அன்னம் ஊட்டிய கை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 4, 2025
பார்வையிட்டோர்: 2,939 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இதோ பாருங்கள், சும்மா இப்படி மசமசன்னு யோசனை செய்து கொண்டிருந்தால் ஏமாளியாக இருக்க வேண்டியதுதான்” என்று கூறிக் கொண்டே காப்பியைக் கையில் கொடுத்தாள் கீதா.

“நீ என்னவோ சுலபமாகச் சொல்லி விட்டாய். ஆனால் எனக்கு அவ்வளவு சுலபமாகத் தோன்றவில்லை. மூன்று வருஷங்களாக நாமும் இப்படி ஏமாற்றிக் கொண்டு வருகிறோம். அது இனிமேலும், முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” எனறான் சேகர்.

“வேண்டு மென்றா நாம் ஏமாற்றில் கொண்டு வருகிறோம்? நம் கையில் இருந்தால் நாம் இல்லை என்று சொல்லுவோமா! ஏதோ போதாத காலம் கடன்பட்டோம். இப்பொழுது அல்லல் படுகிறோம். கையில் பணம் சேர்ந்து விட்டால் கொடுத்துவிடத் தானே போகிறோம்?” என்று கீதா வாதாடினாள்.

சேகருக்கு மனம் உறுத்தியது. அவன் கை காலியாகவா இருக்கிறது? இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கடனைத் தீர்ப்பதற்கு வேண்டிய பணத்துக்கு மேலேயே இருக்கிறது என்பதை அவன் நன்றாக அறிவான்.

“நம் வாய் வேண்டுமானால் கையில் பணமில்லை என்று சொல்லுகிறது. ஆனால் மனச்சாட்சி அவ் வார்த்தைகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறது!” என்றான் அவன் மெதுவாக.

“நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. பெட்டியில் நானூாது ரூபாய் வைத்திருப்பதைத் தானே சொல்லுகிறீர்கள்? நான் அதை எனக்காகவா சேர்த்து வைத்திருக்கிறேன்? நமக்கு இருப்பது கண்ணின் மணி போல் ஒரே ஒரு பெண் லீலாதான். அவளுக்கு வளைகாப்புக்கும் சீமந்தத்துக்குமாக இரண்டு ஜதை வளையல்கள் செய்து போடலா மென்றிருக்கிறேன். பாவம், நம் குழந்தைக்கு வருடாந்திரப் பண்டிகைச் சீர் என்று நாம் என்ன செய்தோம்? நல்ல சம்பந்திகளும், மாப்பிள்ளையுமாக லீலாவின் அதிர்ஷ்டத்துக்குக் கிடைத்திருக்கிறார்கள். வேறு யாராவதாக இருந்தால் நம்மைத் துளைத்துத் தள்ளியிருப்பார்கள். அப்படி இருக்கும்போது நாமாக ஆசைப்பட்டு நம் குழந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?” என்று அன்புப் பெருக்குடன் கூறினாள் கீதா.

சேகருக்கும் அவள் விருப்பம் நேர்மையான தாகத்தான் தோன்றியது. சேகர் மத்தியதர வருப்பைச் சேர்ந்தவன். சம்பளத்தைத் தவிர நிலம் நீர் என்று ஒருவித வரும்படியும் கிடையாது. வரும் சம்பளத்தில் வாடகையும், பால் பணமும் சுளையாக இழுந்துவிட, வீட்டுச் செலவுக்கு என்று ஐம்பது அறுபது ரூபாய் மீதமாகும். அதை வைத்துக் கொண்டு மாதத்தைத் தள்ளுவது தம்பதிகளுக்குப் பெரும் போராட்டமாக இருக்கும். சம்பத்து வேண்டும் என்று விரும்பியது போல் அவர்கள் சந்தானம் வேண்டும் என்று விரும்பவில்லை. கடவுளாகப் பார்த்து ஒரே ஒரு குழந்தை கொடுத்தார். லீலாவை அன்போடு வளர்ந்தனர் சேகரும் கீதாவும். படிக்கவும் வைத்தனர், லீலா விவாக வயதை எட்டியபோது தான் பணப் பிரச்னை குறுக்கிட்டது.

காதலே உலகம் என்னும் இந்நாளில் லீலா தன் மணாளனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டாள். நல்ல பணமும் பதவியும் உள்ள பையனை அவள் தன் காதலனாகத் தேர்த்தெடுத்ததும் சேகரும் கீதாவும் தங்கள் சம்மதத்தைக் கொடுக்கத் தயங்கவில்லை. அத்துடன் லீலா மிக்க அழகாக இருந்ததால் அவள் காதலன் ரமணனுடைய பெற்றோர்களும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்து விட்டனர். பணப் பிரச்னையும் ஒரே நிமிடத்தில் தீர்ந்து விட்டது.

விவாகத்தைத் திருப்பதியில் முடித்துக் கொண்டதால் விவாகச் செலவு அதிகமாக வில்லை. தன் விவாகத்துக்கு வந்த பாத்திரங்களை வைத்துக் கொண்டு மகளின் கல்யாணத்தை ஈடேற்றினாள் கீதா. நகை போடும் விஷயத்தைச் சம்பந்திகளே ஏற்றுக் கொண்டனர். இவ்வளவு இருந்தும் கடன் வாங்காமல் இருக்க முடியவில்லை. ஆபீஸிலிருந்து சேகர் மொத்தமாகக் கடன் வாங்கினான். அதவும் போதாமல் லீலாவைப் புக்ககத்தில் கொண்டு விடும்போது அவசரமாக முந்நூறு ரூபாய் வேண்டியிருந்தது. ஆபீலிலிருந்து மேலும் பணம் கேட்க முடியவில்லை. அதனால் சகோதரன் சங்கரனைப் பணத்துக்கு அண்டினன். சங்கரனும் தயங்காமல் பணத்தைத் தூக்கிக் கொடுத்து விட்டார். ஆனால் அந்தப் பணம் கடனாகத்தான் கையில் கிடைத்தது. லீலா புக்ககம் சென்று மூன்று வருடங்கள் ஆகின்றன. ஒரு பண்டிகைக்காவது அவள் பிறந்த வீடு நாடி வரவில்லை. அதனால் அச்செலவு மீதமாயிற்று. இப்பொமுது அவள் கர்ப்பமாக இருக்கிறாள், அவளுக்கு ஏதாவது நகை செய்து போட வேண்டு மென்று கீதாவுக்கு நிரம்ப ஆசை.

விவாகத்துக்காக ஆபீஸில் கடன் வாங்கிய பணமெல்லாம் மெதுவாகச் சம்பளப் பிடிப்பின் மூலமாக அடைபட்டு விட்டது. இப்பொழுது சேகருக்குச் சம்பளமும் கொஞ்சம் அதிகரித்தது. கீதா முயன்றிருந்தால் சம்பளப் பணத்தில் கட்டுப்பாடாக மீதம் பிடித்துச் சங்கரனின் கடனை அடைத்திருக்கலாம். ஆனால் அவள் முனையவில்லை. சேகரும் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை.

சங்கரன் கையிலேயே வளர்ந்தவன் சேகர். சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்ததும், நாட்கள் கழிந்து பிறந்த தம்பியை வளர்க்கும் பொறுப்பைச் சங்கரனே ஏற்றுக் கொண்டு வளர்த்தார். விவாகமும் செய்து வைத்தார். சேகரை நன்றாகப் படிக்க வைத்தார். ஆனால் அதற்குப் பிறகு சேகரைத் தம் வீட்டில் வைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. அவனுக்கு வேலை தேடிக் கொடுத்தார். பிறகு தனிக் குடித்தனத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டார்.

அண்ணனும் தம்பியும் ஒரே ஊரில் இருந்தனர். சங்கரன் ஊரின் வடகோடியிலும், தம்பி தென் கோடியிலும் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர். அதனால் இரு குடும்பங்களுக்கும் போக்குவரவு ரொம்பக் குறைவு. மாதத்தில் இருவரும் ஒரு தடவை பார்த்துக் கொண்டால் அதிகம். பெண்கள் விஷயத்தில் சந்திக்கும் காலவரை இன்னும் அதிகம்.

சேகர் வந்து பணம் கேட்டபோது சங்கரன் கடனாகத்தான் கொடுக்க முடியும் என்று கண்டிப்பாகக் கூறி விட்டார். பணமுடையின் காரணமாகச் சேகரும் அப்பொழுது ஒப்புக் கொண்டான். ஆனால் லீலாவின் விவாகத்துக்குப் பிறகு கடனை அடைக்க வேண்டுமே என்ற கவலையே சேகருக்கும் கீதாவுக்கும் தோன்றவில்லை. சங்கரன் பணத்தைப் பற்றி மறப்பவராக இல்லை. கடிதங்கள் மூலமாகவும் ஆட்கள் மூலமாகவும் பணத்தைக் கேட்டு அனுப்பினார். ஓரொரு சமயம் நேரிலும் வந்தார். ஆனால் சேகரும் கீதாவும் ஏதோ காரணங்கள் சொல்லி அனுப்பி விட்டார்கள். இன்று கண்டிப்பாகப் பணத்தை வாங்கிக் கொண்டு போகச் சங்கரன் தங்கள் வீட்டுக்கு வரப் போவதாகச் சிநேகிதி அனுசூயாவின் மூலம் கீதா அறிந்தாள்.

”என்ன, நான் சொல்வது புரிகிறதா? வேண்டுமென்றே பிடிவாதத்துடன் நம்மிட மிருந்து பணத்தை வாங்கிவிட உங்கள் அண்ணா பார்க்கிறார். இல்லாவிடில் அவருக்குப் பணத்துக்கு என்ன முடை? இந்தப் பீத்தல் முந்நூறு ரூபாய் இல்லாமலே அவர் எவ்வளவோ சுகமா இருக்கலாம். இனாமாகக் கூட இந்தப் பணத்தை அவர் உங்களுக்குக் கொடுக்கலாமே!” என்றாள் கீதா.

”சே, சே அப்படி யெல்லாம் சொல்லாதே, என்னைவிட அவனுக்குச் சம்பளம் குறைவு.”

“சம்பளம் குறைவாக இருந்தால் என்ன? குழந்தை குட்டி என்று ஒன்றுமே கிடையாது. அவருக்கு என்ன செலவு? நம் லீலாவையே தன் குழந்தையாக நினைத்துக் கூட அவர் அந்தப் பணத்தைக் கேட்காமல் இருக்கலாமே!” என்று வாதாடினாள் கீதா.

ஆனாலும், “எல்லாம் கிடக்கட்டும். அவன் வந்தால் பணம் கொடுக்க முடியாது என்று சண்டை போட முடியுமா? பணம், கடனாகக் கேட்டு வாங்கியது ஆயிற்றே!” என்றான்.

“நான் சண்டையா போடச் சொன்னேன்? எல்லாவற்றுக்கும் ஒரு வழி இருக்கிறது. வருபவர் வாயைத் திறந்து பணம் கேட்க வழி இல்லாமல் கூடச் செய்து விடலாம்.”

“தேவலையே, அப்படிப்பட்ட மந்திரம் என்ன வைத்திருக்கிறாய்?”

உடனே கீதா தன் மனத்தில் தயாராக வைத்திருந்த உபாயத்தைக் கூறினாள். சங்கரன் வரும்போது சேகர் கடுமையான ஜுரத்தால் தவிப்பவன்போல் நல்ல நாடகம் ஒன்று நடிக்க வேண்டும். அதைப் பார்த்துச் சங்கரன் கல்லாகச் சமைந்து வந்த காரியத்தையும் மறந்து, உள்ளம் உருகிவிடுவான். சகோதரர்கள் ஒருவரை யொருவர் நேரிடையாகப் பார்த்து மாதம் ஒன்றாகி விட்டதால் ஜுரமாக நடிக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது.

“பிளான் எல்லாம் சரிதான். ஆனால் எனக்கு ஜுரமென்று அண்ணா நம்ப வேண்டுமே?” என்றான் சங்கரன்.

“நாம் நடிக்கிற நடிப்பில், அவர் உங்களுக்கு ஜுரமென்று நம்பிப் பாகாக உருகும் படி செய்ய வேண்டும்.'”

”சரி! எனக்கு ஜுரம் என்று நம்புவதாகவே இருக்கட்டும். ஆனால் அவன் பணமே கேட்காமல் போய் விடுவான் என்பது என்ன நிச்சயம்?” என்று கேட்டான்.

“ராம ராமா, உங்களுக்கு இவ்வளவு சந்தேகமா? சகோதர பாசம் நடுவில் குறுக்கிட்டு உங்களிடம் பணத்தைக் கேட்கும்படி செய்யாது. சகோதர பாசத்துக்கு அவ்வளவு மகத்துவம்” என்று அடித்துப் பேசினாள் கீதா.

சேகர் அவள் பேச்சில் மயங்கி விட்டான். அண்ணா சங்கரன் வரும்போது ஜுரமாக நடிக்கத் திட்ட மிட்டான்.

வாசலில் செருப்புச் சத்தம் கேட்டது. உடனே கீதா அவசரம் அவசரமாகச் சேகரைக் கட்டிலில் படுக்கச் சொல்லி மேலே கம்பளியைப் போர்த்தி விட்டாள். தலைக்கு மப்ளரைக் கட்டி விட்டாள். தன் முகத்தையும் அதற்கேற்றபடி சோகமாக மாற்றிக் கொண்டு சங்கரனை வரவேற்றாள்.

“ச், அம்மா, அ..ப்பா!” சேகர் தலையில் கையை வைத்தபடி முனகினான்.

சங்கரன் மெதுவாக உள்ளே நுழைந்து, “ஐயையோ, என்னடா இது?” என்று கேட்டுக்கொண்டே அருகில் இருந்த நாற்காலி ஒன்றைக் கட்டிலுக்கு அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.

சேகர் பதில் சொல்லுவதற்குப் பதிலாக மேலும் முனக ஆரம்பித்தான். கீதா தான் பதில் சொன்னாள்: “இரண்டு நாட்களாகத் திடீரென்று ஒரே தலைவலியும் ஜுரமுமாக இருக்கிறது. கண்ணைத் திறக்கவில்லை, இரவு முழுவதும் தூக்கமில்லை”. கீதாவின் முகத்தில் சோகக் கோடுகள் மேலும் பரவின.

“அட, ராமா! எனக்கு ஒரு வார்த்தை சொல்லி அனுப்பி இருக்கக் கூடாதா? சேகர் நீ இப்படிச் சும்மா இருந்தால் பிரயோசனமில்லை. முதலில் அந்த டாக்டர் வாசுதேவனை அழைத்து வந்து காட்ட வேண்டும். அவர்தான் இந்த ஊரில் பெரிய டாக்டர், பணத்தைப் பற்றி யோசிக்கக்கூடாது. இரு. நான் போய்க் கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்” என்றார் சங்கரன்.

“அண்ணா! நீ கஷ்டப்படுத்திக் கொள்ளாதே!.க்..ஹா…அப்பா…ஐயோ தலையைப் போட்டு இடிக்கிறதே… அண்ணா, டாக்டர் வாசுதேவன்தான் வந்து என்னைப் பார்த்தார். ஆ.. அம்மா!…” சேகர் முக்கி முனகிக் கொண்டே கூறினான்.

“ஏண்டா அப்பா, நான் வேண்டுமானால் கொஞ்சம் தலையைப் பிடித்து விடட்டுமா?… மருந்து வாங்கிச் சாப்பிட்டாயா? கீதா, சேகருக்கு மருந்து கொடுத்தாயா? என்ன டெம்பரச்சர் இருக்கிறது?” என்று கூறியபடி சங்கரன் சேகரைத் தொட்டுப் பார்த்தார்,

கீதா சட்டென்று சமாளித்துக் கொண்டபடி “டெம்பரச்சர் நேற்றுக் காலை 104 கூட ஏறிவிட்டது. நேற்று மாலையும் இறங்க வில்லை. இன்று காலை 103க்கு இறங்கியது. நீங்கள் வருவதற்குச் சற்று முன்தான் மறுபடியும் டெம்பரச்சர் வைத்துப் பார்த்தேன். ‘நார்மலை’ எட்டியிருக்கிறது. அதுவே இப்பொழுது ஒரு திகிலாகி விட்டது. டாக்டர் கொஞ்சம், கொஞ்சமாகத்தான் டெம்பரச்சர் இறங்க வேண்டுமென்றும் திடீரென்று நார்மலுக்கு வந்தால் அபாயம் என்றும் சொன்னார்” என்றாள்.

சங்கரன் கலங்கிப் போய் விட்டார். “அப்படியானால் நான் இப்பொழுதே போய் டாக்டரைக் கேட்டுவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார்,

இப்பொழுதும் கீதாதான் பதில் கூறி அவரைப் போகவிடாமல் தடுத்தாள். “வேண்டாம். வேண்டாம். இப்பொழுது நீங்கள் விணாக அலைய வேண்டாம். டாக்டர் இப்பொழுது கிடைக்க மாட்டார். தாம்பரம் டிஸ்பென்ஸரிக்கு இந்த நேரத்தில் போய் விடுவார். ஒரு வேளை அவர் கொடுத்த மருந்தினாலும் இப்படிச் சட்டென்று இறங்கி ஏறினாலும் ஏறலாம். பாவம். நீங்கள் வீணாகப் போக வேண்டாம்” என்றாள்.

இதற்குள் சேகர் அஷ்ட கோணங்கள் கோணிக் கொண்டான்.

சங்கரனுக்கு உண்மையில் கண்களில் ஜலம் கூட வந்து விட்டது. தன் இடது கையினால் கண்களைத் துடைத்துக்கொண்டார். “ஐயோ, சேகர், உன் கஷ்டத்தை என்னால் பார்க்கவே முடியவில்லையே. ஒரு நாள்கூடத் தலைவலி ஜுரமென்று நீ படுத்துக்கொள்ள மாட்டாயே! உனக்குப் போய் எப்படியடா இப்படி வந்தது? எந்தப் பாவி திருஷ்டி போட்டானோ!” என்று அங்கலாய்த்தார்.

வந்த விஷயத்தைக் கூறாமலே அவர் புறப்படும்போது கீதா மரியாதைக்காக “வீட்டில் மன்னி சௌக்கியம்தானே? நீங்கள் உடம்பு ஒன்றுமில்லாமல் இருக்கிறீர்களா?” என்று கேட்டு வைத்தாள்.

“அதை ஏனம்மா கேட்கிறாய்? பத்து நாட்களாக இந்த வலது கையில் தான் பாரிசவாயு மாதிரி இருக்கிறது. கையை நீட்டி மடக்க முடியவில்லை. உன் மன்னிதான் உருவி விடுகிறாள்” என்றார் சங்கரன்.

ஒரு நிமிஷம் தன் நடிப்பை மறத்து சேகர் சகோதரனின் கைகளைப் பார்த்தான். ஆம்! அவர் கூறியது உண்மையாகத்தான் இருந்தது, வலது கை தனியாக ஒட்ட வைத்துத் தொங்கியது போல் அசைவு இல்லாமல் இருந்தது. நீட்டவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் சங்கரன் தவித்துத் திண்டாடிக் கொண்டிருந்தார்.

“என்ன அண்ணா இது. சாப்பாடு கூடச் சாப்பிட முடியாது போலிருக்கிறதே!” என்று சேகர் கேட்டே விட்டான்.

“ஆமாண்டா, இலை போட்டுச் சாப்பிடுவதில்லை. கரைத்து டம்ளரில் சாப்பிடுகிறேன்.”

‘”ஐயையோ, நிஜமாகவா? அப்படியானால் டாக்டரிடம் காட்டக் கூடாதோ? உருவி விட்டால் போகாதே” என்று கீதா ரொம்பவும் உருகுவதுபோல் நடித்துக் கேட்டாள்.

“காட்டாமல் என்னம்மா? காட்டினேன். இதெல்லாம் மலையாளத்துக்குப் போய் நவரக் கிழி சிகித்ஸை எடுத்துக் கொண்டால் தான் தீருமாம். அங்கு போய்ச் சிகித்ஸை எடுத்துக் கொள்ளச் செலவுக்குப் பணம் வேண்டாமா?… இப்போதெல்லாம் அதைப் பற்றி என்ன! நீங்கள் கவலைப்படாதீர்கள், நான் போய் வரட்டுமா? உடம்பைப் பற்றிச் சொல்லி அனுப்பு” என்று கூறிய சங்கரன் சேகரையே சிறிது நேரம் பார்த்தார், சேகரின் நடிப்பை அவர் உண்மை என்றே எண்ணியதால், ரத்தபாசத்தின் காரணமாகச் சேகரின் உடம்புகூட இளைத்து விட்டதுபோல் அவர் கண்களுக்குப் புலப்பட்டது.


சங்கரன் சென்ற பிறகு சேகர் கம்பளியைத் தூக்கி எறிந்தான். தலையில் கட்டியிருந்த மப்ளர் மூலையில் போய் விழுந்தது. மின்சார விசிறியை நன்றாகச் சுற்றவிட்டு அதன் கீழே வெற்றிப் புன்னகையுடன் உட்கார்ந்தான். கீதா கதவைத் தாளிட்டுவிட்டு வந்தாள்.

“தேவலையே, கீதா! உன்னுடைய தந்திரம் பலித்து விட்டதே!”

“பார்த்தீர்களா, இந்த உபாயத்தால் எவ்வளவு வெற்றி என்று? பணம் கேட்க வந்தவர் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கக்கூட இல்லை. உங்கள் நடிப்பும் அபாரமாகத்தான் இருந்தது. பாவம். உங்கள் அண்ணாவின் கண்களில் கண்ணீர்கூட வந்து விட்டது. என்ன இருந்தாலும் ரத்தபாசமில்லையா?”

சேகருக்குச் சட்டென்று தன் ரத்தத்தில் ஏதோ ஒரு உணர்ச்சி மின்ஓட்டம் ஓடுவது போல் இருந்தது.

கீதா பாட்டுக்கு மேலும் சொல்லிக் கொண்டே போனாள்: “ரத்தபாசத்தின் காரணமாகக் கல்லான மனம்கூட ஒரே நிமிடத்தில் கரைந்து உருகிவிடும். உங்களுக்கு ஜுரம் என்று கேட்டதும் உங்கள் அண்ணாவின் கல்லான மனம் எப்படி உருகிவிட்டது. பாருங்கள். சாதாரணமாகவே ரத்தபாசத்தின் காரணமாக அண்ணன், தம்பிகள் இணைந்து விடுவார்கள். உங்கள் அண்ணாவோ தன் கையினாலேயே உங்களை ஊட்டி வளர்த்தவராயிற்றே!”

சேகருக்குச் சட்டென்று பழைய கால நிகழ்ச்சி ஏடுகள் தோன்றி மறைந்தன. இதே சங்கரன், சேகருக்கு உண்மையாகவே குழந்தைப்பருவத்தில் ஒரு சமயம் நல்ல ஜுரம் வந்திருந்தபோது, தன் மடியிலேயே இரவு பகலாகப் படுத்த வைத்துக்கொண்டு உடம்பு நேராகும் வரையில் வைத்திருந்தார். சேகருக்குக் கஞ்சி யென்றால் பிடிக்காது. சங்கரன் தான் மெதுவாக இடது கையினால் அவன் தலையைக் கோதிக் கொடுத்து வலக்கையினால் மெதுவாகக் கஞ்சியை வாயில் ஊற்றியபடி ஆயிரம் கதைகள் சொல்வார்…அதுவும் ரத்த பாசத்தின் காரணமோ?

“என்ன, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் பலத்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள்? நான் தான் தீர்மானமாகச் சொல்கிறேனே? ரத்தபாசம் என்பது அழிக்க முடியாத, ஆழம் காணாத சமுத்திர ஜலம் போன்றது. அதனால் சாதிக்கக் கூடாததையும் சாதித்து விடலாம். பொய்யானாலும் உண்மையென்று நம்பும்படி செய்து விடலாம்.” கீதா தன்னுடைய வெற்றியில் போதையில் பெருமையுடன் கூறிக்கொண்டே போனாள், அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் சேகருடைய ரத்தத்தைக் கலக்கியது.

ஒரு சமயம் குழந்தைப் பருவம் தாண்டி இளமைப் பருவத்தில்கூட விவாகமாவதற்கு முன்பு சேகர் எங்கேயோ விழுந்து கை நரம்பு பிசகிச் சாப்பிட முடியாமல் திண்டாடிய போது. சங்கரன் சுடச்சுட சாதம் பிசைந்து ரசமும், தயிரும் ஊற்றி அறுசுவை உணவு ஊட்டினது சேகருக்கு நினைவுக்கு வந்தது. சேகருக்குச் சட்டென்று அன்னம் ஊட்டிய கை எதிரே தோன்றி மறைந்தது. அந்தக் கை இன்று மடங்கி நின்று அவர் வயிற்றுக்குக்கூடச் சாப்பாடு போட இயலாத நிலைமையில் இருந்தது.

‘அவர் கையைச் சிகித்ஸை செய்வதற்கு உபயோகப்படாத உன் பணமும் பணமா?’ என்று மனத்தில் ஒரு குரல் எழும்பியது. அண்ணாவுக்கு இருக்கும் ரத்தபாசம் தம்பிக்கு இல்லையா? சேகரின் ரத்தம் கொதித்து அவனை எங்கோ செல்லத் தூண்டியது.

உடனே சேகர் பெட்டியைத் திறந்து, பணத்தை எடுத்துக் கொண்டு வாசம் பக்கம் ஓடினான். கீதா திகைத்து, “எதற்காக இப்பொழுது அந்த ரூபாயை எடுத்துக் கொண்டு ஓடுகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“பணம் அண்ணாவுக்கு, என்னை வளர்த்த அண்ணாவின் கைக்கு”.

“ஐயையோ, பணம், சீமந்தத்துக்காக…”

“ச். நீ சும்மா இரு. ரத்த பாசத்தின் அருமை உனக்குத் தெரியாமல் பேசாதே!” என்றான் சேகர் தெருவில் ஓடிக் கொண்டே.

கீதா அவனைப் பார்த்து ஸ்தம்பித்து நின்ற அதே சமயத்தில், தெருவில் “அண்ணா! அண்ணா!” என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடி வரும் தம்பியைப் பார்த்துச் சங்கரனும் திகைத்து நின்று விட்டார்.

– 1957-06-09, கல்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *