அப்படியும் இருக்குமோ..?!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 11,454
‘ஒரு பாட்டு சொல்லிக்கொடேன்’ என்றான் ஏகநாதன் தன் தாய் மாமாவிடம். தாய் மாமனிடம் அதிக நெருக்கம் இருக்கும்தானே.
‘டேய்! நான், அந்தக் காலத்து ஆளு. எனக்கு இப்பத்த பாட்டெல்லாம் அவ்வளவா பிடிக்கலை. பழைய பாட்டு வேணா சொல்லித்தறேன்’ என்றான்.
‘சரி! சரி!’ என்றான் ஏகநாதன்.
‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்,
இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்,
காக்கா கூட்டத்தப் பாருங்க,
அதுக்குக் கத்துக் குடுத்தது யாருங்க!’
என்ற பாட்டை மதுசூதனன் பாட, ஏகநாதன் அவசர அவசரமாக ‘மாமா! பாட்டுல ஒரு சந்தேகம்?’ என்றான்.
‘என்னாடா கண்ணா?’ என்றான் மாமன் மதுசூதனன்.
‘காகம் கரைந்துண்ணும் தானே?’ என்றான்.
‘அதிலென்ன சந்தேகம்? உணவு கிடைச்சா காகம் தன் கூட்டத்தை கூவிக் கூப்பிட்டு ஒண்ணா உண்ணும்கறதைத்தான் பாட்டு சொல்லுது, கூடியுண்ணும் பழக்கத்தை அதுக்குக் கத்துக் குடுத்தது யாரு?’ என்று கேள்வி கேட்டுட்டு, ‘இப்போ, நாம, தாத்தாவுக்கு அமாவாசைக்கு சோறு வச்சாக்கூட, அதுக கூவிக் கூப்பிடறதைப் பார்த்திருக்கே தானே?’ என்றான் மாமன்.
‘ஆமாம்! பார்த்திருக்கேன். ஆனா, என் சந்தேகம் அதிலில்லை.’ என்றான்.
‘பின்னே? வேற எதிலயாம்?’ என்றான் மாமன் மதுசூதனன்.
‘உணவை ஒண்ணாக் கூவிக்கூடிச் சாப்பிடற காகங்கள் நாம் ஒரு சட்டியில அதுக குடிக்க வக்கிற தண்ணியை மட்டும் தனியா வந்தே குடிச்சுட்டுப் போயிடுதே? ஏன்? தண்ணிக்கு மட்டும் ஏனப்படி?’ என்றான்.
‘நான் இதுவரை பார்க்கலையே..! தெரியலையே?’ என்றான் மதுசூதனன் மலைத்துப்போய்!
‘இல்ல மாமா நான் நிறைய நாள் பார்த்திருக்கேன். எனக்குத் தோணுது ஒண்ணு! அப்படி இருக்குமோ?’ என்றான் ஏகநாதன்.
‘எப்படி?’ என்றான் மதுசூதனன்,
‘இல்லே, அன்னைக்கு அகத்தியர் காவிரித் தண்ணியைக் கமண்டலத்துல அடைச்சு வச்சுக் கொண்டாந்தபோது, ஒரு காகம் தானே தட்டிவிட்டது?. அன்னைக்கும் காகம் தனியாத்தான் தட்டிவிட்டு பிரச்சனை பண்ணிச்சு, இப்பவும், ஒண்ணா கூடித் தண்ணியைப் பகிர்ந்து குடிக்காததால் காவிரி பிரச்சனை பகிர்ந்துக்க முடியாத பிரச்சனையா தொடருதோ? என் கேள்வி நியாயம் தானே?’ என்னைக்காவது காகங்கள் கூடித் தண்ணியைப் பகிர்ந்து குடிச்சதைப் பார்த்திருக்கீங்களா?’ என்றான்.
அப்படியும் இருக்குமோ எனத் தோன்றுகிறது!