அன்பின் துன்பம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 3, 2024
பார்வையிட்டோர்: 2,014 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விய வருஷம் பிறாது விட்டுதல்லவா? – எனது நண்பன் நாராயணனுக்குக் கல்யாணமாகி இத்துடன் ஏழு வருஷங்களா விட்டன. இன்னும் அவனுடைய வீட்டில் அவனையும் லக்ஷ்மியையும் தவிர வேறு யாரும் கிடையாது! வேலைக்குப் போகும் நேரத்தைத் தவிர மற்ற நேரகளில் அவன், “லஷ்மி!” என வேண்டியது: அவள் “ஏன்!” எனவேண்டியது! – மாதாந்திர பட்ஜட், மைத்துனன் வருகை, சர்க்கரைப் பஞ்சம், அரிசி நெருக்கடி. அடுத்த வீட்டுக்காரியின புதுப் புடவை இவற்றைப் பற்றி ஏதாவது பேச வேண்டிய அவ்வளவுதான்! – “அப்பப்பப்பா!”. “அம்மம்மம்மா!” என்று தெத்தித் தெத்திப் பேசுவதற்கும், “என் கண்ணே இல்லையோ!” என்று கொஞ்சுவதற்கும், இடையிடையே, ‘ங்கா ங்கா’ என்ற இன்ப நாதம் எழும்புவதற்கும், “ச் ச் ச்!” என்ற இன்ப ஒலி கிளம்புவதற்கும் என்ன வேண்டுமோ அதுதான் அவர்களுக்கு இல்லை.

அருணோதயத்தில் அடுத்த வீட்டுக் குழந்தை ‘வீல், வில்’ என்று கத்தும். அப்பா அந்த நேரத்தில்தான் ஏதோ விழுந்து விழுந்து எழுதிக் கொண்டிருப்பார். அடுப்பண்டை ஏதோ காரியமாக இருக்கும் அம்மா “எழுதிக் கிழித்தது போதும், அந்தக் குழந்தையைக் கொஞ்சம் எடுத்து வைச்சுக்கோங்கோ!” என்பாள். “நீ மட்டும் என்னடி இப்போ பிரமாதமாக் கிழிச்சுண்டிருக்கே?” என்பார் அப்பா. இருவரிடையேயும் வார்த்தை உளர்ந்து கொண்டே போகும். அவரவர்களுக்கு இருக்கும் லட்சணத்தைப் பற்றி ஒருவரை யொருவர் வர்ணிக்க ஆரம்பித்து விடுவார்கள். கடைசியில், அம்மாவும் குழந்தையோடு சேர்ந்து அழுது தீர்க்கும் கட்டம் வரும் வரையில், நாராயணனும் லக்ஷ்மியும் அந்தக் குழந்தை அழுவதை ஆனந்தமா அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்!

“இந்தக் கிராமபோன் கம்பெனிக்காரர்கள் எதை யெல்லாமோ ‘ரிகார்ட்’ செய்கிறார்களே, ஒரு குழந்தையை நன்னாக் கத்த விட்டு ‘ரிகார்ட்’ செய்யக் கூடாதோ!” என்பாள் லக்ஷ்மி.

”அவர்களென்ன, இந்த ரேடியோக் காரர்களையும்தான் பாரேன்! தினசரி எத்தனையோ பேரை மாறி மாறி அழ வைக்கிறார்கள்! – ஒரு குழந்தை ஆனந்தமாக அழுவதற்கு அரை மணி நேரம் ‘சான்ஸ்’ கொடுக்கக் கூடாதோ!” என்பான் நாராயணன்,

என்றைக்காவது ஒருநாள் என் அருமைப் பெண்ணைப் பற்றி நான் பேச்சோடு பேச்சாக, “சுதா, சுவரைத் துணையாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தாள், என் அறையில் வைத்தது வைத்தபடி ஒன்றுமே இருப்பதில்லை!” என்பேன்.

உடனே, நாராயணன் தன் மேஜைமீது ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுவான்! லக்ஷ்மி சமையலறையில் எல்லாம் வைத்தது வைத்தபடியே இருப்பதைப் பார்த்து வீட்டுச் சோகமே உருவாய்ச் சுவரோடு சுவராகச் சாய்ந்து விடுவாள்!

அவர்கள் போகாத கோயில்களில்லை ; ஆடாத தீர்த்தங்களில்லை; தரிசிக்காத தெய்வங்களில்லை; வலம் வராத மரங்களில்லை; அனுஷ்டிக்காத விரதமில்லை!

இருந்தும் என்ன?-பயன் ?!

2

அப்பாடி! – ஒரு வழியாக அந்த இளம் தம்பதிகளுடைய எண்ணம் ஈடேறுவதற்கு எட்டாவது வருஷமும் பிறக்க வேண்டுமென்று இருந்தது போலும்! “வெந்தீர். போட்டு வீட்டேன்!”, “காப்பி தயார்!”, “இமை போட்டாச்சு!” என்றெல்லாம் இத்தனை நாளும் லக்ஷ்மியே முன் வந்து நாராயணனை அழைத்தது போக, இப்பொழுது நாராயணனே முன் வந்து, “வெந்நீர் போட்டாச்சா?”, ‘காப்பி தயாராகி விட்டதா?”, “இலை போட்டாய் விட்டதா?” என்றெல்லாம் விசாரிக்க நேர்ந்து விட்டது!

முன்னெல்லாம், “லக்ஷ்மீ!” என்று ஒரு முறை கூப்பிட்டாலே போதும்; “ஏன்!” என்று எங்கேயிருந்தாலும் சிட்டாய்ப் பறந்து ஓடி வருவாள். இன்று அப்படியில்லை. “லக்ஷ்மி லக்ஷ்மி!” என்று லக்ஷோப லக்ஷம் தடவை அடித்துக் கொண்டாலும், “உம், உம்!” என்ற முனகலைத் தவிர, அவன் அவளை நேரில் காண முடியாது!

“இதென்னடா, இது!” என்று அலுத்துக் கொண்டே நாராயணன் எழுந்து உள்ளே போவான்.

அவள் என் சாண் உடம்பையும் ஒரு சாண் உடம்பாக ஒடுக்கிக் கொண்டு எங்கேயாவது ஒரு மூலையில் படுத்துக் கிடப்பாள்.

“என்ன, லக்ஷ்மி!” என்று விசாரிப்பான் நாராயணன்.

“ஒன்று மில்லை!” என்பாள் லக்ஷ்மி, மது மறைந்துண்டவன் மகிழ்ச்சி’ போல!

”என்னதான் சொல்லேன்!”” என்று அவளைத் தூக்கி உட்கார வைப்பான் நாராயணன்.

“கொஞ்சம் மயக்கமா யிருக்கிறது; அவ்வளவுதான்! சிறிது நேரம் படுத்து எழுந்தால் சரியாய்ப் போகும்!” என்று சொல்லிவிட்டு, ‘சட்’டென்று படுத்துக் கொள்வான் லக்ஷ்மி.

“சமையல் செய்வதில் சகதர்மிணிக்குநான்
சளைப்பில்லை காணேன்று கும்மியடி!”

என்று பாடிக் கொண்டே சமையலறைக் குள் நுழைவான் காராயணன். அவனே வெந்நீர் போட்டுக் குளித்து விடுவான்; அவனே சமைத்தும் சாப்பிட்டு விடுவான். கடைசியில் லக்ஷ்மியையும் அழைப்பான், சாப்பிடுவதற்கு!

“பழிக்குப் பழி வாங்க இதுதான் சரியான சந்தர்ப்பம்; நாம் சமைத்துக் கொஞ்சம் நன்றாயில்லாமலிருந்தால் அவர் என்னவெல்லாம் சொல்வாரோ, அதையெல்லாம் அப்படியே இப்போது திருப்பிச் சொல்லிவிட வேண்டும்!” என்று எண்ணிக்கொண்டே எழுந்திருப்பாள் லக்ஷ்மி. ஆனால், ஒரு வாய் சாதத்தைத் தான் எடுத்து வைப்பாள். அதற்குள் குமட்டிக்கொண்டு வந்து விடும். எழுந்து வாசலுக்கு ஓடி விடுவாள்.

“என்ன, லக்ஷ்மி! என்னுடைய சமையல் அத்தனை சுகமாயிருக்கிற தாக்கும்!” என்று அசட்டுப் பெருமையுடன் சிரிப்பான் நாராயணன், லக்ஷ்மியும் அவனுடைய சிரிப்பில் கலந்து கொள்வாள்.

நாராயணன் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து வந்த லக்ஷ்மி யிடம் இப்பொழுது எத்தனை மாறுதல்! ஒரு நாள் வேலைக்குப் போகக் கிளம்பிய நாராயணன் திடீபிரன்று வாசலில் நின்ற படியே, “லக்ஷ்மி! அங்கே என் மேஜையில் பேனாவை மறந்து வைத்துவிட்டேன். அதைக் கொஞ்சம் எடுத்துக் கொண்டு வாயேன்!” என்றான்.

அதற்கு லக்ஷ்மி அளித்த பதில் அவனைத் தூக்கிவாரிப் போடுவதாயிருந்தது. “எனக்கு உடம்பை என்னவோ செய்கிறது: நீங்களே வந்து எடுத்துக்கொண்டு போங்கள்!” என்றாள் அவள்.

இம்மாதிரி விஷயங்களுக்காக நாராயணன் இப்பொழுதெல்லாம் அவளைக் கோபித்துக் கொள்ளதில்லை. ஏனெனில், அவனுக்கும் விஷயம் தெரியாமற் போகவில்லை. இல்லையென்றால் இத்தனை நாளும் அவள் விரும்பிக் கேட்டதையே வாங்கிக் கொடுக்காத நாராயணன், இப்பொழுது அவள் கேட்காததை யெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பானா?

“அன்றைக்கு ஒரு நாள் வாங்கி வந்தீர்களே ரோஸ் ஜாங்கிரி, அது ரொம்ப ரொம்ப நன்றாயிருந்தது” என்று லக்ஷ்மி இப்பொழுது ஒரு வார்த்தை சொன்னால் போதும்; அன்று மாலையே அதேமாதிரி ஜாங்கிரியில் ஒரு டஜன் வந்து சேர்ந்து விடும்!

“நேற்றுக் காலையில் ஸரஸா இங்கே வந்திருந்தாள். ரேடியோ வளையலாம். ஒன்றுக்கு இரண்டு சவரன் ஆகிறதாம். கைக்கு ஒன்று செய்து போட்டுக் கொண்டிருக்கிறாள். பாதகமில்லை, பார்ப்பதற்கு நன்றாய்த்தான். இருந்தது!” என்று சொல்ல லக்ஷ்மி வாயெடுக்க வேண்டியது தான்; நாராயணன், “அதற்கென்ன, இன்னும் நாலு நாளைக் கெல்லாம் நாமும் அதேமாதிரி இரண்டு செய்து விட்டால் போச்சு!” என்பான்.

“எதிர்வீட்டுக்காரி கட்டிக்கொண்டிருக்கிறாள், ஏரோப்ளேன் பார்டர் போட்ட புடவை! எப்படியிருக்கிறது, தெரியுமா? விலை எண்பது ரூபாய்தானாம்!” என்பாள் லக்ஷ்மி.

அவ்வளவுதான்; அந்த மாதக் கடைசியில் சம்பளம் வாங்கியதும், நாராயணனின் முதல் வேலை மேற் சொன்ன புடவையை வாங்குவதாய்த்தா னிருக்கும்!

3

நாராயணன் இப்படி யெல்லாம் லஷ்மியைக் கண்ணுங் கருத்துமாகக் கவனித்து வந்தும், அவளுடைய வேதனை மட்டும் குறையவில்லை. ஒன்று போனால் ஒன்று வந்து கொண்டே இருந்தது. அதற்கேற்றாற்போல் டாக்டர் ‘பில்’லும் தீருவதும் ஏறுவதுமாக இருந்தது.

ஒரு நாள் நாராயணன் எதோ எண்ணித் துணிந்தவனாய், “லக்ஷ்மி! இது எத்தனையாவது மாதம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டு விட்டான்.

அவளும் பதிலுக்கு நானிச் சிரித்துக் கொண்டே, ”ஆறாவது” என்று சொன்னவுடன் உள்ளே ஓடி விட்டாள்!

அவளைப் பின் தொடர்ந்து சென்ற நாராயணன், “அப்படியானால் அடுத்த மாதம் வந்து உன்னை அழைத்துக்கொண்டு போகும்படி உன் அம்மாவுக்குக் கடிதம் எழுதுகிறேன்!” என்றான்.

தலையைக் குனிந்த வண்ணம் தன் சேலை மேலாக்கின் ஒரு மூலையை முறுக்க விட்டுக் கொண்டே, “அதற்குள் அங்கே அனுப்பி வைத்துவிட்டு, நீங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்களாம்?” என்று கேட்டாள் லக்ஷ்மி.

“நான் எக்கேடாவது கெட்டுப் போகிறேன்! என்னுடைய சுகத்திற்காக உன்னுடைய வேதனையை நீ வேண்டுமானால் சகித்துக் கொண்டிருக்கலாம்; என்னால் ஒரு மிஷமும் இனிமேல் சகித்து கொண்டிருக்க முடியாது!”

“ஊஹும்: நீங்கள் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்!”

“முடியாது. நாடியாது! எல்லாம் நானே சமைத்துச் சாப்பிட்டுக் கொள்வேன்; நீ போய் உடம்பைப் பார்த்து கொண்டு, வா!”

“ஆமாம்; உங்கள் சமையலும் நீங்களும்….!”

“இல்லா விட்டால் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறேன்!”

“ஐயோ! உங்களுக்கு ஹோட்டல் சாப்பாடும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்……!”

“அதெல்லாம் முடியாது! அடுத்த மாதம் நீ உன் அம்மாவுடன் போய்த் தான் ஆக வேண்டும்!” என்று உச்சஸ்தாயியில் இரைந்தான் நாராயணன்.

காதைப் பொத்திக் கொண்ட லக்ஷ்மி, வாயையும் பொத்திக் கொண்டாள், ஆனால், ஏனோ அவளுடைய உள்ளம் மட்டும் தன்னுடைய விஷமத்தனத்தை ஆரம்பித்து விட்டது.

“இவர் ஏன் நம்மை இப்படி ஒரேயடியாய்த் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்! நிஜமாகவே நம்மீது இருக்கும் அன்பினாலா, அல்லது வேறு எவளையாவது…!”

ஒரு கணம் இந்த வீபரீத எண்ணத்துக்கு இலக்கான அவள் இதயம், அடுத்த கணம் அற்பத்தனத்தில் இறங்கிற்று!

“ஒருவேளை பிரசவச் செலவுக்காகப் பயந்து இப்படி ஏற்பாடு பண்ணுகிறாரோ!”

இந்த மாறுதல் அவள் எண்ணத்தில் மட்டுமல்ல: நாளடைவில் அவளுடைய நடையிலும் உடையிலும் பாவனையிலுமே கலந்து விட்டது!

நாராயணன் இதையெல்லாம் பொருட் படுத்தவில்லை. அவன் பாட்டுக்கு அத்தைக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டு விட்டடான். அவளும் வந்தாள்; லக்ஷ்மியை அழைத்துக் கொண்டு போனாள்.

4

எட்டு வருஷ காலம் இணை பிரியாமலிருந்த நாராயணனுக்குத் தனிமையைத் தாங்குவது அசாத்தியமா யிருந்தது. சில சமயம் அவன் தன்னை மறந்து, “லக்ஷ்மி!” என்று கத்தி விடுவான், பிறகு, சமாளித்துக் கொண்டு, “ஓஹோ! அவள் இங்கே இல்லையா!” என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு விடுவான்!

ஒரு மாதத்திற்குப் பிறகு கூட, லக்ஷ்மி வீட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறாள் என்ற பிரமையுடனே தான் நாராயணன் இருந்தான். பிரசவத்துக்கு முன் அவளை ஒரு தடவை போய்ப் பார்த்துவிட்டு வர வேண்டுமென்று அவன் உள்ளம் துடியாய்த் துடித்தது. உடனே ஒரு வாரம் மஜா எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பினான்.

ரயிலில் ஏறி உட்கார்ந்ததும், ”அவள் எப்படி யிருக்கிறாளோ!” என்று ஏங்கிற்று அவன் மனம், இந்த நிலையில் அவனுடன் பிரயாணம் செய்பவர்கள் எல்லோருமே, “அவள் எப்படி யிருக்கிறாளோ!” என்று லக்ஷ்மியை நினைத்து ஏங்க வேண்டு மென்பது அவனுடைய எண்ணம் போலும்! – இல்லை யென்றால், அவர்கள் பாட்டுக்குத் தங்களுக்குள் பேசிச் சிரிப்பது கூட அவனுக்கு ஏன் எரிச்சலை உண்டாக்க வேண்டும்?

பணக்காரன் ஏழையை லட்சியம் பண்ணாமற் போவது போல, ‘மெயில்’ சின்னஞ் சிறு ஸ்டேஷன்களை லட்சியம் செய்யாமல் ஓடிக் கொண்டிருந்தது. அதைவிட வேகமாக நாராயணனின் மனோரதமும் ஓடிக் கொண்டிருந்தது. அவன் ரயிலை விட்டு இறங்கியதும் ஓடோடியும் சென்று பஸ்ஸைப் பிடித்தான். வீட்டை நெருங்கியதும், உள்ளே லக்ஷ்மியும் அவளுடைய அம்மாவும் பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது. “அம்மாடி! அந்த மட்டும் லக்ஷ்மி சௌக்கியமாய்த்தான் இருந்து கொண்டிருக்கிறாள்!” என்று ஆறுதல் அடைந்த வண்ணம், நாராயணன் சற்று நின்று அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.

“அவன் அங்கே எப்படி யிருக்கிறனோ! – வீட்டில்தான் வேறு யாரும் கிடையாதே, உன்னை ஏன் இங்கே ஏழாவது மாதமே அனுப்பி வைக்க வேண்டும்? ஒன்பதாவது மாதம் அனுப்பி வைத்திருக்கக் கூடாதோ?” என்றாள் லக்ஷ்மியின் தாயார்.

“எல்லாம் காரியமாகத்தான் இருக்கும்! தான் சாக யாராவது மருந்து தின்பார்களோ? ஐம்பதும் நூறுமாக யார்டாக்டர்களுக்குக் கொட்டிக் கொடுப்ப தென்று இங்கே அதற்குள் அனுப்பி வைத்து விட்டார்!” என்றாள் லக்ஷ்மி!

”ஆமாம்: வண்டு மதுவைத்தானே விரும்புகிறது, மலரையா விரும்புகிறது!” என்று அவர்களுடைய பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தார் லக்ஷ்மியின் தகப்பனார்.

இதைக் கேட்ட நாராயணன் தலையில் இடி விழவில்லை; இமயமலையே பெயர்ந்து வந்து விழுந்தது!

“என்ன உலகம் இது! அன்பின் லட்சணம் இதுதானா? இத்தனை நாளும் நான் பட்ட பாடெல்லாம் எனக்காகத் தானா? அவளுக்காக இல்லையா? அன்று கஞ்சியைக் காலில் கொட்டிக் கொண்டு, கதி கலங்கிப் போனதுகூட அவளுக்காக இல்லையா? மஞ்சள் தூளை மிளகாய்த் தூள் என்று எண்ணி, அன்றிரவு கத்திரிக்காய்க் கறியில் கொட்டி விட்டு, கடைசியில் மருந்தை விழுங்குவதுபோல் விழுங்கித் தொலைத்தேனே, அதுகூட அவளுக்காக இல்லையா? அதெல்லாம்தான் போகட்டும்; ‘எப்படியாவது அவள் சந்தோஷமா யிருந்தால் போதும்!’ என்று எண்ணி, அளவுக்கு மீறி அங்கங்கே கடனை வாங்கி விட்டு இப்போது அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறேனே, அது கூடவா அவளுக்காக இல்லை?…”

இப்படி யெல்லாம் எண்ணி ஏங்கிய நாராயணன், சிறிது நேரத்திற்குப் பிறகு, “நாம் எங்கே இருக்கிறோம்?” என்று தன்னைக் கவனித்துக் கொண்டான். அப்போது அவன் சென்னையை நோக்கிப் போகும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தான் என்று தெரிந்தது!

“இதென்ன இது? இவ்வளவு தூரம் வந்து லக்ஷ்மியைப் பார்க்காமலா போகிறோம்? – ரொம்ப நல்லதாய்ப் போயிற்று! அவளே வந்து கம்மை என்று பார்க்கிறாளோ, அன்று பார்க்கட்டும்; பேசட்டும்! – அதுவரை நாம் அவளைப் பார்க்கவும் வேண்டாம்; பேசவும் வேண்டாம்!”


இந்தச் சம்பவம் நடந்த இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் நான் அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது நாராயணனும் லக்ஷ்மியும் ஒருவருக் கொருவர் முதுகைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். அவர்களுடைய அருமைக் குழந்தையான மணி, தன் சின்னஞ் சிறு கைகள் இரண்டையும் பின்னால் சேர்த்துக் கட்டிக்கொண்டு ஏகக் கவலையோடு உலாவிக் கொண்டிருந்தான். அவன் கமல வாய் அடிக்கடி, “அம்மாவும் அப்பாவும் ஏன் பேசமாட்டேன்கிறா!” என்று முணுமுணுத்து கொண்டிருந்தது.

அந்தப் ‘பேசும் பொற் சித்திர’த்தை கவனித்த வண்ணம் நான் கதவிற்குப் பின்னால் நின்றேன்.

திடீரென்று மணி தன் அம்மாவை நெருங்கி, “அம்மா, அம்மா! நீ ஏன் அம்மா அப்பாவுடன் பேச மாட்டேன்கிறே?” என்று கேட்டான்.

“நானா பேசமாட்டேன்கிறேன்? அவர் தானேடா என்னுடன் பேசமாட்டேன்கிறார்!” என்றாள் லக்ஷ்மி.

“அப்பா, அப்பா! நீ ஏன் அப்பா அம்மாவுடன் பேசமாட்டேன்கிறே?”

“நானா பேசமாட்டேன்கிறேன்? அவள் தானேடா என்னுடன் பேசமாட்டேன்கிறாள்!” என்றான் நாராயணன்.

அவ்வளவு தான்: “இதோ, நான் பேசுகிறேன்!” என்று நாராயணனை நோக்கி திரும்பினாள் லக்ஷ்மி.

“இதோ, நானும்தான் பேசுகிறேன்!” என்று லக்ஷ்மியை நோக்கித் திரும்பினான் நாராயணன்.

இந்த நிலையில் இருவரும் ஏககாலத்தில் ‘கொல்’ லென்று சிரித்து விட்டனர்.

நானும் மணியும் மட்டும் சும்மா யிருபோமா? – நாங்களும் அவர்களுடைய சிரிப்பில் கலந்து கொண்டோம்!

– 12-05-1946

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *