர்.

“நீங்கள் எங்களோட இருக்கும்போது எங்களுக்கு ஒரு இணக்கமான ஹோம் ஃபீலிங் இருந்ததப்பா……. ஏர்ப்போட்டில் உங்களைப் பிரிந்த கணத்திலிருந்து நமக்காக நாம் வாழுவது ஒரு அர்த்தமற்ற வாழ்க்கையாய்த் தோணுதப்பா. நீங்கள்தானே சொல்லித்தந்தீங்கள் மனுஷர் தமக்காகத்தமக்காக வாழும் பொருண்மிய வாழ்க்கை அர்த்தமற்றது, யாக்கையாற் பயன் என், பிறன் சுகம்பெறப் பயனாய் வாழாக்காலென்று……

நீங்கள் இங்க நாலுசுவர்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருக்க உங்ககூட இல்லாம நாங்க அங்கே தனியே வாழக்கூடிய வாழ்க்கை வெறுமையா அபத்தமாய்த்தெரியுதப்பா………… இந்த யாழ்ப்பாணத்திலயே இன்னும் 4 லட்சம் பேர் வாழுறாங்கதானே அவர்களோட நம்மையும் சேர்த்து வாழ்க்கையை எப்படியோ நகர்த்திடலாமென்ற நம்பிக்கை வந்திட்டுதப்பா……. வந்திட்டம்.”

சித்தார்த்தன் பேசப்பேச அவனை விநோதமாகப் பார்த்தபடி கல்லாய் உறைந்துகொண்டிருந்தார் மனோகரன்மாஸ்டர்.

– ஞானம் சஞ்சிகை – 280, செப்டெம்பர் 2023 கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *