அனங்கரதி கதை
கதையாசிரியர்: அரு.ராமநாதன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 2, 2026
பார்வையிட்டோர்: 204
(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்
2-வது மதனாபிஷேகவல்லிப் பதுமை சொல்லிய வேதாளக் கதைகள்
வேதாளம் சொல்லிய புதிர் கதைகள்
9.1 மணிமான் கதை | 9.2 அனங்கரதி கதை | 10. மதனசேனையின் கதை
விக்கிரமாதித்தன் மறுபடியும் முருங்க மரத்திலிருந்து வேதாளத்தைப் பிடித்து வரும் போது வேதாளம், “ராஜனே! இரவு வேளையில் இவ்விதம் மயானத்தில் அலைந்து திரிவது அரச பதவிக்கு ஏற்றதல்ல. பூதங்கள் நிறைந்த இவ்விடம் நள்ளிரவிலே பிணப் புகை சூழ்ந்து பயங்கரமாக விளங்க வில்லையா? அந்த யோகியைத் திருப்தி செய்வதற்காக நீ ஏன் இவ்வளவு தூரம் விடாப்பிடியாக நடக்க வேண்டும்? உன் வழி நடையைச் சுலபமாக்க ஒரு கதை சொல்லுகிறேன், கேளும்” என்று கதையை ஆரம்பித்தது:
அவந்தி தேசத்திலே ஒரு நகரம் இருக்கிறது: கிருதயுகத்திலே அதற்குப் பத்மாவதி என்ற பெயரும், திரேதாயுகத்தில் போகவதி என்றும், துவாபர யுகத்திலே ஹிரண்யவதி என்றும் வழங்கப் பெற்றிருந்தது. இக்கலியுகத்தில் அதற்கு உஜ்ஜயினி என்று பெயர் வழங்குகிறது. அதிலே வீரதேவன் என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்கு பத்மாவதி என்ற பெயருடைய ஒரு பத்தினி இருந்தாள். அவன் அவளுடன் மந்தாகினி நதிக்கரையை அடைந்து, பிள்ளை வரம் வேண்டிப் பரமசிவனைக் குறித்துத் தவம் செய்தான்.
நீண்ட கால தவசுக்குப் பிறகு ஒருநாள் சிவபெருமான் அசரீரி யாகப் பின்வருமாறு தெரிவித்தார்: “அரசே! உன் வமிசத்தை காக்க ஓர் ஆண் மகனும் தேவலோகத்து அப்ஸரஸ் ஸ்திரீகளையும் தோற்கடிக்கும் அழகுள்ள ஒரு பெண் குழந்தையும் பிறப்பார்கள்!” இதைக் கேட்ட அரசன் தன் ஆசை நிறைவேறியதற்கு சந்தோஷப்பட்டுத் தன் மனைவியுடன் தலை நகரம் திரும்பினான்.
அப்பால் அவனுக்கு முதலில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. சூரதேவன் என்று அதற்கு அவன் பெயரிட்டான். அப்பால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. காமதேவன் உள்ளத்திலேயே ஆசையை உண்டாக்கக்கூடிய அழகு வாய்ந்த அவளுக்கு அனங்கரதி என்று தந்தை பெயரிட்டான். அவள் வளர்ந்து யௌவனப் பருவம் அடைந்ததும். அவளுக்கு ஏற்ற கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஆவலினால் வீரதேவன் பூலோகத்திலுள்ள மன்னாதி மன்னர்களின் திரு உருவங்களையும் திரைச்சிலைகளில் எழுதி கொணரச் செய்தான். அவர்களிலே எந்த மன்னனின் உருவமும் அவளுடைய பேரழகிற்குப் பொருந்தியதாக இருக்கவில்லை. அதனால் அவன் தன் குமாரத்தியை நோக்கி, “குழந்தாய்! உனக்கு ஏற்றவனை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஆகவே, நீயே உன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்!” என்றான்.
இதைக் கேட்ட அனங்கரதி தன் தந்தையிடம், “அப்பா, சுயம்வரம் நடத்துவதற்கு வெட்கமாக இருக்கிறது. ஆயினும், என் கணவர் பார்வைக்கு அழகான இளைஞனாக இருக்க வேண்டும். அவர் ஏதாவது ஒரு வித்தையில் வல்லவராக இருக்க வேண்டும். வேறு அதிகமாக நான் எதையும் வேண்டவில்லை” என்று சொல்லி விட்டாள்.
அரசனும் அதே போல உள்ள வரன்களைத் தேட ஆரம்பித்தான். அப்போது இந்தச் செய்திகளைக் கேட்டு தென் திசையிலிருந்து நான்கு இளைஞர்கள் வட திசை மன்னனிடம் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் நால்வரும், ராஜகுமாரியை மணந்து கொள்ளும் நோக்கத்துடனே தான் அவ்விடம் வந்தார்கள். அந்நால்வரும் சாமர்த்தியசாலிகள்; ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தையில் தனித்திறமை வாய்ந்தவர்கள்.
அரசனும், அவர்களை மரியாதையுடன் வரவேற்றான். அவர்களில் ஒவ்வொருவரும் அந்தப் பெண் எதிரிலேயே அரசன் முன் தன்னுடைய திறமையைப் புகழ்ந்து கூறலானான்.
முதலாமவன் ராஜ சமூகத்தை நோக்கி, “பஞ்சபுட்டிகன் என்பது என் பெயர். நான் துணி நெய்வதில் மிகவும் வல்லவன். தினந்தோறும் ஐந்து ஜதை அழகான துணி நெய்வேன். ஒன்றை என் குல தெய்வத்துக்கும், ஒன்றை அறநெறியாளனுக்கும் அளித்துவிட்டு, ஒன்றை என் சொந்த உபயோகத்துக்கு எடுத்துக் கொள்வேன். இந்தக் கன்னிகையை நான் மணந்தால் மற்றொன்றை இவளுக்கு அணியக் கொடுத்துவிட்டு, ஐந்தாவதை விற்று ஆகாரப் பொருள் வாங்குவேன். நான் இந்தக் கலையில் வல்லவனாதலால், அனங்கரதியை எனக்கு மணம் செய்து கொடுங்கள்” என்றான்.
அவன் முடித்தவுடன் இரண்டாமவன் பின்வருமாறு கூறினான்: “நான் ஒரு வியாபாரி பாஷாஜ்ஞன் என்பது என் பெயர். பாஷா ஞானங்களில் நான் வல்லவன். எனக்குப் பறவைகள் மிருகங்கள் ஆகியவற்றின் பாஷைகள் கூடத் தெரியும். எந்த ஊருக்குச் சென்றாலும் என்னால் பிழைக்க முடியும்! ஆகவே ராஜகுமாரியை எனக்கு அளியுங்கள்!”
மூன்றாமவன், “கட்கதரன் என்ற போர் வீரன் நான். புஜபலபராக்கிரமம் வாய்ந்தவன். வாள் வித்தையில் எனக்குச் சமமானவன் உலகத்திலேயே கிடையாது. ஆகவே, அந்தப் பெண்ணை எனக்கு அளியுங்கள்” என்றான்.
அவன் அவ்விதம் கூறி முடித்தவுடன், நாலாமவன் முன் வந்து, “ஜீவதத்தன் என்னும் பிராமணன் நான். இறந்தவர்களைஉயிர்பிக்க என்னால் முடியும். மந்திர வித்தையில் நான் வல்லவன். எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறேன். ஆகவே, அவளை எனக்கு மணம் செய்து கொடுங்கள்” என்று வேண்டினான்.
அவர்கள் நால்வரும் இவ்விதம் சொன்னவுடன், தன் குமாரத்தியுடன் கூட இருந்து இதைக்கேட்ட வீரதேவ மன்னன், அவர்கள் நால்வரும் ஆடையிலும் உருவத்திலும் ஒரே மாதிரியான தேவர்கள் போன்றே இருப்பதை நோக்கி என்ன செய்வதென்று விளங்காமல் திகைத்துப் போனான்.
அனங்கரதியோ அந்நால்வரில் ஒருவனை தனக்குப் பொருத்தமானவன் என்று தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.
இவ்வி தம் கதை சொல்லிவந்த வேதாளம். விக்கிரமாதித்தனை நோக்கி, “ஓ! ராஜனே! அந்நால்வருள் யாருக்கு அனங்கரதியை மணம் செய்து கொடுக்க வேண்டும்? சொல்லுமையா!” என்று கேட்டது.
அதற்கு விக்கிரமாதித்தன் பின்வருமாறு விடையளித்தான்: “அரசகுலத்தைச் சேர்ந்த அனங்கரதியைத் துணி நெய்பவனுக்கு எப்படி கொடுக்க முடியும்? அவன் தினந்தோறும் ஐந்து ஜதை துணி நெய்வதினால் என்ன விசேஷப் பிரயோஜனம்? அவளை வியாபாரிக்குத் தான் மணம் செய்து கொடுக்க முடியுமா? பறவை வியாபாரிக்கு மிருகங்களின் பாஷை தெரிந்திருந்தால் என்ன பயன்? பிராமண குலத்தவனுக்குதான் அவளை மணம் செய்து கொடுக்க முடியுமா? மந்திரவாதத்தால் தன் குல தர்மத்தினின்றும் நழுவிப் போய் விட்டவனாயிற்றே பிராமணனும்! ஆகவே அரசகுமாரியின் அதி அழகை வாள் முனையாலே காப்பாற்றக் கூடியவனும், அரசகுலத்தைச் சேர்ந்தவனுமான போர்வீரன் கட்கதரனுக்கே அனங்கரதியை மணம் செய்து கொடுக்க வேண்டும்!”
இதை கேட்ட வேதாளம் விக்கிரமாதித்தனின் தோளைவிட்டு ஜிவ்வென்று கிளம்பி பழையபடியே முருங்க மரத்தில் தொற்றிக்கொண்டது.
– தொடரும்…
– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.