அப்பத்தா வாசம்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 17

இது நடக்கும் என்று தெரிந்து நடப்பது ஒரு வகை. எது நடக்கும்? என்று தெரியாமல் நடப்பது இன்னொரு வகை. நம் வாழ்வில் தெரியாமல் நடக்கும் நிகழ்வுகள் எப்போதாவது நடப்பதுண்டு. அந்த நிகழ்வுகள் நன்மையாக இருப்பின் மனம் மகிழும். தீமையாக இருப்பின் அழுகைதான் வரும்.
அத்தீமை பெரிய அளவில், வாழ்க்கையையே முடித்து விடும் அளவிற்கு நடந்து விட்டால் கவலைப்படவும் மனதில் திராணி இல்லாமல் விக்கித்து போகும் படி ஆகிவிடும். இதை விதி என கூறி மனதை ஆறுதல் படுத்திக்கொள்கிறோம்.
“கடல்ல அலை மாதர தான் ஆத்துல தண்ணி ஓடறது. கடல் கொந்தளிப்பு மாதர தான் காட்டாற்று வெள்ளம் வாரது. எப்ப வரும்னு யாராலையும் சொல்ல முடியாது. எங்கேயோ வெகு தூரத்துல பாங்காட்டுக்குள்ள பேய்மழை பேஞ்சுதுன்னா வந்துரும். ஆத்தோரம் மேயற ஆடு, மாடுகளோட அதுகள மேய்க்கிற மனுசங்களையும் அடிச்சுட்டு போயிரும்” என்பதைக்கேட்டதும் அழுது விட்டேன்.
“ஆறுகள்ல மட்டுமில்லாம ஓடைன்னு சொல்லற பள்ளங்கள்லயும் காட்டாற்று வெள்ளம் வரும். அப்படித்தான் சின்ன வயசுல உன்ன மாதர நானும் இருக்கறப்ப ஒரு தடவ எங்க தோட்டத்தோரம் இருக்கற பள்ளத்துல தண்ணி வந்து ஏழு எருமைகளை அடிச்சிட்டு போனதுனால அந்தப்பள்ளத்துக்கு ஏழெருமைப்பள்ளம்னே பேரு வந்திருச்சு” பத்து வயது சிறுமியாக இருக்கும்பேது அப்பத்தாவின் பேச்சைக்கேட்டு மறுபடியும் துக்கம் தாங்காமல் அழுததோடு வியந்தும் போனேன்.
பள்ளி விடுமுறையில் கிராமத்திலிருக்கும் அப்பத்தாவை பார்க்க வேண்டும் என பிடிவாதம் பிடித்து வந்து விடுவேன். ராகி களி, எள்ளுரண்டை, தேங்காய் பறிப்பி என காலையிலிருந்து மாலை வரை வயிற்றை நிறைப்பதோடு என்னை மடியிலிருந்து இறக்கி விடாமல் பாசத்தோடு பல கதைகளைச்சொல்லும் அப்பத்தாவை உயிராக நேசித்தேன்.
அப்பத்தா கதைகள் கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால் கேட்க சுவாரஸ்யமாக இருந்ததால் ‘ம்’, ‘ம்’ என கேட்டுக்கொண்டே சில சமயம் உறங்கி விடுவேன்.
அப்பத்தாவிடமிருந்து வெளியாகும் வியர்வை நாற்றம் அம்மாவின் சென்ட் வாசனையை விட பிடித்துப்போனது ஏன் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை.
பாதி கதை கேட்டு உறங்கி விடும் நான் பின் நடு இரவாக இருந்தாலும் விழிப்பு வந்தவுடன் மீதி கதையை அப்போதே கேட்டு விட்டுத்தான் மறுபடியும் உறங்குவேன்.
குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டியை பிடித்துப்போவதற்கு காரணம் குழந்தைகளின் மனநிலைக்கு அவர்கள் பக்குவப்பட்டிருப்பதுதான்.
இப்போது எனக்கும் திருமணமாகி குழந்தை வந்து விட்டாலும் இருப்பது வெளிநாடு என்பதால் அவர்களை விடுமுறையில் எனது பெற்றோரிடமோ, எனது கணவரின் பெற்றோரிடமோ அழைத்துச்செல்வது சாத்தியமில்லை. போனில் பேசுவது மடியின் சுகத்தோடு கிடைக்க சாத்தியமில்லை.
எனது மகள் நியா வெளிநாட்டில் பிறந்து மூன்று வருடங்களுக்குப்பின் நேரில் முதலாக எனது கணவரின் பெற்றோரைக்கான ஒரு முறை ஊருக்கு சென்றிருந்த போது முதலில் அவளது பாட்டியிடம் செல்லத்தயங்கியவள், சிறிது நேரத்தில் என்னை ஒதுக்க ஆரம்பித்தாள். இரவில் என்னுடைய மாமியாரின் அருகிலேயே படுத்துக்கொண்டாள்.
“மாயா” அப்படி பெயர் சொல்லித்தான் என்னை எனது மகள் அழைப்பாள். சிறுவயதிலிருந்து எனது கணவன் என்னை பெயர் சொல்லி அழைப்பதைப்பார்த்து பழகி விட்டாள்.
“அப்பத்தா கிட்ட ஒரு வாசம் அடிக்குது. அது ரொம்ப எனக்கு பிடிச்சிருக்கு. அவங்களையும் நம்ம கூட அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போயிலாமா?” என கேட்ட போது எனக்கு என்னுடைய அப்பத்தா ஞாபகம் வந்து விட கண்ணீர் விட்டு அழுதே விட்டேன்.
எனக்கு பிடித்தது அவளுக்கும் பிடித்திருக்கிறது என்பதை கேட்ட போது, எந்த நாட்டில் பிறந்தாலும், உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் பாசம் ஒன்று தான் என்பது புரிந்தது.
வயதானவர்களது வெகுளித்தனமான கள்ளம் கபடமற்ற அன்பு, அவர்களிடமிருந்து வெளிப்படும் நாற்றத்தையும் நறுமணமாக்கி விடுகிறது.
அவள் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் நம் ஊரின் மணம் மாறாமல் அவளுக்கு தமிழ் பேச்சு மொழியிலேயே சொல்லிக்கொடுத்து வளர்த்திருந்தேன்.
பெரியவர்கள் பேரன் பேத்திகளுடனும், பேரன் பேத்திகள் பாட்டி, தாத்தாவுடனும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வாழ்வின் அற்புதமான தருணங்களை படிப்பு, வேலை, வெளிநாடு எனும் பெயரில் இழந்து விட்டோம் என நினைத்து வருந்துவதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
