கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2025
பார்வையிட்டோர்: 1,210 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அத்தையிடம் எப்ப சொல்லப் போறீங்க?” என்று கேட்டாள் மீனம்மா. 

பத்திரிகை பார்ப்பதில் ஆழ்ந்திருந்த சிதம்பரம், ‘உம்ம்… சொல்ல வேண்டியது தான்’ என்று இழுத்தான். 

“அதுதான் எப்போன்னு கேட்கிறேன்” என்று அவள் தன் குரலுக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாள். 

கணவனின் ‘பிடிச்சு வச்ச களிமண் பிள்ளையார்’ இயல் பும், ஞஞ்ஞமிஞ்ஞப் பேச்சும் அவளுக்கு எரிச்சல் தருவது வழக்கம். இப்பவும் அப்படித்தான். 

“சொல்ல வேண்டியதை சீக்கிரமே சொல்லி விடுவது தான் நல்லது. ஈழு -ஈழுன்னு இழுத்துக் கிட்டிருந்து அத் தைக்கு இன்னும் இடம் கொடுத்திராதீங்க. நாம அவளுக்கு செஞ்சிருக்கது போதும். அத்தை, கால நிலைமை சரி யில்லே; எங்க பாடே ஒவ்வொரு மாசமும் இழுபறின்னு கிடக்கு; உன்னை வச்சு எங்களாலே இனியும் காப்பாத்த முடி யாது; நீ என்ன செய்வியோ, எங்கே போவியோ, எங்களுக்கு தெரியாது’ ன்னு கட்அன்ட்ரைட்டா சொல்லிப் போட வேண்டி யது தானே?” என்று பொரிந்து கொட்டினாள் மீனம்மா. 

“சொல்லிடலாம் மீனு. ஆனா அத்தையைப் பார்க்கை யிலே பரிதாபமா இருக்கு. இந்தத் தள்ளாத வயசிலே அத்தை எங்கே போவா, என்ன பண்ணுவான்னு கவலையும் மனக் குழப்பமுமா இருக்கு…” 

‘அதுக்காக?” என்று சீறினாள் மீனம்மா. “அவ அவ தலை எழுத்து. யாராரு எதெதை அனுபவிக்கணுமோ அதை அனுபவிக்காமல் தீருமா? இதுவரை அவளை நாம வச்சுக் காப்பாத்தினதே பெரிசு… நீங்க கண்டிப்பாச் சொல்லிப் போடுங்க.” 

தீர்மானமாய்க் கூறி விட்டு மீனம்மா தன் வேலையைக் கவனிக்க உள்ளே போனாள். 

‘உம், பாவம் அத்தை…’ என்று நெடு மூச்சுயிர்த்தான் சிதம்பரம். 

முதன் முதலில் எந்த, ‘மருமகள்காரி’ மீனாட்சி அம்மாளை அன்போடும் ஆசையுடனும் அத்தை -அத்தை என்று அழைத்து மகிழ்ந்தாளோ தெரியாது; அந்த உறவு முறை அழைப்பே ஊராருக்கெல்லாம் பொதுவானதாக வழங்கி வர லாயிற்று. தலைமுறை தலைமுறையாக. மீனாட்சி அம்மாள் எல்லோருக்கும் – பெரியவர், சிறியவர், ஆண்கள் பெண்கள் அனைவருக்குமே- அத்தை ஆகி விட்டாள். அதுவே அவளுக்கு பெயர் மாதிரி நிலை பெற்று ஒலித்தது. 

பிறர் பார்வையில் எப்பவும் முதிர்ந்து கனிந்த உருவத் தினளாய்த் தோன்றிய அத்தை ‘இளையளாய் மூத்திலள் கொல்லோ’ என்ற கவிதை வரிக்கு- இளமைப் பருவம் வந்து பின் முதியவள் ஆகாமல் எல்லா காலத்திலும் முதுமையான வளாகவே இருந்தாள் போலும் என்ற ஐயப்பாட்டுக்கு- கண் கண்ட உதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தாள். 

சமூக அந்தஸ்து நோக்கில் ஒரு அநாதை என்று மதிக் கப்பட வேண்டிய நிலையில் இருந்த அத்தை ஒவ்வொரு கால கட்டத்தில் தன் மீது அனுதாபமும் ஓரளவு அன்பும் காட்டக் கூடிய வெவ்வேறு மருமகன், மருமகள் தயவை நம்பித்தான் சீவித்து வந்தாள். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு என்று தூரத்து முறை செப்பிக் கொண்டு அவள் ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று சில சில நாட்கள் தங்குவாள். வாரக் கணக்கில் முகம் சுழிக்காத நல்லவர்கள் வீட்டில் மாதக் கணக் கில் அத்தையின் முகாம் நீடிக்கும். 

சும்மா சொல்லக் கூடாது. அத்தை யார் வீட்டில் தங்கி யிருந்தாலும் சரி, அந்த வீட்டில் தின்கிற சோற்றுக்கு வஞ் சனை இல்லாமல்’ உழைப்பாள். பிரியமாய்ப் பேசிப் பழகு கிற மருமகள்மாரும், தயங்காமல் கூசாமல் அத்தையை சம்பளமில்லாத வேலைக்காரியாகப் பாவித்து சகலவிதமான அலுவல்களையும் நாள் முழுவதும் செய்து கொண்டிருக்கும் படி கவனித்துக் கொள்வார்கள். எந்த ஊருக்கு எவர் வீட் டுக்குப் போனாலும் இந்த நியதி மாறாமல் செயல்பட்டு வந்தது. 

ஓரிரு வீடுகளில் ஒரு வருஷத்துக்கு அதிகமாகத் தங்கி உழைக்கும் வாய்ப்பு அவளுக்கு அபூர்வமாகக் கிடைத்ததும் உண்டு. அவை எல்லாம் மீனாட்சி அம்மாளின் அதிர்ஷ்டக் கணக்கில் சேரும். 

ஒரு வீட்டில் தனக்கு ‘கவனிப்பு குறைகிறது’ என்று அவளது உள்ளுணர்வு உணர்த்தத் தொடங்கிய உடனேயே அத்தை ‘கேம்ப் கிளம்பி’ விடுவாள். அந்த ஊரிலே திருவிழா: இங்கே அம்மன் கோயில் கொடை இன்னார் மகளுக்குக் கல்யாணம்; கல்யாண வீட்டு வேலைகள் செய்வதற்குக் கூப்பிட்டிருக்காங்க. நம்ம இவளுக்குப் பேறு காலமாம்; துணைக்கு ஆள் இல்லாமல் கஷ்டப்படுறா பாவம்; அத்தையை எங்கே பார்த்தாலும் உடனே புறப்பட்டு வரச் சொல்லுன்னு நம்ம மங்காயி மககிட்டே சொல்லி அனுப்பி யிருக்கா. பிரமுவுக்குடைபாயிட்டி காச்சலாம், நான் போயி கூடமாட இருந்து உதவி செய்யணும்’ என்று பொருத்தமான ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டுப் போவாள். 

‘அத்தையை எங்கே காணோம். ஸர்க்கோடு போயாச் சாக்கும்? அவ காலமும் இப்படி ஒரு தினுசாக் கழிஞ்சிட்டுதே அதைச் சொல்லு!… குறைநாளையும் அத்தை இப்படியே ஓட்டி அடைச்சிருவா… அவளுக்கென்ன- கொடுத்துவச்ச மாராசி!’ என்று ‘மருமகள்’ களில் சில பேர் கருத்துப் பரிமாறிக் கொள்வதும் சகஜம்தான் 

இதில் ஒன்றிரண்டு, அத்தைக் காதை எட்டுவதும் இயல்பு. அதை அவள் பெரிதுபடுத்தமாட்டாள். பெரிது படுத்தி, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு திரியக் கூடிய நிலையிலா அத்தை இருந்தாள்? ‘தன் மூஞ்சியைத் தானே கொண்டை முடிச்சுப் போட்டுக்கிட்டு உம்முனு இருந்தால்’ அப்புறம் அவளுடைய வாழ்க்கை வண்டி ஓடு வதுதான் எப்படி? ஆகவே, எதையுமே அவள் கண்டு கொள்வதில்லை. 

அத்தையின் இனிய சுபாவங்களில் முக்கியமானது அவள் எல்லோரிடமும் அன்பு செலுத்தி வந்ததுதான். சின் னக்குழந்தைகளிடம் பிரிவும் மிகக் கொண்டவள் அவள். பெண்களிடம் பாசமும் பரிவும் காட்டினாள். ஆண்களிடம் தாய்போல் அன்பு செலுத்தினாள். இதில் அவளுக்குத் தனி மகிழ்ச்சியும், இன்பமும் இருந்ததாகவே தோன்றியது. எனவே தான் ‘ஊராருக்கு உழைப்பதே யோகம்’ என்றொரு வாழ்க்கை முறையை அத்தை மேற்கொண்டிருந்தாள். போலும். 

எந்த வீட்டுக்கு அவள் போனாலும், ஒருசில நாட்கள் அல்லது மாதங்கள் தங்கினாலும், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் போலவே அத்தை இயங்கினாள் வீட்டுக். காரி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வீடு கூட்டுவது, காய்கறி நறுக்குவது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற சிறுசிறு அலுவல்களிலிருந்து பெரிய பெரிய வேலைகள் வரை வீட்டு வேலைகள் அனைத்தையும் தானாக செய்து முடித்தாள். குழந்தைகளைக் கொஞ்சினாள். அவ்வப்போது மிட்டாய் முறுக்கு என்று ஏதாவது வாங்கிக் கொடுத்தாள். வீட்டம் மாளுக்கு எப்பவாவது இரண்டு மூன்று அல்லது ஐந்து ரூபாய் என்று கைமாத்துகொடுத்து உதவினாள். ஊர்வம்பு கள் பேசி மருமகள்களுக்கு மன மகிழ்வும் அளித்து வந்தாள். 

‘வீட்டு அம்மாளுக’ பணம் கொடுத்து வேலைக்காரி அமர்த்தினால்கூட, அவள் இத்தனை அலுவல்களையும் முணுமுணுக்காமல் செய்து முடிக்கமாட்டாள். ஆகவே,எந்த. வீட்டிலும் அத்தைக்குப் போடுகிற சாப்பாடு தெண்டச் செலவு’ என்ற கணக்கில் அடங்காது. ஆனாலும் அம்மா- மகள் (பெற்றோர்-பிள்ளைகள்) உறவுகூட பணம் – சொத்து- சுயநலம் – சுயலாபம் எனும் இணைப்புகளில் பிணைப் புண்டு ஊஞ்சலாடுகிற இன்றைய சமூக அமைப்பில், மீனாட்சி அம்மாள் போன்ற வெறும் நபர்களின் அன்பும் உழைப்பும் உரிய மதிப்பையும் போற்றுதலையும் பெறாமல் போவது வியப்புக்குரிய விஷயம் இல்லைதான். 

அவளுடைய புனிதமான அன்பு மற்றவர்களிடம் தூய அன்பை எதிரொலியாக எழுப்பத் தவறிவிடுகிற காலங்களில் அத்தை அவதியுற நேரிட்டது. 

அத்தைக்கு வயது ஆக ஆக மற்றவர்கள் அவளிடம் காட்டிய கவனிப்பின் மாற்றுக் குறையலாயிற்று. அதிலும் ஒரு சமயம் அவள் காய்ச்சலில் படுத்து எழுந்த பிறகு பொதுவாகவே மருமகள்கள் அவளை ஒதுக்க விரும்பினார்கள். 

அத்தை மேல்வலி, தலைவலி என்று அடிக்கடி சுருண்டு படுக்க அவாவியதும், மருமகள்மாரின் கவலையும் பயமும் வளரத் தொடங்கின. இவளுக்கு பண்டுவம் செய்யவும் பாடு பார்க்கவும் யாருக்கு முடியும்? வீண்செலவும் வெட்டி வேலையும் என்று அவர்கள் கருதலாயினர். நம்ம வீட்டை விட்டு சீக்கிரம் போய்த் தொலைஞ்சால் சரிதான் என்றும், மறுபடி நம்ம வீட்டுப் பக்கம் தலைகாட்டாமல் இருந்தால் ரொம்ப நல்லது என்றும் அவர்கள் எண்ணினார்கள். 

முன்பு அத்தை வெளியூருக்குப் போகிறேன் என்று சொன்னதும், ‘இந்தா அத்தை’ செலவுக்கு வச்சுக்கோ’ என்று இரண்டும் மூன்றும் ரூபாயாக அளித்து மகிழ்ந்த வீட்டுக்காரர்கள், வர வர மாறிப் போனார்கள். அத்தை யாக வாய் திறந்து கேட்கட்டுமே என்று இருந்தார்கள். அப்படி அவள் கேட்டாலும், ‘இந்த மாசம் எங்களுக்கே பணமுடை, அத்தை. கையிலே ரூபாயே இல்லை’ என்று சொல்லி எட்டணா, கொடுத்து அனுப்பினார்கள். கை மாற்றாக ஒன்று இரண்டு வாங்கியவர்கள், அதைச் சௌ கரியமாக மறந்து விடுவதில் அக்கறை காட்டினார்கள். இப்படி பலப் பல. 

இந்த ரக மருமகள்களில் ஒருத்தியாகத்தான் இருந்தாள் மீனம்மா. இயல்பாகவே நோஞ்சான் ஆக விளங்கிய அவ ளுக்கு அத்தையின் வருகையும், வீட்டோடு தங்கி மாதக் கணக்கில் பரிவுடன் சகல வேலைகளையும் செய்து, அவளை உட்கார்த்தி வைத்து உபசரித்துப் பணிவிடைகள் புரிந்ததும் நல் அதிர்ஷ்டங்களாகத் தோன்றின. 

அத்தையை கவனித்துக் கொள்வதில் மீனம்மா முன்பெல் லாம் குறை எதுவும் வைத்துக் கொண்டதில்லை. அவளு டைய தேவையை அறிந்து அத்தைக்கு, புதுப்புடவை எடுத் துக் கொடுப்பது – அல்லது, தான் உடுத்திச் சிறிதளவே பழ சாகியிருக்கக்கூடிய நல்ல சீலையை வழங்குவது என்பதை ஒரு வழக்கமாக அனுஷ்டித்த மருமகள்களில் மீனம்மாவும் ஒருத்தி. இவ்விதம் எவ்வளவோ தாராளத்தனம் காட்டியவள் தான் அவள். 

என்றாலும், கால ஓட்டத்தில் ஒவ்வொருவரும் விதம் விதமான நோக்குகளில் அத்தையின் வாழ்க்கை நிலையை எடைபோட்டனர். பலரகமான கருத்துக்களும் பிறந்து பரவின. 

-அத்தைக்கு வயசு ஆகிக் கொண்டே போகுது. பொட் டுனு மண்டையைப் போட்டு வச்சா, பரவாயில்லே. படுக்கை யிலே விழுந்து கிடந்து மெதுவாச் செத்தால், யாரு பணம் செலவழிக்கிறது? சீக்குக்காரியை கவனிப்பது யாரு? 

‘வாயுக்குத்து’ன்னு சொல்லி பொசுக்குனு உயிரு போயிட்டாலும் கூட, அப்புறம் எத்தனையோ செலவுகள் இருக்குமே? யாரு வீட்டிலே இருக்கிறாளோ, அவங்க தானே கட்டையைச் சுடுகாட்டுக்குப் எடுத்துப் போயி ஆக வேண்டியதை எல்லாம் செய்து முடிச்சாகணும்? அப்புறம் எழவு செலவு வேறே! 

  • ஆமா, கிழடு இருந்தாலும் தொல்லை தான்; செத் தாலும் உபத்திரவம் தான்… 

எனவேதான், ‘எனக்கு வேண்டாம் பூசனிக்காய் உனக்கு வேண்டாம் பூசனிக்காய்’ என்று ஆகாத காயை தட்டிக் கழிப்பதில் ஆர்வம் காட்டுகிற விளையாட்டைப் போல, அத்தையையும் அகற்றி அப்பால் தள்ளி விடுவதில் எல்லோரும் ஆர்வம் உடையவர்களானார்கள். 

அத்தை வந்து ஒரு வருஷத்துக்கும் மேலாகிவிட்டது. அவள் அடுத்த இடத்துக்கு நகரும் யோசனை இருப்பதா கவே தெரியவில்லை. அவளை முகமலர்ச்சியோடு ஏற்று தங்க அனுமதிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததால், கொஞ்சம் பிரியமாக இருக்கிறவர்கள் வீட்டில் அதிக காலம் “டேராப் போடவே’ ஆசைப் பட்டாள் அத்தை. 

‘முன்னே மாதிரி ஊர் ஊராத் திரியமுடியல்லே சவம். ஒரு இடத்திலே நிலையா இருந்து, கடைசி அழைப்பு வந் ததும் ஒரே பயணமாப் போய்ச் சேரவேண்டியது தான். அது எப்ப வருதோ!’ என்று அத்தை கூறுவதும் வழக்கமாகிவிட்டது. 

மீனம்மா அவளிடம் அவ்வப்போது கேட்டு வைத் தாள்: “தென்காசிக்குப் போகலையா அத்தை? முன்னே விக்கிரமசிங்கபுரத்துக்கு அடிக்கடி போவையே, இப்ப போகவே காணோம்? ஆழ்வா திருநேலியிலே கல்யாணம் நடக்குதே, அங்கே போகலையா? மாறாந்தைக்குப் போகப் போறியா?…” 

அது போன்ற சந்தர்ப்பங்களில் தான் அத்தை தனது ‘ஆசை’யை வெளியிட்டாள். அது மருமகள் மீனம்மாளுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. 

‘அத்தை நம்ம வீட்டிலே செத்துக் கிடந்தா நம்மை அல்லவா பொறுத்து விடும் செலவு? நாம என்ன மூட்டை கட்டியா வச்சிருக்கோம்? அத்தை கிட்டே சொல்லிப்போட வேண்டியது தான் வேறே எங்காவது போய்ச்சேரு, காலும் கையும் தெம்பாக இருக்கையிலேயே!” என்ற ரீதியில் அவள் தன் கணவன் சிதம்பரத்திடம் புழுபுழுக்கத் தொடங்கினாள். 

சிதம்பரத்துக்கு அவளைவிட இளகிய உள்ளம். அத்தைக்காக இரக்கப்பட்டான். 

‘அவள் எங்கே போவாள், பாவம் இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருக்கட்டுமே. அத்தை அவளாலே முடிஞ்ச அளவு வேலைகளைச் செஞ்சிக்கிட்டுத்தானே இருக்கிறா?’ என்று சொல்லிப் பார்த்தாள். 

மீனம்மா பச்சைத் தண்ணீர் பட்ட சுண்ணாம்புக் கல்லாகக் கொதித்துப் பொங்கி சூடாக வார்த்தைகளைக் கொட்டலானாள். 

இப்போ அவளாலே வேலை செய்ய முடியலே. எதையும் ஒழுங்காச் செய்றதில்லை. வேளா வேளைக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்னு பறக்கிறா, நெய் இல்லாம அவளுக்கு சோறு இறங்கமாட்டென்குது. தினசரி நாலஞ்சு தடவை காப்பி வேண்டியிருக்கு. அவளா போட்டுப் போட்டுக் குடிச்சிக் கிடுறா. ஒவ்வொரு தடவையும் எவ்வளவு சீனி போடுறா, தெரியுமா… 

இன்னும் எத்தனையோ குற்றச்சாட்டுகள்! 

வீட்டில் அமைதியும் சந்தோஷமும் நீடித்திருப்பதற்காக சிதம்பரம் மனைவியின் எண்ணப்படி செயல்புரியத்தான் வேண்டும். அதை நிறைவேற்றுவதில் அவன் தயக்கம் காட்டிக் கொண்டிருந்தான். 

அதனால்தான் ‘இறுதி எச்சரிக்கை’ மாதிரி மீனம்மா அவனிடம் பேசி விட்டுப் போனாள். 

சிதம்பரம் பத்திரிகையை மடித்து நாற்காலி மீது போட்டு விட்டு, உற்சாகம் இல்லாமலே எழுந்தான். மெதுவாக உள்ளே போனான். 

அத்தை எங்கும் தென்படவில்லை. 

அடுப்படிப் பக்கம் எட்டிப் பார்த்து, ‘அத்தையை எங்கே. காணோம்?’ என்று கேட்டான். 

‘இங்கேதான் இருந்தா… தோட்டத்து பக்கம் போனா… பூக்களை பறிச்சிக்கிட்டு வருவா’ என்றாள். 

அவன் திரும்பலாமா என்று தயங்கி நின்றபோது, அவள் வ’ந்ததோ வந்தாச்சு. காப்பியைக் குடிச்சுட்டே போங்க, இதோ ஆச்சு’ என்று சொன்னாள். 

அவன் கீழே உட்கார்ந்தான். 

அவள் காப்பியை டம்ளரில் கொண்டு வந்து அவன் முன்னே வைத்து விட்டு, தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினாள். 

‘இப்போ அத்தை வந்ததும் சொல்லிப் போடுங்க. சித்தப்பா மக கல்யாணத்துக்காக நாங்க ஊருக்கு போறோம்; திரும்பி வர பத்து நாளு ஆகும். உன்னை எங்களோடு கூட் டிக்கிட்டுப் போக முடியாது. நீ இங்கே தனியா இருக்கவும் வசதிப்படாது. அதனாலே நீ பாவூருக்கோ, விக்கிரமசிங்க புரத்துக்கோ போறதுதான் நல்லது. நாளைக்கே புறப்பட்டு விடுன்னு சொல்லுங்களேன். இதிலே என்ன பயம்? அத்தை தான் நம்ம கூட ரொம்ப காலம் இருந்தாச்சே…’ 

மீனம்மா உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தபோதே, அவள் பேச்சை அமுக்கி விடும் ஒலியாக தாம்பாளம் கல்லின் மீது விழுந்து ஓசை எழும்பியது. படிகள் மேல் உருண்டு விழுந்ததால், அது தொடர்ந்து ஒலித்தது. 

என்ன என்று பார்ப்பதற்காக மீனம்மா பின்வாசல் பக்கம் போனாள். சிதம்பரமும் போனான், 

தாம்பாளம் கீழே விழுந்து மண்ணில் பதிந்து கிடந்தது. அத்தை தலைமீது கை வைத்தபடி மண்ணில் உட்கார்ந்திருந்தாள். அன்போடு அவள் பறித்து வந்த மல்லிகை மொக்கு களும் கனகாம்பர மலர்களும் அவளைச் சுற்றிலும் சிதறிக் கிடந்தன. 

மலர்களைப் பறித்து வந்து, சரமாகக் கட்டி, அவள் குத்து விளக்கிற்கும் சாமி படங்களுக்கும் சூட்டுவாள். ஆசையாக மீனம்மா தலையிலும் கொஞ்சம் அணிவிப்பாள். 

இப்போது அவளுடைய சகல ஆசைகளையும் மதிப்பற்றுப் போன அன்பையும் போல மலர்களும் மொக்குகளும் படிக்கட்டு கற்கள் மீதும் மண்ணிலும் சிதறிக் கிடந்தன. 

அத்தையின் கண்களிலிருந்து நீர் முத்து முத்தாக வடிந்து கொண்டிருந்தது. 

மீனம்மாளின் பேச்சை அத்தை கேட்டுக் கொண்டாள் என்பதை அவளது சோக நிலை புரியவைத்தது. 

சிதம்பரம் மவுனமாக மீனம்மாளை பார்த்தான். அவளோ கீழே விழுந்து கிடந்த தாம்பாளத்தையும் பூக்களையும் பார்த்துக் கொண்டு நின்றாள். 

– தினமணி கதிர் தீபாவளி மலர், 1981.

– 1960 முதல் 1991 முடிய, வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, வெவ்வேறு பத்திரிகைகளில் பிரசுரம் பெற்ற கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

– வல்லிக்கண்ணன் கதைகள் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *